Skip to content
Post Views: 2,322
அத்தியாயம் 4
பூஜைக்கு தேவையானதை பூம்பாவை லிஸ்ட் போட, ஸ்ரீகாந்த்தும் ஹிருதய்யும் சென்று அனைத்தையும் வாங்கி வந்தார்கள்.
Advertisement
வெள்ளி அன்று காலையிலே அனைவரும் குளித்து கோவிலுக்கு கிளம்பினார்கள்.
“மேப் போடணுமா ம்மா.. கோவில் பெயர் என்னன்னு போடணும்?” என்றான் ஹிருதய்.
Advertisement
Advertisement
“எனக்கு வழி தெரியும், மேப் எல்லாம் வேண்டாம்”, என்று கூறி கோவிலுக்கு செல்ல வழி கூறினார்.
கிராமத்தில் இருந்து சற்று தள்ளியே இருந்தது அந்த கோவில். கோவிலை சுற்றி அதிகம் வீடுகள் எல்லாம் இருக்கவில்லை.
Advertisement
“என்னம்மா, யாரையுமே காணும், நான் கோவில்னா கூட்டமா இருக்கும்னு இல்ல நினைச்சேன்”
“வருஷத்துக்கு ஒரு முறை திருவிழா நடக்கும், அப்ப மட்டும் தான் கூட்டம் அதிகமா இருக்கும். மத்தபடி ஒவ்வொரு குடும்பமும் அவங்களுக்கு தோதா இருக்கிறப்ப வந்து கும்பிட்டுட்டு போவாங்க.. ஆனா தினமும் காலையிலையும் மாலையிலையும் பூஜை தவறாம நடக்கும்”
பேசிக்கொண்டே, அனைத்து சாமான்களையும் எடுத்துக்கொண்டு உள்ளே சென்றார்கள். நல்ல பெரிய கோவிலாக இருந்தது. கோவிலை சுற்றி நிறைய ஆலமரங்கள் இருந்தன.
கோவில் உள்ளே நுழைந்ததும் முதலில் பிள்ளையார் சன்னதி. அவரை கும்பிட்டுவிட்டு நேரே உள்ளே சென்றால், கருணையே வடிவாக காட்சி தந்தார் முத்துமாரியம்மன்.
இவர்கள் அம்மன் சன்னதிக்கு செல்லவும், கோவில் பூசாரி வந்துவிட்டார்.
“வா ஆத்தா.. நல்லா இருக்கியா? உங்க அப்பச்சி இல்லாம எனக்கு கை உடைஞ்ச மாதிரி இருக்கு.. அவர் தான் கோவிலுக்கு என்ன வேணும் ஏது வேணும்னு கேட்டு செஞ்சு கொடுப்பாரு… “ என்று பூம்பாவையை பார்த்ததும் கண்கள் கலங்க வரவேற்றார்.
“நல்லா இருக்கேன் பூசாரி, நீங்க எப்படி இருக்கீங்க, அப்பா இல்லைன்னா என்ன பூசாரி, என்ன வேணும்ன்னு சொல்லுங்க.. நான் ஏற்பாடு செய்ய பார்க்கிறேன்”
“இந்த ஆளு காசு கறக்க பார்க்கிறார், உங்க அம்மாக்கு ஒன்னும் புரியாது. இவளும் எமோஷனல் ஆகி தானா போய் வலையில விழுகுறா” என்று மகனின் காதை கடித்தார் ஸ்ரீகாந்த்.
“மாப்பிள்ளையை உங்க கல்யாணத்தப்ப பார்த்தது, நல்லா இருக்கீங்களா அப்பு?” என்றார் ஸ்ரீகாந்த்தை பார்த்து.
அவரது அப்பு என்ற அழைப்பில் இவரது முகம் விளக்கெண்ணெய் குடித்தது போல மாறியது. அதை பார்த்து ஹிருதய்கும் ஹாசினிக்கும் சிரிப்பை அடக்க சிரமமாக இருந்தது.
பூசாரிக்கு குத்துமதிப்பா தலையை ஆட்டி வைத்தார்.
“உன் பொண்ணும் பையனுமா ஆத்தா? தம்பிய பார்த்தா, அப்படியே உங்க அப்பச்சியை சின்ன வயசுல பார்த்தாப்புல இருக்கு..”
பிள்ளைகள் சிரித்துக்கொண்டனர்.
