Skip to content
Post Views: 2,486
காலையிலே அனைவரும் குளித்து தயாராக அமர்ந்திருந்தார்கள். ஒரு பக்கம் சிறியதாக இருந்த அறையினுள் ஹரிஹரன் சென்று முதலில் அங்கே இருந்த சிறிய பிள்ளையார் சிலைக்கு பூ வைத்து, விளக்கு ஏற்றி பூஜை செய்தார். பின் இவர்களை உள்ளே அழைத்து அமரச் சொன்னார்.
“அண்ணா, கேரளான்னா பகவதி அம்மன், ஐயப்பன் இப்படித் தானே இருக்கும், இங்க பிள்ளையார் தான் இருக்கார்”, என்று ஹிருதய்யிடம் ரகசியம் சொன்னாள் ஹாசினி.
Advertisement
“மோளே, ஒவ்வொருவருக்கும் ஒரு தெய்வம், ஒரு குரு இருக்கும். என் குரு எங்க அப்பா, எங்க தெய்வம் இந்த கணேசன்..” என்றார் சிரித்துக்கொண்டே.
இவர் ஒரு பலகையில் அமர்ந்துகொண்டார்.
Advertisement
Advertisement
பின் ஒரு சிவப்பு கம்பளத்தை அவருக்கு முன்பாக விரித்தார். அதன் மேலே சில கட்டங்களை விரைவாக வரைந்தார். ஜாதகத்தில் இருக்கும் கட்டம் போல இவர்களுக்கு தோன்றியது.
பின் கண்களை மூடிக்கொண்டு ஏதோ மந்திரங்களை கூறினார்.
Advertisement
“கேளுங்க.. முதல்ல யாருக்கு கேட்குறீங்க? பெயர் நட்சித்திரம், கோத்திரம், பிறந்த தேதி, நேரம் சொல்லி கேளுங்க..”
ஸ்ரீகாந்த்திற்கு இது எல்லாம் பார்க்கவே பயமாக இருந்தது. அவர் மனைவியை நீயே சொல்லு என்பது போல பார்த்தார்.
ஹாசினியும் ஹிருதய்யும் ஒருவர் கையை ஒருவர் பிடித்து கொண்டு அமர்ந்து கொண்டார்கள்.
இவர்களை பார்த்த அபர்ணா,“பேடிக்கண்டா.. இது மந்திரம் மாயாஜாலம் எல்லாம் இல்ல. அப்பா கடவுள் அருளாலே, கட்டத்தையும் சோழியையும் வைத்து உங்க ஜாதகத்தில் உள்ளதை கணித்து சொல்லுவார். நல்லது மட்டும் தான் அப்பா சொல்லுவார், செய்வார், அதனால தான் எங்களுக்கு வருமானம் கம்மி”
முதலில் ஸ்ரீகாந்த்தின் விவரங்களை கூறி, “நல்ல பெரிய பொசிஷன்ல இருந்தாரு.. திடீர்ன்னு வேலை போயிடுச்சு.. சந்தோசமா தான் இருந்தோம்.. இப்ப திடீர்ன்னு இவருக்கு வேலை போயிடுச்சு. அடுத்து எனக்கு உடம்புக்கு முடியாம போயிடுச்சு” என்று அவர் விவரங்களை கூறி, பின், குழந்தைகளின் விவரங்களை கூறி அவர்களுக்கும் எதுவும் சரியாய் நடக்க மாட்டேங்குது என்றார் பூம்பாவை.
பின் அவர் கண் மூடி மீண்டும் சில மந்திரங்களை கூறி, அவர் அருகில் சுறுக்கு பை போல இருந்ததை கையில் எடுத்தார்.
அதன் உள்ளே கைகளை விட்டு சோழிகளை எடுத்து , மீண்டும் கண்களை மூடி மந்திரங்களை கூறி அந்த கம்பளத்தின் மீது போட்டார். பன்னிரெண்டு சோழிகள் இருந்தன. அதில் சில குப்புறவும் சில நேராகவும் விழுந்திருந்தது.
அடுத்த பத்து நிமிடங்கள் அவர் எதுவும் கூறாமல் அந்த சோழிகளை பார்த்து ஏதோ தனக்குள்ளே பேசிக்கொண்டிருந்தார்.
“குலதெய்வ தோஷம் இருக்கு.. அதான் பிரச்சனைகள் வரிசையா வருது”
“குலதெய்வமா?”
