Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

முத்தாயி அம்மாச்சி

முத்தாயி அம்மாச்சி 8.2

சரியாக கால்மணி நேர பயணத்தில் மாலதியின் தாத்தா பாட்டி  வீடு வந்துவிட்டது.

புல்லெட்டை புயல் வேகத்தில் ஓட்டி முதலில் வந்து சேர்ந்தனர் கந்தசாமி தாத்தாவும் தணிகாச்சலமும்.



Advertisement

“வாங்க மருமகனே.. இப்ப தான் மாலதி போன் போட்டுச்சு, அவ சிநேகித பிள்ளயாமே” என்று இவரை வரவேற்றார் கந்தசாமியின் மாமியார் மாணிக்கவல்லி. கத்திரிப்பூ நிறத்தில் காட்டன் சேலை உடுத்தி மங்களகரமாக இருந்தார் அவர்.

“என்ன வர சொல்லிட்டு, நான் வந்து சேர முன்னமே உங்களுக்கு தகவல் சொல்லி விட்டுடுச்சா டீச்சரு?”

Advertisement

Advertisement

“எத்தனை வாட்டி சொல்லி இருக்கேன், மருமகளை போய் யாராவது டீச்சர்ன்னு சொல்லி கூப்பிடுவாங்களா?”

“மருமகன்கிட்ட இப்படி யாரவது சண்டை பிடிப்பாங்களா?” என்றார் கந்தசாமி பதிலுக்கு.

Advertisement

“சும்மா வம்பு பேசக்கூடாது மருமகனே, யாரு நான் சண்டை பிடிக்கிறேனா?”

“நீங்களே சொல்லுங்க தம்பி.. இவங்க சண்டை தானே பிடிச்சாங்க இப்ப?” என்றார் கந்தசாமி தன்னுடன் வந்த தணிகாச்சலத்திடம்.

“அவர் நான் இல்லை” என்று முழிக்கவும்,

“நீங்க ஒன்னும் சங்கட படாதீங்க தம்பி.. எங்க மாப்பிள்ளைக்கு குசும்பு கொஞ்சம் அதிகம் தேன்..”

“மாப்பிள்ளைன்னு மட்டு மரியாதை இருக்கா இந்த வீட்ல?” என்று பதிலுக்கு பதில் இருவரும் பேசிக்கொண்டிருந்தனர்.

“மாணிக்கம்… சத்த சும்மா இரு.. வெளி ஆளுங்க முன்னுக்கு இது என்ன வேடிக்கை?” என்று மனைவியை ஒரு அதட்டலிட்டு வந்தார் கந்தசாமியின் மாமனார் கார்மேகம்.

 

தும்பை பூ போல நரைத்த தலைமுடி, நெற்றியில் பட்டையாக திருநீறு, வெள்ளை  வேஷ்டி, முன்டா பனியன், மேலே ஒரு வெள்ளை துண்டு.

பார்க்கவே கை எடுத்து கும்பிடலாம் போல இருந்தது அவர் தோற்றம்.

“நீங்க அவர் அதட்றதை பார்த்து அவர் சொல்றதை அவர் சம்சாரம் கேட்டுக்கும்னு தப்பா நினைக்காதீங்க.. அதுக்கு எல்லாம் வாய்ப்பு இல்ல…” என்று  சத்தமாக ரகசியம் கூறினார் கந்தசாமி தணிகாச்சலத்திடம்.

அவர் வந்த சிரிப்பை அடக்க பார்க்கவும்,” உங்க வீட்ல எப்படி..” என்றார் கந்தசாமி.

“அவராச்சும்  பேச்சுக்கு கெத்தா அதட்டி பேசறாரு.. எங்க வீட்ல அதுக்கு கூட வாய்ப்பு  இல்லைங்க அய்யா..” என்றார் பாவமாக.

வெடிச் சிரிப்பு சிரித்தார் கந்தசாமி.

அதற்குள் காரில் வந்தவர்களும் உள்ளே வந்து சேர்ந்தார்கள்.

“வாத்தா.. நீ தான் எங்க மாலதி சிநேகித பிள்ளையா? எல்லாரும் வாங்க ..” என்று பாவை கையை பிடித்து கொண்டு அனைவரையும் வரவேற்றார் மாணிக்கவல்லி.

