Skip to content
Post Views: 2,334
அத்தியாயம் 5
கோவிலுக்கு சென்று வீடு திரும்பியதும் பூம்பாவை சென்று படுத்துவிட்டார். மிகவும் சோர்வாக இருந்தது. வயிறும் வலி எடுக்கவே, அமைதியாக சென்று படுத்து விட்டார்.
Advertisement
“என்ன பன்ணுது ஹனி? டாக்டர் கிட்ட போவாமா?” என்றார் ஸ்ரீகாந்த் மனைவி அருகில் அமர்ந்துகொண்டு.
“காலையில இருந்து படுக்கவே இல்லைல, அதான் சோர்வா இருக்கு. இப்ப அடிக்கடி இப்படித் தானே இருக்கு”
Advertisement
Advertisement
மிகவும் சுறுசுறுப்பான பெண் பூம்பாவை. சில மாதங்களாக தான் எடை கூடி, இப்படி சோர்ந்து இருக்கிறார். வருந்தினாலும் பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை ஸ்ரீகாந்த்.
“நம்ம வேற டாக்டர்கிட்ட காட்டலாம் ஹனி, ஒரு டாக்டர் ஒன்னும் செய்ய முடியாதுன்னு சொல்லிட்டா ஆச்சா? நம்ம வேற ஸ்பெஷலிஸ்ட் கிட்ட காட்டுவோம். சீக்கிரம் நீ பழைய மாதிரி ஆகிடுவ பாரேன். இப்ப ஏதாவது சாப்பிடறீயா? சாப்பிட்டு தூங்குனா கொஞ்ச கூட நேரம் தூங்க முடியும்”
Advertisement
“இத்தனை நாள் ஆச்சு இல்ல உங்களுக்கு என்னை கவனிச்சு கேக்க”, என்றார் குரல் கமற.
ஸ்ரீகாந்தத்திற்கே தன் தவறு புரியத்தான் செய்கிறது. அவர் கண்களும் கலங்கியது.
“சரி விடுங்க, இப்ப சாப்பிட ஒன்னும் வேணாம், ஒரு அஞ்சு நிமிஷம் இப்படி என் பக்கத்துல இருங்க, அதுவே போதும்”, என்று கண்களை மூடி கொண்டார்.
ஸ்ரீகாந்த்தும் அமைதியாக அவர் தலை கோதிவிட்டார்.
“இன்னிக்கு கோவில் பூஜை எல்லாம் நல்லா இருந்துச்சு இல்ல அண்ணா?”
“ஆமா ஹாசி… புளியோதரை தான் செமயா இருந்துச்சு..”
“அம்மா பிரண்ட் அந்த மாலதி ஆண்ட்டியை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு”
“ஆமா, ஆனா நிறைய பேசுறாங்க”
“நீ ஒன்னு கவனிச்சியா அண்ணா? அந்த ஆண்ட்டி பார்க்க ரொம்ப யங்கா இருந்தாங்க.. நம்ம அம்மாக்கு தான் கொஞ்சம் வயசான மாதிரி தெரிஞ்சுச்சு” என்றாள் ஹாசினி கவலையாக.
“எனக்கு அப்படி தெரியல ஹாசி, அம்மாக்கு உடம்பு சரி இல்லை தானே.. அதான் அப்படி தெரியுது”
மனைவி தூங்கியதும் மெதுவாக கதவை சார்த்திவிட்டு வெளியே வந்த ஸ்ரீகாந்த்திற்கு ஊஞ்சலில் அமர்ந்துகொண்டு பிள்ளைகள் பேசுவது காதில் விழுந்தது.
“நம்ம அம்மா இப்ப தானே அண்ணா இப்படி ஆகிட்டாங்க.. நான் நயன்த் படிக்கும்போது கூட ஸ்கூல்ல அம்மாவை பார்த்து எல்லாரும் உங்க அக்காவான்னு தான் கேட்பாங்க..”
