Skip to content
Post Views: 9,442
அத்தியாயம் 9
நிச்சயதார்த்தத்திற்கு என சந்தானம் விவேக் இருவரும் சென்று நாள் குறித்து வந்திருக்க, அதுவும் ஒரே வாரத்தில் என்றதும்,
Advertisement
“என்னங்க! இவ்வளவு சீக்கிரமாவா? நாம இன்னும் வெளில யாருக்கும் சொல்லலையே?” என்றார் கலையரசி கணவனிடம்.
“அதனால தான் சீக்கிரமா வச்சதே! கல்யாணத்தை மூணு மாசத்துக்குள்ள பண்ணலாம். நிறுத்தி நிதானமா கிராண்டா பண்ணனும்னு விவேக் சொன்னான். அப்போ நிச்சயத்தை முதல்ல முடிச்சு வைக்குறது தானே நல்லது?” என்றார் சந்தானம்.
Advertisement
Advertisement
“கயல் அத்தைக்கு கால் பண்ணி கேட்டோம் ம்மா! அவங்களுமே சரினு சொல்லிட்டாங்க. அவங்க வீட்டுலயும் ஒரே பையன் கல்யாணம். நல்லா பண்ணனும் நினைப்பாங்களே? நிச்சயத்துக்கு எல்லாரையும் அழைக்கலாம். ஆனா வீட்டுலயே வச்சிப்போம். முன்னாடி தோட்டத்துல எல்லாம் செட் பண்ணிடலாம். மேரேஜ் மண்டபத்துல! ஓகே தானே ம்மா?” என்றான் விவேக்கும்.
“ம்ம்ம் அதான் இவ்வளவு யோசிச்சு முடிவு பண்ணிருக்கீங்களே! அப்ப சரியா தான் இருக்கும். ஒரு மாசம் போகட்டும்னு சொன்னிங்களே ஒரே வாரத்துல நிச்சயம்னு வந்து நிக்கிங்களேனு தான் கேட்டேன். தெளிவா தானே இருக்கீங்க! அப்புறமென்ன?” என்றுவிட்டார் கலையரசியும்.
Advertisement
அனன்யாவிற்குமே அவ்வளவு சந்தோசம். தம்பி அர்ஜுனை எவ்வளவு பிடிக்குமோ அதே அளவிற்கு இந்த வீட்டின் செல்ல பிள்ளையான விஜயலக்ஷ்மியையும் அவளுக்கு பிடிக்குமே!
தான் நினைத்து அதை கணவன் பேசி ஒரு திருமணமே முடிவானதில் அவ்வளவு மகிழ்ச்சி அவளுக்கு.
“அர்ஜுன் சந்தோசமா தான ம்மா இருக்கான்? அவனுக்கு பிடிச்சிருக்கு தானே விஜியை?” என அன்னையிடமும் மீண்டும் மீண்டும் கேட்டு தெரிந்து கொண்டாள்.
“அவன் என்ன தான் நாம சொல்றதை வேண்டாம்னு சொல்லி இருக்கான்? பெங்களூருக்கு வேலைக்கு போனான். எனக்காக வந்தான் இல்ல? விவேக் தம்பி சொன்னதும் அவர்கூட ஆபீஸ் கம்பெனினு இருக்கான். அர்ஜுன் மாதிரி ஒருத்தனெல்லாம் எல்லா அம்மாக்கும் கிடைச்சுடாது அனு. அவனுகக்கவே அவன் கட்டிக்க போற பொண்ணை கவனமா பாத்துக்கணும் நினைப்பேன். இப்போ அது விஜினதும் இன்னுமே சந்தோசம் தான். அவனுக்குமே பிடிச்சிருக்கு. நேரா சொல்லல. ஆனா அவன் முகம் சொல்லுச்சு!” என்றார் கயல்விழி.
இதே போலவே தான் என்றாலும் நேராய் விஜயலக்ஷ்மியிடம் கேட்டாள் அனன்யா.
“எங்களுக்காக கல்யாணம் பண்ணிக்க சம்மதிச்சனு எனக்கே தெரியும் விஜி! ஆனா நிஜமா உனக்கு அர்ஜுனை கல்யாணம் பண்ணிக்க சம்மதம் தானே?” என்று கேட்க,
“அண்ணி! இதென்ன கேள்வி? உங்க எல்லாரையும் மீறி நான் எங்க போய்ட போறேன்? எனக்கு யூஎஸ் போய் படிக்கனும்னு ரொம்ப ஆசை! அது முடியலையேனு கொஞ்சம் வருத்தம் தான். மத்தபடி கல்யாணம் வேண்டாம்னு எல்லாம் நான் நினைக்கல. அதுவும் அர்ஜுன் கயல் அத்தை எனக்கு டபுள் ஓகேஓகே தான்!” என்றிருந்தாள்.
