Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

14. விர்சாலி - மீண்டும் கேட்குமா பூபாளம்

மீண்டும் கேட்குமா பூபாளம் 08

அத்தியாயம் 08

அகிலன் பெண்களை கோயிலில் இறக்கி விட்டு விட்டு, கோயிலின் வெளியே நின்று கொண்டு வரும் போகும் பெண்களை நோட்டு மீட்டிக் கொண்டிருக்க,



Advertisement

கோயிலின் உள்ளே கேட்ட சலசலப்பு சத்தத்தில் உள்ளே வந்தவன், துர்க்கா கழுத்தில் தாலியும், அஞ்சனா பரணிக்காக பேசிக் கொண்டிருப்பதையும் பார்த்தவன் விஷயத்தை புரிந்து கொண்டு, பிரபாகரன், கிருபாகரன், முருகானந்தத்திற்கு அழைப்பை எடுத்து விடயத்தை கூறி உடனே வருமாறு சொல்ல.

முதலில் வந்து சேர்ந்தது அண்ணன் தம்பிகள் இருவரும் தான். அண்ணனை முந்திக்கொண்டு கிருபாகரன் சட்டையைப் மடித்துக் கொண்டு பரணியை கொன்று போடும் ஆத்திரத்தில் அவனை நோக்கி போக,

Advertisement

Advertisement

அகிலனும் தான் அடைய முடியாதவளை இவன் எப்படி சொந்தமாக்கலாம் என்ற எண்ணத்தில் எப்படியாவது அந்த தாலியை அவன் கையாலே அறுத்து எறிய வைக்க வேண்டும் என்று அடிக்க கையை ஓங்கும் முன்,

இவர்கள் இருவரையும் விலக்கி விட்டு, தன் முன் நின்ற பரணியின் சட்டை காலரை இறுகப் பிடித்த பிரபாகரன், அப்படியே அவனை பின்னோக்கி தள்ளிக் கொண்டு போய் கோயில் தூணில் சாற்றியவன் “என்னடா பண்ணி வச்சிருக்க…!” என்று வலது கையை ஓங்கி அவன் முகத்தில் குத்த போக,

Advertisement

அவன் கையை தன் கையால் தடுத்து பிடித்த பரணி “பிரபா நான் வேணும்னு செய்யல.. தெரியாம நடந்துடுச்சு…” என்று சொல்ல

அதிரடியாக நடந்த ஆண்களின் அத்துமீறல்களில் திகைத்து நின்ற பெண்களில் அஞ்சனா தான் முதலில் சுதாரித்து கொண்டு அண்ணனிடம் ஓடி வந்தவள், பரணியின் சட்டையில் இருந்த பிரபாகரனின் கையை எடுத்துவிட்டு,

அண்ணனின் முன்பு அவனை மறைத்தால் போல் நின்று “என்ன பண்றீங்க?.. உங்க யாருக்குமே பொறுமை என்றதே இல்லையா.. இங்க நடந்தது ஒரு எதிர்பாராத சம்பவம்.. அத தீர விசாரிச்சு அமைதியா ஒரு முடிவு எடுக்காம.. வார்த்தையால காயப்படுத்துறிங்க, கை நீட்டுறீங்க.. பஞ்சாயத்து தலைவர் வீட்டுலேயே அலசி ஆராயிர பக்குவம் யாருக்குமே இல்லையா?…” என்று அவன் விழிகளை நேருக்கு நேர் பார்த்து கேட்க

பிரபாகரன் ஓறடி பின் நோக்கி வைக்க, அகிலனோ மற்றவர்கள் யாரும் எதிர்பார்க்காத வகையில் அஞ்சனாவின் கன்னத்தில் ஓங்கி அடைந்தவன் “நானும் அப்போதுல இருந்து பாத்துட்டு இருக்கேன் அண்ணன் அண்ணன்னு ஓவரா வக்காலத்து வாங்குற.. சம்பந்தப்பட்டவங்க பிரச்சனைய பாத்துகட்டும் நீ இந்த வீட்டு மருமகளா வாய மூடிட்டு ஓரமா நில்லு…” என்று ஆத்திரமாக கர்ஜிக்க

அறை வாங்கிய கன்னத்தை பொத்தியபடி நின்றிருந்தவளின் கண்களில் இருந்த தீர்க்கமான பார்வையின் பொருள் அவனுக்கு புரியவில்லை.

