Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Uncategorized

மீண்டும் ஒருமுறை – 2

எதையும் நினைத்து மகிழ்ச்சி அடைய முடியாத அந்த மூன்று ஆண்டு கால வாழ்க்கையில் கூட, அவள் முகத்தில் புன்னகையை தோன்றுவிக்கும் ஒரு நட்பும் கிடைத்திருந்தது. அது ஜான்வி.

 

அவள் வேலினி துறையைச் சார்ந்தவள் அல்ல. அதே கல்லூரியில் இன்னொரு துறையில் படித்துக் கொண்டிருந்த ஜானவி வேலினி பற்றி தோழிகள் மூலம் கேட்டு தெரிந்து கொண்டாள்.

அதுவும் நான்காம் ஆண்டு தொடக்கத்தில் தான் ஒருநாள் கல்லூரி வளாகத்தில் அமைதியாக நடந்து வந்து கொண்டிருந்த வேலினியை தூரத்தில் கண்ட ஜானவி அவள் தோழிகளிடம் அவள் ஏன் எப்போதும் தனிமையில் இருக்கிறாள் என்று விசாரித்துக் கொண்டிருந்தாள்.



Advertisement

அதற்கு அவர்கள் அவளை கோபமாக தீட்டி அன்று நடந்த விபத்தை குறித்து கூறினர். அதை கேட்டதும் ஜானவிக்கு வருத்தம்தான் குழந்தையை எண்ணி. அதே வருத்தம் வேலினி மீதும் வந்தது.

உடனே தன் தோழியிடம், “ஏண்டி எதுக்கு இப்ப நீ அவளை அப்படி திட்டுற? அவ என்ன தப்பு பண்ணா? ஒரு நெருப்பு வளையம் போட்டு உன்ன நடுவுல நிக்க வைக்கிறேன். நீ என்ன பண்றன்னு நானும் பாக்குறேன்”, என்று கூற,

“என்ன என்னை நெருப்புல நிக்க வைப்பேன்னு சொல்ற? சரிதான் போடி. அன்னைக்கி, அவ இடத்தில் நான் இருந்தேன்னா கண்டிப்பா குழந்தையை காப்பாத்திருப்பேன்”, என்று அலட்சியமாக கூறினாள் அந்த தோழி. “யாரும் அவங்க இடத்தில் இருந்து பார்த்தா தான் தெரியும்”, என்று கூறி ஜானவி சட்டென்று எழுந்தாள்.

Advertisement

ஜானவி ஒரு கலகலப்பான ஆள்தான். புதியவர்களையும் எளிதாக நண்பர்களாக மாற்றிக் கொள்ளும் வழக்கம் கொண்டவள். ஆனால் பெரிதாக மற்றவர்கள் விசயத்தை காதில் போட்டுக் கொள்ளமாட்டாள்.

Advertisement

அதனால்தான் அவளுக்கு வேலினி பற்றிய செய்தியும் வந்து சேர இத்தனை நாட்கள் கடந்து விட்டது. வேகமாக வேலினியை நோக்கி சென்றவள், அவள் முன்பு நின்று கையை காண்பித்து, “,ஹாய் வேலினி. உன் பேரு எனக்கு இப்பதான் தெரியும்”, என்று சாதாரணமாக ஒரு பொய் கூறினாள்.

“இப்ப வேல்முருகன் பயங்கரமா ட்ரெண்டிங்கில் இருக்காருல்ல. நானும் அவரோட ஃபேன். அதான் அவர் பேர் வச்சிருக்க உன் கூட ஃபிரண்ட் ஆகலாம்னு இருக்கேன். என்கூட பிரண்டா இருப்பியா?” என்று கேட்டாள் ஜான்வி.

வேலினி கொஞ்ச காலமாக கல்லூரியில் நடக்கும் விஷயங்களை சற்று கருத்தில் கொண்டு தான் இருக்கிறாள். ஜானவியை பற்றி அவளுக்கும் தெரியும்.