“டேய் மச்சான்! வாழ்த்துக்கள் டா!” என தீபக் தாவி இருந்தான் அர்ஜுன் மேல்.
“டேய் டேய்!” என்ற அர்ஜுன் புன்னகையோடு அவனை அணைத்துக் கொள்ள,
“அன்னைக்கே சொன்னேனே உன் மூஞ்சில ஒளிவட்டம் தெரியுதுன்னு! என்ன டா லவ்வா?” என்று தீபக் கண்ணடிக்க,
“டேய்! அதெல்லாம் ஒண்ணுமில்ல. அம்மா அனு பார்த்தது தான்!” என்றவன் முகத்தில் தான் அத்தனை மின்னல் பிரகாசங்கள்.
“எந்த பக்கம் பார்த்தாலும் அப்படி ஒன்னும் தெரிலயே டா. என்னவோ இருக்கே!” என்றான் தீபக் நம்பாமல் அவனை சுற்றி வந்து.
“போதும் ஆராய்ச்சி எல்லாம். நிச்சயத்துக்கு இன்னும் நாலு நாள் தான் இருக்கு. வந்துடு. அம்மாவையும் கால் பண்ணி வர சொல்லு. நான் பேசிடுறேன் அவங்ககிட்ட!” என்று சொல்லி அவனிடம் இருந்து விடைபெற்றிருந்தான் அர்ஜுன்.
அர்ஜுன் விஜயலக்ஷ்மி இருவருக்குமே மனதின் எண்ணங்கள் ஒன்றாய் பயணிக்க முதற் காரணம் என்றால் அது அனன்யா தான்.
இருவரையுமே அறிந்தவள் என்ற முறையில் விஜயலக்ஷ்மியின் புகைப்படங்களை அர்ஜுனுக்கு அனுப்புவதும் அர்ஜுனின் புகைப்படங்களை விஜயலக்ஷ்மிக்கு அனுப்புவதும் என அவளால் முடிந்த வேலைகளை செய்ய மறக்கவில்லை அனன்யா.
தனக்கானவன் என்று உறுதியான எந்த பெண்ணும் மனதில் ஆசைகளை வளர்த்துக் கொள்வதை தான் விஜயலக்ஷ்மியும் செய்தது.
அவனின் புகைப்படத்தை வைத்து நீண்ட நேரமாய் பார்த்துக் கொண்டிருந்தவள் சட்டென்று தோன்றவும் தனது புகைப்படதோடு சேர்த்து வைத்துப் பார்த்தாள்.
“ஹ்ம்ம் ஸ்மார்ட் மேன்!” நினைத்து சிரித்து கொள்வது எல்லாம் தனக்குள் மட்டும் தான்.
அர்ஜுன் அழைக்க அவள் காத்திருக்க, நிச்சயதார்த்த தினத்திற்காக அர்ஜுன் காத்திருந்தான் தன்னவளாய் அனைவரும் அறிய அவளிடம் பேசிட வேண்டி.
நான்கு நாட்களாய் சுத்தமாய் உறக்கம் இல்லை. சாப்பாடு தண்ணீர் கூட இறங்கவில்லை. ஒன்றரை வருடங்களாக அவனை மட்டும் எண்ணி வாழ்ந்த இந்த வாழ்க்கையை அவ்வளவு சீக்கிரம் விட்டுக் கொடுக்க தயாராய் இல்லை ப்ரணித்தா.
இத்தனை நாளும் இப்படி எல்லாம் நடக்கும் என்று நினைக்கவே இல்லை. தான் கூறினால் அர்ஜுன் ஏற்றுக் கொள்வான் கயல்விழி மகிழ்வாய் தன்னை வரவேற்று தன்னுடன் வைத்துக் கொள்வார் என அவள் இலகுவாய் விட்டிருக்க, நடந்ததை ஜீரணிக்கவே முடியவில்லை.
அர்ஜுனிம் விருப்பம் வேறு! அதையெல்லாம் ப்ரணித்தா துளியும் யோசிக்கவில்லை. அவனை இழக்க கொஞ்சமும் மனமில்லை.
