ஒரு முத்தத்திற்கே, தள்ளாடி நின்றவளை கைவளைவில் நிறுத்தியிருந்தான் கிரி. உதடுகளில் துளிர்த்த இரத்த துளியை இவன் மெதுவாய் துடைக்க வர, அவனையும், அவன் கையையும் படாரென தட்டி விட்டு இவனுக்கு கைகெட்டா தூரத்தில் தூரப்போய் நின்றாள்.
“ப்ச்.. கமலி” என்றபடி வலுக்கட்டாயமாய் அவளை இழுத்து அவனது உருண்டு திரண்ட புஜங்களுக்குள் அடக்கி, தன் பெரு விரல் கொண்டு உதட்டை அழுந்த துடைத்து “டூ ஹார்ஷ் வித் யுவர் லிப்ஸ்.. சாரிடி” என சொல்லி கொண்டிருக்கையிலேயே.. மீண்டும் அவனை விட்டு இரண்டடி துள்ளி நின்றவள் “தொடாதீங்க… தொட்டிங்க.. அவ்வளவு தான்!” அறை அதிர கத்தினாள்.
அவளது தற்போதைய நிலையை உணர, அந்த சத்தம் ஒன்றே போதுமானதாய் இருந்தது. பொங்கி பெருகிய காதல், வெள்ளம் அடித்து சொன்றதை போல், தட்டி எழுப்பப்பட்ட உணர்வுகள் அனைத்தும் அடித்து செல்லப்பட்டது கமலியின் கத்தலில். பிடறியை அழுந்த வருடி நின்றவனுக்கு அவள் கொடுக்கும் ஏமாற்றத்தை ஏற்க முடியாமல் தவித்து நின்றிருந்தான் கிரி.
Advertisement
“வெளியே போங்க” என அபஸ்வரமாய் கேட்ட கமலியின் குரலில், படக்கென நிமிர்ந்து அவள் முகம் பார்க்க, அவளோ முகத்தில் வெறுப்பை கக்கியபடி நின்றிருக்க, பார்வையாலேயே எரித்தான் கிரி. அடுத்த நிமிடம் விருட்டென புயல் போல் அந்த அறையையும் வீட்டையும் விட்டு வெளியே வந்துவிட்டான்.
முன்னை விட இறுகி போயிருந்த கிரியின் முகம், கர்ணாவிற்கு மிகுந்த சங்கடத்தை கொடுத்தது. இன்று தான் வந்திருக்கிறான். பிரச்சனை என்னவென தெரியாமல் எப்படி அவனிடம் விசாரிக்க, என்ற யோசனையிலேயே அவர்களது டூ விலர் பயணம் தொடங்கி மிக சீக்கிரத்திலேயே முடிந்திருந்தது.
கமலியின் வீட்டிலிருந்து சரியாய் பதினைந்து நிமிடங்கள் தான் தற்போது இவர்கள் இருக்கும் வாடகை வீடு. “உள்ள வாங்க கர்ணா” என கிரி அழைக்க, “நீங்களே இப்போ தான் வந்திருக்கீங்க.. நீங்க ரெஸ்ட் எடுங்க.. இன்னொருநாள் குடும்பமா வரோம்” என சொல்லி சென்றுவிட்டான் கர்ணா.
Advertisement
கேட்டை திறந்து, ஒரு இருபடி தூரத்தை கடந்து வீட்டிற்குள் வந்தான். இவனுக்காகவே காத்திருந்தாரோ வசந்தா? “வாடா! ராம் வந்து உன்னோட லக்கேஜ்லாம் வச்சிட்டு போய், ரொம்ப நேரம் ஆச்சு.. எங்கடா கிரியைன்னு கேட்டா.. ‘வருவான்னு’ நக்கலா சொல்லிட்டு போறான். அப்படி எங்கடா போயிட்டு வர்ற?” வசந்தா கேட்க
Advertisement
“கமலி வீட்டுக்கு போயிட்டு வரேன்” என சொல்லிவிட்டு, எதிரில் நின்றிருந்த ராஜியை பார்த்தும் பார்க்காததுமாய், இவன் வீட்டின் உள்ளே சென்றான்.
