Skip to content
Post Views: 1,935
அத்தியாயம் 14
“அம்மா, தயவு செஞ்சு அப்பாக்கூட சமாதானமா போயிடுங்கம்மா” என்றான் ப்ரேம் மாலை கல்லூரியில் இருந்து வீடு திரும்பியவுடன்.
Advertisement
“ஆமா அம்மா, ப்ளீஸ்.. இனியும் அப்பாவோட சமாதான முயற்சியில் நாங்க கஷ்டப்பட முடியாது” என்று ஒத்து ஊதினாள் ரம்யா.
“உங்க ரெண்டு பேருக்கும் என்னடா பிரச்சனை இப்ப நான் கோவமா இருக்கிறதுல?”
Advertisement
Advertisement
“என்ன பிரச்சனையா? இங்க பாருங்க” என்று உள்ளிருந்து அவனது வெள்ளை டீ ஷர்டை எடுத்து கொண்டு வந்தான் ப்ரேம். அதில் ஆரஞ்சு நிற சாயம் ஆங்காங்கே அப்பி இருந்தது.
“இது எனக்கு எவ்வளவு பிடிச்ச டீ ஷர்ட்ன்னு உங்களுக்கே தெரியும் இல்ல? உங்களை சமாதானம் செய்றேன்னு, எல்லா துணியையும் ஒன்னா மெஷின்ல போட்டிருக்காரு அப்பா.. ரம்யா துப்பட்டா சாயம் இதுல ஒட்டிருச்சு” என்றான் பாவமாக.
Advertisement
“அதுகூட விடு அண்ணா.. லஞ்ச் பாக்ஸ் நான் பேக் பன்றேன்னு, மூடிய மாத்தி மாத்தி மூடி வச்சிடுறாங்க… இன்னிக்கு பாதி லன்ச் பேக்ல ஊத்திடுச்சு” என்றாள் ரம்யா கடுப்பாக.
“ரம்யா, வாசல்ல கோலம் பார்த்தியா நீ?”
“நான் மட்டுமா பார்த்தேன்.. நம்ம ஏரியாவுல இன்னிக்கு டாப்பிக்கே நம்ம வீட்டு கோலம் தான்”
காலையில் சௌந்தர் நாலு மணிக்கு எல்லாம் யாரும் எழுந்திருப்பதற்கு முன்பாகவே எழுந்து வாசல் தெளித்து கோலம் போட்டிருந்தார். கோலம் என்றால், ஒரு அழகான மாடி வீடு, பக்கத்தில் ஒரு மரம். இதில் ஹய்லைட் என்னவென்றால் வீடு என்றால் ரங்கோலி டிசைன் போல இல்லாமல், உண்மையான வீட்டு டிசைன் பிளான் போல வரைந்திருந்தார். வீட்டிற்கு மரத்திற்கும் இடையில் மலை நீர் சேமிப்பு தொட்டி என்று அதையும் விடாமல் வரைந்து வைத்திருந்தார்.
“ஏம்மா அப்பா என்ஜினீயர்ன்னு கோலத்துல கூடவா காட்டணும்?”
“அட பாவிங்களா? நீங்களும் உதவி செய்ய மாட்டீங்க.. உதவி செய்ற மனுசனை இப்படியா கரிச்சு கொட்டுவீங்க?” என்றார் மாலதி சிரித்துக்கொண்டே.
சரியாக அப்பொழுது, “மாலு மாலு” என்று உள்ளே வந்தார் சௌந்தர்.
“இந்தா மாலு, இன்னிக்கு பூ பிரெஷா கிடைச்சுது. உனக்கு பிடிக்கும்னு வாங்கிட்டு வந்தேன்” என்று மல்லிப்பூவை மனைவியிடம் கொடுத்தார்.
நேற்று இரவே கணவன் மனைவி சமாதானம் ஆகி இருந்தனர். திருமணம் என்றாலும் பார்த்துக்கொள்ளலாம். நேரம் காலம் கூடி வந்தால் நல்லபடியாக நடத்திடலாம். தற்போதைக்கு இந்த விஷயத்தை ஆறப் போடலாம் என்று ஒரு மனதாக முடிவு செய்திருந்தார்கள்.