“நாமளும் இனிமே அம்மாவை பார்த்துக்கலாம், சீக்கிரம் சரி ஆகிடுவாங்க ஹாசிம்மா. கேரளால அந்த ஜோசியர் தான் அம்மாக்கு சரியாகிடும்னு சொல்லி இருக்காங்க இல்ல? அம்மா சீக்கிரம் பழைய மாதிரி ஆகிடுவாங்க”
“நீ அவர் சொன்னதை நம்புறியா அண்ணா?”
“முதல்ல கொஞ்சம் குழப்பமா இருந்துச்சு. ஆனா இன்னிக்கு முத்தாயி அம்மாச்சி கோவிலுக்கு போனதும் எனக்கே ஒரு பாசிட்டிவ் எனர்ஜி பீல் ஆச்சு ஹாசி.. எல்லா பிரச்சனையும் சீக்கிரம் சரி ஆகிடும் பாரேன்..”
ஸ்ரீகாந்த்திற்கும் மகன் கூறுவது போல தான் தோன்றியது. பிள்ளைகளை தொந்திரவு செய்யாமல் மீண்டும் அறைக்குள் சென்று அமைதியாக மனைவியின் அருகில் படுத்துவிட்டார்.
——–
மாலதி கோவிலில் சொல்லியதோடு விடாமல், போன் செய்து இவர்களை கண்டிப்பாக வீட்டிற்கு வரவேண்டும் என்று வற்புறுத்தி அழைத்தார்.
அதனால் மறுநாள் காலையிலே கிளம்பி தஞ்சை பெரிய கோவிலுக்கு சென்று அந்த பிரகதீஸ்வரரையும் பெரியநாயகி அம்மனையும் தரிசித்துவிட்டு, மாலதி வீட்டிற்கு சென்றார்கள்.
“வாங்க வாங்க” என்று ஆரவாரமாய் வரவேற்றார் மாலதி.
ஏற்கனவே கோவிலில் அறிமும் ஆகியிருந்ததால், எளிதாக பழக முடிந்தது இம்முறை.
பிரேம் பொறியியல் முதலாம் ஆண்டிலும், ரம்யா பத்தாம் வகுப்பிலும் படிக்கிறார்கள். பிரேமும் ரம்யாவும் ஹிருதயோடும் ஹாசினியோடும் ஆர்வமாய் பேசினார்கள்.
“இங்க பின்னாடி கிரௌண்ட்ல கிரிக்கெட் விளையாடுறாங்க. நீங்க வரீங்களா?” என்றான் பிரேம்.
ஹிருதய்க்கும் ஆசையாக இருக்கவே அவன் பிரேமுடன் சென்றுவிட்டான். ‘சாப்பிடற நேரத்திற்கு வந்திடனும்’ என்று கூறியே அனுப்பி இருந்தார் மாலதி.
“நீ வா ஹாசினி, உனக்கு போர்ட் கேம்ஸ் பிடிக்குமா? நிறைய இருக்கு” என்று ரம்யா ஹாசினியை அவள் ரூமிற்கு அழைத்து சென்றுவிட்டாள்.
சௌந்தர் ஒரு சிவில் என்ஜினீயர். சொந்தமாக ஒரு கன்ஸ்டரக்ஷன் கம்பெனி நடத்தி வருவதாக கூறினார். இங்கே அக்கம் பக்கத்து கிராமங்களில் வீடுகள் கட்டிக்கொடுக்கிறார்கள்.
“பெரிய பட்ஜெட்டில் எல்லாம் செய்வது இல்லை. சின்ன சின்ன பட்ஜெட் வீடுகள் தான் அதிகமா செய்றோம்” என்றார்.
மிகவும் எளிமையாக வெளிப்படையாக பேசினார் சௌந்தர்.
“ஏன் அப்படி? பெரிய பெரிய ப்ரொஜெக்ட்ஸ் எடுக்கலாமே? அப்பார்ட்மெண்ட்ஸ் எல்லாம் செஞ்சா நல்லா லாபம் வருமே?” என்றார் ஸ்ரீகாந்த்.
