Skip to content
Post Views: 2,256
விழாக் காணுமே வானம் 02 வத்சலா ராகவன் – மது ஹனி
“சாரலில் சிலிர்த்த நறுமுகை நினைவுகள்”
மார்கழி குளிருக்கு இதமாக மேகப் போர்வையை இழுத்துப் போர்த்திக் கொண்டு இன்னும் கொஞ்சம் நேரம் துயில் கொள்ள ஆவல் கொண்டான் ஆதவன்.
‘பெருமாளே திருப்பள்ளி எழுந்தருளிவிட்டார். உனக்கு இன்னும் என்ன தூக்கம் வேண்டி கிடக்கு’ என்று அதட்டிய மேகத்தின் கர்ஜனை மலை முழுவதும் எதிரொலிக்க அந்த முழக்கத்தில் ஸ்வாதி அர்ஜுன் இருவர் கண்ணிலும் மின்னல் பளிச்சிட்டது.
Advertisement
“கண்ணாடியை ஏத்தி விடு ஸ்வாதி. குளிருது” பாட்டி சொன்னதற்கு எதிர்விதமாக தனது பக்கத்துக் கண்ணாடியை இன்னும் கீழே இறக்கி விட்டாள்.
வளைவில் அவள் ஸ்டீயரிங்கை வளைத்து ஒடிக்க அவளுக்கு முன்னால் சென்று கொண்டிருந்த ஸ்கோடாவின் கண்ணாடியும் கீழே இறங்கியதை கண்டுகொண்டவளின் இதழோரம் சிறு கீற்றாய் புன்னகை மொட்டவிழ ஸ்கோடாவின் சாரதியின் முகமோ மலர்ந்து விகசித்தது.
“மார்கழி மாசத்தில மழை பெய்வது எல்லாம் கலி முத்தி போயிருச்சுன்னு சொல்லும் அறிகுறி” பாட்டி அவர் பாட்டுக்குப் புலம்பிக் கொண்டிருந்தார்.
Advertisement
மேகம் மடை திறந்திட நிமிட நேரத்தில் சட சடவென மாமழை பொழிய தொடங்கியது.
Advertisement
“அர்ஜூன், மழை ஜாஸ்தியா இருக்கு. காரை ஓரமா நிறுத்து. மழை கொஞ்சம் விட்டதும் போகலாம்” மகாலக்ஷ்மி சொல்ல அர்ஜூன் தடுப்புச் சுவரோரமாக காரை நிறுத்தி பார்க்கிங் விளக்குளை எரிய விட்டான்.
அவனது காரின் வேகம் குறைந்த போதே அவன் ஓரமாக நிறுத்தப் போகிறான் என்று அறிந்து கொண்டவள் அவனது காரை முந்திக் கொண்டு சிறிது இடைவெளி விட்டு நிறுத்தினாள்.
“அவன் வண்டிக்குப் பின்னாடியே நிறுத்த வேண்டியது தானே. மலை ஏறும் போது அவன் பின்னாடியே போன. இப்ப இந்த மழையில முந்திகிட்டு போய் நிறுத்தத் தான் வேணுமா” பாட்டி சொல்லவும் ஸ்வாதி வெடுக்கென பாட்டியை திரும்பி முறைத்தாள்.
Advertisement
“இப்போ எதுக்கு முறைக்கிற” என்று அதட்டிய பாட்டியின் மேல் படிந்த விழிகள் அவரைத் தாண்டி காரின் பின்பக்க கண்ணாடியை ஊடுருவ முற்பட்டன.
மழை திரை போட்டிருக்க அவள் பார்வையில் ஒன்றும் புலப்படவில்லை.
அவள் மனதில் ஏமாற்றம் மெல்லப் படர அதை விலக்கி விடும் நோக்கத்தோடு ஸ்கோடாவின் ஹெட்லைட் பிரகாசமாக எரிந்தது.
அவள் அகம் மலர அதை அவள் வதனம் தாங்கி நின்றது ஒரு நொடி தான். அதற்குள் அவளுக்குள் கனன்று கொண்டிருந்த கோபமும் வருத்தமும் எட்டிப் பார்க்க முறைப்பாகத் திரும்பிக் கொண்டாள்.
‘நான் அவனைத் தான் பார்த்தேன் என்று எப்படி தெரிந்து கொண்டானாம்’
‘என்னிடமா கேட்கிறாய்’ என்று மழை அவள் காதருகில் வந்து கேட்க,
“கண்ணாடி கதவை ஏற்றி விடு ஸ்வாதி. பாரு சாரல் இங்க வரை அடிக்குது” என்று பாட்டி மீண்டும் அதட்டினார்.
