Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

73. வேணு கானமிதுContest Stories 2026

கானம் 13

அத்தியாயம்: 13

சௌங்…. என்று சத்தமிட்டபடியே படிக்கட்டின் பிடியில் சறுக்கிக் கொண்டு இறங்கினாள் சரிகா.



Advertisement

“யூனிஃபார்ம் மாட்டிட்டு இப்படி விளையாடாதன்னு சொன்னா கேக்க மாட்டியா டி?” என்ற அதட்டலுடன் பின் வந்தாள் ரிதன்யா.

“கேக்க மாட்டேனே… நீ என்ன பண்ணுவ…” என்று ராகமிட்டு, விளம்பர பாணியில் பாட, தலையில் நங்கென்று கொட்டு விழுந்தது சிறுமிக்கு.

Advertisement

Advertisement

“வலிக்குதும்மா!” என்று தலையைத் தடவியபடி சொல்ல,

“பதிலுக்குப் பதில் அகராதியா பேசுனா இப்படித்தான் வசமா வாங்குவ.” என்றபடி ஸ்கூட்டியை எடுத்தாள்.

Advertisement

“ரிதும்மா… அகராதின்னா என்னம்மா?” என்று இமை கொட்டிக் கேக்க,

“நீ தான் டி அது… ஏறு வண்டில.”

“ஆனா அம்மா, அதி அக்கா காணலயே?” என்றுவிட்டு பத்ரியின் வீட்டை நோக்கி ஓடியவள்,

“சரிகா…” என்ற அழுத்தமான குரலில் நின்று கொண்டாள்.

“அதிக்கா நம்ம கூட வரமாட்டா. நீ ஏறு. நேரமாச்சி.” என்றவளும், வீட்டை ஒரு பார்வை பார்த்து விட்டு ஸ்கூட்டியை எடுத்தாள்.

பள்ளி செல்லும் வரை, “ஏம்மா அதிக்கா நம்ம கூட வர மாட்டாங்க?” என்று கேட்டுக் கொண்டே வந்தாள் சின்னவள்.

“அவங்க மாமா‍, வேனுக்கு கட்டுன ஃபீஸ் வேஸ்டாகுதேன்னு ஃபீல் பண்றாறாம்.”

“ஓ… அப்ப அடுத்த மாசம் வேன்னுக்கு காசு கட்ட வேண்டாம்னு சொல்லிடுங்க. நம்ம கூடவே அதி அக்கா வரட்டும்.” என்று ஆசையுடன் சொன்னவளை, பள்ளியில் இறக்கி விட்டு விட்டு, தன் பணியிடத்திற்குச் செல்லாது ரயில் நிலையத்தை நோக்கி ஸ்கூட்டியை ஓட்டினாள் ரிதன்யா.

அங்கு, லேக்கல் ட்ரெயினில் சுருதி வந்திறங்க, அவளை அனல் பார்வை பார்த்து வரவேற்றாள் ரிது.

“ஐயோ… எங்கயோ போற மாரியாத்தா எம்மேல வந்து ஏறாத்தாங்கிற கதையாட்டம், எங்கிட்டோ போயிருக்க வேண்டிய இவப் பிரச்சனைய எம்மேல தூக்கி போட்டுக்கிட்டு கிறுக்கப்படுத்தின பாடு படுறேனே!!” என்று புலம்பியபடியே அவளின் பின்னால் ஏறி அமர்ந்தாள்.

பத்ரி வந்து பேசியதைச் சுருதிக்குச் சொல்ல வேண்டி ரிதன்யா பலமுறை முயன்றாள். ஆனால், ரத்த தான முகாம் என்ற பெயரில் பக்கத்து ஊருக்குச் சென்றிருந்த சுருதி, அலைபேசியை சைலண்ட் மோடில் போட்டிருந்தாள். அதுவே ரிதுவின் கோபத்தைக் கிளறி விட்டிருந்தது.

“அட்டன் கூட பண்ண முடியாத அளவுக்கு என்ன கிழிக்கிறா அவ!” என்று பொருமிக் கொண்டே மீண்டும் மீண்டும் அழைத்தாள்.

மாலை நேரம் விடுதிக்கு வந்தவள், உடல் அலுப்பின் காரணமாக உடை கூட மாற்றாது உறக்கம் போட, விடுதித் தோழிகள் தான் விடாது மின்னிய அலைபேசியைப் பார்த்து விட்டு அவளை எழுப்பி விட்டனர்.

