Skip to content
Post Views: 2,076
அத்தியாயம் 12
அன்று கல்லூரி முடிந்ததும், தன் கைப்பேசியை எடுத்து பார்த்தாள் முத்து. வீட்டில் இருந்து ஒரு அழைப்பும் வந்திருக்கவில்லை.
Advertisement
‘இந்த டீச்சருக்கு கொஞ்சமாச்சும் பொறுப்பு இருக்கா? பாவம் பொண்ணு, சென்னையில தனியா இருக்குதே.. காலையில அம்மாச்சிக்கு சீரியஸ்ன்னு போன் போட்டோமே! அது என்ன ஏதுன்னு கவலையா இருக்கும்… ஒரு அப்டேட் கொடுக்கணும்னு இருக்கா?’ என்று மனதிற்குள் அன்னையை திட்டிக்கொண்டே, வீட்டு தொலைபேசி எண்ணிற்கு அழைத்தாள், வீட்டில் யாரவது இருந்தால் அவர்களிடம் கேட்டுக்கொள்வோம் என்று.
“ஹலோ.. என்ன முத்து காலேஜ் முடிஞ்சுதா?” என்று இலகுவாகவே பேசினார் நித்யகல்யாணி.
Advertisement
Advertisement
அப்பத்தாவின் குரல் சாதரணமாக இருப்பதை கொண்டே பெரிய பிரச்சனை இல்லை என்று புரிந்து கொண்டாள்.
“இப்ப தான் அப்பத்தா முடிஞ்சுது, இனி தான் ரூமுக்கு கிளம்பணும். அதான் வண்டிய எடுக்க முன்ன அம்மாச்சிக்கு எப்படி இருக்குன்னு கேட்க போன் போட்டேன்”
Advertisement
“இன்னும் ஐசியூல தான் இருக்காங்களாம். உங்க அய்யா, அப்பா அம்மாகூட போயிருக்காங்க. நான் இங்கன நம்ம வீட்ல இருக்கேன் முத்து..”
“ஓ, சரி அப்பத்தா.. அம்மா நான் கிளம்பி வரணுமான்னு சொல்றதா சொன்னாங்க.. என்ன செய்ய?”
“இப்பொழுதைக்கு உடனே கிளம்பவேண்டாம். நாளைக்கு வெள்ளிக்கிழமை காலேஜ் முடிச்சிட்டு எப்படி இருந்தாலும் ஒரு எட்டு வந்துட்டு போயிடு டா..”
“ஓகே அப்பத்தா, அப்ப நான் ரூமுக்கு போயிட்டு நாளைக்கு நைட்டுக்கு டிக்கெட் போட்டுடறேன்…. மதுரைக்கு போடவா? தஞ்சாவூருக்கு போடவா?”
“நீ ரூமுக்கு போ, நான் அதுக்குள்ள உங்க அய்யாக்கு போன் பண்ணி அங்கத்தைய நிலவரத்தை கேட்டுட்டு சொல்றேன்”
“சரி அப்பத்தா.. பாய்..”
அப்பத்தாவிடம் பேசி முடித்துவிட்டு, தன் வண்டியை எடுத்துக்கொண்டு புறப்பட்டாள்.
ஒரு டீ குடிச்சா நல்லா இருக்கும் என்று தோன்றவே, “நான் வந்து உங்களை இன்னும் அரை மணி நேரத்துல பிக் அப் பண்ணிக்கிறேன்” என்று ஸ்ரீகாந்திற்கு ஒரு குறுந்செய்தியை தட்டிவிட்டு ஸ்ரீகாந்த்தின் அலுவலகம் பக்கம் வண்டியை விட்டாள்.
அவர்கள் அலுவகத்திற்கு பக்கத்தில் உள்ள கடையில் டீ மிகவும் நன்றாக இருக்கும். சூடாக இந்நேரம் சமோசா போடுவார்கள். மிகவும் சுவையாக இருக்கும். இவள் டீயுடன் இரண்டு சமோசாக்களை உள்ளே தள்ளிவிட்டு, காதம்பரி வீட்டிற்கும் பார்சல் வாங்கிக்கொண்டு ஸ்ரீகாந்திற்காக காத்துக்கொண்டிருந்தாள்.
