Skip to content
Post Views: 2,052
‘ஸ்ரீ காந்தலட்சமி தாயார் திருக்கோவில்’ என்று கோவிலின் முன்பே அழகாக பெயர் பலகை பொருத்தப் பட்டிருந்தது. கோவிலுக்கு பக்கத்தில் இருந்த காலி இடங்களையும் சுத்தம் செய்து கொட்டகை போட்டிருந்தார்கள்.
ஹோமம் எல்லாம் சிறப்பாக நடந்து கொண்டிருந்தது.
Advertisement
அங்கே தனியாக ஒரு நாற்காலியை போட்டு கொண்டு அமர்ந்து இருந்தார் சிவங்கரி. அவரை யாரும் கண்டுகொள்ளவே இல்லை.
வெளிர் ஊதா நிறத்தில் குர்த்தாவும், அடர் நீல நிறத்தில் பைஜாமாவும் அணிந்து, தலையை கிளிப் போட்டு சீவி, கூலிங் கிளாஸ் வேறு போட்டு கொண்டு அமர்ந்திருந்தார்.
Advertisement
Advertisement
“பிரதம்ஸ் இந்த பாட்டியை பார்த்தா நமக்கே சிரிப்பா வருதே.. என்ன செய்றது? என்றாள் ஹாசினி.
“எல்லாரும் சொல்லியாச்சு, இனி ஒன்னும் செய்ய முடியாது ஹாசினி.. விடு விடு..”
Advertisement
சௌந்தர் குடும்பம் வந்து இறங்கியது. மாலதியும் நித்யகல்யாணியும் ஒன்று போல சேலை அணிந்து வந்தனர்.
பின்னே வந்த ரம்யாவும் ப்ரேமும் ஹாசினி ப்ரதமேஷ் உடன் சேர்ந்து கொண்டார்கள்.
“வாங்க வாங்க” என்று அனைவரும் சென்று இவர்களை வரவேற்றார்கள்.
“யாருடா இது? பெரிய வி ஐ பி மாதிரி எல்லாரும் போறாங்க” என்று கேட்டார் பிள்ளைகளிடம் சிவங்கரி.
“இவங்க தான் பாட்டி அம்மவோட பிரென்ட் மாலதி ஆண்ட்டி, அது அவங்க மாமியார்..” என்று கூறிவிட்டு ஹாசினியும் சென்று அவர்களை வரவேற்றாள்.
சிறிது நேரம் கழித்து, புல்லட்டில் தாத்தாவும் பேத்தியும் வந்து இறங்கினார்கள். அதே சமயம் ஹிருதய்யும் காதம்பரியும் வந்து சேர்ந்தார்கள்.
ஹோமம் ஒரு பக்கம் நடக்க, இந்தப்பக்கம் பரஸ்பரம் ஒருவருக்கொருவர் அறிமுகம் ஆகிக்கொண்டார்கள்.
“இவதான் பூம்பாவை என் பெரிய பொண்ணு, முத்து” என்று மகளை தோழிக்கு அறிமுகப்படுத்தினார்.
அப்பொழுது “என்னடி இது காயம்?” என்று அவளது காயத்தை கவனித்து இவர்களிடம் வந்துவிட்டார் நித்யகல்யாணி..
“அது ஒண்ணுமில்ல அப்பத்தா.. பேட்மிட்டன் விளையாடும் போது அடி பட்டிருச்சு… சின்ன காயம் தான்” என்று கூறினாள்.
‘நான் இதை நம்பவில்லை’ என்ற பார்வை பார்த்தார் அவர்.
“அது என்ன ஆம்புள பெயர் மாதிரி முத்துன்னு வைச்சிருக்கீங்க?” என்றார் சிவங்கரி நக்கலாக.
“யார் இந்த காமெடி பீஸ் ?” என்று பார்த்தாள் முத்து.
“என் பெயர் முத்தாயி… அதை தான் முத்துன்னு சுருக்கி கூப்பிட்றாங்க” என்றாள் முத்து இப்பொழுது.
“அட பாவமே! இந்த காலத்துல இப்படி பட்டிக்காட்டு பெயரை உனக்கு வச்சிருக்காங்களே?” என்றார் பரிதாபப்படுவது போல.