அப்போதும் ஸ்வாதி கண்டுகொள்ளாமல் இருக்க ரங்கநாதன் மகளை திரும்பிப் பார்த்தார்.
அவரின் ஒரு பார்வையிலேயே அவள் கண்ணாடிக் கதவை முழுவதுமாக ஏற்றி விட்டிருந்தாள்.
தனது காரை முந்திக் கொண்டு அவள் காரை நிறுத்தவும் அதை எதிர்ப்பர்த்திருந்தவன் போல மீண்டும் முகம் மலர்ந்தான்.
‘நீ மாறவே இல்லை குஷ்பூ. மாறவும் மாட்டேன்னு எனக்குத் தெரியும்’ மனதிற்குள்ளே அவளிடம் பேசிக் கொண்டிருந்தான் அர்ஜூன்.
‘எனக்கும் தெரியும்’ மழை அவனிடம் வந்து சொல்லிவிட்டுப் போனது.
வைப்பர் மழையை தள்ளிவிட முனைய, மழை மீண்டும் மீண்டும் வந்து காரின் கண்ணாடி மேல் ஈஷிக் கொள்ளும் விளையாட்டை கண்டு ரசிக்கும் மனநிலையில் அவன் இருக்கவில்லை.
முன்னிருக்கையில் அமர்ந்திருப்பவள் அவனின் பார்வைக்கு மறைவாய் இருப்பாள் என்று தெரிந்தும் அவளைப் பார்த்து விட அவன் மனம் ஏங்கியது.
அப்போது தான் அவன் காரின் ஹெட்லைட்டை ஆன் செய்திருந்தான்.
அவளின் வடிவம் தெளிவாகத் தெரியவில்லை என்ற போதும் அவளது அசைவு அவளது செய்கையை அவனுக்கு உணர்த்தி விட்டிருந்ததே.
கோயிலில் இருவரும் அருகருகே தான் இருந்தனர். இருந்தாலும் முகம் திருப்பிக் கொண்டு முறைத்துக் கொண்டே இருந்தனர்.
அப்போது இல்லாமல் இப்போது ஒருவரை ஒருவர் பார்க்கத் துடிக்கும் இந்த தவிப்பு ஏன்!
வானம் விழாக்கோலம் கொண்டுவிட்டதே!
அப்படி ஒரு நாளில் தானே ஸ்வாதி அர்ஜூன் என்ற இரு மனங்கள் நட்பு என்னும் ஓரிழையில் பின்னிப் பிணைய தொடங்கின.
அவன் நினைவுகள் அந்த நாளுக்குப் பயணிக்க, அவளது நினைவுகளும் அவனோடு கைகோர்த்துக் கொண்டது.
அண்டர் 8 மாநில அளவிலான டென்னிஸ் டோர்னமென்ட்.
எட்டு வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு ஆண் பெண் என்ற பேதம் இன்றி ஒன்றாகவே போட்டிகள் நடைபெற்றன. பத்து வயதில் இருந்தே ஆண்கள், பெண்கள் என தனித்தனியாக போட்டி நடைபெற்றது.
அன்று காலை அரையிறுதி ஆட்டம். அது முடிந்து மதியமே இறுதி போட்டி நடைபெறுவதாக இருந்தது.
“பாட்டி கிட்ட ஆசீர்வாதம் வாங்கிக்கோ” ஸ்ரீதேவி கூறவும் அன்னையின் சொல் தட்டாமல் ஏழு வயதான ஸ்வாதி பாட்டியை நமஸ்கரித்தாள்.
ரங்கநாதன் குரல் குடுக்கவும் அங்கிருந்து ஸ்ரீதேவி அகன்ற நொடி பாட்டியும் பேத்தியும் ஒருவரை ஒருவர் முறைத்துக் கொண்டு நின்றனர்.
அதற்குக் காரணம் இல்லாமல் இல்லை.
ரங்கநாதன் நேஷனல் லெவல் டென்னிஸ் சாம்பியன். சர்வதேச அளவில் கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் கலந்து கொள்ள அவருக்கு ஆசை இருந்த போதிலும் சரியான கோச் அவருக்குக் கிடைக்கவில்லை.
ஒரு விளையாட்டு வீரருக்கு பயிற்சி, திறமை, தன்னம்பிக்கை, விடாமுயற்சி எவ்வளவு முக்கியமோ அதே போல முக்கியம் வாய்ந்தது நல்ல கோச் அமைவது.
தனக்கு கிடைக்காமல் போனது தனது அடுத்த தலைமுறைக்கு கிடைக்காமல் போய்விடக் கூடாது என்று அவர் உறுதி கொண்டார்.
