Skip to content
Post Views: 7,040
காதல் இன்று
“காசுக்கு என்னக்கா பண்ணப் போறோம்?” என்று கேட்டாள் வளர்மதி!
அவளுக்கு இன்று பார்லர் வீக்லி ஆப். மதி வந்திருப்பது தெரிந்து, அவளும் அம்மா வீட்டுக்கு வந்திருந்தாள்.
“என்ன பண்ணப் போறோம் என்று தான் கேட்டாள்”, வளர்மதி!
Advertisement
“என்ன பண்ண போறே என்று கேட்கவில்லை!” அது தான் வசந்தாவின் வளர்ப்பு!
வளர்மதியைப் பொறுத்தவரை, அவள் தரப்பிலிருந்து எந்த உதவியும் கேட்காமல் இருப்பதே அவள் அம்மா வசந்தாவிற்கு செய்யக் கூடிய மிகப் பெரிய உதவி!
அதை அவள் சரியாக செய்துக் கொண்டிருக்கிறாள்!
Advertisement
அப்படியே அவள் வீட்டிற்கு தெரியாமல் அம்மாவுக்கு உதவி செய்யலாம் என்று நினைத்தால் கூட அருண் நிச்சயம் அதை ஏற்றுக் கொள்ள விடவே மாட்டார்!
Advertisement
அதனால் அவள் இதை மட்டுமாவது சரியாக செய்வோம் என்று இருந்து விட்டாள்.
அவள் அம்மா வீட்டுக்கு வரும்போதெல்லாம் வெண்ணிலாவுக்கு த்ரெடிங், பேசியல் எல்லாம் செய்து விட்டு தான் போவாள்!
அதனால் வெண்ணிலாவைப் பார்ப்பவர்களுக்கு அவளின் கிராமத்து பின்னணி ரொம்ப தெரியவே தெரியாது!
Advertisement
அதே போல அருணுக்கும் தலைக்கு டை அடித்து விடுவாள், கூடவே மறுக்க மறுக்க வசந்தாவுக்கும்!
இன்றும் அதே போல வெண்ணிலாவுக்கு முகத்தில் பேசியல் பூச்சு பூசி விட்டு காத்திருக்க சொல்லி விட்டு, மதிக்கு த்ரேடிங் பண்ணிக் கொண்டே தான் கேட்டாள்!
வசந்தா தலைக்கு டை போட்டுக் கொண்டு கொல்லைபுறம் இருக்கும் விறகு அடுப்பில் சாதம் சமைத்துக் கொண்டு இருந்தார்!
“பணத்துக்கா, அது உங்க மாமா தான் ஏற்பாடு பண்ணனும், கல்யாணம் ஆகி பத்து வருஷம் ஆகிடுச்சு, இன்னும் பணம் கேட்டு இங்க வர்றது, அம்மாவையும் நிலாவையும் கஷ்டப் படுத்தறதுக்கு எனக்கு ரொம்ப அவமானமா இருக்குடி வளரு! இனி நான் அதை தொடர மாட்டேன்.
இப்ப கூட ஒரு ஸ்டன்ட் அடிக்க தான் இங்க வந்து உட்கார்ந்து இருக்கேன்! வரட்டும் அந்த ஆள், அவராலயும் என்னையை விட்டுட்டு இருக்க முடியாது!
சும்மா அம்மா மனசு வேதனைப் படும் வேதனைப் படும் சொல்லி, நம்ம அம்மாவை தொல்லைப் படுத்தறது சரியில்ல!
ஏன் நம்ம அம்மாவுக்கு மனசு வேதனைப் படாதா? அவங்களை வேதனைப் படுத்தறது மட்டும் பாவம் இல்லையா? இதுக்கு ஒரு முடிவு தெரிஞ்சே ஆகணும் சொல்லிபுட்டேன்!
முதல்ல, இந்த குரங்கை சொல்லணும், ஊருக்கு முன்னாடி, பணம் தானே மாமா, எப்படியாவது ஏற்பாடு பண்ணிரலாம்னு முந்திரிக் கொட்டைத் தனமா பெரிய இவ மாதிரி வாக்கு கொடுக்கிறது!
இதுல மட்டும் இவ அப்படியே அப்பா மாதிரிடி! அதாவது இப்படி வாக்கு கொடுக்கிறதுல,
இப்படி அத்தை கிட்ட சொல்லி புட்டு, அப்புறம் காசுக்காக நாயலைச்சல் அலைய வேண்டியது!
