Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

93. Anonymous - முள் மீது தூங்கினேனே

முள் மீது தூங்கினேனே 3 2

ஆனால் கமலிக்கோ ராஜி மட்டுமே, நக்கலாய் பார்ப்பது, பொடி வைத்து பேசிவது குழந்தையை தர மறுப்பது உன் அதிகமாக தொந்தரவு கொடுப்பது போல தோன்றும், மற்றபடி வசந்தா தொந்தரவாய் தெரியவில்லை.

கூடவே, அன்று காலை கிரிக்காக டீ போட சமையலறைக்கு வந்த கமலியின் காதுகளில் விழுந்தது ராஜியின் குரல்.

 ‘கிரி, இரண்டு மாசம் லீவுன்னு செல்லிட்டு, இப்போ கத்தார் கிளம்புறான் போல.. போனில் பேசிட்டு இருந்தான்’ என்னனு விசாரிம்மா’ ராஜி, வசந்தாவிடம் வெடியை போட..

‘என்னடி சொல்ற’ என இவரும் ஷாக்காக,  கமலி அங்கு வருவதை கண்டு, அவருமே வாய்க்கு பூட்டு போட்டு கொண்டனர்.



Advertisement

அவள் காதில் விழுந்திருக்காது என இவர்கள் நினைக்க? ராஜியை முழுதாய் நம்புவதா வேண்டாமா? விளையாடுகிறாளா? என தெரியாமல், டீயை மட்டும் எடுத்து கொண்டு சென்றாள்.

‘இரு மாதம் விடுமுறை’ என்று தானே தன் தந்தையும் தாயும் தன்னிடம் சொன்னார்கள். இப்போது இவன் கிளம்புகிறானா? எனும் செய்தியில் விக்கித்து போனாள்.

அதுவும் ராஜி சொல்லி தான் தெரிகிறது? அதுகூட அவளுக்கு தெரியவில்லை! என நினைக்கையில் என்ன வாழ்க்கை வாழ்கிறோம்? என்ற எண்ணம் உதித்தது அவளுள்.

Advertisement

கிரி என்ற ஒருவன் மட்டுமே அவளை ஆட்டி படைத்து கொண்டிருந்தான்.

Advertisement

தன்னை ஏன் கிரி ஏற்க மறுக்கிறார் என்ற காரணமேதும் அறியாமல் தலையே வெடித்துவிடும் என்ற நிலைக்கு தள்ளப்பட்டாள்.

டீயை அவன் கையில் கொடுத்துவிட்டு, “வெளியே போறீங்களா? எப்படி வருவீங்க” என இவள் கேட்க

“ம்.. மதியமாகிடும்” ஒற்றை வார்த்தையில் வரும் நேரத்தையும் சேர்த்தே சொன்னான் கிரிதரன்.

Advertisement

‘ஏன் கேட்கிற’ என்பது போல் ஒரு பார்வையை இவளிடம் இவன் காட்ட

“சாப்பாடு” இவள் கேட்க

“வேலை செய்யாமல் செரிக்கமாட்டுது, மந்தமா இருக்கு”  என சொல்லிவிட்டு டீயை முடித்து கொண்டு கிளம்பி சென்றுவிட்டான் காலை உணவை கூட எடுக்காமல்.

மதியம் வந்திடுவாரே வரட்டும் அப்போது கேட்டு கொள்ளாலாம், என ஒத்தி வைத்தாள் தன் குழப்பங்களை, கேள்விகளை.

ஏனோ அவளுக்கு கடவுள் அன்றே பதில் சொல்லிவிடுவார் என்பதை போல மதியம் போல வந்தான் கிரிதரன்.

கட்டிலின் தலைமாட்டில் தலையணையை சாய்த்து அதில் தன் முதுகை சாய்த்து ஹெட்செட்டில் ஏதோ ஒரு பாடலை கேட்டபடி அமர்ந்திருந்தாள்.

இவனை கண்டதும்  போனையும், ஹெட் செட்டையும் ஓரமாய் வைத்துவிட்டு, இவனை நோக்கி ஏதோ கேட்க வந்தாள்.

