Skip to content
Post Views: 2,611
அத்தியாயம் 2
தமிழ்நாட்டில் இருந்து கேரளாவிற்குள் நுழைந்ததுமே வெளியே ஒரே பசுமையாக இருந்தது. பார்ப்பதற்கு அத்தனை புத்துணர்ச்சியாக இருந்தது.
Advertisement
“இன்னும் எவ்வளவு தூரம் இருக்கு ஹிருதய்” என்றார் பூம்பாவை சோர்வான குரலில்.
சமீப காலமாக தான் இவ்வளவு சோர்வு அவரிடம்.
Advertisement
Advertisement
“இன்னும் நாலு மணி நேரம் காட்டுது ம்மா மேப்ல, நீங்க வேணா பின்னாடி போய் தூங்குங்களேன்..”
“இல்ல வேண்டாம்.. கொஞ்சம் ஜன்னல் திறந்து வைக்கிறீயா..?”
Advertisement
ஏசியை ஆஃப் செய்துவிட்டு, ஜன்னலை இறக்கி விட்டான்.
டிராஃபிக் இல்லாததால், ஸ்ரீகாந்த்தும் ஒன்றும் கூறவில்லை. ஜில்லென்ற காற்று, பசுமையான சூழல் மனத்திற்கு இதமாக தான் இருந்தது.
ஹாசினி , “அண்ணா இங்க சீனரி எல்லாம் சூப்பரா இருக்கு அண்ணா… “ என்றாள் உற்சாகமாக.
இதமான மனநிலையோடு வண்டி ஓட்டிக்கொண்டிருந்தான் ஹிருதய். கொஞ்ச தூரம் சென்றதும் வழி சிறிய பாதைகளாக மாறியது. மாலை நான்கு மணி தான், ஆனால் வானம் இருண்டு கொண்டு வரத் தொடங்கியது.
சற்று நேரத்தில் இன்டர்நெட் வேலை செய்யவில்லை. போன்களிலும் சிக்னல் இல்லாமல் போனது.
“அப்பா, மேப் ஒர்க் ஆகலையே? எப்படி போறது?”
“மேப் டவுன்லோட் செய்யலையா நீ?”
“—————-”
“நீங்க தானே மேப் போட்டீங்க.. அவன் பாதியில தானே வாங்கி ஓட்ட ஆரம்பிச்சான், அவனுக்கு எப்படி தெரியும்?”
“ப்ச்ச்ச்.. என்னை சொல்றதுலே இரு.. எனக்கு ஆயிரத்தெட்டு பிரச்சனை, நீங்க யாராவது சுதாரிப்பா இருந்திருக்கலாம் இல்ல?”
“இப்ப என்ன சொல்ல வர்றீங்க? நீங்க மட்டும் பிரச்சனையில இருக்கீங்க, நான் சந்தோசமா டான்ஸ் ஆடிட்டு இருக்கேன்.. அப்படித்தானே?”
“அய்யோ.. நிறுத்துங்க ரெண்டு பேரும்.. இப்ப அடுத்து என்ன செய்யலாம்ன்னு யோசிங்க?”
“கொஞ்ச தூரம் மெதுவா போ… யாராவது வந்தா வழி கேட்டு பார்போம்” என்றார் ஸ்ரீகாந்த்.
“இந்த அத்துவான காட்டுல மழை நேரத்துல யார் வரப் போறா?”
“சும்மா நெகட்டிவா பேசாத ஹனி..”
ஹனி என்று தான் மனைவியை அழைப்பார் ஸ்ரீகாந்த். உன் பேர்ல பூ இருக்கு, பூவில் ஹனி இருக்கும் தானே? அதனால நீ என் ஹனி என்று திருமணம் ஆன புதிதில் கணவன் கூறும்பொழுது உண்மையிலே இனித்தது. நாளடைவில் அதுவே பழக்கமாகியும் விட்டது. கோவமாக இருந்தாலும் சரி, காதலாக இருந்தாலும் சரி.. ஹனி என்ற அவரது அழைப்பு மாறாது.
பத்து நிமிடங்கள் அதே பாதையில் சென்ற பிறகு யாரும் கண்ணிற்கு புலப்படவில்லை.
மேலும் இருள் பரவத்தொடங்கியது. கொஞ்சம் பயமாக இருந்தது ஹிருதய்க்கு
“என்னப்பா செய்யலாம்?” என்றான் பயந்த குரலிலே.