“இன்னும் எந்த காலத்துல அப்பா இருக்கீங்க.. பூ கொடுத்து எல்லாம் சமாதானம் செய்வாங்களா? அதுவும் அம்மா எல்லாம் ஒரு பூவுல சமாதானம் ஆகுற ஆளா?” என்றான் ப்ரேம்.
“போடா அரை வேக்காடு.. என் புருஷன் எனக்கு வாங்கி தராரு. நாங்க எப்படியோ சமாதானம் ஆகிப்போம், நீ போய் உன் வேலையே பாரு” என்றார் மாலதி.
“மாலதி இன்னிக்கு நானே சமைக்கிறேன்.. நீ ரெஸ்ட் எடுத்துக்கோ” என்றார்.
“அய்யய்யோ..” என்று அலறி விட்டார்கள் பிள்ளைகள் இருவரும்.
———————
அந்த வாரம் சனிக்கிழமை ஸ்ரீகாந்த் ஊருக்கு வந்திருந்தார்.
“ஹாசிம்மா.. எப்படி போகுது டா உன் ஸ்டடீஸ்? இங்க உனக்கு பிரண்ட்ஸ் எல்லாம் கிடைச்சிருக்காங்களா? மயக்கம் எல்லாம் வரலை தானே டா” என்று மகளுடன் பேசிக்கொண்டிருந்தார்.
“நிஜமாலுமே சென்னையை விட இங்க எனக்கு பிடிச்சிருக்கு ப்பா.. அதுவும் மாலதி ஆண்ட்டி மேத்ஸ் செமயா சொல்லி தர்றாங்க.. எனக்கு கான்செப்ட்லாம் ரொம்பவே க்ளியரா இருக்கு. இங்க வந்தப்புறம் எனக்கு மயக்கமே வரலைப்பா.. ஐ பீல் ஹெல்த்தி..”
“குட்.. திரும்ப அந்த வைத்தியர் கிட்ட காட்டணுமா?”
“இனி தேவை இல்லைன்னு தாத்தா சொல்லிட்டாங்க…சரி, உங்களுக்கு புது வேலை எல்லாம் பிடிச்சிருக்கா?”
இவர்கள் பேசிக்கொண்டிருக்கும்பொழுது கையில் ஸ்ரீகாந்திற்கு பிடித்த பக்குவத்தில் காஃபியும் ஹாசினிக்கு ஹார்லிக்ஸும் கொண்டு வந்தார் பாவை.
“இந்த காஃபியை ரொம்பவே மிஸ் பண்றேன் ஹனி” என்று கூறிக்கொண்டே ஆசையாக பருகினார்.
“அங்க டெய்லி பஸ்ல ஏன் போயிட்டு வரீங்க.. காரை எடுத்திட்டு போயிடுங்களேன்” என்றார் பாவை.
“நீங்க அவசரம்னா என்ன செய்வீங்க.. அங்க எனக்கு ஈஸியா தான் இருக்கு. பாதி நாள் முத்து கூட வண்டியில தான் போறேன்”
“யாருப்பா முத்து?”
“அதான் ஹாசி, உங்க அம்மா பிரண்ட் பொண்ணு…”
“அவங்களா?அவங்க எப்படி உங்களை கூட்டிட்டு போவாங்க.. நீங்க எப்படி அவங்களை பார்த்தீங்க?”
பின் அவர் முத்துவை சந்தித்தது, காதம்பரி வீட்டிற்கு அவள் வந்தது, பைக் ஆக்சிடெண்ட் போது அவள் பஞ்சாயத்து செய்தது என்று அனைத்தையும் கூறினார்.
ஹாசினியும் ஆர்வமாக கதை கேட்டுக்கொண்டிருந்தாள்.
“ஹிருதய் எங்க ஹனி?”
“அவன் கந்தசாமி பெரியப்பா கூடத்தான் இருப்பான்.. ஏழு மணிக்கு வந்திடுவான்”
“புதுசா எதாவது வேலைக்கு அப்ளை பண்ணிருக்கானா? இன்டர்வியூ ஏதாவது வந்ததா?இல்லைனா பேசாம அவனை மேலே எம்.பி.ஏ படிக்க சொல்லலாமே ஹனி?”
“அப்பா, எனக்கு ஹோம் ஒர்க் இருக்கு, நான் உள்ளே போறேன்” என்று ஹாசினி எழுந்து உள்ளே சென்று விட்டாள்.