“சும்மா இருங்க அக்கா.. எதுக்கு இப்படி பேசுறீங்க?” என்று அவரை அடக்கினார் காதம்பரி.
“நர்ஸ் அம்மா , நீங்க சொன்ன உங்க அக்கா அல்டாப் சுந்தரி இவங்க தானா?” என்று அவரை கோர்த்துவிட்டு, நீங்க எல்லாம் எனக்கு ஒரு ஆளா என்ற பார்வையை சிவங்கரிக்கு கொடுத்துவிட்டு தன் அப்பத்தாவிடம் நகர்ந்துவிட்டாள்.
‘அல்டாப் சுந்தரி’ என்று அவள் கூறியதே அவ்வளவு ஸ்டைலாக இருந்தது.
அனைவரும் மனதில் நினைத்து கொண்டு இருந்தது தான்,’சரியான அல்டாப்’ என்று. இருந்தாலும் முத்தாயி கூறிய விதத்தில் அனைவர் முகத்திலும் புன்னகை மலர்ந்துவிட்டது.
“சாரி மாலதி, எங்க அத்தை சொன்னதை தப்பா எடுத்துக்காதே” என்றார் பூம்பாவை.
“இதுல தப்பா நினைக்க என்ன இருக்கு, இது நிறைய பேர் கேக்குற கேள்வி தான்.. ஆன பதில் கொஞ்சம் பெருசு.. மெதுவா சொல்லுவோம் இப்ப வா, கலசத்தை எடுக்க கூப்பிட்றாங்க பாரு” என்று தோழியை அழைத்து கொண்டு முன்னே நகர்ந்துவிட்டார்.
பதினாறு குடங்கள்.. முதல் குடத்தை எடுக்க குடும்பத்துல இருக்கிற பெண் பிள்ளை வாங்க என்று அழைத்திட்டார் பூசாரி.
“உங்களை தான் அண்ணி வாங்க” என்று மிருதுளாவை அழைத்தார் பூம்பாவை.
இவர்கள் பங்காளி குடும்பங்களில் இருந்து வந்தவர்களில் மிருதுளா தான் திருமணமாகிய பெண் பிள்ளை.
இதை அவர் எதிர்பார்க்கவில்லை.. நான் எதுக்கு? நீங்க மருமகள்கள் நிறைய பேர் இருக்கீங்களே என்றார் அவர்.
“அப்படி இல்ல தாயி.. பெண் பிள்ளைகள் வந்திருந்தா அவங்களுக்கு தான் முதல் மரியாதை…” என்று அவரே வந்து முதல் கலச குடத்தை எடுத்து மிருதுளா கையில் கொடுத்தார்.
குடத்தை தலை மீதிருந்து மூன்று சுற்று முடியும் வரை இறக்க கூடாது என்று கூறினார் பூசாரி.
மிருதுளாக்கு பயம்.. இதுக்குமுன் இதை எல்லாம் அவர் பார்த்ததுகூட இல்லையே..
அவர் கணவர் தணிகாச்சலம், “நான் கூடவே வரேன் மிதும்மா.. பயப்படாதே” என்று உடன் நின்றுகொண்டார்.
“அடுத்து பங்காளிகள் வீட்டு பெண்கள் எல்லாரும் வாங்க” என்றார். பூம்பாவை சேர்த்து பத்து பெண்கள்.
“பெரியவங்க நீங்க வாங்க முதல்ல” என்று சிவங்கரியை அழைத்தார் பூசாரி.
“அது நான் வர கூடாது.. நீங்க பாருங்க” என்று கூறினார் அவர்.
“அப்பா தவறி நாலஞ்சு வருஷம் ஆச்சு” என்றார் ஸ்ரீகாந்த்.
“அதனால என்னங்க தம்பி.. நாங்க அது எல்லாம் பார்க்க மாட்டோம். அவங்க உடையவங்க, சாமி முன்ன எல்லாரும் அவ பிள்ளைங்க தானே தம்பி. ஒரு பிள்ளையை மட்டும் ஒரு தாய் எப்படிங்க ஒதுங்கி நிக்க ஒத்துக்குவா? உங்க அப்பா அவங்க கூடத்தானே இருக்காங்க. நீங்க வாங்க தாயி” என்றார் அவர் மீண்டும்.