“நான் போய் அபிஷேகத்துக்கு எல்லாம் ரெடி செய்றேன். இன்னிக்கு இன்னொருத்தவங்களும் அபிஷேகத்துக்கு கொடுத்திருக்காங்க, வர நேரம் தான். ரெண்டையும் ஒன்னாவே செஞ்சுடலாம்.. நீ அப்புவையும் பிள்ளைகளையும் கூட்டிட்டு போய், முதல் தடவை பிரகாரத்தை சுத்தி முடிச்சிட்டு பொங்கல் வேலையை ஆரம்பித்தா… பொங்கல் வச்சிட்டு மறு தடவை பிரகாரத்தை முடிச்சிட்டு வாங்க.. அப்புறம் அபிஷேகம் பண்ணி, அர்ச்சனை பண்ணிட்டோம்னா, தீபாராதனை முடிச்சிட்டு மூணாவது தடவை பிரகாரத்தை சுத்தி வந்துடலாம். உங்க பூஜை பூராணமாயிடும். உனக்கு தெரியும் தான். இருந்தாலும் நானும் சொல்லணுமில்ல? என்ன அப்பு நான் சொல்றது சரி தானே?” என்று பூம்பாவையிடம் ஆரம்பித்து ஸ்ரீகாந்த்திடம் முடித்தார் அந்த பூசாரி.
நல்ல கருப்பு நிறத்தில், வாட்டசாட்டமாக இருந்தார் பூசாரி. தலை முடி மட்டும் தான் நரைத்து அவரது வயதை காட்டியது. மற்றபடி நல்ல கெட்டியான உடல்வாகு. பல வருடங்களாக இந்த கோவிலில் இருக்கிறார். பரம்பரை பரம்பரையாக இவர்கள் குடும்பம் தான் இங்கே பூசாரி. ஸ்ரீகாந்த் கூறுவதை போல பணத்திற்காக பேசும் மனிதரில்லை. உண்மையான பக்தியும் தூய்மையான மனசும் உள்ளவர்.
பிரகாரம் சுற்றி வருகையில், முருகன் சன்னதி இருந்ததது. அடுத்து அய்யனார் சன்னதி, அதன் பிறகு முத்தாயி அம்மன் சன்னதி…
முத்தாயி அம்மன் சன்னதிக்கு எதிர்புறம் பொங்கல் வைப்பதற்கு தக்க வடிவமைக்க பட்டிருந்தது. அங்கேயே வரிசையாக சிமென்டில் விறகு அடுப்புகள் கட்டி வைத்திருந்தார்கள். ஒரே சமயத்தில் ஆறு பொங்கல் வைக்க முடியும்.
“இங்க தான் பொங்கல் வைக்கணும்” என்று கூறி பூம்பாவை பொங்கல் வைக்க ஆயத்தம் செய்ய தொடங்கினார். அங்கேயே அமர இடம் இருக்கவே மற்ற மூவரும் அமர்ந்து கொண்டார்கள். ஜில்லென்று காற்று வீச அமைதியான சூழல் மனதிற்கு இதமாக இருந்தது.
முத்தாயி அம்மாச்சியின் உருவம் சாந்தமே வடிவாக காட்சி அளித்தது. அந்த காலத்து பெண்கள் அந்த வட்டாரத்தில் அணிவது போல முன் கொசுவம் வைத்து சேலை கட்டியிருந்தார்கள். நேற்று பூம்பாவை கூறிய கதையை கேட்டதாலோ, இல்லை அங்கே தெரிந்த காட்சியாலோ, குதர்க்கமாக யோசிக்காமல் ஸ்ரீகாந்த், கண்மூடி அவரிடம் மனதார வேண்டிக்கொண்டார்.
பின் அமைதியாக அமர்ந்து அவர் அவர் கைபேசியை நோண்ட ஆரம்பித்துவிட்டனர்.
அப்பொழுது பூசாரி சொன்ன இன்னொரு குடும்பமும் வந்து விட்டது. அதில் அந்த குடும்பத்து பெண் வேக வேகமாக முதல் பிரகாரத்தை முடித்து விட்டு, பொங்கல் வைக்கும் இடத்திற்கு வந்துவிட்டார்.
அவருக்கு பின்னாடி அவரது கணவரும், மகன், மகள் மூவரும் ஓட்டமும் நடையுமாக பின் தொடர்ந்தார்கள்.
“ஏம்மா, இப்படி ஓடி ஓடி வர? கொஞ்சம் முன்னமே கிளம்பி வரத்துக்கு என்ன?” என்று திட்டிக்கொண்டே வந்தான் அவரது மகன்.
