Skip to content
Post Views: 1,939
அத்தியாயம் 13
இரவு பத்து மணி போலத்தான் வீடு திரும்பினார்கள் மூவரும்.
Advertisement
ரம்யாவும் ப்ரேமும் அப்பத்தாவுடன் பேசி கொண்டிருந்தார்கள்.
“என்ன அம்மா அம்மாச்சிக்கு இப்ப எப்படி இருக்கு? பரவாயில்லையா?” என்றாள் ரம்யா அக்கறையாக.
Advertisement
Advertisement
“இப்ப பரவாயில்லை… நார்மல் வார்டு மாத்திட்டாங்க டா..”
“நீங்க ரொம்ப களைப்பா இருக்கீங்களே ம்மா… பேசாம அங்கேயே இருந்துட்டு காலையில வர வேண்டியது தானே?” என்றான் ப்ரேம் அன்னையின் பக்கத்தில் அமர்ந்துகொண்டு.
Advertisement
“அங்க இருந்தாலும் தூங்க முடியாது டா ப்ரேம். ஆஸ்பத்திரிக்கு ஆளுங்க வந்துட்டும் போயிட்டும் இருப்பாங்க… தூங்கலைன்னா மாலதிக்கு தலை வலி வந்துடும் இல்ல.. தேவைப்பட்டா மறுபடியும் போயிக்கலாம்.
சூடா பால் குடிக்கிறியா மாலதி, சுக்கு தட்டி போட்டு கொண்டுட்டு வரவா?” என்று பேரனிடம் ஆரம்பித்து மருமகளிடம் முடித்தார் நித்யகல்யாணி.
“இல்ல அத்தை, வழியில சாப்பிட்டிட்டு தான் வந்தோம். தூங்கி எழுந்திருச்சா சரியா போயிடும்”
“பார்த்தியா டா சௌந்தரு… வந்ததுல இருந்து நமக்கு குடிக்க தண்ணி கொடுக்க கூட இங்க ஆளு இல்ல.. எல்லாம் நம்ம நேரம்” என்று சத்தமாக புலம்பினார் கந்தசாமி.
“பாவம் அதுவே அம்மாவுக்கு முடியலைன்னு மன சுணக்கத்துல இருக்கு, நீங்க வேற நேரங்காலம் தெரியாம..” என்று கடுப்படித்தார் அப்பத்தா.
“உக்கும்.. சரி சரி.. நாம நாளைக்கு காலையில வெள்ளென புறப்படலாம்“ என்றார் மனைவியிடம்.
“ஏம்ப்பா.. ரெண்டு நாள் இங்க இருந்திட்டு போங்களேன்”
“நாளைக்கு வயல்ல வேலை இருக்கு சௌந்தரு… நான் போகணும்.. ஆளுங்கள வர சொல்லி இருக்கேன்”
“சரி அப்ப அம்மா இருந்துட்டு வரட்டும், நீங்க கிளம்புங்க..”
மாலதி கணவரை ஒரு பார்வை பார்த்துவிட்டு, “அத்தை ரொம்ப களைப்பா இருக்கு, நான் போய் படுக்கிறேன்” என்று கூறிவிட்டு உள்ளே சென்றுவிட்டார்.
“பசங்களா நீங்களும் போய் படுங்க, நாளைக்கு ஸ்கூல் காலேஜ் எல்லாம் கிளம்பணும் இல்ல?” என்று ரம்யா ப்ரேம்மையும் அனுப்பி வைத்தார் நித்யகல்யாணி.
பிறகே மகனருகே அமர்ந்து கொண்டு ,“என்ன சௌந்து? என்ன விஷயம் ?” என்றார்.
“அது ஒன்னும் இல்ல நித்யா… மாலதிகூட முதல் முறையா உன் மகன் மல்லுக்கு நின்னிருக்கான்.. இப்ப பயமா இருக்கு.. அதான் உன்னை துணைக்கு சேர்த்துக்கிறான்” என்றார் கந்தசாமி முந்திக்கொண்டு.