தங்கை தனக்காக பரிந்து பேசி அனைவர் முன்னிலையிலும் அடி வாங்க, அவள் கணவன் மீது கோபத்தை வெளிப்படுத்த முடியாத இயலாமையில் கையை இறுக மூடி பல்லை கடித்த படி பரணி தங்கையை இழுத்து கைவளைவில் வைத்தவன்,

“என்ன மாப்பிள்ளை இது!..இனிமேல் எதுவும் பேசமாட்டா.. நீங்க இன்னொரு முறை இப்படி நடந்துக்காதீங்க…” என்று சற்று கடுமையாகவே சொன்னான்.

பரணியின் கோபத்தை விட அதிக ஆத்திரத்துடன், கையில் நரம்பு புடைக்க அகிலனை கொன்று புதைக்கும் ஆத்திரத்தில் பார்த்துக் கொண்டிருந்தான் பிரபாகரன்.

தன்னவளுக்கு அவன் இழைத்த துரோகம் பாவ கணக்கில் இருக்க, இதையும் அதனோடு சேர்த்துக் கொண்டான். “அகிலன் என்ன பழக்கம் இது.. பொண்ணு கை நீட்டி அடிக்கிறது…” என்று முயன்று கோபத்தை கட்டுப்படுத்தி சொன்னான்.

திடகாத்திரமான இரு ஆண்களும் மாறி மாறி எச்சரிக்கும் குரலில் சொல்ல, அமைதியாக அடங்கிப் போவதை தவிர அகிலனுக்கு வேறு வழி தெரியவில்லை.

அடிக்கண்ணால் மனைவியை முறைத்தவன், துர்க்காவை பார்த்தபடி அவன் தான் ஒரு ஓரமாக சென்று நீக்க வேண்டியதாக போனது.

பரணி தங்கையின் கன்னத்தை வருடி “சாரிடா…” என்கவும்

“விடு ண்ணா…” என்றவள் கண்களில் ஒரு துளி கண்ணீர் கூட வரவில்லை. அமைதியாக சென்று கீழே கிடந்த அவனின் ஊன்று கோலை எடுத்து வந்து, அண்ணனிடம் கொடுத்து அவனை நிலையாக நிற்க வைத்தவள்,

அப்போதுதான் கவனித்தாள். ஆண்களின் தலையீட்டைப் பார்த்த சகுந்தலா அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, துர்க்கா கழுத்தில் இருந்த தாலியை கழட்ட முயல, நித்தியா தடுத்து பிடிக்க, அவர்கள் மூவருக்குள்ளும் ஒரு போராட்டம் நடந்து கொண்டிருந்தது.

அதை பார்த்த அஞ்சனா “என்ன நடக்குது இங்க?…” என்று சத்தமாக கத்த

அப்போதுதான் அனைவரின் பார்வையும் தங்கள் மீது படிவதை பார்த்த சகுந்தலா போராட்டத்தை கைவிட்டாலும், துர்க்காவின் தாலியில் இருந்து கையை எடுக்கவில்லை.

“உங்களுக்கு மனசாட்சினு ஒன்னு இருக்கா இல்லையா?.. இங்க இருந்த அத்தன பேரும் சாட்சி துர்க்கா கழுத்துல தாலி விழுந்தது எதிர்பாராத ஒரு நிகழ்வு.. ஆனா கடவுளோட சங்கட்ப்பம் இதுதான்.. ஏன்னா என்னதான் நீங்க சொல்ற மாதிரி திட்டமா இருந்திருந்தாலும் அந்த அம்மனோட ஆசி இல்லாம சரியா அவ கழுத்துல எப்படி தாலி விழும்..