ஹாலில் பாய் விரித்து அதில் விளையாடிக்கொண்டிருந்த குழந்தைகளின் அருகே இவன் சென்றிட, இருவருமே புதியவனை பார்ப்பது போல பார்த்து வைத்தனர்.
பின் ‘மாமா’ என பிரனவ் கண்டு பிடித்திட, பிரணிதாவிற்கு இவனை அடையாளம் கண்டு கொள்வதில் சிரமம் ஏற்பட, திரு திருவென விழித்திருந்தவளை சிரிப்போடு தூக்கி கொண்டவன், ”மாமா டா” என கொஞ்சிட, பிரணவ்வும் வந்து தோளில் கட்டி கொண்டான். கைக்கு எட்டும் தூரத்தில் இருந்த அவனது லக்கேஜை இழுத்து, அதிலிருந்த விளையாட்டு பொருட்களை கடைபரப்ப, உற்சாகமாகினர் பிரணவ்வும், பிரணிதாவும்.
Advertisement
இவர்களுக்கு எடுத்து கொடுத்தது போக, மீதமிருந்தவைகளை பார்த்து ‘உனக்குன்னு வாங்கிட்டு வர்ற கிப்ட் எல்லாம் உனக்கு செட் ஆகாத கிப்ட்டாவே இருக்கு!’ நான் வாங்கிட்டு வர்ற நேரம் தான் சரியில்லையா? இல்லை நானே சரியில்லையான்னு தெரில்ல.! என நொந்து கொண்டு, அந்த பேக்கை அப்படியே பூட்டி வைத்து விட்டான்.
இவனை பார்த்தபடியே, ராஜியும், வசந்தாவும் உள்ளே வந்தனர். “சாப்பிட்டியாடா..” என அவனருகில் வந்து அமர்ந்தார் வசந்தா.
“ம்.. கமலி வீட்டில்” என்றான் ஒற்றை வார்த்தையாய்.
“ஏண்டா.. பேச மாட்டியா?” என வசந்தா துவங்க
“டயர்டா இருக்குமா.. கொஞ்சம் தூங்கிட்டு வரட்டா.. அப்புறம் பேசலாம்” என பதிலை எதிர்பாராமல் எதிரில் இருந்த படுக்கையறையை நோக்கி நகர்ந்தான்.
ராஜி கையை பிசைந்து கொண்டு சமையலறைக்குள்ளேயே நின்றிருந்தாள். கமலியின் நகை அடகு வைத்தது, இவனிடம் சொல்லாமல் வீடு எடுத்தது என அப்போதைய சாகசங்கள் எல்லாம் இப்போது சர்க்கஸ் கூடாரமாய் தெரிய, அவனிடம் பேச கூட முடியாமல் சமையலறைக்குள்ளேயே உருட்டி கொண்டிருந்தாள்.
வீட்டை மேலோட்டமாய் சுற்றி பார்த்தவன், அங்கிருந்து படுக்கையறைக்கு சென்றான். அங்கு கட்டிலும் மெத்தையும் மட்டுமே இருக்க, ராஜியோ, குழந்தைகளோ பிழங்கியதற்கான அடையாளங்கள் ஏதும் இல்லை.
“ஏன்..மா இந்த ரூமை யாருமே பிழங்கலையா” அறைக்குள் இருந்தபடியே இவன் சத்தம் கொடுக்க, அங்கே வந்தார் வசந்தா.
“ஆமாடா.. ராஜி, பிள்ளைங்க எல்லாரும் ஹாலிலேயே படுத்துப்போம். நான் தான் உடம்பு வலின்னா அப்பப்போ கட்டிலை புழங்கிப்பேன். குழந்தைகளும் கட்டிலில் விளையாடிட்டு அப்படியே தூங்கிடுங்க” என்றிட, அவன் பார்வையோ கட்டிலில் பதிந்து மீண்டது.
கால்தடம், ஆங்காங்கே கோடிழுத்து கீரல் போட்ட அடையாளங்கள், சிறு குழந்தைகள் என்பதால் இரவின் ஈரம் படிந்த தடங்கள், சரியாய் பாராமரிக்காமல் விட்டு தூசியாய் படிந்து வேறு கிடந்தது. அதில் அமர போனவனுக்கு ஏதோ வாடை வர, மீண்டும் ஹாலுக்கே வந்தவன், ஓரமாய் சுருட்டி வைத்திருந்த இன்னொரு பாயை எடுத்து விரித்து படுத்துவிட்டான்.
