Skip to content
Post Views: 5,624
குறள் 941:
மிகினும் குறையினும் நோய்செய்யும் நூலோர்
வளிமுதலா எண்ணிய மூன்று
மு.வ உரை: மருத்துவ நூலோர் வாதம் பித்தம் சிலேத்துமம் என எண்ணிய மூன்று அளவுக்கு மிகுந்தாலும் குறைந்தாலும் நோய் உண்டாகும்.”
“எய்யா ருத்ரா உன்னைய பார்க்க ஆரோ வந்துருக்காக பாரு..”, என்ற மாமியாரின் குரலில் சமையலறையில் இருந்து வெளி வந்தவள் புடவைத் தலைப்பில் கையைத் துடைத்தவாறே தனதறைக் கதவைத் திறந்து உள்ளே சென்றாள்.
Advertisement
தன் கணவனைக் கட்டிக் கொண்டு உறங்கும் தன் மகளைப் பார்த்தவளுக்கு முகத்தில் புன்னகை அரும்ப பார்வை கணவனின் புறம் திரும்பியதில் புன்னகை குறைந்து ஏக்கமாய் அவன் மீது படிந்து மீண்டது.
மெதுவாய் அவனது கையைத் தொட்டு எழுப்ப அசந்து உறங்குபவனை மீண்டுமாய் சற்று வேகம் கூட்டி தட்டி எழுப்பினாள்.
“ம்ம்..”, என்றவன் நிமிர்ந்து படுத்து விழி மூடியே இருக்க மெதுவான குரலில்,
Advertisement
“யாரோ உங்களைப் பாக்க வந்துருக்காக மாமா..”, என்றவளின் மென்குரலில் மொத்தமாய் தூக்கம் கலைந்தவன் எழுந்து அமர்ந்திருந்தான்.
Advertisement
“வாரேன்னு சொல்லு.”, என்றவன் தலை நிமிர்த்தாமல் கண்களை கசக்கிய படி கூற அவளும் அமைதியாய் அங்கிருந்து வெளியேறியிருந்தாள்.
எழுந்து தனது வேட்டியை சரி செய்து கொண்டவனின் பார்வை எப்போதும் போல் சுவரில் இருந்த அவனின் திருமணப் புகைப்படத்தில் ஒரு நொடி நிலைத்து நின்றது.
ஒல்லியாய் பள்ளி செல்லும் பிள்ளை போன்ற உடல்வாகில் மனைவி பயமும் பதட்டமுமாய் அவனருகில் நின்றிருக்க ஒட்டு மொத்த பிடித்தமின்மையும் முகத்தில் தாங்கிய படி அருகில் நின்றிருந்தான் அவன் ருத்ரேஸ்வரன்.
Advertisement
ஆயிற்று அந்தப் புகைப்படம் எடுத்து இதோடு எட்டு வருடங்கள்.
எதாவது மாறியிருக்கிறதா என்று கேட்டால் கட்டிலில் சுருண்டு படுத்திருக்கும் அந்த ஐந்து வயது சிறு கோழிக்குஞ்சு தான் அவனது உலகமாய் மாறியிருக்கிறது.
நடந்த திருமணம் பிடிக்கவில்லை மனைவியைச் சுத்தமாய் பிடிக்கவில்லை ஆனால் பிள்ளை எப்படி என்றால்,
பல திருமணங்களில் இல்லறத்தின் ஆரம்பம் புரிதலை விட தாம்பத்தியத்தில் தானே இருந்திருக்கிறது.
ஆனால் ஒன்றரை வருடங்களாய் தன் மனதை மாற்ற முடியாதவனுக்கு அவனது தந்தையின் மரணத் தருவாயில் அவர் இறுதி ஆசை எனக் கூறிய ஒரே காரணத்தால் வந்தவள் தான் அவனின் இளவரசி தீப்தி.
இந்த ஐந்து வருடங்களில் தன் கண்ணசைவில் ருத்ரேஸ்வரனை ஆட்டுவிப்பவள் அவனின் மகள்.
தந்தையும் மகளுமான பொழுதுகள் எல்லாம் பார்ப்பதற்கு அத்தனை ரசனையாய் இருக்கும்.
மகளின் நெற்றியில் முத்தம் வைத்தவனாய் தன்னைச் சுத்தப்படுத்திக் கொண்டு வெளியில் வந்திருப்பவரைப் பார்க்கச் சென்றான்.
