Skip to content
Post Views: 1,951
விழாக் காணுமே வானம் 18
வத்சலா ராகவன் – மது ஹனி
மனங்களின் மகிழ்ச்சியில் விழாக் காணுமே வானம்!
Advertisement
அன்று டென்னிஸ் ரசிகர்களுக்கு மாபெரும் திருவிழா. கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்குப் பின் அவர்களின் அபிமான டென்னிஸ் ஸ்டார்ஸ் ஸ்வாதி மற்றும் அர்ஜூன் டென்னிஸ் ஆடுவதை கண்குளிர ரசிக்கக் காத்திருந்தனர்.
ஏழு வயதிற்குப் பிறகு இருவரும் போட்டிப் போடுவது அவர்களின் ரசிகர்களுக்கு திகட்டாத விருந்து.
டிரஸ்டிற்காக நடத்தப்படும் ப்ரண்ட்ஸ்ஷிப் மேட்ச்சாக இருந்த போதிலும் யார் வெற்றி பெறுவார்கள் என்று ரசிகர்கள் மிகுந்த எதிர்ப்பார்ப்பு கொண்டிருந்தனர்.
Advertisement
ஸ்டேடியம் முழுவதுமே ரசிகர்களால் நிரம்பி வழிந்தது.
Advertisement
போட்டியை ஹோஸ்ட் செய்யும் பொறுப்பை தனதாக்கிக் கொண்ட வைஷாலி சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்து வைத்தாள். அங்கே வந்த சிறப்பு விருந்தினரை எதிர்பார்த்திராத ரசிகர்களின் உற்சாக ஆரவாரம் வானில் தவழ்ந்து வந்த வெண்மேகங்களுக்கும் கேட்டிருக்கும்.
“வி வெல்கம் தி பேமஸ் கிரிகெட் ஸ்டார் ஹரீஷ் ஸ்வாமிநாதன்” வைஷாலி கூற ஆரவாரம் அடங்க வெகு நேரம் ஆனது.
தனது மனைவி அனுவுடன் வந்திருந்த ஹரீஷை விவிஐபி பகுதிக்கு அழைத்துச் சென்ற ஆராதனா ஸ்வாதி, அர்ஜூன் குடும்பத்தினரிடம் அறிமுகம் செய்து வைத்தாள்.
Advertisement
ரங்கநாதனுடன் கைகுலுக்கிய ஹரீஷ் தான் அர்ஜூன் ஸ்வாதியின் ரசிகன் என்று சொல்ல அனைவர் மனதிலும் மகிழ்ச்சியும் பெருமிதமும்.
அர்ஜூனும் ஸ்வாதியும் டென்னிஸ் மட்டைகளுடன் கோர்ட்டில் நுழைய மீண்டும் ஒரு ஆரவாரப் பேரலை.
“நீங்க யார் பக்கம். அர்ஜூம் பக்கமா ஸ்வாதி பக்கமா” பாட்டியிடம் கேட்டுக் கொண்டிருந்தார் ருக்மணி.
ஸ்ரீதேவி ரங்கநாதன் இருவரும் அர்ஜூனுக்கு ஆதரவாகவும், ருக்மணி பார்த்தசாரதி ஸ்வாதியின் பக்கமும் பெட் கட்டியிருந்தார்கள்.
“இது என்ன இங்கே மேட்ச் கேம்ப்ளிங் நடக்குது” சிரித்துக் கொண்டே வந்த அரவிந்த் ரங்கநாதன் பக்கம் அமர்ந்து கொள்ள விக்ரம் ஸ்வாதிக்கு தான் தனது ஆதரவு என்று அன்னையின் தோள் மீது கரம் போட்டுக் கொண்டு அவரின் அருகில் அமர்ந்தான்.
இவர்களின் பெட் பற்றி தெரியாத வைஷாலி சுவாதீனமாக அரவிந்த் பக்கத்தில் அமர விக்ரம் ஆராதனாவின் கரம் பற்றி தன்னருகே அமர வைத்தான்.
“நீ அர்ஜூன் பக்கம்” என்று வைஷாலியிடம் சொல்லிய ஸ்ரீதேவி ஆராதனா ஸ்வாதியின் கட்சி என்று தெரிவித்தார்.
“ஐயோ எனக்கு டென்னிஸ் பத்தி எல்லாம் எதுவுமே தெரியாது” புன்னகையுடன் ஆராதனா சொல்ல
“இனிமே தெரிஞ்சுக்கோ, நான் சொல்லித் தரேன்” என்று ரகசியமாக அவளுக்கு மட்டும் கேட்கும் வண்ணம் கூறினான் விக்ரம்.