“நானே வந்துப்பேன் ம்மா, நீ எதுக்கு அலையுற?”
“டீயும் சமோசாவும் சாப்பிடனும் போல இருந்துச்சு.. அதான் அப்படியே உங்களையும் கூட்டிட்டு போய்டலாம்னு தான்.. வாங்க வாங்க, சூடு ஆறதுக்குள்ள கேசவப்பாக்கு கொடுக்கணும்”
பின் இருவரும் அங்கிருந்து கிளம்பினார்கள்.
இவர்கள் சென்று கொண்டிருக்கையில், இவர்களை முந்திக்கொண்டு ஒரு புட் டெலிவரி பைக் ஒன்று வேகமாக சென்றது.
“ஏன் தான் இப்படி வேகமா போறாங்களோ?” என்று அலுத்துக்கொண்டார் ஸ்ரீகாந்த்.
“பத்து நிமிசத்துல டெலிவரி செய்றோம்.. இருபது நிமிஷத்துல உங்களுக்கு தேவையானது உங்க கையிலன்னு.. எல்லாம் பிசினஸ் தான் சார்”
“அவசர உலகத்துல நாமும் உபயோகிக்க தானே செய்றோம்”
“முதல்ல இது எல்லாம் நிறுத்தணும் தெரியுமா? என்ன வேணும்னு கொஞ்ச நேரத்துக்கு முன்ன யோசிச்சு ஆர்டர் பண்ணி, கொஞ்சம் வெயிட் பண்ணி வாங்க முடியாதா சொல்லுங்க? எல்லாம் உடனுக்குடன் வேணும்.. சாப்பிடற பீட்ஸால இருந்து டைவோர்ஸ் வரைக்கும்… உடனுக்குடன் தான்”
“இது சிட்டி ம்மா.. யாருக்கும் நேரமில்லை.. உங்க ஊரு மாதிரியா? நிறுத்தி நிதானமா எல்லாம் செய்ய முடியாது”
“ஏன் லட்சுமி சார், எங்க கிராமத்துல ஒரு நாளுக்கு இருபத்தி நாலு மணி நேரம் இருக்கும்.. இங்க உங்க சிட்டில எப்படி? இருபது மணி நேரம் தானா?”
‘இவ கிட்ட போய் வாயை கொடுத்தோமே’ என்று அவர் அமைதியாக இருந்துக் கொண்டார்.
இவர்கள் சென்று கொண்டிருக்கையில், இவர்கள் கண்ணுக்கு முன்னே ஒரு பென்ஸ் கார் ராங் சைட்ல வந்து, அந்த டெலிவரி பையனின் பைக்கை மோதி இருந்தது.
“அச்சச்சோ” என்று முத்து அந்த சம்பவ இடத்திற்கு விரைந்து தன் வண்டியை செலுத்தினாள்.
தவறு முற்றும் முழுவதும் அந்த கார் காரனின் மேலே தான்.
ஆனால் அவனோ, கீழே இறங்கி தன் காரையே சுத்தி சுத்தி பார்த்துக்கொண்டிருந்தான். காரின் ஒரு புறம் சிறிதாக ஒரு கீறல் மட்டுமே இருந்தது.
அந்த டெலிவரி பையன் காலின் மேலே பைக் எசகுபிசகாக விழுந்திருந்தது.
“அறிவு இருக்கா மேன்.. இந்த காரோட மதிப்பு தெரியுமா? இந்த கீறல் சரி செய்ய எத்தனை லட்சம் செலவாகும் தெரியுமா? டெலிவரி பசங்களால தான் இப்ப எல்லாம் ஆக்ஸிடெண்ட் அதிகமாவே ஆகுது..” என்று மொத்த குற்றமும் அவன் மேலே என்பது போல கத்த தொடங்கினான்.
கூட்டம் கூடியது தவிர யாரும் பேசவில்லை.
முத்தாயி தன் வண்டியை ஓரமாக நிறுத்திவிட்டு இறங்கி அருகில் சென்றாள்.
“நமக்கு எதுக்கு ம்மா இந்த பிரச்சனை எல்லாம், வா நாம போயிடலாம் “ என்று கெஞ்சினார் ஸ்ரீகாந்த்.