ருத்ரேஸ்வரன் அந்த கிராமத்தின் மிக முக்கிய குடும்பத்தைச் சேர்ந்தவன். பஞ்சாத்து எல்லாம் இப்போது குறைந்து விட்டது என்றாலும் அவ்வூரில் பஞ்சாயத்துக்காரர் குடும்பம் என்ற பெயர் இன்றும் ஓங்கி ஒலிக்கும்.
விவசாயம் தேங்காய் வாழை ஏற்றுமதி என குடும்பத் தொழிலில் முதலிடத்தில் இருக்கும் குடும்பம்.
தந்தை இருந்த வரை அவருக்கு உயிர் இந்த நிலங்களும் வியாபரமும் தான். அதனாலேயே அதைத் தன் படிப்பை விட முக்கியமாய் கருதி அதையே நடத்தி வருகிறான் ருத்ரேஸ்வரன்.
அந்த ஊரின் முதல் டாக்ட்ரேட் பட்டதாரி. பல்கலைகழகத்தில் முதல் மாணவன். அவனது படிப்பிற்காகவே இளைஞர்களுக்கு மத்தியில் அவன் ஹீரோ போன்றவன்.
தமிழகத்தின் பழுப்பு நிறமும் தோரணையான உடல்கட்டும் பார்வையின் கூர்மையும் என கிராமத்து மக்களுக்கு நிச்சயமாய் மாபெரும் அழகன்.
ஆனால் அவனின் மனைவியோ!
சமையலறையில் காலை உணவைத் தயார் செய்த படி அடுப்பிலிருந்த பாத்திரத்தை வெறித்திருந்தாள் செங்காந்தள். அவளுக்கு அவளின் பெயர் என்றால் அத்தனைப் பிடித்தம்.
ஆனால் அந்தப் பெயரைக் கேட்ட நொடியே அந்த ஒருத்தியைப் பிடிக்காமலே போயிருந்தது ருத்ரேஸ்வரனுக்கு.
அந்தக் குடும்பத்தின் இரண்டாவது மருமகளான ராணி உள்ளே வந்த அரவத்தில் சிந்தனை கலைந்தவளாய் தலையைத் திருப்பியிருந்தாள் செங்காந்தள்.
“சாரிக்கா கொஞ்சம் லேட் ஆகிப் போச்சு..”
“இருக்கட்டும் ராணி. லிங்கம் அத்தான் இப்போ கிளம்பணுமா? ஆகாஷ் எந்திரிச்சுட்டானா?”
“அவன் எந்திரிச்சா வீடு இம்புட்டு அமைதியா இருக்குமா? ஆமா க்கா அவங்க கிளம்பிருவாங்க நான் காபி கலக்குறேன்.”, என்றவளுக்கு இடம் விட்டு பின் கட்டிற்குச் சென்றிருந்தாள்.
ஆறுமுகம் காமாட்சி தம்பதியருக்கு மூன்று மகன்கள் மூத்தவன் ருத்ரேஸ்வரன் இரண்டாவது மகன் லிங்கமூர்த்தி கல்லூரி படிப்பை முடித்து ஏற்றுமதிகளை அவன் பார்த்துக் கொள்கிறான்.
அவனுக்கு ராணியுடன் திருமணம் முடிந்து நான்கு வருடங்கள் ஆகியிருந்தது. மூன்று வயதில் ஒரு மகன் இருக்கிறான்.
இளைய மகன் சர்வேஸ்வரனும் அண்ணன்களோடு விவசாயத்தைப் பார்த்துக் கொள்ள இந்த வருடம் பெண் பார்க்கத் தொடங்கலாம் என காமாட்சி கூறியிருக்கிறார்.
பின்கட்டிற்கு வந்தவள் ஊற வைத்திருந்த அவளது துணிகளை வேக வேகமாய் துவைத்து ஈரம் வடிய அப்படியே கொடியில் போட்டு விட்டு மீண்டுமாய் சமையலறைக்குச் சென்றாள்.
உணவு வேலையை முடித்து நேரத்தைக் கவனித்தவளாய் ஒரு டம்ளரில் காபியோடு மொட்டை மாடிக்கு ஏறினாள்.
ருத்ரேஸ்வரன் சில தேங்காய் மட்டைகளை உறித்து கொண்டிருக்க அவனருகில் அமைதியாய் நின்ற படி காபியை நீட்டினாள் செங்காந்தள்.
வியர்வையைத் துடைத்துக் கொண்ட படி காபியை வாங்கிக் கொண்டவன் சற்றே தூரத்தில் பார்வையைப் பதித்த படி காபியைப் பருகத் தொடங்க பெண்ணவளோ அங்கிருந்து கீழ் செல்ல தயாரானாள்.