எப்படி விட முடியும்? கொஞ்சம் கொஞ்சமாய் அவனை தனக்குள் சேமித்து வைத்திருக்க மொத்தமாய் பறிகொடுக்கவா? என்று தான் மனம் உழன்றது.
‘அர்ஜுன் மாமா இல்லாம நான் எப்படி?’ நினைத்தவள்,
‘இந்த கல்யாணத்தை நிறுத்திட்டா?’ என்று நினைத்தவள், ‘நிறுத்தணும்! நிறுத்தியே ஆகணும்! அவ என்ன அர்ஜுன் மாமாவை விரும்புறாளா? நான் தான விரும்புறேன்? நான் ஏன் அவளுக்கு குடுக்கணும்? அவ போய்ட்டா மாமா என்கிட்ட வந்துடுவாங்க. வர வச்சிடுவேன்’ மனதுக்குள் எல்லாம் சொல்லிக் கொள்ளவில்லை.
தன் அறைக்குள் தான் மட்டுமாய் பேசிக் கொண்டாள். நீண்ட நேரம் பேசிக் கொண்டாள். சபதம் போல நினைத்துக் கொண்டாள் ப்ரணித்தா.
தனக்குள் பலமுறை சொல்லிப் பார்த்து அனைத்தையும் நியாபகத்தில் வைத்து எதையும் மறந்து விட்டுவிட கூடாது என்ற எண்ணத்தில் மட்டுமாய் அடுத்த நாள் காலை பத்து மணிக்கெல்லாம் ப்ரணித்தா அனன்யா வீட்டிற்கு வர, அவளை வரவேற்று அமர வைத்திருந்தார் கலையரசி.
“அனு! கொஞ்சம் கீழ வா!” என அனன்யாவிற்கு கலையரசி கீழிருந்து அழைப்பு கொடுக்க, ப்ரணித்தா என்ன பேசுவது எப்படி பேசுவது என பல யோசனைகளோடு அமர்ந்திருந்தாள்.
“ப்ரணி! வா வா! எப்படி இருக்க?” என வந்த அனன்யா கையில் புது புடவை இருந்தது.
“சாப்பிடுறியா ப்ரணி?” அனன்யா கேட்க,
“இல்ல அண்ணி! சாப்பிட்டுட்டு தான் வந்தேன்! விஜி எங்க? வீட்டுல இல்லையா?” என்றாள்.
“உள்ள ரூம்ல இருப்பா. இதை குடிச்சுட்டு இரு நான் வர சொல்றேன்!” என்று கலையரசி சொல்லி செல்ல,
“நிச்சயதார்த்தத்துக்குன்னு ஆசைஆசையா இந்த புது சாரீக்கு ப்ளௌஸ் ஸ்டிட்ச் பண்ண குடுத்தேன். நான் சொன்ன மாதிரி அவங்க ஸ்டிட்ச் பண்ணவே இல்ல. அளவும் வேற லூசா இருக்கு. அதான் அத்தை கூட போய் மறுபடி குடுத்துட்டு வரலாம்னு இருக்கேன்!” என்றாள் அனன்யா.
“ஓஹ்! நீங்க வேணா போய்ட்டு வாங்க அண்ணி! நான் கிளம்புறேன்!” ப்ரணித்தா கூற,
“அட இரு ம்மா! அனு கல்யாணத்துக்கு அப்புறம் இப்ப தான வந்திருக்க நீ? இரு மதியமா சாப்பிட்டு மெதுவா போலாம்! உள்ள விஜி இருக்கா. நீ பேசிட்டு இரு.. அதுக்குள்ள நாங்க போய் குடுத்துட்டு வந்துடுறோம்!” என்று கலையரசி சொல்ல, அதுவே போதுமானதாய் இருந்தது ப்ரணித்தாவிற்கு
விஜயலக்ஷ்மி அறை கதவு தட்டப்படவும் அவள் திறக்க ப்ரணித்தாவைப் பார்த்தவள்,
“ஹேய்! வாங்க வாங்க!” என விஜயலக்ஷ்மி அழைக்க, சிறு புன்னகையோடு அவளறைக்குள் சென்றாள் ப்ரணித்தா.
“டிஸ்டர்ப் பண்ணிட்டேனா?” ப்ரணித்தா கேட்க,
“அதெல்லாம் இல்ல. இப்ப தான் அண்ணி மேக்ஓவர் பண்றதுலாம் என்னன்னு பேசிட்டு போனாங்க. போன்ல சேர்ச் பண்ணிட்டு இருந்தேன்!” என்றாள் விஜயலக்ஷ்மி.
