Skip to content
Post Views: 193
சில நொடிகள் அமைதி காத்து, “பரவால்ல.. தர்ஷி.. விடு.. அப்பாக்கு என்னாச்சு.. இப்போ எப்படி இருக்காங்க?” என இவளும்..
“நெஞ்சு வலின்னு ஹாஸ்பிடல் போனோம், ஆஞ்சியோ பண்ணி அனுப்பிருக்காங்க. பத்து நாள் நாள் லீவ் போட்டு தான் நானும் அம்மாவும், அப்பாவை பார்த்துகிட்டோம். இப்போ பரவாயில்லை” என்றவள் “நீ எப்படி இருக்க.. அண்ணா எப்படி இருக்காங்க?” என கேட்க
“எல்லாரும் நல்லாருக்கோம்” என்றவள் “என்னோட வேகன்சியை பில் பண்ணிட்டாங்களா தர்ஷி..” என கமலி விசாரிக்க
“ஏண்டி, மறுபடியும் வேலைக்கு வர போறியா..” ஆச்சர்யமானாள் தர்ஷி.
Advertisement
“ம்.. ஐடியா இருக்கு.. இவரும் பாரின் போய்ட்டாரு.. சும்மா இருக்குறதுக்கு வேலைக்கு போலாமேனு தோனுச்சு”
“வேகன்சி இரண்டு தடவை பில் பண்ணாங்க.. ஆனால் அந்த முசுடு சீனியர் லைப்பிரேரியன் கிட்ட எவன் வேலை பார்ப்பான்.. ஜாயின் பண்ணின இரண்டு மாச கேப்பிலேயே ஓடிடுச்சுங்க.. அந்த பொம்பளையை உன்னை தவிர யாரால சமாளிக்க முடியும்? நீ திரும்ப வருவன்னு தான் அந்த வேகன்சி அப்படியே இருக்கு போல. வந்து சேரு கம்ஸ்” என தர்ஷினி தேவையான விசயங்களை கூறிட
“சரிடி அப்போ நாளைக்கே காலேஜ் வாரேன்..” என குதுகலித்தவள், போனை வைத்துவிட்டாள்.
Advertisement
இதற்குள் மல்லிகா வெற்றிகரமாக கர்ணா, செல்வம் இருவரிடமிருந்தும் கமலி வேலைக்கு செல்வதற்கான அனுமதியை வாங்கி விட்டார்.
Advertisement
அவ்வளவு தான் மறுநாள் அழகாய் புடவையுடுத்தி, சர்டிபிகேட்ஸ், ஹேண்ட் பேக் என இரண்டையும் எடுத்து கொண்டு கிளம்பிவிட்டாள் பஸ்ஸில். அவர்களது ஊரில் இருந்து சரியாய் ஒன்றரை மணி நேர பயணம்.
ஏற்கனவே வேலை பார்த்த கல்லூரி என்பதால் சீனியர் லைப்ரேரியன் மாலாவை பார்க்க நேரடியாகவே சென்றுவிட்டாள்.
ஆனால் அவர் வைத்த ஒரே கன்டிசன் “காலேஜில் இப்போதைக்கு சப்வார்டன் வேலையையும் சேர்த்து பார்க்க வேண்டி வரும். ஹஸ்பண்ட் வேற பாரினில் இருக்காங்கனு சொல்ற.. இங்க ஹாஸ்டலில் சப்வார்டனா பொறுப்பு எடுத்துகிட்டா, இந்த வேலை உனக்கு தான்” என்றிட
Advertisement
அது தானே இவளுக்கும் வேண்டும், சிறிதும் யோசிக்கவில்லை சரி என்று விட்டாள். அதன் பின் பிரின்சிபலை பார்த்து வர சொல்ல, ஏற்கனவே வேலையில் இருந்தவள் என்பதாலும், ஹாஸ்டலில் சப்வார்டனாக இருக்கிறேன் என இவள் சொன்னதாலும், இரண்டு நாட்களில் வேலைக்கு சேர்ந்துவிட வேண்டும் என்ற கன்டிசனின் பேரில் இவள் நேரடியாகவே பணி அமர்த்தபட்டாள். அப்புறம் தர்ஷினியையும் பார்த்து பேசிவிட்டு தான் மீண்டும் வீடு திரும்பினாள்.