“உங்க குலதெய்வம் எது?” என்றார் ஸ்ரீகாந்த்தை பார்த்து.
“அப்படி எல்லாம் நாங்க கும்பிடறது இல்லையே.. நாங்க இரண்டு தலைமுறைக்கு முன்னாடியே சென்னைக்கு வந்துட்டோம். விஷ்ணு, சிவன், முருகன், அம்பாள் இப்படி எல்லா தெய்வங்களையும் கும்பிடுவோம். சொந்த ஊர்ல இருந்த வீடு, நிலம் எல்லாம் கூட எங்க தாத்தா காலத்திலே வித்துட்டாங்க. ஊர் பக்கம் எல்லாம் நாங்க போறதே இல்லையே”
“மரம் எத்தனை கிளைகள் விட்டு பறந்து விரிந்து வளர்ந்தாலும், அது பூமில நிக்குறது வேர்னாலே தானே? வேர் இல்லாமல் விருட்சம் இல்லையே? குலதெய்வத்தை பூஜிக்கலைனா கஷ்டம் வராம என்ன செய்யும்?”
”அது என்ன தெய்வம்னு எனக்கு தெரியலையே?”
“வீட்ல பெரியவங்க இருந்தா கேட்டு பாருங்க.. குல தெய்வம் உத்திரவு இல்லாம ஒன்னும் செய்யமுடியாது” என்று எழுந்து விட்டார்.
“கல்யாணம் ஆன புதுசுல நான் கேட்டேன் ஹிருதய். அதுக்கு இது என்ன உங்க ஊரு மாதிரி பட்டிக்காடா? சும்மா பொங்கல் பூசைன்னு பேசிகிட்டு இருக்கேன்னு என்னை அவ்வளவு கிண்டலா பேசுனாங்க. உங்க அப்பா, பாட்டிக்கு எல்லாம் ரொம்ப ஆணவம் ஹிருதய். அதான் இங்க இப்படி நிக்குறோம்” என்றார் பூம்பாவை கடுப்பாக.
“விடுங்க ம்மா, இப்ப பழசை பேசி என்ன ஆகப் போகுது? அப்பா, பாட்டிக்கு போன் போட்டு கேட்டு பார்ப்போமே?” என்றான் ஹிருதய் இருவரிடமும்.
“உங்க பாட்டிகிட்ட கேட்டுட்டாலும்..” என்று நொடித்து கொண்டார் பூம்பாவை.
மனைவி சொல்வது சரியே, கண்டிப்பாக அவர் அம்மாவிற்கு தெரிந்திருக்காது என்றே தோன்றியது ஸ்ரீகாந்த்திற்கும்.
“போன்ல தான் சிக்னல் இல்லையே?” என்றாள் ஹாசினி.
“பின், பக்கத்து வீட்டு மொட்டை மாடியில் சிக்னல் வரும் “, என்றாள் அபர்ணா.
“அவங்க கிட்ட கேட்டுட்டு போய் பேசிட்டு வரலாம்” என்றார் ஸ்ரீகாந்த்.
அபர்ணாவை துணைக்கு அழைத்து கொண்டு நால்வரும் அங்கே சென்று சிவங்கரிக்கு அழைத்தார்கள்.
“ஹலோ என்னடா ஸ்ரீ.. நேத்துல இருந்து உங்க யாருக்கும் கால் போகவே மாட்டேங்குது? ரீச் ஆகிட்டிங்களா?” என்று எடுத்ததும் பொரிய ஆரம்பித்துவிட்டார்.
“அம்மா அது பெரிய கதை.. இங்க சிக்னல் கிடைக்கலை.. முதல்ல நான் சொல்றதுக்கு மட்டும் பதில் சொல்லு, மத்ததை அப்புறம் பேசிக்கலாம். நம்ம குல தெய்வம் எது ம்மா?”
“குல தெய்வமா?எதுக்கு கேக்குற ?”
“ஆமா, குலதெய்வ தோஷம் இருக்காம், முதல்ல குல தெய்வம் எதுன்னு சொன்னா தான் மத்ததை பார்க்கமுடியும் சொல்றாங்க”
“ஏன் டா, ஜோசியம் பார்கணும்னா ஜாதகத்தை தானே பார்க்கணும். அதை காட்ட வேண்டியது தானே? அதைவிட்டுட்டு குலதெய்வத்தை எல்லாம் எதுக்கு கேக்கறாங்க ?”