கைக்குள்ளயே வளர்ந்த பிள்ளை. வெளியுலகம் அவ்வளவாக தெரிந்திருக்கவில்லை. கல்லூரி படிப்பு முடிந்திருந்தபோதும், அப்பா அம்மாவை பார்த்தே நிற்கும் இளைஞன்.
“நான் வண்டிய ஓட்டுறேன், நீ வா.. ஹனி நீ பின்னாடி வந்துடு.. ஒன்னும் பேனிக் ஆகக்கூடாது.. கொஞ்ச தூரம் போனா சிக்னல் கிடைக்குதான்னு பார்ப்போம்” என்று நிலைமையை கையில் எடுத்துக்கொண்டார் ஸ்ரீகாந்த்.
ஸ்ரீகாந்த் வண்டி ஓட்ட, ஹிருதய் அருகில் அமர்ந்து கொண்டான்.
இன்னும் ஐந்து நிமிடங்கள் மெதுவாக சென்றார்கள். அங்கே வலது பக்கம் ஒரு நேம் போர்டு கண்ணில் பட்டது. ஆனால் அதில் மலையாளத்தில் ஏதோ எழுதி இருந்தது. பக்கத்தில் 5 கீ.மி. என்று போட்டு வலதுபுறம் திரும்புமாறு ஒரு குறியீடு போடப்பட்டிருந்தது.
“ஏங்க, என்ன எழுதி இருக்குனு தெரியல, ஆனால் ஏதோ ஒரு ஊர் அஞ்சு கிலோ மீட்டர்ல இருக்குன்னு போட்டிருக்கு பாருங்க..” என்றார் பூம்பாவை அதை சுட்டிக்காட்டி.
“ஆமா போட்டிருக்கு…”
“அந்த பக்கமே போங்க… அந்த ஊர்ல போய் விசாரிச்சுக்கலாம். முடிஞ்சா நைட் அங்கேயே தங்கிட்டு நாளைக்கு காலையில புறப்படுவோம்” என்று தீர்வு சொன்னார் பூம்பாவை.
உண்மையிலே அந்த நேரத்தில் அது மிகவும் நல்ல யோசனையாக தோன்றியது அனைவருக்கும்.
மெதுவாக அந்த போர்டு சொன்ன வழியில் ஐந்து கிலோமிட்டர் சென்றார்கள்.
சிறிய கிராமம் போல இருந்தது. ஆள் நடமாட்டமும் இருக்கவே, அனைவரும் சற்றே ஆசுவமாகினார்கள்.
அங்கே ஒரு சிறு கோவில் தென்பட்டது. இவர்கள் அந்த கோவிலின் அருகில் சென்று வண்டியை நிறுத்தினார்கள்.
உள்ளே பூஜை நடப்பது போல தெரியவும், “வாங்க உள்ளே போய் சாமி கும்பிட்டுட்டு அங்கேயே விசாரிக்கலாம்” என்று கூறி முதலில் இறங்கினார் பூம்பாவை.
“அம்மா சூப்பர் ஐடியா ம்மா” என்று சலுகையாக அம்மாவின் இடையை கட்டிக்கொண்டு உடன் நடந்தாள் ஹாசினி.
அது ஒரு சிறிய பிள்ளையார் கோவில். அதிக கூட்டம் எல்லாம் இல்லை.
இவர்கள் நுழையும் சமயம் தீபாராதனை ஆகவும் சரியாக இருந்தது.
ஹாசினி வயதுடைய ஒரு பெண்ணும் இன்னும் இரண்டு ஆண்களும் இருந்தார்கள். அவர்களிடத்தில், இங்கே இருந்து திருச்சூர் செல்லும் வழி என்ன என்று விசாரித்தார்கள்.
ஓரிடத்தில் இவர்கள் இடது பக்கம் திரும்பி வந்திருந்தார்கள். அங்கே வலதுபுறம் திரும்பி இருந்தால் சரியான பாதையை பிடித்திருப்பீர்கள் என்றனர் அவர்கள்.
