Skip to content
Post Views: 9,804
அத்தியாயம் 12
அலுவலகம் சென்று அமர்ந்த போதும் என்றுமில்லாமல் இன்று அதிகமாய் மனம் ஒருநிலையில் இல்லாமல் தவித்தது அர்ஜுனிற்கு.
Advertisement
பழைய நினைவுகள் மனதை கீறி வடுக்களை எல்லாம் வலிக்க மீண்டுமாய் நினைவு சுழல்கள் அவனை சுருட்டிக் கொண்டது.
அதிகமாய் இரவு நேரங்களில் பலமுறை இந்த அழுத்தத்தினை அவன் உணர்ந்தது உண்டு. பகல் பொழுதுகளில் தன்னைத் தானே ஏதோ வேலைகளில் ஈடுபடுத்திக் கொள்பவன் இப்படி உணர்ந்தது இல்லை.
Advertisement
Advertisement
நேற்று விவேக் கைகளில் அவன் பார்த்த புகைப்படங்கள் தான் அனைத்திற்கும் காரணம் என புரிந்தாலும் அதை மறந்து தொலையவும் முடியாமல் திணறினான் என்று தான் கூற வேண்டும்.
‘அவளும் திருமணம் செய்யாமல் இருக்க வேண்டுமா? பைத்தியமா உனக்கு?’ தன்னைத் தானே திட்டிக் கொண்டான் அர்ஜுன்.
Advertisement
திருமணம் என்ற பேச்சை அவனிடம் யார் எடுத்தாலும் அதற்கு பதில் கிடையாது. அந்த வார்த்தை அன்னையை மட்டுமே நியாபகப்படுத்தி வைக்கும்.
அனன்யா தீபக் இருவரைத் தவிர யாரும் நேராய் கேட்டிருக்கவில்லை அர்ஜுனிடம் திருமணம் பற்றி. கேட்க விட்டதும் இல்லை அவன்.
மீண்டும் விஜயலக்ஷ்மி இந்தியா வரும்வரை அவள் நினைவுகளை இவன் மனதிற்குள் கொண்டு வராமலிருக்க அதட்டி தான் வைத்திருந்தான்.
அவள்மேல் எழுந்த கோபம் எல்லாம் சில நாட்களில் மறந்து அவளையும் மறந்து போனதாய் தான் நினைத்துக் கொண்டான் இன்றளவும்.
அனன்யா பேச்சாய் மட்டும் விஜயலக்ஷ்மி வருவதை விவேக் முன்பு கூறி இருக்க, அதை கவனியாதவனாய் விட்டாலும் விவேக் கைகளின் காயம் மட்டுமே விவேக்கோடு செல்ல காரணமாய் இருந்தது.
தன்னைப் பார்த்து அவள் அதிர்ந்ததை எல்லாம் அவன் பெரிதாய் எடுத்துக் கொள்ளவில்லை. சாதாரணமாய் தன்முன் வந்து அவள் பேசியதும் அவளால் எப்படி முடிந்தது என்பதை போல தான் பார்த்து வைத்தான்.
முடிந்தது முடிந்தது தானே? என்ற முடிவிற்கு வந்தபின் அவளிடம் சாதாரண வார்த்தைகள் கூட வைத்துக் கொள்ள விருப்பமில்லை என்ற அளவுக்கு அவன் நினைத்து வைத்திருக்க, அவளிற்கென பார்க்கப்பட்ட அந்த மாப்பிள்ளை புகைப்படங்கள் மனதை பழைய நினைவுகளுக்கு கூட்டி சென்றிருந்தது.
வேலையில் கவனம் லயிக்கவில்லை என்றாலும் வேறு வழியும் இல்லையே! விவேக் அனன்யாவை மருத்துவமனைக்கு அழைத்து செல்ல வேண்டும் என்றதும் விவேக்கை அலுவலகம் வர வேண்டாம் தான் பார்த்துக் கொள்வதாய் சொல்லி விட்டான் அர்ஜுன். அதனாலேயே நகர முடியவில்லை.
அனன்யா விவேக்கோடு மருத்துவமனை சென்று வந்தவள் கட்டிலில் சாய்ந்து அமர்ந்திருக்க,
“ரொம்ப வலிக்குதா முதுகு?” என்றபடி முருங்கை இலை சூப்பை சூடாய் கொண்டு வந்து அவள் முன் வைத்துவிட்டு அமர்ந்தார் கலையரசி.