“அவங்களுக்கு தெரியுமா இல்லையான்னு கேளுங்க, சும்மா கதையை விட்டுகிட்டு. தெரியலைன்னா அடுத்து என்னன்னு பார்ப்போம்” என்றார் இந்த பக்கம் இருந்து பூம்பாவை.
“என்ன பாவை, வாய் ரொம்ப நீளுது. எனக்கு தெரியாதுன்னு உனக்கு தெரியுமா? நம்ம குல தெய்வம் அந்த திருப்பதி வெங்கடாச்சலபதி தான். எல்லா குழந்தைகளுக்கும் அங்க தான் முதல் மொட்டை போடுவோம். நாங்க ஒன்னும் சிட்டில இருந்ததுனால பூர்வீகத்தை மறக்கிறவங்க இல்ல” என்றார் அந்தப்பக்கம் சிவங்கரியும் சூடாக.
“திருப்பதி எல்லாம் இருக்காதுங்க..” என்றார் பூம்பாவை ஸ்ரீகாந்த்திடம்.
“உனக்கு தான் எல்லாம் தெரியுமோ? எனக்கு நல்லா தெரியும். குழந்தைக்கு முதல் மொட்டை போடற இடம் தான் குல தெய்வம் கோவில். எங்க மாமியார் காலத்தில இருந்தே இது தான் பழக்கம்”
“இல்ல அத்தை அவர் குலதெய்வ தோஷம் இருக்குன்னு சொல்றாரு… நாம தான் அடிக்கடி திருப்பதி போய்ட்டு வரோமே? போன மாசம் கூட போயிருந்தோம் இல்லையா ?”
“என்ன கேட்டா? என்ன தோஷம்னு அந்த ஜோசியர் கிட்ட கேளு.. திருப்பதி வெங்கடாச்சலபதி தான் நம்ம குலதெய்வம்” என்று அடித்து கூறினார்.
“அம்மா சரியா தான் சொல்லுவாங்க வாங்க போவோம்”, என்று அனைவரும் மீண்டும் ஹரிஹரன் வீட்டிற்குள் வந்தனர்.
“சார், எங்க குல தெய்வம் திருப்பதி வெங்கடாச்சலபதின்னு அம்மா சொன்னாங்க..”
அவர் “அது இல்லை, அது உங்க இஷ்ட தெய்வமா இருக்கும். குல தெய்வம் உங்க சொந்த ஊர்க்கு பக்கத்தில் தான் இருக்கும். நல்லா யோசிச்சு சொல்ல சொல்லுங்க”
அவர் மறந்தும் மனைவியின் பக்கம் திரும்ப வில்லை.
“சரி நான் போய் திரும்ப கேட்டுட்டு வரேன்” என்று மீண்டும் பக்கத்துவீட்டு மாடிக்கு சென்றார். இம்முறை அவர் மட்டுமே சென்றார்.
“அப்பா மட்டுமாவது போயிட்டு வந்திருப்பார் ம்மா நல்லா யோசிச்சு பாரு” என்றார் ஸ்ரீகாந்த்.
“டேய் ஸ்ரீகா, அம்மாக்கு நிஜாமாலுமே தெரியலைடா.. நம்ம எங்க ஊர் பக்கம் போயிருக்கோம் சொல்லு. அப்பா பக்கத்துக்கு சொந்தக்காரங்களோடு பேச்சு வார்ததை கூட இல்லை. ஜோசியர்கிட்ட அவரால கண்டுபிடிக்க முடியமா கேளு.. நான் இங்க வேற யார்கிட்டயாவது கேட்டு பார்க்கிறேன்” என்று தாயிடம் இருந்து போனை வாங்கி பேசினார் மிருதுளா.
“சரி அக்கா.. நான் மதியம் போல திரும்ப கூப்பிடுறேன்”, என்று வைத்து விட்டார்.
“சரி, திரும்ப வேற முயற்சி செய்து பார்க்கலாம் வாங்க” என்று பூஜை அறைக்குள் மீண்டும் சென்றார்கள்.
“இந்தமுறை, உங்களுக்கு மட்டும் கேளுங்க” என்றார் ஹரிஹரன் பூம்பாவையை பார்த்து.
அவர் சொன்னது போல கேட்டார்.
இம்முறை சோழியை மந்திரம் சொல்லி கம்பளத்தில் மேலே போட்டார்.