“லாபம் வரும் தான் சார், ஆனா இப்ப செய்ற வேலைல இருக்கிற திருப்தி கிடைக்குமா தெரியலை..”
‘இவர் என்ன சமூக சேவையா செய்றார்?’ என்று மனதிற்குள்ளே கௌண்ட்டர் கொடுத்து கொண்டார் ஸ்ரீகாந்த்.
“நீங்க நினைக்கிறது எனக்கு புரியது சார். நான் சமூக சேவை எல்லாம் செய்யலை.. ஆனா, வீடு அப்படிங்கிறது ஒரு கனவு.. அந்த கனவு சிட்டில இருக்கிறவங்களுக்கு மட்டும் இல்ல கிராமத்தானுக்கும் இருக்கும்… பணக்காரங்களுக்கு மட்டும் இல்லை, ஏழைகளுக்கும் இருக்கும்.
பெருசா இல்லைனாலும், சின்னதா தனக்குனு ஒரு வீடு.. அதை அழகா அவங்களுக்கு பிடிச்சி மாதிரி கட்டணும்னு ஆசை.. அதுக்காக கஷ்டப்பட்டு உழைச்சு, காசு சேர்த்து என்கிட்டே வருவாங்க.. அப்படி இருக்கிறவங்களுக்கு செஞ்சு கொடுக்கிறதுல எனக்கு ஒரு சந்தோசம்.
இலவசமா எல்லாம் செய்ய மாட்டேன், ஆனா நியாயமான காசு வாங்கிட்டு செஞ்சு கொடுப்பேன். வீட்டை முடிச்சதும், அவங்க முகத்துல தெரியற மகிழ்ச்சிக்கு ஈடு இணையே இல்ல சார்”
‘இப்படியும் யோசிக்கலாமா?’ என்று தான் தோன்றியது ஸ்ரீகாந்த்திற்கு.
ஆண்கள் பேசிக்கொண்டிருக்கையில், பெண்கள் அடுப்படிக்கு சென்றனர்.
“நீ இரு பி ஸ்கொயர், நான் பார்த்துக்கிறேன்” என்று கூறிய தோழியை, “திரும்ப எப்ப சந்திக்க முடியுமோ? நான் உன் கூடவே பேசிகிட்டு இருக்கேன்” என்று கூறி அவருடனே நின்றுகொண்டு சிறு சிறு உதவிகள் செய்து கொடுத்தார் பூம்பாவை.
பூம்பாவை சுருக்கமாக தங்கள் பிரச்சனைகளை கூறி எதற்காக வந்திருக்கிறோம் என்பதையும் கூறிவிட்டார்.
“அவ்வளவுதானே.. இரு எங்க மாமனாரை வர சொல்றேன், அவர் வந்தா சீக்கிரம் கண்டுபிடிச்சிடலாம்”
“அவருக்கு எப்படி மாலதி தெரியும்? எங்க மாமியாருக்கு தெரியாதப்ப…”
“எங்க மாமனார் உங்க அப்பாவுக்கு ஒரு வகையில பங்காளி முறை தான் வேணும். அவங்களுக்கு இந்த பக்கம் எல்லாம் நல்ல பழக்கம், மாமாவால கண்டிப்பா முடியும். எப்படியும் இன்னிக்கு நண்டு சமைக்கிறேன், அவருக்கு பிடிக்கும், வந்தா ஒரு வாய் சாப்பிட்டு அப்படியே உங்களையும் பார்த்துட்டு போவாரு”
“அவங்க எங்க இருக்காங்க?”
