Skip to content
Post Views: 2,034
அத்தியாயம் 8
“நாங்க நாளைக்கு கிளம்புறோம் ஸ்ரீகாந்த்“, என்றார் மிருதுளா.
Advertisement
அனைவரும் வெளியே வராண்டாவில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தார்கள்.
அங்கேயே தோட்டத்தில் சந்தானத்தின் உதவியுடன் ஒரு சிறு மேஜையும் நாற்காலிகளும் போட்டு ஏற்பாடு செய்து வைத்திருந்தார் பூம்பாவை.
Advertisement
Advertisement
“அத்தை, நிஜமா இந்த ஊரை விட்டுட்டு போகவே மனசு வரலை அத்தை… சூப்பரா இருக்கு. அதுவும் உங்க வீடும் இந்த தோட்டமும், ஊஞ்சலும்…” என்று சிலாகித்து கூறினான் ப்ரதமேஷ்.
பூம்பாவைக்கு மகிழ்ச்சியாக இருந்தது. அனைவரையும் பார்த்து பார்த்து கவனித்தார்.
Advertisement
“நீங்க எல்லாம் எப்ப புறப்படறீங்க ஸ்ரீ?” என்றார் சிவங்கரி.
“நாங்க இன்னும் பேசல ம்மா.. பேசிட்டு சொல்றேன்”
“இது என்னடா புதுசா இல்ல இருக்கு.. யார் கிட்ட பேசிட்டு முடிவு எடுக்கணும். ஜாதகம் பார்க்கன்னு போயிட்டு, இப்படி ஊருக்கு வந்து உட்கார்ந்து, கோவில் பூஜை எல்லாம் முடிச்சிட்டு, அடுத்து இன்னும் என்ன? ஊருக்கு கிளம்ப வேண்டியது தானே?”
“ப்ச்ச்ச்.. விடும்மா..”
“ஏன் டா சலிச்சிக்குற?”
“பின்ன என்ன அக்கா? கொஞ்ச நேரம் அமைதியா இருக்க விட மாட்டியே நீ? சூடா காப்பிய குடி” என்றார் காதம்பரி.
“என் பிரண்ட் மாலதி இருக்கால்ல, அவங்க தாத்தா பாட்டி இங்க பக்கத்துல நாட்டு வைத்தியம் பார்க்கிறாங்களாம்..”
பூம்பாவை அனைவர்க்கும் பொதுவாக கூறினார்.
“அதுக்கு?” என்று இடை வெட்டினார் சிவங்கரி.
“அங்க எனக்கு காட்டிட்டு வரலாம்னு யோசிக்கிறேன்”
“அங்க சென்னைல அவ்வளவு பெரிய ஹாஸ்ப்பிட்டல்ல எம்புள்ள உன்னை காட்டுறான். அதுல சரியா போகாதது, இந்த நாட்டு வைத்தியத்துல சரியா போயிடுமா?”
“அங்க தான் சர்ஜரி பண்ண முடியாது சொல்லிட்டாங்களே அத்தை”
“அங்கேயே வேற நல்ல டாக்டரை பார்த்து செகண்ட் ஒப்பீனியன் வாங்கலாம்னு சொன்னேனே ஹனி” என்றார் ஸ்ரீகாந்த் இப்பொழுது.
“நீ சொன்னா அவ கேட்பாளா? அவ இப்ப அவ ஊர்ல இல்ல இருக்கா? நம்ம நிலைமை கொஞ்சம் கீழே இறங்கினதும் அவ மேலே ஏறி உட்கார பார்க்கிறா” என்றார் சிவங்கரி.
“ஏம்பாட்டி அத்தை சொல்லி கூட முடிக்கல.. முதல்ல அவங்க சொல்லி முடிக்கட்டும்… கொஞ்ச நேரம் சும்மா இருங்களேன்” என்றான் ப்ரதம்.
“இங்க ஒரு தடவ காட்டி பார்க்கலாம்னு எனக்கு தோணுது. நான் இருந்து காட்டிட்டு வரேன்னே” என்றார் பாவை இப்பொழுது கணவரை பார்த்து.
ஸ்ரீகாந்த் பதில் கூறாமல் யோசனையாக அமர்ந்திருக்கவும்,
“இன்னிக்கே போய் பார்த்திட்டு வரலாமே பாவை. எதுக்கு நாளை தள்ளி போடணும், அவங்க மருந்து மட்டும் தான் குடுப்பாங்கன்னா வாங்கிட்டு நாம சென்னைக்கு ஒன்னாவே போய்டலாமே?” என்றார் காதம்பரி.
“ஸ்வீட்டிம்மா சொல்றது சரியா படுது, எங்க இருக்கு ம்மா அவங்க ஊர்?” என்றான் ஹிருதய்.
“இரு நான் போன் பண்ணி அட்ரஸ் கேட்குறேன். அப்படியே இப்ப வரலாமான்னு கேட்டு பார்க்கிறேன்” என்று எழுந்து உள்ளே சென்றுவிட்டார் பூம்பாவை.
