Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

முத்தாயி அம்மாச்சி

முத்தாயி அம்மாச்சி 11.2

அத்தியாயம் 11.2

மாலதிக்கு கூட பிறந்த அண்ணன்கள் இரண்டு பேர். அது போக பெரியப்பா சித்தப்பா பிள்ளைகள் என்று மேலும் மூன்று அண்ணன்கள்.



Advertisement

“மச்சினன் துணை இருந்தா போதும் சௌந்தர்.. யானை பலம் கிடைச்சிடும்.. அதுவுமில்லாமல் இந்த பொண்ணுக்கு அஞ்சு அண்ணன்கள். அவ்வளவு பாசக்கரங்களா இருக்காங்க” என்று திருமணத்திற்கு பெண் பார்த்ததும் தந்தை தன்னிடம் கூறியதை எண்ணி பார்த்துக்கொண்டார் சௌந்தர். ஆனால் அவர்களோ பாசத்தால் மூச்சு முட்ட வைக்கும் ரகத்தை சேர்ந்தவர்கள். அவர்களை பார்த்தாலே கந்தசாமி தெறித்து ஓடிவிடுவார். அதை எல்லாம் நினைத்து பார்த்தார் சௌந்தர். முகத்தில் தானாக புன்னகை மலர்ந்தது.

“என்ன மகனே மலரும் நினைவுகளோ?” என்றார் பின்னிருக்கையில் இருந்த கந்தசாமி.

Advertisement

Advertisement

மாலதியின் முறைப்பில் அமைதியாகிவிட்டனர் இருவரும்.

“ஆமா, டீச்சர், உங்க அம்மாவுக்கு முடியலைன்னு எந்த அண்ணன் போன் போட்டு சொன்னாப்படி?”

Advertisement

“எங்க பெரிய அண்ணன் தான் சொல்லுச்சு மாமா..” என்றார் மூக்கை உறிஞ்சியபடி.

“என்ன செய்யுதாம் உங்க அம்மாவுக்கு?”

“அண்ணனால பேசவே முடியல மாமா.. அம்மாவுக்கு முடியலைன்னதும் அண்ணனுக்கு அழுகை தான் வருது.. பேச்சே வரலை..”

“சரி உங்க சின்ன அண்ணனுக்கு போன் போட்டு கேட்கலாமே?”

“சின்ன அண்ணன் தான் அம்மாவை பார்க்குது.. எப்படி பேச?”

மாலதியின் சின்ன அண்ணன் மருது ஒரு மருத்துவர்.

“ஓ சரி சரி சரி..”

“நான் வேணா, உங்க அப்பாகிட்ட போன் போட்டு கேட்கவா மாலு?” என்றார் சௌந்தர்.

“பாவம் அப்பா.. அம்மாவுக்கு ஒன்னுனா அவரால தாங்க முடியுமா சொல்லுங்க? நாம போன் பண்ணி தொந்திரவு செய்ய வேண்டாம். நேர்ல போய் பார்த்துக்கலாம்”

“ஹுக்கும்” என்றார் கந்தாசாமி கடுப்பாக.

“நானே அம்மாவுக்கு முடியலன்னு வருத்தத்துல இருக்கேன், நீங்க ரெண்டு பேரும் என்னன்னா கேள்வியா கேட்டு வரீங்க. எங்க அம்மாவுக்காக கொஞ்சுமாவது பீல் பண்றீங்களா நீங்க?” என்று பொங்கிவிட்டார் மாலதி.

“கிறுக்கு குடும்பம்.. என்ன பண்ணுதுன்னே தெரியாம எப்படி பீல் பண்றது?” என்று மனதிற்குள் புலம்பிக்கொண்டார் கந்தசாமி.

ஒரு வழியாக மதுரைக்கு வந்து சேர்ந்தனர். மாலதியின் சின்ன அண்ணன்னின் தனியார் மருத்துவமனை முன்பாக வண்டியை நிறுத்தினார் சௌந்தர்.

“மாலதி….மாலதி..” என்று ஒரு கும்பல் ஓடி வந்து காரை சூழ்ந்து விட்டது.