“உங்க ஊருக்கு பக்கம் தான் எங்க கிராமமும். மாமா அத்தை எல்லாம் அங்க தான்.. நிலம் எல்லாம் இருக்கு, அதனால அதை விட்டுட்டு இங்க வந்து தங்க மாட்டாங்க.. வண்டி எடுத்தா அரைமணி நேரம் தானே.. கூப்பிட்டா உடனே வந்துடுவாங்க. இப்ப நாத்தனார் வந்திருக்கு, இல்லைனா அத்தையையும் கூட்டிட்டு வர சொல்லலாம்” என்று தோழியிடம் கூறி விட்டு,
“என்னங்க, உங்க அப்பாக்கு போன் போட்டு மதியம் சாப்பாட்டுக்கு வந்துட்டு போகச்சொல்லுங்க.. இவங்க வந்ததையும் சொல்லியே கூப்பிடுங்க” என்று கணவருக்கு குரல் கொடுத்தார் அடுப்படியில் இருந்தே.
“சரி மாலு” என்று உடனே கைப்பேசியை எடுத்து தன் தந்தைக்கு அழைத்தார்.
இம்முறையும் ஸ்ரீகாந்த்திற்கு தோன்றியது ‘சரியான பொண்டாட்டி தாசனா இருப்பான் போல…’ என்றுதான்.
பாவம் அவர்களது உண்மையான அன்பை புரிந்து கொள்ளும் அளவிற்கு அவருக்கு தான் அறிவு இல்லை.
ஹாசினியும் ரம்யாவும் நன்றாக ஒட்டிக்கொண்டனர். இருவருக்கும் இடையில் சூப் கொண்டு கொடுத்தார் மாலதி.
“இவ்வளவு கேம்ஸ் வச்சிருக்கியே? யார் கூட விளையாடுவ ரம்யா?”
“மோஸ்ட்லி எங்க அக்கா கூடத்தான் விளையாடுவேன் ஹாசினி. பிரீயா இருந்தா அம்மா அப்பா பிரேம் யாராவது வருவாங்க.. பக்கத்து வீட்டு ஸ்வாதி கூட விளையாடுவேன், ஆனா அவ ஒழுங்காவே விளையாட மாட்டா..”
“அப்படியா சரி, உங்க அக்கா எங்க?”
“அவங்க லா படிக்கிறாங்க.. சென்னையில ஹாஸ்டெல்ல இருக்காங்க.. எங்க அக்கா செம பிரேவ்… செம ஸ்ட்ரோங்…. “ என்று அக்காவை பத்தி தான் நிறைய பேசினாள்.
“நீங்க சண்டைஎல்லாம் போட்டுக்க மாட்டீங்களா?”
“நல்லா போடுவோமே! அக்கா கூட சண்டை போட்டாத் தான் எனக்கு நல்லாவே இருக்கும். அக்கா கூட சண்டை போட்டு யாராலும் ஜெயிக்கவே முடியாது தெரியுமா? நான் கடைக்குட்டின்னு என்கிட்ட மட்டும் குறைச்சு சண்டை போடுவா.. ஆனா அண்ணாக்கும் அக்காக்கும் அடிதடி சண்டையே நடக்கும், அம்மா வந்தா மட்டும் எல்லாரும் கப்சிப்..”
“அம்மான்னா பயமா?”
“ஆமா… லைட்டா.. சரி உங்க அம்மா எப்படி? ஸ்ட்ரிக்டா?”
“எங்க அம்மா ரொம்ப ஸ்வீட்.. அப்பாகிட்ட மட்டும் சண்டை போடுவாங்க.. எங்களை திட்ட எல்லாம் மாட்டாங்க ..”
“ஓ இங்க அப்படியே தலை கீழ்.. எங்க அம்மா சொன்னா எங்க அப்பா சரின்னு மட்டும் தான் சொல்லுவாங்க.. அதனால் சண்டையே போட்டுக்க மாட்டாங்க..