“உங்க குல தெய்வம் உங்களை பார்க்க துடிச்சிட்டு இருக்கு.. அங்க போங்க.. உங்க உடம்புக்கு வந்த எல்லாமே மாயமா மறைஞ்சு போய்டும்”
“நான் போயி பல வருஷம் ஆச்சுங்களே..”
“அந்த தாயி உங்க மேல எல்லை இல்லா அன்பு வெச்சிருக்கா மா.. உங்க வாழ்க்கையில எல்லா பிரச்சனைக்கும் அவளே வழி காட்டுவா”
“அப்ப எங்க குல தெய்வத்தை கண்டு பிடிக்காட்டி பரவாயில்லயா.. இங்கயே போன போதுமா?” என்றார் ஸ்ரீகாந்த் இப்பொழுது.
அவர் மீண்டும் சோழிகளை பார்த்துக்கொண்டு மனதிற்குள் கணக்கு போட்டுக்கொண்டிருந்தார்.
“உங்க வீட்ல நீ ஒற்றை பெண் பிள்ளையா ம்மா..”
“ஆமா..”
“அப்ப உன் குடும்பத்துக்கு நீ தானே வாரிசு.. அந்த தெய்வத்துக்கு, உங்க அம்மா வீட்டு வழக்கப்படி பூஜை செய்ங்க.. அங்க இருந்தே உங்க கேள்விகளுக்கு பதில் தெரியும்.
அவளே உங்க குலதெய்வத்தை கண்டு பிடிக்க வழி காட்டுவா.. அப்புறம் அங்கேயும் போய் பூஜை செய்துட்டு வாங்க.. எல்லா பிரச்சனையும் நீங்கிடும்”
“வேற பரிகாரம் எதுவும் தேவையா?”
“வேற தோஷம் ஒன்னும் இல்ல..”
மனதில் இருந்து பெரிய பாரம் இறங்கியது போல இருந்தது பூம்பாவைக்கு.
“அடுத்து என் பொண்ணுக்கு.. அடிக்கடி மயக்கம் போட்டுடறா.. டாக்டர்கங்க ஒன்னும் இல்லைனு சொல்றாங்க..”
மீண்டும் சோழியை உருட்டினார்.
“குழந்தைக்கு ஒன்னும் இல்லை, நல்லா வருவா.. உங்க அம்மா வீட்டு குல தெய்வம் பெண்பிள்ளைகளை காப்பாத்துற பொறுப்பை எடுத்திருக்காங்க. அவங்களை வணங்கினால் போதும்”
“அடுத்து என் பையன்”, என்று ஹிருதய்க்கும் கேட்டார்.
“இவனுக்கு சுய தொழில் தான் சிறப்பா வரும்.. ஆனா, குல தெய்வ பூஜைகள் முடிச்சிட்டு ஆரம்பிங்க, நல்லா வருவான்..”
அடுத்து மிருதுளாவிற்காக ஸ்ரீகாந்த் கேட்டார்.
“அவங்களையும் குல தெய்வ பூஜைக்கு கூட்டிட்டு போங்க.. அதாவது உங்க வீட்டு வழி பூஜைக்கு. அவங்க பயப்படற மாதிரி பிரச்சனை இல்லை, ஆனால் ஆரோக்கிய கேடு தெரியுது”
“அய்யோ.. உயிருக்கு ஆபத்தா?” பதறினார் ஸ்ரீகாந்த்.
“இல்லை.. மீண்டு வந்துடுவாங்க..”
“அவ பையனுக்கு கல்யாணம் பார்க்கலாமா?”
ஒவ்வொருவருக்கும் பெயர் நட்சத்திரம் பிறந்த தேதி நேரம் கேட்டுக்கொண்டு அவர்களுக்காக கூறினார்.
“கல்யாணத்துக்கு இன்னும் இரண்டு வருஷம் போகணும், ஆனா அந்த பிள்ளைக்கு முன்னாடி உங்க பிள்ளைக்கு கல்யாணம் ஆகிடும்” என்றார் சிரித்து கொண்டே.
“என்னது? எனக்கா?” என்று ஹிருதய்யின் இதயமே வெளியே வந்துவிடும் போலானது.
“இன்னும் குழந்தை பையனாவே இருக்கானே? அவனுக்கு எப்படி?” என்றார் பூம்பாவை.
“யோகம் நிறைந்த பொண்ணு வரும்.. அவ வந்ததும் உங்க வீட்டு நிலைமையே மேலே போய்டும். உங்க பையன் வீட்ல மீனாட்சி ஆட்சி தான்” என்றார் சிரித்து கொண்டே.
