Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

முத்தாயி அம்மாச்சி

முத்தாயி அம்மாச்சி final – part 1

அத்தியாயம் 25

“மாமா, எல்லாரும் டென்ஷனா இருக்காங்களான்னு அத்தை உங்களை பார்த்துக்க சொன்னாங்க” என்று வந்து ஹிருதய்யிடம் தன் மழலை குரலில் கூறினான் ரிஷி, ப்ரதமேஷ் சுசீலாவின் மகன்.



Advertisement

“எதுக்கு டா, இல்லைனா வந்து டென்ஷன் பண்ண போறாலாமா உன் அத்தை?” என்று அவனிடம் காய்ந்தார் மாலதி.

“மாலு அப்பத்தா, நீங்க இப்படி தான் கேட்பீங்கன்னு அத்தை சொன்னாங்க. அப்படி கேட்டா,’டென்ஷன் ஆகுறது உடம்புக்கு நல்லது இல்லைன்னு சொல்லச் சொன்னாங்க’ “ என்றான் முத்தாயி சொல்லி கொடுத்தபடியே.

Advertisement

Advertisement

“பார்த்தியா ஹிருதய், நான் சும்மா இருந்தாலும் வீம்புக்குன்னே வம்புக்கு இழுக்கிறா உன் பொண்டாட்டி” என்று ஹிருதய்யிடம் புகார் வாசித்தார்.

“அவன் கிட்ட சொல்லி என்ன புண்ணியம், விடு மாலதி.. எல்லாம் உங்க மாமாவை சொல்லணும்.. அவர்கூட கூட்டு சேர்ந்து இத்தனை நாள் ஆட்டம் போட்டது எல்லாம் சரி, இப்ப நிலைமையை புரிஞ்சுக்கணுமா வேணாமா?” என்று அவர் பங்கிற்கு புலம்பினார் நித்யகல்யாணி.

Advertisement

இரு குடும்பத்தின் அனைத்து உறுப்பினர்களும் பாவை வீட்டில் தான் ஆஜர் ஆகி இருந்தார்கள். நேற்று தான் சென்னையில் இருந்து அனைவரும் வந்திருந்தார்கள். மாலதி தஞ்சாவூரில் அவர்கள் வீட்டிற்கே அனைவரையும் வர சொல்லுவோம் என்று கூறியதை காதில் வாங்கிக்கொள்ளாமல், இவர்கள் வீட்டிற்கு வந்துவிடும் படி கூறி அவளும் ஹிருதய்யுடன் வந்துவிட்டாள்.

அதனால் சௌந்தர் மாலதி இருவரும் இவர்கள் பின்னே கிளம்பி வந்திருந்தனர்.

பிரசவத்திற்கு டாக்டர் குறித்து கொடுத்த நாளுக்கு இன்னும் ஒரு நாள் தான் இருந்தது. ஆனால், இன்று ஒரு முக்கிய வழக்கு, அதற்கு போய் தான் ஆக வேண்டும் என்று கிளம்பிக் கொண்டிருக்கிறாள்.

எந்த நேரம் வேணுமானாலும் பிரசவம் ஆகலாம் என்பதால் பயந்துபோய் அமர்ந்திருந்தார்கள் மாலதியும் நித்யகல்யாணியும்.

வேலை செய்யும் அம்மாவுடன் நின்று பாவை காலை உணவை ஏற்பாடு செய்து விட்டார். காதம்பரி, சுசீலா இருவரும் அனைவருக்கும் பரிமாறி கொண்டிருந்தார்கள்.

“நீங்க கவலை படாதீங்க, அதான் நானும் கூட இருக்கேன் இல்ல. ஒன்னும் பயப்பட வேண்டாம்” என்று ஆறுதலாக கூறினார் காதம்பரி.

“இருந்தாலும்.. வேற யார் கிட்டயாவது இந்த கேஸை ஒப்படைக்கலாம்ல.. எதுக்கு தேவை இல்லாத ரிஸ்க்..” என்றார் மாலதி ஆற்றமாட்டாமல்.