…வேணும்னு விரும்பி போட்டதோ இல்ல தெரியாம தடுமாறி போட்டதோ.. ஒரு பொண்ணு கழுத்துல தாலி எப்படி வேணா ஏறலாம் ஆனா இறங்கணும்னா அதுக்குன்னு ஒரு முறை இருக்கு.. உங்க இஷ்டத்துக்கு அறுத்து எறிய பாக்குறீங்க.. முதல்ல தாலியில இருந்து கைய எடுங்க…” என்று அதட்ட

தானாக சகுந்தலாவின் கை தாலியை விட்டாலும் “என்ன முறை!.. முறையாவா தாலி ஏறுச்சு முறையா கழட்ட.. நீயே சொல்ற எதிர்பாராம நடந்த விபத்துனு.. அதுக்கு எதுக்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கணும்…” என்று கேட்க

அப்போது அங்கு வந்து சேர்ந்த முருகானந்தம் “என்ன நடக்குது இங்க? எதுக்கு இவ்வளவு ஆர்ப்பாட்டம்…” என்றார் தோரணையாக.

மூத்த மகனை தான் முறைப்பாக பார்த்தார். விஷயம் தெரிந்து ஊர் மக்கள் திரள் திரளாக கோயிலுக்கு வருகை தந்திருந்தனர். அந்த ஊரில் இருக்கும் 90 சதவீத மக்கள் துர்க்காவை பார்த்து 14 வருடங்கள் இருக்கும்.

அவள் வீட்டை விட்டு வெளியே வருவது இந்த கோயிலுக்கு மட்டும் தானே, அதுவும் குறிப்பிட்ட மக்கள் நடமாட்டம் குறைந்த நேரத்தில்.

அப்படி இருக்க அவளுக்கு திடீர் திருமணம் என்று செய்தி காட்டு தீ போல் பரவி அவளை பார்க்கும் ஆர்வத்தில் கூட்டம் கூட, அதற்கு முன் துர்க்காவை வீட்டிற்கு அழைத்துச் செல்லாமல் என்ன இது வெட்டி வீண் விவாதம் என்ற கேள்வியுடன் மகனை பார்த்தார்.

அவனுமே இப்போதுதான் தங்களை சூழ்ந்து இருந்த கூட்டத்தை பார்க்கின்றான். “தவறுதலா நடந்த ஒரு தப்பான நிகழ்வு.. இத பெருசு பண்ண வேணாம்…” என்றவர் வெகு நாள் கழித்து மகளிடம் “அம்மாடி துர்க்கா தாலிய கழட்டி உண்டியல்ல போட்டுட்டு வாம்மா…” என்று சொல்ல

தன் உயிரையே இறுக பிடித்து இருப்பதை போன்று தாலியை பிடித்து திருந்தவள் உடல் தூக்கி வாரி போட்டது.

அஞ்சனா தான் இடையில் தலையிட்டு உறவு முறை என்பதை குறிப்பிடாமல் “ஐயா என்ன இருந்தாலும் தாலிக்குனு ஒரு மதிப்பு இருக்கு.. சம்பந்தப்பட்டவங்க கிட்ட ஒரு வார்த்த கேட்கலாமே.. எடுத்தோம் கவுத்தோம்னு முடிவு பண்ணக்கூடாதுல…” என்று சொல்ல

சகுந்தலாவோ “சம்பந்தப்பட்டவங்க கிட்ட என்ன கேட்கணும்.. இதுவே 60 வயசு கிழவன் கையாள தாலி விழுந்து இருந்தாலும் அவன் கூட வாழ விருப்பமானு கேப்பிங்களோ!…” என்று நாரசமாக பேச

பிரபாகரன் கிருபாகரனுக்குமே தங்கள் அத்தையின் பேச்சு சகிக்கவில்லை. “அந்த அளவுக்கு மனசாட்சி இல்லாதவ நான் இல்ல.. இவங்க ரெண்டு பேருமே கல்யாணமாகாதவங்க.. கொஞ்சம் யோசிக்கலாமே…” என்க