மாலதியின் பெரியம்மா, சித்தி, அத்தை, மதனிகள் என்று ஒரு பட்டாளமே வந்து காரை சுற்றி நின்றுகொண்டனர்.

“இறங்கவாவது விடுவாய்ங்களா தெரியலையே?”, என்று நொந்துபோய் அமர்ந்திருந்தார் கந்தசாமி.

“நீ எப்படி மகனே இவ்வளவு கூல்லா இருக்க?” என்றார் கிசுகிசுப்பாக மகனிடம்.

“பழகிடுச்சு ப்பா..” என்றார் அலட்டிக்கொள்ளாமல்.

எப்படியோ ஒரு வழியாக இறங்கி விட்டனர் மூவரும்.

“மச்சான் கொடுங்க சாவியை நான் வண்டியை ஓரமா நிப்பாட்டிட்டு வரேன்” என்று ஒரு மச்சான் வந்து கார் சாவியை வாங்கி சென்றார்.

“அம்மா எப்படி இருக்காங்க அத்தாச்சி?” என்று ஒரு பெண்மணியிடம் கேட்டார் மாலதி.

“ஓவியமா பெத்த ஒத்த மகளை பார்க்கத்தான் உசுர கையில பிடிச்சுட்டு காத்துக்கிடக்கிறாக மதனி”

“நீ வாத்தா… உன்னை பார்த்தாலே அவஹளுக்கு சரியா போயிடும்” என்று ஒருவர் மாலதியின் கையை பிடித்து உள்ளே அழைத்து சென்றார். அவர் பின்னே பெண்கள் கூட்டமும் உள்ளே சென்றது.

“டேய் சௌந்தரு… நம்ம என்னடா செய்யறது இப்ப?”

“அப்பா.. இங்க வர வரைக்கும் மட்டும் தான் நாம என்ன செய்றது? எப்படி செய்றதுன்னு எல்லாம் யோசிக்கணும்..”

“அப்புறம்?”

“அப்புறம் பேசாம நின்னா போதும்.. அப்ப அப்ப தலையை ஆடிக்கணும்.. லைட்டா சிரிச்சுக்கணும்.. அவ்வளவு தான்”

“டேய்ய்ய்… “ என்று இவர் பல்லை கடிக்கவும்..

“மச்சான்.. சாப்பிட்டீங்களா இல்லையா?” என்று ஒருத்தர் கேட்க.

“மாமியாரை அம்மாவா பார்க்கிறவரு நம்ம மச்சன்.. அவங்க முடியாம ஆஸ்பத்திரில இருக்கிறப்ப பச்ச தண்ணி பல்லுல படுமா அவருக்கு..”

“அத சரிதான் அண்ணே.. மச்சான் பெரியம்மாவை பார்க்க துடுச்சிகிட்டு இல்ல இருக்காரு? அது புரியாம நாந்தேன் கிறுக்குப்பயலாட்டம் கேட்டுபுட்டேன்”

“இவன் ஒருத்தன் தானே சரியா கேட்டான்” என்று மகனின் காதை கடித்தார் கந்தசாமி.

“நீங்க வாங்க மச்சான் போய் பெரியாம்மவை பார்த்திட்டு வருவோம்”

சௌந்தர் திரும்பி தன் அப்பாவை பார்த்து, “வாங்கப்பா” என்று அழைக்கவும்,

“அடடே.. மாமா நீங்க வந்ததை நான் கவனிக்கவே இல்ல பாருங்களேன். இந்த கிறுக்கு பயல மன்னிச்சிபுடுங்க மாமா..”

“எங்க பெரியம்மா கூட பொறந்தவங்க ஒருத்தரும் இன்னும் வந்து எட்டி பார்க்கல. ஆனா நீங்க அவங்களை உங்க கூட பொறந்த பொறப்பா நினச்சு இப்படி பதறி ஓடி வந்திருக்கீங்களே? உங்க நல்ல மனசு யாருக்கு வரும் சொல்லுங்க..”