“ஆஹான்” என லேசாக புருவம் உயர்த்தி விக்ரமைப் பார்த்தாள் ஆராதனா.
“பாட்டி, நீ யாரு பக்கம்ன்னு சொல்லவே இல்லையே” என்று அர்விந்த் கேட்டுக் கொண்டிருக்க அங்கே வந்த ஸ்வாதியும் அர்ஜூனும் ஒரு கரம் நீட்டி பாட்டியின் பாதம் தொட்டு வணங்கினர்.
இருவரின் தலையிலும் கரத்தை வைத்து பாட்டி ஆசீர்வாதம் செய்தார்.
‘டென்னிஸ்ல மட்டுமில்ல வாழ்க்கையிலும் என் குழந்தைகள் ஜெயிக்கணும்’ என்று மனதில் வேண்டிக் கொண்டார்.
“டாஸ் போடப் போறாங்களே. அர்ஜூன் முதல்ல செர்வ் செய்தா தேவலை” பாட்டி சொல்லவும் ருக்மணி ஆச்சரியமாகப் பார்த்தார்.
“என்ன ருக்மணி அப்படிப் பார்க்கிற. நான் டென்னிஸ் நேஷனல் செம்பியன்னோட அம்மா. கிரான்ட் ஸ்லாம் சாம்பியன்களோட பாட்டி. இது கூட தெரியாம இருப்பேனா” பாட்டி சொல்ல
“என்னை விட அதிகமா அவங்களுக்கு டென்னிஸ்ல நாலேட்ஜ் உண்டு. இதனாலேயே பேத்திக்கும் பாட்டிக்கும் ரகளை நடந்துட்டே இருக்கும்” என ஸ்ரீதேவி சிரித்துக் கொண்டே கூறினார்.
அர்ஜூன் டாஸ் வென்றதும் செர்வ் செய்வதாக தேர்ந்தெடுக்க பாட்டியின் வேண்டுதல் பலித்தது.
“எனக்கு அட்வான்ஸ் கங்கிராட்ஸ் சொல்லு குஷ்பூ” அர்ஜூன் சிரித்துக் கொண்டே சொல்ல
“ரன்னர் கப் வாங்கப் போறியே அதுக்குத் தானே” கேலியாக சொன்னவள் எதிர்புறத்திற்குச் சென்றாள்.
“வின் செய்து உன் வாயால் வாழ்த்துக்கள் விஜயான்னு சொல்ல வைக்கிறேன்’ என மனதிற்குள் நினைத்துக் கொண்டே பந்தை கையில் சுழற்றினான்.
‘பர்ஸ்ட் ஷாட் ஏஸ் தான்” அரவிந்த் உரக்கச் சொல்ல
“பார்க்கலாமா, ஸ்வாதி லவ் கேம் எக்ஸ்பர்ட்” சவால் விட்டான் விக்ரம்.
அவனுக்கு நன்றாக நினைவு இருந்தது. நீயூயார்க்கில் ஸ்வாதி ஆடிய யூஎஸ் ஓபன் பைனல் மேட்சை பார்க்கச் சென்ற போது அர்ஜூன் கூறியது மிக நன்றாகவே நினைவிருந்தது.
‘ஏஸ் என்றால் என்ன’ என்று ஆராதனா வேகமாக கூகிளை தட்ட “அர்ஜூன் செர்வ் பண்ற பந்தை ஸ்வாதி அடிக்காம விட்டு அர்ஜூனுக்கு வின்னிங் செர்வ் ஆனா அதுக்கு பேர் ஏஸ்” என்று விக்ரம் விளக்கம் சொன்னான்.
“என் மொபைலை பார்ப்பதை விட்டுட்டு மேட்சை பார்க்கிறீங்களா. பை தி வே எவ்வளவு பெட் கட்டியிருக்கீங்க” என்று கறாராக கேள்வி கேட்டாள்.
“அதை என் சிஏ கேட்டா ஓகே. என் லீகல் அட்வைசர் எதுக்கு கேட்கிறாங்க” விக்ரமின் குரலில் குறும்பு எட்டிப் பார்த்தது.
“ஹ்ம்ம் உள்ள பிடிச்சு போட்டுட்டா ஜாமீன்ல எடுக்கத் தான்” சரிக்கு சரி பதில் சொன்னவள் மேட்ச்சில் பார்வையைப் பதித்தாள்.
பந்தை காற்றில் தூக்கிப் போட்டு எம்பி அடித்தான் அர்ஜூன்.