அங்கு கூட்டத்தில் இருந்த பெரிய தலைக்கட்டுகளும் முருகானந்தம் அருகே வந்து “அதானேப்பா இப்படி அமளி துமளியா இருந்தா எப்படி சிந்திக்க.. முதல்ல எல்லாரும் அமைதியா உட்காருங்க.. ஆறுதலா பேசி ஒரு முடிவுக்கு வரலாம்…” என்று சொல்ல

முருகானந்தத்திற்கு மறுத்துப் பேச முடியாத நிலை. இதே சமயம் ஏதோ யோசித்த நித்தியா மெதுவாக நழுவி கோயில் பூசாரியின் அருகில் சென்றவள் “ஐயா! கொஞ்சம் தனியா வாங்க முக்கியமா பேசணும்…” என்று ரகசியமாக சொல்லிவிட்டு கோயிலின் பின்புறம் செல்ல, அவரும் மற்றவர்கள் கண்ணில் படாத வண்ணம் அவளை பின்தொடர,

இங்கு கோயில் மண்டபத்தில் அமர்ந்த முருகானந்தம் தங்கைக்கு கண்ணை காட்ட, சகுந்தலாவும் “துர்க்கா இன்னும் அதிர்ச்சியில இருந்தே வெளிய வரல.. அவள கூட்டிட்டு போய் முகத்த கழுவி கூட்டிட்டு வாரேன்.. அதுக்கு பிறகு எதுவா இருந்தாலும் கேட்டுக்கோங்க…” என்றவர்

அவளை இழுத்துக் கொண்டு குழாய் அடிக்கு வந்தவர் “இங்க பாரு துர்க்கா ஒழுக்கமான ஒருத்தி ஒருத்தனோட தான் வாழ்வாள்.. நீ ஒருத்தனோட வாழ்ந்து கெட்டு முடிஞ்சு.. உன்ன இழுத்துட்டு போனவன் இப்ப வரைக்கும் என்ன ஆனான் தெரியல.. உன் வயித்துல ஜெனிச்ச உசுரும் கைக்கு வராம போச்சு..

…இப்போ உடம்பு அரிப்புக்கு இவன் கூட வாழ்றன்னு சொல்லி இவனையும் காவு கொடுத்துடாத.. ஒரு தடவ ஒழுக்கம் கெட்டுப்போன பாவமே தீரல.. திரும்பவும் பெத்தவங்க கௌரவத்த சந்தி சிரிக்க வைக்காத.. உன் அப்பன் சொன்னது காதுல கேட்டுச்சு இல்ல.. அந்த கருமத்த கழட்டி உண்டியல்ல போட்டுட்டு வீட்டுக்கு போய் தலை முழுகற வழிய பாரு…” என்று எந்த அளவுக்கு முடியுமோ அந்த அளவிற்கு துர்க்காவின் மூளையையும் மனதையும் ஆட்டி வைத்தார்.

“இன்னும் என்னடி அதையே இறுக பிடிச்சுட்டு நிக்கிற.. முகத்த கழுவிட்டு வா…” என்கவும்

அவளும் குழாயில் தண்ணீரைப் பிடித்து முகத்தை கழுவ, “எவன் கழுத்துல தாலிய போடுவான் அவன் கூடவே போய் படுக்கலாம்னு உடம்பு சுகத்துக்காக காத்துட்டா இருந்த.. இல்லையே, அப்புறம் என்ன வா போய் அந்த கயித்த கழட்டி உண்டியல்ல போட…” என்று அவளை இழுத்துக் கொண்டு மண்டபம் வரவும்

பரணி, துர்க்காவை நம்பாத நித்தியா பூசாரியிடம் ஒரு திட்டத்தைக் கூறி சம்மதிக்க வைத்து அங்கு வரவும் நேரம் சரியாக இருந்தது.

