மீண்டும் ஒருமுறை -8
பாகம்-8
“என்னை பெத்தவங்களுக்கு என் குடும்பத்தில் இருக்கிற ஒவ்வொருத்தரையும் அளவுக்கு அதிகமா நேசிக்க தெரியும். கூடவே இருந்து அவங்களுக்காக எல்லா விஷயத்தையும் பார்த்து பார்த்து செய்ய தெரியும். ஓடி ஓடி உழைக்க தெரியும்.
ஆனா எந்த விதத்தில் அதை சேர்த்து வச்சு எப்படி வாழ்க்கைல உயரணும்னு அவங்களுக்கு தெரியாது. இன்னும் சொல்லனும்னா அவங்களோட உயர்வு எல்லாம் தன் பிள்ளைகள் கிட்ட தான் இருக்குன்னு நம்புறாங்களே தவிர, நம்ம உயர்ந்த ஒரு இடத்துக்கு போகணும்னு அவங்க நினைச்சதே இல்ல .
ஆனா நான் அவங்க உயரணும்னு நான் நினைக்கிறேன். அவங்களோட உயர்வு தான் ஏன் சந்தோஷமா இருக்கும். உனக்கு நான் சொல்றது புரியுதா குரு”, என்று அவன் கண்ணை பார்த்தவாறு வேலினி கூற, இவனுக்கு தெளிவாக அவள் மனநிலை புரிந்தது. இருந்தும் அமைதியாக அவள் கூறுவதை கேட்டுக் கொண்டவன் கடைசியாக கேட்ட கேள்விக்கு தலையை மட்டும் அசைத்து வைத்தான்.
Advertisement
தான் சொல்ல வருவது அவனுக்கு தெளிவாக புரிகிறதா என்று தெரியவில்லை வேலினிக்கு, இருந்தும் அவன் தலையசைப்பை ஏற்றுக் கொண்டவளாக தொடர்ந்து,
என் அப்பா ஒரு டெய்லர். அவருக்கு ஜென்ட்ஸ் ஷார்ட் அண்ட் பேண்ட் நல்லா தைக்க தெரியும். ஆனால் அவர் கடை இருக்கிறது ஒரு பழைய கட்டிடத்தில. அந்த எதுவுமே சரி கிடையாது. வயர்ஸ் எல்லாம் ரொம்ப பழசாயிட்டதால, அப்பப்ப கரண்ட் போகும். வேர்க்க விறுவிறுக்க தான் எதையுமே அங்கு உட்கார்ந்து செய்ய வேண்டி இருக்கும்.
இப்போ நிறைய பேரு தைச்சு எல்லாம் சட்ட போடுறது கிடையாது. அதனால முன்ன விட அப்பாக்கு வருமானம் குறைஞ்சிடுச்சு. ஆனா அந்த தொழிலை எப்படி மாத்தி செய்யறதுங்கறது அவருக்கு தெரியல. இதுல கடையோட செலவு வேற நாளுக்கு நாள் கூடிக்கிட்டே போகுது.
Advertisement
அம்மாவும் அப்பாக்கு உதவி செய்வதற்காக தனக்கு தெரிந்த சமையல் வேலையவே தொழிலா பாக்கலாம்னு முடிவு பண்ணினாங்க. அதுக்காக சின்ன சின்னதா ஆர்டர் எடுக்க ஆரம்பிச்சாங்க. பர்த்டே பார்ட்டி, வீட்ல நடத்திய சின்ன விருந்து இப்படி ஒரு பத்து பேர், 25 பேர் இப்படி ஆர்டர் கேட்டாங்கன்னா செஞ்சு தருவாங்க.
Advertisement
ஆனா இதெல்லாம் நிறைய பேர் பண்றதே கிடையாது இந்த மாதிரி கொஞ்சம் பேர வச்சு விருந்து இதெல்லாம் நடத்துறவங்க மோஸ்ட்லி கம்மியா தான் இருப்பாங்க. அவங்க வெளியே சாப்பாடு வாங்கினா காசு கூட இருக்கும்னு தாங்களே செஞ்சுக்க தான் முயற்சி பண்ணுவாங்க. அப்படி வெளிய வாங்குறவங்க ரொம்ப ரேர்.