பூம்பாவையை வேறு முறைத்து கொண்டிருந்தார்.

“பி ஸ்கொயர், மருமகளுக்கு எப்பவுமே சப்போர்ட் பண்ணக்கூடாது, தப்பு பண்ணா கண்டிக்கணுமா வேணாமா?” என்று அவருடன் வேறு சண்டை.

முத்துவிற்கு வயிறு நன்றாக இறங்கி இருந்தது. பார்க்க பார்க்க தாயாய் அவரின் தவிப்பு புரிகிறது தான் அனைவருக்கும். உண்மையிலே அனைவருக்குமே உள்ளுக்குள் பயம் தான்.

“என்ன செய்ய? முக்கியமான கேஸ்.. ஒரு குழந்தையின் உயிர் சம்பந்தப்பட்டது” என்று முத்து அழுத்தமாக கூறி இருந்தாள்.

 சிவங்கரி தான், “எல்லாம் கன்ட்ரி ப்ரூட்ஸ் முத்து.. சும்மா சலம்பிகிட்டே இருக்காங்க.. சவாலை ஏத்துக்கிற உன் ஸ்பிரிட் இங்க யார்கிட்ட இருக்கு சொல்லு? ஐ அம் ப்ரௌட் ஆஃப் யூ” என்று முத்துவை பாராட்டி கொண்டிருந்தார்.

“உக்கும், அவளே நாட்டியம் ஆடிக்கிட்டு இருக்கா, இந்த அம்மா வேற சலங்கை கட்டி விடுது.. நல்லா தைய தக்கான்னு ஆடட்டும்..” என்று முனங்கினார் நித்யகல்யாணி.

ஹிருதய் நகத்தை கடித்து துப்பிக்கொண்டு டென்ஷனாக அமர்ந்திருந்தான்.

ஹிருத்யயை பெரும்பாலும் இவ்வளவு டென்ஷனாக பார்ப்பது அபூர்வம். கேசவன் அமைதியாக அவன் தோளில் தட்டிக்கொடுத்தார்.

ஸ்ரீகாந்த்,”அது எல்லாம் முத்து தைரியமா இருக்கு, நீ ஏன்டா பயப்படற” என்று ஆறுதல் சொன்னார்.

ஹிருதய், அமைதியாக கைபேசியை ப்ரதமேஷிடம் காண்பித்தான்.

கோர்ட்டில் இருக்கும் பாதுகாவலர் அனுப்பி வைத்திருந்தார்.

“சார், இன்னிக்கு முத்து மேம் கேஸ். ஜட்ஜ் கண்டிப்பா உங்க குடும்பத்துல இருந்து இன்னிக்கு ரெண்டு பேருக்கு மேலே உள்ள விட கூடாதுன்னு சொல்லி இருக்காங்க.. தயவு செஞ்சு ஒத்துழைங்க” என்று அனுப்பி இருந்தார்.

 “என்ன டா, இங்க குடும்பமே கிளம்பிகிட்டு இருக்கே.. நான் கூட லைவ்வா கோர்ட்ல கேஸ் பார்க்கணும்னு இருந்தேனே?” என்றான் கவலையாக.

சரியாக அந்நேரம் வெளியில் புல்லெட் வந்து நின்றது.

உள்ளே வராமல் வெளியே இருந்து ஹார்ன் அடித்தார் கந்தசாமி.. “இப்ப என்ன புல்லட்ல போக போறாங்களா அய்யனும் பேத்தியும், இன்னிக்கு அந்த புல்லட்டை என்ன பண்றேன் பாரு மாலு”, என்று வேகமாக எழுந்து சென்றார் நித்யகல்யாணி.

அங்கே தணிகாச்சலம் கந்தசாமியின் அருகில் நின்றுகொண்டிருந்தார்.

