Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Uncategorized

முத்தம் 1.2

நீண்டு விரிந்திருந்த அந்த சாலையின் கடைக் கோடியில் வரும் பொழுதே அந்த உருவத்தை அடையாளம் கண்டவன் கால்கள் முடுக்கியில் (accelerator) அழுத்தம் கொடுத்து தன் போல் வேகத்தை அதிகரித்தது.

அந்த உருவம் அருகில் நெருங்க நெருங்க மகிழுந்தின் உள்ளே எரியும் அந்த எரிபொருளை ஒத்த கொதிநிலையை அவன் அடைய அவனின் ஜாகுவாரின் ரத்தச் சிவப்பு நிறம் அவன் உடலும் பூசிக் கொண்டது.

மகிழுந்தின் வேகம் அதிகமிருக்க போக்குவரத்து சற்றே குறைந்திருந்த அந்த நேரத்தில் எதிரே வரும் அந்த உருவமும் இவனின் மகிழுந்தை அடையாளம் கண்டு கொண்டது.  

நொடி நேரமென்றாலும் கால்கள் சட்டென மகிழுந்தை விரைந்து நிறுத்த, வண்டியின் அதிர்வுக்கு இணையான அதிர்வு அந்த உருவத்தின் உடலிலும் கண்களிலும் இருக்க, அவ்வுருவத்தின் மேல் ஆழ்ந்த ஒரு பார்வையைப் பதித்தவன் அதற்குமேல் அங்கு நிற்காமல் வண்டியை அழுத்திக் கொண்டு கிளம்பி இருந்தான்.



Advertisement

கண்ட காட்சியின் விளைவாய் தான் அடுத்து செய்ய வேண்டியவைகளை மனதில் எண்ணிக் கொண்டவன், அந்த நொடி அதிர்விலுருந்து தன்னை சமன்படுத்தத் தொடங்கினான்.

இனி அவனது பயணம் அவன் சில காலத்திற்கு முன் தொலைந்த அந்த சவாலான பக்கங்களை நோக்கித் திரும்பும். 

 

Advertisement

**********************************************************************************

Advertisement

 

இங்கிலாந்தின் மான்செஸ்டெர் நகரம். இங்கு இது தொழில்நுட்ப அறிவியல் நகரம் என்றாலும் வெளிநாட்டினருக்கு இந்நகரம் ஒரு கல்வி நகரம். ஆம், பல நாட்டினரும் அந்த நகரத்தைத் தேடி வர முக்கியக் காரணம், இருநூறு ஆண்டுகளாக இயங்கும் அந்த தொன்மையான பல்கலைக் கழகம் தான்.

இயற்கை அழகின் அம்சங்களை எல்லாம் தன்னகத்தே கொண்ட நகரத்தின் முக்கிய வீதியான ஆக்ஸ்போர்டு வீதியில் உள்ள மான்செஸ்டர்  பல்கலைக் கழக வளாகத்தின் குடியிருப்புப் பகுதியில் குளிர் காலம் ஆதலால் இன்னும் இருள் நீடித்திருந்தது. அதனால் காலை எட்டு மணிக்கும் அப்பகுதி எங்கும் மின் விளக்குகளால் ஒளியூட்டப் பட்டிருந்தது.

Advertisement

குடியிருப்புப் பகுதியின் அந்த அமைதியான ஒற்றை படுக்கை அறை கொண்ட வீட்டின் உள்ளே இந்த ஏகாந்த வேளையில் தமிழ்ப் பாடலின் ஒலி மட்டுமே நிறைந்திருந்தது. 