அதனால அம்மாவாலையும் இந்த விஷயத்தையும் சரியா செய்ய முடியல. முக்கியமா அவங்க அதிகமா செய்யறதுக்கு அவங்க உடம்புல தெம்பும் இல்ல. கிட்டத்தட்ட ரெண்டு பேருக்கும் 50 வயசு ஆகிடுச்சு. இந்த வயசுல அவங்க உடல் உழைப்ப போட்டே ஆகனும்னு தேவையும் இல்லை தான?
இப்படி நீளமாக பேசியவள் ஒரு நிமிடம் மூச்சை இழுத்து விட்டு கொண்டாள். ஜானவி கூட, “என்னடா இவ்ளோ பேசுறா இவ”, என்பது போல் தான் பார்த்திருந்தாள். ஆனால் அவள் கூற வரும் செய்தி அவளுக்கும் தெளிவாக விளங்கியது. குரு அவளிடம். எதுவும் பேச வில்லை. அவனாக மனதில் எதையும் திட்டமிடவும் இல்லை.
Advertisement
அவளுக்கு உண்மையில் தேவைப்படுவது என்ன என்று அறிந்து கொண்டு அதற்கேற்றவாறு யோசித்து செயல்பட வேண்டுமே தவிர, அவள் பேசுவதற்கு முன் ஏதோ ஒரு முடிவை எடுத்து விடுவது சரியல்ல என்ற எண்ணத்தில் அமைதியுடனே அவள் பேசுவதை கேட்டுக்கொண்டு அமர்ந்து இருந்தான்
நன்றாக மூச்சை இழுத்து விட்டுக் கொண்டவள் மீண்டும் பேச ஆரம்பித்தாள். “என் அப்பா அம்மாக்கு நான் ஒரு தொழில் வச்சு கொடுக்கணும்னு நினைக்கிறேன். நான் என் கை காசு போட்டு வைக்க போறேன்னு சொல்லல லோன் எடுத்து இப்படி ஏதாவது தான் செய்யணும். ஆனா அத நான் சரியா செய்யணும்.
இதனால கண்டிப்பா லாபம் வரும்னு 99% எனக்கு நம்பிக்கை வரனும். எனக்கு தெளிவிருந்தால் மட்டும் தான் அதை செய்யணும்னு நினைக்கிறேன். அதுக்குத்தான் உங்ககிட்ட ஐடியா கேட்கிறேன்” என்றவள் தொடர்ந்து,
“நான் என்ன தொழில் ஆரம்பிக்கலாம், அதை எப்படி செய்யலாம்னு ஓரளவுக்கு கெஸ் பண்ணி வச்சிருக்கேன். அதுல இருக்கிற நெகட்டிவ்ஸ், பாஸிட்டிஸ் பத்தி நீங்க எனக்கு சொல்லுங்க”, என்று குருவிடம் கேட்டாள்.
“சரி நீ என்ன பண்ணப் போறேன்னு சொல்லு நான் எனக்கு தெரிஞ்ச அளவு சொல்றேன்” என்று கூறவும், சரி என்று தான் நேற்று தந்தையுடன் பேசிக் கொண்டிருந்தபோது மனதில் எண்ணிய சிலவற்றை கூறினாள்.
“அப்பா கடை பழசா இருந்தாலும் அது கொஞ்சம் மெயினான இடம்தான். எங்க கடைக்கு கொஞ்சம் முன்னாடி ஒரு 300 வீடு இருக்கிற ஒரு அப்பார்ட்மெண்ட் இருக்கு. அதுக்கு பின்னாடி ஒரு பெரிய ஏரியாவே இருக்கு.
அப்பா கடையை தாண்டி கொஞ்ச தூரம் போனா, அங்க ஒரு பெரிய ஸ்கூல் இருக்கு. எங்க ஏரியா பசங்க தான் அங்க அதிகம் படிக்கிறாங்க. அந்த ஸ்கூல்ல பக்கத்திலேயே ஒரு ஸ்டேஷனரி ஷாப் இருக்கு.
ஆனா அங்க நிறைய ஐட்டம்ஸ் கிடைக்காது. ஏன்னா அங்க முக்கியமான வியாபாரம் ஜெராக்ஸ் தான். அதுக்கு காரணம் பக்கத்துல இருக்குற ரெஜிஸ்டர் ஆபீஸும், பேங்க்கும் தான்.