சற்று நேரம் அறிமுகத்திற்கு பிறகு, பூம்பாவையை உள்ளே அழைத்து சென்றனர் கார்மேகம் தாத்தாவும், மாணிக்கல்லி பாட்டியும்.

மற்றவர்கள் வெளியே அமர்ந்திருக்கையில், அனைவர்க்கும் சுண்டலும் சுக்கு காபியும் வந்தது.

“எப்பப்பாரு வைத்தியர் வீட்ல சுண்டலும் இந்த சுக்கு காப்பியும்தேன்.. கொஞ்சம் சூடா ஒரு வடை , ருசியா ஒரு போண்டா.. இப்படி  இருந்ததே கிடையாதுங்க” என்றார் பாவமாக தாத்தா.

ஹாசினியும் ஹிருதய்யும் அவர் பேசுவதை ஆ என்று வேடிக்கை பார்த்தனர் 

“உங்க நிலைமை கஷ்டம் தான் போல?” என்றார் தணிகாச்சலம் நமட்டு சிரிப்புடன்.

“என்னத்த சொல்ல? நான் வாக்க பட்டு வந்த நாள்ல இருந்து இதே நிலைமை தான் தம்பி..”

அவர் சொன்ன தினுசில் அனைவரும் சிரித்து விட்டனர்.

“உங்க நிலைமை எவ்வளவோ பரவாயில்லைங்க அய்யா.. எங்க மாமியாருக்கு எல்லாம் சமைக்கவே தெரியாதுங்க.. இந்த சுண்டல் கிடைக்கிறதே பெருசு” என்றார் தணிகாச்சலம்.

ஸ்ரீகாந்த்  உர்ரென்று பார்க்கவும்,

“மச்சான் முன்னுக்க மாமியாரை பத்தி பேசக்கூடாதுங்க தம்பி. இப்படி உலகம் தெரியாத பிள்ளையா இருக்கீங்களே?”

“நான் இவங்க குடும்பத்துல வாக்க பட்டு, வாயை திறக்கிறதே சாப்பிட மட்டும் தானுங்க.. ஏதோ இன்னிக்கு  நீங்க பேசவும் சொல்லிப்புட்டேன்..” என்றார் நக்கலாக.

கந்தசாமி ஸ்ரீங்காந்த்தை பார்த்து, “உண்மை சுடத்தான் செய்யும்.. என்ன செய்ய?” என்றார்.

“நான் வாயே திறக்கலயே” என்றார் பாவமாக.

கந்தசாமியும் தணிகாச்சலும் “ஹா ஹா ஹா” என்று வாய் விட்டு சிரித்தார்கள்.

“மாமாவுக்கு இப்படி எல்லாம் பேச தெரியுமா அண்ணா?” என்று அண்ணனின் காதை கடித்தாள் ஹாசினி.

“நான் கூட ப்ரதமேஷ் எப்பவுமே ஜாலியா பேசுறானே, அத்தை மாமா ரெண்டு பேரும் அப்படி இல்லைன்னு யோசிப்பேன் ஹாசிம்மா.. இப்ப தான் தெரியுது, மாமாக்கு ஜாலியா பேச தெரியும், ஆனா அங்க அவரை பேச விடறது இல்லைன்னு” என்றான் ஹிருதய் தங்கையிடம் மெதுவாக.

காதம்பரியும் பிள்ளைகளுடன் அமைதியாக வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தார்.

பத்து நிமிடத்தில் பூம்பாவையை அழைத்துக்கொண்டு வெளியே வந்தனர்.

“சாதாரண நீர்க்கட்டி தானுங்க.. நாற்பத்தி எட்டு நாள் மருந்து குடிச்சா சரியா போகுமுங்க” என்றார் தாத்தா.

“அதனால சைட் எஃபெக்ட் எல்லாம் இருக்குமா?” என்றான் ஹிருதய்.

“அது எல்லாம் ஒன்னும் இருக்காது தம்பி.. இந்த மாதிரி கட்டி அதிகமான மன அழுத்தத்தால் வரது. இங்கே கிடைக்கிற மூக்கிரட்டை மாதிரி கீரைகள் கொண்டே தான் கஷாயம் செய்வோம். நீங்க பயப்படற அளவுக்கு ஒன்னும் இல்லை. பல வருஷமா செஞ்சுகிட்டு வர்றோம். ஆனா நம்பிக்கை ரொம்ப முக்கியம். நம்பிக்கை இல்லைனா மருந்து வேலை செய்யாது” என்றார் தாத்தா.