ஒரு நாற்பது கிலோமீட்டர் இந்த பக்கம் மாறி வந்து விட்டிருந்தார்கள். இப்பொழுது திரும்பி போவது நல்லது இல்லை, மழை கண்டிப்பாக வரும், வழியும் பிடிபடாது என்றும் கூறி சென்றார்கள். அவர்களுக்கு தமிழ் புரிந்தது. பேசும்பொழுது தமிழும் மலையாளமும் கலந்துபேசினார்கள்.
இவர்கள் பேசிக் கொண்டிருந்ததை கேட்டுக்கொண்டிருந்த அந்த சிறுமி,
“ஒன்னு பேடிக்கண்டா.. காலைக்கு கிளம்பிக்கோங்கோ” என்றாள் சினேகமாக.
“இங்கே தங்குவதற்கு ஹோட்டல் கிடைக்குமா?” என்றார் பூம்பாவை அந்த சிறுமியிடம்.
“ஹோட்டல் எல்லாம் கிடைக்கில்லா.. எங்கட வீட்டுக்கு வருமோ?”
“இன்னிக்கு ஒரு நாள் மட்டும் தான்.. எங்களுக்கும் வேற யாரையும் தெரியாது.. உங்க வீட்ல கேட்டுட்டு சொல்றீயா? போன்ல கேட்டுட்டு சொல்லும்மா”
“இவட போன் சிக்னல் கிடைக்கல்லா… வாங்கோ.. மழை பிடிச்சிட்டா போக இயலாது.. சீக்கிரம் வரும்” என்று கூறி அந்த பெண் விரைந்துவிட்டாள் கோவில் வாசலை நோக்கி.
வேற ஒன்றும் செய்ய முடியாது என்று தெரிந்துவிடவே, அமைதியாக மூவரும் பூம்பாவை பின் நின்று கொண்டார்கள்.
“பாப்பா, நாங்க கார்ல வந்திருக்கோம், அதுலேயே போய்டலாம் வா..”
“வேற யார் கார்லயும் ஏறினேன்னு தெரிஞ்சா அம்மா என்னை கொல்லும். நான் முன்னே போறேன், நீங்க பின்னே வாங்கோ..”
“டேய் ஹிருதய் இந்த பாப்பாவை விட்டா,வேற ஒன்னும் செய்ய முடியாது, காரை இங்கேயே பூட்டிட்டு வாங்க. பக்கம் போலத்தான் தெரியுது, திரும்ப வந்து வண்டிய எடுத்துக்கலாம், என்று கூறி அந்த சிறுமியின் பின்னே ஹாசினியின் கையை பிடித்துக்கொண்டு நடக்கத்தொடங்கினார் பூம்பாவை.
“பேக்கை மட்டும் எடுத்திட்டு போய்டலாம் ஹிருதய், வா”, என்று கூறி ஆளுக்கொரு பேக்யை எடுத்துக்கொண்டு அவர்களை பின் தொடர்ந்தார்கள் தந்தையும் மகனும்.
இரண்டு தெருக்கள் தாண்டியதும், ஒரு சிறிய ஓட்டு வீட்டின் முன் சென்று நின்றாள் அந்த சிறுமி. அவள் பெயர் அபர்ணா என்று கூறினாள்
“ஒரு நிமிஷம் இருங்கோ” என்று வீட்டிற்குள் ஓடி சென்று அவள் பெற்றோர்களிடம் விஷயத்தை கூறினாள்.
“தேவை இல்லாத வேலையை அப்பாவும் பொண்ணும் கொண்டு வருவதே வேலை” என்று மலையாளத்தில் உள்ளே அவள் அம்மா பேசியது இவர்களுக்கு கேட்டது. இவர்களுக்கு சங்கடமாக இருந்தது.
அந்த பெண்ணின் தந்தை ஹரிஹரன் வெளியே வந்து, “உள்ளே வாங்க.. இப்பதான் அபர்ணா எல்லாம் சொன்னா, இன்னிக்கு இங்கே தங்கிக்கோங்க… நாளைக்கு காலையில கிளம்பலாம்” என்று தமிழிலே கூறினார்.
“உங்களுக்கு தமிழ் தெரியுமா?”
“நல்லா தெரியும், வாங்க” என்று இன்முகமாகவே வரவேற்றார்.
“நாங்க இன்னிக்கு தங்கறதுக்கு காசு கொடுத்திடறோம். ஹோட்டல் மாதிரி எதுவும் இல்லைன்னு சொன்னாங்க, அதான் இங்கே வந்தோம்” என்றார் ஸ்ரீகாந்த் மெல்ல.