“பார்த்தியா தம்பி, இந்த கந்தசாமி கெத்தை.. நான் சொன்னப்ப நம்பலயே, இந்த வயசுலேயும் என் புல்லட் சத்தம் கேட்டு எப்படி ஓடி வந்தா பார்த்தியா என் ஆளு.. அம்புட்டு லவ்வு என் மேலே” என்றார் அவரது வழக்கமான ஸ்பீக்கர் குரலில் .

“வீட்டுல இம்புட்டு சனம் இருக்கு, சம்பந்தபுரம் எல்லாம் கூடி இருக்கு, பேச்சை பாரு” என்று கணவனை கடுமையாக முறைத்தார்.

“என்னங்க சொல்றீங்க.. அவங்க உங்களை முறைச்சு இல்ல பார்க்கிறாங்க” என்றார் தணிகாச்சலமும் விடாமல் வம்பை வளர்க்க.

“நீ வேற உலகம் புரியாத ஆளா இருக்கியே.. அது என் சம்சாரம் டீச்சர் யா.. அதனால் பசங்களை மிரட்டி மிரட்டி அது காதல் பார்வையே முறைக்கிற மாதிரி தான் இருக்கும்” என்றார் சிரிக்காமல்.

இவருடன் மல்லுக்கு நிற்க முடியாது என்று தலையில் அடித்து கொண்டு உள்ளே சென்றுவிட்டார் நித்யகல்யாணி.

அதற்குள் முத்துவும் தயாராகி வந்துவிட்டாள்.

“வாங்க புறப்படலாம்” என்று மொத்த குடும்பம் எழுந்து நின்றது.

பார்த்திருந்த ப்ரதமேஷிற்கு ஒரு நிமிடம் பக்கென்று தான் இருந்தது.

“இதுக்கே மிரண்டா எப்படி ப்ரதம் , அங்கே ஆல்ரெடி மதுரைல இருந்து ஒரு க்ரூப் வந்திருப்பாங்க..”

“என்னடா சொல்ற?”

இவர்களுக்காக வேன் சொல்லி இருந்தார் கந்தசாமி.

“எல்லாரையும் உள்ளே விடுவாங்களா” என்றார் ஸ்ரீகாந்த்.

“அது எல்லாம் நம்மள விடாமல் போயிடுவாங்களா?” என்றார் கந்தசாமி தன் மீசையை முறுக்கி விட்டபடி.

“என்ன ஹிருதய், தாத்தா வேற மாஸ் காட்டிகிட்டு இருக்காரு, நீ சொல்லேன் டா” என்றான் ப்ரதமேஷ்.

“நான் சொன்னா கேட்கவா போறாங்க, அங்க போய் பார்த்துக்கலாம் வா” என்றான் ஹிருதய்.

“சரி, வேன் எல்லாம் பிடிக்கிறீங்களே, இதுக்கெல்லாம் க்ளையன்ட் காசு கொடுப்பாரா?” என்றான் ப்ரதமேஷ் சீரியசாக.

“நீ வேற ஏன்டா.. முத்து பல கேஸ் நடத்துறா தான்.. ஆனால் அதுல வர வருமானத்தை விட செலவு தான் அதிகம்.. எல்லாருக்கும் வண்டி செலவு, வெடி செலவு, ஸ்னேக்ஸ் செலவு, சாப்பாடு செலவுன்னு..”

‘ஆங்’ என்று பார்த்திருந்தான் ப்ரதமேஷ்..

முத்தாயி, மாலதி, காதம்பரி மட்டும் ஹிருதய்யுடன் காரில் வந்தனர்.

மனைவியை டென்ஷன் படுத்தவே புல்லட் கொண்டு வந்திருந்தார் கந்தசாமி.

வேனில் ஏறியதுமே ,“சுசீ உங்க அம்மாக்கு போன் போட்டு நாம கிளம்பிட்டோம்னு சொல்லி வை” என்றார் நித்யகல்யாணி. அவரிடம் தான் முத்துவிற்கு காண்பித்து கொண்டிருக்கிறார்கள்.