ஹலோ என்றதும் தான் தாமதம், ரிது சரமாரியாகத் திட்டத் தொடங்கி விட்டாள். பின் அவளே போதும் என்று விட்டு விட்டு நடந்ததைச் சொல்ல,

“என்ன! வீட்ட காலி பண்ணச் சொன்னாரா?” என்றாள் சுருதி அதிர்ச்சியாக.

“ஆமாம்… அதுவும் ஒரு மாசத்துக்குள்ள.”

“என்ன காரணம்?”

“பொய் சொல்லி வீட்ட வாடகைக்குப் பேசிருக்கோமாம்.”

“நாம பொய் சொன்னோம்னு அவருக்கு எப்படித் தெரியும்?”

“அதான் என் உத்தம புருஷன் கடை வாசல்ல கால் விழுந்த வீடியோ இருக்கே. கூடவே எம்பொண்டாட்டிய எங்கூட சேத்து வைங்கன்னு எங்க கல்யாண ஃபோட்டோவோட கண்ணீர் மல்க வீடியோ ஒன்னு போட்டிருந்தானே!”

“டென் மில்லியன் வியூவ்ஸ் போச்சே! அதுவா?” என்க,

“ஆமாம். அதே தான்.” என்று பற்களைக் கடித்தவள்,

“அதுக்குக் கீழ் கூட பல ஆயிரம் ஆண்கள் ‘இந்தப் பொண்ணுங்களே இப்படித்தான்னு…’ தங்களோட ஆதங்கத்தக் கொட்டிருந்தானுங்கள்ல. அதெல்லாத்தையும் நம்பி, இப்படிப் பட்ட பொண்ணு அவனோட வீட்டுல வாடகைக்கு இருக்குறது அவனுக்கு அசிங்கம்னு சொன்னான். எங்கூட பழகுனா, அவனோட குடும்பத்து ஆள்களையும் நான் கெடுத்திடுவேனாம். குறிப்பா அவனோட மருமக மனசுல விஷத்த இறக்கிடுவேன்னு, உடனே காலி பண்ணுங்கிறான்.” என்றவள் பத்ரி பேசியதைச் சுருக்கமாகச் சொல்ல,

“நீ என்ன சொன்ன? சண்டை எதுவும் போட்டியா?”

“நான் எதுவும் சொல்லல. சொல்லவும் அவன் விடல. வந்தான் காலி பண்ணுன்னு மிரட்டுனான். போய்ட்டான். எனக்குப் பேச கூட வாய்ப்பு தரல. ஆன்டிக் கிட்ட பேசலாம்னு பாத்தா! அவங்களயும் கூட்டீட்டு எங்கயோ போய்ட்டான்.” என்றபோது சுருதியிடம் கனத்த அமைதி நிலவியது.

சுருதி, பத்ரியின் இந்த அதிரடி முடிவை எதிர் பார்க்கவில்லை. தனக்கு பொய் பிடிக்காது என்றும் தன் குடும்பம் என்று வரும் போது அதீத கவனத்துடன் தான் நான் இருப்பேன் என்றும் பத்ரி கூற கேட்டிருக்கிறாள். பாத்தும் இருக்கிறாள்.

மாதங்கள் ஓடி விட்டன. ரிதுவின் குணத்தை, ஓரளவேனும் கணித்து வைத்திருக்கும் அந்தக் குடும்பம். அவளின் பக்கத்து நியாயத்தைக் காது கொடுத்து கேட்டால் இரக்கம் தன்னால் பிறக்கும் என்று நம்பினாள்.

“பத்ரி சார்ட்ட நான் பேசிப் பாக்கவா?” என்க,

“பேசு… ஆனா, எனக்கு நம்பிக்கை இல்லை. அவனப் பாத்தா பிடிவாதக் காரனா தெரியுறான். நிச்சயமா எடுத்த முடிவுல இருந்து பின்வாங்க மாட்டான்.”

“இப்ப என்ன பண்ண?” என்றாள் உண்மையான வருத்தக் குரலில்.

