இம்முறை பார்க்கில் இருந்தனர் செந்திலின் குடும்பம். மகன் பிரணவ் சறுக்கில் சறுகி விளையாடிக் கொண்டிருந்தான். அவனோடு விளையாடுவதற்காக தவ்வி கொண்டிருந்த மகளை இழுத்து பிடித்து வைத்திருந்தான் செந்தில்.
எப்போதும் போல குழந்தைகளை பார்க்க வேண்டும், பார்க்கிற்கு அழைத்து வா என போனில் ராஜிக்கு அழைத்து சொல்லி விட்டான் செந்தில். குழந்தைகளோடு இப்போதெல்லாம் மனைவியையும் அதிகமாய் தேடுகின்றான் செந்தில்.
வெளியிடங்களில் மனைவியை பார்க்கும் போதெல்லாம் பட்டும்படாமல் தொட்டு மீளும் விழிகள், இப்போதெல்லாம் உரிமையுடன் படிந்து மீள முடியாமல் தவிக்கிறது.
Advertisement
இன்றோ அவன் வாங்கி கொடுத்திருந்த சுடிதாரில் வந்திருந்தாள் ராஜி. இன்னும் அழுந்தமாய் அவளில் படிந்த விழிகள், இந்த உடை நான் எடுத்து கொடுத்தது என இதழ்களுக்குள் புன்னகையை கொடுத்தது.
மனைவியுடனான கூடல் தவிர்த்து ஊடலிலும், ஏக்கமாய் அவளில் படிந்து மீளும் பார்வைகளிலும் கூட இத்தனை ஆத்ம திருப்தி கிடைக்கும் என நினைக்கவே இல்லை செந்தில்.
“டேய் பிரணவ்.. கீழ விழுந்துடாதடா” என்ற ராஜியின் சத்தத்தில் மீண்டு, மகனிடம் ஓடியது இவன் விழிகள். கீழே விழ இருந்த பிரணவ்வோ தடுமாறி பின் விளையாட்டில் கவனமாகிவிட்டான்.
Advertisement
‘அப்பா.. நல்ல வேளை இவன் விழுந்து வாரலை..’ கணவன் மனைவி இருவருமே நினைத்து கொண்டனர்.
Advertisement
பின் மனைவி பக்கமாய் திரும்பியவன் “வாடகை வீடு பார்த்திருக்கேன் ராஜி.. என்கூட வர்றியா” என இவன் கேட்டிட
வந்த நொடியில் இருந்து பார்த்த வண்ணமே இருந்தவனின், வார்த்தைகள் சரியாய் இவள் காதுகளில் சென்று சேரவில்லையோ? “ம்.. என்ன..என்ன சொன்னீங்க?” என மீண்டும் கேட்டாள்.
“உன் காதில் சரியா தான் விழுந்தது. இவ்வளவு அதிர்ச்சிலாம் தேவையில்லை.. வர்றியா இல்லையா? பதிலை சொல்லு” என முடிவாய் இவன் கேட்டான்.
Advertisement
இன்னுமே அதிர்ச்சி விலகாதவளாய், “நிஜமாவே வாடகை வீடு பார்த்தீட்டிங்களா?” மறுபடியும் கேட்டு கொண்டிருந்தாள் ராஜி.
காந்தி மதி அன்று அவளை பேசிய பேச்சிற்கு இவளுக்குமே அந்த வீட்டில் காலடி எடுத்து வைக்க யோசனை தான். ஆனால் வேறு வழியில்லையே என நினைத்திருந்தவளுக்கு, “வாடகை வீடு” என்ற வார்த்தை அமிர்தமாய் இருந்தது.
அதற்கு தகுந்தாற்போல் “ப்ச்.. ஆமாம்..” என இவனும் கூறிட
“ஏன்..” என கேட்டவளை முறைத்து தள்ளியவன் “என்னை அப்படியே தண்ணி தெளிச்சு தனியா விட்ரலாம்னு நினைக்கிறியா?” சிறிதாய் கோபம் ஏறியது இவனுக்கு.
“அப்படினு நான் சொல்லலை.. காரணம் தான் கேட்டேன். நம்ப வீட்டுக்கே போகலாமே.. ஏன் வாடகை வீடுன்னு தான் கேட்டேன்” விளக்கம் கொடுத்தாள் ராஜி.
“சீர் இல்லாமல், வீடு இல்லாமல், நீ அங்க வரவே கூடாதுன்னு என்னோட அம்மா சொல்றாங்க. எனக்கு அதெல்லாம் விட நீ, குழந்தைங்க தான் முக்கியம் தோணுச்சு.. அதான் வாடகை வீடு பார்த்துட்டேன். வேற என்ன பண்ண சொல்ற?” இவன் சொல்கையில் மனதிற்கு நிறைவாய் உணர்ந்தாள் ராஜி.