அவர், “நான் எல்லாம் தயாரா வச்சிருப்பேன், பயப்படாதீங்க.. வலி வந்தா நேரா வந்துடுங்க” என்று கூறி இருந்தார்.

இவர்கள் வந்து இறங்குகையில், கோர்ட் வாசலிலே ஆம்புலேன்ஸ் ஒன்று நின்றது.

“யாருக்கோ முடியல போலவே தாத்தா, ஆம்புலன்ஸ் எல்லாம் நிக்குது” என்றான் ப்ரதமேஷ் கந்தசாமியிடம்.

“அது நம்ம டீச்சர் அண்ணாவோடது தம்பி, சௌந்தரோட மச்சான்ஸ் முன்னேற்பாடு” என்றார் நமட்டு சிரிப்புடன்.

“அத்தை, நீங்களும் ஸ்வீட்டிம்மாவும் முத்துகூட முன்ன போங்க, நான் வண்டியை பார்க் பன்னிட்டு வந்துடறேன்” என்று ஹிருதய் இவர்களை மட்டும் முன்னே அனுப்பி வைத்தான்.

மதுரையில் இருந்து இருபது பேர்கள். இவர்கள் ஒரு இருபது பேர் என்று நாற்பது நபர்களை பார்த்ததும் அந்த காவலாளி கடுப்பாகிவிட்டார்.

அவருடன் கந்தசாமி மல்லுக் கட்டிக்கொண்டிருந்தார்.

“எங்க முத்து இதயா?” என்றார் பேத்தியிடம்.

“மேடம் நீங்க மட்டும் உள்ளே போங்க முதல்ல, உங்க கூட ரெண்டு பேருக்கு தான் அனுமதி, நீங்களே ரெண்டு பேரை கூட்டிட்டு உள்ளே போங்க” என்றார் அந்த காவலாளி கறாராக.

வேறு வழி இன்று மாலதியும் காதம்பரியும் மட்டும் முத்துவுடன் முதலில் உள்ளே சென்றனர்.

“மேடம் வீட்டுக்காரர் கிட்ட முன்னவே சொல்லி இருந்தேன் இல்ல?” என்று கந்தசாமியிடம் போராடி கொண்டிருந்தார் அந்த காவலாளி.

அங்கே ஜட்ஜ்யிடம் “இந்த ஒரு தடவை மட்டும் அனுமதிங்க மேடம். இனி இப்படி ஆகாது, எல்லாரும் ஊர்ல இருந்து இதுக்காக தான் வந்திருக்காங்க.” என்று இவர்களுக்காக பெர்மிஷன் கேட்டு கெஞ்சிக் கொண்டிருந்தான் ஹிருதய்.

“பின் ட்ராப் சைலென்ஸ் இருக்கணும். இல்லைனா பைன் போட்டிருவோம் , கண்டிப்பா இது தான் கடைசி தடவை புரியுதா?” என்று அவரும் அனுமதி கடிதம் கொடுத்து அனுப்பினார்.

அதன் பின் ஹிருதய் வந்து அனைவரிடமும் ஜட்ஜ் கூறியதை கூறி, அமைதியாக இருக்க வேண்டும் என்று பாடம் எல்லாம் எடுத்து, காவலாளியிடம் அனுமதி கடிதம் கொடுத்து அனைவரையும் உள்ளே அழைத்து சென்றான்.

