Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

14. விர்சாலி - மீண்டும் கேட்குமா பூபாளம்

மீண்டும் கேட்குமா பூபாளம் 16

அத்தியாயம் 16

கதிரவன் கடல் தாயின் மடியில் இருந்து அப்போதுதான் கண் விழித்து இருப்பான் போலும்,



Advertisement

விடிந்ததும் விடியாததுமாக நித்தியா அஞ்சனாவிற்கு அழைப்பை எடுத்து இருந்தாள். “அஞ்சு நிலைமை கைய மீறி போயிடுச்சு…” என்று அழுத்தமான குரலில் சொல்ல

நித்தியாவின் குரலில் இருந்த அழுத்தமே அஞ்சனாவிற்கு தீவிரம் சொல்ல, “என்ன ஆச்சு?…” என்றாள்.

Advertisement

Advertisement

“ஒரு வீடியோ அனுப்புறேன்.. பாத்துட்டு சீக்கிரம் ஒரு முடிவு எடு.. ஒரு வருஷம் நீ காத்திருந்தது போதும்…” என்று சொல்லி விட்டு அவள் இரவு எடுத்த வீடியோவை அனுப்ப

அதைப் பார்த்த அஞ்சனாவிற்கு உள்ளம் உலைகலனாய் கொத்தித்தது. அதிரவில்லை, அழவில்லை, கிட்டத்தட்ட ஒரு வருடங்கள் ஆகின்றது தன் கணவனின் காமலீலைகள் தெரிய வந்து.

Advertisement

ஆனால் துர்க்காவிடம் இந்த அளவிற்கு போவான் என்று சற்றும் எதிர்பார்க்கவில்லை.

உண்மை தெரிந்த பின்னும் அவள் இத்தனை நாட்கள் அமைதியாக இருக்க காரணமான தங்கையின் திருமணம் இனிதே முடிந்து விட்டது.

இனிமேல் கதிர் அறுக்கும் காலம். முடிவெடுத்து கொண்டவளாக நித்தியாவிற்கு மீண்டும் அழைப்பை எடுத்து “மொத்தமா முடிச்சு விடலாம் நித்தி.. ரெண்டு நாள் அங்க தான் இருக்க போறேன்.. அந்த நாய்க்கு ஒரு முடிவு கட்டிட்டு துர்க்காவையும் சேர்த்து வச்சிட்டு வெளிய வந்துருவேன்…” என்று கண்களில் கனல் தெறிக்க சொல்லவும்

“இப்பவும் சொல்றேன்.. நீ நினைக்கிறத செய்.. ஆனா இந்த முறையாவது மாமா சொல்றத கேளு…” என்று நித்தியா சொல்ல

“பாக்கலாம் நித்தி.. நான் சொல்றபடி செய்…” என்று தனது திட்டத்தைக் கூற,

அதை சிரத்தையாக கேட்ட நித்தியா “சரி எல்லாம் நல்லபடியா நடக்கும்னு நம்புவோம்…” என்று சொல்லி, அழைப்பை துண்டித்து விட்டு தனக்கான நேரத்திற்கு காத்திருக்க,

இங்கோ அஞ்சனா அணைந்து போன ஃபோனை வெறித்து பார்த்துக் கொண்டிருந்தாள். பிரபாகரனுக்கு அழைக்க வேண்டும் கைகள் நடுங்கியது. தன் பிரச்சினைக்காக மீண்டும் அவன் உணர்வுகளோடு விளையாட வேண்டுமா நினைக்கவே நெஞ்சமும் சேர்ந்து நடுங்கியது.

இருந்தும் வேறு வழி இல்லை. அவள் கணவன் என்ற கயவனையும் துர்க்காவையும் ஒரே கையில் கையால வேண்டும் என்றால் பிரபாகரனின் உதவி வேண்டும்.

எனவே எட்டு வருடங்கள் கழித்து அவன் நம்பருக்கு அழைத்தாள். பிரபாகரனின் தொலைபேசி சிணுங்கினாலும் அவன் காதில் விழவில்லை.

அவனோ மகளுடன் குளியலறையில் மல்லுக்கட்டிக் கொண்டு நின்றான். “செல்லம்மா என் தங்க பிள்ள இல்ல.. குளிச்சிட்டு ஸ்கூல் போலாம் வாடா…” என்று கெஞ்ச

அவன் மகளரசியோ “முடியாது.. போப்பா குளிரும்…” என்று முரண்டு பிடிக்க, விழி பிதுங்கி நின்றான் ஆறடி ஆடவன்.