Advertisement

 

அனைத்து நிகழ்ச்சிகளிலும் அவள் கண்டிப்பாக ஏதாவது ஒரு வகையில் பங்காற்றுவாள். அப்படிப்பட்டவள் தன்னிடம் நட்புகரம் நீட்ட ஒரு நொடி அவளுக்கு அவளை பார்த்து ஆச்சரியமாக இருந்தது, யாரும் பேசாத தன்னிடம் பேசுகிறாளே என்று. இருந்தாலும் அவளிடம் கைகுலுக்கி கொண்டாள் வேலினி.

“வேல்முருகன் எப்பவுமே ட்ரெண்டிங் தான் ஜானவி. instagram whatsapp-லாம் தான் புதுசா ட்ரெண்டிங்ல இருக்கு. அதனால தான் அதுல அவரை ட்ரெண்ட் ஆக்கிறாங்க”, என்று வேலினி புன்னகையுடன் கூற, ஜான்விக்கு அவளை மிகவும் பிடித்தது.

அமைதியான அவள் குணம் அவளுக்கு எதிர்ப்பதமான ஜானவியை ஈர்க்காமல் இருந்தால் தான் அது இயல்புக்கு மாறானது. அதிலிருந்து அவர்கள் நட்புக்கரம் எப்போதும் பிரியாமல் இணைந்து இருந்தது.

 

கல்லூரி முடிந்ததும் அவரவர்கள் வாழ்கையின் அடுத்த கட்டத்தை நோக்கி செல்ல ஜானவியும் அந்த ஊரிலிருந்து வேற இடம் மாறி சென்றிருந்தாள்.

அடுத்த ஒரு வருடம் இன்னும் தலைவலி தான் வந்தது வேலினிக்கு. நாட்டில் பொறியியல் பட்டதாரிகளுக்கு ஏற்பட்ட அதே போராட்டம் அவளையும் ஆட்டிப் படைக்க ஆரம்பித்தது. ஒரு வருட காலமாக வேலை தேடித் திரிந்து கொண்டு இருந்தாள்.

கல்விக்காக வாங்கிய கடனை கூட கட்ட முடியாத சூழ்நிலையில் தவித்துக் கொண்டிருக்க, என்ன செய்வது ஏது செய்வது என்று புரியாத நிலை. ஒரு வருடத்திற்கு பிறகு எந்த வேலை என்றாலும் செய்து விட வேண்டும் என்று முடிவுக்கு வந்திருந்தாள்.

பொறியியல் பட்டதாரியான அவளுக்கு ஒரு துணிக்கடையில் விலைப்பட்டியல் பிரிவில் தான் வேலை கிடைத்தது. விலைகளை பார்த்து கணக்கை சரியாக கணினியில் ஏற்ற வேண்டும். அந்த பணியை அவள் எந்த மனதளர்வும் இல்லாமல் தான் செய்ய தொடங்கினாள்.

ஆனால் எட்டு மாதத்தில் அந்த பணி அவளுக்கு அலுத்து போனது சம்பளமும் குறைவு தான். அந்த குறைந்த சம்பளத்தில் அவளுடைய கல்வி கடனுக்கான வட்டி தொகையை மாதம் மாதம் கட்ட மட்டுமே சரியாக இருந்தது.

அதற்கு மேல் குடும்பத்திற்காகவோ குழலினியின் படிப்புக்கு என்றும் தனியாக எதுவும் செய்ய முடியாது என்பதை அவள் தெளிவாக புரிந்து கொண்டாள். அதனால் எப்படியாவது ஒரு நேர்காணலுக்கு சென்று அதிக சம்பளத்தில் நல்ல வேலையில் சேர்ந்து விட வேண்டும் என்று முடிவுடன் மனதை திடப்படுத்தி கொண்டு வீட்டிற்கு கிளம்பினாள்.