“ஐ தாட் இட்ஸ் எ ஸ்லைஸ்” (I THOUGHT IT’S A SLICE ) என்று கமன்ட்ரயில் இருந்தவர் சொல்ல “ஐ குட் பெட் தட் ஃபார் டாப் ஸ்பின்” (I COULD BET THAT FOR A SPIN )என்று இன்னொருவர் சொல்லிக் கொண்டிருந்தார்.
ஆனால் இருவர் யூகத்தையும் பொய்யாக்கி அமெரிக்கன் ட்விஸ்ட் செர்வ் செய்தான் அர்ஜூன்.
அவளது வலது புறத்தில் பந்தை எதிர்நோக்கி நின்றிருந்த ஸ்வாதி அர்ஜூன் பந்தை காற்றில் தூக்கி போட்ட நொடிக்கும் குறைவான பொழுதில் சுதாரித்துக் கொண்டாள்.
பந்து DIAGONAL மூலைவிட்டமாக பறந்து அவளுக்கு இடது புறம் பவுன்ஸ் ஆக தனது ராக்கெட்டினால் முத்தமிட்டாள் ஸ்வாதி.
இருவரும் மாறி மாறி பந்தை தவற விடாமல் அடிக்க லவ் ஆல் நிலை ஒரு சில நிமிடங்கள் நீடித்தது.
“லவ் ஆல் நல்லது தானே, உனக்கு என்ன கஷ்டமா இருக்கு” அரவிந்த் வைஷாலியிடம் வம்பு செய்தான்.
“ப்ளீஸ் டிஸ்டர்ப் செய்யாதீங்க. எனக்கு டென்னிஸ் மட்டும் தான் பிடிக்கும்னு சொல்லிடுவேன்” என்று செல்லமாக மிரட்டினாள் அவனின் ஷாலு.
“லவ் – 15” என்று போட்டி வர்ணனையாளர் சொல்ல ‘
“ஐயோ எப்படி அர்ஜூன் மிஸ் பண்ணார். எல்லாம் உங்களால் தான்” என அரவிந்தை கிள்ளி வைத்தாள்.
“ஸ்ஸ் என் அழகான ராட்சசியே, அவன் மிஸ் பண்ணா எனக்கு தண்டனையா. நீ கிள்ளினாலும் சுகமா தான் இருக்கு, என் ஷாலு எப்போவுமே அழகு. மேட்ச் பார்க்கும் போது இன்னும் அழகா தெரிகிறா” என்று காதல் வசனம் பேச வைஷாலி தலையில் கையை வைத்துக் கொண்டாள்.
“நான் எழுந்து அந்த பக்கம் போய் உட்கார்ந்து விடுவேன்” என்று அரவிந்தை மிரட்ட அடக்கம் ஒடுக்கமாக அமர்ந்து கொள்வது போல ஏக்ட் குடுத்தான்.
“லவ் – 30”
“லவ் -40. ட்ரிப்பில் ப்ரேக் பாயின்ட்”
“கேம் ஸ்வாதி. ஆஹ் தட்ஸ் லவ் கேம்” என்று வர்ணனையாளர் சொல்லி முடிப்பதற்குள் அரங்கம் முழுவதும் ஸ்வாதி ஸ்வாதி என ஆரவாரம் செய்தது.
“நான் சொன்னேன் தானே. லவ் கேம். ஸ்வாதி வில் ப்ரேக் டு லவ்ன்னு” விக்ரமின் உற்சாகம் ஆராதனாவையும் தொற்றிக் கொள்ள ஹை பை கொடுத்துக் கொண்டாள்.
ஸ்கோர்போர்ட் கேம் அர்ஜூன் 0 ஸ்வாதி 1 என்றது.
ஆட்டம் சூடு பிடிக்க அரங்கத்தில் நிசப்தமும், ஆரவாரமும் அர்ஜூன் ஸ்வாதியுடன் சேர்ந்து போட்டி போட்டுக் கொண்டிருந்தன.
5 – 7ல் ஸ்வாதி முதல் செட்டை வெற்றி பெற்றிருந்தாள்.
சேரில் வந்து அமர்ந்து துவாலையால் முகம் துடைத்துக் கொண்டே அர்ஜூனைப் பார்த்தாள் ஸ்வாதி. அவனும் அவளைத் தான் பார்த்துக் கொண்டிருந்தான்.
‘லூஸு லூஸு போர்த் கேமில் பேக்ஹான்ட் ஷாட் அடிச்சிருக்கலாம். விட்டுட்டு இருக்கான். ரெண்டு தடவை நெட்டிலே அடிச்சு வைக்கிறான்” அவன் செய்த தவறுகளுக்கு ஸ்வாதி அர்ச்சனையை முணுமுணுத்துக் கொண்டிருந்தாள்.