“அத சொல்லுங்க அண்ணே”

அதற்குள், “டேய் என்ன டா, மாப்பிள்ளையையும் சம்பந்தியையும் வாசல்லே வச்சு பேசிக்கிட்டு நிக்குறீங்க.. உள்ளாரா கூட்டிட்டு போங்க டா” என்று வந்தது பெரிய மீசை ஒன்னு.

“டேய் சௌந்தரு, நீ கணக்கு டீச்சர் கிட்ட ஸ்கோர் பண்ணனும்னு சாப்பிட கூட நிப்பாட்டம வண்டியை ஒட்டிக்கிட்டு வந்துட்டு, இந்த கும்பல்ல என்னை மாட்டி விட்டுட்டு அமைதியா நிக்குறியே.. இது எல்லாம் நல்லாவே இல்ல..” என்று மீண்டும் மகனின் காதை கடித்தார் கந்தசாமி.

ஒரு வழியாக ஐ சி யு வார்டிற்கு சென்று சேர்ந்தனர் இருவரும்.

மாலதி கையில் இளநீரை வைத்துக்கொண்டு ஸ்ட்ராவ் போட்டு குடித்து கொண்டிருந்தார்.

“பார்த்தியா சௌந்தரு, நம்மளை விட்டுட்டு டீச்சர்க்கு மட்டும் இளநீர் கொடுத்திருக்காங்க..” என்று பொருமினார்.

இவர்களை பார்த்தும் மருது இவர்களை நோக்கி “வாங்க மாமா, வாங்க மச்சான்” என்று வந்தார்.

“அத்தை எப்படி இருக்காங்க மச்சான்?” என்றார் சௌந்தர் அவரிடம்.

“அப்படியே தான் இருக்காங்க.. நேத்து ராத்திரி நெஞ்ச பிடிச்சிக்கிட்டு அப்படியே உக்கார்ந்துட்டாங்க.. இன்னும் ஒரு வார்த்தை பேசல தெரியுமா?” என்றார் மூக்கை உறிஞ்சு கொண்டே.

“கவலை படாதீங்க தம்பி சரி ஆயிடுவாங்க.. ஹார்ட் அட்டாக்கா?” என்றார் கந்தசாமி ஆறுதலாக.

“அய்யயோ.. அது எல்லாம் இல்லைங்க..”

“அப்ப கார்டியாக் அர்ரெஸ்ட்டா?” என்றாரே பார்க்கலாம், அவ்வளவு தான். இப்பொழுது மருது நெஞ்சை பிடிச்சு அமர்ந்துவிட்டார்.

“எங்க அம்மாவுக்கு பூ போல மனசுங்க மாமா.. நீங்க சொல்றது எல்லாம் வந்தா அவங்க எப்படி தாங்கிப்பாங்க சொல்லுங்க.. “

இதை கவனித்த மாலதி, கணவரை பாசமாக பார்க்கவும்,

“ஏம்ப்பா” என்று பார்த்து வைத்தார் சௌந்தர்.

“இனி நான் ஒன்னும் பேசலை” என்று அவர் சென்று ஒரு பக்கம் அமர்ந்து கொண்டார்.

அவருக்கு பசி வேறு காதை அடைத்தது.

“எல்லாம் இந்த பூபாலத்தை சொல்லணும். நேக்கா என்னை மாட்டி விட்டுட்டு தப்பிச்சிருச்சு” என்று மனதிற்குள் மனைவியை வறுத்தெடுத்துக் கொண்டிருந்தார்.

பின் என்ன செய்வது என்று யோசித்து சற்று தள்ளி அமர்ந்திருந்த மருமகளிடம்,

“மாலதி, சௌந்தருக்கு பசிக்குதாம்” என்றார் சத்தமாக.

மாலதி கணவரை அப்படியா? என்று பார்க்கவும், மச்சான்கள் அணி பதறிவிட்டது.

“மன்னிச்சிடுங்க மச்சான், மன்னிச்சிடுங்க மாமா.. பெரியம்மாவுக்கு உடம்பு முடியலைன்னு தெரிஞ்சதுல இருந்து கையும் ஓடல காலும் ஓடல… ஏம்மா மாலதி நீயாவது சொல்லி இருக்கணும் இல்ல?” என்று இவர்களிடம் ஆரம்பித்து மாலதி இடம் முடித்தனர்.