மனதை திடமாக்கிக் கொண்டு ஒரு முடிவுடன் கிளம்பிய வேலினிக்கு வீட்டிற்கு வந்தபோது மனதை சுக்கு நூறாக உடைக்கும் செய்திதான் கிடைத்தது. அவளுக்கும் ஒன்றென்றால் முதலாக நிற்பவரும் வேதனையை தன்னுடையதாக நினைத்து மன அழுத்தத்திற்கு ஆளானவருமான சிவகாமி பாட்டி தன் உயிரை துறந்திருந்தார்.

வேலினி வீட்டுக்கு திரும்ப 10 மணி ஆகிவிடும், 9:00 மணிக்கே வீட்டிற்கு வந்துவிடும் ஆறுமுகம், எப்போதும் போல் தன் தாயுடன் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார்.  வீட்டில் இருந்து மற்றவர்களும் அவர்களுடன் அமர்ந்து கொள்ள, அடுத்து வேலினிக்கு திருமணம் செய்ய வேண்டும் என்பது குறித்து பேச்சை ஆரம்பித்தார் பாட்டி.

பிரச்சனை எவ்வளவு இருந்தாலும் திருமணத்தை தள்ளி வைக்க கூடாது சிறப்பாக செய்யலாம் என்று ஆறுமுகமும் கூற, அதில் மகிழ்ந்து போனார் சிவகாமி. அதன்பின் குழலினியுடன் எப்போதும் போல் வம்பு இழுத்து பேசிக் கொண்டிருந்தார். அவளுடன் சேர்ந்து பேசி சிரித்துக் கொண்டிருந்தவர் அப்படியே அமைதியாகிப் போனார்.

அனைவரும் என்ன என்று அருகில் வந்து பாரத்த போது, அவர் மூச்சு நின்றிருந்தது. உடனே அருகில் இருந்த செவிலியை அழைத்து அவரை பரிசோதிக்க சொல்ல, பாட்டியின் இதயம் துடிப்பதை நிறுத்தி கொண்டது என்று அந்த செவிலி உறுதி செய்து விட்டு சென்றார்.

அந்த குடும்பம் மொத்தமும் ஸ்தம்பித்து போக, அந்த சமயத்தில் தான் வேலினியும் வீட்டிற்குள் நுழைந்தது. அனைவரின் அழுகுரலும் கேட்டு பக்கத்து வீட்டில் இருந்து கூட வெளியே வந்து எட்டிப் பார்த்துக் கொண்டிருக்க, வேகமாக வேலினி உள்ளே நுழைந்தாள். வந்ததும் நிலவரம் புரிந்துவிட கதறி அழுது தீர்த்து விட்டாள்.

ஆனால் ஆறுமுகம் அமைதியாக அமர்ந்துவிடவில்லை மகள்களையும் மனைவியையும் கண்டவர் வேகமாக வேலைகளை செய்ய ஆரம்பித்தார். சிரித்த முகத்துடன் விடைபெற்ற சிவகாமி, இறுதிச் சடங்குகளையும் சிறப்பாக பெற்றுக்கொண்டு இந்த பூவுலகில் இருந்து விடை பெற்று இருந்தார்.

அடுத்த ஐந்து நாட்களிலேயே வேலினிக்குஅவள் வேலை செய்யும் இடத்திலிருந்து பணிக்கு திரும்ப கூறி செய்தி வந்தது. செய்தியை கேட்ட முதல் இனிமேல் துக்கம் அனுசரிக்க கூட தன்னால் முடியாது.

அதற்கான நேரமும் இல்லை. வீட்டில் சூழலும் சரியில்லை என்பதை தெளிவாக விளங்கிக் கொண்டு, வேகமாக அடுத்த நாளே புறப்பட்டு விட்டாள். சிவகாமி இறந்து ஆறாவது நாள் வேலினி துணி கடைக்கு வேலைக்கு சென்று விட, பாட்டியை நினைத்து வேதனை மனதோடு இருந்த போதும் வேலையில் கவனம் சிதறாமல் பார்த்துக் கொண்டாள்.

மகா ஆனந்த்…..✨

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!