————–

அன்றைய வழக்கு என்னவென்றால், நாற்பது வருடங்களுக்கு முன்பாக அருணாச்சலம் என்பவர், கஷ்டப்பட்டு கொண்டிருந்த எட்டு நபர்களுக்கு தன்னுடைய இடத்தில் ஒரு பகுதியை ஒரு உதவியாக பயன்படுத்த கொடுத்திருந்தார். அதாவது அந்த இடத்தில் சிறிய கடைகளாக எட்டு கடைகளை கட்டி கொடுத்து , “நீங்கள் இங்கே உங்கள் வியாபாரத்தை தொடங்குங்கள் வாடகைன்னு எதுவும் கொடுக்க வேண்டாம். உழைச்சு அவங்க அவங்க குடும்பத்தை மேலே கொண்டு வந்துக்கோங்க.” என்று நல்லெண்ணத்தோடு கொடுத்திருந்தார்

“நீங்கள் ஒரு நல்ல நிலைமைக்கு வரும் வரை இங்கே இருந்து கொள்ளலாம்” என்றும் கூறியிருந்தார்.

அவருக்கு அடுத்து அவரது மகன் சந்திரசேகர், அவரது தந்தை அளவிற்கு தொழிலில் வெற்றி பெறவில்லை. இருந்தும் இந்த இடத்தை காலி செய்யுமாறு கூறவில்லை. உதவியாக செய்ததை பறிக்க கூடாது என்றே நினைத்திருந்தார்

அவருக்கு அடுத்து அவரது மகன் ஆனந்த் தான் இந்த வழக்கை இப்பொழுது பதிந்திருக்கிறார்.

அவர்களுக்கு பணத் தேவை மிகவும் அதிகமாக இருந்தது, அதனால் இந்த இடத்தை காலி செய்து தருமாறு கேட்டுள்ளார். ஆனால் அதில் உள்ளவர்களோ இந்த இடம் எங்களுக்கே சொந்தம் என்று வாதாடுகிறார்கள். மேலும் அவர்கள் அந்த இடத்தை ஒரு பில்டரிடம் விலை பேசி விட்டார்கள் என்றும் தெரிய வந்திருக்கிறது.

நிலத்தின் பட்டா, தாய் பத்திரம் அனைத்தும் ஆனந்த் பெயரில் தான் இருக்கிறது. இப்பொழுது அந்த நிலத்தை விற்க வேண்டும் என்றாலும் ஆனந்த் கையெழுத்து தேவைப்படுகிறது. பத்து சதவீகிதம் மட்டும் ஆனந்த்கு கொடுத்துவிட்டு , மீதம் அவர்களுக்கு என்று கூறுகிறார்கள்.

ஆனந்த்தின் குழந்தைக்கு உடனடியாக அறுவை சிகிக்சை செய்ய வேண்டிய கட்டாயம். அதற்காக அவருக்கு உடனே பணம் தேவைப்படுகிறது. அதை தெரிந்துகொண்ட அந்த பில்டர்ஸும், அங்கே குடி இருப்பவர்களும் இவரை ஏமாற்றி நிலத்தை அபகரிக்க பார்க்கிறார்கள்.

ஆனந்த்தின் சார்பாக தான் முத்து வாதாடுகிறாள். வழக்கை பற்றி சுருக்கமாக கூறிய பின் விவாதங்கள் தொடர்ந்தது .

எதிர் தரப்பு வழக்கறிஞர் எட்டு பேரில் இருவரால் இன்று கோர்ட்டில் ஆஜராக முடியாத தவிர்க்க முடியாத சூழ்நிலை உள்ளதாகவும் அதனால் வழக்கை இன்னும் ஒரு மாதம் தள்ளி வைக்குமாறு கேட்டுக் கொண்டார்

“அப்ஜெக்ஷன் நீதிபதி அவர்களே, இந்த வழக்கை முடிக்காமல் இழுத்து அடிப்பதற்கான தந்திரமே இது. இந்த வழக்கு இரண்டு வாரங்களுக்கு முன்பாக நடக்க வேண்டியது அப்பொழுதும் இருவரால் வர முடியவில்லை என்று வாய்தா வாங்கி இருந்தார்கள். இன்று வேறு இருவர் வர முடியவில்லை என்று காரணம் கூறுகிறார்கள்.