“ஸ்வாதி ஏதோ சொல்லிட்டு இருக்காளே. மந்திரமா சொல்றா” ருக்மணி கேட்கவும் பாட்டியும் ஸ்ரீதேவியும் பொங்கிச் சிரித்தனர்.
“உன் பையனுக்கு அர்ச்சனை பண்ணிட்டு இருக்கா அவ. அவன் இந்த செட் தவற விட்டுட்டானே” பாட்டி சிரிப்பினூடே ருக்மணியிடம் சொன்னார்.
“ஒஹ் அப்போ ஸ்வாதி மிஸ் செய்தா அர்ஜூன் அவளைத் திட்டுவானா” என்று ருக்மணி கேள்வி கேட்க மீண்டும் சிரித்தார்கள்.
“அப்போவும் ஸ்வாதி தான் அவனை திட்டுவா” ஸ்ரீதேவி சொல்ல ருக்மணி அவர்களுடன் சேர்ந்து சிரித்தார்.
டென்னிஸ் அகடமியை சேர்ந்த மூத்த உறுப்பினர்களை கண்டு பேச ரங்கநாதன் பார்த்தசாரதியும் சென்று விட வைஷாலி அது தான் சாக்கு என்று ஸ்ரீதேவியின் அருகில் வந்து அமர்ந்து கொண்டாள்.
நான்கு பெண்களும் பேசிக் கொண்டே ஆட்டத்தைப் பார்க்க ஆராதனா அந்த ஒரு செட் முடிவதற்குள் டென்னிஸ் மேட்சின் அடிப்படைகளை படித்து விட்டிருந்தாள்.
இரண்டாவது செட் ஆரம்பம் ஆகும் போது ஸ்வாதியின் அருகில் வந்த அர்ஜூன் “இட்ஸ் ஒகே, கூல் குஷ்பூ” என்று தோள் தட்டிச் சென்றான்.
அர்ஜூன் தனது கழுத்தில் இருந்த சங்கிலியை எடுத்து உதட்டருகில் ஒற்றி விட்டு செர்வை எதிர் நோக்கியிருந்தான்.
அது அவனது மேனரிஸம் என்று அங்கிருந்த ரசிகர்கள் அனைவருக்கும் தெரியும்.
அவன் அப்படிச் செய்ததும் தனது கழுத்தில் முத்தமிட்டுக் கொண்டிருந்த முத்திற்கு முத்தமிடும் ஆவலை ஸ்வாதி அடக்கிக் கொண்டாள்.
அதைக் கண்டு கொண்ட அர்ஜூன் அவளைப் பார்த்துக் கண்களைச் சிமிட்ட பதிலுக்கு முறைப்பைக் காட்டினாள் அவனின் குஷ்பூ.
முதல் செர்வ்வை ஃபால்ட் FAULT செய்வது ஸ்வாதி அடிக்கடி செய்யும் ஒன்று. ஆனால் அவளது அன்றைய செர்வ் ஏஸ் ACE ஆனது.
அர்ஜூனும் ஸ்வாதியும் ஆடும் மேட்ச் டிவில் வரும் போது எப்போதேனும் பார்ப்பார் ருக்மணி. மற்றபடி டென்னிஸ் விளையாட்டின் அடிப்படையை கூட அவர் அறிந்திருக்கவில்லை.
இன்னும் அவருக்கு ஆட்டம் புரியவில்லை என்றாலும் ஸ்வாதி ஆடுவதையே ஆசையுடன் பார்த்துக் கொண்டிருந்தார்.
“நான் உனக்கு ப்ரண்டா இருக்கேன். நீ இங்கே சேர்ந்துக்கோ” ஏழு வயது ஸ்வாதி அவரின் கண்களை நிறைத்தாள்.
அதிக சிரமங்களுடன் அர்ஜூன் இரண்டாவது செட்டை கைப்பற்றினான்.
அரங்கத்தின் கூட்டம் ஸ்வாதி ஸ்வாதி அர்ஜூன் அர்ஜூன் என மந்திர உச்சாடனம் செய்ய அங்கிருந்த திரையில் ஹரீஷ் தலை குனிந்து லேசாக அனுவுடன் பேசிக் கொண்டிருந்தது பளிச்சிட ஹரீஷ் என்று கூட்டம் அமர்க்களம் செய்தது.