“என் வீட்டம்மா சொன்னதை கேட்டு சங்கோஜப்படாதீங்கோ… நானும் மோளும் ஊர்ல இருக்க பாதி பிரச்னையை தினமும் வீட்டுக்கு கொண்டு வந்துடுவோம். அதான் அவள் அப்படி சொன்னது.. மனசில் வச்சுக்காதீங்கோ..”
சிறிய வீடாக இருந்தாலும் நேர்த்தியாக இருந்தது,
பெரிய வரவேற்பறை போல ஒரு கூடம். அதன் கடைசியில் சிறிய அடுப்படி, பின் ஒரு சிறிய அறை போல ஒன்று தெரிந்தது, பின்னே கொல்லைபுறம் போல. அவ்வளவு தான் வீடு.
“நீண்ட தூரம் பிரயாணம் போல, களைப்பா இருக்கீங்க” என்றார் அவரது மனைவி அனைவருக்கும் தேநீர் கொடுத்து கொண்டே.
உண்மையிலே சூடாக கிடைத்த தேநீர் மிகவும் தேவையாக இருந்தது இவர்களுக்கு. பயம் பதட்டம் அலைச்சல் என்று எல்லாம் சேர்ந்து சோர்ந்து தான் இருந்தனர்.
பின் இவர்கள் நால்வருக்கும் அந்த கூடத்தின் ஒரு புறத்தை ஒதுக்கி கொடுத்தார். கொல்லைப்புறத்தில் ஒரு பக்கம் பாத்ரூம் இருந்தது. வெளியே அபர்ணா, இவர்களுக்காக விறகடுப்பு மூட்டி, வெண்ணீர் வைத்து கொடுத்தாள்.
இவர்கள் குளித்து பிரஷ்ஷாக வரவும் சுட சுட உணவு பரிமாறினார்கள்.,
பாசிப்பயறை வறுத்து ஒன்றிரண்டாக பொடிச்சு, அதனுடன் உடைத்த அரசியையும் சேர்த்து நன்கு குழைய வேக வைத்து, அதில் தேங்காயும் சீரகமும் அரைத்து கலந்து சூடாக கஞ்சி போல தயாரித்திருந்தார் அபர்ணாவின் அம்மா. தொட்டுக்கொள்வதற்கு பப்படம் பொரித்து வைத்திருந்தார்.
அவ்வளவு ருசியாக இருந்தது அந்த உணவு.
“ரொம்ப நல்ல இருக்குங்க.. இப்படி ருசியா நான் இதுவரை சாப்பிட்டதே இல்லை” என்று மனமார பாராட்டினார் பூம்பாவை.
அதன் பிறகு அனைவரும் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள்.
“திருச்சூர்ல எந்தா பணி?”
பூம்பாவைக்கு இவர்களிடம் எதையும் மறைத்துப்பேச வேண்டும் என்று தோன்றவில்லை.
“ஏதோ கஷ்டம் ஒன்னு மாத்தி ஒன்னு. என்ன செய்றதுன்னு புரியாம இருந்தப்ப தான் ஜோசியம் பார்க்கலாம்னு இவங்க சித்தி சொன்னாங்க.. அதுக்காக தான் போயிட்டு இருக்கோம்”
“ஓ அங்கனே! எங்க அச்சன் கூட ஜோசியம் பார்க்கும். அச்சன் சொல்றது அத்தனை சரியா இருக்கும் தெரியுமோ” என்றாள் அபர்ணா.
இந்த பயணமும், இப்படி இவர்கள் வீட்டில் இருப்பதும் தெய்வ சங்கல்பமாக தோன்றியது பூம்பாவைக்கு.
உடனே அவர் ஸ்ரீகாந்த்தை பார்த்தார். அவருக்கும் அப்படி ஒரு எண்ணம் தோன்றத்தான் செய்தது.
“அப்ப எங்களுக்கும் நீங்க ஜோசியம் பார்க்குறீங்களா?” என்றார் பூம்பாவை இப்பொழுது ஹரிஹரனிடம் நேரடியாக.
“ராத்திரி பார்க்க கூடாது.. நாளைக்கு காலையில சூரிய உதயத்திற்கு பிறகு உங்களுக்கு விருப்பம்ன்னா பார்க்கிறேன்”
error: Content is protected !!