“ஓஹ்!” என்றவள் அமைதியாய் அவள் அறையை சுற்றிப் பார்த்தாள்.
அவ்வளவு பழக்கம் இல்லை இருவருக்கும். என்ன பேச என தெரியாமல் விஜயலக்ஷ்மி அமர்ந்திருக்க நிதானமாய் சுற்றிப் பார்த்த ப்ரணித்தா,
“நீங்க ரொம்ப லக்கி விஜி!” என்றாள்.
“நீங்க வாங்கனு எல்லாம் வேண்டாம். உங்களோட சின்ன பொண்ணு தான் நான்.. பிரண்ட்ஸ்?” என்று கேட்டு விஜயலக்ஷ்மி கைநீட்டவும் பிடித்துக் கொண்டவள்,
“நீயும் அப்படியே என்னை கூப்பிடு!” என்றாள் ப்ரணித்தாவும்,
“ஹ்ம்!” என்றவள்,
“என்ன சொன்னிங்க? லக்கியா? ஏன்?” என்றாள் விஜயலக்ஷ்மி.
“ஒரே பொண்ணு! செல்லமா வளந்துருப்பிங்க இல்ல?” ப்ரணித்தா கேட்க,
“ஓஹ்! அதுவா! ஆமாமா! இல்லைனு சொல்லவே முடியாது. நான் அந்த விஷயத்துல ரொம்ப லக்கி” என்றவள் முகம் பார்த்தது பார்த்தபடி இருந்த ப்ரணித்தா முகத்தில் அப்பட்டமான ஏக்கம்.
அதுவும் விஜயலக்ஷ்மியே அறியும் அளவுக்கு அவள் பார்த்துக் கொண்டிருக்க கேள்வியாய் விழித்தவள்,
“ப்ரணித்தா?” என்று அழைக்க,
“சாரி! நான் ஏதோ யோசனைல…” என்றவள் பெருமூச்சுடன் எழ,
“எதாவது ப்ரோப்லேமா ப்ரணித்தா?” என்றாள் விஜயலக்ஷ்மி.
“இல்லைனு சொல்ல முடியாது. ஆனா சொல்லவும் முடியல. நிஜமா நீ எல்லா விஷயத்துலயும் லக்கி தான் விஜி!”
“என்ன சொல்றிங்க?”
“இந்த வீட்டுல எவ்வளவு சுதந்திரமா செல்லமா இருக்கீங்களோ அதுக்கு கொஞ்சமும் குறை இல்லாம இருக்கலாம் நீ அர்ஜுன் மாமா வீட்டுல!” என்றதும் பளிச்சென ஒரு புன்னகை தன்னையும் அறியாமல் விஜயலக்ஷ்மியிடம் உருவாக, அது இன்னுமாய் ப்ரணித்தாவின் கோபத்தையும் ஆசையையும் தூண்டுவதாய் இருந்தது.
“என்னை பாரேன்! என்னை எல்லாம் இருக்கேனா இல்லையானு கேட்க கூட ஆள் இல்ல! இங்க இருந்து ஹாஸ்டல் போனா அடுத்து வீக் ஃபுல்லா ஜாப்.. வீக்கேண்ட் ஆனா அப்படியே ரூம்குள்ள அடைஞ்சு கிடக்கணும். வெறுப்பா இருக்கும்!” என்று சொல்ல,
“என்ன ப்ரணித்தா நீங்க? ஏன் இப்படிலாம் நினைக்குறிங்க? உங்களுக்கு வேலை முடியவும் பேசாம இங்க வந்துடுங்க. நானும் வீட்டுல சும்மா தான் இருக்கேன். பிரக்டிஸ் கூட முடிய போகுது.. ஒரு மாசத்துக்கு அப்புறம் மேரேஜ் வரை சும்மா தான் இருக்கனும். நாம சேர்ந்து ஃபன் பண்ணலாம்!” என்றாள் விளையாட்டாய் விஜயலக்ஷ்மி.
ஏற்கனவே ப்ரணித்தா பற்றி கேள்விப்பட்டிருக்கிறாள் அனன்யா, கயல்விழி மூலம்.
பெற்றோர் இல்லாத வாழ்க்கை அதுவும் இந்த வயதில் எத்தனை கொடுமை என சட்டென இரக்கம் தான் வந்தது அவள் மேல்.