“பார்த்தியா ஸ்ரீ நமக்கு இருக்கிற மரியாதையை. நாம யோசிச்சிகிட்டு இருக்கோம், அவங்களாவே எல்லாம் முடிவு செய்ய ஆரம்பிசிட்டாங்க”
“ஏன் பாட்டி, சீரியல் ரொம்ப பார்க்காதேன்னு சொன்னா கேட்கிறியா? சீரியல் வில்லி மாதிரி பேசிகிட்டு..” என்று கடுப்படித்தான் ப்ரதமேஷ்.
“இங்க வந்ததுல இருந்து சீரியல் கூட பார்க்க முடியல.. இது எல்லாம் ஒரு ஊரா?”
“பாட்டி, இங்கே டிவி இருக்கு பாட்டி. நாங்க வந்தவுடனே கேபிள் ஆப்பரேட்டர் வந்து நீங்க இருக்க வரைக்கும் கனய்க்ஷன் கொடுக்கிறோம்னு சொல்லி அவங்களே போட்டுட்டு போய் இருக்காங்க.. காசு கூட வாங்க மாட்டேன்னு சொல்லிட்டாங்க தெரியுமா? அவங்க எல்லாருக்கும் நம்ம அம்மாச்சி தாத்தாவை அவ்வளவு பிடிக்குது தெரியுமா?” என்றாள் ஹாசினி.
“அப்படியா? நேத்தே சொல்லி இருந்தா பார்த்திருப்பேன் இல்ல ஹாசும்மா?”
“நானும் மறந்துட்டேன் பாட்டி, நீங்க வாங்க நான் உங்களுக்கு போட்டு விடறேன்” என்று அவரை உள்ளே அழைத்து சென்று டீவியை போட்டு விட்டு வந்தாள்.
“இங்க இருந்து கால்மணி நேரம் தான் ஆகுமா அப்பா. நாம போய் காட்டிட்டு வரலாம்” என்று வந்து கூறினான் ஹிருதய்.
அவன் பின்னே வந்த பூம்பாவை, “எல்லாரும் வீட்ல இருக்கப்ப போனா நல்லா இருக்காது ஹிருதய். நாளைக்கு இவங்க எல்லாம் கிளம்பிடுவாங்க. நாம அதுக்கு அப்புறம் போயிக்கலாம்” என்றார்.
“நாங்க என்ன குழந்தைங்களா? நாங்க இருந்துக்கிறோம். பக்கம்ன்னு தானே சொல்றாங்க? போயிட்டு வந்துடுங்க” என்றார் மிருதுளா.
“அப்படியே ஹாசினிக்கும் காட்டிட்டு வந்துடலாம்” என்றார் பூம்பாவை ஸ்ரீகாந்த்திடம்.
அவர் சரி என தலை ஆட்டிக்கொண்டார்.
இவர்கள் நால்வருடன் காதம்பரியும் இணைந்து கொண்டார்.
“நீங்க நர்ஸ் தானே ஸ்வீட்டிம்மா? உங்களுக்கு நாட்டு வைத்தியத்துல எல்லாம் நம்பிக்கை இருக்கா?” என்றான் ப்ரதமேஷ்.
“நிறைய டாக்டர்ஸ் கூட சில சமயம் நாட்டு வைத்தியம் பார்த்துக்குவாங்க டா.. படிப்புக்கும் வைத்தியத்துக்கு என்ன சம்பந்தம்?” என்றார் சிரித்துக் கொண்டே.
‘உக்கும்…’ என்று உள்ளிருந்து சிவங்கரி நொடிப்பது வெளியே வாசல் வரை கேட்டது.
“நீங்களும் உங்க அக்காவும் ஒரே வயித்துல இருந்து தான் பொறந்தீங்களா ஸ்வீட்டிம்மா.. உங்க ரெண்டு பேருக்குள்ளவும் தான் எத்தனை வித்யாசம்?” என்றான் ப்ரதமேஷ் நாடக பாணியில்.
“போடா அரட்டை..” என்று அவன் தலையில் செல்லமாக கொட்டிவிட்டு இவர்கள் கிளம்பினார்கள்.
ஹிருதய், ‘நான் வண்டியை எடுக்கிறேன்’ என்று காரை கேட்டிற்கு வெளியே எடுக்கையில், கந்தசாமி தாத்தா அவரது புல்லட்டில் வந்து சேர்ந்தார்.
“வாங்க…” என்று இவர்கள் காரில் இருந்து இறங்கினார்கள்.
“நான் உங்களை கூட்டிட்டு போக தான் வந்தேன்.. கணக்கு டீச்சர் ஆர்டர். நான் முன்னாடி போறேன், என் பின்னாடியே நீங்க வந்துடுங்க” என்றார்.
“நானும் உங்க கூட வரேன்” என்று அவர் பின்னாடி ஏறிக்கொண்டார் தணிகாச்சலம்.
காரில் இடமில்லை என்று அமைதியாக இருந்தவர் கந்தசாமி தாத்தா வரவும் இது தான் சாக்கு என்று ஏறிகொண்டார். புல்லெட் முன் செல்ல இவர்களது கார் பின் தொடர்ந்தது.
