Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

93. Anonymous - முள் மீது தூங்கினேனே

முள் மீது தூங்கினேனே 22 1

அத்தியாயம் 22

நிம்மதியிழந்த கிரியும், வெறுப்பில் இருந்த கமலியும், இவர்கள் எப்படி சேரப்போகிறார்கள் என்ற  குழப்பத்தில் ராமும்  என மூவரும் மூன்று திசைகளில் பயணித்தபடி அடுத்து ஒரு மணி நேரத்தில் வீடு வந்து சேர்ந்தனர்.

போர்டிகோவில் கார் வந்து நின்ற நொடி முதல் ஆளாய் வரவேற்க வந்த கர்ணாவின் புருவங்கள் ஆச்சிர்யத்தில் உயர்ந்தது. சும்மாவே கிரி பேரழகு.. இப்போது இன்னும் கூடுதலாய் வசீகரமானது போல் தோன்றியது கர்ணாவிற்கு. அதுவும் அவனுக்கெனவே தனித்துவமாய் தன்னை மெருகேற்றிக்கொண்டவளாய் அவன் அருகில் நடந்து வந்த கமலி, அவன் பேரழகோடு போட்டி போட்டு கொண்டிருந்தாள். யப்பா கண்ணே பட்டுடும் போல.. இப்படி தான் ஓடியது இவனது எண்ணங்கள்.

அதற்குள் அவளது பெற்றோர்களும் வந்துவிட, கர்ணாவுடன், மல்லிகாவும், செந்திலும் சேர்ந்து உபசரித்த உபசரிப்பில், கிரியை கமலியின் வீட்டிலேயே விட்டு விட்டு “கொஞ்ச நேரம் இருந்துட்டு வா கிரி.. ஏதாவது நினைக்க போறாங்க” என ராம் மட்டும் அவனது வீட்டிற்கு புறப்பட்டுவிட்டான்.



Advertisement

மணக்க மணக்க இஞ்சி, ஏலக்காய் தட்டிபோட்ட டீயை கிரியின் கைகளில் கொடுத்தார் மல்லிகா. பின் கமலி, கர்ணா, செல்வம் என அனைவருக்கும் கொடுத்தார்.

மேலோட்டமாய் ஆரம்பித்த விசாரிப்புகளை தொடர்ந்து அங்கே வார்த்தைகளுக்கா பஞ்சம். நேரம் கொஞ்சம் கொஞ்சமாக கடந்திட

“கமலி, கிரியை அழைச்சிட்டு உன் ரூம் போம்மா” என கமலியிடமும், “கிரி ரெப்பிரஸ் ஆகிட்டு வாங்க, சாப்பிடலாம்” என கிரியிடமும், உணவுண்ண நேரமாகிறது என இருவரிடமும் சொல்ல, செல்வமும், கர்ணாவும் கூட ஆமோதித்தனர்.

Advertisement

நேரத்தை பார்த்த அவளும் வாங்க என அழைத்துவிட்டு முன் செல்ல, இவனோ பின் சென்றான்.

Advertisement

அறைக்குள்  வந்தவனுக்கு இவள் பாத்ரூமை வழிகாட்ட, “குளிக்கனும் கமலி, நான் அங்க, நம்ப வீட்டுக்கு போகனும், ஏதாவது உங்க வீட்டில் சொல்லி சமாளியேன்” என இவன் கூற

“சாப்பிட்டுட்டு போகலாம்” என்றதோடு நிறுத்தி கொண்டாள் கமலி. கூடவே மரபீரோவை திறந்து அதிலிருந்த அவனது டீசர்டையும், டிராக்பேண்டையும் எடுத்து அவன் கையில் கொடுத்து “இங்கேயே குளிக்கலாம்” என்றிட, ஒரு நிமிடம் யோசித்தவன் பின், வாங்கி கொண்டான். ஆனால் அதன் பின்னும் குளியலறைக்குள் போகாமல் இன்னும் அவன் அங்கேயே நின்றிட, “என்னாச்சு!” என இவள் கேட்டிட, “இன்னர்வேர்” என வேறு பக்கம் பார்த்தபடி இவன் கேட்க அவன் முகத்தை விட்டு வேகமாய் திரும்பி, மரபீரோவில் இருந்த அதையும் எடுத்து கொடுத்தாள்.