“இதெல்லாம் எல்லாரும் சொல்றது தான் விஜி. ஆனா என்னோடது சபிக்கப்பட்ட வாழ்க்கை!” என்று சொல்ல,
“ப்ரணி! என்ன நீங்க… இதெல்லாம் ரொம்ப பெரிய வார்த்தை.. கயல் அத்தைக்கு தெரிஞ்சா எவ்வளவு பீல் பண்ணுவாங்க தெரியுமா?” என்றாள் விஜயலக்ஷ்மி.
அந்த வார்த்தை மனதில் படபடப்பைக் கொண்டு வந்துவிட்டது விஜயலக்ஷ்மிக்கு. ஏதோ மீளா துயரத்தில் இருப்பவள் போன்ற பாவமான பார்வையும் அவளின் வார்த்தையும் என வெகுவாய் சங்கடம் கொண்டது விஜியின் மனம்.
“அவங்கவங்க வாழ்க்கை தான் அவங்கவங்களுக்கு முக்கியம். என்னை பத்தி யோசிக்க எல்லாம் யாருமில்ல!”
“ப்ரணித்தா? ஏன் இப்படிலாம் பேசுறீங்க?” என்றவளுக்கு அவளை எப்படி சரி செய்வது என தெரியவில்லை. அண்ணியாவது இருந்திருக்கலாம் என மனம் வருந்தியது.
“உண்மை விஜி! உனக்கு தெரியாதுல்ல.. நான் அர்ஜுன் மாமாவை விரும்பினேன். கிடைச்சாங்களா என்ன?” என்று கேட்கவும் அதிர்ச்சியில் விஜயலக்ஷ்மி அமைதியாகிவிட்டாள்.
“பார்த்தியா! எனக்காக பாவப்பட்ட நீயே இப்போ அமைதியாகிட்ட!”
“ப்ரணித்தா!”
“எனக்குன்னு யாரு இருக்காங்க? அப்படி யாராவது இருந்தா போய் பேசி இருப்பாங்க.. இல்ல அர்ஜுன் மாமா வீட்டுல இருந்து பேச வந்திருப்பாங்க. நானே தெருவுல நிக்குறேன். அப்புறம் எப்படி?” என்றவள் வேதனை புரிந்தாலும் அவள் சொல்லிய செய்தி மனதை என்னவோ செய்தது விஜயலக்ஷ்மிக்கு.
“பார்த்து பார்த்து செய்ய அண்ணா, பாசமா பார்த்துக்க அப்பா அம்மா சொந்தம் பந்தம்னு உன் வாழ்க்கைக்கு தான் அர்ஜுன் மாமா சரி. அதான் அனன்யா அண்ணி உனக்காக பேசி இருக்காங்க!” என்ற ப்ரணித்தா,
“நானும் அர்ஜுன் மாமாக்கு மாமா பொண்ணு தான். ஒரு பேச்சுக்கு கூட என்னை யாரும் யோசிக்கல பாரேன்!” என்று சொல்ல, அவள் ஏக்கம் அதிகமாய் பாதித்தது விஜயலக்ஷ்மியை.
மருத்துவம் படித்தவள் என்ற முறையில் விஜயலக்ஷ்மிக்கு ப்ரணித்தாவின் எண்ணங்கள் எல்லாம் வேறு கோணத்தில் புரிய, அவளின் ஆள் மன ஏக்கங்கள் ஆசைகள் கூடவே மன அழுத்தம் என தான் யோசித்தாள்.
இப்படியே இருந்தால் இவள் வாழ்வு? இந்த எண்ணம் எந்த எல்லைக்கும் இவளை அழைத்து செல்லுமே? என்று தான் மனம் பதறியது.
“ப்ச்! சாரி சாரி விஜி! உனக்கு விஷ் பண்ண வந்துட்டு என்னென்னவோ பேசிட்டு இருக்கேன். ப்ளீஸ் ப்ளீஸ் இதை யார்கிட்டயும் சொல்லிடாத. நான் வேணும்னு பேசல.. ஏதோ ஒரு தாட்ல பேசிட்டேன். விட்ரு.. ப்ளீஸ்!” என்று வருத்தி ப்ரணித்தா கூற, அதையும் உண்மை என்றே நினைத்தாள் விஜயலக்ஷ்மி.
“உங்க மாமாகிட்ட பேசி இருக்கலாம் இல்ல ப்ரணி நீங்க?” கேட்டுவிட்டாள் விஜயலக்ஷ்மி. அவ்வளவு பாவமாய் இருந்தது அவளின் பேச்சு.