“உங்களை இப்ப கேட்டேனா? போங்க, உள்ளாரா போய் படுங்க..”
“அடேங்கப்பா.. சரிங்க டீச்சர் அம்மா.. நான் கிளம்புறேன்..”
“இங்க பாரு மகனே.. ஒரு சமயத்துல ஒரு டீச்சரை சமாளிக்கிறதே கஷ்டம்.. நீ தேவையில்லாம பூபாலத்தையும் உள்ளார இழுத்து விடற.. அப்புறம் அவஸ்த்தை உனக்கு தான் பார்த்துக்கோ” என்று மகனிடம் எச்சரித்துவிட்டே உள்ளே சென்றார்.
“மனசு குழப்பமா இருக்கு ம்மா” என்று சௌந்தர் அங்கே நடந்தவைகளை எல்லாம் தாயிடம் கூறினார்.
“மனச போட்டு குழப்பிக்க கூடாது சௌந்து.. நடக்கிற ஒவ்வொரு விஷயத்துக்கும் ஏதோ ஒரு காரண காரியம் இருக்கும். இப்ப இருக்கிற நீங்க எல்லாம் கல்யாணம் செய்றதுக்கு முன்னமே எல்லாம் செட்டில் ஆகி இருக்கணும்னு நினைக்கிறீங்க.. எங்க காலத்துல காலத்தே பயிர் செய்ன்னு சொல்லுவோம்”
“அது இல்ல ம்மா, திடீர்ன்னு கேட்டதும் எனக்கு கொஞ்சம் டென்ஷன் ஆயிடுச்சு”
“உன்ன மாதிரி தானே மாலதிக்கும் இருக்கும்.. விடு.. எல்லா பெத்தவங்களுக்கும் பொம்பளை புள்ள கல்யாணத்தை பத்தி முதல் தடவை பேச்சு வரும் போது ஒரு பதட்டம் வரத்தான் செய்யும்.. அதுவுமில்லாம சம்பந்தி அம்மா அவங்க ஆசையை சொல்றாங்க. முடிவு உங்க கையில தானே? உண்மையா சொல்லணும்னா முடிவு நம்ம முத்து கையில… துணையா நம்ம முத்தாயி அம்மாச்சி இருக்கும். அம்புட்டுத்தேன். ஆனாலும் கல்யாணம் குழந்தை எல்லாம் காலா காலத்துல நடந்தா நல்லது தான் சௌந்து.. அதுல தப்பு ஒன்னும் இல்லை”
“என்ன அம்மா சொல்ல வரீங்க?”
“விஷயத்தை கொஞ்சம் ஆற போடு.. இப்ப அமைதியா நீயும் போய் படு.. மாலதிகிட்ட பேசு… நான் நாளைக்கு அப்பாவோட கிளம்புறேன்.. “
சௌந்தர் யோசனையாகவே அமர்ந்திருக்கவும்,
“ரெண்டு அடி அடிச்சாலும் வாங்கிக்கடா.. என்னமோ புதுசா சமைஞ்ச குமரியாட்டம் இல்ல மருகிகிட்டு இருக்க.. என்னமோ இவன் பொண்டாட்டி கால்ல விழுந்ததே இல்ல பாரு..” என்று போற போக்கில் சொல்லி சென்றார்.
சின்ன புன்னகை வந்து ஒட்டிக்கொண்டது அவரின் இதழில்.
முக்கியமான விஷயங்கள் பேசும் போது வீட்டில் உள்ள பிள்ளைகளை உள்ளே அனுப்பி விட்டு பேசுவது வழக்கம். ஆனால் அப்படி செய்கையில் பிள்ளைகளுக்கே உள்ள ஆர்வத்தில் அவர்கள் ஒட்டு கேட்பதும் சகஜமான ஒன்று. அப்படி தான் ரம்யாவும் ப்ரேமும் அவர்கள் அறையின் கதவருகில் அமர்ந்துகொண்டு அப்பாவும் அப்பத்தாவும் பேசுவதை கேட்டனர்.