“சுதா ஆன்டிக்கு கால் பண்ணு. வேற நம்பர்ல இருந்து கால் அடி. நான் பண்ணப்ப அவன் தான் எடுத்தான். அந்தம்மாவ ஏமாத்தி சொத்து ஆட்டையப் போடுற கூட்டம் தான நீன்னு ரொம்ப மோசமா பேசினான். வேற நம்பர்னா அவங்க எடுக்க வாய்ப்பிருக்கு.” என்றுவிட்டு வைக்க, அடுத்த சில நிமிடங்களில் சுருதி மீண்டும் அழைத்தாள்.

“பத்ரி சார் அவரோட கடைல வந்து என்னைப் பாக்கச் சொன்னாரு.” என்றாள் சோகமாக.

ஏனெனில் பத்ரி அவளையும் காய்ச்சு காய்ச்சென்று காய்ச்சு விட்டான்.‌ அவளுக்கு வந்த, தவறிய அழைப்புகளில் பத்ரியின் இரண்டு அழைப்புகளும் இருந்தன.

இவர்கள் இருவரும், முதியவர்களை ஏமாற்றி, வீட்டை எழுதி வாங்கும் நோக்கத்துடன் தான் குடி வந்துள்ளனர் என்றும், வீட்டில் இருக்கும் பலவீனமானவர்களிடம் சென்டிமெண்டாக பேசி வீட்டிற்குள் ஒரு ஆளாக மாற திட்டமிட்டுள்ளனர் என்றும், வசை பாடியதைச் சுருதியால் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை. அவன் மீது கொண்ட நட்பு அவனின் பேச்சால் காயப்பட்டது.

“கடை எங்க இருக்கு?”

“வாட்சப் பண்ணிருக்காரு.”

“எத்தனை மணிக்கு வரச் சொன்னான்?”

“பத்து.”

“நீ வா… நாம சேர்ந்து போகலாம்.”

“இல்ல என்னை மட்டும் தான் வரச் சொன்னாரு. நீ வந்தா வேற மாதிரி பிரச்சனை மாறலாம்.”

“வீட்டுக்கு வாடக குடுத்து, தங்கிருக்குறது நான். அவன் எங்கிட்ட தான் பேசணும்.” என்றவளை மறுக்க முடியவில்லை. எப்படியும் சண்டை தான் போடுவாள் என்று தெரிந்ததால் உள்ளுக்குள் கலவரத்துடனே அவள் இருக்க, வாசன் ஸ்டோருக்குச் சென்று கொண்டிருக்கின்றனர்.

சுருதியின் எண்ணவோட்டத்தில் பலபல குழப்பங்கள். ‘நல்லது என்று நினைத்து தான், பொய்ப் பேசினாள். அந்தப் பொய்யும் ரிதன்யாவிற்கும் அவளின் குழந்தைக்கும் பாதுகாப்பு என்று தான் நினைத்து சொன்னேன். ஆனால் அது இரட்டைக் குழல் துப்பாக்கி போல் பின்னால் வெடிக்கும் என்று யார் கண்டது.

தன்னை நம்பித்தான் இங்கு வந்தாள். அவளுக்கு நல்லதொரு வீட்டைக் கூட ஏற்பாடு செய்ய முடியவில்லையே…’ என்ற கழிவிரக்கம் பிறந்தது சுருதிக்கு. கூடவே அவள் வாழ்க்கையில் நடக்கும் அத்தனை இன்னல்களுக்கும் தான் தான் காரணம் என்ற குற்ற உணர்வும் வந்தது. பத்ரியிடம் பேசி எப்படியாவது அவன் மனத்தை மாற்ற வேண்டும் என்று அவள் சிந்தனைகள் செல்ல,

‘என்ன ஆனாலும் அந்த வீட்டை விட்டு இனி நான் அசையப் போவது இல்லை. எத்தனை காலத்திற்குத் தான் ஓடிக் கொண்டே இருப்பது. இனி ஓட மாட்டேன்.’ என்ற உறுதியுடன் ஸ்கூட்டியை ஓட்டிக் கொண்டிருந்தாள் ரிதன்யா.

வீடு, வெறும் செங்கல்களை அடுக்கி கட்டப்பட்ட கட்டடம் அல்ல. அது பாதுகாப்பு கூண்டு. சொந்தமாகவோ, வாடகையாகவோ எதுவாக இருந்தாலும் அது தனக்கே தனக்கென இளைப்பாற கிடைக்கும், இருக்கும் கருவறை. எங்கு, எத்திசைக்குப் பறந்து சென்றாலும் அடையவும், நிம்மதியைத் தந்து அரவணைப்பதும் அதுவே.