இது தேவையா, இது ஒரு புல் ஸ்டாப் வச்சே ஆகணும்! மவளே நீ மட்டும் என்னைக் கேட்காம வாயை கீய திறந்த, அப்புறம் இருக்கு உனக்கு!” என்று சொல்லி மீண்டும் வெண்ணிலாவின் தலையில் செல்லமாக குட்டினாள் மதி!
அப்போது மதியின் போன் அடித்தது. எடுத்துப் பார்த்த வளர்,
“அக்கா மாமா கிட்ட இருந்து தான், இந்த பேசு!” என்று கொடுத்தாள்.
“ஸ்பீக்கர்ல போடு!” என்றாள் மதி!
“அக்கா”, என்று வளர் தயங்க , “சும்மா போடுடி” என்றாள் மதியும்!
செல்வம் பேசினான்.
“மதி, ஒரு குட் நியூஸ்! என் அக்கா, அதான் பெரியம்மா பொண்ணு, அவ பொண்ணு சடங்குக்கு நகை எல்லாம் சீர் செய்யக் கூடாதுன்னு ஸ்ட்ரிக்டா சொல்லிடுச்சாம்!
அதான் அம்மா பணத்தைத் திருப்பி எடுத்துட்டு வந்திருச்சு!”
“ஏனாம், நகை வேண்டாம்னு சொல்ற பொம்பள கூட உண்டா?” என்றாள் மதி ஆச்சர்யத்துடன்!
“பாரேன், இந்த காலத்துல கூட நல்லவங்க இருக்காங்க போல” என்று வெண்ணிலா ஒரு கணம் நினைக்க, அப்படியெல்லாம் இல்லை என்று உணர்த்தியது அடுத்து செல்வம் சொன்ன வார்த்தைகள்!
“இப்ப, நாம் அவங்களுக்கு பவுன் போட்டா, நாளைக்கு அவங்க திரும்ப அதே அளவு நம்ம பிள்ளைக்கும் செய்யணும் இல்ல, நாளுக்கு நாள் ஏறிட்டு போற பவுன் விலையில இது சரியா வராதாம்!
அதனால சும்மா பழம் பூ, ட்ரெஸ் இந்த மாதிரி மட்டும் தட்டு வச்சா போதும்னு சொல்லிடுச்சாம் அக்கா, அம்மாவுக்கு ரொம்ப மன வருத்தம், கூடவே கொஞ்சம் அவமானம் கூட” என்றான் செல்வம்!
“உங்கம்மா, ரொம்ப மனசு வருத்தப்பட்டா, பிள்ளை நீங்க போய் ஆறுதல் சொல்லி பார்த்துக்கங்க, நான் அங்க வர மாட்டேன்!” என்றாள் மதி தீர்மானமாய்!
“ஏய் என்னடி இப்படி சொல்லிட்ட, அது தான் பிரச்சினை ஒரு முடிவுக்கு வந்துடுச்சே அப்புறம் என்ன இன்னும்?”
“இன்னிக்கு உங்க அக்காவுக்கு திடீர் ஞானோதயம் வந்ததால் நாம தப்பிச்சோம், ஆனா திரும்பவும் இதே மாதிரி கொண்டு வந்து நிறுத்த மாட்டீங்கன்னு என்ன நிச்சயம்?
எனக்கு ஒரு உத்தரவாதம் சொல்லுங்க, இனி எதுக்கும் அம்மா வீட்டுல போய் காசு வாங்கிட்டு வர சொல்லி, நேரிடையோவோ, இல்ல மறைமுகமாகவோ சொல்லக் கூடாது!
உங்க பொண்டாட்டி, உங்க கடமை! இன்னும் எத்தனை நாளைக்கு எங்கம்மா முதுகுல ஏறிட்டு இருக்கிறது?”
“சரிடி, இனி நான் நீ சொல்ற மாதிரியே நடந்துக்கிறேன், இனி அம்மாகிட்டயும் ஸ்ட்ரிக்டா சொல்லிடுறேன், ப்ளீஸ் , நீ ரெடியா இரு, நான் வந்து உன்னைக் கூப்பிட வரேன் சாயந்திரமா!” சொல்லி செல்வம் போனை வைத்தான்.