எழுந்து நின்று ரசிகர்களுக்கு கை அசைத்தவன் இரு கரத்தையும் நீட்டி ஸ்வாதி அர்ஜூன் இருவருக்கும் தம்ப்ஸ் அப் காட்டினான்.
மூன்றாவது செட். யாருக்கு ட்ராபி என்று தீர்மானிக்கப் போகும் செட். அது ட்ரஸ்ட்டுக்காக விளையாடும் ப்ரண்ட்ஷிப் மேட்ச் என்பது இப்போது அனைவருக்கும் மறந்து போனது.
அந்த அளவு கடுமையாக போட்டியிட்டுக் கொண்டிருந்தனர் ஸ்வாதியும் அர்ஜூனும்.
“தட்ஸ் அன்பிலீவபில்” என்று வர்ணனையாளர் சொல்ல அரங்கத்தில் ‘வாவ்’ என்ற ஆச்சரிய ஒலி.
விக்ரமிற்கும் ஏன் அவ்வாறு கூறினார்கள் என்று புரியவில்லை. அவன் யாரிடம் கேட்பது என்று தயங்கிக் கொண்டிருக்க ஆராதனா ‘ஸ்ரீதேவி ஆன்டி’ என அவரை அழைத்து என்னவென்று கேட்டாள்.
அவளது செய்கையில் இதயத்தின் ஆழம் வரை தித்திப்பு பரவியதை உணர்ந்தான் விக்ரம்.
“அது அர்ஜூனோட சிக்னேச்சர் ஷாட்மா. அதை ஸ்வாதி காஷுவலா அடிச்சு அவளுக்கு கேம் கிடைச்சிருக்கு. அது தான் எல்லோருக்கும் சந்தோஷமும் ஆச்சரியமும்” என்று விளக்கம் கொடுத்தார்.
“ஒஹ் அப்போ ஸ்வாதிக்கும் அப்படி ஷாட் இருக்கா”
“ஸ்வாதிக்கு சிக்னேச்சர் ஷாட் எல்லாம் இல்ல. அவளுக்கு மட்டும் ஸ்பெஷலானது அவ செய்யும் சின்ன சின்ன மேனரிஸம் தான்” என்று ஸ்வாதியை நோக்கிக் கை காட்டினார் பாட்டி.
“எனக்கு ஒன்னும் தெரியலையே. என்ன மேனரிஸம்” ஆராதனாவை முந்திக் கொண்டு கேட்டார் ருக்மணி.
“அங்க பாரு ருக்மணி. ராக்கெட் கூட பேசிட்டு இருக்கா பாரு” பாட்டி காண்பிக்க அடுத்த கேம் தொடங்குவதற்கு முன்பான அரை நிமிட நேரத்தில் அவளது மட்டைக்கு புத்திமதி சொல்லிக் கொண்டிருந்தாள்.
“என்ன சொல்றாங்க” வைஷாலிக்கும் தெரிந்திருக்கவில்லை.
ஒன் டே வித் தி ஸ்டார்ஸ் கவர் ஸ்டோரியை ஒழுங்கா முடிக்கணும் என்று நினைத்துக் கொண்டாள்.
‘நீ என் செல்லம்ல. ஆங்கிள் பார்த்து ஒழுங்கா அடிக்கணும் கண்ணா, ஒகே குட்டிம்மா ரெடி’ இப்படி ஏதாச்சும் சொல்லுவா. நாங்க ப்ராக்டீஸ் போது அவளுக்குச் சொல்றதை இவ மேட்ச் ஆடும் போது ராக்கெட்டுக்கு சொல்வா” ஸ்ரீதேவி சொல்லிக் கொண்டே சிரித்தார்.
“ஷி இஸ் சோ கியூட்” என்று ஆராதனா சொல்லிவிட ஸ்ரீதேவியும் பாட்டியும் தங்களுக்குள் கிசுகிசுத்துக் கொண்டு சிரித்தனர்.
“ஆன்டி நாம என்ன ஸ்வாதி புகழ் பாடுறோம். நாம அர்ஜூன் கட்சி” என்று வைஷாலி ஸ்ரீதேவியிடம் கூறினாள்.
“அர்ஜூன் தானே. அவன் அப்படியே மகாபாரத அர்ஜூன் தான். கையில் ராக்கெட்டை பிடிச்சிட்டா அவனுக்கு மனுஷ முகமே தெரியாது” என்றார் பாட்டி.
“ஸ்வாதி கூட விளையாடும் போதுமா” என்று வைஷாலி கேட்க ஆம் என்றார் ஸ்ரீதேவி.
“அவ கூட விளையாடும் போது தான் இன்னும் கவனமா ஆடுவான். வின் செய்தே ஆகணும்னு வைராக்கியம் அதிகம் இருக்கும்” என்றார் அவர்.