“சரி செஞ்சிடலாம்” என்று அவர் கூறியதே ஸ்ரீகாந்த்திற்கு ஒரு நம்பிக்கையை கொடுத்தது. இந்த சூழல் அவருக்கு உண்மையிலே நம்பிக்கையை தந்தது என்ரே கூறலாம்.

அடுத்து காதம்பரி அவருக்கு காட்டி கொண்டார். “உங்களுக்கு, எப்பொழுதுமே இருக்கிற பிரச்சனைனு சொல்றீங்க.. ஒரு பொடி மட்டும் கொடுக்கிறேன். ஒரு மாசம் தேன்ல குழைச்சு இரண்டு தடவை எடுத்துக்கிட்டிங்கன்னா, சரி ஆயிடும். இல்லைனா அப்புறம் ஒரு தடவை வந்து காட்டிட்டு போங்க” என்றார்.

 

பின் மனைவியிடம் மெதுவாக எதுவோ கூறினார். உடனே மாணிக்கவல்லி   பாட்டி சென்று ஒரு மாதத்திற்கான பொடியை கொடுத்துவிட்டு, அதை எடுத்துக்கொள்ளும் அளவு, முறை அனைத்தையும் காதம்பரிக்கு எடுத்து கூறினார்.

பின் ஹாசினியை பற்றி கூறினார்கள்.

சின்ன பிள்ளைக்கு என்றவுடன் சிரத்தையுடன் பரிசோதித்தனர். பித்தம் தான் அதிகமா இருக்கு. பின் அவளுக்கும் நாற்பத்தி எட்டு நாள் மருந்து கொடுத்தால் நல்லது என்று  கூறினார்கள்.

“அவளுக்கு அடுத்த வாரம் ஸ்கூல் இருக்கே?”

“சரி அப்ப லீவுக்கு கூட்டிட்டு வாங்க..” என்றார்.

“நான் யோசிச்சிட்டு, எப்ப வர்றோம்னு சொல்றேன் பாட்டி” என்றார் பூம்பாவை.

“பாப்பாவுக்கு அவசரமில்லை. மெதுவா கூட பார்த்துக்கலாம். உனக்கு  உடனே வைத்தியத்தை ஆரம்பிக்கணும் கண்ணு” என்றார் கார்மேகம் தாத்தா.

“அவங்க வீட்ல கலந்துட்டு சொல்லுவாங்க.. பொறுங்க” என்று கணவரிடம் கூறினார் பாட்டி.

 

தணிகாச்சலம் அனைவரையும் சுற்றி  சுற்றி பார்த்து, எதுவோ சொல்ல வரவுதும் சொல்லாமல் இருப்பதுமாக அமர்ந்திருந்தார்.

“ஏன் தம்பி, நீங்க என்ன பொண்ணுகிட்ட காதலையா சொல்லப்போறீங்க. வைத்தியர்கிட்ட நோயை தானே சொல்ல போறீங்க?” என்றார் கந்தசாமி அவரிடம்.

அவர் உங்களுக்கு எப்படி தெரியுமென்பதை போல பார்க்கவும்,

“ஆடு திருடவனாட்டும் திரு திருன்னு முழிக்கிறீங்களே. அதை பார்த்தாலே தெரியுது..” என்றார் கந்தசாமி.

“நீங்க உள்ளாரா வாங்க” என்று தாத்தா அவரை அழைத்து சென்றார்.

அவருக்கும் பயப்பட  ஒன்றும் இல்லை, என்று ஒரு மாதத்திற்கு பொடியையும் ஒரு கஷாயத்தையும் கொடுத்து, அது தீரவும் ஒரு முறை வந்து செல்லுமாறு கூறினார்.

ஹிருதய் அனைத்தையும் வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்தான். அவன் முகத்தில் ஒரு சஞ்சலம் இருந்து கொண்டிருந்தது.

“உங்க  அப்பா அம்மா வயசு இவங்க அனுபவம் இதயா… நம்பிக்கையா  வைத்தியம் பார்த்துகிட்டாத்தான் பலன் கிடைக்கும்” என்றார் கந்தசாமி ஹிருதய்யிடம்.

“அவன் பேரு ஹிருதய்” என்றார் ஸ்ரீகாந்த்.