ஆனாலும் மன வருத்தம் அவளை விடுவேனா என கோபத்தை முன்னிருத்தியது. “நீ தான் வேணும், உன்னை தான் கல்யாணம் பண்ணிப்பேனு, நீங்க தான் என் பின்னாடி சுத்தி என் மனசு கலச்சீங்க. நீ வேணவே, வேணாம்னு என்னை, என் குழந்தைகளை துரத்தி விட்டதும் நீங்க தான். இதில் எது உண்மையான முகம்? எதை நம்பி நான் உங்களோட வரது?” என கேட்டும் விட்டாள்.
“தப்பு தான். அம்மா சொன்னாங்கன்னு எல்லாத்துக்கும் தலையாட்டிருக்க கூடாது தான். உன்னையும் வீட்டை விட்டு அனுப்பி இருக்க கூடாது தான். இனி அப்படி நடக்க கூடாதுன்னு தான் தனி வீட்டுக்கு போகலாம்னு சொல்றேன்” தெளிவாய் பேசினான்.
“வான்னா வரனும், போன்னா போகனும்ல” இன்னும் விடாதவளாய் பேசினாள்.
“எனக்காக ஒரே ஒரு தடவை என் மேல நம்பிக்கை வச்சு வா ராஜி” ஆழ் மனதிலிருந்து இவன் பேச, முனக்கென கண்ணீர் தேங்கியது அவள் கண்களில்..
“ஹேய்.. எதுக்குடி அழற? வர இஷ்டமில்லைன்னா வேணாம் ராஜி.. உனக்கு எப்போ இஷ்டமோ அப்போ பார்த்துகலாம்” சொல்லிவிட்டு, அவள் கண்ணீர் கன்னங்களில் வடியும் முன்னே துடைத்தெறிந்தான் செந்தில்.
வேகமாய் முகம் நிமிர்த்தியவளும் “இஷ்டம் தான்.. இல்லைன்னு நான் சொல்ல மாட்டேன். நீங்க எப்ப கூப்பிடுவீங்கன்னு தான் நானும் காத்திட்டு இருந்தேன். அப்படி தான் இருக்கு என் நிலைமையும்” என்றவள், கண்களை அழுத்தமாய் துடைத்து கொண்டு “உங்க கூட சேர்ந்து நான் பண்ணின வேலைக்கு, அம்மா என் மூஞ்சில முழிக்கிறதே இல்லை. அதையும் மீறி பேசினால் பேச்சு பணத்தில் தான் வந்து முடியது. கிரி போனில் பேச கூட மாட்றான். எனக்கு அங்க இருந்து எங்கையாவது போன போதும்னு இருக்கு” இத்தனைநாள் மனதில் அழுத்தி கிடந்ததை சொல்ல துவங்கினாள்.
“ஒரு வேளை நல்லா படிச்சு நல்ல வேலையில் இருந்திருந்தா, நீங்க பண்ணின வேலைக்கு, நான், நீங்க இருக்குற திசை பக்கம் கூட திரும்பி இருக்க மாட்டேன். என்ன பண்றது போறதுக்கு போக்கிடம் இல்லைல” மனதில் உள்ள கஷ்டங்களை எல்லாம் வெளியே கொட்டினாள் ராஜி.
‘கூப்பிட்டால் வந்திடுவேன்’ என ராஜி சொன்னதில் இவனுக்கு சந்தோஷம் தான் ஆனால் அதன் பின் இவள் பேச பேச முகத்தில் அந்த சந்தோஷம் இல்லவே இல்லை. முகம் இறுகி கருத்து போனது செந்திலுக்கு.
“வெறுத்துடாத ராஜி.. நான் இனி உன்னை எதுக்குமே கட்டாய படுத்த மாட்டேன். நீ என் கூட வரேன்னு சொன்னது சந்தோஷம் தான். ஆனால் இப்படி மூஞ்ச வச்சிட்டு வராதடி.. சந்தோஷமா வா ராஜி.. இனி நமக்காக வாழலாம்” புரிய வைக்க முயற்சி செய்தான் செந்தில்.
ராஜி இல்லாத இந்த இடைப்பட்ட காலத்தில் மனைவியின் அருமை புரிந்ததோ, செந்தில் பேசும் ஒவ்வொரு வார்த்தைக்கும் அர்த்தம் அதிகமாய் இருந்தது.
அதன் பின் ராஜியும் “வரேன்..” என சம்மதம் அளித்திட,
அவளது அரைகுறை சம்மதத்தை ஏற்று கொண்டு, இதுவரை சம்மதித்ததே பெரிது என உடனே இவனோ வாடகை வீடு தேடும் பணியில் இறங்கிவிட்டான்.
***********
ஆயிற்று அவளோடு பேசி ஒரு வருடம் நெருங்க போகிறது. “என்னைக்கு நம்பிக்கை வருதோ அன்னைக்கு பேசு” என சொல்லிவிட்டு வைத்துவிட்டான் அன்று.