தாய் நித்தியாவிடம் நானே என் குழந்தையை பார்த்துக் கொள்கிறேன் என்று சாதாரணமாக கூறிவிட்டாலும், இதோ நான்கு நாட்களிலேயே நாக்கு தள்ளிவிட்டது அவனுக்கு.

இத்தனைக்கும் ஆதூரி பிறந்ததில் இருந்து பிரபாகரன் தான் அனைத்து வேலைகளும் செய்து பார்த்துக் கெண்டான்.

ஆனாலும் பெண்களைப் போல் பிரபாகரனால் இலகுவாக மகளை கையாள முடியவில்லை என்பது தான் உண்மை.

நாள் முழுவதும் மகளுடன் இருக்க முடியாதே இவன் வேலைக்காக வெளியே கிளம்பி செல்லும் நேரங்களில் பிரேமாவதியோ நித்தியாவோ இல்லை துர்க்காவோ தான் அதுரியை பார்த்துக் கொண்டனர்.

சிறிது நேரம் என்றாலும் தாய்மையின் அன்பை பெண்களிடம் கண்டுகொண்ட ஆதூரி தந்தையிடம் அடாவடிக்காரி தான்.

இத்தனைக்கும் நித்தியா உதவி செய்கிறாள் தான். ஆனாலும் முழு பொறுப்பையும் அவளிடம் விடாமல் மகளை காலையில் எழுப்பி, குளிப்பாட்டி, பாடசாலை கொண்டு விடும்வரை தானே எல்லாவற்றையும் செய்யலாம் என்று பார்த்தால் அவன் மகள் ஒத்துழைக்க வேண்டுமே.

“குளிராது செல்லம்மா.. அப்பா கீட்டர் போட்டு சுடு தண்ணி வெளாவி வெச்சிருக்கேன்…” என்று சொல்ல

“இப்போ குளிராது.. குளிச்சதுக்கு பிறகு குளிரும்.. குளிக்க வேணாம் ப்பா.. குளிக்காம ஸ்கூல் போக முடியாதா?…” என்று கேட்க

மெலிதாக சிரித்தவன் “குளிக்கலைன்னா தூக்கம் தூக்கமா வரும்.. அப்புறம் எப்படி செல்லம்மா ஸ்கூல்ல ஃப்ரெண்ட்ஸோட விளையாட முடியும்.. குளிச்சிட்டு பிரஷா போய் ஸ்கூல்ல விளையாடலாம் வாங்க.. போகும்போது நீங்க கேட்ட கிரயோன்ஸ் எல்லாம் வாங்கி தாரேன் ஓகே…” என்று ஒருவாறு ஏதேதோ பேசி மகளை குளிக்க வைத்து,

பாடசாலை அனுப்ப தயாராக்கி விட்டு தான் அலைபேசியை கையில் எடுத்தான்.

அப்போதுதான் அவன் உயிரானவளிடம் இருந்து அழைப்பு வந்திருந்ததை கவனித்தான். “செல்லம்மா…” உதடுகள் முணுமுணுக்க அவசரமாக அவளுக்கு அழைப்பை எடுத்தான்.

பிரபாகரனிடம் இருந்து அழைப்பு வரவும் அதை ஏற்று காதில் வைத்தவள் “உங்கள பாக்கணும்…” என்று மட்டும் சொல்ல

அவனும் “வந்துர்றேன்…” என்று மட்டும் சொல்லி அழைப்பை துண்டித்து விட்டு, மகளுக்கு உணவை ஊட்டி விட்டு, மலர்ந்த புன்னகையுடன் தன் ஜீப்பை எடுத்துக் கொண்டு புறப்பட்டான்.

செல்லும் வழியில் மகளை பாடசாலையில் இறக்கி விட்டவன், நேராக சென்றது என்னவோ மாரியம்மன் கோயிலுக்கு தான்.

வண்டியை விட்டு இறங்கியவன் நொடியும் தாமதிக்காது போய் நின்றது அவர்களது ஆஸ்தான வேப்ப மரத்தடிக்கு தான்.

அவன் எதிர்பார்ப்பை பொய்யாக்காமல் அவன் பச்சை கிளி அங்கே தான் நின்றாள். எட்டு வருடங்கள் கழித்து அதே இடத்தில் பச்சை நிற சேலை முந்தானை காற்றில் பறக்க விட்டு நின்று இருந்தாள்.