பெண்கள் மூவருக்கு ஒரு மாதிரி பெரிய பாரமே இறங்கியது போல இருந்தது!
“என்னடி அப்படி ரகசியம் பேசுறீங்க மூணு பேரும்!” பின்னால் வசந்தாவின் குரல் கேட்டு திரும்பியவர்கள், திரும்பிய வேகத்தில் சிரித்து விட்டார்கள்!
ஏனென்றால், அங்கு நின்று வசந்தாவின் குரலை அப்படியே மிமிக்க்ரி செய்தது சுதா!
அன்புவின் வேன் கிளீனர் ஆயா, வசந்தாவின் ஒன்று விட்ட சகோதரியின் மகள்!
சுதாவிற்கு அம்மா கிடையாது. அவள் சிறு பெண்ணாக இருக்கும் போதே இறந்து விட்டாள்.
அவள் அப்பா அவளுக்காகவே வேறு திருமணம் செய்து கொள்ள வில்லை!
சுதா சின்ன பெண்ணாக இருக்கும் போது, தலைப் பின்னிக் கொள்ள வசந்தாவிடமோ, அல்லது மதியிடமோ தான் வருவாள்!
அவள் பெரிய மனுசி ஆன போது கூட அவளுக்கு துணையாக நின்றது வசந்தாவும் அவளின் பெண்களும் தான்!
வசந்தாவின் பெண்கள் மூவருமே ஒவ்வொரு விதத்தில் அழகிகள் என்றாலும் ஒரு போது அவர்கள் சுதாவை அவள் பருமனான உடலை வைத்து உருவ கேலி செய்ததே இல்லை!
“நீ குண்டு இல்ல சுதா, இதுக்கு பேரு செழுமை! நல்லா மொழு மொழுன்னு இருக்க நீ, உன் மீது உள்ள பொறாமையால் தான் மத்தவங்க உன்னை கேலி செய்றாங்க” என்றே சொல்லுவார்கள் சகோதரிகள்!
கூடவே அன்பும் கூட!
இந்த வார்த்தையை அன்பு சொல்லும் போது அவளுக்கு அப்படியே வானத்தில் பறப்பது போல தான் இருக்கும்!
அவள் அப்பா கூட அடிக்கடி சொல்வார்.
“பாப்பா நீ இப்படி இருக்கிறது எனக்கு ஒரு வகையில் பெருமை தான் பாப்பா!”
“என்னப்பா சொல்ற?” என்றால்,
“ஆமா, ஒண்ணு, நாம பஞ்சத்தில் இல்லைன்னு தெரியும், அப்புறம் இந்த அப்பாவோட சாப்பாடு அவ்வளவு ருசியின்னு தெரிய வரும்!” என்று சொல்லி சிரிப்பார்!
யார் எது சொன்னாலும், அவள் அன்புவின் மேல் வைத்து இருப்பது ஒரு தலைக் காதல்!
நடக்கவே நடக்காது என்று தெரிந்தும் அவள் மனத்தை மாற்றிக் கொள்ள முடியவில்லை!
எப்படியும் வசந்தாவின் பெண்கள் மூவரில் ஒருவரைத் தான் அவன் கல்யாணம் செய்வான் என்றும் தெரியும்!
இருந்தாலும் அவள் மனசு என்னமோ அவனிடம் தான்!
அவன் போல கேரிங்காக, அன்பாக பெண்களை நடத்தும் ஆண் மகன் கிடைப்பது கொஞ்சம் ரேர் தானே!
“ஏய், சுதா, வா.. வா என்ன ரொம்ப நாளா ஆள காணோம்!”
“எங்க மதிக்கா, அதான் ஆனுவல் டேக்காக போட்டு சக்கையா வேலை வாங்கிட்டாங்க ஸ்கூலில், வெண்ணிலாவுக்கு தான் தெரியுமே!” என்றாள் சுதா!
“அப்படியே அம்மா மாதிரி பேசுறடி நீ” வளர் அதிசயித்தாள்!
“பேசி என்ன புண்ணியம், இதையே ஸ்டேஜுல பண்ணுனு ஸ்கூலில் நான் அவ்வளவு தூரம் சொல்லியும் மாட்டேன்னு சொல்லிட்டா!” என்றாள் வெண்ணிலா! கண்ணைத் திறக்காமலே!