அவளரறியாமல் மனைவியை ஓரப் பார்வை பார்த்தவனது மனது அவளிடத்தில் முழுதாய் ஒட்டாததற்கான காரணத்தை எப்போதும் போல் இன்றும் தேடியது.
அவனின் தோளை விடவும் உயரம் குறைவு. ஒல்லியான உடல்வாகு இப்போது பிள்ளை பெற்ற பின் சற்றே தேறியிருக்கிறது.
அவள் வருவதை அறிவிப்பதைப் போன்ற நல்ல சலங்கை வைத்த கொலுசுகள்.
கை இரண்டிலும் இரு தங்க வளையல்களோடு சேர்த்து நான்கு கண்ணாடி வளையல்கள்.
சாதாரண பூனம் புடவை கற்றை கூந்தல் காலையானால் இரு பக்கமும் முடியெடுத்து கட்டி கீழே நுனிக் கொண்டைபோட்டிருப்பாள்.
மாலையானால் சீராக தலைவாரி பின்னலிட்டு பூச்சூடியிருப்பாள். அவள் தன்னைக் கடந்து போனாலே நாசியை நெருடும் கஸ்தூரி மஞ்சள் வாசம். அத்தனையையும் விட அவளின் எம் எஸ் சுப்புலட்சுமி மூக்குத்தி தான் அவனைத் தூர நிறுத்துகிறதோ என்று அவனுக்கு அடிக்கடித் தோன்றும்.
அதிலும் அவள் அணிந்திருப்பது இரட்டை மூக்குத்தி ஒரு புறம் சற்று பெரிய ஒற்றை வெள்ளைக் கல்லும் மறுபுறம் எம் எஸ் அவர்கள் அணிந்திருந்தது போன்ற நான்கு கல் மூக்குத்தி.
அது அவளுக்குப் பொருத்தமா இல்லையா என்பதெல்லாம் பிறகு. அவனுக்கு மூக்குத்தி பிடிக்காது அதனாலேயே அவள் முகத்தைப் பார்ப்பதை தவிர்த்து விடுவான்.
ஆனால் அதை அவளிடம் கூறினால் அல்லவா அது வேண்டுமா வேண்டாமா என்று அவள் முடிவு செய்ய முடியும்.
அது மாதிரியான எவ்வித பேச்சு வார்த்தைகளும் இருந்ததில்லை.
ஒரே அறையைப் பகிர்ந்து கொள்ளும் இரு விருந்தாளிகள் என்பது தான் இவர்களின் வாழ்க்கை.
ருத்ரேஸ்வரனுக்குத் திருமணத்தைப் பற்றி ஆயிரம் கனவுகள் இருந்தன.
தந்தையின் முடிவு தான் இறுதி என அவனுக்கும் தெரியும் ஆனாலும் தன் படிப்பிற்கு இணையான படிப்பும் சற்றே நகர்புற கலாச்சார சாயல் இருக்கும் படியான பெண்ணைப் பார்ப்பார்கள் என்று அவன் நினைத்திருக்க ஒரு நாள் காலை தூங்கி எழுந்து வந்தவனிடம் அவர்களின் உறவுமுறைக் குடும்பமான மாரிமுத்துவின் மகளைத் தான் உனக்குப் பார்த்திருக்கிறேன் என்று கூறிய போது முதலில் தந்தை விளையாடுகிறாரோ என்று தான் நினைத்தான்.
மாரிமுத்து மாமாவை அவனுக்குத் தெரியும் பக்கத்து கிராமத்தில் தான் வசிக்கிறார். சற்றே நடுத்தர குடும்பம்.
அவருக்கு ஒரு மகனும் மகளும். இவையெல்லாம் அவன் அவ்வப்போது செவி வழிக் கேட்டுத் தெரிந்து கொண்டது.
இப்போது தாயிடம் பெண்ணின் புகைப்படத்தையும் விவரத்தையும் கேட்ட போது இரட்டை மூக்குத்தியும் மிரண்டு போன கண்களுமாய் புகைப்படத்தில் நின்றவள் ஏனோ மனதோடு பொருந்தவில்லை அவனுக்கு.
அதை விட பன்னிரெண்டாவது தான் முடித்திருக்கிறாள் என்று கேட்ட போது சுத்தமாய் பிடிக்காமல் போய் விட்டிருந்தது.
எவ்வளவோ தாயின் மூலமாய் முயன்றும் இந்த திருமணத்தை அவனால் தடுக்க முடியவில்லை.
நேரடியாய் தந்தையிடம் வாதிட்ட போது பெரும் சண்டை நிகழ்ந்ததே தவிர அவரது முடிவில் எந்த மாற்றமும் இல்லாமல் போனது.
