“பேபி வளர ஆரம்பிச்சுடுச்சாம்!” என்றவன் முகத்தில் பிரகாசமான புன்னகை. அதில் அர்ஜுன் மென்மையாய் சிரிப்பதும் அவளுக்கு தெரிந்தது.
“அனு அண்ணி ஹெல்த் ஓகே தானே ண்ணா?”
“ஹ்ம் ஓகே தான் டா. அவ நார்மலா தான் இருக்குறா. பட் பேபி வளர வளர சரியா சாப்பிட தூங்கனு கஷ்டப்படுறா. ஆனா அது தான் நார்மல்னு டாக்டர் சொல்றாங்க!” என்றவன்,
“அவளே குழந்தை தான்!” என்று சொல்லி சிரிக்க,
“ஆமாமா! அது தான் நானும் நினச்சேன்!” என்றவள் பார்வை நொடிக்கொரு முறை அவனைத் தொட்டு சென்றது.
“நேத்தெல்லாம் நைட்டு ஒரு மணிக்கு எந்திச்சு பிரியாணி வேணும்னு அடம்!” விவேக் சொல்ல,
“அதிகமா சாப்பிட கூடாது தான். ஆனா கொஞ்சமா குடுத்துருக்கலாமே ண்ணா!”
“கொஞ்சமாவா? ஒரு பிளேட் ஃபுல்லா வச்சு, என்னை தூங்க விடாம பக்கத்துல உக்காந்து பாருன்னு பார்க்க வச்சு சாப்பிட்டா உன் அண்ணி!” என்று சிரித்தான் விவேக்.
“ஓஹ்! வாங்கிட்டு வந்து குடுத்தாச்சா?”
“நானெங்க? காலையில வாங்கித் தர்றேன்னு சொன்னேன். கேட்டா தானே? கோச்சிக்கிட்டு இதோ இந்த நல்லவனுக்கு போன் பண்ணிட்டா!” என்று அர்ஜுனைக் காட்ட, அவன் புன்னகைத்தான்.
“அடுத்த ஒரு மணி நேரத்துல சார் பிரியாணியோட வந்தாச்சு! அதுவும் ஹோம் மேட்! இப்படிலாம் செல்லம் குடுத்தா என் நிலைமை என்னனு புரியுதா டா உனக்கு?” என அர்ஜுனிடமே கேட்க,
“மாமா! போன் பண்ணி கேட்குறா! நான் என்ன பண்ண?” அர்ஜுன் சொல்லி சிரிக்க,
“எதுவும் பண்ணாதன்றேன்! நீ பண்றதுக்கெல்லாம் தான் டா எனக்கு ரெஃப்லக்ட் ஆகுது!” என்று சொல்ல அதற்கும் சின்ன புன்னகை தான் அர்ஜுனிடம்.
வீட்டில் நடக்கும் விஷயங்களை எல்லாம் தங்கையிடம் விவேக் சொல்லிக்கொண்டு வர, பாதி கவனம் அங்கேயும் மீதி கவனம் தன்னை கொஞ்சமும் கண்டு கொள்ளாதவனிடமும் என வீடு வந்து சேர்ந்தாள் விஜயலக்ஷ்மி.
விஜயலக்ஷ்மி பொதுமருத்துவம் படித்திருந்தவள் தற்போது எலும்புகள் தொடர்பான தனிப்பட்ட படிப்பை அமெரிக்காவில் முடித்துவிட்டு அங்கேயே ஒருவருடம் அதற்கான ஆசிரியராகவும் பணியாற்றிவிட்டு தற்போது அன்னைக்காகவே இந்தியா திரும்பியிருக்கிறாள்.
பின்னால் இருந்த லக்கேஜை எடுக்க விவேக் வர, “நீங்க உள்ள போங்க மாமா! நான் எடுத்துட்டு வர்றேன்!” என்று சொல்லவும்,
“தேங்க்ஸ் டா!” என்று சொல்லி, “விஜி கம் கம்!” என்று அன்னையை காண விவேக் உள்ளே செல்ல, அர்ஜுனைக் கண்டு தேங்கி அங்கேயே நின்றாள் விஜயலக்ஷ்மி.
“எப்படி இருக்கீங்க?” தானாய் பேச, திரும்பி ஒரு நொடி நின்று அவளைக் கண்டவன், தலையை மட்டுமாய் அசைத்துவிட்டு லக்கேஜூடன் உள்ளே சென்றான்.
“விஜி!” என அன்னை கலையரசி ஓடிவர கூடவே தந்தை சந்தானமும்.
“அம்மா!” என அணைத்துக் கொண்டவளுக்கு மற்றதெல்லாம் பின்னுக்கு சென்றது.
எத்தனையோ விடுமுறை நாட்கள் கிடைத்தும் இதுவரை இந்த மூன்று வருடங்களில் இந்த பக்கம் வந்திருக்கவில்லை. விவேக் மட்டும் நான்கு முறை வெளிநாடு சென்றிருக்கிறான் தங்கையை காண.
“என்னனு டி இத்தனை நாள் அங்க இருந்த? அவ்வளவு திமிரா போச்சா உனக்கு?” கலையரசிக்கு கோபம் தாண்டிய ஆதங்கம்.