ஆனால் அதற்கு முன் “சாப்பிட்டுட்டேன், நீயும் சாப்பிட்டுடு” மதிய உணவை பற்றி தான் கேட்க போகிறாள் என இவனே உத்தேசித்து அதற்கு பதிலும் சொல்லிவிட்டு திரும்ப,

“அது உங்க கிட்ட பேசனும்..” என இவள் தயங்க

கண்மூடி திறந்தவன் “என்ன பேசனும்”

“திரும்ப கத்தார் போக போறீங்களா?”

“என்ன ஒட்டு கேட்டீயா?” வழக்கம் போல மிரட்டும் குரல்.

“இல்ல அத்தயும், அண்ணியும் பேசிட்டு இருந்தாங்க” எனவும்

ப்ச்.. என முகத்தை அழுந்த துடைத்து கொண்டு “ஆமா போகனும்”

“எப்போ?”

“இன்னும் இரண்டு மூனு நாளில்”

படபடவென அடித்து கொண்டது இதயம்.

“இரண்டு மாசம் லீவுன்னு அப்பா சொன்னாங்க!”

“எமர்சன்ஜி.. போய் தான் ஆகனும். வேலை பார்க்குற இடம் அப்படி”

“அடுத்து எப்ப தி.. திரும்ப வருவீங்க?” திக்கியது அவள் குரல்.

“தெரியலை.. அங்க போனா தான் நிலவரம் பார்த்துட்டு சொல்ல முடியும்” வேறென்ன? இவன் பார்க்க

இப்போது விட்டால் அடுத்து எப்போதும் இவனிடம் கேட்க முடியாதோ? தலை வெடித்து விடுமோ? எண்ணங்கள் வெடித்து கிளம்ப “ஏன் கிரி என்னை ஒதுக்கி வைக்கிறீங்க” சுற்றி வளைக்காமல் நேரடியாய் இவள் கேட்டே விட்டாள்.

இதை சற்றும் எதிர்பார்க்காதவன், சற்றே திகைத்து தான் போனான்.

“என்னை பிடிக்கலையா?” திருமணமான இந்த பத்து நாட்களில் முதல் முறையாய் கணவனிடம் உரிமையாய் கேட்டாள்.

அதன் அழுத்தம் தாங்காதவனாய் பிடறியை நீவியபடி சட்டென திரும்பி நின்றான்.

முதல் முறை போனில் பேசுகையில் பதட்டமாய் அவன் கேட்ட அதே வார்த்தைகளை இன்று இவள் பயத்துடன் கேட்கிறாள்.

அவள் கேட்ட அந்த முதல் கேள்வியே அவனை கதி கலங்க செய்தது என்றால் அவன் திரும்பி அப்படியே வேரூன்றியது போல் நின்றது இவளை கதி கலங்க செய்தது.

“சொல்லுங்க கிரி, ஏன் என்னை நெருங்கவே மாட்டீறிங்க, இந்த கேள்வி தான் பத்து நாளா தலைக்குள்ள கிடந்து பிராண்டிட்டே இருக்கு, ப்ளீஸ் எதுவா இருந்தாலும், என்ன பிரச்சனையா இருந்தாலும், ஓபனா பேசிடுங்க, தலை வெடிச்சிடும் போல இருக்கு” மனம் திறந்தாள் இவள்.

அதற்கும் பதிலில்லை இவனிடம் “ஒருவேளை எங்க அம்மா, அப்பா அண்ணா, அண்ணி, எதுவும் நோகடிக்கிற மாதிரி சொன்னாங்களா? இல்ல நான் ஏதாவது பேசிட்டனா?” தன்பக்கமாய் இருக்கும் என காரணங்களை அடுக்கினாள்.

அதற்கும் பதிலில்லை இவனிடம்.. பொறுமை சிதறிக்கொண்டிருந்தது இவளிடம்.

மெதுவாய் நடந்து அவன் முன் எட்டி கை தொடும் தூரத்தில் நின்றாள். “உங்ககிட்ட தான் கிரி கேட்கிறேன்” குரல் லேசாய் உயர துவங்கியது.

அவள் இத்தனை நேரமாய் கேட்ட கேள்விக்கெல்லாம், பதில் சொல்வதற்கு பதிலாக, நிமிர்ந்து அவள் முகம் பார்த்து “என்னை உனக்கு பிடிக்குமா?” என ஒரே ஒரு கேள்வியை இவளை நோக்கி திருப்பி கேட்டான் இவன்.

