Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

93. Anonymous - முள் மீது தூங்கினேனே

முள் மீது தூங்கினேனே 1 1

அத்தியாயம் 1..

சரசரத்த பட்டு புடவை, மாலை, தாலி, தலைநிறைந்த மல்லிப்பூவுடன் கூடிய அழகிய ஜடை அலங்காரம், கழுத்து நிறைந்த நகைகள், முகம் நிறைய பூரிப்பு என மணப்பெண்ணுக்கான அத்தனை நிறைகளோடும் பூஜையறையில் நின்றிருந்தாள் கமலி.

மேட்ரிமோனியல் பார்த்து, அலசி ஆராய்ந்து, தன் மகளுக்கு பொருந்திய, நான்கு வரண்களை தேர்வு செய்து, தனக்கு மிக பழக்கமான புரோக்கர் வைத்து எட்டு திசையிலும் அலசி ஆராய்ந்து “எல்லா வேலையும் நீயே பார்த்துட்டா நான் எதுக்கு செல்வம்? எனக்கு வேலையே இல்லை போ… நாலு வரணுமே அடி பொலி ரகம் தான்” என கமலியின் தந்தை செல்வத்தை மெச்சிவிட்டே சென்றார் புரோக்கர்.

அதன் பின் நான்கு வரணையுமே மனைவியிடம் காண்பித்து, மனைவியின் ஒப்புதலுக்கு பிறகு அதன் பின்பே மகளிடம் கொண்டு வந்து கொடுத்தார்.



Advertisement

பல வித ஆராய்ச்சிக்கு பிறகு பல பல கேள்விகளுக்கு பிறகு, நான்கில் தனக்கு பிடித்த கிரியை தேர்வு செய்ததே கமலி தான். நவீன சுயவரம் தான்.

அதன் பின் என்ன? இரு வீட்டாரும் பேசி முடிவு செய்தனர். அவர்களுக்குமே சம்மதம் என்றான பின் கத்தாரில் வேலை செய்யும் கிரிக்கு போனது தகவல், அவனது தாய் வசந்தா மூலம். கூடவே கமலியின் போட்டோவும் பரிமாறப்பட்டது கிரிக்கு.

“பிடிச்சிருக்கும்மா.. பாருங்க” என்று விட்டான் கிரி

Advertisement

“பொண்ணு பத்தி வேற எதுவும் தெரிய வேண்டாமா? பாத்ததுமே சரின்னு சொல்லிட்ட” வசந்தா கேட்க

Advertisement

“அதான் பெயர், ஊர், படிப்பு, வயசு, எல்லாமே போட்டோவோட வந்திடுச்சே! பிறகென்ன தெரியனும், உனக்கு என்னலாம் தெரியனுமோ விசாரிச்சு தெரிஞ்சிட்டு தானே எனக்கு பிக்ஸ் பண்ணிருப்ப” அடக்கப்பட்ட சிரிப்பு அவனிடம்.

“சரிடா மேற்கொண்டு நான் பார்க்கிறேன்” எனவும்

“நான் வரணுமா, லீவு சொல்லனுமா” எதிர்பார்ப்பு அவனிடம்

Advertisement

“இப்போ உறுதி தானே பண்ணுவோம்..வந்துட்டு உடனே நீ கிளம்பனும். சீக்கிரமா கல்யாண தேதி அமைஞ்சிட்டா சேர்த்து லீவ் எடுக்க வசதியா இருக்கும் கிரி!”

“சரிம்மா நீ பேசிட்டு சொல்லு” என வைத்து விட்டான்.

அதன் பின் வசந்தா, பெண் வீட்டாருக்கு பச்சை கொடி காட்டிட, சூட்டோடு சூடாக தன் மாப்பிள்ளைக்கு போன் செய்தார் செல்வம்.