—————
மறுநாள் வீட்டிற்கு சென்று குளித்து கிளம்பி வயலிற்கு வந்தார் கந்தசாமி. அவருக்கு முன்பே அங்கே நின்றுகொண்டு மேற்பார்வை பார்த்துக்கொண்டிருந்தான் ஹிருதய்.
“என்ன அண்ணே ! எப்படி இருக்காங்க உங்க சம்பந்தி..” என்றார் வயலில் வேலை செய்து கொண்டிருந்த பொன்னம்மா.
“இப்ப பரவாயில்ல பொன்னம்மா.. கொஞ்சம் பயம் காட்டிபுட்டாக.. மருமக தான் பயந்திடுச்சு..”
“என்ன இருந்தாலும் பெத்தவகளுக்கு ஒன்னுன்னா மனசு பதறத்தானே செய்யும்?”
பேசிக்கொண்டே அவர் கவனிக்காமல் வேலையில் தவறு செய்யவும், ஹிருதய்,
“என்ன ஆத்தா நீங்க.. அங்க பாருங்க.. வேர் மண்ணுல ஒழுங்காக பிடிக்கல. நீங்க பாட்டுக்கு பேசிக்கிட்டே ஒழுங்கா நடல” என்று கூறிக்கொண்டே அவரிடம் சென்று விட்டான்.
இன்று அவர்கள் வயலில் கத்திரிகாய் நாற்றுகளை நடும் வேலை.
நாற்றுகளைப் பாத்தியில் நடும்போது, அதன் வேர் பகுதி மண்ணில் நன்றாகப் பதியும்படி நட வேண்டும்.
“இங்க பாருங்க அண்ணே, பட்டணத்து தம்பி எனக்கே பாடம் எடுக்கிறத” என்று பொன்னம்மா கந்தசாமியிடம் புகார் வாசித்தார்.
அதற்குள் ஹிருதய் அவரிடம் இருந்த நாற்றுகளை வாங்கி அவன் நடத் தொடங்கினான்.
“படிச்ச புள்ளைங்க எல்லாம் இங்க வந்தா நீ நானெல்லாம் காணாம போயிடுவோம். நீ கவனிக்காம செஞ்சத இதயா கவனிச்சு சொல்லிட்டான்”
“என்ன அண்ணே ஒரே வரியில இப்படி சொல்லி புட்டீக..”
“கதை பேசாம வேலையே பாருங்கறேன்” என்றார் தாத்தா சிரித்து கொண்டே.
பின், ஹிருதய் நேற்று செய்த வேலைகளை எல்லாம் தாத்தாவிடம் கூறினான். இந்த வேலைகளை எல்லாம் அவன் செய்ய வேண்டும் என்று கட்டாயம் இல்லை தான். ஆனால் அவனே பொறுப்பாய் செய்கிறான்.
நேற்று எதேர்ச்சையாக தான் ஹிருதய் பற்றி கூறினார். ஆனால் மனதிற்குள் அந்த விதை விழுந்துவிட்டது. அந்த விதை இப்பொழுது விருப்பமாக வளரத் தொடங்கியது.
————–
பேச்சு வாக்கில் விஷயத்தை தெரிந்து கொண்ட ப்ரேமும் ரம்யாவும், முத்துவிடம் கூறிவிட்டனர்.
“என்னது? தாத்தா அந்த அமுல் பேபியையா சொன்னாரு?”
“ஆமா முத்து, ஆனா அந்த அண்ணா ரொம்பவே ஸ்வீட். அவருக்கு போய் நீயான்னு தான் எனக்கு தோணுச்சு” என்றான் ப்ரேம்.
“போடா போ.. நாளைக்கு உனக்கு ஒரு ஆள் வரும் இல்ல, அப்ப நான் பார்த்துக்கிறேன்”
“அது விடுக்கா… அவங்க வீட்ல எல்லாருமே ரொம்ப நல்லவங்க தெரியுமா? ஹாசினி அவங்க அண்ணா எல்லாம் ரொம்பவே மெதுவா தான் பேசுறாங்க… அப்புறம் அந்த ஆண்ட்டி அவங்க பிள்ளைகளையே திட்ட மாட்டாங்களாம். அப்படி பார்த்தா உனக்கு மாமியார் பிரச்சனை எல்லாம் வராது” என்றாள் ரம்யா.
