தித்திக்கும் நிலவு 1
கொங்கு மண்டலத்தின் ஈரோடு மாவட்டத்தின் அம்மாபாளையம் கிராமம். கண்ணிற்கு குளிர்ச்சி தரும் வகையில் பார்க்கும் இடம் எங்கினும் பசுமை. பறவைகள் இல்லம் திரும்பும் அற்புத மாலை நேரம். காற்றின் சத்தமும், பறவைகளின் ரீங்காரமும் சங்கீதமாய் ஒலித்து கொண்டிருந்த வேளையில் இடையில் ஒலித்த சத்தம் அந்த ஊரில் உள்ள அரண்மனை விட்டிலிருந்து வந்தது.
“டேய் நீ இன்னைக்கு சுத்துற சுத்துல ஊருக்குள்ள எல்லாரும் வாய் மேல விரல வைச்சிரனும்“ என்று தம்பிக்கு அறிவுரை வழங்கி கொண்டிருந்தான் இளங்கோ.
அதற்கு அவனின் தம்பி எவ்வித பதிலும் சொல்லவில்லை. “ஏற்கனவே எல்லாரும் அப்படி தானண்ணா இருக்காங்கா இதில இன்னும் என்ன புதுசா“ என்று கேட்டாள் தங்கை செந்தமிழ்ச்செல்வி.
“என்ன இந்த தடவ இவ்வளவு சொல்ற அண்ணனுக்கு“ என்றான் மற்றொரு தம்பி எழிலன்பு.
Advertisement
“வேற ஒன்னும் இல்ல இவன் யாருகிட்டயாவது பந்தயம் கட்டியிருப்பான் அதான்“ என்றான் அவ்வீட்டின் மூத்த வாரிசு சேரன், இளங்கோவின் அண்ணன்.
அண்ணன் சொன்னதை கேட்டு இளங்கோ திருதிருக்க தம்பி அவனை முறைத்தான். முதலில் அவனின் மறைப்பில் தடுமாறினாலும் சமாளித்து, அனைவரிடமும் திரும்பி “நான் சொல்றத மட்டும் கேளுங்க குறுக்கு குறுக்க பேசாதீங்க“ என்றான்.
“இந்த தடவை எதிர்ல நிக்கிறவனுக்கு 5 நிமிசம் கூட குடுக்க கூடாது“ என்று பல அறிவுரைகளை வழங்க, அறிவுரையை பெற்றுக் கொண்டிருந்தவனோ அமைதியாக பார்த்துக் கொண்டிருந்தான்.
Advertisement
“இவ்வளவு பேசுறேனே வாய தொறந்து பதில் சொல்றியா?“ என்றான் இளங்கோ மீண்டும்.
Advertisement
“இப்ப உங்களுக்கு பதில் சொல்லனுமா, இல்ல போட்டியில ஜெயிக்கனுமா?“ பதில் எழிலிடமிருந்து தான் வந்தது.
“நீ ஏன்டா பேசுற அவன் கிட்டதான நான் பேசிட்டு இருக்கேன்“
“அண்ணன் தான் பதில் சொல்லலயே, நீங்க பேசுறத அண்ணே கேட்டுச்சானே தெரியல“ என்று இடையில் வந்தாள் செல்வி.
Advertisement
“இப்ப நீங்க எல்லாரும் அமைதியா இருக்க போறிங்களா, இல்லையா?“ மீண்டும் இளங்கோ.
“அவன இவ்வளவு சொல்றதுக்கு நீயே போய் சுத்த வேண்டியதானடா, யாரு வேண்டாம்னு சொன்னது“ என்ற குரலுக்கு வீட்டினர் அனைவரும் திரும்பி பார்க்க வந்து கொண்டிருந்தார் அவ்வீட்டின் தலைவர் சேனாதிபதி. சேரன், இளங்கோவின் அப்பா.
பெரியப்பாவின் குரல் கேட்டதும் புன்னகை முகமாய் திரும்பி, சேனாப்பா என்று அவரை நோக்கி வேகமாக சென்றான் அவன். அகரமுதல்வன் அவரின் பிரியத்திற்குரிய சீடன்.