‘உனைக் கண்டேன் கனிந்தேன் கலந்தேனே அட உன்னுள் உறைந்தேனே

இன்று என்னுள் மாற்றம் தந்தாயே உனை என்றும் மறவேனே’

கண்ணம்மாவின் காதல் வரிசையில் இப்பொழுது உன்னி கிருஷ்ணன் உருகிக் கொண்டிருந்தார். குளித்து முடித்து  வெளியே வந்தவளின் காதில் இந்த வரிகள் விழ, கைகள் மெல்ல உயர்ந்து வழக்கம் போல் மீண்டும் பாடலை ஆரம்பத்திலிருந்து ஒலிக்க விட்டது.

மனம் மௌனமாய் தன் கடந்த காலத்தை யோசிக்க, பாரதியின் புதுமைப் பெண்ணாய் அவள் வலம் வந்ததும், கவி பாடும் அந்த பாரதியின் கண்ணம்மாவாய் வாழ்ந்ததும் கண் முன் காட்சிகளாய் விரியத் தொடங்கியது.

காலையில் கண்ட கனவின் தாக்கம் வேறு, இன்னும் இன்னும் மனதை பழைய நினைவுகளின் புறம் திருப்ப, வாய் தன் போல் பாடல் வரிகளை அவளின் மனநிலைக்கு மேல் சோகமாய் உச்சரிக்கத் தொடங்கியது.

அவள் மனதின் இந்த வருத்தமெல்லாம் மேலும் மேலும் பாரமாய் அழுத்தக் கண்கள் மூடி ஒரு நிமிடம் நின்றவளின் இதயத்தில் இதே பாடல் உற்சாகமாய் காதோரம் காதலாய் அவன் குரலில் ஒலித்தது.

மீண்டும் மீண்டும் ஞாபக அடுக்குகளில் வந்து மோதிய நிகழ்வுகள் எல்லாம் அவளின் அன்றைய நாளை நிச்சயம் துவம்சம் செய்து விடும் என அறிந்தவள் சட்டென அவற்றை ஒதுக்கி விட்டு பல்கலைக் கழகத்திற்கு செல்லத் தயாராக தன் அலமாரியில் இருந்து தனக்கான உடைகளைத் தேர்ந்தெடுக்கத் தொடங்கினாள்.

இருள் அடர்ந்த நீல நிற  ஜீன்சும்  பல்கலைக் கழக முத்திரையிட்ட வெளிர்  நீல நிற போலோ ஷர்ட்டும் தான் அவளின் இன்றைய தேர்வு. அதை அணிய கையில் எடுத்துக் கொண்டு தனது அலமாரியை மூட எத்தனித்தவள் மறுபடியும் ஒரு முறை அலமாரியைக் காண அங்கே இருந்த ஆடைகள் எல்லாம் இரு பாலர் அணியும் வகை மட்டுமே (unisex  cloths).

உடைகளைக் கண்டவள் மனதின் அழுத்தம் ஏகத்திற்கும் அதிகரிக்க அலமாரியைக் காலால் அறைந்து சாற்றினாள்.  கையிலிருந்த உடைகளை வேகமாக அணிந்து கண்ணாடியில் தன்னையே ஒருமுறை பார்த்துக் கொண்டாள்.

ஆறடியில் நீண்ட நெடு நெடு உயரம். மெல்லிய ஆனால் சற்று இறுகிய உடல். பெண்மைக்கான எந்த வளைவு சுழிவுகளும் ஏற்ற இறக்கங்களும் இல்லாத நேர் உடல். அச்சம் நாணம் எனும் பெண்ணிய உணர்வுகள் எதற்கும் அர்த்தம் அறியாத தெளிந்த தீர்க்கமான ஞான செருக்குடன் கூடிய ‘பாரதி’ய முகம்.

அன்பும் அறிவும் மட்டுமே அவளின் அணிகலன். கண்ணம்மாவின் உணர்வுகளைக் கண்களில் மாத்திரமே தேக்கி இருக்கும் அவள் மஹிமா, மஹிமா வேணுகோபாலன். அனைவருக்கும் மஹி. குடும்பத்தின் செல்ல குட்டி ராட்சஷி.