அதை எல்லாம் காதில் போட்டு கொள்ளாமல்,“அப்பாடா, நல்ல நேரம் இன்னும் இருக்கு.. சும்மா எம் பின்னாடியே பராக் பார்க்காம போய் அபிஷேக சாமான் எல்லாம் எடுத்து கொடுத்துட்டு வாங்க” என்றார் கணவன் பிள்ளைகளிடம்.
அவர்களை வேடிக்கை பார்த்தனர் இவர்கள் மூவரும். பின் இரண்டு பைகளை தூக்கி கொண்டு அந்த அப்பாவும் மகனும் கிளம்பினார்கள்.
“ஹிருதய், இந்த பையில நம்ம பூஜை சாமான்களும் கொஞ்சம் இருக்கு பாரு, நீயும் அதை கொண்டு கொடுத்திட்டு வாயேன்..” என்றார் பூம்பாவை.
சரி என்று அவன் தங்கையை அழைத்துக்கொண்டு அவர்களுடன் இணைந்து சென்றான்.
இன்னும் பத்து நிமிஷத்துல பொங்கலை வைக்கணும், சீக்கிரம் என்றார் அந்த பெண்மணி மகளிடம்.
அங்கேயே சிறிய தண்ணீர் குழாய் இருந்தது. தண்ணீர் பிடித்து அதில் அரிசியை களைந்து அந்த நீரை பானைகளில் நிரப்ப வேண்டும். பூம்பாவை அப்பொழுது தான் தனது பானையில் நீரை நிரப்பி இருந்தார். அந்த தாயும் மகளும் விரைவாக மூன்று பானைகளில் நீரை நிரப்பி வைத்தார்கள். பின் விறகுகளை எடுத்து வைத்து அடுப்பை மூட்டினார்கள். பூம்பாவை ஒரு அடுப்பை மூட்டுவதற்குள் அவர்கள் மூன்றையும் மூட்டி விட்டார்கள்.
பூஜை சாமான்களை கொடுத்துவிட்டு மற்றவர்களும் வந்துவிடவே, பெண்கள் முத்தாயி அம்மாச்சியை வேண்டி, பானையை அடுப்பில் வைத்தார்கள்.
அப்பாடா என்று அந்த பெண் பிறகு தான் சுற்றத்தை கவனித்தார்.
“நேரமாயிடுச்சு, அதான் டென்ஷன்” என்று அசட்டு சிரிப்புடன் பூம்பாவையை பார்த்தார்.
“ஹே…பி ஸ்கொயர் நீயா” என்று கூச்சலிட்டார்.
“ஹே.. எம் ஸ்கொயர் ” என்று பதிலுக்கு கூச்சலிட்டார் பூம்பாவை.
என்னடா இது என்று இரு குடும்பத்தாரும் பார்த்தனர்.
“இரு இரு, முதல்ல பொங்கலுக்கு ஏற்பாடு செஞ்சுடலாம்.. நேரமாயிடும்.. அப்புறம் பேசலாம்” என்று மீண்டும் வேலையில் இறங்கி விட்டார் அவர்.
இடை இடையே ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்து கொண்டார்கள். பூம்பாவையின் முகம் தோழியை கண்டதில் மலர்ந்து விட்டது.
அரிசியை அளந்து எடுத்து வைத்தார்கள். கருப்பட்டியையும் வெல்லத்தையும் இடித்து வைத்தனர். அதற்குள் பானையில் வைத்த நீர் பொங்கி வரவும், சங்கு ஊதி, பொடித்த கருப்பட்டி, வெல்லம் சேர்த்து, அரிசியையும் அப்பொழுதே சேர்த்துவிட்டனர். இங்கே அப்படி வைப்பது தான் வழக்கம்.
தேங்காய் உடைத்து, அதை கீறி, பல்லு பல்லாக நறுக்கி கொண்டார்கள். பொங்கல் வெந்து வரவும், தேங்காய் முந்திரி திராட்சை சேர்த்து, நெய் ஊற்றி, கலந்து விட்டனர். பொங்கல் சேர்ந்து குழைவாக வரவுமே அடுப்பை அமர்த்தி வைத்தனர். அபிஷேகம் அர்ச்சனை எல்லாம் முடிவதர்களுள் அடுப்பின் சூட்டில் அந்த பொங்கல் பதமாக இறுகி வந்துவிடும்.