அதுக்கு தான் அங்க அதிகமான வருமானம். அதனால ஸ்டேஷனரி ஸ்டாப்ல நிறைய பொருள் இருக்காது. அதனால எங்க ஏரியா மக்கள் நிறைய இன்னும் ரொம்ப தூரம் போய் தான் வாங்குறாங்க. இந்த ஏரியா குள்ள எந்த ஸ்டேஷனரி ஷாப்பும் இல்லாதது எனக்கு பிளஸ்-னு தோணுது.
அப்பாவோட கடைக்கு இன்னொரு தையல் மெஷின் போட்டு, அதுக்கு ஒரு வேலையாள போட்டு, வேலை பார்க்கிறது எல்லாம், இப்ப கொஞ்சம் கூட முடியாத காரியம். ஆனா அதுக்கு பதிலா அங்க ஸ்டேஷனரி பொருள் நிறைய அடுக்கி அதை வியாபாரம் பண்ண ஆரம்பிச்சா என்னன்னு எனக்கு தோணுச்சு.
ஆனா அதுல என்ன மாதிரி பொருள் எல்லாம் வச்சா நல்ல வியாபாரம் நடக்கும்-னு எனக்கு ஒரு ஐடியா வேணும். அது மட்டும் இல்லாம அம்மாவுக்கும், இந்த மாதிரி எப்பயாவது கிடைக்கிற ஆர்டர் இல்லாம, அப்பாவோட கடைக்கு ஆப்போசிட்ல ஒரு கடை காலியாயிருக்கு அந்த கடையில ஒரு சின்ன ஹோட்டல் மாதிரி வச்சான் என்னனு தோணுது.
அதாவது காலையில டிபன், நைட் டிபன் செஞ்சு கொடுக்கிற மாதிரி. இதை ரெண்டையும் இம்ப்ளிமென்ட் பண்றதுக்கு என்ன மாதிரி ஐடியாஸ் பண்ணலாங்கிறது தான் இப்ப என்னோட தேவை.
அப்புறம் இன்னொரு முக்கியமான விஷயம் அம்மாவோட ஹோட்டல் ஐடியா ஏன் வந்துச்சுன்னா. எங்க ஏரியா அப்பார்ட்மெண்ட்ல இருக்க முக்கால்வாசி வீட்டில, அம்மா அப்பா இரண்டு பேரும் வொர்க் பண்றவங்க.
இப்படி வொர்க் பண்ற வீட்ல காலையில டிபன் நைட் டிபனுக்கு இந்த மாதிரி ஏதாவது ஃபாஸ்ட் சோர்ஸ் இருந்துச்சுன்னா அவங்க அதை வாங்குறதுக்கு வாய்ப்பு நிறைய இருக்குன்னு தோணிச்சு. அது கூட சில சேட் ஐட்டம்ஸ் ஏதாவது ட்ரை பண்ணலாம்.
ஆனா இப்போதைக்கு அம்மா இருக்கிற நிலைமை எல்லாம் இது முடியாத காரியம். பட் கொஞ்சம் கொஞ்சமா இது இம்ப்லிமென்ட் பண்ணலாம்னு தோணுது. அதான் இதுல என்ன நெகட்டிவ்ஸ் இருக்கு. இதை எப்படி சரியா செய்யலாம். இதெல்லாம் எனக்கு தெரியல பணம் பிரச்சனை இல்ல.
அம்மாக்கு பேங்க்ல இந்த மாதிரி சுய தொழிலுக்கு கடன் குடுப்பாங்கன்னு ஒரு தடவ அம்மா சொன்னாங்க. எப்படியாவது அந்த கடனை வாங்கி, சுய தொழில் பண்ணனும்னு நினைக்கிறேன். இப்ப நீங்க சொல்லுங்க நான் என்னதான் பண்ணனும்”, என்று மொத்தமாக கொட்டி முடித்தாள் வேலினி.