வாங்கி கொண்டவன், சட்டைபையில் இருந்த போன், பேண்ட் பாக்கெட்டில் இருந்த போன், பர்ஸ் எல்லாவற்றையும் கட்டிலில் வைத்துவிட்டு குளியலறைக்குள் நுழைந்து கொண்டான். ‘இதென்ன இரண்டு போனா வச்சிருக்கார்’ என பார்த்தாலும் அவனிடம் ஒன்றும் கேட்கவில்லை இவள்

Advertisement

குளித்து ரெப்ரஸ் ஆகி, எப்போதும் போல டீசர்ட், டிராக்கிற்கு மாறி இருந்தான். இவளும் சென்று முகம், கைகாலை மட்டும் கழுவி, ஏற்கனவே அணிந்திருந்த உடையோடு வந்தாள்.

முன்பெல்லாம் புடவை, இல்லையென்றால் தொள தொளப்பாக உடை அணிந்து வலம் வருவாள். இன்று அணிந்திருந்த வெளிர் மஞ்சள் குவாட் செட் அவளது, வளைவுகளையும் நெளிவுகளையும் அப்படியே காட்டியது. மேலிருந்து கீழாக படித்தான் அவளை.

சுடிதாரை அளவெடுத்து தச்சு போட்டாளா? இல்லை போட்டுட்டு தச்சாளா? இந்த கேள்வி மண்டைக்குள் ஓட, பார்வையும் அவளில் ஓடிக்கொண்டிருந்தது.

அவன் பார்வை போகும் இடங்களை கவனித்து “கிரி” என சப்தமெழுப்ப, திடுக்கிட்டு இவள் முகம் பார்த்தான்.

“சாப்பாடு ரெடியான்னு பார்த்துட்டு வரவா?சாப்பிடுறீங்களா?” என எதுவுமே நடக்காதது போல  கேட்டவளிடம், தலையை உலுக்கிவிட்டு கொண்டு

“அப்புறம் சாப்பிடலாம், உக்காரு முதல்ல” கட்டிலில் தானும் அமர்ந்து அவளையும் அழைக்க, இவளும் வந்து அமர்ந்தாள்.

இருவரின் நடுவில் ஒருவர் அமரும் அளவிற்கு இடைவெளி இருந்தது. அதை கவனித்துவிட்டான் கிரி. இதழ் ஒரு பக்கமாய் வளைந்தது தன் நிலையை எண்ணி.

பின் குளிப்பதற்கு முன்பு கட்டிலில்  வைத்து விட்டு சென்ற, இரண்டு போனில் ஒன்றை எடுத்து, இவள் கையில் கொடுத்தான்.

இவள் குழப்பமாய் பார்க்க, “உன் போனில் கேமரா சரியில்லனு ஒருமுறை சொன்னல்ல.. அதான் புதுசு வாங்கிட்டு வந்தேன். பேக் பிரிக்காமல் வாங்கிட்டு வந்தா டேக்ஸ் கட்டனும், அதான் பேக் பிரிச்சுட்டேன், சார்ஜர் எல்லாம் ராம் கொண்டு போய்ட்டான். அப்புறமா கொண்டு வந்து தரேன்” என இவன் கூற

கை நீட்டி வாங்கி கொண்டவளுக்கு, சிறு வியப்போ, ஆசையோ இல்லை ஷோ ரூமில் ஏதோ பணம் கொடுத்து வாங்குவதை போல வாங்கி கொண்டாள் கமலி.

கூடவே “என்னோட போன் தொலைஞ்சு போச்சுன்னு, சிம்ம டி அக்டிவேட் பண்ணிட்டேன். நாளைக்கு தான் அதே நம்பரில் வேற சிம் வாங்கனும். வாங்கிட்டு யூஸ் பண்ணிகிறேன்” என சொல்லிவிட்டு, டிரஸ்ஸிங் டேபிள் டிராவில் போட்டு வைத்தாள். மீண்டும் திரும்பி வந்து ‘வேற எதுவும் பேசனுமா?’ என்பது போல் இவள் கட்டிலில் அமர்ந்து கொண்டாள். மூன்றாம் மனிதரை நடத்துவது போல் இருந்தது இவள் நடவடிக்கை.