அதற்குள் பூசாரி அபிஷேகத்திற்கு நேரமாச்சு சீக்கிரம் வாங்க என்று குரல் கொடுக்கவே, அனைவரும் இரண்டாம் முறை பிரகாரம் சுற்றி வந்து, பிள்ளையார் சன்னதிக்கு விரைந்தனர்.
பிள்ளையாருக்கு அபிஷகம் முடித்து, அடுத்து அம்மனுக்கு, அடுத்து முருகன், அடுத்து அய்யனார் என்று வரிசையாக அபிஷேகம் செய்து, பின் அலங்காரம் செய்து தீபாராதனை காட்டி என்று நடந்தது. இறுதியாக முத்தாயி சன்னதிக்கு வந்தார்கள்.
அவருக்கும் அபிஷேகம் முடித்து, பூம்பாவை கொண்டுவந்திருந்த புடவையை சார்த்தினார் பூசாரி. பின் பொங்கலை கொண்டு வந்து பள்ளயம் போட்டார்கள் பெண்கள். ஒவ்வொரு பொங்கல் பானையில் இருந்தும் மூன்று பள்ளயம் போடப்பட்டது. அதிலே விரலி மஞ்சளும் இடித்து ஒரு பக்கம் வைத்து படைத்தனர்.
பின் தீபாராதனை காட்டி அனைவருக்கும் விபூதி குங்குமம் கொடுத்தார்.
அனைவரும் பூஜையை முடித்து மூன்றாவது முறை பிரகாரத்தை சுற்றி வந்து, அங்கேயே ஒரு பக்கமாக அமர்ந்தார்கள். அனைவருக்கும் பொங்கலை வைத்து கொடுத்தனர். பூசாரி அவர் வீட்டில் இருந்து புளியோதரை செய்து வந்திருந்தார் பிரசாதத்திற்கு. சிறிய வாழை இலைகளில் வைத்து பரிமாறினார்கள். அனைவருக்கும் நல்ல பசி. மிகவும் சுவையாக இருந்தது பொங்கலும் புளியோதரையும்.
சாப்பிட்டு கொண்டே தோழிகள் இருவரும் பேச தொடங்கினார்கள்.
“பாவை, உன்னை இங்கே பார்ப்பேன்னு நான் நினைக்கவே இல்லை.. எத்தனை வருஷம் ஆச்சு உன்னை பார்த்து? எப்படி இருக்க?”
“நானும் தான் மாலதி, டென்த் அப்ப பார்த்தது, அப்புறம் தான் நீ மதுரைக்கு போயிட்டியே? இப்ப எப்படி இங்க?”
“நீ பொறந்த வீட்டு பொண்ணுன்னா நான் இங்க வாக்கப்பட்டு வந்த பொண்ணு, பி ஸ்கொயர்”
“அப்படியா? எம் ஸ்கொயர் “
“ஆமா நான் உனக்கு மதனி தெரியுமா? உனக்கு எங்க கல்யாண பத்திரிகை கூட அனுப்பி இருந்தேன், நீ தான் வரலை”
“நான் ரொம்ப ஊர் பக்கம் வரவே இல்ல, அதனால எனக்கு நினைப்பே இல்ல”
“தெரியும் தெரியும், ஆனா உங்க அப்பா அம்மா வந்திருந்தாங்க.. அவங்க தான் சொன்னாங்க.. குதிரை ஏறினவன் காலு மண்ணில படாதாம்ங்கிற கணக்கா சென்னை சீமையிலே இருக்க மாப்பிள்ளைக்கு இந்த கிராமத்து மண்ணுல கால் வைக்க நேரம் தகயலைன்னு… இங்க ஊர்ல எல்லாரும் சொல்லுவாங்க, கனகவேல் மாப்பிள்ளை, சீமை சிங்காரம் பட்டணத்து பனியாரம்..ன்னு..“
இன்னும் வேறு என்ன கூறி இருப்பாரோ, அதற்குள் பக்கத்தில் நின்று கொண்டிருந்த ஸ்ரீகாந்த்திற்கு புரை ஏறிவிட்டது.
‘மாலு..’ என்றார் அவரது கணவர் கண்டிப்பாக.
கண்டிப்பாக சொல்வதை போலத்தான் சொன்னார், ஆனால் மருந்துக்கும் அதில் கண்டிப்பு இல்ல..
“சரி சரி, நீ சொல்லு, எப்படி இருக்க? என்ன செய்ற?”
“நான் சென்னையில தான் இருக்கேன். இது என் கணவர் ஸ்ரீகாந்த், இது பையன் ஹிருதய், பொண்ணு ஹாசினி” என்று அறிமுகப்படுத்தி வைத்தார் பூம்பாவை.