“நான் வடமொழி எழுத்து உபயோகிக்கிறது இல்லை. என்ன செய்ய?” என்றார் நமட்டு சிரிப்புடன். 

அவர் உர்ரென்று பெரியவர்களிடம் விடை பெற்றுக்கொண்டு காருக்கு சென்றுவிட்டார்.

“அவரை எதுக்கு மாப்பிள்ள இப்ப வம்புக்கு இழுக்கிறீங்க?” என்றார் மாணிக்கவல்லி.

“பின்ன எம்பொண்டாட்டிய வம்புக்கு இழுத்தா, கையில குச்சியோட துரத்துறாங்களே பூபால டீச்சரு ..”

கந்தசாமியின் கலாட்டாவுடன் அனைவரும் வீடு திரும்பினார்கள்.

ராஜாத்தி அம்மாவிடம் இரவு உணவு என்ன என்ன சமைக்க வேண்டும் என்று கூறி விட்டே சென்றிருந்தார் பூம்பாவை. அதனால் இரவு உணவு தயாராக இருந்தது.

வைத்தியர் சொன்னதை  சுருக்கமாக கூறினார் ஸ்ரீகாந்த் தாய்க்கும் தமக்கைக்கும்.

“இப்ப என்ன செய்யலாம்ன்னு இருக்கீங்க?”

“நானும் ஹாசினியும் இருந்து காமிச்சிக்கிட்டே வரோம்”

“அவளுக்கு ஸ்கூல் இருக்கே ஹனி..”

“பேசாம இந்த வருஷம் தஞ்சாவூர்லயே சேர்த்துடலாமான்னு யோசிக்கிறேன்”

“நாற்பத்தி எட்டு நாள் தானே கணக்கு.. ஒரு வருஷம் எதுக்கு இங்க?”

“அவ இந்த வருஷம் ப்ளஸ் டூ … படிப்பு முக்கியம்.. பாதியில இங்கேயும் அங்கேயும் அல்லாட முடியாது.. அதுவு இல்லாம அங்க மயக்கத்துக்கு என்ன காரணம்னே கண்டு பிடிக்க  முடியல.. ஆரோக்கியமும் முக்கியம் இல்லையா?”

“ஸ்கூல்ல அட்மிஷன் கிடைக்குமா ஹனி?”

“இதுயென்ன சென்னையா டா.. இந்த ஊர்ல அட்மிஷன் எல்லாம் கிடைக்குமா இருக்கும்.. ஆனா ஹாசினிக்கு செட் ஆகணும் இல்ல?” என்றார் சிவங்கரி.

“நான் இங்க படிச்சுக்கிறேன் பாட்டி” என்றாள் ஹாசினி.

அதற்கு பிறகு சிறிது நேரம் அமைதியாக இருந்தார்கள் அனைவரும்.

“நான் டிரீட்மெண்ட் முடியற வரைக்கும் அம்மாக்கு துணைக்கு இங்க இருக்கவா அப்பா? அப்புறம் சென்னை வந்துடறேன்” என்றான் ஹிருதய்.

“நீயும் இங்கேயே இருந்துட்டா.. எல்லாரும் குடும்பமா சுத்தி உட்கார்ந்து லாலா லல்லா லல்லல்லா பாட்டு பாட போறீங்களா? 

ஏன்டா, வேலைக்கு போகணும்னு உனக்கு நினப்பு இருக்கா இல்லையா? அப்பாக்கு வேலை இல்ல.. நாம தான் பொறுப்பா இருக்கணும்னு நினைப்பு இருக்கா இல்லையா?” என்று சிவங்கரி கூறவும் ஹிருதய்யின் முகமே விழுந்து விட்டது.

“பாட்டி, அவன் அம்மாக்கும் தங்கச்சிக்கும் உடம்பு சரி ஆகணும்னு தானே யோசிக்கிறான்.. சும்மா அவனை எதுக்கு டீ மோட்டி வேட் செய்யறீங்க?”

“நான் ப்ராக்டிக்கல்லா பேசுறேன்.. நான் ஒன்னும் கெட்டவ இல்லை”

“அக்கா எல்லா சமயமும் பிராக்ட்டிகல்லா இருந்தா சரி வராது. கொஞ்சம் எமோஷனலாவும் யோசிக்கணும்” என்று சற்றே கண்டிப்பாக கூறினார் காதம்பரி.