“அவன் ரெண்டு மூனு ஐடியா சொல்றான். உங்க கிட்ட பேசுறதா சொல்லிட்டு இருக்கான்..”
“நீ சொல்லு ஹனி, அப்பத்தான் அவன் கேக்கும் போது நான் என்னை தயார் படுத்தி வச்சிருக்க முடியும்.”
“எப்ப இருந்து உங்க கிட்ட இவ்வளவு பொறுமை வந்துச்சு.. நீங்க என் புருஷன் தானா?”
“ரொம்ப நாள் பிரிஞ்சு இருந்தா அப்படித்தான் சந்தேகம் வருமாம்” என்றார் ஏக்கமாக.
“ஹாஹான்..”
“ஹனி, நிஜமாலுமே உங்க ஊருக்கு வந்துட்டு நீ ரொம்பவே அழகா ஆயிட்ட தெரியுமா? உன் மேல இருந்து கண்ணை எடுக்கவே மனசு வரலை..”
பூம்பாவையின் முகம் அழகாய் சிவந்தது.
“நிஜமா திரும்ப உங்களை எல்லாம் விட்டுட்டு சென்னை போகவே பிடிக்கலை..”
“உங்க ஆபிஸ்ல வொர்க் பிரம் ஹோம் கேட்டு பாருங்களேன்.. அப்ப நீங்களும் இங்கேயே இருக்கலாமே?”
“இப்ப தானே ஹனி சேர்ந்திருக்கேன்.. பார்க்கலாம்.. சரி நீ ஹிருதய் விசயத்துக்கு வா..”
“இங்க நேரடியா விவாசயிகள்கிட்ட பேசி அரிசி எல்லாம் வாங்கி, ஆன்லைன்ல அதை வியபாரம் செய்யலாம்னு அவனுக்கு ஒரு யோசனை..”
“இது எல்லாம் சரியா வருமா?”
“யோசிக்காம எடுத்ததும் இப்படி பேசாதீங்க..”
“எப்படி யோசிக்கணும்னு கூட நீயே சொல்லி தருவ போலயே?”
பாவை ஆழ்ந்த மூச்சை எடுத்துக்கொண்டார். மறுபடியும் பழைய படி சண்டையிட அவருக்கு விருப்பம் இல்லை.
பின் மெதுவாகவே எடுத்து கூறினார்.
“அவன் தினமும் இது சம்பந்தமா நிறைய படிக்கிறான், நிறைய வேலை செஞ்சிட்டு இருக்கான் அதுக்காக.
அதுக்கான வெப்சைட் எல்லாம் கூட அவனே டிசைன் பண்ணி வச்சிருக்கான். எந்த ஒரு காரியத்தையும் சிரத்தையோடு செஞ்சா அது நல்ல படியா நடக்கும்.. அவன் வந்ததும் அவன் கிட்ட தெளிவா எல்லாத்தையும் ஒரு தடவை கேட்டுக்கோங்க.. அப்புறம் உங்க கருத்தை சொல்லுங்க..”
“நீ சொல்றது சரின்னு வச்சிக்கிட்டாலும், பிஸினஸ்ல அவனுக்கு என்ன அனுபவம் இருக்கு சொல்லு?”
“அனுபவம் எப்படி கிடைக்கும்? ஆரம்பிச்சு செஞ்சா தானே அனுபவம் சேரும்?”
“கொஞ்ச நாள் வேலைக்கு போனா, வெளி உலகம் புரியும் இல்லயா?”
“இப்ப அவன் அதுக்காக தான் கந்தசாமி பெரியப்பா கூடவே இருக்கான்.. எல்லாத்தையும் கவனிக்கிறான். உண்மையில அவனுக்கு இதுல இன்டரெஸ்ட்டும் இருக்கு.. திறமையும் இருக்குன்னு தான் எனக்கு தோணுது”
“அதுக்கு எவ்வளவு இன்வெஸ்ட்மென்ட் ஆகும்.. நம்மகிட்ட இருக்கா? இந்த வருஷம் ஹாசியையும் காலேஜ் சேர்க்கணும்”
“பிஸ்னஸ் பத்தி சொன்னதத்துக்கே இப்படி யோசிக்கிறாரே? இவர் கிட்ட மாலதி வீட்ல அவனை மாப்பிள்ளையா கேட்கறதை பத்தி யோசிக்கிறாங்கன்னு சொன்னா என்ன சொல்வாரோ?” என்று மனதிற்குள்ளே புலம்பினார் பாவை.