காரணம் மாரிமுத்துவின் தந்தை தக்க சமயத்தில் செய்த உதவி தான் ருத்ரேஸ்வரனின் தாத்தா வளர்ச்சிக்கு முக்கிய காரணமாம்.
அந்த காலத்திலேயே அடுத்த தலைமுறையில் நிச்சயம் பெண் எடுத்தோ அல்லது பெண் கொடுத்தோ உறவை வலுப்படுத்திக் கொள்ள வேண்டும் என்பது தாத்தாக்களின் தீர்மானமாம்.
உண்ணாவிரதம் தொடங்கி வீட்டை விட்டு ஓடி விடுவேன் எனக் கூறிய எவ்வித மிரட்டல்களும் ஆறுமுகத்திடம் செல்லுபடியாகவில்லை.
திருமணத்திற்கு தன் நண்பர்கள் யாரையுமே அவன் அழைத்திருக்கவில்லை.
இன்னும் சொல்லப் போனால் மணப்பெண்ணை தலை திருப்பி பார்க்கக் கூடவில்லை.
செங்காந்தளோ பதினெட்டு வயது சிறு பெண் பயம் பதட்டம் அழுகையென கணவனாகப் போகிறவனைப் பற்றிய எவ்வித எண்ணங்களும் இன்றி குனிந்த தலை நிமிராமல் தாலியை கழுத்தில் வாங்கியிருந்தாள்.
திருமணத்தன்று இரவு அவளது மனநிலையை அவள் மட்டுமே அறிவாள். கைகள் நடுங்க, விட்டால் அழுது கதறி விடும் நிலையில் உள்ளே வந்தவள் பால் சொம்பை கணவனிடம் நீட்ட அவனோ எழுந்து நகர்ந்து சென்றிருந்தான்.
என்ன செய்வதென புரியாமல் கை நடுக்கம் தாளாமல் ஓரமாய் சொம்பை வைத்தவள் அப்படியே நின்றிருக்க பத்து நிமிடங்களுக்கு பின்னே அதை உணர்ந்தவனாய் அவளை உறங்குமாறு கூறி விட்டு வெளியேறியிருந்தான் ருத்ரேஸ்வரன்.
ஊரார் சொன்ன அறிவுரைகளுக்கும் ஆண்கள் என்றால் அப்படி இப்படி தான் என அப்பத்தாக்கள் விட்ட கதைகளுக்கும் சற்றும் பொருந்தாமல் தன்னை உறங்கச் சொல்லிப் போனதிலேயே கணவன் அவளுக்கு மிகவும் பிடித்தவனாகிப் போனான்.
அவளது வயதும் அறியாமையுமோ என்னவோ கணவன் தன்னருகில் வராமல் இருப்பதை பெரிதாய் எடுத்துக் கொள்ளத் தோன்றவில்லை அவளுக்கு.
திருமணம் முடிந்த ஒரு வாரத்தில் ருத்ரேஸ்வரன் என்பவன் மிகவும் நல்லவன் என்ற முடிவிற்கு தான் வந்திருந்தாள் செங்காந்தள்.
அவளைச் சுத்தமாய் பிடிக்கவில்லை என்று மனதிற்குள் வீறிட்டு கதறிக் கொண்டிருப்பவனை மிகவும் பிடித்துப் போன ஒருவனாய் மனதில் நிலை நிறுத்தியிருந்தாள்.
ஆறுமுகத்திற்கும் காமாட்சிக்கும் அவர்களின் திருமணத்தின் நிலை புரிந்தாலும் விட்டுப் பிடிக்கவே எண்ணினர்.
மகன் தானாகவே மனம் மாறி விடுவான் அது தான் நல்லதும் கூட என்று நினைத்தனர்.
ஆனால் ருத்ரேஸ்வரனோ மனைவியின் நிழலை நெருங்கக் கூட முயற்சிக்கவில்லை. பாதி நாள் வீடு வராமலும் பாதி நாள் மொட்டை மாடியிலும் என நாட்கள் நகர செங்காந்தள் தன் குடும்பத்திடம் இங்கு இருக்கும் எதைப் பற்றியும் எவ்வித குற்றச்சாட்டுகளும் செய்யாமல் நாட்களைக் கடத்தினாள்.
காமாட்சி மாமியாராய் இருந்தாலும் மருமகளுக்கு இலை மறை காயாய் மகனை வழிக்கு கொண்டு வர யோசனைகள் கொடுத்தாலும் எதுவும் புரியாத குழந்தையாய் விழித்து மட்டுமே நின்றாள் செங்காந்தள்.