முகம் குழப்பத்தை காட்ட, “நான் கேட்டா, நீங்களும் அதே கேள்வியை கேட்குறீங்க” என முகம் சுருக்கினாள்.

“பதில் சொல்லு என்னை பிடிக்குமா?” வலுவாய் வந்து விழுந்தது இவள் கேள்வி.

“நாம போனில் பேசினப்பவே இதற்கான பதிலை சொல்லிட்டேன், அப்போவும் இப்போவும்.. நீங்கன்னா எனக்கு இஷ்டம் தான்” மறையாமல் கூறினாள் தன் மனதை.

“ஏன் பிடிக்கும்”

“ஏன் பிடிக்கும்னா? உங்களை மாதிரி ஒரு ஒருத்தரை யாருக்கு தான் பிடிக்காமல் போகும்” இந்த பதிலை சொல்லும் போதே இப்போதைய பிரச்சனைகளை ஒதுக்கி இவள் முகம் பொலிவானது.

பொலிவை இவனும் உணர்ந்தானோ.. இவன் முகம் இறுகியது. “சரி! பிடிக்குறதுக்கான காரணம்..”

“ஏன் இதைல்லாம் இப்போ கேட்கிறீங்க?”

“சொல்றேன்.. முதலில் நீ காரணம் சொல்லு” விடாது நின்றான்.

“காரணம்.. உங்களோட மேன்லியான கலர், ஹையிட், செம்ம பிட்டான பாடி” சட்டென நாக்கை கடித்து கொண்டவள் “அட்டாராக்டிவ்வா இருக்கீங்க” என முடித்து கொண்டாள்.

அவள் முகத்தை ஊடுருவியன் “அது பிசிக்கல்.. பார்க்கும் போதே தெரியும்.. வேற காரணம், உனக்குன்னு யுனீக்கா?”

“உங்க குரல்.. அவ்ளோ பிடிக்கும்,” நொடிகூட தாமதிக்காமல் பதில் வந்தது அவளிடம்.

ஓர் நொடி, ஸ்தம்பித்தான்… பின் சுதாரித்து “வேற?”

“அப்பா இறந்த பிறகு பொறுப்பு குடும்பத்தை பாத்துகிறீங்க. அக்காக்கு கல்யாணம் பண்ணி கொடுத்திருக்கீங்க. ரொம்ப சைலன்ட், யாரையும் ஹேர்ட் பண்ண மாட்டீங்கன்னு கேள்வி பட்டேன், சத்தமா கூட போடமாட்டீங்கனு அத்த சொன்னாங்க, நான் பாத்தவரை கல்யாணத்துக்கு முன்னையும், இந்த பத்து நாளும் நீங்க அப்படி தான் இருக்கீங்க” அவனை  மனதில் நிறுத்தி, ஆழ்ந்து அனுபவித்து இவள் பேசி முடிக்க

“ஆனால் எனக்கு உன்கிட்ட இதெல்லாம் பிடிக்கும்னு சொல்ல எதுவும்.. எதுவுமே இல்லை” கடித்த பற்களுக்கிடையில் வந்து விழுந்த வார்த்தையில் திடுக்கிட்டாள் கமலி. அவள் இத்தனை அடுக்கியிருக்க, ஒரே ஒரு வாக்கியத்தில் அவள். தலையில் பெரிய பாராங்கல்லாய் போட்டான்.

“யாரையும் ஹேர்ட் பண்ணாதவன் இந்த ஒரு வாரமா உன்னை ஒதுக்கி வச்சு ஹேர்ட் பண்ணிட்டு தான் இருக்கேன். உன்னை என்னால் பேஸ் பண்ண முடியல..  சந்தோஷமா சிரிச்சு பேசி நாளாச்சு,  எல்லாம் எல்லாத்துக்கும் காரணம் நீ ஒருத்தி தான். என்னோட ஒரிஜினல் குணம் உன்னால  இப்போ மாறிட்டு இருக்கு” இடுப்பில் கை வைத்து கொண்டு அனல் கக்க பேசினான்.

ஆழ்ந்து அவனை பார்த்த வண்ணம் நின்றிருந்தாள். என்ன நினைத்தானோ..