“நாங்க தஞ்சாவூர்ல தான் இருக்கோம். நான் அங்க கவர்ன்மெண்ட் ஸ்கூல்ல மேத்ஸ் டீச்சரா இருக்கேன். இது எங்க வீட்டுக்காரர் சௌந்தர். இது ரம்யா, இது பிரேம்..” என்று அவரும் அறிமுகப் படுத்தினார்.
“ஹே.. எம் ஸ்கொயர் நீ மேத்ஸ் டீச்சரா?”
“அது என்ன எம் ஸ்கொயர்.. பி ஸ்கொயர்..?” என்றாள் ரம்யா.
“எங்க பிரண்ட்ஸ்குள்ள ஆயிரம் இருக்கும், நீ எதுக்கு கேக்குற?” என்று பாய்ந்தார் மாலதி.
அதுவே அனைவருக்கும் ஆர்வத்தை தூண்டியது. அனைவரும் விடாமல் கேட்கவும், மாலதியே கூறிவிட்டார்.
படிப்ஸ் பாவை.. பி.பி… பி ஸ்கொயர்…
மக்அப் மாலதி.. எம்.எம்… எம் ஸ்கொயர்..
இருவரும் ஆறாம் வகுப்பில் இருந்து ஒன்றாக படித்தவர்கள். மாலதியின் அப்பா அவள் பத்தாவது முடித்ததும் மதுரையில் மளிகை கடை வைத்து அங்கே வியாபாரம் செய்வதற்காக குடும்பத்தோடு சென்றிந்தார்கள்.
பாவைக்கு ஆச்சர்யமாக இருந்தது. பத்தாவதில் கஷ்டப்பட்டு தான் மேத்ஸ் பாஸ் ஆகி இருந்தார் மாலதி. ஆனால் பாவையோ ஸ்கூல் ப்ர்ஸ்ட்.
“இன்னிக்கு எங்க நாத்தனாரோட நாத்தனார் வீட்டு கிரகப்ரவேசம், அதுக்காக தான் ஊருக்கு வந்தோம். அதான் அப்படியே, முத்தாயி அப்பத்தாக்கு பொங்கல் வச்சிட்டு போகலாம்னு வந்தோம்”
“மூனு பொங்கல் வச்சீங்களே ஆண்ட்டி” என்றாள் ஹாசினி.
“அதுவா டா, எங்களுக்கு ஒன்னு, எங்க மாமியாருக்கு ஒன்னு, என் ஓர்படியாளுக்கு ஒன்னு.. யார் வச்சாலும் மூனு பேருக்கும் சேர்த்து வச்சிடுவோம்..”
“ஓ, சூப்பர் ஆண்ட்டி..”
“உன்னை மாதிரி தான் எங்க முத்துவும், எல்லாத்தையும் கவனிச்சு கேள்வி கேட்டுகிட்டே இருப்பா..”
“யாரது முத்து?” என்றார் பூம்பாவை.
“என் பெரிய பொண்ணு.. இவன் இரண்டாவது, இவ கடைசி..”
“மூனு பசங்களா உனக்கு?”
இவர்கள் பேசிக் கொண்டிருக்கயிலே, சௌந்தருக்கு போன் வந்துகொண்டே இருந்தது. மதிய உணவிற்கு அங்கே செல்ல வேண்டும். அவரது தங்கை தான் விடாமல் அழைத்து கொண்டிருந்தார்.
போனில் சமாளித்துக்கொண்டிருந்தாரே தவிர மனிதர் மனைவியை அவசரப்படுத்தவே இல்லை.
பார்த்துக்கொண்டிருந்த ஸ்ரீகாந்த்திற்கு என்ன இந்த ஆளு இப்படி இருக்காரு என்று தான் தோன்றியது.
மிருதுளா வீட்டு பக்க விஷயம் என்றால், தான் இப்படி இருப்போமா என்று தான் தோன்றியது அவருக்கு.
“நாங்க கிளம்பறோம் பாவை, இப்ப கிளம்புன்னா தான் சரியா இருக்கும்.. நீங்க எல்லாரும் கண்டிப்பா தஞ்சாவூருக்கு எங்க வீட்டுக்கு வரணும்”, என்று அனைவரையும் அழைத்துவிட்டு, கைபேசி எண்களையும் பரிமாறிக்கொண்டு தன் குடும்பத்துடன் புறப்பட்டார் மாலதி.
—————-
error: Content is protected !!