அங்கே அனைவருமே அவரை முழு மனதாக தான் அழைத்தார்கள்.
சென்னையில் கூட சுபகாரியங்களின் போது இவரை தவிர்த்து உள்ளார்கள். கிராமத்துக்காரங்க என்று இளக்காரமாக நினைத்தவர்கள் மனங்கள் தான் எத்தனை உயர்வானது? என்று முதல் முறையாக நல்ல விதமாக சிந்தித்தார் சிவங்கரி.
“அட சீக்கிரம் வாங்கம்மா.. உங்க பொண்ணு தலையில குடத்தை வச்சுட்டு எவ்வளவு நேரம் நிக்கும்? அதுக்கு முடியல” என்று நித்ய கல்யாணி தான் அவரை இழுத்து வந்து குடத்தையும் எடுத்து அவரின் தலை மீது வைத்தார்.
இன்னும் ஐந்து குடங்கள் இருந்தது. “கன்னி பெண்கள் இருந்தா நல்லது” என்று பூசாரி கூறவும்,ஹாசினியை சேர்த்து அவர்கள் குடும்பங்களில் மூன்று பெண் குழந்தைகள் இருந்தார்கள். மீதம் இருந்த இரண்டு கலசத்தை ரம்யாவும், முத்தாயியும் எடுத்து கொண்டார்கள்.
தலை மீது பூவால் அலங்கரிக்க பட்ட கலச குடங்களை வைத்து கொண்டு பெரிய பெண்மணிகள் புடவையிலும், சிறிய பெண்கள் பாவாடை, தாவணியிலும் இருந்தது அவ்வளவு அழகாக இருந்தது பார்ப்பதற்கு.
சிவங்கரிக்கு இப்பொழுது தான் ‘நம்மளும் பேசாம புடவையை கட்டி கொண்டு வந்திருக்கலாமே’ என்று தோன்றியது.
வீட்டில் இருந்து கிளம்புகையிலே வீட்டில் மிருதுளா, பூம்பாவை, ஸ்ரீகாந்த் என்று அனைவரும் கூறினார்கள் தான்.
‘இந்த பட்டிகாட்டுக்கு வந்தா நானும் அப்படித்தான் இருக்கணுமா? நான் இப்படித்தான் வருவேன்’ என்று அவர்களிடம் சண்டை பிடித்திருந்தார்.
மூன்று முறை வலம் வந்ததும் கலசத்து நீரை கோபுரத்தில் ஊற்றினார்கள்.
பின் அடுத்தடுத்து பூஜைகள் எல்லாம் சிறப்பாக முடிந்தது.
கிளாஸ் லுக் என்பார்களே, அப்படி இருந்தார் நித்ய கல்யாணி. இளமஞ்சள் நிற புடவையில், லாவெண்டர் நிற பார்டர் வைத்த மைசூர் சில்க். அதை அவர் உடுத்தியிருந்த நேர்த்தி.. நிச்சயம் வாவ் தான்.
அதே போல புடவையில் இருந்த மாலதியும் அழகாக இருந்தார். அவர்களை பார்த்தால் மாமியார் மருமகள் போல இல்லை. தோழிகள் போல ஒருவர் காலை ஒருவர் வாரிவிட்டு கலகலப்பாக பேசிக் கொண்டிருந்தார்கள்.
அவர்களுக்குள் பேசும்பொழுது கிராமத்து வழக்கில் இருந்தது பேச்சு, ஆனால் இவர்களிடத்தில் சாதாரண நடையில் தான் பேசினார்கள்.
காலை உணவு முடிந்ததும் பெண்கள் ஒருபுறமாக அமர்ந்து பேசிக்கொண்டிருந்தார்கள்.
ஆண்கள் ஒருபுறம் நின்று பேசிக்கொண்டிருந்தார்கள்.
“டீச்சர் டீச்சர்..” என்று அங்கே இருந்து குரல் கொடுத்தார் கந்தசாமி.