பின் அங்கேயே இட்லி கறிகுழம்பு என்று பரிமாறினார்கள்.

“உலகத்துல இப்படி ஒரு பாசக்காரய்ங்கள பார்க்கவே முடியாது சௌந்தரு” என்று கூறிக்கொண்டே ஒரு வழியாக காலை உணவை முடித்தனர்.

இனி அடுத்து என்னவோ? என்று கந்தசாமி தலையில் கை வைத்துக்கொண்டு அமர்ந்து விட்டார்.

“அம்மா கண்ணு முழிச்சிட்டாங்க..” என்று வந்து கூறினார் மருது

சூழல் பரபரப்பானது.

“மாலதி உன்னை தான் கேக்குறாங்க முதல்ல.. வாம்மா” என்றார் கமறிய குரலில்.

மாலதி அண்ணனுடன் சென்று அம்மாவை பார்த்து வந்தார். பின் வந்திருந்தவர்கள் ஒவ்வொருவராக உள்ளே சென்று பார்த்து வரும்படி மருது கூறினார்.

“அப்பா எங்க அண்ணா” என்றார் மாலதி.

அப்பொழுது தான் அனைவரும் அவரை தேடினார்கள்.

“மனுசன் கொஞ்ச நேரமாச்சும் நிம்மதியா இருக்கட்டுமே சௌந்தர். எதுக்கு அவரை தேடுறாங்க”

அது மாலதி காதில் விழுகவே அவர் திரும்பி இவர்களை முறைத்தார்.

“அப்பா கடையில இருங்காங்க தம்பி..” என்றார் பெரிய அண்ணன்.

வந்திருந்த கும்மல் ஒவ்வொருவராக பார்த்து பேசி ஆறுதல் கூறி என்று நேரம் சென்றது.

“டேய் சௌந்தரு ஒரு படத்துல ஒரு காமெடி வரும் இல்ல.. எவ்வளவு வேணா அடிங்க டா.. ஆனா எதுக்கு அடிக்கிறீங்கன்னு சொல்லிட்டு அடிங்கன்னு..”

சௌந்தருக்கு வந்த சிரிப்பை அடக்கவே முடியவில்லை.

ஒரு வழியாக கும்மல் குறைந்து, இவர்கள் மூவரும் மாலதியின் இரண்டு அண்ணாக்கள் மட்டுமே எஞ்சி இருந்தார்கள்.

“அம்மாவை நார்மல் ரூமுக்கு மாத்திடலாமாண்ணா?” என்றார் மாலதி.

“அம்மா ஒத்துக்க மாட்டேங்கிறாங்களே?”

“பேஷண்ட் கேட்டு தான் முடிவு செய்வீங்களா டாக்டர்?” என்றார் கந்தசாமி.

“அம்மா நம்ம கிட்ட முக்கியமா பேசணுமாம். எல்லாரும் போயிட்டாங்க, இப்ப வாங்க நாம உள்ளார போவோம்” என்று இவர்களை அழைத்துக்கொண்டு உள்ளே சென்றார் மருது.

“மாலதி… மாப்பிள்ளை.. சம்பந்தி.. நான் சாகறதுக்கு முன்ன ஒரு கடைசி ஆசை.. அது உங்க மூனு பேரு கையில தான் இருக்கு” என்றார் அவர் மெதுவாக.

“அப்பாடா ஒரு வழியா பாயிண்ட் டுக்கு வந்துட்டாங்க” என்று நினைத்துக்கொண்டு கவனிக்க தொடங்கினார் கந்தசாமி.

“நம்ம குடும்பத்துல நீ மட்டும் தான் பொம்பள புள்ள மாலதி..”

“அதுக்கு என்ன தங்கச்சி பண்றது? கடவுள் யாருக்கு என்ன கொடுக்கணும்னு முடிவு செஞ்சு அதான் கொடுப்பாரு” என்றார் கந்தசாமி இடை புகுந்து.