“ஆமா அத்தை! இவ்வளவு வலி இருந்ததில்ல. போகும் போதெல்லாம் ஒண்ணுமே தெரில!” அனன்யா சொல்ல,
“கார்ல தானே போனோம்? தூரம் கூட இல்லையே!” என்றான் விவேக்.
“இனி இப்படி தான் இருக்கும் விவேக். நாளாக நாளாக குழந்தையும் வளருமே!” கலையரசி சொல்லவும் விவேக் புன்னகைக்க,
“எனக்கு வலிக்க வச்சு தான் குழந்தை வளரணுமா? வலிக்காம வளந்தா ஆகாதா?” என்ற அனன்யா தலையில் வலிக்காமல் ஒரு கொட்டு வைத்தான் விவேக்.
“தலையில கொட்டாதிங்க மாமா!” எப்பொழுதும் போல வலிப்பதை போல பாவனை செய்தாள் அனன்யா.
“சரி! ஆறினதும் இதை குடி!” என்று சொல்லி எழுந்து சென்றார் கலையரசி.
“ரொம்ப முடிலயா அனு?” என அருகில் அமர்ந்தான் விவேக்.
“ஆமா! பாதி வலியை நீங்க வாங்கிக்கிறிங்களா?”
“ரொம்ப பேசாத டி! அதுக்கு தான் என் பேபிமா உன்னைப் படுத்துறா!” என்றவன் மேல் தலையணையை எறிந்தாள் அனன்யா.
“அந்த பேபிமா வெளில வரட்டும்! இப்ப உங்க வளந்த பேபிமாக்கு ஒரு வழி சொல்லுங்க!” என்றாள் எழுந்து நின்று.
“இப்ப எங்க போற?” விவேக் கேட்க,
“கொஞ்ச நேரம் நிக்குறேன். வலிக்குதுல்ல?” என்றவன் அறைக்குள்ளேயே மெதுவாய் நடந்தபடி பேசினாள்.
“விஜிகிட்ட பேசுங்க விவேக்! என்னால நார்மலா அவ மேரேஜ் பத்தி பேச முடியாது. நீங்க பேசுங்க. இன்னும் என்னவாம் அவளுக்கு? அத்தைக்கு அவ கல்யாணம் முடிஞ்சா தான் பிரஷர் குறையும்!” அனன்யா சொல்ல,
“நான் மாட்டேன்னா டி சொல்றேன்? அவ தான் பேசவே மாட்றாளே!”
“அப்போ அப்படியே விட்ருவீங்களா?”
“என்ன பண்ண சொல்ற?”
“புரியாத மாதிரி நடிக்காதிங்க! விஜி ஊருக்கு வர்றதுக்கு முன்னாடியே சொல்லிட்டு தான் இருக்கேன். அர்ஜுன் இல்ல விஜி யாராவது ஒருத்தருக்கு மேரேஜ் ஆனா தான் இன்னொருத்தருக்கும் நாம பேச முடியும்”
“ஹ்ம்ம்!”
“இப்பவும் எனக்கு ஆசை இருக்கு. நான் தான் நடந்த எல்லாத்துக்கும் காரணம். அதனால தான் அமைதியா இருக்கேன்!” அனன்யா சொல்ல,
“ப்ச்! சும்மாவே வலிக்குது புடிக்குதுன்னு நைட்டெல்லாம் அனத்துற! இப்ப இந்த டென்ஷன் தேவையா உனக்கு?” என்று விவேக் கோபம் கொண்டவன்,
“முதல்ல ஒண்ணு புரிஞ்சிக்கோ அனு! விஜி எதுவுமே வேண்டாம்னு சொல்லிட்டு தான் இங்கேருந்து போனா. இப்ப எதுவும் மாறல தானே? அதுவும் அர்ஜுன்? அர்ஜுன்கிட்ட போய் நான் மறுபடி பேச முடியுமா இதை? உனக்கு புரியுதா இல்லையா?” என்றான்.
“எனக்கு புரியாம இல்ல. ஆனா முழுசா மூணு வருஷம் ஆச்சு. இன்னும் ரெண்டு பேரும் கல்யாணம் வேண்டாம்னு இருக்காங்க. வயசு என்ன இவங்களுக்கு மட்டும் குறைஞ்சுட்டா போகுது?” என்றாள் அனன்யாவும்.