அவர் பொதுவாக இது போல எல்லாம் வேடிக்கையும் பார்க்க மாட்டார், போராடவும் மாட்டார். தான் உண்டு தன் வேலை உண்டு என்ற ரகம்.
“என்ன எல்லாரும் வேடிக்கை பார்த்துட்டு நின்னுட்டு இருக்கீங்க.. அந்த ஆள் காலில் நல்ல அடி போல, யாராவது வந்து வண்டியை பிடிங்க” என்று ஓங்கி ஒரு குரல் கொடுத்து கொண்டே அருகில் சென்றாள் முத்து.
கூட்டத்தில் இருந்து இளஞன் ஒருவன் முன் வந்தான். அவனும் முத்துவும் சேர்ந்து வண்டியை தூக்கினார்கள்.
பார்த்தாலே தெரிந்தது அவனது கால் பிராக்சர் என்று. கால் புசு புசுவென்று வீங்க தொடங்கி இருந்தது.
“ஹலோ மிஸ்டர், வண்டிய இடிச்சிட்டு பார்த்துட்டு நிக்குறீங்க.. பிடிங்க ஹாஸ்பிட்டல் கூட்டிட்டு போகலாம்” என்றாள் அந்த பென்ஸ் காரனிடம் அவன் காரை காட்டி.
“ஹூ ஆர் யூ? என் காரை பாரு… டேமேஜ்க்கு அவன்கிட்ட காசு வாங்கி கொடு , நான் போயிட்டே இருப்பேன்.. கண்டவங்களையும் வண்டியில ஏத்த முடியுமா?”
“என்ன மிஸ்டர்? இடிச்சிட்டு இஷ்டத்துக்கு பேசுற?”
“மேடம் , இந்த ஆள் மயக்கமாயிடுவாரு போல” என்றான் அந்த இளைஞன் இடைபுகுந்து.
“ஷிட்.. இன்னிக்கு தண்ட செலவுன்னு நினைச்சுக்கிறேன்” என்று அந்த ஆள் காரினுள் ஏறச் சென்றான்.
முத்தாயி அவனுக்கு முன் ஓடி சென்று காரில் இருந்து சாவியை எடுத்துவிட்டாள். காரின் நம்பர் ப்ளேட், காரின் டேமேஜ் என்று அவன் கூறி கொண்டிருந்த கீறல், அவனின் முகம், பைக், காலை அசைக்க முடியாமல் இருந்த பையன் என்று அனைத்தயும் தன் கைப்கேசியில் நிமிடத்தில் புகைப்படம் எடுத்துக்கொண்டாள்.
அந்த கார் காரனுக்கு பதட்டம் வரத்தொடங்கியது.
“யார் ம்மா நீ, தேவை இல்லாம பிரச்சனை பண்ணிக்கிட்டு…பணம் பறிக்க பார்க்கிறீர்களா? என்ன எல்லாரும் கூட்டாளிங்களா.. நான் வண்டிய இடிச்சிட்டு விழுகிற மாதிரி விழுறேன், நீ பின்னாடியே வான்னு சொல்லி வச்சிருந்தானா.. வாங்க போலீஸ் கிட்ட போலாம். பணக்காரவங்களை பார்த்தா போதுமே”
என்று ஏகத்திற்கும் பேசினான்.
அப்படியும் இருக்குமோ என்று கூட்டம் யோசிக்க தொடங்கியது.
‘இது எல்லாம் இந்த பொண்ணுக்கு தேவையா?’ என்று ஸ்ரீகாந்த்திற்கு வேர்க்க ஆர்மபித்துவிட்டது.
“ரொம்ப சரியா சொன்ன, போலீஸ்க்கு போலாம். நாங்க பின்னாடி பார்த்துட்டு தான் வந்தோம் மிஸ்டர். ராங் சைடுல வந்தது நீ, நீ தான் அவனை இடிச்ச. தாராளமா போலீஸ் கம்பளைண்ட் கொடுப்போம்” என்று கூறிக்கொண்டே கைப்பேசியை எடுத்தாள்.