“அது இல்ல அண்ணே, மாலதிக்கு கல்யாணம் செஞ்சுட்டு தான் பசங்களுக்கு செஞ்சிருக்கு..”

“ஆமாம், அதுதானே நம்மூர்ல வழக்கமும்..”

“அதனால பசங்க பிள்ளைங்க எல்லாம் சின்ன சின்ன பிள்ளைங்க”

“அது எல்லாம் கடகடன்னு வளர்ந்துருவாங்க.. இப்ப இதுல என்ன பிரச்சனை?”

“மாமா அம்மாவை பேச விடுங்க மாமா” என்றார் மாலதி கடுப்பாகி.

“நான் கண்ணை மூடறதுக்குள்ள ஒரு பேத்தி கல்யாணத்தையாவது பார்க்கணும்னு ஆசையா இருக்கு”

“என்னம்மா சொல்ற?” என்றார் மாலதி அதிர்ச்சியாகி.

“நான் தூக்கி வளர்த்த புள்ள, எம் பெரிய பேத்தி கல்யாணத்தை தான் சொல்றேன்”

“யாருக்கு? எங்க முத்துக்கா?” என்றார் கந்தசாமி சத்தமாக.

அவரது எங்க முத்து என்ற அழைப்பிலே அவரது உரிமையை நிலை நாட்டிவிட்டார்.

மாலதியும் சௌந்தரும் அதிர்ச்சியாகி நின்று விட்டனர்.

“படிக்கிற பிள்ளை அத்தை, அதுக்குள்ள எப்படி?” என்றார் சௌந்தர்.

மகள் என்று வந்துவிட்டால் தகப்பன்களுக்கு மற்ற அனைவருமே இரண்டாம் பட்சம் தானே?

உடனே மூச்சு திணறல் வந்துவிட்டது … மூச்சை இழுத்து இழுத்து விட்டார் மாலதியின் அம்மா.

“அய்யோ அண்ணா அம்மவை பாரேன்” என்று அலறினார் மாலதி.

இவர்களை வெளியே அனுப்பி விட்டு ஆக்சிஜன் மாஸ்கை போட்டுவிட்டார் மருது..

இவர்களுது மருத்துவமனை என்பதால் இவர்கள் மூவருக்கும் அங்கேயே ஒரு அறையை ஒதுக்கி கொடுத்திருந்தார்கள்.

“சௌந்தர், நம்மளால இவங்களை எல்லாம் சமாளிக்க முடியாது.. நீ உன் அம்மாக்கு போனை போடு” என்றார் கந்தசாமி.

வீடியோ அழைப்பில் சௌந்தர் அழைக்கவும்,

“என்ன சௌந்தரு, எப்படி இருக்காங்க உன் மாமியார் ?” என்றார் நித்ய கல்யாணி.

அவர் என்ன பதில் சொல்வது என்று புரியாமல் மனைவியை பார்த்து வைத்தார்.

“என்ன மாலதி என்ன பிரச்சனை? இப்ப எப்படி இருக்காங்க?”

“அதை மட்டும் வந்ததுல இருந்து சொல்லவே இல்ல நித்யா” என்றார் கந்தசாமி.

“நெஞ்சு வலி வந்து சேர்த்திருக்காங்க.. ஐ சி யுல தான் இருக்காங்க அத்தை.. இப்ப அம்மா கடைசி ஆசை, முத்து கல்யாணத்தை பார்க்கணும்னு கேக்குறாங்க..” என்று நேரடியாக விஷயத்தை போட்டு உடைத்தார் மாலதி.

“இது என்ன சினிமாவா? உங்க அம்மா எதுக்கு இப்ப இந்த ட்ராமா போடுது?”

“அத்தை.. நிஜமாலுமே மூச்சு விட சிரம பட்டாங்க, உங்க பிள்ளை கிட்ட கேளுங்க..” என்றார் மூக்கை உறிஞ்சி கொண்டு.

“அது சரி மாலதி. அதுக்குன்னு டக்குனு எப்படி கல்யாணம் செய்ய முடியும்?”

“சரிதான் அத்தை.. ஆனாலும் என்ன பண்றதுனே புரியல..”

