Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

92. பவித்ரா புருஷோத்தமன் - இருளில் தொலைத்தேன் ஒளியாய் வந்தனை

இருளில் தொலைந்தேன் ஒளியாய் வந்தனை-6

தனக்கு பிடித்த வெண்ணிலா ஐஸ்கிரீம், ஆதவ் கிருஷ்ணனுக்கு பிடித்த ப்ளுபெரி ஐஸ்கிரீமை வாங்கி கொண்டு ஆழினியும், நீலவேணிக்கு‌ பிடித்த பிளாக் கரன்ட் ஐஸ்கிரீம், தனக்கு பிடித்த சாக்லேட் ஐஸ்கிரீமை வாங்கி கொண்டு இன்பனும் மேசையின் அருகில் போடப்பட்டிருந்த அவரவர் நாற்காலியில் அமர, அவர்களிடமிருந்து தங்களது ஐஸ்கிரீமை பெற்று கொண்ட ஆதவ் கிருஷ்ணனும் நீலவேணியும் போட்டிப்போட்டு அதனை காலி செய்யும் முயற்சியில் களமிறங்கியிருந்தனர்.

தன்னெதிரில் அமர்ந்து ஏதோ சிந்தனையிலிருக்கும் ஆழினியின் செயலில் குழம்பியவன்

“ஆழினி, ஏன் ஐஸ்கிரீம் சாப்பிடாம அதை கிளறிட்டு இருக்க? என்ன யோசனை?” என்று வினவிய இன்பனிடம் ராஜவேல் கூறிய அனைத்தையும் ஒன்றுவிடாமல் கூறியிருந்தாள்.

ஆழினி கூறிய அனைத்தையும் பொறுமையாக கேட்டவள்



Advertisement

“ஹோம் நர்ஸ் டியூட்டி வேண்டாம் அண்ணி, நாள் முழுக்க அங்கேயே இருக்குற மாதிரி இருக்கும்…. பேசாம நீங்க வேண்டாம்னு சொல்லிடுங்க….” என்று நீலவேணி கூற

“நானும் அதையே தான் நினைச்சேன் நீலா ஆனா முழுநேரமும் நான் அங்க இருக்கனும்னு அவசியமில்ல, காலையில எட்டு மணிக்கு போயிட்டு நைட் எட்டு மணிக்கு வீட்டுக்கு வந்துடுவேன்….” என்று ஆழினி கூறியதை கேட்டவன்

“அவங்க வீடு எங்கிருக்கு ஆழினி? அந்த பேஷன்ட் வீட்டுல மொத்தம் எத்தனை பேர் இருக்காங்க?” என்று வினவிய இன்பனிடம்

Advertisement

“நம்ம வீட்டிலிருந்து ரெண்டு தெரு தள்ளி தான் அவங்க வீடு இருக்கு…. எனக்கு தெரிஞ்சவரை அவங்க வீட்டுல பருவதம்மாவும் அவங்க பையனும் தான் இருக்காங்க…. சொல்லப்போனா எனக்கு பருவதம்மா ரொம்ப பிடிச்சுப்போச்சு இன்பா, அதுனால தான் அவ்வளவு சீக்கிரம் என்னால ராஜவேல் சார் கிட்ட ‘முடியாதுன்னு’ சொல்ல முடியல, அதான் யோசிச்சு சொல்றேன்னு சொல்லிட்டு வந்துட்டேன்….” என்று ஆழினி கூற, அவள் கூறியதை கேட்டவன் சிந்தனையில் மூழ்கியிருந்தான்.