டென்னிஸ் பயிற்சியாளர்களுக்கு என இருக்கும் லெவல்களில் தேர்ச்சி பெற்று சான்றிதழ் பெற்றவர் கோச்சிங் அகடமியை ஆரம்பித்தார்.
கிரிக்கெட்டில் இருக்கும் ஆர்வம் டென்னிஸ்க்கு அவ்வளவாக இல்லாத போதும் சில குழந்தைகள் பகுதி நேரமாக அகடமியில் சேர்ந்தனர்.
“கிராண்ட் ஸ்லாம் போகணும்னா அவ்வளவு ஈசி இல்ல. கம்ப்ளீட் டெடிகேஷன் வேணும். ஆனா இங்க வர குழந்தைகளோட பேரன்ட்ஸ் ஒரு ஸ்டேட்ஸ்க்காக தான் அனுப்பறாங்க” மனைவியிடம் தனது மனத்தாங்கலை பகிர்ந்து கொண்டார்.
அப்போது மூன்று வயது ஸ்வாதி டிவி ரிமோட்டை கையில் கெட்டியாக பிடித்துக் கொண்டு ரங்கநாதன் பின்னே ஒளிந்து கொண்டாள்.
“இந்த வீட்ல ஒரு நியூஸ் கேட்க கூட வழி இல்ல” அவளை துரத்திக் கொண்டு வந்த தன் அன்னையிடம் காரணம் வினவினார் ரங்கநாதன்.
“ஊர் உலகத்தில குழந்தைங்க எல்லாம் கார்ட்டூன் பார்க்க தான் அடம் பிடிக்கும். உன் பொண்ணு மட்டும் உன்னை உரிச்சு வச்சு பொறந்து இருக்கால்ல. டென்னிஸ் மேட்ச் தவிர டிவியில வேற ஒண்ணுமே போட விடாம அலுச்சாட்டியம் செய்தா என்ன பண்றது” அன்னை அங்கலாய்த்துக் கொண்டிருக்க ரங்கநாதனின் கண்கள் பளிச்சிட்டன.
அந்த மூன்று வயதிலேயே டென்னிஸ் மட்டையை தனது பிஞ்சுக் கரங்களில் பற்றி விட்டிருந்தாள் ஸ்வாதி.
தனது கணவனின் லட்சியத்திற்கு முழுமையான ஆதரவு அளித்த ஸ்ரீதேவி மகளுக்கு ஹோம் ஸ்கூலிங் செய்தார். அவளுக்கு வீட்டிலேயே பாடம் கற்பித்துக் கொண்டிருந்தார்.
டென்னிஸ் அவளது ஒவ்வொரு அணுவிலும் ஊறிப்போயிருந்தது.
அது வரை அகடமியில் பயிலும் குழந்தைகளுடன் தான் ஸ்வாதி விளையாடியிருக்கிறாள்.
முதல் முறையாக எட்டு வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கான போட்டிகளில் கலந்து கொண்டாள்.
பல சுற்றுக்களை தாண்டி மாநில அளவிலான அரை இறுதி சுற்றிற்கு முன்னேறி இருந்தாள்.
“இப்படி மூக்குக்கு மேல கோபம் முந்திரிக் கொட்டை போல உட்கார்ந்துட்டு இருந்தா காபி கப் கூட கிடைக்காது” தன்னை பரிகாசம் செய்த பாட்டியிடம் சவால் விட்டாள் ஏழே வயதான ஸ்வாதி.
“இந்த டோர்ணமன்ட் வின் பண்ணி உன் மூக்கை வின்னிங் கப்பாலேயே உடைக்கிறேனா இல்லையா பாரு”
“ஆனாலும் உன் பொண்ணுக்கு இந்த வயசிலேயே இவ்வளவு ஈகோ இருக்கக் கூடாது தேவி. எங்கிருந்து தான் இவளுக்கு இவ்வளவு அகங்காரம் வந்ததோ” தன்னிடம் புலம்பிய மாமியாரிடம் ‘உங்களிடமிருந்து தான்’ என்று நேரடியாக சொல்ல முடியாமல் ஓர் புன்னகையை மட்டும் தந்து மகளை தயார்படுத்த நகர்ந்தார் ஸ்ரீதேவி.
“குவாட்டர் பைனல்ஸ்ல செய்தது போல கோபமா கோர்ட் விட்டு வெளில வரக் கூடாது குட்டிமா” மகளிடம் இதமாக எடுத்துக் கூறினார் ஸ்ரீதேவி.