“நீங்களா தேடி போக தேவை இருக்காது.. தானாகவே அமையும்.. கிடைக்கும் போது மகிழ்ச்சியா ஏத்துக்கோங்க”
அவரிடம் ஜோசியம் கேட்ட பிறகு ஆசுவாசமாக தோன்றியது இவர்களுக்கு.
திருச்சூர் போய் ஜோசியம் கேக்றதனாலும் கேட்டுக்கோங்க” என்றார் ஹரிஹரன் இவர்கள் கிளம்புகையில்.
“எங்களுக்கு நீங்க சொன்னதே முழு திருப்தி… உங்களை மாதிரி நல்லவங்க இன்னும் இருக்கிறதை பார்க்கவே சந்தோசமா இருக்கு” என்று உள்ளார்ந்து சொன்னார் பூம்பாவை.
அவர்கள் மறுக்க மறுக்க, ஒரு தொகையை அவர்களிடம் குடுத்து விட்டு தான் கிளம்பினார்கள்.
“நாங்கள் வெளியே தங்கி இருந்தால் இது போல பத்து மடங்காவது செலவு ஆகி இருக்கும். காசை வச்சு உங்க உதவியை நாங்க மதிப்பிடலை. ஆனா இது நியாயமான அளவு பணம் தான்” என்று கட்டாயப்படுத்தி கொடுத்திருந்தார் ஸ்ரீகாந்த்.
“வேற எங்கயாவது சும்மா போய்ட்டு போலாமா?” என்றான் ஹிருதய் அங்கே இருந்து புறப்பட்டதும்.
“நாம, முதல்ல இங்க இருந்தே ஊர்க்கு போயிடலாம். அங்க அம்மா ஊர்ல கோவில் பூஜை முடிச்சிட்டு மத்ததை யோசிப்போம்” என்றார் பூம்பாவை.
அதன் படி அங்கே இருந்து இவர்கள் ஊரை நோக்கி காரை விட்டனர்.
“அம்மாச்சி இருந்தப்ப அங்க போனது இல்லம்மா? ரொம்ப வருஷம் ஆச்சு அங்கே போய்?” என்றான் ஹிருதய்.
“உனக்காச்சு ஞாபகம் இருக்கு அண்ணா. நான் ப்ர்ஸ்ட் ஸ்டாண்டர்ட் படிச்சப்ப போனது. எனக்கு ஒன்னும் நியாபகம் இல்லை” என்றாள் ஹாசினி.
“அங்க எங்க தங்கறது ஹனி? தஞ்சாவூர்ல ரூம் போட்டுக்கலாமா?”
“எங்க வீடு இருக்கும்போது வேற இடத்துல எதுக்கு தங்கணும்?”
பூம்பாவையின் பெற்றோர்கள் இருந்த வீட்டை மாதம் ஒரு முறை ஆள் வைத்து சுத்தப்படுத்தி வைத்துக் கொண்டிருக்கிறார் பூம்பாவை. இது ஸ்ரீகாந்த்திற்கே புது செய்தி.
“உங்க குல தெய்வம் பெயர் என்னம்மா? அங்க நீங்க எப்ப போனீங்க? உங்களுக்கு அங்க பூஜை எல்லாம் எப்படி செய்யறதுன்னு தெரியுமா?”
“எங்க ஊர்ல இருந்து பத்து கிலோமீட்டர் தூரத்துல இருக்கு அந்த கோவில். நான் போய் பத்து வருஷத்துக்கு மேலே ஆயிடுச்சு. எங்க அம்மா அப்பா இருக்கிற வரை வருஷத்துல இரண்டு தடவை போய் பொங்கல் வச்சு படையல் போட்டு சாமி கும்பிட்டு வந்துடுவாங்க. கல்யாணத்துக்கு அப்புறம் நான் ரெண்டு மூனு தடவை தான் போயிருக்கேன்”
“அப்புறம் உங்க பாட்டி , அது என்ன எப்பவுமே பிறந்த வீட்டு கோவிலுக்கு போறதுன்னு ஒரே சண்டை.. நானும் விட்டுட்டேன்”
பேச்சு அபாயகர திசையை நோக்கி செல்வதை உணர்ந்த ஹிருதய், “சரி ம்மா , என்ன சாமி அது?” என்று பேச்சை மாற்றினான்.
“முத்தாயி அம்மாச்சி..”
error: Content is protected !!