Advertisement

சற்று நேரத்திலேயே தன் சிந்தனையிலிருந்து வெளிவந்தவன்

“பேசாம நீ ஹோம் நர்ஸ் டியூட்டிக்கு போயிட்டு வா ஆழினி…. காலையில எட்டு மணியிலிருந்து நைட் எட்டு மணிவரை மட்டும் தான், அதுவும் ரெண்டு மாசம் வரைக்கும் டியூட்டி கொடுத்திருக்காங்க…. இதெல்லாம் உனக்கொரு நல்ல ஆஃபர் ஆழினி…. குறிப்பா அந்த அம்மா…. அவங்க பெயர் என்ன சொன்ன? ஹான், பருவதம்மா….. அவங்க உன் கிட்ட நல்லா பேசுறாங்கன்னு வேற சொல்ற, பத்தாததுக்கு அவங்க வீடு நம்ம வீட்டுக்கு ரெண்டு தெரு தள்ளி வேற இருக்கு…. நீயும் நம்ம வீட்டுக்கு டைம்கு வந்துடுவ…. ‘அடுத்த வாரம் உனக்கு நைட் ஷிப்ட் வந்துடும் இந்த பப்பாளிய வச்சிக்கிட்டு எப்படி மேயிக்கப்போறேன்னு’ பயந்தேன் இப்போ நீ ஹோம் நர்ஸா போனா நைட் சீக்கிரமே வீட்டுக்கு வந்துடுவ…. உன் பாட்டை கேட்டுட்டே நானும் பப்பாளியும் தூங்கிடுவோம்…. இனி நீ தான் சொல்லனும் ஆழினி….” என்று இன்பன் தன் நீண்ட உரையை கூறி முடிக்க, அவன் கூறியதை கேட்ட ஆழினி சிந்தனையில் மூழ்கியிருந்தாள்.

சற்று நேரத்தில் நால்வரும் அவரவர் ஐஸ்கிரீமை ஆசைத்தீர உண்டுவிட்டு இல்லத்திற்கு சென்று மிதமான சுடுநீரை குடித்துவிட்டு அவரவர் அறையில் உறங்கியிருந்தனர்.

Advertisement

மறுநாள் காலைப்பொழுதும் அழகாய் விடிய, அந்நாளின் நாளும் விறுவிறுப்பாக ஆரம்பமாகிருந்தது. இங்கு அறையில் தன் மகனை இறுக்கமாக அணைத்தவாறு உறங்கி கொண்டிருந்த ஆழினியையும் அவளருகில் தன் அன்னையின் அணைப்பினது கதகதப்பில் துயில் கொண்டிருந்த ஆதவ் கிருஷ்ணனையும் இரசித்தவன் நீலவேணியை காண்பதற்காக தன் இல்லத்திற்கு கீழிருக்கும் அவனது காதலியின் இல்லத்திற்கு சென்றிருந்தான்.

தன்‌ இல்லத்திலிருந்து படியிறங்கி வரும் இன்பனை கண்டு சிரித்தவள் இல்லத்தின் வாயிலில் கோலமிட்டவாறு

“என்ன சார் அதிசயமாயிருக்கு? பத்து மணி ஆஃபிஸ்க்கு ஏழு மணிக்கே கிளம்பிட்டீங்க? என்ன விஷயம்?” என்று வினவிய நீலவேணியின் அருகில் அமர்ந்தவன் அவள் வரைந்த பூக்கோலத்திற்கு வண்ணமிட ஆரம்பித்திருந்தான்.

“ஒன்பது மணிக்கு மீட்டிங் இருக்கு வேணி…. ரொம்ப முக்கியமான பிராஜெக்ட், அதோட பிபிடி செக் பண்ணனும் அதான் சீக்கிரம் கிளம்பிட்டேன்…. அப்புறம், மதியம் மூணு மணிக்கு விஜய் சார் பார்க்க போறேன்…. இந்த வரன் அமைஞ்சா நல்லாயிருக்கும்னு தோணுது…. எல்லாம் நல்லபடியா நடக்கனும்….” என்று இன்பன் கூறியதை கேட்டவள்

“நம்பிக்கையா இரு இன்பா, எல்லாம் நல்லதாவே நடக்கும்…. நம்ம கல்யாணத்தை அண்ணியும் அண்ணனும் ஜோடியா சேர்ந்து தான் நடத்துவாங்க பாரு….”

“அண்ணனா?”

“ஆமா…. உன் அக்கா ஆழினி எனக்கு அண்ணின்னா அவங்க ஹஸ்பன்ட் எனக்கு அண்ணன் தான?”

“எல்லாம் சரிதான்…. ஆனா….” என்று கூறி சுற்றிமுற்றி பார்த்தவாறு நீலவேணியின் அருகில் நெருங்கி அமர்ந்து அவள் சுதாரிக்கும் முன்பே அவளது கன்னத்தில் முத்தம் வைத்தவன் தன்னை நாணம் கலந்த பொய்யான கோபத்துடன் முறைத்தவளை கண்டு கண்ணடித்துவிட்டு அங்கிருந்து வேகமாக இன்பன் எழவும் தன் நீலவிழி கண்களால் அவ்விருவரையும் ஆராய்ச்சி பார்வை பார்த்து கொண்டே ஆதவ் கிருஷ்ணன் படியிறங்கி வரவும் சரியாய் இருந்தது.