வந்தவள், தாயை தேடி சமையலறைக்குள் சென்றாள். இவள் வேலை கிடைத்த கையோடு ஹாஸ்டலில் தங்க வேண்டியதையும் சொல்லிவிட, அருகில் உதவிக்கு நின்றிருந்த பிரபாவின் முகத்தில் ஒளிகீற்று விரவி பரவ, அதை தவறமால் படம் பிடித்துவிட்டார் மல்லிகா.
‘ஒத்த பொம்பளை புள்ளயை.. ஹாஸ்டலுக்கு அனுப்பிட்டா, நான் எதுக்கு இருக்கேன்.. இத்தனைக்கும் காரணம் இந்த பிரபா தானே.. இருக்கு இவளுக்கு’ என எண்ணி கொண்டவர்,
கமலியின் பக்கம் திரும்பி “ஹாஸ்டல்னா வேண்டாம் கமலி” என்றார் ஒரே போடாக, மீண்டும் பிரபா முகம் சுருங்கி போக அதை திருப்தியாய் பார்த்தார் மல்லிகா.
ஆனால் இவர்களது உட்கட்சி பூசல் தெரியாத கமலியோ, “ம்மா.. எனக்கும் ஒரு சேன்ஜ் வேணும்மா.. உனக்கே தெரியும்.. எதுவும் அசௌகரியம்னா நானே அந்த இடத்தில் இருக்க மாட்டேன்னு.. கூட தர்ஷினி வேற இருக்கா.. டெய்லி போன் பண்றேன்ம்மா.. நான் ஹாஸ்டலுக்கு போக தான் போறேன். அதில் எந்த ஒரு மாற்றமும் இல்லை. எப்படியாவது அண்ணனையும் அப்பாவையும் சமாளிம்மா!” என கெஞ்சிவிட்டு தன் அறைக்குள் புகுந்து கொண்டாள்.
அதன் பின் எப்போதும் போல் மல்லிகாவை பிரைன் வாஸ் செய்தபடியே இரவு உணவை தாயுடன் சேர்ந்து தயாரித்தாள்.
“ப்ளீஸ்மா.. பேசிடும்மா.. கொஞ்ச நாள் தான்.. கிரி வந்த பிறகு வேலையை விட்டுறேன்” என கூறியபடியே உணவு பதார்த்தாங்களை டைனிங் டேபிளில் அடக்கும் வேலையில் இறங்கி இருந்தாள்.
கமலியின் இந்த பிடிவாதம் சற்று பிடித்தமில்லாததாக இருந்தாலும், பாதுகாப்பான கல்லூரி என்பதாலேயே இறுதியில் வெள்ளைகொடியை காட்டிவிட்டார் மல்லிகா.
சாப்பாடு பரிமாறையிலேயே, ஹாஸ்டல் பற்றி மல்லிகா சொல்ல, செல்வம் என்ன நினைத்தாரோ.. “போய்ட்டுவா.. ஆனா கிரி வர வரை தான்.. நியாபகம் வச்சுக்க” என கன்டிசன் போட்டுவிட
“ஏற்கனவே வேலை கஷ்டம்னு தான் கல்யாணத்துக்கு பிறகு வேலையே வேண்டாம்னு விட்ட.. இப்போ மறுபடியும் வேலைக்கு போறேனு சொல்ற.. ஒரு இரண்டு மாசம் தாக்கு பிடிப்பியா! கர்ணன் வம்பிழுத்தான்.
“பஸ்ல அலைய முடியலைன்னு தான் விட்டேன்.. வேலை பிடிக்காம விடலை. இப்போ ஹாஸ்டல் தானே சமாளிச்சிப்பேன்” வீரமாய் இவள் கூற
“இந்த மூனு, நாழு மாசமா தின்னுட்டு தூங்கிட்டு இருந்த.. அது உனக்கு கசக்குல.. போ.. எனக்கென்ன!” கர்ணன் வியாக்கானம் பேச
“செய்றது நானு.. உனக்கேண்டா கசக்குது! திங்குறா, தூங்குறா, இல்லை உருளுறா.. உங்களுக்கென்னடா” எப்போதும் பேசாத மல்லிகா, இன்று பேசிட, செல்வம், பிரபா, கர்ணா மூவருமே நிமிர்ந்து மல்லிகாவை தான் பார்த்தனர்.