அதுவும் வீடியோ கால் வேறு. முன் கூட்டியே கிரியின் தாய் சொல்லியிருக்க இவனும் குறித்த நேரத்திற்கு அழைப்பை ஏற்றான். கூடவே ஏனோ கமலியும் தன்னிடம் பேசுவாள் என்ற ஆசை வலுத்தது.

செல்வம் முதல் முறை கிரியிடம் பேசும் போதே “கமலி போட்டோ பாத்தீங்களா, உங்கம்மா அனுப்பினாங்களா?  உங்களுக்கு பிடிச்சிருக்கு தானே” அவனது எண்ணங்களை கரக்கும் வண்ணம் தான்  இருந்தது அவரின் பேச்சு.

தாய் காலையில் அனுப்பிய கமலியின் போட்டோ நியாபகம் வர, இதழ்கள் லேசாய் விரிந்த சிரிப்பில் “பிடிச்சிருக்கு மாமா” இரண்டே வார்த்தையில் அவளையும் அவள் குடும்பத்தினரையும் மனதார ஏற்று கொண்டதை வெளிப்படையாகவே அறிவித்து விட, ஏக குஷி தான் செல்வத்திற்கு.

அதன் பின்  நல்ல நாளொன்று பார்த்து கிரியை தவிர்த்து (அவன் கத்தாரில் இருப்பதால்) அவனது வீட்டார், சித்தி, சித்தப்பா, அண்ணி என அனைவரும் வந்து கமலியை கிரிக்கு உறுதி செய்து கூடவே அடுத்த இரண்டு மாதத்தில் திருமண தேதியையும் முடிவு செய்தனர்.

கிரியின் சகோதரி ராஜி, தனிமையில் இவளை சந்தித்து, பொதுவாய் பேசிவிட்டு “கிரி உன் நம்பர் கேட்டாங்க..” என இவளிடமிருந்து வாங்கி கொண்டு, “இது கிரி நம்பர்” என இவளிடம் கொடுத்துவிட்டு சென்றிருந்தாள் ராஜி, கிரியின் அக்கா, திருமணமானவள், மூன்று வயதில் ஒரு ஆணும், ஒரு வயதில் ஒரு பெண்ணும் இருக்கிறார்கள். கணவன் பிரைவேட் கம்பெனியில் வேலை பார்க்கிறான்.

ஆனால் அவன் வீட்டார்கள் வந்து உறுதி செய்த அன்றே, அவனே அவளுக்கு மேசேஜ் செய்தான் கிரி.. கிரிதரன்.

“பதினோறு மணிக்கு கால் பண்றேன் அட்டென்ட் பண்ணு”  என்ற வாட்ஸ் ஆப் நோட்டிபிகேஷனே அவள் உடலெல்லாம் பூப்பூக்க செய்தது. நாடி நரம்பெல்லாம் ஏதோ மின்சாரம் பாய்ந்தார்ப்போல் துள்ளி திரிந்தது.

காத்திருந்தாள் பதினோறு மணிக்காக பதினோறு நாட்களை கடப்பது போல் நெட்டி தள்ளி காத்திருந்தாள்.

பதினோறு மணிக்கு, முதல் ரிங் அடித்து முடியும் முன்னே எடுத்திருந்தாள். “கமலி” கணீரென்ற ஆண்மை கலந்த அவனது அந்த முதல் குரல், ஆணியடித்தார்ப்போல் அப்படியே பதிந்தது அவள் இதயத்தினுள். அதுவும் தன் பெயர் அவனது குரலில் கேட்கையில் உள்ளூர குறுகுறுத்தது.

இவன் அழைக்கையில் தன் பெயர் இத்தனை அழகா? வியந்து போனது அன்று தான்.

இவள் கனவுலகில் சஞ்சரிக்கும் முன் “ம்க்கும்” அவன் செருமல் இவளை இவனிடம் மீட்டு கொண்டு வர “சொ.. சொல்லுங்க..” இவளிடம் திணறி வந்தது வார்த்தைகள்.