“உன் அம்மாவோட அதிகபட்ச ஆசை அர்ஜுன் மேரேஜ் மட்டும் தான். அவங்க இருக்கும் போது அது நடந்திருந்தா அவனும் மூவ்ஆன் ஆகிருப்பான்!”
“அது தான் என் கவலையே! கல்யாணம்னு சொன்னாளே அமைதியாகிடுறான். என்னை பேசவே விட மாட்றான். வேற யார் பேசுவாங்க? எப்ப தான் கல்யாணம் பண்ணிப்பான்? அவனுக்குன்னு ஒரு பொண்ணு வந்துட்டா அவனை பார்த்துப்பா தானே? தினமும் என்ன பன்றானோ எப்ப பீல் பண்ணுவானோனு எனக்கு ஒவ்வொரு நாளும் அவன் நியாபகம் தான்!”
“அர்ஜுன்கிட்ட மேரேஜ் பத்தி பேசுற அளவுக்கு எனக்கு தைரியம் இல்ல அனு! நான் என்னனு பேச? ம்ம்ஹும்ம்!” என தெளிவாய் மறுத்த விவேக்,
“விஜிகிட்ட பேசுறேன். ரொம்ப விட்டுக் கொடுத்தாச்சு அவளுக்குன்னு. இனி கொஞ்சம் பேசனும். பேசுறேன்!” என்றான்.
“அவளுக்கு யாரையும் பிடிச்சிருக்கானு கேளுங்க!” என்ற அனன்யா,
“நேத்து ப்ரணித்தாக்கு கல்யாணம் முடிஞ்சதான்னு கேட்குறா விஜி! ஏன் கேட்டானு தெரில அப்புறமா கேட்கணும்!” என்று சொல்ல,
“ஆமா! ஏன் ப்ரணித்தாவை உன் தம்பிக்கு பேச கூடாது? கேட்டுப் பாக்கலாம் இல்ல?” விவேக் கூற,
“ப்ரணித்தாவையா?” என அமைதியானாள் அனன்யா.
“என்ன டி? மாமா பொண்ணு தானே? அர்ஜுன்க்கும் ஆல்ரெடி தெரியும்ல?”
“சரி தான்! ஆனா என்னவோ எனக்கு அவ்வளவுக்கு எல்லாம் ப்ரணித்தாவை….” என்று சொல்லும் முன் குறுக்கிட்டான் விவேக்.
“எதாவது சொல்லி வைக்காத. அப்புறமா பேசிக்கலாம். ஸ்டார்ட் பண்ணும் போதே அபசகுனமா போக வேண்டாம்” என்ற விவேக்,
“நடந்தது போதும். கொஞ்ச நேரம் தூங்கி முழிச்சா தான் பேக் பெயிண்ட் இருக்காது. இதை குடிச்சுட்டு தூங்கு. ஆபீஸ்ல என்ன நடக்குதுன்னு நான் அர்ஜுன்க்கு கால் பண்ணிட்டு வர்றேன்!” என்றவன் எழுந்து சென்றுவிட்டான்.
நகத்தைக் கடித்தபடி தனதறையில் அமர்ந்திருந்தாள் ப்ரணித்தா. என்ன நடக்கிறது என தெரியாமல் மண்டை வெடிப்பதை போலிருந்தது.
விஜயலக்ஷ்மி வந்துவிட்டாள் என்பதை அர்ஜுன் கூறி கேட்டபின் சுத்தமாய் நிம்மதி இல்லை ப்ரணித்தாவிடம்.
அவள் வரவை எதிர்பார்க்கவே இல்லை என்று தான் கூற வேண்டும்.
விஜயலக்ஷ்மி வெளிநாடு சென்று இரண்டு வருடங்கள் முடிந்த நிலையில் தானாய் தான் ப்ரணித்தா அவளுக்கு அழைத்திருந்தாள்.
“படிப்பு முடிஞ்சதா விஜி? அடுத்து என்ன பண்ண போற?” ப்ரணித்தா கேட்க,
“தெரில ப்ரணி! ஊருக்கு வரணும். அம்மா எல்லாரையும் பாக்கணும்னு இருக்கு. இங்க ப்ரோபஸ்ஸரா கன்டின்யூ பண்ற சான்ஸும் கிடைச்சிருக்கு” என்ற விஜயலக்ஷ்மி,
“நீ எப்படி இருக்க? அர்ஜுன்கிட்ட பேசிட்டியா? கல்யாணம் எப்ப?” என்றாள்.