எப்பொழுதும் அம்மாவுடன் சேர்ந்துக்கொண்டு மனைவி பக்கம் பார்க்கவே மாட்டார் ஸ்ரீகாந்த். கடந்த சில நாட்களாக நடப்பது அனைத்தும் அவருக்குள் ஒரு நல்ல மாற்றத்தை ஏற்படுத்தி இருந்தது.

“சரி ஹனி… ஹாசினியை ஸ்கூல்ல சேர்த்துவிட்டு  நான் கிளம்புறேன்..”

“இல்ல, இங்க நாங்க பார்த்துகிறோம்… நீங்க போய் அங்க டீ சி எல்லாம் வாங்க ஏற்பாடு செய்யுங்க..”

சரி என்று உடனே ஒப்பு கொண்டார்.

“ஏதாவது மந்திரிச்சு வச்சிட்டியா என் புள்ளய.. இப்படி நீ சொல்றதுக்கு எல்லாம் தலை ஆட்டுறான்”

சிவங்கரியின் புலம்பலை யாரும் கேட்கவில்லை.

“அத்தை உன்னை விட்டுட்டு நான் எப்படி ஒரு வருஷம் இருக்க போறேனோ?”

“நீ லீவ்  கிடைக்கிறப்ப எல்லாம் இங்க வந்துடு டா.. சனி ஞாயிறு எல்லாம் இங்க வந்துடு ப்ரதமா” 

“பின்ன வராம?”

அனைவரும் தூங்க சென்றனர்.

ஸ்ரீகாந்த்தும் பூம்பாவையும் ஊஞ்சலில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தார்கள்.

“தனியா சமாளிச்சிடுவீங்களாங்க?”

“தெரியல ஹனி, நீ இல்லாம நான் எப்படி? ஆனாலும் வேலை தேடணும் இல்லையா? சேவிங்ஸ் குறைஞ்சிட்டே வருது இல்ல?”

“எல்லாம் சீக்கிரம் சரி ஆயிடும்.. அவசரப்பட்டு கிடைக்கிற வேலையில சேர்ந்துடாதீங்க.. பிடிச்ச வேலையா பாருங்க.. நம்மால சமாளிக்க முடியும்”

“சரி ஹனி”

“சாப்பாடு எல்லாம் சமாளிப்பீங்களா? நீங்க என்ன செய்வீங்கன்னு தான் எனக்கு கவலையே?”
 

இவர்கள் பேசுவதை கேட்டுக்கொண்டிருந்தார் காதம்பரி. அவர் அங்கே ஹாலில் தான் ஒரு பக்கமாக படுத்திருந்தார்.

“நான் இருக்கும் போது நீ எதுக்கு கலங்குற? நான் பார்த்துகிறேன் ஸ்ரீகாவை.. நீ உடம்பை சரி பண்ணிட்டு வந்து சேர்ந்தா போதும்” என்று இவர்களிடம் எழுந்து வந்தார்.

“சித்தப்பா வர மாட்டாங்களே சித்தி..” என்றார் ஸ்ரீகாந்த்.

அவருக்கும் சிவங்கரிக்கும் எப்பொழுதுமே ஒத்து போகாது. ஒரு முறை சிவங்கரி எதோ வார்த்தையை விட, அன்றிலிருந்து இவர்கள் வீட்டிற்கு அவர் வர மாட்டார்.

 

“அதுக்கு என்னடா.. நாங்களும் சென்னைல தானே இருக்கோம்.. நீ எங்க வீட்டுக்கு வந்துடேன். உனக்கும் நல்ல மாற்றமா இருக்கும்”

“அம்மா ஒத்துக்கணுமே சித்தி”

“உங்க அம்மாவை நான் பார்த்துகிறேன்.. நீ அங்க வந்துடு..” 

சரி என்றார் ஸ்ரீகாந்த்தும். அவருக்கு தனியாக இருக்க முடியும் என்று தோன்றவில்லை.

இப்படியாக பூம்பாவை ஹாசினி ஹிருதய்  மூவரும் இங்கேயே தங்குவதாகவும் ஸ்ரீகாந்த் மட்டும் சென்னையில்  சித்தி வீட்டில் தங்கிக்கொள்வதாகவும் முடிவு செய்தார்கள்.

——————————

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!