“ஏன் பதட்டபடுற.. ரிலாக்ஸ்” அவளை நிதானபடுத்துவதிலேயே முதல் முறையாய் வீழ்ந்து போனாள் அவனிடம்.

“பிடிச்சிருக்கு தானே?” கனீரென்ற குரலிலும் காதல் மலர ‘ஹய்யோ இதென்ன குரலிலேயே வசியம் பண்றாரு?” இறுக கண் மூடிக்கொண்டாள்.

அவளிடம் மீண்டுமொரு அமைதி நிலவரம், அதற்குள் அவனினுள் கலவரம் “பிடிக்கலையா” சற்று இறங்கி வந்தது குரல்

“ம்” இன்னும் அவனது மாயவலை அறுபடவில்லை அவளினுள்.

“என்ன ம் சொல்ற? பிடிக்கலையா?” சட்டென பதற்றமானான்.

இவளும் அதில் சட்டென பதற்றாமாகி “இல்லை என்ன கேட்டீங்க, சாரி கவனிக்கலை” இவளும் பதற.

“ஹா.. மனுசன இரண்டு நிமிசத்துல ஆட்டி படைக்கிற..  இங்க கவனம் வை…” கடிந்து வந்தது இவன் குரல்..

“ம்”

“உன்ன திட்றேன்.. அதற்கும் ம் கொட்டுற, என்ட்ட தான் பேசுறியா?”

என்னதிது திட்றாறா? ஆனா அது கூட கொஞ்சற மாதிரி எனக்கு தான் தெரியுதா?

“என்ன கொஞ்சற மாதிரி இருக்கா” சற்றே எக்ஸைட்டிங்கானது இவன் குரல்..

“ஐய்யய்யோ” வெளிப்படையாகவே இவள் தலையில் அடித்து கொள்ள..

கலகலவென்ற அவன் சிரிப்பு சத்தம் இவள் காதுகளை சற்று சத்தமாகவே சென்று அடைந்தது.

இவன் விடாது சிரிப்பதில் வெட்கங்கொண்டு “சிரிச்சது போதும்.. மைண்ட் வாய்ஸ்னு சத்தமா பேசிட்டேன்.. விடுங்களேன்” கெஞ்சியது இவள் குரல்.

அதில் சிரிப்பு அடக்கி “என்னை பிடிச்சிருக்கான்னு கேட்டேன், இன்னும் வரலை பதில்”

“பிடிக்காமலா மனசில் நினைக்கிறதெல்லாம் உங்கட்ட பேசிட்டு இருக்கேன்” ஹஸ்கி வாய்ஸ் அவளிடம்.

“சே எஸ் ஆர் நோ?” வேண்டிய பதில் வரும் வரை விடவே மாட்டேன் என இவன் நின்றான்.

வாய்விட்டு சொல்ல வெட்கம் தடுக்க, சொல்லிவிடு உனக்காக காத்திருக்கிறான் என மனம் ஊக்கம் கொடுக்க “புடிச்சிருக்கு, ரொம்ப… ரொம்ப.. ரொம்ப” கமலியின் காதல் கலந்த அழுத்தமான குரலில் ஆணவனுக்கும் சிவந்தது முகம்.

இப்படி தொடங்கிய பேச்சுகளில் அவனை அவள் ரசிப்பதும்.. அவன் சிறிதும் மெனக்கெடாமல் அவள் மனதில் நினைப்பதையெல்லாம்  வெளிக்கொணர வைப்பதிலும் இருவருக்கும் ரெக்கை கட்டி கொண்டு பறந்தது.

எத்தனை நேரம் பேசினலும் கண்ணியமாய் ஓர் அளவில் நிறுத்திவிடுபவனிடத்தினில் பெண் மனம் மீண்டும் மீண்டும் வீழ தான் செய்தது.