“எங்க பேச? அதான் அந்த கயல் அத்தை….” என சொல்ல வந்த ப்ரணித்தா சட்டென வாயை மூடிக் கொண்டாள்.
கயல்விழி இறந்து ஒன்றரை வருடங்கள் ஓடிவிட்டது. விஜயலக்ஷ்மியிடம் அதை யாரும் சொல்லவில்லை என்பதை முன்பே அறிந்திருந்தாள் ப்ரணித்தா.
சொல்லிவிடலாம் தான். ஆனால் சொல்லியபின் தன்னால் தானே என அழுது புலம்பி உடனே அவள் கிளம்பி வந்துவிட்டால்? என நினைத்து தான் இன்னமும் கூறிடவில்லை.
அவள் இங்கே வரும் பொழுது தனக்கும் அர்ஜுனுக்கும் திருமணம் முடிந்திருக்க வேண்டும். அதற்கு முன் அவள் வருவது அர்ஜுன் மனநிலையை மாற்றிட வாய்ப்பு உண்டு என்று மட்டுமே அவள் மறுத்தது.
“ஹெலோ ப்ரணி!” என விஜயலக்ஷ்மி அழைக்க,
“கேட்குது விஜி! அர்ஜுன் மாமாகிட்ட இன்னும் நான் பேசல. கயல் அத்தை இப்போதைக்கு வேண்டாம் ஆறு மாசம் போகட்டும்னு சொல்லிருக்காங்க. அதான் பேச முடியல!” என்ற ப்ரணித்தா,
“நீ இப்போ இங்க வந்து என்ன பண்ண போற? நீ வந்தா சரி வராது விஜி. எங்க மேரேஜ் முடியவும் சொல்றேன். நீ அங்கேயே ஜாப் ஜாயின் பண்ணு!” என்றாள்.
“ஓஹ்!” என வருத்தம் கலந்த குரலில் கூறியவள்,
“சீக்கிரம் அந்த நல்ல நியூஸ் சொல்லு ப்ரணி. நான் வெயிட் பண்றேன்!” என அவளுக்காகவே பேசி வைத்தாள் விஜயலக்ஷ்மி.
நாட்கள் செல்ல செல்ல அங்கிருக்க முடியவில்லை விஜயலக்ஷ்மிக்கு. தன் குடும்பத்தை அதிகமாய் தேடினாள். அவ்வபோது அர்ஜுன் முகமும் கண்ணாடியாய் நெஞ்சை குத்திச் செல்லும்.
விவேக் விஜயலக்ஷ்மியைக் காண என அந்த நாட்டிற்கு வரும் பொழுது அன்னைக்கு உடல்நிலை சரி இல்லை என்று கூறி இருந்தான்.
“உன்னை பார்த்தா சரி ஆகிடுவாங்க டா. இன்னும் எவ்வளவு நாள் தான் இங்கேயே இருப்ப?” என்று சொல்லி செல்ல, அப்பொழுதே ஊருக்கு செல்ல தான் நினைத்தாள் விஜயலக்ஷ்மி.
அடுத்த மூன்று மாதத்தில் தான் அத்தையாகப் போவதாக விவேக் போனில் அழைத்துக் கூற அத்தனை மகிழ்ந்த விஜயலக்ஷ்மி வேண்டிய ஏற்படுகளை செய்து அடுத்த மூன்று மாதத்தில் ஊருக்கு வந்து இறங்கிவிட்டாள்.
இப்பொழுது வரை ப்ரணித்தா எண்ணம் விஜயலக்ஷ்மி இன்னும் சில தினங்களில் மீண்டும் அந்த நாட்டிற்கு சென்றுவிடுவாள் என்று மட்டும் தான்.
அத்தோடு நில்லாமல் அர்ஜுனிடமும் தன் மனதை கூறி அவன் மனதையும் மாற்றிட வேண்டுமென்று நினைத்தாள்.
விஜி மேல் வெறுப்பு வரும் அளவுக்கு அவனிடம் எதாவது பேசலாம் என நினைத்தால் ஒரு வார்த்தை பேசிட முடியவில்லை அவனிடம்.