ஆனந்த்தின் குழந்தைக்கு இன்னும் ஒரு மாதத்திற்குள் அறுவை சிகிக்சை செய்ய வேண்டும். அதற்குள் இந்த வழக்கு முடிவுக்கு வந்தால் மிகவும் உதவியாக இருக்கும் நீதிபதி அவர்களே. அதற்காக தான் நான் என் குடும்பத்தார்களின் நியாயமான பயத்ததையும் பொருட்படுத்தாமல், மருத்துவமனைக்கு செல்ல வேண்டிய நேரத்தில் கோர்ட்டிற்கு வந்திருக்கிறேன்.”

“வர முடியவில்லை என்பதற்கு நியாயமான காரணம் சமர்ப்பிக்கப்படுகிறது” என்றார் எதிர் தரப்பு வழக்கறிஞர்

“இந்த பொண்ணுக்கு பிரசவ நேரம் நெருங்கியும் ஆஜர் ஆகி இருக்காங்க. உங்க கட்சியில இருக்கிறவங்களுக்கு தலைவலின்னால வர முடியலை என்பது நியாயமான காரணமா?இது கோர்ட்டை அவமதிக்கிறதா ஆகுது.” என்றார் ஜட்ஜ் கடுமையாக.

“பின் இந்த கேஸ் இன்று இப்பொழுது நடைபெறும். உங்க ஆர்கியுமென்ட்ஸ் ஆரம்பிங்க” என்றார் திட்டவட்டமாக.

எதிர்க்கட்சி வழக்கறிஞர் கூறினார், “நாற்பது வருடங்களாக இந்த இடத்தை அவர்கள் யாரும் பார்க்கவும் இல்லை, பராமரிக்கவும் இல்லை, இப்போ திடீர்னு வந்து கேட்டா நியாயமா? அங்கே பொழைப்பை நடத்திக்கிட்டு இருக்கவங்க வாழ்வாதாரத்தை பார்க்கணும் இல்லயா?”

முத்து சில புகைப்படங்களை காண்பித்தாள்.

“நீதிபதி அவர்களே, இந்த இடத்தின் பேரில் தான் வழக்கு நடந்து கொண்டிருக்கிறது.”

“இதில் எந்த வியாபாரமும் நடப்பதாக தெரியவில்லையே?”

“அது வந்து.. அது வந்து..” என்று தந்தியடித்தார் எதிர்க்கட்சி.

“அதை அந்த பில்டர்ஸ் அவர்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர ஆரம்பித்து ஒரு மாதம் ஆகிறது நீதிபதி அவர்களே. அதற்கான முன்பணமும் வாங்கி இருக்கிறார்கள். யார் நிலத்தை யார் யாரிடம் இருந்து வாங்குவது என்பதே எனது வாதம். நல்ல நிலைமைக்கு வரும் வரை உபயோகிக்கலாம் என்று தான் எங்கள் கட்சிக்காரரின் தாத்தா எழுத்து மூலமாகவும் டாக்குமெண்ட் மூலமாகவும் கூறி இருக்கிறார். அதற்கான சான்றுகள், இந்த இடம் அவர் அவரது வாரிசான ஆனந்த் பெயரிலே உள்ளது அதற்கான பத்திரங்கள்” என்று முத்து அனைத்தையும் ஆதாரங்களோடு சமர்ப்பித்தாள்.

“ உழுதவனுக்கு நிலம் சொந்தம்ங்கிற மாதிரி பாடுபட்டவர்களுக்கு இடம் கொடுக்க தானே வேணும்?” என்றார் எதிர்க்கட்சி வழக்கறிஞர்.

“ உதவியா கொடுத்ததை வாங்க கூடாதுன்னு தான் இவங்க கஷ்ட காலத்துலயும் அமைதியா இருந்தாங்க. இப்ப இவரோட குழந்தைக்கு ஆபரேஷன் செய்ய வேண்டிய இக்கட்டான சூழ்நிலை. இப்ப கூட பாதி இடத்தை அவங்களுக்கும் மீதியை இவர்களுக்கும் எடுத்துக்கலாம்ன்னு அவர் கேட்டிருக்காரு.