அவளை பிரிந்த பின்னர் தான் தனக்கு பிடித்த நிறம் பச்சை, அதனால் தான் அவளும் உடுத்தும் ஆடையில் பச்சை இருப்பது போல் பார்த்துக் கொண்டாள் என்பதே புரிந்தது.

அவள் வெறித்த பார்வையும் தன்னை அவளாக அழைத்ததும் எதற்காக இருக்கும் என்று பிரபாகரனால் யூகிக்க கூடியதாகவே இருந்தது.

எதுவும் பேசாமல், என்ன சொல்ல போகிறாளோ என்ற எதிர்பார்ப்புடன் அமைதியாக அவள் அருகில் போய் அவள் உற்று பார்த்துக் கொண்டிருந்த ஆற்றை இவனும் பார்த்தபடி நின்றான்.

இருவருக்கும் இடையில் கனத்த அமைதி உயரமாய் வளர, “என்ன ஏத்துக்க தயாரா இருக்கேன்னு சொன்னீங்க உண்மையா?…” என்று அவள் தான் அந்த அமைதியை உடைத்தாள்.

அவன் எதுவும் பேசவில்லை. உதட்டில் வெகுநாட்கள் கழித்து விரிந்த புன்னகை உரிமையாக அவள் கையை பற்றி கொண்டான்.

குனிந்து தனது கையை பிடித்து இருக்கும் அவளவன் கையை பாரத்து விட்டு, நிமிர்ந்து அவன் முகம் பார்க்க “வா!…” என்றவன் அவள் கையை விடாமல் முன் நடக்க, அவளும் அவனுடன் சென்றாள்.

கைகள் இணைய நடந்து சென்று ஜீப்பில் ஏறிய பிரபாகரன் அஞ்சனாவை அனைவரும் வாயை பிளந்து பார்த்தனர்.

அதை பற்றி இருவரும் கவலைப்படவில்லை. அவளை அழைத்துக் கொண்டு வீட்டிற்கே வந்து விட்டான்.

வீட்டிற்கு வந்தும் அவள் கையை விடாமல் தன்னுடன் தனது அறைக்கு அழைத்துச் செல்ல, அஞ்சனா அங்கு நின்ற நித்தியாவிற்கு கட்டை விரலை தூக்கி காட்ட, கண்களை மூடி திறந்த நித்தியா சரியாக அரைமணி நேரம் கழித்து அகிலனுக்கு அழைப்பை எடுத்தாள்.

வீட்டில் அவளும் துர்க்காவும் தான் இருந்தனர். மற்றவர்களுக்கு விபரம் தெரிந்து வரும் முன் தங்கள் திட்டம் நடக்க வேண்டும் என்ற பதட்டம் சற்று இருக்க தான் செய்தது.

அவர்கள் திட்டத்திற்கு தோதாக கோயிலில் வைத்து பிரபாகரன் அஞ்சனா கையை பிடித்து ஜீப்பில் ஏறியது காட்டு தீ போன்று பரவி இருந்தது.

“பொண்டாட்டி கைய கூட அவ்வளவு உரிமையா புடிச்சு பாத்தது இல்ல.. ஆனா அஞ்சனா கைய அவ்வளவு உரிமையா புடிச்சு கூட்டிட்டு போகுது பிரபாகரன் தம்பி…” என்று கோயிலில் பார்த்த ஒருவன் அகிலனிடன் தகவல் சொல்லிக் கொண்டிருக்கும் போது தான் நித்தியாவின் அழைப்பு வந்தது.

அதை ஏற்று “ஹாலோ!…” என்க

“ஹலோ நான் நித்தியா பேசுறேன்.. உங்க சம்சாரம் பிரபா மாமாவோட வந்தாங்க.. அவங்க கூடவே ரூமுக்கு போய் ஒரு மணிநேரமாச்சு இன்னும் கதவு சாத்தியே இருக்கு.. உள்ள வேற மாதிரியான சத்தமெல்லாம் கேக்குது…” என்று சொல்ல

“என்ன உளர்ற.. அவள் அப்படிபட்டவள் இல்ல…” என்று சொன்னாலும் குரலில் ஒரு நடுக்கம் வந்திருந்தது.