“அர்ஜுன் மாமாகிட்டயா?” என்று விரக்தியாய் புன்னகைத்தவள்,
“மாமாகிட்ட சொல்ல தான் நானும் நிறைய டைம் ட்ரை பண்ணேன். ஆனா பொண்ணா போய்ட்டேனே.. சட்டுன்னு பேச முடியல மாமாகிட்ட. இதோ இன்னைக்கு நாளைக்குன்னு நான் யோசிச்சுட்டு இருந்தேன்.. அதுக்குள்ள….” என்றவள்,
“மாமாக்கும் நான்னா ரொம்ப பிடிக்கும். ஒருவேளை நான் பேசிருந்தா அக்செப்ட் பண்ணிருப்பாங்களோ என்னவோ!” என்று சொல்ல, அதையும் தாங்க முடியவில்லை விஜயலக்ஷ்மிக்கு.
“எனக்கு என்னனு தலைவிதி இருக்கோ அது தானே நடக்கும். நீ எதுவும் மனசுல வச்சுக்காத! சாரி இந்த டைம்ல இதெல்லாம் உன்கிட்ட பேசி உன்னை கஷ்டப்படுத்திட்டேன்.. மாமா நல்லவர் தான். சரி நான் கிளம்புறேன்!” என்றவள் தன்னால் என்ன முடியுமோ என்னவெல்லாம் யோசித்து வைத்திருந்தாளோ அதையெல்லாம் கொட்டி முடித்து கிளம்பியும் விட, இருந்த உற்சாகமெல்லாம் மொத்தமாய் வடிந்து அங்கேயே அமர்ந்துவிட்டாள் விஜயலக்ஷ்மி.
அதன்பின் விஜயலக்ஷ்மி எண்ணம் வேறு எதிலும் ஈடுபடவில்லை.
அர்ஜுனை ஒரு பெண் விரும்பி இருக்கிறாள் என்பதே தனக்கு வலிக்கும் போது தான் அவனை ஏற்றுக் கொள்வது அவனை விரும்பிய பெண்ணுக்கும் வலிக்கும் தானே என்று தான் முதல் கோணலாய் விஜயலக்ஷ்மி நினைத்தது.
அவளின் ஏக்கமான பார்வையும் சோகமான கண்களும் என விஜயலக்ஷ்மியும் மனதில் இருந்து அகலவே இல்லை.
“அண்ணி! ப்ரணித்தாக்கு வேற யாரும் இல்லையா சொந்தம்னு?” அடுத்த நாள் அனன்யாவிடம் கேட்க,
“இருக்காங்களே. அவங்க அப்பாவோட அண்ணன். எனக்கு பெரிய தாய்மாமா. என் கல்யாணத்துல பார்த்திருப்பியே! அவங்களுக்கு ப்ரணித்தாவை கூட வச்சு பாத்துக்கணும்னு ஆசை தான். ஆனா அவளுக்கு தான் அங்க போக பிடிக்கல போல. என்ன இருந்தாலும் அம்மா அப்பா கூட இருக்குற மாதிரி வராது இல்ல!” என்று சாதாரணமாய் அனன்யா கூறியது கூட இன்னும் ப்ரணித்தாவின் மீது இரக்கம் கொள்ள வைத்தது விஜயலக்ஷ்மியை.
அவளின் சூழ்ச்சி அறியாத விஜயலக்ஷ்மி அவளின் நியாபகத்திலேயே இருந்து தன் நினைவுகளை மட்டும் சுமந்து வாழும் ஒருவனை நினைக்க மறந்தாள்.
காதல் எந்த மனிதனுள் யார் மூலம் எப்பொழுது வரும் என யார் அறிய முடியும்?
விஜயலக்ஷ்மிக்குமே அர்ஜுனை பிடித்துவிட்டது தான் திருமணம் என்று பேசிய பின். ஆனால் பிடித்தம் மட்டும் தானே? அந்த பெண்ணின் வாழ்க்கை அல்லவா அவன்? என்று தனக்காக நினைக்காமல் வேறொரு பெண்ணின் நலனுக்காக நினைத்து தன் வாழ்க்கை கேள்விக்குறியாக தானே அந்த செயலை அதன் விளைவை அறியாமல் செய்துவிட்டு நாட்டை விட்டும் சென்றிருந்தாள்.
தொடரும்..
error: Content is protected !!