ரிதன்யாவிற்கும் அதைத் தந்தது இந்த வீடு தான்…

வாடகை வீடு என்றால் சிலபல அசௌகரியங்கள் இருக்கத்தான் செய்யும். அதிலும் யார் வீட்டிற்கோ வருபவர்கள் கதவைத் தட்டி, ‘அவர்கள் உள்ளனரா?’ என்று விலாசம் கேட்பது சகஜமான ஒன்று தான். அதிலும் பத்து வீடுகள் இருக்கும் காம்பவுண்டில், ‘வீட்டுல இல்லையா?’ என்று கேட்பது அடிக்கடி நடக்கும்.

ஆனால் இரவில் குடித்து விட்டு, கதவைத் தட்டி, திறக்கும் ரிதன்யாவின் நலிந்த ஆடையையும், கோபத்தை ஆயுதமாகக் கொண்டு முறைக்கும் அவளையும் ரசித்தபடி இழித்துக் கொண்டு நிற்பதைச் சகஜம் என்று ஏற்க முடியவில்லை அவளால்.

இத்தனைக்கும் அப்பொழுது அவள் விக்ரமின் மனைவி. இரவு பதினொன்று மணிக்கு மேல் தான் விக்ரம் வருவான். அவனின் வருகையை அறிந்தே, அக்கம் பக்கத்தில் இருக்கும் சில குடிகார கயவான்கள் அப்படிப்பட்ட ஈனச் செயலைச் செய்வர்.

வேலை முடிந்த பின், தாய் வீட்டில் இருக்கும் மகளை அழைத்துக் கொண்டு, வீட்டில் இரு கதவுகளையும் அடைத்துக் கொண்டு, மகளைக் கையணைவில் வைத்தபடி உறங்கி நகர்ந்த நாள்கள் பல,

விக்ரமிடம், நடந்தவைகளைக் கூறி, சீக்கிரமாக வரும் படி சொன்னால், “நீ எதுக்கு அவனுங்களுக்குக் கதவ திறந்து விட்டு என்னையும் பாரு என் அழகையும் பாருன்னு நிக்கிறா. நான்னா உம்பேர் சொல்லித் தட்டுவேன். அப்ப வந்து திறந்தா போதும். நீ திறக்கப் போய்த்தான் அவன் தட்டுறான்.” என்று பழியைத் தூக்கி அவள் மேல் தான் போட்டான் விக்ரம்.

“நீ உண்டு உன் வேலை உண்டு இருந்தா யாரு வந்து என்ன செஞ்சிடப் போறாங்க.” என்று அண்ணாமலையும் கிட்டத்தட்ட அதையே தான் சொல்வார்.

இரவில் மட்டுமல்லாது பகலிலேயே அந்த காம்பவுண்ட்டில் இருக்க முடியாது. வாசல் தாண்டி விளையாட அனுமதிக்க மாட்டாள் மகளை. ஆனாலும், “மாமா உனக்கு சாக்லேட் வாங்கிட்டு வந்திருக்கேன்… இந்த…” என்று நீட்டும் கள்ளக் கூட்டத்திடமிருந்து மகளையும் பாதுகாக்க வேண்டுமே.

கடைக்குச் சென்றால், காசு கொடுக்கையில், சிறு பெண் தானே என்று விரல்களை நசுக்கிப் பிடித்து பல்லைக் காட்டி வழிவான் கடைக்காரன். தனக்கு நடப்பது பாலியல் அத்துமீறல் என்று தெரியாமலேயே கருகிப் போகும் மொட்டுக்களில் தன் மகளின் பெயரும் இடம் பிடித்து விடக் கூடாது என்ற பயம் அவளுக்கு எப்பொழுதும் உண்டு.

என்னேரமும் எச்சரிக்கை உணர்வோடு எப்படி இருப்பது?

இருந்து தான் ஆகவேண்டும் என்றது இந்தச் சமூகம். கேட்டாள் பெண் பிள்ளையைப் பெற்று வைத்திருக்கிறாய் என்கும்.