“ஏன் ரம்யா, நம்ம அக்காவை கல்யாணம் பண்ற வீட்ல எல்லாம் மருமகளால தான் பிரச்சனை வர வாய்ப்பு இருக்கு ..”
“இப்ப அப்பா அம்மா என்ன சொல்றாங்க?”
“க்கா, எங்களுக்கு தெரியும்னு யாருக்கும் தெரியாது. நீ பாட்டுக்கு அம்மாகிட்ட மாட்டி விட்டுடாத..” என்றாள் ரம்யா பயந்த குரலில்.
“ஆமா முத்து, நாங்க அப்பத்தாவும் அப்பாவும் பேசுனதை ஒட்டு கேட்டுட்டு சொல்றோம். மாட்டி விட்டுடாதே” என்றான் ப்ரேம்.
“சரி சரி, நாம மூனு பேரும் எப்பவுமே இப்படி ஒத்துமையா இருக்கணும். இதே மாதிரி வேற என்ன நடந்தாலும் எனக்கு சொல்லுங்க.. ரம்ஸ், நான் வரும் போது உனக்கு பிடிச்ச ஹீல்ஸ் வச்ச கட் ஷூ வாங்கி தரேன் ஓகே வா?”
“அப்ப எனக்கு…”
“உனக்கு இல்லாததா தம்பி.. உனக்கு என்ன வேணும் சொல்லு”
“அக்கா எனக்கு ஸ்மார்ட் வாட்ச் ஒன்னு வேணும்”
“சரிடா..உனக்கு ஸ்மார்ட் வாட்ச்.. “
“அக்கா உன்கிட்ட அவ்வளவு காசு இருக்கா?”
“என்கிட்ட கொஞ்சம் பாக்கெட் மணி இருக்கு. மிச்சத்துக்கு நம்ம அய்யா எதுக்கு இருக்காரு ரம்ஸ்?”
இப்படியாக முத்து காதுக்கு விஷயம் சென்றது.
———————
முத்து தன் அய்யாவிற்கு அழைத்துவிட்டாள்.
“என்ன அய்யா, நீங்க கூட எங்கிட்ட சொல்லவே இல்ல?” என்று தான் ஆரம்பித்தாள்.
“அதுக்குள்ள வக்கீல் அம்மாவுக்கு எப்படி விஷயம் வந்தது?”
“அதுவா இப்ப முக்கியம்? நீங்க சொல்லுங்க?“
“நாம ரெண்டு பேரும் இந்த விஷயத்தை பேசுறோம்னு தெரிஞ்சா, ரெண்டு டீச்சர்களும் சேர்ந்து முதுகுல டின் கட்டிடுவாங்க..”
“நாம பார்க்காததா அய்யா?”
அந்த வயதிற்கே உரிய ஆர்வம் முத்தாயியிடம் இருந்தது.
“இல்ல முத்து, நீ பாட்டுக்கு ஒன்னும் நினைச்சுக்காத.. உனக்கு யாரு என்ன சொன்னான்னு தெரியல.. உங்க அம்மாச்சிக்கு என்னமோ உனக்கு கல்யாணம் பண்ணனும்னு எண்ணம், அதுக்கு ஒரு கலாட்டா… மாப்பிள்ளை எப்படி உடனே கிடைக்கும்னு உங்க அப்பத்தா கேட்கவும், எனக்கு ஒரு யோசனை, அம்புட்டுத்தேன். அதுக்குள்ள உங்க அய்யா வந்து எல்லாரையும் அடக்கிபுட்டாரு”
“என்ன அய்யா இப்படி பொசுக்குன்னு முடிச்சிட்டீங்க?”