இப்போது வசந்தா நிஜாமலுமே அங்கு வந்து விட, பெண்கள் மூவரும் அவரிடம் செல்வம் போனில் சொன்னதை சொல்லி சந்தோசப் பட்டார்கள்.
“அம்மா, இதே சூடோட, சீக்கிரம் வெண்ணிலாவுக்கு கல்யாண ஏற்பாட்டை பேசி முடிச்சுடு, இந்த அம்மையார் எப்படியும் ஏற்பாடு பண்ணி கொடுப்பாங்கன்னு தான் என் மாமியார்க்காரி சும்மா சும்மா காசு கேட்டுட்டே இருக்குது!” என்றாள் மதி!
“ஏற்பாடு பண்ணிடலாம், தனம் அண்ணி கிட்ட பேசணும், அன்பு கிட்டயும்!
அப்புறம் என்ன மாதிரி நேரத்துலயும் நீ இப்படி பெரியவங்கள மரியாதைக் குறைவா பேசக் கூடாது” என்று, மதியைக் கண்டுக்கவும் செய்தார் வசந்தா!
“ம்ம். சரிம்மா!”
“யம்மோவ், நீ கொஞ்சம் ப்ரேக் எடு, நான் இன்னும் சாதிக்க வேண்டியது நிறைய இருக்கு, அதுக்குள்ள கல்யாணம் அது இதுன்னு சொல்லி என்னை லாக் பண்ணிடாதே!” என்றாள் வெண்ணிலா!
“இன்னும் என்னடி இருக்கு உனக்கு?” என்றாள் வளர்.
“யக்கா, உனக்கு தெரியுமா நம்ம வசந்தாவோட சின்ன வயசு ஆசை ஒண்ணு!
அம்மா சின்ன பொண்ணா இருக்கும் போது அம்மன் கோவில் கிழக்காலே ன்னு ஒரு படம் பார்த்துச்சாம், கோவில் திருவிழாவில் வாடகைக்கு டெக் எடுத்துப் போட்டு!
அதில் ராதா ஒரு குட்டி சிவப்பு கலர் காரில் ஸெல்ப் டிரைவிங்கில் வருவாங்களாம்!
நம்ம அம்மாவுக்கும் அதே மாதிரி பெரிய பொண்ணா ஆனவுடன் நல்லா படிச்சு பெரிய வேலையில் உட்கார்ந்து அதே மாதிரி ஒரு கார் வாங்கி, ராதா மாதிரியே ஓட்டிக்கிட்டு இந்த ஊர் பூராவும் வரணும்னு ஆசைன்னு அம்மா ஒரு தரம் என் கிட்ட சொல்லியிருக்கு!
அதனால நான் சம்பாரிச்சு ஒரு கார் வாங்கி அதை வசந்தாவை ஓட்ட சொல்லிப் பார்க்கணும்!
அப்புறம் தான் எதைப் பத்தியும் என்னால யோசிக்க முடியும்!
இப்ப என் போகஸ் எல்லாம் அது மேல தான்!” என்றாள் வெண்ணிலா கண்களில் நிறைய கனவுகளோடு!
“போடி பொழப்பத்தவளே!” என்று அவள் கொஞ்சம் வெட்கப்பட்டு, அவள் தலையில் லேசாக கொட்டி விட்டு அங்கிருந்து நகர்ந்தார் வசந்தா!
——
“கண்டிப்பா வாங்குவீங்க வெண்ணிலா” என்றான் ஜீவா.
இந்த கனவுப் பற்றி அவனிடமும் சொன்னாள் வெண்ணிலா!
அவன் தான் அவளை தான் தங்கியிருக்கும் வீட்டுக்கு வர சொல்லி இருந்தான்.
அவளின் கம்ப்யூட்டர் ஸ்கில் லெவல் டெஸ்ட் பண்ண!
அவள் கூடவே, தன்னை மாதிரியே வாய்ப்புக்காக ஏங்கிக் கொண்டிருக்கும் இன்னொரு பையனையும் தன்னோடு கூட்டி சென்றாள்.
இருவரின் ஸ்கில்செட்டை தெரிந்து கொண்டவன், அதற்கு ஏற்றார் போல, இன்னும் மேலே என்ன படித்தால் உடனே பிளேஸ் ஆகலாம் என்று எடுத்து சொல்லி, அதற்கான கோர்ஸ் பீஸையும் அவனே கட்டி சேர்த்து விட்டான்!