அகரன் அவர் அருகில் சென்று அவரின் காலில் விழுந்து எழ, சேனாதிபதி மகனின் தலையில் கையை வைத்து அழுத்தமாக ஒரு நொடி நின்றார். வேறு எதுவும் பேசவில்லை அவர். அவனிற்கு அது போதுமே.
“க்கும், இதுக்கு ஒன்னும் குறைச்சல் இல்ல“ என்று விட்டு “ஒழுங்கா சொல்லி கொடுத்தா நான் போய் சுத்த மாட்டேன்னா சொல்றேன்“ என்றான் இளங்கோ அவரின் கேள்விக்கு பதிலாய்.
அவனை முறைத்த சேனாதிபதி வேறு எதுவும் சொல்வதற்குள் “போன வேலை நல்ல படியா முடிஞ்சதா சேனாப்பா“ என்றான் அகரன்.
“ஏற்பாடு பண்ணது நீயாச்சே நல்லபடியா முடிஞ்சது கண்ணா! இன்னைக்கு உன் ஆட்டத்தை பாக்கனுமே அதான் வேகமாக வந்தேன்“ என்றார் உற்சாகமாய்.
அந்நேரம் வெளியில் போட்டி துவங்குவதற்கான அறிவிப்பு வர அனைவரும் போட்டி நடைபெறும் இடம் நோக்கி விரைந்தனர்.
சேனாதிபதி அவ்வூரில் அனைவராலும் வாத்தியார் என்று மரியாதையாக அழைக்கப்படுபவர். அவருக்கு இரண்டு தம்பிகள். முதல் தம்பி சேதுராமன், அவரின் மகன் தான் அகரமுதல்வன். சேதுராமனும், அவரின் மனைவியும், சேனாதிபதியின் மனைவியும் அகரன் பிறந்து சில மாதங்களிலேயே விபத்தில் இறந்து விட்டனர். இரண்டாம் தம்பி இராமலிங்கம், அவரின் மனைவி யசோதா. அவருக்கு இரண்டு பிள்ளைகள். மகன் எழிலன்பு, மகள் செந்தமிழ்ச்செல்வி. அனைவரும் ஒரே வீட்டில் தான் இருக்கின்றனர். அவ்வீட்டில் சேனாதிபதியின் முடிவிற்கு யாரும் மறுத்து பேசியதில்லை, பேசும் சூழ்நிலையும் இதுவரை வந்ததில்லை. தாயும், தந்தையும் இறந்த பின்பு அகரனிற்கு அனைத்துமாக இருப்பது சேனாதிபதி தான். அவனிற்கு அகரமுதல்வன் என்ற பெயரை வைத்ததும் அவரே, அனைத்திலும் முதலாவதாக இருக்க வேண்டுமென்று வைத்தார்.
போட்டி நடைபெறும் இடம்
தனக்கு அருகில் நின்று கொண்டிருந்த மகனை முறைத்துக் கொண்டிருந்தார் ஊர் தலைவர் அம்மையப்பன். தந்தையின் முறைப்பை கண்டு கொல்லாமல் வேடிக்கை பார்த்து கொண்டிருந்தான் முகிலன்.
அவனை வீட்டிற்கு போய் பேசிக் கொள்ளலாமென தனது மூத்த மகனான ராகவனை அழுத்தமாக பார்த்து கொண்டே “நீ தான்டா இன்னைக்கு ஜெயிக்கனும் என் மானம் உன் கையில இருக்கு“ என்றார். அதில் அவன் மட்டும் ஜெயித்துவிடக் கூடாது என்ற எண்ண ஓங்கி இருந்ததை அறிய முடிந்தது மகனால்.
“நீங்க கவலபடாதிங்கப்பா அவன் வேலை விசியமா வெளியில ரொம்ப அலைஞ்சதுனால பயிற்சி பன்னவே இல்லை, அவன் கம்பு சுத்தியே இரண்டு மாசத்துக்கு மேல ஆகுதுப்பா“ என்றான்.