“பார்த்தியா ஹனி, உனக்கும் இப்ப யோசனையா தான் இருக்கு?” என்று மனைவியின் அமைதியை பார்த்து கூறினார்.
“அப்படி இல்லைங்க.. பணத்திற்கு கொஞ்சம் யோசனை இருக்கு என்கிட்ட. ஆனா முதல்ல நீங்க ஹிருதய் கிட்ட பேசுங்க.. அப்புறம் மத்ததை பார்த்துக்கலாம்”
ஸ்ரீகாந்த் முழுவதுமாக சமாதானம் ஆகவில்லை. இருந்தாலும் சமீபத்தில் கிடைத்த ஞானத்தால் அமைதியாக இருக்கிறார். முன்பாக இருந்தால், உனக்கு தான் எல்லாம் தெரியுமா? என்று வீம்பிற்கு சண்டை பிடித்திருப்பார்.
ஹிருதய்க்கு புது உத்வேகம் பிறந்திருந்தது. முழு மூச்சாக இதில் இறங்கி விடலாம் என்றே அனைத்தையும் செய்துகொண்டிருந்தான்.
அரிசியை எங்கே ஸ்டாக் செய்வது, எப்படி வெளி ஊர்களுக்கு அனுப்புவது என்று எல்லாம் விசாரித்து கொண்டிருக்கிறான். இதை பற்றி கந்தசாமியிடமும் பேசி வைத்திருக்கிறான், அவருக்கு இந்த யோசனை மிகவும் பிடித்திருந்தது, நான் உனக்கு துணை இருக்கேன் என்று அவர் கூறவே இவனுக்கு யானை பலம் வந்தது போல இருந்தது.
அன்று இரவு தந்தையிடம் இவனது திட்டங்களை எல்லாம் விவரித்து கூறினான்.
உண்மையிலே ஸ்ரீகாந்த் அசந்தே போனார் அவனது திட்டமிடலில். இவ்வளவு நுணுக்கங்கள், நேர்த்தி, திட்டமிடல், மெனெக்கெடல் என்று அனைத்தையும் பார்த்து தந்தையாக பெருமையாக இருந்தது அவருக்கு.
கிராமத்தில் சும்மா இருக்கிறான் என்று சிவங்கரி அவனை எவ்வளவு குறை கூறி இருப்பார். ஆனால் அவன் எவ்வளவு தெரிந்து கொண்டும் செய்து கொண்டும் இருந்திருக்கிறான்.
மெச்சுதலாக மகனின் தோளை தட்டிக் கொடுத்தார்.
“நிஜமாலுமே நான் இவ்வளவு பெஸ்ட்டா இருக்கும்னு எதிர் பார்க்கவே இல்லை” என்று உண்மையை ஒப்புக்கொண்டார்.
பிறகு நீண்ட நாட்களுக்கு பிறகு அனைவரும் சேர்ந்து உணவு உண்டார்கள்.
“என்ன ம்மா இன்னிக்கு எல்லாம் அப்பாவுக்கு பிடிச்ச ஐட்டமா செஞ்சிருக்கீங்க?” என்றாள் ஹாசினி உற்சாகமாக.
“பாவம் இல்ல ஹாசி அப்பா, அங்க தனியா இருக்காங்க இல்ல?”
“அம்மா, அது எல்லாம் ஒன்னும் இல்லை. அப்பா இப்ப நல்லா புசுபுசுன்னு ஹெல்த்தியா தான் இருக்காங்க.. அங்க ஸ்வீட்டிம்மா வீட்ல சும்மா ஜம்முன்னு இருந்துட்டு இருக்காங்க..” என்றான் ஹிருதய் சிரித்து கொண்டே.
“என்ன இருந்தாலும் என் கையால சாப்பிடற மாதிரி இருக்காது இல்ல?”
“ஆமா ஹனி, நீ இன்னும் கொஞ்சம் வை.. “ என்று தட்டை நீட்டினார்.