ஆனால் ஒவ்வொரு நாளும் சொல்லாமலேயே எழும் கேள்விகள் ‘இன்னுமாடி என்மேல நம்பிக்கை வரலை?’ ‘எப்போ நம்பிக்கை வந்து? எப்போ நாம வாழ’? என்பது தான்.
அவளிடமிருந்து அழைப்பு வராதா?’ என தினம் தினம் போனை பார்த்தபடியே நிறைய நாட்களை கடந்து வந்திருக்கிறான்.
அன்று அதிகமாய் பேசியது அவள் தானே! என்னலாம் பேசினா.. நான் கூப்பிடமாட்டேன், அவளே கூப்பிடட்டும். ரோசம் அவளுக்கு மட்டும் தானா? எனக்கில்லையா? இப்படி நாளாக நாளாக சிறு சிறு இலவம்பஞ்சாய் சேர்ந்து கொண்டது கோபங்கள்.
கோபங்கள் நாளாக நாளாக கூடி, சிறு கீரல் பெரும் விரிசலாய் விட்டு போனது.
அதற்கு தகுந்தாற்போல வேலையும், இந்தியா திரும்பிட வேண்டும் என முடிக்க வேண்டிய வேலைகளும் அவனை உள் இழுந்து கொள்ள நேர காலம் ஓடியே போனது.
இந்தியா திரும்புவதற்கான எல்லா வேலைகளையும் முடித்து இதோ இன்று கிளம்பும் நாளும் வந்துவிட்டது. கூடவே தங்கியிருந்த நண்பர்களிடம், வேலை பாரக்குமிடத்தில் இருந்த நண்பர்களிடம் எல்லாம் சொல்லி கொண்டு கிளம்பியாயிற்று.
கிளம்புகையிலாவது இவளுக்கு போன் அடித்து, தான் வரும் விசயத்தை சொல்லிவிடலாம் என காலையில் இருந்து மூன்று முறை முயற்சி செய்து விட்டான், இவன் முயற்சி செய்ய, அதுவோ படுதோல்வியில் முடிந்தது.
“இவளுக்கு ஏன் ரிங்கே போக மாட்டுது” என கமலிக்கு போனில் அழைப்பதும் ரிங் போகாததால் துண்டித்துவிட்டு மீண்டும் அழைப்பதுமாய் இருந்தான் கிரி. ஆனால் அழைப்பு போன பாடில்லை.
“என்னடா எல்லாம் பேக் பண்ணிட்டியா? டேக்ஸி வந்திடுச்சுடா” என கேட்டு கொண்டிருந்தான் ராம். “ம்.. ஆச்சுண்ணே..” என இவனும் இவளுக்கு விடாது போன் அடித்தபடியே கிளம்பிவிட்டான் லக்கேஜ்களோடு.
காரில் ஏறிய பிறகு, ராம், மோகனுக்கு அழைத்து “கிளம்பிட்டோம்பா.. ஏர்ப்போர்ட் போயிட்டு இருக்கோம்..” என கிளம்பிய செய்தியை தந்தையின் காதில் போட
“நல்லது தம்பி.. பத்திரமா வந்து சேருங்க. எந்த பிளைட், பிளைட் டைமிங் என்னடா.. எப்போ வருவீங்க” என விசாரித்தார் மோகன்.
“இன்டிகோ ல தான் போட்டிருக்கோம்பா.. இன்னும் டூ அவர்ஸ் இருக்குப்பா பிளைட்டுக்கு.. நாளைக்கு காலையில் மதுரை ஏர்ப்போர்ட் ரீச் ஆகிடலாம்ப்பா, வழக்கம் போல கேப் புக் பண்ணிட்டோம். நாங்களே வந்திடுறோம்பா” என ஒரு பக்கம், ராம் தன் தந்தையிடம் சந்தோஷமாய் கூறிக்கொண்டிருக்க, மறு பக்கம், பிடிப்பே இல்லாமல் வசந்தாவிடம் தான் வரும் விசயத்தை மட்டும் சொல்லிவிட்டு வைத்துவிட்டான் கிரி.
இருவரும் பேசி்முடித்த பின், “கமலிக்கு சொல்லலையாடா? பெரிம்மாகிட்ட மட்டும் சொல்லிட்டு வச்சிட்ட?” என இவனை கவனித்த ராம் கேட்க
“ம்.. கால் பண்ணேன் போகலணா.. நாட் ரீச்சபிள்னு வருது” என்றான் யோசனையாக,
“ஒரு வேளை காலேஜில் வேலை பார்க்கிறதால, டவர் பிரச்சனையோ?” என ராம் இழுக்க, “வாய்ப்பே இல்லைணா” என்றான் கிரி.
மிக உறுதியாக. பேசிக்கொண்டு இருந்தாலும், கை என்னவோ போன் மூலம் அவளுக்கு அழைத்து கொண்டே தான் இருந்தது. நேரமாக ஆக.. பதட்டமும் தன்னால் கூடியது.