ஆனால் கொஞ்சம் கூட மனசாட்சியே இல்லாம பேராசை பட்டு முழு இடமுமே எங்களுக்கு தான் சொந்தம்ன்னு கேட்குறாங்க. இவர் கையெழுத்து போடாம அந்த இடத்தை இப்போ விக்கவும் முடியாது.

இவருடைய இக்கட்டான சூழ்நிலையை பார்த்து இந்த கேசை இழுத்தடிச்சா இவர் வேறு வழியில்லாமல் ஒரு சின்ன அமௌன்ட் வாங்கிட்டு இடத்தை கொடுத்துவிடுவார் என்று தான் இந்த திட்டமே போடுறாங்க.

அதற்காக தான் இந்த கேஸ் அடுத்த மாசம் அடுத்த மாசம்ன்னு இழுத்தடிக்கிறாங்க இதை பத்தி இந்த வழக்கறிஞர் பேசியதை நாங்கள் தற்செயலா கேட்டு அதை வீடியோவாக எடுத்திருக்கோம் அதை இங்கே சமர்ப்பிக்கிறேன்” என்று வழக்கறிஞர் பில்டர்ஸுடன் பேசிக்கொண்டிருந்த காணொளியை சமர்ப்பித்தாள் முத்து.

மேலும் சில காரசாரமான விவாதங்களுக்கு பிறகு ஒரு சிறிய இடைவேளை என்று அறிவித்தார் நீதிபதி. மீண்டும் அரை மணி நேரத்தில் வழக்கு தொடரும் என்று கூறியிருந்தார்.

 அந்த இடைவேளையில் பில்டர்ஸ், எதிர்க்கட்சி வழக்கறிஞர், அந்த இடத்தை சேர்ந்தவர்கள் எல்லாரும் கூடி பேசி முன்பு போல ஆளுக்கு பாதி என்று எடுத்துக் கொள்வோம் என்று ஆனந்த்தை அணுகினார்கள். ஆனால் அவரை கந்தசாமி பொறுப்பில் விட்டிருந்தாள் முத்து. “கோர்ட்டில் பஞ்சாயத்து பேசுறீங்கன்னு ஜட்ஜ் அம்மாகிட்ட சொன்னோம்னு வைங்க.. அப்புறம் கஷ்டம் உங்களுக்கு தான்” என்று கந்தசாமி அவர்களை நெருங்கவே விடவில்லை.

முத்து பூம்பாவை கொண்டு வந்திருந்த பழச்சாற்றை குடித்துவிட்டு சற்று நேரம் அங்கேயே அமைதியாக ஓய்வெடுத்துக்கொண்டாள்.

மதுரை குரூப் அனைவருக்கும் சமோசா டீ என்று கொடுத்தார்கள்.

இடைவேளைக்கு பிறகு மீண்டும் வழக்கு தொடர்ந்தது.

“நீதிபதி அவர்களே, சுமுகமாக ஒரு முடிவு ஏற்பட்டிருக்கிறது. இந்த பில்டர்ஸ் குழுவை சேர்ந்த நீரஜ் , முதலில் பேசிய தொகையை இன்னும் முப்பது சதவீகிதம் அதிகரித்து, மொத்த தொகையை இரண்டு பங்காக பிரித்து இருவருக்குமே தருவதாக கூறுகிறார். அதாவது ஆனந்த்கும், இந்த எட்டு குடும்பங்களுக்கும். அதனால் யாருக்கும் நஷ்டம் ஏற்படாது. அவருக்கு இந்த ஏழை குடும்பகளை அம்போ என்று விட மனமில்லை. அதே போல ஆனந்த்தின் நிலைமையையும் கருத்தில் கொண்டு இதை முன்மொழிகிறார்” என்றார் எதிர் கட்சி வழக்கறிஞர் பெருமையாக.