“நான் கூட ஒருத்தருக்கு ஒருத்தர் விட்டுக் கொடுத்திருவாங்களோன்னு நினச்சேன் ஆன்டி” என்றாள் வைஷாலி.
“தான் தோற்று பிரியமானவங்களை ஜெய்க்க வைப்பது ஒரு வகை அன்பு. ஆனா நான் விட்டே கொடுக்க மாட்டேன். விடாமல் போராடி கடும் முயற்சி செய்து நீ வெற்றி கொள். அது தான் என்னுடைய வெற்றியும் அதனால் இருவருக்குமே தோல்வி இல்லைன்னு நினைக்கும் அன்பும் இருக்கும்மா. அவங்களோட இந்த அன்பு தான் அவங்க டென்னிஸில் இத்தனை தூரம் சாதிக்கவும் வச்சிருக்கு” ஸ்ரீதேவி கூறினார்.
வைஷாலிக்கு அது நன்றாகவே புரிந்தது.
“டை ப்ரேக் போயிட்டு இருக்கு” பேச்சு சுவாரசியத்தில் மேட்சை கவனிக்காமல் போன ஆராதனாவிடம் கூறினான் விக்ரம்.
“ஸ்வாதியும் அர்ஜூனும் டை ப்ரேக் கேம் ஆடுறாங்க. வாங்க வாங்க” என்று காற்று மேகங்களை கூவிக் கூவி அழைத்திருக்குமோ.
“எத்தனை வருடங்களாக இதைக் காண காத்துக் கொண்டிருக்கிறோம்” என்று மேகங்கள் போட்டி போட்டு முட்டி மோதிக் கொண்டு அந்த ஸ்டேடியத்தினுள் எட்டிப் பார்த்தன.
அங்கே நடந்த அடிதடி ஸ்டேடியம் முழுவதும் இடி முழக்கமாக எதிரொலித்தது.
“என்ன திடீர்னு கறுப்புக் கொடி பிடிச்சிட்டு வரீங்க” வெண்ணிற மேகங்கள் கார்வண்ணத்தை பூசிக் கொண்டு வர காற்று கேட்டது.
“நாங்களும் அர்ஜூன் சப்போர்ட், ஸ்வாதி சப்போர்ட்ன்னு ரெண்டா பிரிஞ்சு பெட் வச்சிருக்கோம். இங்கே போட்டி நடக்குது. சமாதானமா வெள்ளைக் கொடி எல்லாம் பிடிக்க முடியாது” என்று மேகங்கள் மீண்டும் கர்ஜித்தன.
யார் பக்கம் தான் ஆதரவு கொடுக்க வேண்டும் என்று தெரியாமல் ஸ்வாதியா அர்ஜூனா ஸ்வாதியா அர்ஜூனா என்று இங்கும் அங்கும் சுழன்று சுழன்று நடனம் ஆடிக் கொண்டிருந்தது காற்று.
“அங்கிள் கூப்பிடறாங்க ஆன்டி, இதோ வரேன். ஆராதனா வாங்க” என்று அவளையும் அழைத்துக் கொண்டு சென்றாள் வைஷாலி.
“காற்று பலமா வீசுது. இடியும் மின்னலுமா இருக்கு. ஹிஸ்டரி ரிபீட்ஸ் ரங்கநாதன்” பல வருடங்களுக்கு முன் ஸ்வாதி அர்ஜூன் ஆடிய போது ரெஃப்ரீயாக இருந்தவரே தான் இன்றும் இறுதி முடிவெடுக்கும் பொறுப்பில் இருந்தார்.
“டியூஸ்”
“அட்வான்டேஜ் ஸ்வாதி”
“டியூஸ்”
“அட்வான்டேஜ் அர்ஜூன்”
வர்ணனையாளர் சில நிமிடங்களாக இதையே தான் சொல்லிக் கொண்டிருக்கின்றனர்.
சட்டென மாறிய வானிலையை திரும்பிக் கூட பார்க்காமல் ரசிகர்கள் அனைவரும் நகத்தைக் கடித்துக் கொண்டு அமர்ந்திருந்தனர். ஏழு வயதில் ஸ்வாதியும் அர்ஜுனும் ஆடிய மேட்ச்சை வர்ணனையாளர் நினைவுக் கூர்ந்தார்.
இதெல்லாம் அர்ஜூன் ஸ்வாதி இருவரின் கவனத்தில் சிறிதும் படவில்லை. விடமால் பந்தை அடித்துக் கொண்டிருந்தார்கள்.