அவள் பேசி முடித்ததும் குரு அவளிடம் ஒரே கேள்வி தான் கேட்டான். “ஆமா இதெல்லாம் நீ எப்போ போயி அலசின? முன்னாடியே இல்லை நிறைய இதெல்லாம் யோசிச்சு வச்சிருந்தியா?” என்று கேட்க,
“நான் தான் சொன்னேன் இல்ல. நேத்து தான் யோசிச்சேன்னு. நேத்து யோசிச்சது மட்டும் இல்லாம, அப்பாக்கு சாப்பாடு கொடுத்துட்டு அப்படியே அந்த ஏரியாவையே ஒரு ரவுண்டு அடிச்சுட்டு வந்தேன். அதுல தான் எனக்கு இந்த ஐடியாவே கிடைச்சது”, என்று அவள் கூற, இவனுக்கு ஒரே ஆச்சர்யமாக இருந்தது.
“ஒரே நாளில் இவ்வளவு யோசித்திருக்கிறாளா? அப்படி என்ன இவளுக்குள் திடீரென்று இப்படி ஒரு மாற்றம்? இத்தனை நாள் இல்லாமல்?” என்று கேட்க ஆர்வமாக இருக்க, அவனுக்கு முன்பாக ஜானவி அந்த கேள்வியை கேட்டிருந்தாள்.
“ஆமா உனக்கு ஏன் திடீர்னு இவ்ளோ ஆர்வம். இவ்வளவு நாள் நீ இந்த முயற்சி எல்லாம் பண்ணவே இல்ல. திடீர்னு என்ன ஆச்சு?” என்று ஜானகி கேட்டதும், இவளுக்கு என்ன சொல்வது என்று ஒன்றும் புரியாமல் அமைதியாகி விட்டாள். பின் சிறிது யோசித்தவள்.
அப்பா அம்மா என்னை இன்ஜினியரிங் படிக்க வைக்கிறதுக்கு ரொம்ப கஷ்டப்படுறாங்க. அவங்க வருமானமும் பெருசா எதுவும் இல்ல. இப்படியே இவங்க நிலைமை போச்சுன்னா குழலினி அவ ஆசைப்பட்டு படிப்பை படிக்க முடியாம போயிடும்.
அதைவிட முக்கியமா நான் இப்போ நல்லா படிச்சாலும், உடனே வேலை கிடைக்குமா, நினைக்கிற அளவுக்கு நிறைய சம்பளம் எல்லாம் வாங்க முடியுமானு எனக்கு தெரியல”
என்றதும் ஜானவி ஏதோ குறுக்கே பேச வந்தாள். அதற்குள் வேலினி அவளை தடுத்து, “நான் பேசி முடிச்சிறேன் ஜானவி. ஒரு பேச்சுக்கு தான் சொல்றேன்” என்று கூறி மீண்டும் தொடர்ந்தாள்
“நாளைய எதிர்பார்த்துட்டு இன்னைக்கு சும்மா உக்காரனும்னு எந்த அவசியமும் இல்லையே. ம்ம்ம்” ஒரு பெருமூச்சு இடையில் வந்து போனது.
“எல்லாரும் அப்பா அம்மாவ உட்கார வைச்சு சோறு போடணும்னு நினைப்பாங்க. ஆனா நான் அப்பா அம்மாவுக்கு ஒரு தொழில் அமைச்சு கொடுக்கணும்னு நினைக்கிறேன்.
உங்களுக்கு தோணலாம் அம்மா அப்பாக்கு தொழில் செஞ்சு தரேன்னு சொல்லி, நாளைக்கு என்னுடைய எதிர்காலத்தை சேவ் பண்றதுக்காக இப்பல்லாம் பண்றேன்னு”, அப்படி அவள் கூறிய போது ஜானவி தான் அவளை முறைத்து பார்த்தாள்.
ஆனால் குரு எந்த அசைவையும் காட்டாமல் நேராக அவளை பார்த்தவாறு அமர்ந்திருந்தான். அவள், அவன் பார்வையை ஒரு நிமிடம் பார்த்துவிட்டு, ஒரு திசையில் பார்த்தவாறு பேச தொடங்கினாள்.