இப்பொழுது இருக்கும் சீனிவாசன் இல்லம் அவளுக்கு நிச்சயமாக ஓர் அரண் தான்‌.

ஓடியாடி விளையாட இடம். மகள் ஆசைப்பட்டாள் என்று வளர்க்கும் பூச்செடி. அவளின் நடமாட்டத்தை விமர்சிக்கும் அக்கம் பக்கத்து தொல்லை கிடையாத தனி வீடு.

வேலை பார்க்கும் பள்ளியில் கூட, “அந்த வீட்டுலயா தங்கிருக்க!! பத்து தேதிக்கு மேல வாடகை குடுத்தா அதுக்கு வட்டி போடும் அந்தம்மா. தண்ணிக்குத் தனி காசு. கூட்டிப் பெருக்கி பராமரிக்க தனி காசுன்னு கறந்திட்டே இருக்கும். ஒத்த ரூபா கூட கை மாத்துக்கு குடுக்காது. அப்படிக் குடுத்திட்டா அவுக பையன் பின்னாடி வந்து சட்டையப் பிடிச்சி சண்ட போட்டு வாங்கிட்டு போவான். பாக்க படிச்சவன் மாதிரி இருந்தாலும் அவன் ரவுடிப் பயெ.” என்று அனேக கதைகளை அடுக்கினர்.

ஆனால் அதெல்லாம் ரித்யாவிற்கு பெரிதாகத் தெரியவில்லை. தெரிந்தது என்னவோ நிம்மதியான பொழுதுகள்.

விக்ரம் சரி கிடையாது என்பது தெரிந்து அவளை நெருங்கிய ஆண்கள் கூட்டம் பலர். ஏன் அலுவலக வேலை என்று கூறி வீட்டு தேடி வந்து சில பெண்களே புரணி பேசி, ஆதரவு சொல்கிறேன் என்று அவளைப் பயன்படுத்திக் கொள்ள நினைத்தவர்களும் உண்டு.

ஆனால் இங்கு, “யாரு அது? கேட்டு வாசல்ல நின்னு ஊர் கதை அளக்குறது! வேலை விசயமா பேசணும்னா அதை ஸ்கூல்ல வச்சிக்கணும். இங்கல்லாம் வரக்கூடாது.” கண்டித்து விடுவார் சுதா.

வீட்டிற்குள் அழைத்துச் சென்று பேசினாள்.

“மூணு பேருன்னு சொல்லித்தான் வீட்ட பேசிருக்க. அதிகமா ஜன நடமாட்டம் இருந்த காலி பண்ணிச் சொல்லிடுவேன்.” என்று மிரட்டுவார். அதைச் சொல்லியே யாரையும் வீட்டிற்குள் அனுமதிப்பதில்லை.

அத்தோடு, “அந்தப் பொண்ணோட பார்வையே சரியில்ல. அளவா நடந்துக்க.” என்று சுதா, ரிதன்யாவை எச்சரித்தது எல்லாம் அவளின் நலனுக்காக என்று தான் தோன்றியது.

வீட்டில் ஆண் துணை இல்லை என்று அவளைப் பின் தொடருபவன் கூட, வீட்டைப் பார்த்ததும் ஓடி விடுவான். கடைகளில் கூட )அந்த வீட்டலயா இருங்கீங்க?” என்று மரியாதையான பார்வையைத் தருவார்கள்.

பத்ரிக்கு இருக்கும் பெயர் அப்படி.

அந்த வீடும், பத்ரியின் பெயரும் அம்மா மகள் இருவருக்கும் பாதுகாப்பு உணர்வைத் தந்தது.

பக்கத்திலேயே பள்ளி. காய்கறி வாங்குமிடம், கோயில் என்று நிம்மதி கிடைத்துக் கொண்டிருந்தது. அந்த வீட்டிற்கு அழகாய்த் தன்னைப் பொருத்திக் கொண்டவளால், அந்த வீட்டைக் காலி செய்ய எப்படி முடியும்?

ஆனால் செய்தே ஆகவேண்டும் என்றான் பத்ரி நாராயணன்.