“ஏம்மா, அந்த கேரளா ஜோசியர் சொன்னது எல்லாமே நடந்துட்டே வருது இல்ல?” என்றாள் ஹாசினி.
“ஆமா ஹாசிம்மா..”
“அந்த ஒரு ட்ரிப் நம்ம லைஃப்ல பல சேஞ்சஸ் கொண்டு வந்துடுச்சு இல்ல ப்பா?” என்றான் ஹிருதய்.
“எல்லாம் நல்லதா நடந்தா சந்தோசம் தான். இருந்தாலும் நீங்க இது எல்லாம் அதிகமா நம்ப கூடாது..” என்றார் தந்தையாக.
“போங்க ப்பா.. நான் முழுசா நம்புறேன்.. இங்க வந்து முத்தாயி அம்மாச்சி கோவிலுக்கு போனது, அப்புறம் காந்தலட்சமி சாமி கிடைச்சது, அம்மாக்கு உடம்பு சரி ஆனது, இப்ப அண்ணாக்கு பிசினஸ் ஐடியா வந்தது, அண்ணாக்கு சீக்கிரம் கல்யாணத்துக்கு பொண்ணு தானா தேடி வரது…” என்று ஹாசினி கூறிக்கொண்டே வருகையில்,
“என்னது பொண்ணு வந்ததா?” என்றார் ஸ்ரீகாந்த் அதிர்ச்சியாகி.
“போச்சு.. சில்வண்டு உளறிடுச்சு” என்று பாவை நாக்கை கடித்து கொண்டார்.
“என்ன ஹனி சொல்றா? என்கிட்ட நீ சொல்லவே இல்ல?” என்றார் மனைவியடம் ஆதங்கமாக.
“அது சீரியஸ் எல்லாம் இல்லைங்க.. சும்மா பசங்க அரையும் குறையுமா கேட்டதை வச்சு சொல்லிட்டு இருக்காங்க.. பெரியவங்க பேசிருந்தா நான் சொல்லிருப்பேன்..”
“சரி, எதுவா இருந்தாலும் என்னன்னு சொல்லு” என்று அவர் அழுத்தி கேட்கவும், ஹாசினி ரம்யா கூறியதை எல்லாம் கூறிவிட்டாள்.
“முத்துவா?” என்றார் அவர் நம்பமுடியாமல்.
“நீங்க தானே அப்பா இப்ப அவங்க கூட நிறைய பழகி இருக்கீங்க.. சொல்லுங்க அவங்க நம்ம அண்ணாக்கு மேட்ச் ஆவாங்களா?” என்றாள் ஹாசினி உற்சாகமாக.
ஹிருதய்யும் பாவையுமே ஆர்வமாய் ஸ்ரீகாந்த் முகத்தை பார்த்தனர்.
“என்ன எல்லாரும் என்ன பார்க்கிறீங்க.. முதல்ல பிசினெஸ் ஆரம்பிக்கிற வழியை பார்ப்போம்..” என்றார் கண்டிப்பாக.
ஆனாலும் அவர் மனதில், இது நடந்தால் நல்லா இருக்கும் இல்ல என்று ஆவல் எழுவதை தடுக்க முடியவில்லை.
நெல்லு போட்டா நெல்லு முளைக்கும், சொல்லு போட்டா சொல்லு முளைக்கும்னு கிராமப்புறத்தில் சொல்கிற மாதிரி, மாலதியின் அம்மாவின் ஆசைக்காக, கந்தசாமி உதிர்த்த சொல் இப்பொழுது முளைத்து வளர ஆரம்பித்துவிட்டது.
விஷயம் எப்படியோ ப்ரதமேஷிடம் சென்று, பின் மிருதுளாவிற்கு வந்து அப்படியே சிவங்கரிக்கு சென்றுவிட்டது.
“எல்லாம் அவ இஷ்டமா? அவ அப்பன் வீட்ல உட்கார்ந்து தனி ராஜ்யத்தை நடத்திட்டு இருக்காளோ? நான் உயிரோட இருக்கும் போதே என் பிள்ளை மேலயும் பேரன் மேலயும் னக்கு உரிமை இல்லையே?” என்று அலப்பறையை கூட்டிக்கொண்டிருக்கிறார் சிவங்கரி.
error: Content is protected !!