“என்ன மரியாதை இல்லாம பேசுற, அடிச்சு முகத்தை எல்லாம் கிழிச்சு விட்டுருவேன் பார்த்துக்க” என்று எகிறினான் கார்க்காரன்.
“அடிடா பார்ப்போம்” என்று சுடிதார் கையை மடித்து கொண்டு முன்னே சென்றாள்.
அந்த ஆள் அடிக்க கையை தான் ஒங்கினான், அதற்குள் மின்னலென முத்துவின் கை அவன் கன்னத்தை பதம் பார்த்திருந்தது.
“யார்கிட்ட? இனி நீ எப்படி போறேன்னு நானும் பார்க்கிறேன். நான் யாருனு தெரியுமா?”
“நீ யாராவேனா இரு.. என் மேலேயா கையை வைக்கிற? எங்க அப்பா யாருன்னு தெரியுமா?”
“வந்துட்டாருய்யா அப்பாடக்கரு.. உங்க அப்பா யாருன்னு போலீஸ் கிட்டயே சொல்லுய்யா”
“போலீஸ் வந்தா எப்படி சமாளிக்கணும்னு எனக்கு தெரியும்” என்றான் அப்பொழுதும் கெத்தாக.
“போலீஸ் கமிஷனர்ரே எங்க சித்தப்பா தான். பார்ப்போம் நீ எப்படி சமாளிக்கிறேன்னு”
“அதான் பொண்ணு தைரியமா அடிச்சிருக்கு” என்று கூட்டத்தில் ஒருவர் கூறவும்.
“உங்க அப்பா யாருன்னு கேட்ட இல்ல, அவர்கிட்டயும் எங்க சித்தப்பாவையே பேச சொல்றேன்”
“இங்க பாருங்க மேடம், போலீஸ் கேஸுன்னு போனா ரெண்டு பக்கமும் கஷ்டம்” என்று இறங்கி வந்தான் இப்பொழுது.
“எங்களுக்கு என்ன கஷ்டம்? உனக்கு என்ன மிஸ்டர் இன்சூரன்ஸ் இருக்கும். பாவம் இந்த பையன் என்ன செய்வான்? போலீஸ் கேஸ் கொடுக்காம நாங்க நகர மாட்டோம்” என்றாள் முத்தாயி.
“மேடம் நானே அந்த பையன் மெடிக்கல் செலவை முழுசா ஏத்துக்கிறேன். போலீஸ் கேஸ் எல்லாம் அலைய முடியாது” என்று இறங்கி வந்தான்.
“அந்த பையனை நம்பி ஒரு குடும்பம் இருக்கும் மிஸ்டர். உங்களை மாதிரி அப்பா காசுல கார் வாங்கி கெத்தா சுத்துறவர் இல்ல.. உங்க கவனக்குறைவால பெரிய பாதிப்பு அவருக்கு தான்”
“நியாயமா நான் செட்டில் பண்ணிடறேன்”
“சரி, இப்ப முதல்ல இவரை ஹாஸ்ப்பிட்டல் கூட்டிட்டு போகணும்”
கார்காரன் தடுமாறவும், முதலில் உதவ வந்த இளைஞன் முன் வந்தான்.
அவன் நண்பர்கள் மூவரை அழைத்து கொண்டான். கல்லூரி மாணவர்கள். அவர்களிடம் பொறுப்புகளை ஒப்படைத்துவிட்டு, எல்லாம் சரி ஆனதும் தனக்கு அழைத்து சொல்லுமாறு கைப்பேசி எண்ணை கொடுத்துவிட்டு,
“உங்க கார் நம்பர் எல்லாம் நோட்டட்.. சொன்னதை செய்யலைனா, எல்லா ப்ரூஃபும் இருக்கு.. அப்புறம் லைசன்ஸ் கான்செல் ஆயிடும் பார்த்துக்கோங்க..” என்று கூறி அவனிடம் கார் சாவியை கொடுத்து விட்டே கிளம்பினாள்.
“அப்பாடா” என்று ஸ்ரீகாந்த் மூச்சை இழுத்து விட்டார். பின் இவர்கள் வண்டியை எடுத்துக்கொண்டு கிளம்பினார்கள்.
உர்ரென்று வந்தார் ஸ்ரீகாந்த்.
“என்ன சார் அமைதியா வர்றீங்க?”