ராஜியும், வசந்தாவும் ஒருவரை பார்த்தனரே தவிர ஏதுவும் அவனிடம் சொல்லவில்லை.
ஒரு பக்கம் குழந்தைகளின் சத்தம், இன்னொரு பக்கம் அனாமத்தாய் ஓடிக்கொண்டிருந்த டிவியின் சத்தம் என அனைத்தையும் மீறி அசதியிலும், கமலியுடனான வாக்குவாதம் கொடுத்த மன உளைச்சலிலும் கண் அயர்ந்து போனான்.
மாலை போல விடாது அழைத்த போனில் உறக்கம் கலைந்து விழித்தான் கிரி. ராம் தான் போன் செய்திருந்தான். அவனென்று அறிந்த பின், உறக்கம் கலையாமலேயே போனை எடுத்தான் இவன்.
“டேய், என்னடா பண்ற, கடைக்கு வர்ற ஐடியா இருக்கா இல்லையா?” என அந்த பக்கம் காட்டமாகவே கேட்டான் ராம்.
“அது..” என இவன் இழுத்த கேப்பில் உறக்கம் கலைந்தது கிரிக்கு. “கத்தாரில் இருந்தப்போ, கடை கடைன்னு அவ்வளவு ஆசையா சுத்திட்டு இருந்த.. இப்போ சாரை வெத்தலை பாக்க வச்சு அழைக்கனுமோ, வீட்டாளுகளை கூட்டிட்டு வந்து சேருடா வெண்ணை!” கிரியின் கனவு இந்த டிபார்ட்மெண்டல் ஸ்டோர், ஆனால் இவன் கண்டுகொள்ளாமல் இருக்க, கடுப்பானான் ராம். அதன் பொருட்டே இத்தனை வசுவுகள்.
“சரிண்ணே.. வரேன்” என ஒற்றை வார்த்தையில் வைத்துவிட்டு, மயான அமைதியுடன் இருந்த வீட்டை சுற்றி பார்த்தான். யாரையுமே காணவில்லை. எழுந்து பாத்ரும் சென்று ரெப்பிரஸ் ஆகிவிட்டு வெளியே வந்தான்.
பின் ஹாலின் ஒரு மூலையில் கால் நீட்டிக்கொண்டு, சுவற்றில் சாய்ந்தபடி அமர்ந்தபடி இருந்தான் சில நிமிடங்கள்.
இப்போது கடைக்கு சென்றே ஆக வேண்டும். இருக்கும் நிலைக்கு அம்மா, அக்கா வருவதற்கு வாய்ப்புகள் எவ்வளவு தூரம் என தெரியவில்லை. வரவும், வராமல் போகவும் பாதிக்கு பாதி வாய்ப்புகள் உள்ளது.
ஆனால் கமலியை அவனால் ஒதுக்கி வைக்க முடியவில்லை. ஒரு கணவனுக்கு மனைவி என்ற ஒருத்தி வேண்டுமே கஷ்டத்திலும், சந்தோஷத்திலும் பங்கெடுக்க..
அதுவும் இந்த சூப்பர்மார்க்கெட் இவனது சாதனை என்றே கூறலாம். ‘வேலையை விட்டுட்டேன் கமலி. இனி இங்க தான் இருப்பேன், அதுவும் ஒரு கடைக்கு முதலாளியா?’ என அவளை நேரில் பார்த்து சொல்லி அவள் விழிகள் காட்டும் அதிர்ச்சியை நேரில் பார்க்க காத்திருந்தவனுக்கு, சற்றும் எதிர்பாரா விதமாக அதை விட பலமடங்கு அதீத அதிர்ச்சியை கொடுத்துவிட்டாள் கமலி.
காலையில் அவள் வீட்டில் வைத்து, அவள் கேட்ட கேள்விகள் அத்தனையையும் ஏற்று கொள்ள முடிந்தவனால் ‘வெளியே போங்க’ என காட்டு கத்தலில் கத்தியதை ‘தொட்டீங்க அவ்ளோ தான்’ என சீறியதை ஏற்கவே முடியவில்லை.