ஏற்கெனவே இந்த அழைப்பை கேட்டிருந்ததால், “மாலதி உன் மாமனார் உன்னை கூப்பிடறாரு பாரேன்” என்றார் பூம்பாவை.
மாலதி திரும்பி பார்க்கவும்,
“கணக்கு இல்ல… பூபாலம்..” என்றார் பதிலுக்கு அங்கே இருந்து.
“இவருக்கு இருக்க கொழுப்பை பார்த்தியா மாலதி?” என்று கூறிக்கொண்டே கடுப்பாக திரும்பி பார்த்தார் நித்யகல்யாணி.
“எங்க அத்தையும் டீச்சர் தான் பி ஸ்கொயர்…. போன வருஷம் தான் ரிட்டையர் ஆனாங்க..” என்றார் மாலதி தன்னையே குழப்பமாக பார்த்த தோழியிடம்.
“என்ன வேணும் இப்ப ? எதுக்கு பூபாலத்தை இப்படி ஏலம் விட்டுட்டு இருக்கீங்க?”
“நேரமாச்சு இல்ல, முத்துக்கு களைப்பா இருக்குமா இல்லையா, ராத்திரி பூரா புள்ள ட்ரெயின்ல தூங்குச்சோ என்னவோ?கிளம்பலாமா?”
முத்து சுவாரசியமாக அனைவருடனும் கதை பேசிக்கொண்டிருந்தாள்.
ஏற்கனவே, “என்ன பஞ்சாயத்தை இழுத்து விட்டிருக்காளோ இந்தமுறை” என்று கடுப்பாக தான் இருந்தனர் மாமியாரும் மருமகளும். தங்களிடம் இருந்து பேத்தியை பாதுகாக்க தான் இந்த நாடகம் என்று அவர்களுக்கு தெரியாதா என்ன?
“சரி சரி, இன்னும் அஞ்சுநிமிஷம், எல்லாரும் கிளம்பிடலாம்”
“இல்ல, நீங்க எல்லாம் மெதுவா பேசி இருந்துட்டே வாங்க. நானும் முத்துவும் முன்னக்க போறோம்.. பிள்ளை கொஞ்ச நேரம் ஓய்வெடுக்கட்டும்” என்று மனைவியிடம் கூறிக்கொண்டே பேத்திக்கு கண்ணை காட்டினார்.
அவளும் சமர்த்து பிள்ளையாக தாத்தாவுடன் புறப்பட்டு விட்டாள் அனைவரிடமும் கூறிக்கொண்டு.
பின் அனைவருமே புறப்பட்டனர். பூசாரி, இனி தவறாமல் வருஷத்துக்கு ஒரு முறை பங்காளிகள் அனைவரும் ஒன்றுகூடி குடும்பமாக வந்து பொங்கலிட்டு தாயாரை வழிபடுமாறு கூறினார்.
அந்த வயதான அப்பத்தா, ஸ்ரீகாந்த்திடம் வந்து, “எப்படியோ எல்லாரையும் ஒன்னுக்கூட்டி, குலதெய்வத்தை வழிபட வச்சுட்ட சாமி.. நீ நல்லா இருக்கோணும்” என்று வாழ்த்தினார்.
“எல்லாரும் இனி அவங்க அவங்க வீட்ல எந்த நல்ல காரியமானாலும் நம்ம ஆத்தாவுக்கு காசை முடிஞ்சு வச்சிட்டு ஆரம்பிங்க.. அதே மாதிரி கல்யாணம், சடங்கு இப்படி சுபகாரியங்கள் நடத்துறதுக்கு முன்ன ஒரு முறை ஆத்தாவை வந்து கும்பிட்டு போங்க” என்றார் அனைவரையும் பார்த்து.
அனைவரும், நிச்சயம் ஆத்தா நமக்கு நல்ல வழி காட்டுவா என்ற நம்பிக்கையோடு புறப்பட்டு சென்றார்கள்.
ஹிருதய் தன் அப்பாவுடன் இருந்து எல்லாவற்றையும் செட்டில் செய்ய உதவினான்.
இப்படியாக காந்தலட்சமி தாயாரின் கோவில் புதுப்பிக்கப்பட்டு, பூஜையும் சிறப்பாக முடிந்தது.
——————
error: Content is protected !!