“அப்போ சிறு பிள்ளைகள்ன்னு ட்ரா செய்தோம். அது பெரிய விஷயமா எல்லம் பேசப்படலை. இப்போ ட்ரா செய்தா இண்டர்நேஷனல் சென்சேஷன் ஆகும் சார்”
“இது டோர்னமன்ட் இல்லையே. அவங்க ட்ரஸ்ட்க்கு ஆடும் நட்பு ஆட்டம்”
“கிரிக்கெட்ல ட்ரா ரொம்ப சாதாரணம். டென்னிஸ்ல அப்படி இல்லைன்னு தெரியும். பட் இங்கே அந்த எக்சப்ஷனை செய்யலாம்” சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருந்த ஹரீஷிடமும் கருத்து கேட்க அவன் இவ்வாறு கூறினான்.
ஒரு மனதாக ட்ரா செய்ய முடிவு செய்யப்பட்டு லைன் அம்பயர் சேர் அம்பயருக்கு தெரிவிக்கப் பட்டது.
அர்ஜூன் செர்வ் செய்யும் முன் அம்பயர் நிறுத்தச் சொன்னார்.
“வரலாறு மீண்டும் தனது இனிமையான தருணத்தை எழுத ஆசை கொண்டுவிட்டது போலும். வானிலை காரணமாக ஆட்டம் நிறுத்தப்படுகிறது. இந்த ஆட்டம் டோர்ணமன்ட் இல்லை என்பதாலும் பிரண்ட்ஷிப் மேட்ச் என்பதாலும் மேட்ச் ட்ரா செய்யப்படுவதாக நடுவர்கள், போட்டி ஒருங்கிணைப்பாளர்கள், சிறப்பு விருந்தினர் மற்றும் ஸ்பான்சர்ஸ் முடிவெடுத்து இருக்கிறார்கள்” என்று வைஷாலி மைக்கைப் பிடித்து அறிவிக்க அரங்கத்தில் இருந்த ரசிகர்கள் அனைவரும் எழுந்து கைதட்டி ஆராவரம் செய்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்த வானத்தில் மேள தாளங்கள்.
“நான் மனசில இதைத் தான் வேண்டினேன். திருப்பதிக்கு போய் பெருமாளுக்கு நன்றி சொல்லிவிட்டு வரணும் தேவி” பாட்டியின் கண்களில் ஆனந்த கண்ணீரைக் கண்ட அரவிந்த் ஆச்சரியம் கொண்டான்.
நெட்டின் இருபுறமும் நின்று கொண்டிருந்த ஸ்வாதியும் அர்ஜூனும் அறிவிப்பை கேட்டதும் சிறு வயதின் நினைவில் அப்படியே தரையில் முட்டி போட்டு அமர்ந்து விட்டிருந்தனர்.
“பிரசன்டேஷன் செரிமனிக்கு முன் அர்ஜூன் ஸ்வாதி இருவரிடமும் சில கேள்விகள்” என வைஷாலி மைக்கை எடுத்துக் கொண்டு வந்தாள்.
குழுமியிருந்த பெரிய பெரிய மீடியா நிருபர்களுக்கு முன் தனக்கு எப்பேர்ப்பட்ட வாய்ப்பு கிடைத்திருக்கிறது என்று ஆனந்தம் கொள்ளாமல் இருக்க முடியவில்லை அவளால்.
“சொல்லுங்க, என்ன ஃபீல் செய்றீங்க, கமான், கமான்” அவள் அருகில் வர அவளுக்கு இரு புறமும் ஸ்வாதியும் அர்ஜூனும்.
‘நாங்க வெளியேற மாட்டோம்’ என்று வார்த்தைகள் பிடிவாதம் பிடிக்க ‘நான் வேணும்னா போய் சமாளிக்கிறேன்’ என்று புன்னகை இருவரின் உதடுகளிலும் ஒட்டிக் கொண்டது.
“தே ஆர் ஸ்பீச்லெஸ். வாட் எ கேம். டென்னிஸ் ரசிகர்களுக்கு இன்று மிகுந்த நிறைவான ஒரு ட்ரீட் கொடுத்திருக்கீங்க. அதற்கு தாங்க்ஸ்” அவர்களின் மனநிலையை புரிந்து கொண்டு அழகாக அதை ரசிகர்களிடம் எடுத்துச் சொன்னாள்.
‘ஸ்வாதி’ ‘அர்ஜூன்’ என்று ரசிகர்கள் ஆரவாரம் செய்ய நான்கு திசையையும் நோக்கி இடை வரை குனிந்து வணங்கி கையசைத்தார்கள் இருவரும்.