“அப்பத்துக்கு சண்டை போட்டுக்கிட்ட பூனைங்க கிட்ட இருந்து முழு அப்பத்தையும் பிடிங்கி தின்னுதான் குரங்கு..” என்று முத்து கூறவும், அனைவரும் கொல்லென்று சிரித்துவிட்டனர்.

நீதிபதி கண்டனமாக ஹிருத்யயை பார்க்கவும் அவன் பாவமாக எழுந்து நின்றான்.

நீதிமன்றத்தில் தொந்திரவு செய்தற்காக அமர்ந்திருக்கும் அனைவர்க்கும் ஆளுக்கு ஐநூறு ரூபாய் ஃபைன் என்று கூறினார் நீதிபதி.

“பாயிண்டுக்கு வாம்மா முத்தாயி” என்றார் முத்துவிடமும் கண்டனமாக.

“இந்த வழக்கில் எங்கேயுமே சம்பந்த படாத நீரஜ் என்பவர் எதற்காக தீர்வை கூற வேண்டும் நீதிபதி அவர்களே. நான் முதலில் கேட்டது தான். யார் நிலத்தை யார் யாருக்கு கொடுப்பது.”

“உங்க திட்டம் என்ன ஆனந்த்? நீங்க இந்த பில்டர்ஸ் கிட்ட விக்க போறீங்களா? இல்ல வேற ஏற்பாடு இருக்கா?” என்று கடைசியாக ஆனந்த்திடம் கேட்டார் நீதிபதி.

“இது எங்க தாத்தா ஏழைகளுக்கு உதவத்தான் கொடுத்திருக்காரு. அதனால் உடனடியாக இதை விற்கிற ஐடியா இல்லை மேடம். இதை பிலட்ஜ் பண்ணி, பேங்க்ல லோன் கேட்டிருக்கேன். அதை வச்சு என் குழந்தை சர்ஜெரியை முடிக்கணும். அதற்கு அப்புறம் அங்கே இலவச மருத்துவமனை கட்டணும் அப்படிங்கிறது தான் எங்க யோசனை. இப்ப உடனடியா பணத்தை பிரட்ட முடியலையே தவிர, எங்க தொழில் நடந்துகிட்டு தான் இருக்கு. குழந்தைக்கு முதல்ல குணமாயிடுச்சுன்னா, நான் முழுதாக தொழிலில் கவனம் செலுத்த முடியும். அப்ப மருத்துவமனை கட்ட முடியும்”

இறுதியாக முத்துவும் எதிர்க்கட்சி வழக்கறிஞர்களும் அவள் வாதங்களை சமர்ப்பித்த பிறகு, தீர்ப்பு முத்துவிற்கு தான் சாதகமாக வந்தது.

நிலம் சட்டப்படி ஆனந்த்துக்கே என்றும், ஏற்கனவே அங்கே இருந்தவர்கள் இடத்தை காலி செய்ததனால், உடனடியாக ஆனந்த்திடம் ஒப்படைக்க வேண்டும் என்றும், குழந்தையின் அறுவை சிகிச்சை இருப்பதால் இன்று மாலை ஆறுமணிக்குள் அனைத்து வேலைகளையும் முடித்து விடவேண்டும்” என்று தீர்ப்பளித்தார்.

கோர்ட்டில் இன்று கலெக்ட் ஆன ஃபைன் பணத்தை மருத்துவமனைக்கு முன்பணமாக கட்டிவிட கூறினார் நீதிபதி இறுதியாக சிரித்து கொண்டே.

அனைவருக்கும் மகிழ்ச்சியே. இப்பொழுது அனைவரும் அங்கே இருந்து நேரே மருத்துவமனைக்கு கிளம்பினார்கள்.

முத்துவை உடனடியாக அட்மிட் செய்துவிட்டார்கள்.

இந்த கும்பலை எப்படி சமாளிக்க என்று முழி பிதுங்கி நிற்பது இப்பொழுது சுசீலாவின் பெற்றோர்களின் முறையானது.

—————————–

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!