“நான் கரெக்ட்டா தான் செர்வ் பண்ணேன். அதை தப்புன்னு சொன்னாங்க”
“அதுக்காக கோபமா வெளில வரலாமா. அங்கேயே நின்னு ஜெயித்துக் காட்டணும் குட்டி” ஸ்ரீதேவி சொல்ல தவறை உணர்ந்து “சாரிம்மா இனிமே பண்ண மாட்டேன்” என்று எல்லாம் சொல்லிவிட்டால் அவள் ஸ்வாதி அல்லவே.
“அப்பாவே என்னோட செர்வ் கரெக்ட்ன்னு தான் சொன்னார்”
டென்னிஸ் என்று வந்துவிட்டால் அவளுக்குத் தந்தை தான் குரு. அவர் சொல் தான் வேதம். மற்ற விஷயங்களில் ஸ்ரீதேவியின் சொற்படி கேட்டு நடந்து கொண்டாலும் டென்னிஸ்ஸில் தந்தையைத் தவிர யாருடைய சொல்லிற்கும் செவி சாய்க்க மாட்டாள்.
அரையிறுதியில் அவள் அனைத்து செட்களையும் வென்று இறுதிப் போட்டிக்கு முன்னேறினாள்.
மாநில அளவிலான இறுதி போட்டி தொடங்கவிருந்தது.
டென்னிஸ் கோர்ட்டின் பார்வையாளர் பகுதியில் பள்ளி மாணவர்கள் நிறைந்திருந்தனர். உடன் சில ஆசிரியர்களும் பெற்றோரும்.
என்றும் இல்லாத திருநாளாக இவ்வளவு கூட்டத்தைக் கண்ட ஸ்வாதி சற்றே வியப்பு கொண்டாலும் அவள் டிவியில் பார்த்த கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் இதை விட அதிகமான கூட்டம் இருந்ததால் அவள் மிரளவில்லை.
‘அர்ஜூன், அர்ஜூன், அர்ஜூன்’ என கரகோஷம் எழ இறுதிப் போட்டியில் தனது எதிராளியின் பெயரை பார்வையாளர் கூட்டம் கொண்டாடவும் ஸ்வாதிக்கு கோபம் பொத்துக் கொண்டு வந்தது.
முதல் செர்வ்வை நெட்டில் அடித்து விட்டாள்.
“ஸ்ஸ்” என்று உணர்ச்சிவசப்பட்ட ரங்கநாதனை சமாதானம் செய்த ஸ்ரீதேவி மகளின் கோபத்தைக் கண்டு பயந்தார்.
ஆனால் ரங்கநாதனுக்கு மகளின் கோபத்தில் சற்றே குற்றவுணர்வு ஏற்பட்டது. அவளுக்கு ஆதரவாக அங்கே குரல் எழுப்ப அவரும் ஸ்ரீதேவியும் மட்டுமே இருந்தனர்.
அகடமியில் பயிலும் பிள்ளைகள் கூட ஸ்கூல் இருக்கிறது என்று வரவில்லை.
இன்று மகளோடு போட்டியிட்டு கொண்டிருக்கும் சிறுவனுக்கு ஆதரவாக பள்ளியே திரண்டு வந்ததைக் கண்டவர் மகளின் கோபத்தில் நியாயம் இருந்ததை உணர்ந்தார்.
ஆனால் அவரின் மகள் சிங்கப்பெண்ணல்லவா.
முதல் செட்டே டை ப்ரேக் ஆகிவிட டை செட்டை வென்றிருந்தாள்.
“ஹோ” என்று கூட்டத்தின் ஆரவாரம் சுருதி குறைய தலை நிமிர்ந்து எதிரே நின்றவனைப் பார்த்தாள்.
அப்போது அவனும் அவளையே தான் பார்த்தான்.
முதல் பார்வையில் காதல் மட்டும் தான் பூக்குமா என்ன. நட்பும் முகை விரித்து மலரும்.
தம்ப்ஸ் அப் என கட்டை விரலை அவளை நோக்கி உயர்த்தி அவன் புன்னகைக்க அந்த நிமிடத்தில் ஸ்வாதிக்கு அவன் பிரியமானவனாகிப் போனான்.
ப்ரேக்கில் மகளுக்கு கணவர் அறிவுரை கூறுவார் என்று எதிர்ப்பார்த்த ஸ்ரீதேவி, ரங்கநாதன் எதுவும் பேசாமல் சற்றுத் தொலைவில் இருந்த அர்ஜூனை பார்த்தபடியே யோசனையில் மூழ்கியிருக்க தானே மகளுக்கு எடுத்துச் சொன்னார்.