அனைத்திற்கும் மேலாக அவள் அவனின் கண்ணம்மா. கவிபாரதியின் கண்ணம்மா இவள்.

“ஏன்டி இங்க என்ன பண்ற? எப்பவும் இப்படி ஆம்பள தடிச்சி மாதிரியே சுத்திகிட்டு திரியாம போ போயி வீட்டுக்குள்ள இரு. மணி ஏழாகப் போகுது இன்னும் வாசல்ல நின்னுகிட்டு வேடிக்கை பார்த்துகிட்டு இருக்க.”

பதினைந்து வயதில் அம்மா திட்டியது நினைவடுக்கில் வர, “ம்மா, இன்னைக்கு என்னைப் பார்க்க நிஜமாவே நான் அப்படிதான் இருக்கேன்” என்று எண்ணியவளுக்கு மீண்டும் இதே கண்ணம்மாவின் பாடல் வரிகள் காதுகளில் விழுந்து எண்ணத்தில் எழ, அதற்கு மேல் முடியாமல் பாடலை நிறுத்தியவள் காலை உணவைத் தேடிச் சமையல் கூடத்திற்கு வந்தாள்.

சுத்தமாய் துடைத்து வைத்த வெற்று சமையல் மேடையைக் காண அழையா விருந்தாளியாய் அவனின் நினைவுகள்.

“ஆறடில வளந்துட்டாலும் ஆரோக்கியமா இருக்கணும். அதுவும் பொண்ணுங்க ஆரோக்கியமா இல்லாட்டி குடும்ப பாரத்தைத் தாங்க முடியாதுடி” அவன் அன்று கண்ணடித்து சொல்லிய விதத்தை நினைக்க இன்றும் அவள் முகம் செம்மை சூழ்ந்தது.

ஏனோ இன்று மஹிமாவின் நினைவுகள் மொத்தமும் அவளின் நிகழ் காலத்திற்கு எதிராய் நிற்க, மனதில் மூண்ட எரிச்சலுடன்  தன் எண்ண அலைகளை மாற்றும் பொருட்டு அலைபேசியில் தன் ஜெயாத்தை எண்களை அழுத்தினாள்.

உறவுகள் புதிய பரிமாண வளர்ச்சி காண அவள் அத்தையுடனான உரையாடல்களிலும் தீப் பொறி தான் இப்பொழுதெல்லாம்.

இருந்தும் அவளின் இன்றைய உணர்வுகளை சமன் செய்து காலையில் கண்ட காட்சிகளை எல்லாம் புறந்தள்ள அவளால் முடிந்த சிறு முயற்சி, அவளது அத்தையுடன் சில மணித்துளிகள்.

ஆனால் நாம் நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால்?

அவர் அவளின் செல்ல ஜெயாத்தை தான் அன்றும் இன்றும். ஆனால் இன்று உறவுகளின் புது அர்த்ததில் அவர்களின் இந்த உறவும் புதிய ஒரு கோணத்தில் பயணிக்கிறது.

வாழ்க்கையின் சில சந்தர்ப்பங்களும் சூழ்நிலைகளும் நம்மின் பரிமாணங்களை வேறாகக் காட்டி விடுவதுடன் நம்மையும் வேறொரு பரிணாமத்தில் செயல்பட வைத்து விடுகிறது.

இத்தகைய பரிணாம மாற்றங்கள் தான் விதியோ? அல்லது நம்மில்  மாறுபடும் இந்தப் பரிமாணங்கள் தான் விதியோ? அதை முழுதாய் அறிந்தவர் யார்?

இதற்கான விடை, என்றுமே நம் மாற்றங்களுக்குப் பின்னான வாழ்க்கையில் மட்டுமே உள்ளது.

இன்றைய விதியின் மாற்றத்தால் இவளின் இந்த நாள் இனிய நாளாகுமா?

கண்ணம்மாவின் கவி பாடும் பாரதி வருவான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!