வேண்டாம் என்றே இருவரும் மறுத்த போது, “இது கார்பரேட் செலவு கணக்கில் தான் வரும், ஒண்ணும் ஹெசிடேட் பண்ணாதீங்க” என்று சொல்லி அவர்களை படிக்க வைத்தான்.
அவன் வீட்டு ஒய்பை கனெக்சனை யூஸ் பண்ணிக் கொள்ளவும் அனுமதித்தான்!
அவர்கள் இருவரும் பெரும்பாலும் அவன் வீட்டின் அருகில் இருந்த ஒரு மரத்தடியிலேயே தான் உட்கார்ந்து படித்தனர்!
குறுகிய கால அந்த கோர்சை முடித்த பின், அவன் ரெபரன்ஸில் அவர்கள் இருவருக்குமே வேலைக்கும் ஏற்பாடு செய்தான்!
முதலில் அந்த பையனுக்கு ஹைதராபாத்தில் வேலைக் கிடைத்து விட்டது!
அவன் நன்றி பெருக்கோடு ஜீவாவிடம் விடை பெற்று சென்றான்!
இப்போது வெண்ணிலாவும் ஆன்லைனில் இன்டர்வியூ அட்டென்ட் பண்ணி செலெக்ட் ஆகி விட்டாள்!
ஆனால் அவளுக்கு ஒரே ஒரு கண்டிசன் இருந்தது!
எடுத்தவுடனே ஒர்க் ப்ரம் ஹோம் தர மாட்டோம் என்று அந்த கம்பெனியில் சொல்லி விட்டார்கள்!
ஒரு வருடமாவது ஆபிஸ் வந்து தான் வேலை செய்ய வேண்டும் என்று சொல்லி விட்டார்கள் அந்த சென்னை கம்பெனியில்!
ஆனால் அருணை நினைத்தால் அவளுக்கு ரொம்ப பயமாக இருந்தது!
அவர் கட்டாயம் ஒத்துக்கொள்ள மாட்டார்!
அம்மாவை வைத்து தான் பேசிப் பார்க்க வேண்டும்! அன்பு மாமாவிடமும் சொல்லி பேச சொல்ல வேண்டும்!
“இது நல்ல அருமையான் வாய்ப்பு மிஸ் பண்ணிடாதீங்க வெண்ணிலா, எப்படியாவது உங்க வீட்டில் கன்வின்ஸ் பண்ணிட்டு கிளம்புங்க!” என்றான் ஜீவாவும்!
“ஆனால் எப்படி! இன்னும் இரண்டே நாள் தான் இருக்கிறது அவள் சென்னை செல்ல!”
அவள் அன்புவிடம் மட்டும் விஷயத்தை சொல்லி விட்டாள்.
அவனும், “நான் எப்படியாவது மாமாவை சமாதானம் செய்து, உன்னை ட்ரைன் ஏத்தி விடுறேன்!” என்று உறுதி அளித்து இருந்தான்!
வெண்ணிலா யோசித்துக் கொண்டே தன் லாப்டாப்பில் ஒரு டுட்டோரியல் வீடியோ ஒன்றைப் பார்த்துக் கொண்டிருந்தாள், தன் வீட்டில் இருந்து கொண்டு!
பக்கத்தில் இடியே விழுந்தாலும் கண்டுக் கொள்ள மாட்டாள் வெண்ணிலா அவள் படித்துக் கொண்டிருக்கும் போது மட்டும்!
இப்போதும் அப்படியே!
காதில் அவளுக்கு ஜீவா வாங்கிக் கொடுத்து இருந்த ஏர்பேட்!
சட்டென்று அவள் காதில் மாட்டிக் கொண்டு படித்துக் கொண்டிருப்பது யாரையும் கவனத்தைக் கவராது!
அப்போது பார்த்து ஒரு முக்கியமான விஷயம் ஒன்றை அவளிடம் சொல்லி விட்டு, அவள் கேட்டு விட்டாள் என்றே நினைத்துக் கொண்டு அங்கிருந்து அகன்றார் வசந்தா!
விசயத்தின் முக்கியத்துவம் அறியமால் அவள் பாட்டுக்குப் படித்துக் கொண்டிருந்தாள் வெண்ணிலா!
error: Content is protected !!