“சரி நீங்களே வந்து நேர்ல பாருங்க…” என்று சொல்லி நித்தியா அழைப்பை துண்டித்தவள்

“வாடா.. வா!.. இன்னைக்கு இருக்கு உனக்கு.. நீ எங்க வேணா ஊர் மேய்வ பொண்டாட்டி பத்தினியா இருக்கணுமா!…” என்று சொல்லிக் கொண்டவள் வாசலை பார்ந்தபடி நிற்க,

பத்து நிமிடங்களில் வீட்டிற்கு அடித்து பிடித்து வந்து சேர்ந்திருந்தான் அகிலன் . ‘என்ன ஒரு வேகம்…’ என்று மனதில் நினைத்தவள்

வரவழைக்கப்பட்ட சோகத்தை முகத்தில் காட்டி, மேலே பிரபாகரன் அறையை கையால் காட்டவும், ஒரு வித பீதியினுடனே படியேறிச் சென்று பிரபாகரனின் அறை கதவை தட்டினான்.

வேர்த்து வழிந்தது, தொண்டைக்குழியில் ஏதோ ஒன்று வந்து அடைக்க, எச்சிலை கூட்டி விழுங்கிக் கொண்டான் அகிலன்.

பிரபாகரன் கதவை தட்டும் சத்தத்தில் துரக்காவும் தன் அறை வாசலில் வந்து நின்றாள். கதவை திறந்தது என்னவோ அஞ்சனாதான் .

அவளின் பின் பிரபாகரன், இருவரின் தோற்றத்தை பார்த்த அகிலன் கண்கள் விரிந்து கொண்டன.

அஞ்சனாவோ தலை கலைந்து, தலையில் வைத்திருந்த பூ கசங்கி உதிர்ந்து இருக்க, நெற்றியில் இருந்த குங்குமம் அழிந்து, மடிப்பு எடுத்து கட்டி இருந்த புடவை முந்தானை கலைந்து, அவசரத்திற்கு அள்ளி மேலே போட்டது போல் நின்று இருக்க,

பிரபாகரன் சட்டை இல்லாமல் வெள்ளை கை இல்லாத பனியனுடன் நின்று இருக்க, அஞ்சனாவின் நெற்றி குங்குமம் அவன் கன்னத்திலும் நெஞ்சின் ஓரமும் ஒய்யாரமாக வீற்றிருந்தது.

துர்க்காவிற்கும் அண்ணனையும் அஞ்சனாவையும் அந்த கோலத்தில் பாரத்தது அதிர்ச்சி தான். நித்தியாவோ ‘அடிபொலி…’ என்று மனதில் மெச்சிக் கொண்டாள்.

“என்னடி இது…?” என்று அகிலனின் குரல் கர்ஜனையாக வர,

அஞ்சனாவோ “இவர் கூப்பிட்டாரு.. எனக்கும் இவர பிடிக்கும் அதான்.. நீங்க ஒன்னும் கவலபடாதீங்க ஆசைக்கு தான் இதெல்லாம்.. மத்தபடி நீங்க தான் என் புருஷன்…” என்று சொல்லி தாலியை வேறு எடுத்து கண்ணில் ஒற்றிக் கொள்ள,

ஆத்திரம் தலைக்கு ஏற அஞ்சனாவின் பின் தலையை கொத்தாக பிடித்து இழுக்க, அகிலனின் மணிக்கட்டை கெட்டியாக பிடித்த பிரபாகரன் “அவ மேல கைய வச்ச கொன்னு புதைச்சிடுவேன்…” என்று மிரட்ட

தானாக அகிலனின் கை விலகியது. “என்னடி பேசுற அசிங்கம் புடிச்சவளே.. ஆசைக்கு இவன் கூட படுத்தேன்னு சொல்ல வெட்கமா இல்ல…” என்று கேட்க

“இப்போ என்ன பெருசா அசிங்கம் பண்ணிட்டேன்.. நீங்க ஆசைக்கு நாலுபேரோட போனா சரி.. நான் போனா தப்பா?…” என்று கேட்க

“ஓஹோ!.. என்ன பத்தின உண்ம தெரிஞ்சிகிட்டு தான் இப்படி பண்றயோ.. நான் ஆம்பிளடி என்ன வேணா பண்ணுவேன்.. அதே நீ பண்ணுனா பேர் என்ன தெரியுமா?…” என்று அகிலன் கேட்கவும்

“என்ன வே**சினு சொல்லுவீங்க அவ்வளவு தானே.. சொல்லிக்கோங்க.. உங்கள மாதிரியே இவரும் ஒரு ஆம்பிள தானே.. நீங்க அடுத்த வீட்டு பொண்ண கூப்பிட்டா உங்க வீட்டு பொண்ண கூப்பிட ஒரு ஆம்பிள இருக்க மாட்டானா என்ன?…” என்று புருவம் உயர்த்தி கேட்க