அக்கா கூட ‘ஏம்பா அம்மா எது சொன்னாலும் சரி சரின்னு எல்லாத்துக்கும் சொல்றீங்கன்னு அப்பாவை கேட்பா, அதுக்கு ‘அம்மா சரியாதான் தங்கம் சொல்லுவாங்ன்னு’ ஒரே வார்த்தையிலே முடிச்சிடுவாரு”
இப்படி ஆண்கள் ஒருபக்கம், பெண்கள் ஒரு பக்கம், பிள்ளைகள் ஒரு பக்கம் என்று அனைவரும் ஸ்வாரசியமாக பேசிக்கொண்டிருக்கையில், புல்லட்டில் கம்பீரமாக வந்து இறங்கினார் சௌந்தரின் அப்பா, கந்தசாமி.
பக்கா விவாசாயி.. தமிழ் பிரியர்ன்னு சொல்லலாம், இல்லை தமிழ் வெறியர்ன்னு கூட சொல்லலாம்.
அவர் வந்ததும் அனைவரையும் சாப்பிட அழைத்தார் மாலதி. ஹிருதய்யும் பிரேமும் வந்துவிட்டார்கள்.
நண்டு குழம்பு, நாட்டுக்கோழி பிரியாணி, மட்டன் சுக்கா என்று தடபுடலாக விருந்தை தயாரித்திருந்தார் மாலதி.
“ஏன் டீச்சர், நண்டுல மிளகு காரம் கொஞ்சம் தூக்கலா போட்டிருக்கலாம்” என்றார் கந்தசாமி.
‘யாரை கூறுகிறார்?’ ஆங்… என்று பார்த்தார் பூம்பாவை.
“அவங்க காரம் அதிகம் சாப்பிட மாட்டாங்களாம் மாமா, அதான் குறைச்சு போட்டேன்..” என்றார் மாலதி பதிலுக்கு.
“ஆனா, மட்டன் சுக்கால்ல காரம் தூக்கலா இல்ல இருக்கு டீச்சர்?”
“அது அவங்க வரத்துக்கு முன்னவே நம்ம பக்குவத்துல வச்சிட்டேன் மாமா..” என்றார் மாலதி பொடுபொடுவென.
“அதானே கணக்கு டீச்சர் கணக்கு எப்படி தப்பா போகும்ங்கிறேன்!” என்று கூறி சத்தமாக சிரித்தார் தாத்தா.
இவர்கள் பேசிக்கொள்வதை ஆ என்று தான் பார்த்திருந்தார்கள் ஸ்ரீகாந்த் குடும்பத்தினர்.
“என்ன அண்ணா அப்படி பார்க்கிறீங்க? எங்க வீட்ல ஒவ்வொன்னும் ஒரு ரகம்.. ஆனா எல்லாமே கிரகம் தான்” என்றான் பிரேம் ஹிருதய்யிடம் ரகசியமாக.
ஹிருதய்க்கு ஸ்வாரஸ்யமாக இருந்தது. அண்ணனுக்கு பக்கத்தில் அமர்ந்திருந்த ஹாசினிக்கும் இவர்கள் உரையாடல் கேட்டது. அவளும் பிரேம் பேசுவதை உற்று கவனித்து கொண்டிருந்தாள்
“எங்க அப்பா ஒரு அப்பாவி.. ஆனா சரியான மனைவி பைத்தியம்.. எங்க அம்மான்னா தான் அவருக்கு எல்லாமே..”
“அடுத்து எங்க தாத்தா எப்பவுமே அடப்பாவி லிஸ்ட் தான், இவரு ஒரு தமிழ் பைத்தியம்… “
“பெரியவங்களை அப்படி எல்லாம் சொல்ல கூடாது பிரேம்”
“நீங்களே புரிஞ்சுக்குவீங்க ப்ரோ…”
“சரி சரி.. அப்புறம் சொல்லுங்க” என்றாள் ஹாசினி ஆர்வமாக.
“என் தங்கச்சி ஒரு அக்கா பைத்தியம்.. எப்ப பார்த்தாலும் அக்கா பேண்டஸில சுத்திட்டு இருப்பா”
“எங்க அம்மாகிட்ட எல்லார் கேக்குற கேள்விகளுக்கும் பதில் இருக்கும், ஆனா அவங்க கேள்விக்கு மட்டும் நம்ம கிட்ட பதிலே இருக்காது..”