என் அப்பா, அம்மா என்னைக்குமே, ‘நம்ம பிள்ளைகளுக்கு இதை செய்ய முடியலயே, இந்த விசயம் நடக்கலையே, அதுக்கு பணம் ஒரு காரணம் ஆகிடிச்சேன்னு’ வருத்தப்பட்டு, வாடிட கூடாதுன்னு நினைக்கிறேன். ஒரு மனுஷனுக்கு பணம் மட்டும் முக்கியம் இல்லை-னு எனக்கு தெரியும்.
ஆனா தேவைக்கான பணமாவது இருந்தால் தான், ஒரு மனிசன் சந்தோஷமா இருக்கிறதை தாண்டி, ஒரு இழப்பின் வரும் போது, அதை நினைச்சு நிம்மதியா அழ கூட முடியும். அந்த சயமமும் உழைப்பததுக்காக, ஓடிக்கிட்டே இருந்தோம்னா வாழ்க்கையில் என்ன இருக்க போகுது.
அதான் அப்பா அம்மாவை கொஞ்சம் அமைதியா ரிலாக்ஸா உட்கார வைக்கணும்னா இப்படி ஒரு தொழில் தேவை-னு. அவங்க இப்ப ஓடிக்கிட்டு தான் இருக்காங்க அவங்களுக்குன்னு ஒரு சின்ன தொழில், அது கொஞ்சம் வளர்ந்திருச்சுன்னா? வேலையாட்களை போட்டு அவங்க வேலை வாங்க ஆரம்பிச்சுட்டாங்கன்னா? இந்த அளவுக்கு அவங்க ஓட வேண்டி இருக்காது. நிதானமா அமைதியா வாழ்க்கையை அவங்களும் வாழ ஆரம்பிப்பாங்கன்னு தோணுது”, என்று மனம் முழுக்க அவள் எதிர்காலத்தில் இருப்பளோ? மாட்டாளா?
ஆனால் தன் தாய் தந்தையர் நன்றாக இருக்க வேண்டும் என்ற அவளின் மனம் முழுக்க நிறைந்த எண்ணத்தை மறைத்துக் கொண்டு அவர்களிடம் கூறினாள்.
என்னதான், ‘முன்பு போல் என் வாழ்க்கையில் நடந்த எதையும், தற்போது நடக்க அனுமதிக்க மாட்டேன்’ என்று வேலினி தனக்கு தானே உறுதி அளித்துக் கொண்டாலும், தன்னை மரணம் நெருங்கி விடுமோ என்ற அச்சம் அவளுக்குள் இருக்கத்தான் செய்தது.
இப்போதுதான் குரு வாயைத் திறந்தான். “நாளைக்கின்னு எதிர்காலத்தை பத்தி நிறைய விஷயம் பேசுற நீ, நம்பிக்கையை தவிர்த்துவிட்டு விரக்தியா பேசுறது தான், எனக்கு ரொம்ப குழப்பமா இருக்கு வேலினி. உன் மனசுல என்னதான் இருக்கு?” என்று குரு தெளிவாக கேள்வியினை அவள் முன் வைத்து விட, ஆனால் பதில் கூற வேண்டியவளுக்கு தான் வார்த்தைகள் திணறியது.
இருந்தும் ஒரே நொடியில் தன்னை இயல்பாக்கி கொண்டவள், தன்னை உன்னிப்பாக பாரத்தவாறு அமர்ந்திருந்தவனுக்கு பதில் கூறினாள்.
“எனக்கு பெருசா எந்த விரக்தியும் இல்லை. இந்த கேன்சர் டெஸ்ட் பண்ணதுக்கு அப்புறம் தான் ஒரு மாதிரி பயமா இருக்கு. நாளைக்கு என்ன நடக்கும்னு யோசிக்க தோணுது. அப்பா அம்மாக்காக நிறைய செய்யணும் தோணுது. வேற ஒன்னும் இல்ல”, என்று நிச்சயம் தன் மனதில் இதுதான் பயம் என்பது போல் தெளிவாக அவள் கூறிவிட, மற்ற இருவருக்குமே அவள் மீது வேறு எந்த சந்தேகமும் தோன்றவில்லை.