அங்கு இருந்தவர்கள் அனைவரும் பரணி பிடிமானம் இன்றி தடுமாறியதில் தான் தவறுதலாக தாலி கழுத்தில் விழுந்ததை சொல்லவும்,

முருகானந்தம் துர்க்காவிடம் நேரடியாகவே “துர்க்கா இந்த தாலிக்கு மதிப்பு கொடுத்து நீ பரணியோட வாழ விரும்புறியா?…” என்று கேட்க

என்ன பதில் சொல்வாள். இல்லை என்று சொன்னால் காலத்திற்கும் தன் அண்ணனுக்கும் அண்ணிக்கும் தொண்டையில் சிக்கிய முள்ளாக இருக்க வேண்டும்.

போலியாக கடவுளுக்கு சேவை செய்கின்றேன் என்று காலத்தை ஓட்ட வேண்டும்.

ஆம் என்று சொன்னால் மற்ற பெண்களைப் போல் கௌரவமான ஒரு வாழ்க்கை. தன்னை காரணம் காட்டி அண்ணன்கள் வாழ்க்கை கெடாது.

ஆனாலும் ஆம் என்று சொல்ல விடாமல் அவளின் முன்னாள் வாழ்க்கையும், இப்போது அத்தை கூறிய வார்த்தைகளும் மூளையை செயலிழக்க வைக்க, தன் நிலையை நினைத்து கண்ணீர் தான் வந்தது.

நித்தியாவிற்கு துர்காவை பார்த்து ஆத்திரமாக வந்தது. அரண்மனை சிறையில் இருந்து தப்பித்து அழகிய கூண்டில் அடைக்கலமாக அருமையான வாய்ப்பு. ஆனால் அதை பயன்படுத்த மாட்டாள் என்று அவள் உடல் மொழியும் கண்ணீருமே சொன்னது.

பரணி எதிர்பார்ப்புடன் அவளைத்தான் பார்த்து இருந்தான். கூட்டத்தில் இருந்த ஒருவர் தான் “உன் முடிவ தைரியமா சொல்லுமா.. இந்த தாலிய ஏத்துக்கிறியா இல்லையா?…” என்று கேட்க

தன்னையே வெறுத்து…

தன் உயிரையே வெறுத்து…

 காரணம் இன்றி எந்த பெண்ணும் தாரை வார்க்க விரும்பாத தாலியை வேண்டாம் என்று இடவலமாக தலையை அசைத்தாள்.

பரணியை ஏமாற்றமும் ஆசுவாசமும் சரிவிகிதமாக தாக்க, விழிகளை மூடி திறந்தான்.

நித்தியாவோ ‘நினைச்சேன் அமுசடக்கி.. இவளும் வாழ மாட்டா நம்மளையும் வாழ விட மாட்டா…’ என்று மனதில் திட்டிக்கொண்டாள்.

பரணி துர்க்காவிற்கும் மேல் “இதுக்கு மேல எதுவும் பேச வேணாம்.. அத.. அந்த தாலிய கழட்டி உண்டியல்ல போட சொல்லுங்க.. இது சம்பந்தமா நான் வேற எதுவும் பண்ண மாட்டேன்…” என்று சொல்ல

அஞ்சனாதான் நொந்து போனாள். எப்படித்தான் தன் அண்ணாவையும் தான் பாலிய தோழியையும் வாழ வைப்பது என்று புரியவில்லை.

முடிந்தவரை முயற்சி செய்து விட்டாள். இயலாமையுடன் அவள் நித்தியாவை பார்க்க, கண்களை மூடி திறந்து புது நம்பிக்கையை அளித்தாள் அவள்.

நித்யாவின் முகத்தில் தெரிந்த தெளிவு அஞ்சனாவின் முகத்தில் பிரகாசத்தை வரவழைத்தது.

பிரபாகரன் அஞ்சனாவைத்தான் ஆராய்ச்சியாக பார்த்திருந்தான். அவள் அண்ணனுக்காக இந்த அளவு துணிந்து நிற்பது சாதாரணமாக படவில்லை. அதே நேரம் என்னவென்று கண்டு கொள்ளவும் முடியவில்லை.