திருமணம் என்ற வார்த்தையும் அவன் காதுக்களுக்கு சென்று சேரவில்லை. இரண்டு வருடங்களாக அவனிடம் பேச முயற்சித்து தோற்றுக் கொண்டு தான் இருக்கிறாள்.
அனன்யாவின் ஐந்தாம் மாத வளைகாப்பில் விஜயலக்ஷ்மியிடம் பேச வேண்டும். பேசி மீண்டும் வந்த வழி அனுப்பிட வேண்டும் என்று தான் நினைத்துக் கொண்டு இருந்தாள்.
விஜயலக்ஷ்மியின் நினைவுகளும் இவர்களை சுற்றி தான் வந்து கொண்டிருந்தது. படிப்பு முடிந்த இரண்டு வருடங்களில் மீண்டும் ஊருக்கு வர ஆசை இருந்த போதும் முதலில் விஜயலக்ஷ்மி தயங்கியது என்னவோ அர்ஜுனை காண வேண்டியது வருமே என்ற எண்ணம் தான்.
அர்ஜுனை பார்க்க விருப்பமும், அவனை தன்னவனாய் இல்லாமல் காண முடியாது என்ற பயமுமாய் இந்தியா வரவை முதலில் விஜயலக்ஷ்மி தவிர்க்க நினைக்க, அதற்கு தோதுவாய் அமைந்தது ப்ரணித்தாவின் வார்த்தைகளும்.
‘அது தானே சரி! இவர்கள் திருமணம் முடிந்தால் மற்றவர்கள் மனமும் கொஞ்சம் சமாதானம் அடையும். தானும் அவர்களுடன் மனதை தேற்றிக் கொள்ளலாம்!’ என்றெல்லாம் தவறான முடிவை மிக சரியாய் எடுத்துக் காத்திருந்தாள்.
அன்று இரவு உணவிற்கு பின் அண்ணனின் அறைக் கதவைத் தட்டினாள் விஜயலக்ஷ்மி.
“வா டா!” என்ற விவேக் அவளை உள்ளே அழைக்க,
“டிஸ்டர்ப் பண்ணிட்டேனா?” என்றாள் அவர்களிடம்.
“ஆமாமா! ரொம்ப டிஸ்டர்ப் பண்ற எங்களை நீ!” என்றாள் அனன்யா முறைத்து.
“அனு!” என்று விவேக் முறைக்க,
“மெச்சுரிட்டி வந்துட்டாம் உங்க தங்கச்சிக்கு!” என்று அனன்யாவும் முறைக்க,
“சும்மா! பேபிகிட்ட பேச வந்தேன்!” என்றாள் அனன்யா வயிற்றில் கைவைத்து.
“இந்தா விஜி! ரிப்போர்ட்ஸ் கேட்டியே!” என்று விவேக் கொடுக்க, அதை வாங்கி கவனமாய் பார்த்தாள்.
“பிரஷர் இருக்குதா என்ன?” என்றாள் அதைப் பார்த்து.
“ஆமா பின்ன! உன் குடும்ப உறுப்பினர்கள் கூட இருக்கேனே!” அனன்யா சொல்ல,
“உன்னை!” என்று விவேக் முறைக்க, விஜயலக்ஷ்மி சிரித்தாள்.
“பேபிக்கு எல்லாம் ஓகே தான்! நீங்க தான் இன்னும் ஹெல்தியா இருக்கனும்!” விஜயலக்ஷ்மி கூற,
“குழந்தைக்கு என்னலாம் தெரியுது பாருங்களேன்! நீ சொல்லு டா!” என்று அனன்யா கிண்டல் செய்தாள்.
“அண்ணி!” என்று அந்த ரிப்போர்ட்ஸ் கொண்டே மெதுவாய் விஜயலக்ஷ்மி அடிக்க,
“அந்த தண்ணி எடு விஜி!” என்றான் விவேக் தங்கை அருகில் இருந்த ஜக்கைக் காட்டி.
“இல்லையே! எடுத்துட்டு வர்றேன்” என்று விஜயலக்ஷ்மி எழ போக,
“நீ பேசிட்டு இரு. நான் எடுத்துட்டு வர்றேன்!” என எழுந்து சென்றான் விவேக்.