“சூப்பர் ப்ரோ” என்றாள் ஹாசினி.
“இவங்களை எல்லாம் விடுங்க.. எங்க வீட்ல இன்னொரு ஸ்பெஷல் கேரக்ட்டர் இருக்கு.. என்னோட அக்கா.. சரியான புளுகு மூட்டை.. என் அக்கா.. சென்னைல லா படிச்சிட்டு இருக்கு.. அந்த கடவுளே வந்தா கூட அவ எது உண்மையா சொல்றா எத அடிச்சு விடறான்னு கண்டுபிடிக்கவே முடியாது..”
ஹிருதய் புன்னகையுடன் பிரேம் பேசுவதை கேட்டுக்கொண்டே சாப்பிட்டான். கொஞ்ச நாட்களாகவே இறுக்கமாக இருப்பவனுக்கு பிரேமின் பேச்சு இதமாக இருந்தது.
“அதுவும் எங்க தாத்தாவும் அவளும் டெட்லி கோம்போ ப்ரோ.. வெரி டேன்ஜெரஸ்..”
உணவிற்கு பின் அனைவரும் வரவேற்பறையில் அமர்ந்து பேச தொடங்கினார்கள்.
“சொல்லும்மா பாவை, உங்க அப்பச்சியும் நானும் அய்யாக்கள் மக்கள். உனக்கு நியாபகம் இருக்கா?”
“இல்ல பெரியப்பா, இப்ப மாலதி சொன்னதும் தான் தெரிஞ்சுது”
“ஊர் பக்கம் வந்து போய்கிட்டு இருந்தா தானே நாலு விஷயம் தெரியும்.. சரி,
மாலதி சொல்லுச்சு.. உங்க குல தெய்வத்தை கண்டுபிடிக்க வந்திருக்கீங்கன்னு..”
‘இவரிடம் மாலதி எப்பொழுது கூறினார், எல்லாரும் இங்கே ஒன்னா தானே இருந்தோம்’ என்று வியப்பாக இருந்தது பூம்பாவைக்கு.
பின் ஸ்ரீகாந்த்தின் ஊர் பெயரை கூறினார் பாவை,
“உள்ளுர்லயே தான் குல சாமி இருக்கும்ன்னு இல்ல.. இப்ப முத்தாயி தான் நமக்கு எல்லாருக்கும் குலதெய்வம், நாம பக்கத்து பக்கத்து ஊர் சேர்ந்தவங்க தானே?”
அடுத்ததாக சொந்த ஊரில் சென்று விசாரிக்கலாம் என்று நினைத்திருந்தார் ஸ்ரீகாந்த்.
“உங்க அங்காளி பங்காளிங்களை கேட்டா தெரிஞ்சிடும். அவங்க கிட்ட கேட்டீங்களா?” என்றார் ஸ்ரீகாந்த்தை பார்த்து.
அவர் எங்கே ஊர் பக்கம் எல்லாம் வந்திருக்கிறார். அவர் விழிக்கவும்,
“சுத்தம்.. உங்க அப்பாவை எனக்கு தெரியும்… அவர் தானே உங்க கல்யாணத்தை பேசுனது. அப்ப அவர் கூட உங்க பங்காளியை வச்சு தான் கல்யாணம் பேசுன மாதிரி நியாபகம்… இருங்க நான் கேட்டு சொல்றேன்” என்று தனது கைபேசியை எடுத்து நாலைந்து பேர்களுக்கு பேசினார்.
“பின்பு, அவங்கதான், நீ என் பையன் வீட்டுக்கு அவங்களை கூட்டிட்டு வா” என்று ஒருவரிடம் கூறினார்.
‘என்ன நெட்வர்கிங்’ என்று வியந்து பார்த்துக்கொண்டிருந்தான் ஹிருதய்.
“உங்க தாத்தா சூப்பர் ரம்யா..” என்றாள் ஹாசினி ரம்யாவிடம்.