ஆளாளுக்கு ஆயிரம் புத்திமதி கூறினாலும் எதையும் காதில் வாங்காதவனாய் சுற்றி வந்த ருத்ரேஸ்வரன் மனைவியின் வயதை காரணம் காட்டி இப்போதைக்கு குழந்தைப் பெற்றுக் கொள்ளவில்லை என்று கேட்பவர்களிடத்தில் கூறி விட அதுதான் அவன் தன்னைத் தவிர்க்கும் காரணம் போலும் என்று செங்காந்தளும் நம்பி எவ்வித கவலையும் இன்றி இருந்தாள்.
இந்நிலையில் ஆறுமுகத்திற்கு சட்டென மாரடைப்பு ஏற்பட அப்போது மகனை அழைத்தவர், வீட்டிற்கு வந்த பெண்ணை சரியாய் வாழ வைக்காத பாவத்தை பரம்பரைக்கு கொடுத்து விடாதே என்று மகனிடம் மரணப் படுக்கையில் கிட்டதட்ட மன்றாடினார்.
தந்தை இறக்கும் தருவாயில் அவரின் ஒரே கவலை செங்காந்தள் என்று புரிந்தவனுக்கு அடுத்தது என்ன என்று புரியாத நிலை.
இந்த ஒன்றரை வருடத்தில் மனைவி என்பவள் அவனின் அனைத்திலும் பங்கு வகித்தாள்.
காலை எழுந்தது முதல் இரவு அவன் வந்து உறங்கும் வரையிலுமே தேவையான அனைத்தும் அவன் ஒரு வார்த்தை கூறாமல் படித்து வைத்திருந்தாள்.
இத்தனை நாட்கள் அவளை ஏறெடுத்தும் பார்க்காமல் இருந்தவனுக்கு இப்போது இல்லறம் என்பதை நினைக்கவே விருப்பமில்லை.
சாதாரணம் போல் மனைவியை அதன் பின் தான் கவனிக்க ஆரம்பித்தான்.
அதில் கண்டு கொண்டவை தான் மேற்கூறிய அனைத்தும். முன்புக்கு இப்போது வார்த்தைகள் சற்று அதிகரித்திருந்தது.
கடினப்பட்டு கண் பார்த்து நான்கு வார்த்தைகள் தொடர்ந்தாற் போன்று பேச ஆரம்பித்திருந்தான்.
அவளிடம் கலந்தாலோசித்து இந்த விஷயத்தில் முடிவெடுக்கலாம் எனில் அவளோ திருவிழாவில் விட்ட குழந்தையென விழித்து தான் நின்றாள்.
ஓரளவிற்கு மேல் அவனால் இதைப் பற்றி உடைத்தும் பேச முடியவில்லை அல்லது தெரியவில்லை.
ஆனால் அன்றைய இரவு கணவனாய் அவனது தொடுதலை அவள் மனப்பூர்வமாய் ஏற்றுக் கொண்டாள் என்பது மட்டும் திண்ணம் அவனுக்கு.
இன்று வரையிலும் அது மட்டுமே அவனுக்கான ஒரே நிம்மதியாய் இருக்கிறது.
அதன் பின் மனைவியாய் அவள் தன்னை நெருங்கினால் நிச்சயம் அதை மனதார ஏற்றுக் கொள்ளும் மனநிலையில் அவன் இருக்க செங்காந்தளோ இத்தனை வருடங்கள் இருந்ததைப் போல் இயல்பாகவே இருந்தாள்.
அடுத்த மாதமே செங்காந்தள் கருவுற்றிருக்க உடல்நலன் விசாரிப்புகளும் மருத்துவமனை வாசங்களும் என கணவனாய் பொறுப்புகளைத் தட்டிக் கழிக்காமல் அவளுடன் நின்றிருந்தான்.
அத்தனையும் கடந்து அவனின் உயிரான மகள் தீப்தி அவனுக்கு கிடைத்து விட்டாள்.
இன்றும் மனைவி என்றவுடன் ருத்ரேஸ்வரனுக்கு மனக்கண்ணில் வரும் நினைவு முற்றும் முதலுமாய் நடந்த கூடலில் அவளின் கண்கள் காட்டிய பாவங்கள் தான்.
அந்த சிந்தனை எழுந்த நொடி தலையை வேகமாய் உலுக்கியவனாய் தன் வேலையைக் கவனிக்கச் சென்றிருந்தான் ருத்ரேஸ்வரன்.
error: Content is protected !!