‘இப்போ பேசாத கிரி, சண்டை பெரிசாச்சுன்னா உனக்கு தான் அசிங்கம்’ என மூளை கூற, அவன் பேச்சை கேட்காத கிரி, சூட்டோட சூட்டா பிரச்சனையை முடுச்சுடு, இல்லைன்னா இரண்டு பேருக்கிடையில் இன்னுமே விரிசல் விழுந்துடும் என மனம் கூற, அவளையும் அவள் முகத்தையும் பார்த்த கிரி, ஒரு முடிவோடு கைகளால் முகத்தை அழுந்த தேய்த்து ‘கோபம் இன்னும் போகலை போல..’ என நினைத்து “இனி என்ன பண்ண போற?” என  மெதுவாய் கேட்டான்.

“என்ன பண்ணனும்?” என்றாள் இவளும் இமைகளை சுருக்கியபடி

“அங்க நம்ப வீட்டுக்கு..” என இவன் இழுக்க

“இல்லை.. வரல்லை” என்றாள் சட்டென்று

முகத்திலடித்தார்ப்போன்ற பதிலில், மனம் இன்னுமே சுணங்கி போனது கிரிக்கு, “இப்போவா? இல்லை எப்பவுமேவா?” அழுத்தமாய் இவன் பார்த்து வைக்க

“எப்பவுமோ தான்” என தடாலடியாய் கூறி, நீங்க என்ன இங்கயேவா இருக்க போறீங்க. அங்க வந்து செட்டில் ஆகுறதுக்கு” இப்போதும் வார்த்தைகள் மோசமாகவே வந்தது.

“கல்யாணம் ஆனப்போவே இரண்டு மாசம் லீவுன்னு சொல்லிட்டு, பதினஞ்சே நாளில் கிளம்பி போய்ட்டீங்க. எப்படியும் இந்த கமலி மூஞ்சை இந்த முறையும் பார்க்க முடியாதுன்னு பேருக்கு பத்து நாளோ பதினைஞ்சு நாளோ இருந்துட்டு பாரினுக்கு பறந்துடுற பிளானில் தான் வந்திருப்பீங்க” விடாது இவள் கேள்வி எழுப்ப, ஒற்றை கையால் தலையை தாங்கி கண்ணை இறுக மூடிக்கொண்டான்.

அது இவளுக்கு வசதியாகிப்போனதோ! என்னவோ? “நான் அங்க வந்து என்ன பண்ண போறேன். அங்க இருக்குற பிரிட்ஜ், வாஷிங்மிஷின் மாதிரி நானும் ஒரு மூலையில் கிடக்கனும்” என அவன் நிலை தெரியாமல் இவள் பேசி வைக்க, தேளாய் கொட்டுகிறாளே என கிரி, அவளை நிமிர்ந்து பார்க்க முடியாமல் தன் இரு உள்ளங்கைகளிலும் தாங்கி கொண்டான் தன் முகத்தை.

அதற்கு மேல் பொறுக்க மாட்டாதாவனாய் “இனஃப் கமலி.. போதும்.. நீ் ரிவென்ஜ் எடுக்குறது நல்லாவே தெரிது. நீ எவ்ளோ தூரம் எனக்கு வலிக்கனும்னு பேசினியோ அவ்வளவு தூரமும் வலிச்சிடுச்சு. போதும் இதோட நிப்பாட்டிக்க!” என கிரி கோபத்தை வெளிப்படுத்த, அரண்டு போனாள் கமலி.

அவளின் அரண்ட முகத்தை பார்த்து, கோபத்தை அடக்கியவனாய்   “இப்போ என் கூட வரதில், வாழறதில் உனக்கென்ன பிரச்சனை?” என்றான் மிக பொறுமையாய் இவள் முகம் பார்த்தபடி.

“குண்டா இருந்தப்போ பார்க்க கூட மாட்டீங்க, இப்போ என் மேல விழுகுற பார்வையை வேற எங்கேயும் திருப்ப கூட மாட்றீங்க! அப்போ வா வாழ்வோம்னு கூப்பிடாதவர், இப்போ கூப்பிட்டதும்  உங்க பின்னாடியே வந்திடனும்ல?” இது தான் பிரச்சனை என இவள் பேசிட, தேள் கொடுக்கல்ல.. அதை விட பாம்புடனேயே ஒப்பிடலாம் போல அப்படி இருந்தது இவள் பேச்சு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!