“ம்மா.. அந்த சாம்பாரை எடு” என நைச்சியமாய் மல்லிகாவை கமலி திசை திருப்பி, “நீயும் உக்காரும்மா.. சூடா இருக்கும் போதே சாப்பிட்டுப்ப” என மல்லிகாவின் வாயை இவள் அடைத்துவிட்டாள். செல்வம் கேள்வியாய் மல்லிகாவை பார்த்து வைத்தாரே தவிர எதுவும் பேசவில்லை.
அறைக்கு வந்த பிறகு “நீ எதுவும் கமலியை சொன்னியா! அம்மா இப்படி பேசி நான் பார்த்ததே இல்லை” கர்ணா பிரபாவிடம் கேட்க
“நானா.. நான் என்ன சொல்லபோறேன். உங்க பாடு, உங்க தங்கச்சி பாடு.. நான் ஊடால வரலைப்பா” என ஜாகா வாங்கினாள் பிரபா. அவளையே முறைத்திருந்திருந்தானே தவிர, இவனாலும் ஒரு முடிவுக்கு வர முடியவில்லை.
அன்றிரவே கிரி போன் செய்த போது தான் வேலைக்கு செல்லும் விசயத்தையும் கூறிவிட்டாள். இது ஏற்கனவே கிரி கொடுத்த ஐடியா என்பதால் அவனும் சரியென்றுவிட்டான். ‘ஆனால் ஹாஸ்டலில் இருக்க பாரத்து இரு’ என சொல்லவும் மறக்கவில்லை இவன்.
எப்படியோ பிறந்த வீட்டை சரிகட்டிவிட்டு, மூட்டை முடிச்சுகளோடு வேலைக்கு கிளம்பிவிட்டாள் கமலி.
செல்வம் தான் வந்து கல்லூரியில் விட்டுவிட்டு, டெப்யூட்டி வார்டனை பார்த்துவிட்டு, கையில் பணத்தையும் வைத்து, “எதுவா இருந்தாலும், எந்த நேரமா இருந்தாலும் அப்பாக்கு போன் போடு கமலிமா” என ஆயிரம் அட்வைஸ்களோடு தான் கிளம்பினார் செல்வம்.
கல்லூரியில் பகலில் லைப்பிரேரியன் வேலை, இரவில் சப் வார்டன் வேலை. போதுமே இருபத்தி நான்கு மணி நேரமும் இவளை பிசியாக வைத்து கொள்வதற்கு.
அதுவும் மகளிர் கல்லூரி வேறு. கல்லூரி பேராசிரியர்கள் போல நிறைய வேலைகள் எல்லாம் இல்லை. அந்த லைப்பிரேரியில், அவளுடன் சேர்ந்து மாலா உட்பட மொத்தமே ஐந்து பேர் தான். ஏற்கனவே பழக்கமிருந்ததால் இப்போது அதுவும் பிரச்சனையில்லாமல் போனது.
எப்போதும் போல புக் எண்டரி போட்டு கொடுப்பது, ரிட்டன் செய்யாதவர்களுக்கு பைன் போடுவது, அதை வசூலிப்பது. மற்ற நேரங்களில் புத்தகங்களை பாட வாரியாய் அடுக்கி வைப்பது, ஸ்டாக் வெரிபிகேஷன் பண்ணுவது என பகல் கழிந்தது.
இதில் அச்சாரமாய் அமைந்தது தர்ஷினியுடனான இருப்பு. அவளும் திருமணமாகதவள். அதே கல்லூரியில் கம்யூட்டர் லேப் டெக்னீசனாக வேலை செய்கிறாள். இவளை போல அவளும் சப் வார்டன் வேறு.
முன்பு கல்லூரியில் படிக்கும் போது ஹாஸ்டலுக்கு அனுப்பியதில்லை மல்லிகா. அதன் பின் ஆறு மாதமாய் வேலை பார்த்த போதும் “பஸ்ல போய்ட்டு வா. ஒரு ஒரு மணி நேரம் பஸ்ல போக மாட்டியா” என்பார்.
இப்போதோ மல்லிகாவையே சரிகட்டிவிட்டு முழுதாய் ஹாஸ்டல் வாசம். ஹாஸ்டல் வாழ்க்கை, அதுவும் தர்ஷியுடன்! முற்றிலும் வேறாய் இருந்தது.