அவள் முழங்கையை பிடித்து இழுத்து சென்று டிரெஸிங் டேபிள் கண்ணாடி முன் நிறுத்தி, அவள் பின்னே இவன் நின்றபடி “யாரையும் நான் பாடிஷேமிங் பண்ணதேயில்லை. ஆனால் இப்போ…” பெருமூச்சொன்றை விட்டு,

“ஹயிட் தவிர ஏதாவது ஒரு விசயத்திலாவது ஒத்து போறோமான்னு பாரு, நான் ஏன் விலகி போறேன்னு உனக்கு புரியும்”

கண்ணாடியில் இரு உருவங்களும் தெரிந்தது.

“உனக்கு பிடிச்ச மாதிரி நான் இருக்கேன்.. ஆனா எனக்கு பிடிச்ச மாதிரி நீ இருக்கியான்னு ஒரு முறையாவது  யோசிச்சிருந்தா, இன்னைக்கு இவ்வளவு பிரச்சனை வந்திருக்காதுல்ல” அத்தனை ஆதங்கம் அவன் குரலில்.

திருமணத்திற்கு முன்பு வரை தனியாகவே கண்ணாடியில் பார்த்துக்கொண்ட உருவத்தில் தெரியாத வித்யாசங்கள் யாவும், அவனருகில் வைத்து பார்க்கையில் பூதகரமாய் தான் தெரிந்தது. ஒரு வேளை செல்பியோ, இல்லை அருகருகே நிற்க வைத்து போட்டோ எடுத்திருந்து அதை பார்த்தால் தெரிந்திருக்குமோ? கல்யாண ஆல்பம் கூட இன்னும் வரவில்லையே!

இவன் பேசுவெதெல்லாம் மூளைக்குள் சென்றடைய, கண்ணாடியில் தெரிந்த அவன் உருவத்தை முழுதாய் உள் வாங்கினாள்.

அந்த கடுகடு முகம் மட்டுமில்லை என்றால், கமலி சொன்னது போல் ஆண்மைக்கான இலக்கணம் அத்தணையும் அவனிடத்தில் கொட்டி கிடந்தது. பார்த்து தானே இவளும் கவிழ்ந்தாள்.

அப்படியே திரும்பி தன்னை பார்த்தாள். சற்றே தடிமனான உடல், அவனருகில் இன்னும் தடிமனே! சாக்லேட் நிறத்திற்கும் கோதுமை நிறத்திற்கும் இடையில் இருக்கிறாள். ஆனால. அவனருகில் மட்டமாய் தெரிந்தாள். அவனை போன்ற பளிச்சென்ற நாகரீக தோற்றம் அவளிடமில்லை.

இன்று தான் மூளை வேலை செய்கிறதா? இத்தனை நாள் எங்கே சென்றிருந்தது என் மூளை?.

இதுவரை சிறிதாய் தெரிந்த குறைகள் பூதகரமாய் இப்போது வந்து நிற்க, அப்படியே திரும்பி இவனை பார்த்தாள்.

“சாரி.. வெரி வெரி சாரி.. உன்னை நோகடிக்கனும்னு இதை சொல்லலை.. நீயே என்னை மாதிரி ஒருத்தனை எதிர்பார்க்கும் போது.. என்னோட எதிர்பார்ப்பு எப்படி இருக்கும்னு உனக்கு புரியும்னு நினைக்கிறேன். இதை சொல்ல வேண்டாம்னு நினைச்சேன். ஆனால் இன்னைக்கு சொல்லலைன்னா தினம் தினம் உன்கிட்ட நடிக்கிற மாதிரி இருக்கும்.. நான் நானா இருக்கனும் ப்ளீஸ்..” என வெளியேறிவிட்டான்.

தங்களது அறையை விட்டு வேகவேகமாய் வந்தவன் பார்வையில் பட்டனர் சோபாவில் அனாயசமாய் அமர்ந்திருந்த தாயையும், தங்கையையும். சாதாரணமாய் அமர்ந்திருப்பது போல் காட்டி கொண்டாலும் முகம் இருவருக்குமே சரியில்லை. அந்நேரம் அவன் ஆழ்ந்து கவனிக்கவும் இல்லை. வெளியேறிவிட்டான்.

கரண்ட் கம்பியில் அடிபட்ட உடலாய் விரைத்து அப்படியே மடிந்து அமர்ந்தாள்.

தொடரும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!