“இத்தனை நாளா பழகுறோம், உங்க சித்தப்பா கமிஷ்னர்ன்னு சொல்லவே இல்ல”
“எங்க சித்தப்பாக்கு தேவை இல்லாம அவர் பேரை யூஸ் பண்றது பிடிக்காது சார். ரொம்ப நேர்மையா இருக்கணும்னு நினைப்பாரு சார். அதான் நான் சொல்லல. தப்பா நினைக்காதீங்க சார்”
“ஓ சரிம்மா”
“அவரோட நேர்மையை நாம மதிக்கணும் இல்லையா?”
“ஆமா ஆமா, அது சரி.. ஆனா நீ ஏன் போலீஸ் கம்பளைண்ட் கொடுக்காம பிரச்னையை டீல் பண்ண? நீயே லா ஸ்டுடெண்ட்.. சட்டத்துக்கு விரோதமான செயல் தானே இது”
“அப்படி எல்லாம் இல்ல சார். ஆப் தி கோர்ட் பல கேஸ் முடிக்க படும் சார். எதுல நல்லது நிறைய இருக்கோ, அதை பால்லொவ் பண்ண வேண்டியது தானே?”
“என்னமோ போ.. நான் பாட்டுக்கு நிம்மதியா பஸ்ல வந்திருப்பேன். உன் கூட வந்து டென்ஷன் தான்” என்று சலித்து கொண்டார்.
“அய்யய்யோ சார்..”
“என்னம்மா?”
“நடந்த கலவரத்துல சமோசா ஆறி போயிருக்கும் சார்”
“ரொம்ப முக்கியம்..”
பின் சமோசாவுடன் ஸ்ரீகாத்ந்தை இறக்கிவிட்டு, தன் பிஜிக்கு சென்றுவிட்டாள்.
“எங்களுக்காக வாங்கிட்டு வந்தியா டா ஸ்ரீகா” என்று காதம்பரி ஆசையாக சமோசாவை வாங்கவும், ஸ்ரீகாந்த்த் இனி இப்படி சிறு சிறு பொருட்களை வாங்கி கொண்டு வர வேண்டு என்று நினைத்து கொண்டார்.
“உங்க பிரண்ட் அந்த முத்து பொண்ணு தான் வாங்கி கொடுத்துச்சு… “
பின், மூவரும் சேர்ந்து அமர்ந்து டீயுடன் சமோசாவை உண்டார்கள்.
“இன்னிக்கு என்ன நடந்துச்சு தெரியுமா?” என்று ஸ்ரீகாந்த் கதை கதையாக கூறினார்.
இதுக்கே இப்படி வாயை பிளக்கிற? நான் ட்ரெயின்ல போனப்ப என்ன நடந்துச்சு தெரியுமா? என்று காதம்பரி அவர் பங்குக்கு கதை கூறினார்.
“எல்லாம் கமிஷனர் சொந்த காரர் இல்ல சித்தி.. அந்த தைரியமா இருக்கும்..”
“இருக்கும் இருக்கும்.. இருந்தாலும் செம கெத்து தான்டா அந்த பொண்ணு..”
————
“அப்பத்தா ரூமுக்கு வந்துட்டேன்..” என்று நித்யகல்யாணிக்கு அழைத்தாள்.
“வழியில பஞ்சாயத்தை கூட்டிட்டியோ? இவ்வளவு நேரம் ஆயிடுச்சு?”
“இங்க நர்ஸ் அம்மா வீட்டுக்கு போய்ட்டு வந்தேன்.. சும்மா எதாவது சொல்லாதீங்க அப்பத்தா.. இப்ப டிக்கெட் போடவா வேண்டாமா?”
“உங்க அம்மாச்சியை சாதா ரூமுக்கு மாத்திட்டாங்களாம். உனக்கு பார்க்கணும்னா வந்துட்டு போ. இல்லைன்னா இப்ப அவசரம் இல்லைன்னு உங்க அய்யா சொல்ல சொன்னாரு”
“நீங்க எல்லாரும் பார்த்துட்டா நான் பார்த்த மாதிரி தானே அப்பத்தா.. இந்த வாரம் ஒரு சீனியர் லாயரை பார்க்க போகணும். அடுத்த செமஸ்டர் ப்ராஜெக்ட் இல்ல?”