“சீக்கிரம் நல்லா குணமாகி வீட்டுக்கு வாங்க அம்மா.. நீங்க வந்து மாப்பிள்ளையை தெம்பா பாருங்கன்னு சொல்லு மாலதி..”

“நம்ம மறுத்து பேசி அவங்களுக்கு ஏதாவது ஆயிடுச்சுனா?”

“உங்க அப்பாகிட்ட சொல்லு அவருக்கு புரியும். அவர் உங்க அம்மாக்கிட்ட பக்குவமா எடுத்து சொல்லட்டும்”

“மனுசன் கண்ணுலயே சிக்கலை..” என்றார் கந்தசாமி.

அம்மா சொல்லுகையில் முதலில் அதிர்ச்சியாக இருந்தது தான். ஆனால் அம்மாவுக்காக என வரவும் மாலதி தடுமாறினார்.

மேலும் சிறிதுநேரம் பேசினார்கள். மாலதியின் தடுமாற்றம் அனைவர்க்கும் புரிந்தது.

“அது சரி மாலதி.. திடீர்ன்னு கல்யாணம்னா, மாப்பிள்ளைக்கு எங்க போறது?”

“——————”

“மாப்பிள்ளை என்ன கக்கத்துலயே வச்சுக்கிட்டா சுத்திகிட்டு இருக்கோம் சொல்லு..”

“டீச்சர் டீச்சர் இப்ப என்ன சொன்ன?” என்று திடீர் என்று ஆர்வமாய் கேட்டார் கந்தசாமி.

“நீங்க வேற சமய சந்தர்ப்பம் தெரியாம.. பேசாம இருங்க”

“இல்ல, நீ சொன்னதை திருப்பி சொல்லு..”

“திடீர்னு மாப்பிள்ளைக்கு எங்க போறதுன்னு கேட்டேன்..”

“அப்படி கேக்கல?”

“வேற எப்படி கேட்டேன்?”

“மாப்பிள்ளை என்ன கக்கத்தில வச்சுக்கிட்டா சுத்துறோம்னு கேட்ட..”

“அதுக்கு?”

“அன்னிக்கு என்ன சொன்ன? அந்த பட்டணத்து பையன என் கக்கத்தில வெச்சிக்கிட்டு சுத்தறேன்னு சொன்ன இல்ல..”

கணவன் என்ன சொல்ல வருகிறார் என்று புரிந்துவிட்டது அவருக்கு …

“சரி வருமா?” என்றார் கந்தசாமியிடம்..

“என்ன அத்தை என்ன சரிவருமா?” என்றார் மாலதி குழப்பமாக.

சௌந்தரும் கேள்வியாக பார்த்தார்.

“இங்க பாரு மாலதி சௌந்தர், இப்ப கல்யாணம் செய்யலாமான்னு நீங்க ரெண்டு பேரும் யோசிங்க.. அடுத்து முத்து என்ன சொல்லுவா செய்வான்னு சொல்ல முடியாது.. அப்படி கல்யாணம்னா, உன் சிநேகிதி பையனை பார்க்கலாம்னு உங்க மாமா சொல்றாரு..”

“யாரு? பூம்பாவை பையனையா?

“ஆமா அவனே தான்” என்றார் கந்தசாமி படு குஷியாக.

“அவனும் சின்ன பையன் மாமா.. பொண்ணும் சின்ன பொண்ணு..”

மாலதி கணவரை பார்த்தார். அவருக்கு இதில் உடன்பாடு இல்லை.

“சின்ன பொண்ணு மாலு..” என்றார்.

“அப்படி ஒன்னும் சின்ன பொண்ணு இல்லையே. இருபத்தி ஒரு வயசாகுது.. எனக்கு இருபது வயசுல கல்யாணம்” என்றார் மாலதி.

“ஏங்க புருஷன் பொண்டாட்டி பேசி ஒரு முடிவுக்கு வரட்டும். நீங்க கிளம்புங்க” என்று கணவரை அங்கிருந்து அனுப்பிவிட்டு கைபேசியை வைத்து விட்டார் நித்ய கல்யாணி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!