முருகானந்தம் “அதான் சம்பந்தப்பட்டவங்களே முடிவு சொல்லிட்டாங்களே.. பூசாரி அந்த தாலிய வாங்கி என்ன செய்யணும் செஞ்சிடுங்க…” என்று இறுதி தீர்ப்பை கூறி முடிக்க

பூசாரியும் நித்தியாவை கடைக்கண்ணால் பார்த்துவிட்டு, முருகானந்தத்தை நெருங்கி “ஐயா ஒரு முக்கியமான விஷயம் சொல்லணும்னு இருந்தேன்.. அதுக்கு முன்னமே இந்த அசம்பாவிதம் நடந்து போச்சு…” என்று சுற்றி வளைக்க

“என்ன பூசாரி.. என்ன விஷயம்.. தெளிவா சொல்லுங்க…” என்கவும்

“அது துர்க்கா அம்மா ஜாதகப்படி 28 வயசு முடிய முன்னாடி தாலி ஏறுனா இறங்க கூடாது ஐயா.. அப்படி இறங்குனா ஏற்கனவே நிகழ்ந்த மாதிரி உங்க குடும்ப கௌரவம் இழிவாகுற மாதிரி சம்பவங்கள் நிகழலாம்…”

“என்னையா சொல்றீங்க.. இத முன்னாடியே சொன்னா என்ன.. இப்போ என்ன பண்றது.. அதுக்காக அந்த பரதேசி பயல என் மருமகனா ஏத்துக்கொள்ள சொல்றீங்களா?…” என்று பல்லை கடித்து முருகானந்தம் யாருக்கும் கேட்க வண்ணம் உரும,

“இல்லைங்க ஐயா.. எல்லா கணிப்பும் நடந்துறது இல்லையே அதான் நான் ஆறுதலா சொல்லலாம்னு இருந்தேன்.. இப்போ தெய்வ சங்கல்பம் மாதிரி தாலி ஏறிடுச்சு.. அதனால இப்போ கழட்டக்கூடாதுங்க.. துர்க்கா அம்மாக்கு 28 வயசு முடியவுந்தான் கழட்ட முடியும்…” என்று சொல்ல

“அவளோட 29ஆவது பிறந்தநாளுக்கு இன்னும் மூணு மாசம் இருக்கு.. அதுவரைக்கும் அந்த தாலி அவ கழுத்துல தான் இருக்கணுமா?…” என்று சீற்றமாக முருகானந்தம் கேட்க

“வேற வழி இல்லைங்க.. அது மட்டும் இல்லாம சாதாரணமா கழட்ட முடியாது பூஜை பண்ணி முறையாக கழட்டனும்.. இல்லனா குடும்பத்துக்கே தோஷம் பிடிக்குமுங்க…” என்று சொல்ல

“சரியா.. நீங்களே சொல்லுங்க…” என்றவர் கடுகடுத்த முகத்துடன் அமர்ந்து இருக்க,

பூசாரியும் “துர்க்கா அம்மா ஜாதகப்படி தாலிய கழட்ட முடியாது.. மூணு மாசம் கழிச்சு தான் கழட்ட முடியும்…” என்று சொல்ல

துர்காவிற்கு அப்போதுதான் மூச்சு குழாயில் சிக்கிக் கொண்ட சுவாசக் காற்று சீராக வெளிவந்தது.

One thought on “மீண்டும் கேட்குமா பூபாளம் 08

  • Gayathri Sgh

    ஏன் பிரபா பட்டாணி உன் பிரின்ட் தானே அவனை அடிக்க போற… துர்கா இப்படி எல்லாத்துக்கும் பயந்து தான் உன் வாழ்கயே கெடுத்துக்குற 🤦‍♀️.
    இப்படி அந்த கிழவி சொல்லுதுன்னு நீயும் சரி சொல்லுற 😡.. ஆனா துர்கா சொன்னதுல பழனி மனசு ஒடஞ்சிருச்சு 😥.
    நித்தியா பிளான் பண்ணது ok. ஆனா அந்த 3 மாசமும் துர்கா எங்க இருக்குறது. அது இன்னும் முடிவு பண்ணலையே 🤔..

    Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!