“அட பாவிகளா! என்ன மட்டும் இந்த சீரியல் வில்லிகள்கிட்ட மாட்டி விட்டுட்டு போய்ட்டாங்களே!” என்றான் ப்ரதமேஷ் சத்தமாக.
‘நங்’ என்று அவன் தலையில் கொட்டிவிட்டு உள்ளே சென்றார் மிருதுளா.
“என்ன மிருது.. வர வர உன் தம்பி பொண்டாட்டி மேல ரொம்பத்தான் பாசம் பொங்குது போல.. சப்போர்ட் எல்லாம் பலமா இருக்கே?” என்றார் சிவங்கரி மிருதுளா உள்ளே நுழையவும்.
“நாமளும் கொஞ்சம் மாறனும் ம்மா.. நீயே பார்த்த இல்ல, அவளை பார்க்காம நான் பெத்த பையனால ஒரு வாரம் இருக்க முடியல.. ஏன்? அவ வளர்த்த பாசம் தானே?
நான் வேலைக்கு போறேன்னு நீயும் நானும் எப்பவுமே பீத்திப்போம். ஆனா அவ பிள்ளையை பார்த்துக்கலைனா நிம்மதியா போய் இருக்க முடியுமா சொல்லு?”
“எல்லாம் சரித்தான்.. இது இப்ப தான் தெரிஞ்சுதா?”
“ஏதோ, இப்பயாச்சும் தெரிஞ்சுது இல்லையா? இப்ப கூட பாரு, நாம வந்ததுல இருந்து எப்படி பார்த்து பார்த்து கவனிக்கிறா.. அவருக்கு பிடிக்கும்னு கத்திரிக்காய் தொக்கு ஆகட்டும், எனக்கு பிடிக்கும்னு இடியாப்பம் ஆகட்டும், உனக்கு பிடிச்ச மாதிரி ஸ்ட்ராங்கா பில்டர் காபி ஆகட்டும் எதையாவது மிஸ் பண்ணாளா?
நீயும் கொஞ்சம் மாறும்மா.. இல்லைனா நன்றி கெட்டவங்களா ஆயிடுவோம். உனக்கு மெனோபாஸ் அப்ப உன்னை எப்படி கவனிச்சிக்கிட்டா, அதை யோசி.. எனக்கும் பிரதமேஷுக்கும் ஒரே சமயம் அம்மை போட்டப்ப அவ இல்லாம நம்மளால சமாளிச்சிருக்க முடியுமா? இப்ப அவளுக்கு முடியலன்ற போது நாம உதவியா இல்லைனாலும் உபத்ரமா இருக்க கூடாது இல்லையா?”
“இப்ப நான் என்ன உபத்திரவம் செஞ்சுட்டேன்… சென்னைல நல்ல வைத்தியம் பார்த்துக்க தானே சொன்னேன்?”
“சொல்றதை கொஞ்சம் பக்குவமா சொல்லலாமே ம்மா..நீயே யோசி… நான் போய் ஊருக்கு போக எடுத்து வைக்கிறேன்” என்று தங்களுக்கு ஒதுக்க பட்ட அறைக்கு சென்று விட்டார்.
மகனின் அறிவுரைகள் தான் மிருதுளாவை இந்த அளவிற்கு மாற்றி இருந்தது.
அம்மாவும் பாட்டியும் பேசுவதை கேட்டுக்கொண்டிருந்த ப்ரதமேஷின் முகத்தில் நிறைவான புன்னகை.
எப்பொழுதும் வாழ்க்கையில் எல்லாமே இருக்கும் போது தங்கள் தவறை உணர்வது என்பது கொஞ்சம் கஷ்டமே. தான் சொல்வதை கேட்கும் கணவன், நல்ல வேலை, ஒரே மகன், பாசமான தம்பி, தவறே செய்தாலும் உடன் இருக்கும் அம்மா என்று கர்வமாகவே தான் இருப்பார் மிருதுளா.
அப்பாவிற்கு வேற தொடர்புகள் இருக்கலாம் என்று பீதியை கிளப்பி விட்டு அவரை கொஞ்சம் பயப்பட வைத்ததும் ப்ரதமேஷே! உண்மையில் தணிகாச்சலம் தங்கமான மனிதர். சமீபகாலமாக அவருக்கு கொஞ்சம் உடல் தொந்திரவு இருந்தது. சொன்னாலும் பெரிதாக மனைவி கவனிக்க போவதில்லை என்று அவர் மகனை துணைக்கு அழைத்து கொண்டே மருத்துவமனை சென்று வந்தார். அதில் இருந்து தான் தாயை நல்வழி படுத்த வேண்டும் என்று முடிவு செய்தான்.
அது கொஞ்சம் வேலையும் செய்தது. அவர் நடந்து கொள்ளும் விதத்திற்கு கணவன் வேறு பெண் நோக்கி செல்லவும் வாய்ப்பு இருக்கிறது என்றே அவரது மனசாட்சி கூறியது.
பிறகு ப்ரதமேஷ் தாயிடம் மெல்ல மெல்ல பேசி கொஞ்சம் புரிதலை வரவழைத்திருந்தான்.
—————————-
error: Content is protected !!