“உன்ன மட்டும் தான வரச் சொன்னேன்?” என்று சுருதியைப் பார்த்துக் கேட்க, சுருதியிடம் சொன்னதை அச்சுப் பிசகாமல் அவனிடம் சொன்னாள் ரிதன்யா. அவளை முறைத்தபடி அவன் இருக்க, அவளும் அவனுக்குச் சலிக்காது கோபத்தைக் காட்டியவாரே நின்றாள்.

“சார்… வெரி சாரி.. ஆக்சலி தப்பு என்னோடது தான். ஆரம்பத்துலயே உண்மைய சொன்னா வீடு குடுக்க மாட்டீங்களோன்னு…”

“கண்டிப்பா இப்படிப்பட்ட பொம்பளக்குக் குடுத்திருக்கவே மாட்டேன். பாரு எவ்ளோ திமிரா நிக்கிறா!.” என்று, ‘பொண்ணா இது!!’ என்பது போன்று ரிதன்யாவைப் பார்த்து வைத்தவன்,

“ஆரம்பத்துல பொய் சொன்ன… ஓகே… இந்த மூணு மாசத்துல எத்தனை முறை நாம சந்திச்சிருப்போம்? எத்தனை டயம் ஃபோன்ல பேசிருப்போம. அப்பக் கூட சொல்லல நீ.” என்றவன் குரலில் தன் தோழியான சுருதி உண்மையைச் சொல்லாததில் ஏகபோக வருத்தம் இருந்தது.

“இனி உன்னைப் பாக்கும் போதும், பேசும் போதும், என்னென்ன பொய்ய தோண்டி எடுக்கணுமோன்னு தான் எனக்கு தோணும்.”

“அப்படிலாம் இல்ல சார்.”

“நான் உன்ன நல்ல ஃப்ரெண்ட்டா நினைச்சேன் சுருதி. பட்… இட்ஸ் ஓகே… என்னோட குடும்பத்துக்கு நல்ல அட்மாஸ்பியர குடுக்குறது தான் என்னோட கடமை. அதுனால வீட்ட…”

“காலி பண்ண முடியாது.” என்றாள் ரிது அழுத்தமாக.

“ரிது…” என்று அடிக் குரலில் சுருதி கெஞ்ச,

“காண்டார்க்ட் போட்டிருக்கோம் சுருதி. எந்த இல்லீகல் ஆக்டிவிட்டியும் பண்ணல. பிறகு ஏன் காலி பண்ணணும்.” என்று கொதித்தவளிடம்,

சுருதி, “என்ன இருந்தாலும் பொய் சொன்னது நம்ம தப்பு தான். அதுனால கொஞ்சம் பணிஞ்சி தான் பேசணும். இப்படி அடாவடியா பேசக் கூடாது.”

“பணிஞ்சி! நீ பேசு. உன்னோட தோஸ்த்கிட்ட நீ கெஞ்சு. நான் எதுக்கு கெஞ்சணும்? நான் என்ன தப்பு பண்ணேன்? அவர் குடும்பத்துக்கு நல்ல ஆரோக்கியமான சுற்றத்த குடுக்கணும்னு ஆசைப்பட்டா! அவரு மருமகள பேச வேண்டாம்னு சொல்லு. எங்கிட்ட இருந்து அவரு அம்மாவ விலகி இருக்கச் சொல்லு.”

“நான் என்ன பண்ணணும் பண்ணக் கூடாதுன்னு சொல்ல உனக்கு ரைட்ஸ் இல்லை.”

“எஸ் சார்… அதே ரைட்ஸ் உங்களுக்கும் கிடையாது. நான் விவாகரத்து ஆனவளா இல்ல ஆகாதவளான்னு கணக்கெடுக்குறது உங்க வேலை இல்லை. ஒரு வர்ஷத்துக்கு அக்ரிமெண்ட் போட்டிருக்கு. அதுவரை நான் வேற வீட்டுக்கு போக மாட்டேன்.” என்றவளை சுருதி தான் இழுத்துச் சென்றாள். அவளை அழுத்தமாகப் பார்த்தபடி பத்ரி நின்றான்.

‘எத்தனை திமிர் இவளுக்கு. ஏமாற்றி உள்ளே வந்தது மட்டுமல்லாது அட்டை போல் ஒட்டிக் கொள்ள நினைக்கும் கைகாறிக்கு எத்தனை நீளமாகப் பேச்சு வருகிறது?’ என்று உள்ளுக்குள் அவளுக்கு அர்ச்சனை செய்ய, இங்கு சுருதி ரிதன்யாவை மலையிறக்க முயன்று கொண்டிருந்தாள்.