போதாதற்கு தன் தாய் தந்தை, அண்ணன் என எல்லோரிடமும் நட்பு பாராட்டுகையில் மனம் இறக்கை கட்டி கொண்டு பறந்தது. ஒரு மனைவியாய் வேறென்ன வேண்டும்.

இதோ நல்லபடியாய் எந்த ஒரு பிரச்சனையும் இல்லாமல் திருமணமும் முடிந்து, அவனது வீட்டில் பூஜையறையில் விளக்கேற்றி முழு மனதோடு கடவுளை கும்பிட்டு கொண்டிருக்கிறாள்.

சிலையாய் வேலோடு நின்றிருந்த வேலனிடம் மனம் விகசிக்க தன் சந்தோஷத்தை பகிர்ந்து, வேண்டுதலை முன்னிருத்தி, மனமுருகி கும்பிட்டு, விளக்கேற்றி அந்த விஸ்தாரமான பூஜையறைக்குள், கணவனும் மனைவியும் தோளுரச விழுந்து கும்பிட்டு எழுந்தனர்.

அடுத்து பால் பழ நிகழ்வில் ஆரம்பித்து, உற்றார் உணர்களின் பேச்சுகள், கிண்டல், கேளிகளுடன் மதிய விருந்து முடிந்திருந்தது. அருகில் அமர்ந்து ஒன்றாய் சாப்பிட்டவன் தான் அதன் பின் அவனை வீட்டினுள் பார்க்கமுடியவில்லை. அதையும் மீறி சந்திக்கும் நிகழ்வுகளில் யாரேனு கூடவே இருந்தனர். தனிமை கிட்டவில்லை.

இரவு சர்வ அலங்காரங்களோடும், முகத்தில் நிறைத்த வெட்கத்தோடும், இனி தான் முழுமையாய் தன் கணவனாகப்போகிறான் என்ற கூடுதலான தவிப்பும் சேர்ந்திட பெண்மை பூக்க அவனின் அறை வாசலில் நின்றிருந்தாள்.

“இனி நீ தான் பார்த்துக்கனும் கமலி” நமட்டு சிரிப்போடு ராஜி சொல்லி செல்ல, ஒரு கதவு திறந்திருந்த நிலையில், மறுகதவையும் திறந்து விட்ட ராஜியின் கண்கள், உள்ளே நுழைந்தது.

அந்த ஒற்றை கட்டிலை தொட்டு, அதில் ஒய்யாறமாய் உறங்கியிருந்த தம்பியை தொட்டு மீண்டிட, இன்னமும் நமட்டு சிரிப்பை கொடுத்த வாய்க்கு கடிவாளம்மிட்டு சட்டென திரும்பி நடந்துவிட்டாள் ராஜி.

ஆசை பொங்க, வாழ்வின் அடுத்த கட்ட நிகழ்விற்கு ஆசையோடு குனிந்த தலை நிமிராமல் வாசலில் இருந்தவள் ராஜியை உணரவே இல்லை.

ராஜியின் கொலுசு சத்தம் தன்னை விட்டு அகன்றதில் கண்மூடி திறந்தவள், தலை குனிந்தபடியே பெருமூச்சு விட்டு அறைக்கு உள்ளே சென்றவளுக்கு, கட்டிலின் தலைமாட்டில் கிடந்த கிரியின் கல்யாண வேஷ்டி காற்றில் ஆடி தரை தொட்டு அவள் கவனத்தை ஈர்க்க, சுருங்கிய புருவங்களோடு நிமிர்ந்து கட்டிலுக்கு நகர்ந்த கண்கள் டிராக், டீசர்ட்டுன் அவன் தூங்குவதை கண்டு அதிர்ந்து போனது.

ஆசை கொண்ட இதயம் தாளம் தப்பி துடிக்க, கண்கள் கண்ட செய்தி உண்மையென மறுக்க, கைகொண்டு அழுந்த தேய்த்தாள் தன் கண்களை. அப்போதும் அவன் தூங்குவது நிஜம்மென்றே கூறியது அவள் கண்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!