“எனக்கு புரிஞ்சிடுச்சு! உன் அண்ணா கிளம்பவும் என்கிட்ட காசு கேட்கலாம்னு தானே உன் திட்டம்? அம்மஞ்சல்லிக்கு பிரயோஜனம் இல்ல. ஆபீஸ் பக்கமே உன் அண்ணா என்னைய வர விடுறது இல்ல” என்றாள் அனன்யா விஜயலக்ஷ்மி எதுவோ பேச தயங்குவது கண்டு.
“அண்ணி!” என்று மென்னகை கொடுத்தவள்,
“சாரி அண்ணி!” என்றாள்.
“வேண்டாம்!” உடனே கூறினாள் பட்டென்று.
“நான் கேட்பேன்!”
“கேட்டுக்கோ! நான் வாங்கிக்க மாட்டேன்.”
“நான் பண்ணினது பெரிய தப்பு இல்ல?”
“அடேயப்பா! மூணு வருஷம் ஆச்சா உனக்கு இது தெரிய?” என்ற அனன்யா,
“சரி நீயே கேட்குற அதனால சொல்றேன். கல்யாணம் பண்ணிக்கோ விஜி! தப்பெல்லாம் சரியாகிடும். அத்தையும் கொஞ்சம் நிம்மதியா இருப்பாங்க இல்ல?”
“கண்டிப்பா பண்ணிக்குவேன். ஆனா இப்ப வேண்டாம் அண்ணி! இந்த பேபி வரட்டும். அவங்களோட கொஞ்சமே கொஞ்ச நாள் இருந்துக்குறேன்!”
“அரை கிழவி ஆயிடுவ டி நீ!”அனன்யா சொல்ல,
“பரவால்லயே!” என்றவள்,
“இதெல்லாம் என்கிட்ட மட்டும் தான் சொல்லுவிங்களா?” என்றாள் மெதுவாய்.
“வேற யார்கிட்ட சொல்லணும்?” புரிந்தாலும் மெதுவாய் கேட்டாள் அனன்யா.
தெரிஞ்சே என்னை பேச வைக்குறிங்க நீங்க!” என்று முறைத்தவள்,
“அது உங்க இஷ்டம். நான் பேச வந்ததே வேற! ஆமா கயல் அத்தை ஏன் வீட்டுக்கு வர்றது இல்ல?” என்றதும் அவ்வளவு பேசிய அனன்யா சட்டென மொத்தமாய் அமைதியாகிவிட்டாள்.
“நீங்களும்…. அத்தையைப் பார்க்க போன மாதிரி தெரிலயே அண்ணி….!” தயங்கி தயங்கி விஜயலக்ஷ்மி கேட்க, தொண்டைக்குள் அழுத்தியது அனன்யாவிற்கு.
“அன்னைக்கு அந்த நாளுக்கு அப்புறம் அத்தை யாரோடவும் பேசவே இல்லையா? அவ்வளவு கோவம் வருமா கயல் அத்தைக்கு?” விஜயலக்ஷ்மி கேட்க உடல் விரைக்க அமர்ந்திருந்தாள் அனன்யா.
“நான் மன்னிப்பு கேட்கணும். பேசுவாங்களா என்கிட்ட? நான் போய் பேசட்டுமா?” என்று கேட்ட எதற்கும் பதில் இல்லை.
ஆனால் இப்படி பேசாமல் அழுத்தத்தை எடுத்துக் கொள்ளக் கூடாது என மூளை அறிவுறுத்தவும் மூச்சை இழுத்துவிட்டு தன்னை சமன்செய்தாள்.
“அத்தை என்னை அடிச்சாலும் நான் வாங்கிப்பேன்!” விஜயலக்ஷ்மி சொல்ல,
“மன்னிப்பெல்லாம் தெரியாம செய்யுற தப்புக்கு. நீ எல்லாம் தெரிஞ்சு தானே பண்ணின? உனக்கு படிக்கணும். அதை யாரும் புரிஞ்சுக்கல. சிட்டுவேஷனை யூஸ் பண்ணிக்கிட்ட. இதுக்கெல்லாம் மன்னிப்பு எப்படி கேட்டா? சமாதானமாக முடியுமா?” என்ற அனன்யாவின் நெற்றி ஓரம் வியர்வைத் துளிகள்.
இப்பொழுது விஜயலக்ஷ்மி அமைதியாகிவிட்டாள்.
“அடிச்சாலும் வாங்கிப்பாளாம். அப்போ இங்க இருந்து போகும் போதே வாங்கிட்டு போயிருக்கணும். இனி நான் எங்க போக?” என்று அனன்யா சொல்ல, அது புரியவில்லை விஜயலக்ஷ்மிக்கு.