“காம் டவும் ரிது. இந்த வீடு இல்லன்னா வேற வீடே கிடைக்காதா?” என்று சாதாரணமாகச்‌ சொல்ல,

“முழுசா 3 லட்சத்த தூக்கிக் குடுத்திருக்கேன் அட்வான்ஸ்கிற பேர்ல. எங்கிட்ட வேற காசு கிடையாது. கடன் குடுக்கவும் யாரும் கிடையாது. ஒரு வர்ஷத்துக்குள் காலி பண்ணா அட்வான்ஸ்ஸ திரும்பி தரமாட்டோம்னு எழுதி வாங்கிருக்கான். காண்ட்ராக்ட் பேப்பர படிச்சிப் பாத்தியா? இல்லையா?

இன்னொரு வீடு தேட, மாசம் எடுக்கும். அதுவரை ரோட்டுலயா நிக்கச் சொல்றா! சரி ஒரு மாசத்துக்குள்ள வீட்டு பாத்திட்டோம்னு வச்சிக்க. அந்த வீட்டுல சுதா ஆன்டி மாதிரி நல்லவங்க இருப்பாங்களா? ஸ்கூல் பக்கமா இருக்குமா? அக்கம் பக்கம்?

பாப்பா படிப்பு, ஸ்கூட்டிக்கு டியூன்னு எனக்கு ஏகப்பட்ட பிரச்சினை இருக்கு. இதுல வீட்டுப் பிரச்சனை வேற.

ஒரு உதவி தான் கேட்டேன். அதைக் கூட உன்னால ஒழுங்கா செய்ய முடியல. இல்ல போன தடவை மாதிரி இந்த தடவையும் இழுத்துவிட்டு நான் கஷ்டப்படுறத வேடிக்கை பாத்து உள்ளுக்குள்ள சந்தோஷப்படுறியா!”

“ரிது நீ பழசையெல்லாம் மனசுல வச்சிட்டு பேசுற.”

“எப்படி மறப்பேன். நீ பண்ண காரியத்த எப்படி மறப்பேன். ஏற்கனவே என் வாழ்க்கைல விளையாடினவ தான நீ. மறுபடியும் விளையாட ஒரு வாய்ப்ப நானே குடுத்திருக்கேன். ச்சி…”

”அப்படிப் பேசாத ரிது. நான் உனக்கு உதவி செய்யத்தான் நினைச்சேன்.”

“கிழிச்ச… உன்னால முடியாதுன்னா நீ எங்கிட்ட முன்னாடியே சொல்லிருக்கலாம். நான் வேற ஏற்பாடாவது செஞ்சிருப்பேன். இப்படி வீட்டு பாத்து… காலி பண்ணச் சொல்றது… நடு ஆத்ததுல இறக்கி விட்டுட்டு வேற போட் வரும் ஏறிக்கன்னு சொல்ல மாதிரி இருக்கு.

நம்ப வச்சி கழுத்தறுத்திட்ட…

ச்ச… எல்லாம் எந்தப்புத்தான். உன்னை நம்பின என்னை எதால வேணும்னாலும் அடிக்கலாம்.” என்று விட்டு ஸ்கூட்டியை எடுத்துக் கொண்டு பறந்து விட்டாள்.

இங்கு சுருதி தான் சிலையென நின்றிருந்தாள்.

“கொஞ்சம் கூட இரக்கமே இல்லாம எப்படிப் பேசிட்டு போறா! இப்படி ஒரு கல்நெஞ்சக்காரிக்காகத் தான் நீ பொய் சொல்லி வீடு பேசிருக்க!” என்றபடி வந்தான் பத்ரி.

“அவளோட சூழ்நிலைல யாரா இருந்தாலும் அப்படித்தான் நடந்துப்பாங்க சார்.”

“இப்பவும் உன் சிஸ்டர விட்டுக் குடுக்க மாட்ட.”

“இப்ப மட்டுமில்ல சார். எப்பவும் மாட்டேன்.” என்று தீர்க்கமாகச் சொன்னவளைச் சிறு தோள் குளுக்களுடன் கடந்து சென்றான்.

 

கானம் இசைக்கும்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!