“அப்ப, அந்த வேலையை பாரு முத்து. பின்னாடி லீவ் தேவை பட்டாலும் படும். தேவை இல்லாம இனி லீவ் எடுக்காத”
“லீவ் எதுக்கு தேவை படும்?”
“உங்க அய்யாவுக்கும் உனக்கும் பதில் சொல்லியே என் ஆயுசுல பாதி போயிடும் போல.. போய் வேலையை பாரு, நாங்க சாப்பிட போறோம்”
“அய்யோ, நீயா அப்பத்தா சமைச்ச? பாவம் ரம்யாவும் ப்ரேமும்”
“வந்து நெத்திலி மீன் குழம்பு வச்சு கொடுன்னு கேட்ப இல்ல, அப்ப பார்த்துகிறேன் உன்ன” என்று போனை வைத்துவிட்டார்.
————-
முதன்முறையாக சௌந்தருக்கும் மாலதிக்கும் சண்டை இந்த திருமண விஷயத்தை முன்னிட்டு.
“எங்க அம்மா இல்லைனா நான் எப்படி மூனு குழந்தைகளுக்கு அப்புறமும் வேலைக்கு போயிருக்க முடியும் சொல்லுங்க” என்று எமோஷனலாக பேசினார் மாலதி.
“அதுக்கும் இப்ப முத்துக்கு கல்யாணம் செய்றதுக்கும் என்ன சம்பந்தம்..” என்று சௌந்தர் சென்று அவர் மாமனாரிடம் புகார் வாசித்து விட்டார்.
மிகவும் நேர்மையான மனிதர் அவர்.
மாப்பிள்ளை அழைத்து விஷயத்தை கூறவும் தான் மருத்துவமனைக்கு வந்தார். மனைவி மகள் மகன்கள் என்று அனைவரையும் விலாசி விட்டார்.
“உங்க அம்மா கொழுப்பெடுத்து போய் அரை கிலோ கோதுமை அல்வாவை ஒரே மூச்சா உள்ளே தள்ளிருக்கா.. அதுல பிரஷர் கூடி போய் மயக்கமாகியிருக்கா. அல்வா கிண்டையிலே நான் சொன்னேன்.. அளவா சாப்பிடுன்னு.. கேட்டாத்தானே? அதை சாக்கா வச்சு ட்ராமாவா போடறீங்க எல்லாரும்”
கந்தசாமி மாலதியின் அண்ணன்கள் இருவரையும் பார்த்து,
“இப்படி முழு பூசணிக்காவை அல்வாவுல மறைச்சு புட்டீங்களே டா” என்றார் முனுமுனுப்பாக.
“உங்க அம்மாவுக்கு தான் கூறில்லைனா, உனக்கு எங்க போச்சு புத்தி.. நீ எல்லாம் எப்படி டீச்சரா இருக்க? வயசானா ப்ரெஷர் சுகர் எல்லாம் வரத்தானே செய்யும். அதுல மயக்கம் போட்டா, உடனே படிக்கிற பிள்ளைக்கு கல்யாணம் பேசுவீங்களா?” என்று மாலதியையும் வெளுத்து வாங்கி இருந்தார்.
அப்பாவிடம் இப்படி மாட்டி விட்டுவிட்டார் என்று கணவர் மீது ஏக கடுப்பு மாலதிக்கு.
“இல்லைங்க, சம்பந்தி கூட ஒரு நல்ல சம்பந்தம் இருக்கிறதா சொன்னாங்க” என்று மாலதியின் அம்மா கந்தசாமியையும் உள்ளே இழுத்து விட்டார்.
“ஏன் மச்சான் உங்க மேல நான் எம்புட்டு மதிப்பு வச்சிருந்தேன். இவங்க கூட சேர்ந்து நீங்களுமா நாட்டியம் ஆடுறீங்க?” என்றார் அவர் கந்தசாமியை பார்த்து.
“என்னது நாட்டியமா?” என்று நெஞ்சை பிடித்துக்கொண்டு நின்றுவிட்டார் அவர்.