“ஹா ஹா ஹா.. வேற என்னமும்னா நானே சொல்றேன் முத்து..”
அதன்பிறகு, வெறும் பேச்சு வார்த்தை தான் என்று கந்தசாமி கூறிய பொழுதிலும் ஹிருதய்யின் முகம் அடிக்கடி கண் முன்னே தோன்றியது பெண்ணுக்கு.
—————
மாலை ட்யூஷன் வந்த ஹாசினியிடம், ரம்யா “எனக்கு ஒரு ரகசியம் தெரியும். யாருகிட்டயும் சொல்லாதே, நாம் ரெண்டு பேரும் சீக்கிரமா சொந்தகாரங்க ஆயிடுவோம் ஹாசினி” என்று கூறினாள்.
“நாம தான் ஏற்கனவே சொந்தம்ன்னு ஆண்ட்டி சொன்னாங்களே ரம்யா?”
“அது பத்து மைல் தூர சொந்தமடி.. நான் சொல்றது பக்கத்து பக்கத்து சொந்தம்”
“அப்படின்னா?”
“யார் கிட்டயும் சொல்லாதே.. நானே கண்டுபிடிச்சேன்” என்று பீடிகை எல்லாம் பலமாக போட்டு ஹாசினியின் காதில் அவளுக்கு தெரிந்ததை கூறினாள்.
“நிஜமாலுமேவா?”
“ஆமா.. ஆனா யார்கிட்டயும் சொல்லாதே”
“சரி..”
நேற்றே ப்ரேம் எச்சரித்திருந்தான்.”இங்க பாரு ரம்யா உன் ஓட்ட வாயை வச்சிட்டு வேற யார் கிட்டயும் உளறி வைக்க கூடாது என்று”
அதை அப்பொழுதே மறந்திருந்தாள்.
வீடு திரும்பியதும் ஹாசினி,
“அம்மா உங்களுக்கு முத்து அக்காவை பிடிக்குமா?” என்றாள்.
“யாரு ஹாசி?”
“அது தான் மாலதி ஆண்ட்டி பொண்ணு”
“ஒரு தடவை தானே பார்த்தோம். நல்ல அழகா இருந்துச்சு. லா படிக்குதுன்னு எம் ஸ்கொயர் சொன்னா.. இப்ப எதுக்கு கேக்குற?”
“சும்மா தான்..”
அதன் பிறகு, ரம்யா முத்துவை பற்றி கூறிய கதைகளை எல்லாம் கூறிக்கொண்டிருந்தாள்.
“எதுக்கு ஹாசி, இன்னிக்கு அந்த பொண்ண பத்தி இவ்வளவு சொல்ற?’ என்றான் ஹிருதய்.
ஹாசினி திரு திரு என்று முழிக்கவும்
“உன்னால தான் ரகசியத்தை மனசுல வச்சுக்க முடியாதுல.. என்னன்னு சொல்லு?” என்றார் பூம்பாவை சிரித்து கொண்டே.
“அது வந்து ரம்யா யார் கிட்டயும் சொல்ல கூடாதுன்னு சொல்லி இருக்கா”
“நாங்க யார் கிட்டயும் சொல்ல மாட்டோம்.. என்னன்னு சொல்லு”
பின் ரம்யா சொன்னதை ஹாசினி கூறிவிட்டாள்.
“—————–”
“என்னம்மா ஒன்னும் சொல்ல மாட்டேங்கிறீங்க?”
“திடிர்ன்னு கேட்டதும் ஒன்னும் புரியல ஹாசிம்மா.. நீ வேற யார்கிட்டயும் சொல்லாத.. யோசிக்கலாம்” என்றார் பூம்பாவை.
“அந்த அடாவடி பொண்ணா?” என்று ஹிருதய் முத்தாயியை பற்றி நினைத்துக்கொண்டான்.
தலையில் கட்டுடன் முதன் முதலாக சந்தித்த முத்தாயியின் முகம் கண்முன்னே தோன்றியது அவனுக்கு.
————————
error: Content is protected !!