“எவன் கூப்பிட்டாலும் ஒழுக்கமா இருக்குறவள் தான்டி உத்தமி…” என்று கொஞ்சமும் வாய் கூசாமல் அகிலன் சொல்ல

அவனை நெருங்கியவள் அவனுக்கு மட்டும் கேட்கும் குரலில் “அப்போ துர்க்கா உத்தமி தானே!…” என்று கேட்க

வெடவெடத்து உடல் தூக்கி வாரி போட்டது அகிலனுக்கு. தன்னை பற்றிய வேற ஏதோ ஒரு விடயம் தெரிய வந்திருக்கும் என்று அவன் நினைத்து இருக்க, துர்க்காவிடம் அவன் செய்த கேலவமான விடயம் தெரிந்திருக்கும் என்று கனவில் கூட அவன் நினைக்கவில்லை.

“அது எப்படி.. ஆட்ட கடிச்சி மாட்ட கடிச்சி கடைசியா மனுஷன கடிக்கிற கதையா.. ஒரு பொண்ண உருட்டி, மிரட்டி, கார்னர் பண்ணி உங்க கூட படுத்தே ஆகணும்னு கத்தி முனையில் நிப்பாட்டி அனுபவிப்பீங்க.. அப்படி உங்க கூட படுக்குறவ பரத்த.. நீங்க உத்தமனுங்க.. நீங்க கூப்பிட்டாலும் உங்க கூட வரக்கூடாது.. நீங்க வேற பொண்ணுங்களோட ஆசைக்கு போற மாதிரி நாங்களும் ஆசைக்கு போகக்கூடாது.. இது என்ன நியாயம்…” என்று அஞ்சனா கேட்க

அகிலனுக்கோ பிரபாகரனுக்கும் துர்க்காவின் விடயம் தெரிந்திருக்குமோ என்று பயமாக இருந்தது.

இருந்தும் மனைவி செய்த செயலை ஜீரணிக்க முடியாமல் “ஏய் என்ன நியாயம் பேசுறயோ!.. ஒழுங்கான பொம்பளயா இருந்தா என்ன பத்தின தகவல் தெரிஞ்சதும் உண்மையா பொய்யானு என் கிட்ட கேட்டு இருக்கணும்.. என் கிட்ட எதுவும் கேக்காம எப்படானு காத்திருந்த போல இவன் கூட கள்ளத்தொடர்பு வச்சிக்கிட்டயே.. என்ன ஜென்மம்டி நீ…”

“ஏது கள்ள தொடர்பா!.. ஊர் அறிய கைய புடிச்சு தான் கூட்டி வந்தாரு.. கேள்வி படல.. அப்பறம் என்ன உன் கிட்ட கேட்டு இருக்கனுமா.. என்னனு நான் உனக்கு என்ன குறை வெச்சேன், எனக்கு ஏன் துரோகம் பண்ணுனனு கேக்கணுமா.. கேட்டா மட்டும் நீ பண்ணுன எச்ச வேல இல்லனு ஆகிடுமா?…” என்றவள்

பிரபாகரன் புஜத்தை பிடித்துக் கொண்டு நெருங்கி நின்றவள் “இப்படி பாக்கும் போது குளுகுளுனு இருக்குல.. எந்த புருஷனுக்கும் காணகிடைக்காத காட்சி.. இப்போ புரியுதா எனக்கு உன் எச்ச புத்தி தெரிய வந்ததும் எப்படி இருந்திருக்கும்னு…” என்று கேட்டவள் வார்த்தைகளில் ஆதங்கம், வலி, குரோதம் என எத்தனையோ உணர்வுகள்.

கிட்டத்தட்ட எட்டு வருடங்கள் அவனுக்கு உண்மையாக தானே இருந்தாள். அவளின் உண்மையான உறவிற்கு அகிலன் குடுத்த பரிசு துரோகம்.

One thought on “மீண்டும் கேட்குமா பூபாளம் 16

  • Gayathri Sgh

    அஞ்சனா அகிலன் ஆஹ் பலிகொடுக்கணும் ன்னு பண்ற ok. ஆனா பிரபா கூட வாழ்க்கை முழுக்க இருப்பியா.. இல்ல வேலை மூச்சிதம் காலடி விட்டு போயிருவிய..
    பிரபாவுக்கு முழு நம்பிக்கை குடுக்குற மாறி பண்ணிடு விட்டு போயிருந்த டி….

    Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!