மகனை முறைத்துவிட்டு,
“அது இல்லைங்க…
அம்மா உயிரை கையில பிடிச்சிருக்கிறதா உங்க டாக்டர் புள்ள சொன்னாருங்க…
கடைசி ஆசைன்னு உங்க சம்சாரம் மூச்சு தினற சொன்னாங்க…
மாப்பிள்ளை எப்படி திடீர்ன்னு கிடைக்கும்ன்னு எங்க வீட்டு பெரிய டீச்சரும் சின்ன டீச்சரும் கவலை பட்டாங்க…
ஏதாவது செய்யுங்கன்னு எல்லாரும் என்னை நெருக்கடிக்கவும், தான் என் சொந்தத்துல தங்கமான ஒரு புள்ள இருந்தது நியாபகம் வந்துச்சு.. அதை சொன்னேன்.. அம்புட்டுத்தேன் “
மாலதியின் அப்பா மனைவி மக்களை முறைத்து பார்க்கவும் அனைவரும் இந்த பூனையும் பால் குடிக்குமா என்பது போல முகத்தை வைத்துக்கொண்டார்கள்.
“என்ன சௌந்தரு… மொத்த குடும்பத்தையும் நாடக கம்பெனில சேர்த்து விட்ரலாம் போலவே?” என்று மகனிடம் கிசுகிசுத்தார்.
“நான் உண்மையை சொல்லிடறேன்” என்றார் மாலதியின் அம்மா.
“ஆத்தா.. மகராசி.. முதல்ல இந்த நாடகத்தை முடிச்சிட்டு வீடு வந்து சேரு.. அடுத்த நாடகத்தை அங்க வந்து போடு..” என்றார் மாலதியின் அப்பா கடுப்பாக.
“பின் மகனிடம் திரும்பி, சாதா வார்டுக்கு மாத்து உங்க ஆத்தாவை.. கொஞ்சமாச்சும் டாக்டர் மாதிரி நடந்துக்கோ” என்று மகனிடம் கடித்துவிட்டு சௌந்தர் பக்கம் திரும்பினார்.
“அப்ப நாங்க கிளம்பவா மாமா?” என்றார் சௌந்தர்.
“சரிங்க மாப்பிள்ளை… பார்த்து கிளம்புங்க.. மாலதி அம்மாவுக்கு ஒன்னும் பெருசா இல்லை, விசனப்படாம கிளம்பும்மா” என்று அவர் மகளிடம் சமாதானமாக கூறவும் மாலதி கந்தசாமி சௌந்தர் மூவரும் தஞ்சாவூருக்கு கிளம்பினார்கள்.
இடையில் கந்தசாமி மனைவிக்கு அழைத்து விஷயத்தை சுருக்கமாக கூறி இருந்தார். அதனாலே முத்துவை வர வேண்டாம் என்று விட்டார் நித்ய கல்யாணி.
கிளம்புவதற்கு முன் மாலதியிடம் அவர் அம்மா தனியாக பேசி இருந்தார்.
“எனக்கு என்னமோ முத்துவுக்கு உடனே கல்யாணம் செய்யணும்னு உள்ளுணர்வு செல்லுது மாலு.. அதை சொன்னா யாரும் கேட்க மாட்டாங்கன்னு தான் இந்த சூல்நிலையை பயன்படுத்தி சொன்னேன். உங்க மாமாவும் உடனே நல்ல பையன் இருக்கிறதா சொல்றாரு… நீ கல்யாணத்துக்கு பாரும்மா” என்று கூறி இருந்தார்.
மாலதி அமைதியாக அம்மா கூறியதை அசை போட்டு கொண்டிருந்தார். சௌந்தர் எப்படியோ பிரச்சனையை முடித்தாகிவிட்டது என்று அமைதியாக வந்தார்.
கந்தசாமியின் அனுபவ அறிவிற்கு புரிந்துவிட்டது. விரைவில் கல்யாண வைபோகம் என்று.
வாழ்வென்னும் சதுரங்க ஆட்டத்தில் இனி அடுத்தடுத்து யார் யார் எப்படி காய் நகர்த்துவார்கள் என்று சிந்தித்து கொண்டு அவரும் அமைதியாக வந்தார்.
error: Content is protected !!