மாலை நான்கு மணிக்கு பிறகு கல்லூரி நேரம் முடிந்ததும், நான்கில் இருந்து ஆறு மணி வரை வெளியே சென்று கொள்ளலாம். அதன் பிறகு வெளியே செல்ல அனுமதி இல்லை. ஆறு மணிக்கு மேல் ஹாஸ்டலில் துவங்கும் அவள் ட்யூட்டி, டைனிங் ஏரியா, உணவு பற்றாகுறை இல்லாமல் பார்த்துகொள்வது. உடல்நிலை சரியில்லாத போது, கல்லூரிக்குள்ளேயே இருக்கும் ஹெல்த் சென்ருடருக்கு அழைத்து செல்வது என மிக மிக பிசியாகவே இருந்தாள்.
இதனூடே வார நாட்கள், ஹாலில் புரஜக்டரில் படம் போடுவதும், முக்கியமான விழா கொண்டாட்டங்களில் ஆட்டம் பாட்டம் என கழிவதும் தான் அவளுக்கு சந்தோஷத்தின் உச்சமாய் இருந்தது.
பகலில் புத்தகங்களோடும், அதன்பிறகு கல்லூரி பட்டாம்பூச்சிகளோடும் இனிதாய் கழிந்தது அவள் நாட்கள்.
மாணவிகள் மூலம் அவ்வப்போது பிரச்சனைகள் வர தான் செய்யும். ஆனால் அழகாய் அதை கையாண்டு விட டெப்பிட்டி வார்டன் இருப்பதால் இவள் தப்பித்து விடுவாள். எந்த கவலையும் இல்லாத ஹாஸ்டல் வாழ்க்கை இத்தனை சந்தோஷமா? என உணர்ந்து கொண்டாள். சொல்ல போனால் சில நேரங்களில் உணவை தவிர மற்ற எல்லாமே அவளுக்கு மிக பிடித்தமான மாற்றங்களாகவே இருந்தது.
இடையிடையே கிரி அவளுக்கு போன் செய்வதும், அவள் இவனுக்கு போன் செய்து பேசுவதும் என அழகாய் கழிந்தது நாட்கள்.
*********
அங்கே வசந்தாவின் நிலைமை தான் படு மோசமாய் மாறிப்போனது. சிறுவயதிலேயே உடம்பு வளையாது ராஜிக்கு. வசந்தா ஜவுளி கடைக்கு வேலைக்கு சென்ற போது கூட, இவள் வேடிக்கை பார்த்தாளே ஒழிய உதவ முன் வரவில்லை.
பிறகு எப்படியோ திருமணம் குழந்தைகள் என ஆன பிறகு, செந்திலின் கத்தலுக்கும், காந்திமதியின் குத்தல் பேச்சுக்கும் பயந்து வீட்டு வேலையையும் பார்த்து கொண்டு, குழந்தைகளையும் பார்த்து வந்தாள்.
இப்போது அந்த பிரச்சனை இல்லாது போக, ராஜி எப்போதும் போனும் கையுமாய் தான் திரிந்தாள். மகளை பசியாற்றுவது மட்டுமே இவளது வேலை என்பது போல மற்றைய வேலைபக்கம் திரும்புவதும் இல்லை. முதலில் மகள் மகளென செய்த வசந்தா கூட நாளாக நாளாக திட்ட துவங்கிவிட்டார்.
“அழுதுட்டே இருந்தாம்மா.. என்னால தூங்கவே முடியலை” என காலையில் நேரத்திற்கு எழுந்திருப்பதே இல்லை.
இப்படி காலையில் வாசல் தெளிப்பதில் ஆரம்பிக்கும் வசந்தாவின் வேலை, காலை உணவு, மதிய உணவு, பாத்திரம் விளக்குவது, பேரனுக்கு ஊட்டுவது, தூங்க வைப்பது, விளையாடும் போது பின்னோடு ஓடுவது என மாலை ஆறு மணிக்கு மேல் உடல் ஓய்வு கேட்க துவங்கி விடும்.
அம்மா பாவம்! போனால் போகிறது என்று இரவு உணவை மட்டும் இவள் சமைத்து வைப்பாள்.
முன்பு எப்போதவது இரு நாட்கள் வருவாள், மிஞ்சி போனாள் ஒரு வாரம் தான். அப்போதெல்லாம் மகள், மருமகன் என ஓடி ஓடி வேலை செய்தவருக்கு இப்படி வாரக்கணக்கில் தொடர்ந்து ஓட முடியாமல் சோர்ந்தே போனார்.
error: Content is protected !!