“பொறுமையா விளையாடுடா குட்டி, கோபப்படாதே”
ஜூஸ் அருந்திக் கொண்டிருந்த ஸ்வாதி “சரிம்மா” என்று கூறவும் ஸ்ரீதேவிக்கு ஆச்சரியம்.
‘இன்னிக்கு மழை தான் கொட்டப்போகுது’ என்று அவர் மனதில் நினைத்த பொழுது யட்ச குமார்கள் ‘ததாத்ஸு’ என்று கூறினார்கள் போலும்.
விளையாட அழைப்பு வந்துவிட உற்சாகமாக ஓடினாள்.
முதல் செட்டை ஸ்வாதி வெல்ல இரண்டாவதை அர்ஜூன் கைப்பற்றியிருந்தான்.
மூன்றாவது செட்டை அர்ஜூனும் ஸ்வாதியும் ஆடிக் கொண்டிருந்த போதே வானம் விழாக்கோலம் பூண ஆரம்பித்தது.
கார்மேகங்கள் ஆயத்த நிலையில் காத்திருக்க வாழ்த்து முழக்கங்கள் துவங்கி விட்டிருந்தன.
டைப்ரேக் கேம் வைத்து சீக்கிரமே ஆட்டத்தை முடிவிற்கு கொண்டு வரலாம் என்று ஆலோசித்து போட்டி நடுவர்கள் முடிவெடுக்க அந்த கேம் நீண்டு கொண்டே போனது. இருவரும் சளைக்காமல் ஆடிக் கொண்டிருந்தனர்.
பெரு மழை வரும் அறிகுறியைக் கண்ட நடுவர்கள் மாநில டென்னிஸ் அசோஷியேஷன் நிர்வாகிகள் மற்றும் விழா ஒருங்கிணைப்பாளர்களோடு ஆலோசனை நடத்தினர்.
“டென்னிஸ்ல ட்ரா என்று ஒன்று இருக்கவே முடியாது” என்று நடுவர் ஒருவர் கூற
“ரெண்டு பிள்ளைகளும் சளைக்காம ஆடுறாங்க. ஆனா மழை ஆரம்பிச்சிருச்சு. இன்னொரு மேட்ச் வைக்கக் கூடிய சூழ்நிலைகள் இல்ல. ரெண்டு பேரோட மொத்த மாட்ச் பாயிண்ட்ஸ் கூட ஒன்னாக இருக்கு. சின்னக் குழந்தைங்க, ட்ரா செய்திடலாம்” என்பதே பலரின் குரலாக இருக்க டென்னிஸ்ஸில் அதிசயமாக ட்ரா அறிவிக்க முடிவு செய்து இரண்டு குழந்தைகளின் கோச்களிடம் ஆலோசனை செய்தனர்.
அர்ஜூனின் கோச்சான அவனது பள்ளியின் உடற்பயிற்சி ஆசிரியர் மற்றும் ஸ்வாதியின் கோச்சான அவளது தந்தை ரங்கநாதன் இருவரும் ஒரு மனதாக நடுவர்களின் முடிவிற்கு ஒப்புக் கொண்டனர்.
“ஸ்டேட் லெவல் அண்டர் 8 சாம்பியன்ஷிப் கோஸ் டு அர்ஜூன் பார்த்தசாரதி அண்ட் ஸ்வாதி ரங்கநாதன்” என்ற அறிவிப்பு அரங்கத்தில் ஒலிக்க பார்வையாளர்கள் அனைவரும் எழுந்து நின்று ஆரவாரம் செய்தனர்.
“நீங்க ரெண்டு பேருமே வின் செய்துட்டீங்க” என்று நடுவர் கூறவும் ஸ்வாதியின் இரு கரங்களையும் தனது கரங்களோடு கோர்த்துக் கொண்ட அர்ஜூன் மகிழ்ச்சியில் குதிக்க ஸ்வாதியும் அதே உற்சாகத்தோடு அவனோடு இணைந்து குதித்தாள்.
ஒரே கோப்பையை இருவரும் ஆளுக்கு ஓர் பக்கம் பிடித்துக் கொண்டு உயர்த்திப் பிடிக்க டென்னிஸ் உலகத்தில் சரித்திரம் படைக்கவிருக்கும் ஓர் பார்ட்னர்ஷிப்பின் முதல் வெற்றியை அந்த அரங்கமே கொண்டாடியது.
இனி வரும் காலங்களில், விழாக் கோலம் பூணும் பல தருணங்களை காணப் போகும் ஆனந்தத்தோடு தனது வாழ்த்துக்களை வாரி இரைத்துக் கொண்டிருந்தது வானம்.
தொடரும்
error: Content is protected !!