“நீ பயப்படுறதுக்கு எல்லாம் இங்க எதுவுமே இல்ல வேலினி. இப்ப கேன்சர் டெஸ்ட் தான் பண்ணிருக்காங்க. அது ஃபர்ஸ்ட் ஸ்டேஜா இருந்தா ஈசியா அவங்கள குணப்படுத்தலாம் . அது மட்டும் இல்லாம உன்னோட அம்மா அப்பாக்கு எந்த பிரச்சினையும் இல்லை. சரியா? அதை முழுசா நம்பு. அப்பாவுக்கும் பாட்டிக்கும் ஃபுல் பாடி செக் அப் பண்ணனும்னு சொன்னல அதையும் சீக்கிரம் பண்ணிடு. எந்த பிராப்ளமும் இல்லை. ஓகேவா?” என்று கூறவும், வேலினி அவன் வார்த்தைகளில் ஏதோ பெரிய நம்பிக்கை வந்தவளாக புன்னகையுடன் சரி என்று தலையாட்டினாள்.
இப்போது, “ஆமா நான் கேட்ட கேள்வி என்னாச்சு? அதைவிட ரெண்டு பேரும் டைவட் பண்ணிட்டீங்களே” என்று மீண்டும் முதல் கேள்விக்கு வந்து நிற்க, “நீ சொன்ன விஷயம் ரொம்பவே சூப்பர்தான். உன்னோட ஐடியாவும் பெட்டர் தான். ஆனா இத பத்தி நெகட்டிவ் என்கிட்ட கேட்கிற. நான் தொழில் செய்யப்போறேன் தான்.
ஆனா ஸ்டேஷனரி பத்தி எனக்கும் பெருசா ஐடியா கிடையாது. நீ, எனக்கு ஒரு ரெண்டு நாள் மட்டும் டைம் கொடு. உனக்கான எல்லா கேள்விக்கான பதிலும் நான் தரேன். அண்ட் லோன் பத்தி சொன்ன இல்ல, அதுக்கும் நிச்சயமா ஏற்பாடு பண்ணலாம். அப்புறம் இதை எல்லாம் விட முக்கியமான விசயம்,
நீ இரண்டாவது வருஷம் தான் படிக்கிற. உனக்கு 20 வயசு தான் ஆகுது. இப்ப நீ படிப்பில மட்டும் தான் கான்சன்ட்ரேட் பண்ணனும். அப்பா அம்மா கஷ்டப்பட்டாலும் அது எல்லாம் உனக்காக தான். பின்னாடி வேலை கிடைக்குமா சம்பளம் கம்மியா இருக்குமான்னு யோசிச்சு இன்னைக்கு படிக்கிறத விட்டுற கூடாது. எந்த காரணத்துக்காகவும் உன்னோட படிப்பு கெடவே கூடாது”, என்று அவன் மிக கண்டிப்பாக கூற, அந்த குரலில் இருந்த கண்டிப்பை உணர்ந்தாள்.
பின் அவன் கூற்றை ஆமோதிப்பவளாக, “நிச்சயமா எந்த காரணத்துக்காகவும் என் படிப்பை மட்டும் விட்டுற கூடாதுன்னு, நானும் உறுதியா தான் இருக்கேன். அதே சமயத்துல இந்த டைம் நான் என்னோட ட்ரீம்ம அச்சீவ் பண்றதுக்காக நிறைய போக்கஸ் பண்ண போறேன்”, என்று அவள் கூறியதும், “இந்த டைம்மா?” என்றாள் ஜானவி.
ஆனால் இம்முறை திணறாமல் நேரடியாக பதில் கூறினாள். “ஆமாம் முதல் தடவை அப்பா அம்மா கிட்ட சாய்ஸ்-அ விட்டுட்டேன். இந்த தடவை அப்படி இல்ல. டீச்சர் ஆகணும்ங்கிறது என்னோட விருப்பம். நான் அதுல கண்டிப்பா போக்கஸ் பண்ணுவேன்”, என்று அவள் கூறவும் என்று கூறவும் குருவின் முகம் முழு புன்னகையில் மிளிர்ந்தது.
ஜானவி, “உனக்கு கிடைக்கப் போற ஸ்டூடண்ட்ஸ் தான் பாவம்”, என்று கிண்டலாக பேச்சை மாற்ற அந்த நொடியில் இருந்து மூவருக்கும் இடையே அந்த பயணம் நண்பர்களுக்கான பேச்சாக தொடர ஆரம்பித்தது.