ரம்யாவிற்கு பெருமையாக இருந்தது.
அடுத்த அரைமணி நேரத்தில் ஸ்ரீகாந்த்தின் பங்காளி என்று ஒருவர் வந்தார். பின் அவர் மூலமாக இன்னும் நான்கு பேர்களை கண்டுபிடித்து இவர்கள் வீட்டிற்கு அழைத்து வந்து விட்டார்.
அப்பொழுதே ஸ்ரீகாந்த் தன் அம்மாவிற்கு அழைத்து நடப்பவைகளை கூறினார்.
“நீங்களும் அக்காவும் புறப்பட்டு பாவை வீட்டுக்கு வந்திடுங்கம்மா” என்று கூறி வைத்து விட்டார்.
ஸ்ரீகாந்த்தின் கிராமம் தஞ்சாவூரில் இருந்து கும்பகோணம் செல்லும் வழியில் இருந்தது.
வந்தவர்கள் நால்வருமே, குடும்பத்துல பல கஷ்டம்.. குல தெய்வத்தை எல்லாம் பார்த்து பல வருஷம் ஆச்சு என்று கூறினார்கள்.
“கூறு கெட்டவய்ங்களா… குல தெய்வத்தை மறந்தா கஷ்டம் வராம என்ன வரும்?” என்றார் காரமாக கந்தசாமி.
அதில் இருவர் “நம்ம ஊரு கருமாரி அம்மா தானுங்களே குலதெய்வம், அதை நாங்க கும்பிட்டுட்டு தான் இருக்கோம்” என்றனர்.
“இல்ல, அந்த கோவில் வந்து முப்பது வருஷம் தான் இருக்கும்.. அதுக்கு முன்னவே வேற தெய்வம் இருக்கும், யார் வீட்லயாவது வயசானவங்க இருந்தா கேட்டு பாருங்க..” என்றார் கந்தசாமி
இப்படியாக அடுத்த ரெண்டு மணி நேரம் கைபேசி அழைப்புகள், பேச்சு வார்த்தைகள் என்று சென்றது.
“நம்ம ஊர்ல இருந்து கிழக்கே அஞ்சு மைல் நடந்தா, காட்டு பாதை ஒன்னு வரும். அங்க வடக்கு பக்கம் திரும்பி ஒரு மைல் நடந்தா ஒரு கோவில் இருக்கும்னு அப்பத்தா சொல்லுது. முதல்ல அங்க தான் சாமி கும்பிட்டு இருந்தாங்களாம், அப்புறம் கருமாரி கோவில் கட்டவும், கருமாரி ஆத்தாவின் சக்தியை பார்த்து இங்கேயே கும்பிட ஆரம்பிச்சிட்டோம்னு சொல்லுது” என்று வந்தார் ஒரு பங்காளி.
“அந்த பக்கம் கோவில் எதுவும் இல்லையே” என்றனர் மற்றவர்கள்.
சௌந்தருக்கு தான் அக்கம் பக்கம் உள்ள எல்லா கிராமங்களும் அத்துபடி ஆகிற்றே.
“இல்ல, அந்த அப்பத்தா சொல்ற பக்கம் ஆள் நடமாட்டம் இல்லாம காடு தான் மண்டி கிடக்குது. ரோட் பக்கம் இருக்கிற இடத்தை மட்டும் சுத்தப்படுத்துறாங்க. உள்ளார என்ன இருக்கும்னு சொல்ல முடியாது” என்றார் அவர்.
“உங்க அப்பத்தா சொல்ற மாதிரி அந்த பக்கம் எதுக்கும் தேடி பார்ப்போம்” என்றார் ஒரு பங்காளி.
சரி என்று ஆண்கள் அனைவரும் கிளம்பினார்கள். ஹிருதய் தங்களுடைய காரை எடுத்தான். அதில் சிலரும், சௌந்தரின் வண்டியில் சிலரும் என்று புறப்பட்டனர்.
error: Content is protected !!