கண்களுக்குள் கலங்கிக் கொண்டு வந்த போதும் விஜயலக்ஷ்மியிடம் சொல்லிவிட மட்டும் தோன்றவில்லை. நிச்சயம் தாங்கமாட்டாள்.
இவளது திருமணம் வரையுமாவது தெரிவிக்க கூடாது என்று தான் நினைத்தாள் அனன்யா.
“என்ன சைலண்டா இருக்கீங்க ரெண்டு பேரும்? சண்டை போட்டுக்கிட்டிங்களா?” விவேக் கேட்டபடி உள்ளே வந்தான்.
“ஆமா! இவகிட்ட சண்டை போட தான் காத்துட்டு இருந்தேன்!” அனன்யா சொல்ல,
“ஏன் டி எப்ப பாரு டென்ஷனாயிட்டே இருக்க!என் பேபிமா பயந்துட போகுது!” என்ற விவேக் அனன்யா தலையில் கொட்டு வைக்க வர, அனன்யா முறைத்ததில் விஜயலக்ஷ்மிபுறம் திரும்பினான்.
“என்னவாம் விஜி?”
“நான் தான் ண்ணா டென்ஷன் பண்ணிட்டேன். அண்ணி சொன்னது சரி தான். தெரியாம பண்ணினா தானே சாரி கேட்கலாம் சமாதானப்படுத்தலாம்!”
“என்ன சொல்ற விஜி?”
“கயல் அத்தையை பாக்கணும் சொன்னேன். டென்ஷன் ஆயிட்டாங்க” என்று சொல்லவும் மனைவியைப் பார்த்தான் விவேக்.
“அத்தை ரொம்ப கோவப்பட்டிருப்பாங்க இல்ல ண்ணா? அதான் அண்ணி என்கிட்ட கோவப்படுறாங்க. புரியுது. ஆனா எனக்கு வேற வழி தெரியல அன்னைக்கு!” என்று பாவமாய் சொல்லியவள்,
“நானே ஒரு நாள் சொல்றேன் அண்ணி! ம்ம்ஹும் இல்ல இல்ல. உங்களுக்கே தெரியும் ஒருநாள்.” என்றவள்,
அவங்கவங்களுக்கு கிடைக்க வேண்டியது அந்தந்த நேரத்துல கிடைச்சா தானே நல்லது? காலம் போனா யார் வாழ்க்கை எப்படி வேணா மாறும்ல?” ப்ரணித்தாவை மனதில் வைத்து கூறினாள் விஜயலக்ஷ்மி.
“அப்போ பாருங்க! நீங்களே சொல்லுவீங்க விஜி தான் எப்பவும் ரைட்னு!” என்று சிரித்தபடி சொல்ல, மூச்சு வாங்கியது அனன்யாவிற்கு. தன் அருகில் நின்ற விவேக் கைகளைப் பிடித்து அதில் தலை சாய்த்துக் கொண்டாள்.
“உன் மேல எனக்கு இருந்த கோவம் கூட கயல் அத்தைக்கு இல்ல. வருத்தம் மட்டும் தான். அப்ப விட இப்ப தான் இன்னும் வருத்தமா இருக்கு எங்க எல்லாருக்கும். எல்லாரும் இன்னும் அந்த இடத்துலயே நிக்கிறோம்!” விவேக் சொல்ல,
“மாறும் ண்ணா! எல்லாமே மாறும்!” நம்பிக்கையாய் பேசி விடைபெற்று விஜயலக்ஷ்மி செல்ல, கண்களை மூடிக் கொண்டாள் அனன்யா. அவள் தலை கோதி அமைதிப்படுத்தினான் விவேக்.
******************************
“இவ்ளோ காஸ்ட்லியாவா?” என்று கண்களை விரித்த ப்ரணித்தா அர்ஜுனைப் பார்க்க,
“ப்ச்! நல்லா இருக்கான்னு தான் பார்க்க சொன்னேன்!” என்றான் அர்ஜுன்.
அதன் அழகெல்லாம் ப்ரணித்தாவின் கண்களுக்கு தெரியவில்லை. இவ்வளவு விலைக்கு தேவையா? அதுவும் வளைகாப்பு கூட இல்லை ஐந்தாம் மாதம் சிறிய அளவில் நடப்பதற்கு இவ்வளவு ஏன் என்று தான் யோசித்தாள்.