அவர்களின் உரையாடலை கேட்டு கொண்டு நின்றிருந்த முகலனிற்கு முகத்தில் இகழ்ச்சி புன்னகை.
“நீ என்ன காரணம் வேணுன்னாலும் சொல்லு, ஆனா நீ தான் இன்னைக்கு ஜெயிக்கனும்“ என்றார்.
அந்நேரத்தில் கூடியிருந்த மக்களிடத்தில் ஆரவார கூச்சல். மூவரும் திரும்பி பார்த்தனர்.
கூட்டம் வழிவிட உள்ளே வந்து கொண்டிருந்தான் அகரன். கையில் வெள்ளி காப்பு மின்ன, ஒரு கையில் வேட்டியின் முனையை பிடித்து கொண்டு மற்றொரு கையில் கம்பை வைத்துக் கொண்டு முகத்தில் கம்பீரமும், புன்னகையும் போட்டி போட நடந்து வந்து கொண்டிருந்தான் அகரமுதல்வன்.
அவனின் பின்னால் அவன் குடும்பத்தினர் வந்து கொண்டிருந்தனர். அனைவரும் தயாராக இருந்தனர்.
அவ்வூரின் பெரிய வீடு
“போக வேணா கண்ணு உங்க அப்பா வந்து கேட்டா நான் என்ன பதில் சொல்றது?“ என்று தனது மகளிடம் கெஞ்சிக் கொண்டிருந்தார் வீட்டு தலைவி பார்வதி.
“ஏன் சிலம்ப போட்டிய பாக்க தான் பேனேன்னு சொல்லுங்களேன், யாரு வேண்டாம்னு சொன்னா“ என்றாள் ஆதிரயாழிசை.
“என்ன கண்ணு இப்படி சொல்லுற, அப்பாக்கு கோவம் வந்தா எப்படி சமாளிக்க?“ எவ்வாறு மகளை தடுக்க என்று தடுமாறினார் அன்னை. பின்னே கணவர் போட்டியை பாரக்க யாரும் செல்லக் கூடாது என்று கட்டளையிட்டு சென்றிருக்க, ஒரு மணி நேரமாக போட்டியை பார்க்க போயே தீருவேன் என்று அடம்பிடிப்பவளை என்ன சொல்லி தடுக்க.
“என்னம்மா 2 வருசம் கழிச்சு நான் பாக்குற திருவிழா, அதுவும் எனக்கு பிடிச்ச சிலம்ப போட்டி போக கூடாதுன்னா எப்படிம்மா“ ஏக்க வழியும் குரலில் கேட்டாள் மகள்.
மகளின் ஏக்கம் தாளாது “சரிகண்ணு போயிட்டு வெரசா வந்துரு“ என்று அனுமதி அளித்தவிட்டார்.
மலர்ந்த முகத்துடன் அன்னையின் கன்னத்தில் முத்தம் வைத்து “சரிம்மா“ என்று கொலுசொலி இன்னிசைக்க சென்றாள்.
“தனியாவா போற“ என்ற அன்னைக்கு “இல்லம்மா பக்கத்து வீட்டு காயத்ரி, எதிர்வீட்டு மஞ்சு, கனகாக்கா மக லட்சுமி எல்லாரும் தான் போறோம்மா“ என்று சொல்லிக் கொண்டே சென்று விட்டாள்.
“கண்ணு நில்லு கண்ணு“ என்று அவர் காற்றோடு தான் பேச வேண்டியதிருந்தது.
“இந்த மனுசன் வந்து என்ன சொல்ல போறாருன்னு தெரியலையே ஆண்டவா!“ என்று புலம்பிக் கொண்டே வீட்டிற்குள் சென்று விட்டார்.
போட்டி நடைபெறும் இடத்திருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில் வந்து கொண்டிருந்தாள் இளமதி. வீட்டில் போட்டியை காண போவதாகத்தான் சொல்லி விட்டு செல்கிறாள். செல்வது போட்டியை காணாத்தானா?