ட்ராபி கப்பை வழங்குவதற்காக ஹரீஷை அழைத்தாள் வைஷாலி.
“தே ஆர் எக்ஸ்ட்ரா ஆர்டினரி சாம்பியன்ஸ். வாட் எ மேட்ச். இவர்களில் ஒருவர் வெற்றி பெற்றிருந்தாலும் இங்கே இவ்வளவு சந்தோஷம் நிறைந்திருக்காது. டென்னிஸ் மேட்ச் ட்ரா ஆகி ட்ராபியை இருவருக்கும் கொடுக்கும் அரிய வாய்ப்பு எனக்கு கிடைச்சிருக்கு. செகண்ட் டைம் இன் ஹிஸ்டரி. ஹோப் தே மேக் எ ஹாட் ட்ரிக் ஆன் திஸ்” என்று சுவைபட ஹரீஷ் கூற மின்னலும் இடியும் காற்றும் ரசிகர்களோடு போட்டி போட்டுக் கொண்டுகைதட்டி மகிழ்ந்தன.
வைஷாலி குடும்பத்தினர் அனைவரையும் வருமாறு அழைத்தாள்
ஸ்ரீதேவி அர்ஜூனின் கரம் பற்றிக் கொள்ள ருக்மணி ஸ்வாதியை அணைத்துக் கொண்டார். வைஷாலி மைக்கில் பேசிக் கொண்டிருந்த அழகை அள்ளிப் பருகியபடியே அவள் பின்னால் நின்றான் அரவிந்த்.
விக்ரம் ஊன்றுகோலை பற்றி மெதுவாக வந்த போதும் அவன் விழிகள் இங்கும் அங்கும் தேடுதலை நடத்திக் கொண்டிருந்தன.
அவன் ஸ்வாதியின் அருகில் வந்த நொடி சட்டென தடுமாறவும் “விக்ரமண்ணா பார்த்து” என அவன் விழாமல் பற்றி நிறுத்தினாள் ஸ்வாதி.
‘நான் வேறு அவன் வேறு இல்லை’ என்று ஸ்வாதி அன்று சொன்னதை இன்று உணர்ந்தான் விக்ரம்.
ஆராதனா ட்ராபி கப்பை ஒரு தட்டில் வைத்து எடுத்து வந்து ஹரீஷ்ஷின் கரங்களில் கொடுத்து இயல்பாக விக்ரமோடு நின்று கொள்ள அலைகள் வந்து தாலாட்டும் இன்பம் அவனிடத்தில்.
‘ஹவ் டிட் ஐ பிகேம் சோ லக்கி’ என்று அவன் மனம் நன்றியால் நிறைந்து கிடந்தது.
ட்ராபியை ஹரீஷ் எடுத்துக் கொடுக்க அர்ஜூன் ஸ்வாதி இருவரின் கரங்களும் ஏந்திக் கொண்ட அந்த நொடி வானம் மேகக் கூடைகளில் இருந்து மழைப்பூக்களை அவர்கள் மீது கொட்டிக் கவிழ்த்தியது.
மழை வரவும் ஹரீஷ்ஷை அழைத்துக் கொண்டு வைஷாலியும் ஆராதனாவும் உள்ளே செல்ல, மற்ற குடும்பத்தினரை அழைத்துக் கொண்டு அரவிந்த்தும் விக்ரமும் விரைந்தனர்.
மின்னலை மிஞ்சிய கேமெரா க்ளிக்களில் ஒளிர்ந்து கொண்டிருந்தனர் அந்த டென்னிஸ் நட்சத்திரங்கள்.
ட்ராபியை இருவரும் உயர்த்திக் காட்ட வான்மழையோடு ஆனந்த மழையில் ரசிகர்கள் நனைந்து கொண்டிருந்தனர்.
“என் விஜயன் ஜெயிச்சுட்டான்” அவள் மொழிகளும் விழிகளும் அன்பு மழையை பொழிந்து கொண்டிருந்தன.
‘என் விஜயன்’ இதைக் கேட்கத் தானே இத்தனை நாட்களாக தவமிருந்தேன் என்று உருகி நின்றது அர்ஜூனின் மனம்.
“என் குஷ்பூ” ஒரு கையால் ட்ராபியை பற்றி மறு கரத்தால் அவளை அணைத்துக் கொள்ள அவளும் அவ்வாறே அவனை அணைத்துக் கொண்டாள்.
இனி எந்நாளும் விழாக் காணுமே வானம்.
நிறைந்தது
error: Content is protected !!