“சும்மா இருக்க மாட்டியா கலை. வந்த பொண்ணை வானு சொல்லாம என்ன இது?” என்ற சந்தானம்,
“நீ வா டா ம்மா!” என்று அழைக்க, தந்தை தோளில் சாய்ந்து கொண்டாள்.
வெளியில் இருந்த இன்னொரு பெட்டியை கொண்டு வந்து வைத்த அர்ஜுன், “கிளம்புறேன் மாமா! ஆபீஸ்ல பாக்கலாம்!” என்று சொல்ல,
“இரு டா காபி சாப்பிட்டு போகலாம். நான் போய் அனுவை எழுப்புறேன்!” விவேக் சொல்ல,
“இருக்கட்டும் மாமா! தீபக் வெயிட் பண்ணுவான். நான் போனா தான் அவன் கிளம்புவான்!” என்று சொல்ல,
“அவன் ஏன் டா என் கண்ணுல மாட்டாம சுத்துறான்?” என்று விவேக் கேட்க,
“இரேன் பா! பால் காய்ச்சுட்டேன்!” என்றார் கலையரசி கூட.
“பரவால்ல அத்த!” என்றவன் விஜயலக்ஷ்மியை தவிர்த்து அனைவரிடமும் சொல்லிக் கொண்டு கிளம்பிவிட்டான்.
செல்பவனை வலியோடு காண தான் முடிந்ததை தவிர்த்து பெரியவர்களால் என்ன செய்திட முடியும்.
“நீ ப்ரெஷ் ஆகிட்டு வா விஜி! நான் அனுவை கூட்டிட்டு வர்றேன்!” என்று விவேக் அனைவரையும் கண்டு சொல்ல,
“சரி ண்ணா! ம்மா! எனக்கொரு காபி… அப்புறமா சமாதானம்!” என்று சொல்லி சென்றாள் விஜயலக்ஷ்மி.
யாரிடம் கேட்பது? அந்த ஒருநாளுக்கு பின் இத்தனை நாட்களில் அவனைப் பற்றி இவளிடம் யாரேனும் ஒருவர் ஒரு வார்த்தை கூட பேசிஇராத நிலையில், தானும் இருந்த விரக்தியில் கிளம்பி சென்றிருக்க இப்பொழுது முள்ளாய் குத்தியது அர்ஜுனின் இந்த பாராமுகம்.
சட்டென மூளையில் மின்னல் உதிக்க, அதிர்ந்தவள் ‘கல்யாணம் ஆகிடுச்சா?’ என்ற எண்ணம் ஒருவளை நினைத்து மகிழ்ச்சி கொண்டாலும் அதற்கும் மேல் துக்கம் பொங்கி வந்தது அர்ஜுனை நினைத்து.
திருமணமே முடிந்திருக்கட்டுமே! சாதாரணமாய் இரண்டு வார்த்தை அவன் பேசி இருக்கலாம் தானே என்றும் நினைக்க, இத்தனை நாட்களில் அவன் திருமணம் பற்றி யாரும் கூறவில்லை என்பதோடு அந்த ஒருத்தியும் தனக்கு அழைத்து சொல்லவில்லையே என நினைக்கையில் மனம் இன்னும் துவண்டது.
பல எண்ணங்கள் அலைஅலையாய் மனதுள் எழ, நீண்ட நேரம் அமர்ந்திருந்தவள் கதவைத் தட்டும் அனன்யாவின் சத்தத்தில் கலைந்தாள்.
“ஏய் இருக்கியா இல்லையா டி!” என்ற உரிமையான குரலில் மனம் கொஞ்சம் இதமாக, முகம் கழுவியதில் ஈரமாய் இருந்த முகத்தை டவலில் துடைத்தபடி சென்று கதவை திறந்தாள் புன்னகை கலந்த முகத்தைக் காட்டி.
“அண்ணி!” என்று அழைத்து இரு கைகளையும் விஜயலக்ஷ்மி விரிக்க, முறைத்தபடி நின்றாள் அனன்யா.
“என் செல்லம்ல!” என்றபடி கைகளை விரித்துக் கொண்டு அனன்யா அருகே விஜயலக்ஷ்மி செல்ல,
“போ டி!” என்றவள் விறுவிறுவென்று ஹாலை நோக்கி செல்ல ஆரம்பித்துவிட்டாள்.
“அண்ணி!” என பின்னோடு சென்று அணைத்துக் கொண்டாள் விஜயலக்ஷ்மி.
“யார் நீ? எதுக்காக என் வீட்டுக்கு வந்திருக்க? திரும்ப எப்ப கிளம்புவ?” அனன்யா வரிசையாய் கேட்க,
“நான் அனன்யா பேபியோட லவ்! அவங்களுக்காக தான் வந்தேன். அவங்க கூடவே தான் இருக்க போறேன்!” என்றாள் அனன்யா வயிற்றை கிள்ளி முத்தம் கொடுத்து.
“நம்பமாட்டேன்! உன்னை மட்டும் நம்பவே மாட்டேன்!” என்ற அனன்யா சொல்லில் அமைதியாய் அவள் தோள்களில் விஜயலக்ஷ்மி சாய, தான் கூறிய வார்த்தைகள் அவளுக்கு எவ்வாறு சென்றடைந்திருக்கும் என சில நொடிகளுக்கு பின்பே புரிந்து வருத்தம் கொடுத்தது அனன்யாவிற்கு.