இருவரும் நகைக்கடையில் நின்றிருந்தனர். எதுவும் திருப்தியாய் அமையாமல் வேறு வேறு என பார்த்துக் கொண்டிருந்தான் அர்ஜுன்.
எதுவும் பிடிக்காமல் கழுத்துச் சங்கிலி பக்கம் வந்தவன் அதில் ஒன்றை எடுத்து ப்ரணித்தாவிடம் கொடுத்து எப்படி இருக்கிறது என கேட்க, அதற்கு தான் அந்த கேள்வியை கேட்டாள் அவள்.
“எதாவது ஐடியா குடு ப்ரணி! என்ன வாங்குறது? நானும் வர்றேன் நானும் வர்றேன்னு அடம் பண்ணி வந்து இப்படி சும்மா நிக்குற!” என கேட்க, விழித்தாள் அவள் கோபமாய் கேட்கிறானோ என்று.
“எனக்கென்ன மாமா தெரியும். நான் இங்கெல்லாம் வந்தது இல்லையே! இதெல்லாம் நான் பார்த்தது கூட இல்ல!” பாவமாய் அவள் சொல்ல,
“ஹே! என்ன நீ? நான் சாதாரணமா சொன்னேன். இங்க வந்து பாத்திருக்கணும்னு எல்லாம் இல்ல. நான் மட்டும் என்ன டெய்லி வந்துட்டா இருக்கேன். அம்மா கூட வருவேன். அவங்க செலக்ட் பண்ணுவாங்க. நான் சும்மா சுத்தி சுத்தி பார்ப்பேன். இப்ப நான் தானே வாங்கணும்? நீயும் பாரு. எதாவது ஐடியா கிடைக்கும்!” என்றான் அர்ஜுன்.
சுத்தமாய் எதுவும் தோன்றாமல் ப்ரணித்தா அவனருகிலேயே நின்று அவன் பார்ப்பதை மட்டுமே பார்த்துக் கொண்டிருக்க, அர்ஜுனுமே அவள் சொல்லிய விதத்தில் பாவமாகிவிட அமைதியாகிவிட்டான்.
“மாமா! வளையல் தானே வளைகாப்புக்கு வாங்கணும்?” ப்ரணித்தா கேட்க,
“ஆமா தான். அதான் மாமா வாங்குவாரே! அதனால தான் வேற எதாவது பாக்கலாம்னு நினச்சேன்!” என்றவன்,
“இது நல்லாருக்கே!” என்று கைகளில் எடுத்ததை தானும் பார்த்தாள் ப்ரணித்தா.
“ப்ச்! ம்ம்ஹும் வேண்டாம்!” என்றவன் பார்த்து பார்த்து வாங்குவதில் மனம் கவரப்பட்டு நின்றாள் ப்ரணித்தா.
“ஹ்ம்ம்! நைஸ்!” என்று அர்ஜுன் தன் கைகளில் எடுத்ததைக் கண்டு தானுமாய் அதைப் பார்த்தவள்,
“வாவ்! நல்லாருக்கு மாமா ஜிமிக்கி!” என்று சொல்ல, அர்ஜுனும் தனக்கு திருப்தியானதில் புன்னகைத்தவன்,
“ஓகே! இதை பேக் பண்ண சொல்லிடலாம்! உனக்கெதாவது?” என்று கேட்க, அவன் புன்னகையில் நின்றுவிட்டாள் அவள்.
“ப்ரணி!” என்று அர்ஜுன் அழைத்து மீண்டும் கேட்க,
“இல்ல இல்ல! வேண்டாம் மாமா!” என்று மறுத்தாள்.
“அர்ஜுன்?” என்ற குரலில் அர்ஜுனோடு ப்ரணித்தாவும் திரும்ப, அங்கே கலையரசி.
“அத்தை?” என்றவன்,
“நீங்க இங்க?” என்று கேட்டு,
“மாமா வந்திருக்காங்களா?” என்றான் சுற்றிலும் பார்த்து.
“ம்மா! இது ஓகே’வா?” என அவர்கள் முன் கழுத்தில் மாட்டிய அந்த பெரிய ஆரத்துடன் வந்து நின்றாள் விஜயலக்ஷ்மி.
தொடரும்..
error: Content is protected !!