ஆதவ் கிருஷ்ணனை அவ்விடத்தில் சற்றும் எதிர்பாராதவன் அதை தனக்குள் மறைத்தவாறு

“ஆதவ் கண்ணா, தூங்கி எழுந்துட்டீங்களா? ஆமா, நீ எப்போடா வந்த?” என்று இன்பன் வினவியவாறு இளித்து வைக்க, அவ்விடத்திற்கு செய்தித்தாளுடன் வெளியில் வந்தவர்

“வாப்பா இன்பா, என்ன காலையிலேயே ஆஃபிஸ் கிளம்பிட்ட போல? அடடே, ஆதவ் குட்டியும் எழுந்தாச்சா?” என்று கூறிய ஆறுமுகத்தின் அருகில் சென்றவன் இன்பனை நக்கலாக பார்த்தவாறு

“தாத்தா, பன்னு மாமா வேணி அத்தைக்கு….” என்று ஆதவ் கிருஷ்ணன் முழுவதுமாய் கூறி முடிப்பதற்குள் அவனது வாயை பொத்தி தன் உயரத்திற்கு தூக்கியவன்

“ஆஃபிஸ் விட்டு வரும்போது உனக்கு ஐஸ்கிரீம் வாங்கிட்டு வரேன்….”

“ஸ்பைடர் மேன் மாஸ்க், அயர்ன் மேன் டாய் வேணும்….”

“டேய் பப்பாளி, இதெல்லாம் அநியாயம்….”

“சாக்லேட் டோனட், ரெயின்போ கேக் ரெண்டுமே ரெண்டு ரெண்டா வேணும்….”

“அடேய்…. ரொம்ப ஓவரா போறடா….”

“தாத்தா…. இந்த பன்னு மாமா இப்போ….” என்று ஆதவ் கிருஷ்ணன் ஏதோ கூறுவதற்கு முன்பே அவனது வாயை பொத்தியவன்

“சரி சரி, வாங்கிட்டு வரேன்…. யார் கிட்டயும் இங்க நடந்ததை சொல்லாத….” என்று இன்பன் கூறியதை கேட்டு கன்னக்குழி தெரியும் அளவிற்கு அழகாய் சிரித்தவன்

“டீல்….” என்று ஆதவ் கிருஷ்ணன் கூறி தன் கட்டை விரலை காட்ட, அவனை நீலவேணியின் கைகளில் திணித்தவன்

“உலக்க சைஸ் இருந்துட்டு இம்புட்டுக்காண்டு வயசுலேயே பிளாக்மெயிலா பண்ற? உன்னைய இருடி….” என்று இன்பன் தன் வாய்க்குள் கூறி முணுமுணுக்க, அவன் கூறியதை சரியாக கேட்டவன்

“ஆறுமுகம் தத்தா, பன்னு மாமா நேத்து நைட்டு பைக்ல….” என்று ஆதவ் கிருஷ்ணன் ஏதோ கூற வருவதற்குள் அவனது வாயை பொத்தி கன்னத்தில் முத்தம் வைத்தவன்

“ரிமோட் காரும் சேர்த்து வாங்கிட்டு வரேன் ராசா….” என்று கூறி ஆதவ் கிருஷ்ணனின்‌ சுருள் முடி தலையில் செல்லமாக கொட்டிவிட்டு அவ்விடத்திலிருந்து சிட்டாக பறந்துவிட்டான் இன்பன்.

காலை பதினொரு மணி போல் தன் அறுவை சிகிச்சையை முடித்த பருவதம் மதியம் இரண்டு மணிக்கு தான் மயக்கத்திலிருந்து விழித்திருந்தார். கண்விழித்ததும் தன் கண்களை சுற்றிமுற்றி அலைபாய்ந்தவர் முன்னால் தோன்றியிருந்தாள் ஆழினி.

ஆழினியை கண்டு மெலிதாக புன்னகைத்தவரிடம்

“எப்படிம்மா இருக்கீங்க? வலி எதாவது இருக்கா? எதுவாயிருந்தாலும் பயப்படாம சொல்லுங்கம்மா?” என்று ஆழினி வினவ

“ஏன் என் சர்ஜரி அப்போ என்னோட நீ இல்ல?” என்று குழந்தை போல் வினவிய பருவதம்மாவின் கூற்றில் உள்ளம் நெகிழ்ந்தவள் அவரை கண்டு அழகாக சிரித்து வைத்தாள்.

“நான் சர்ஜரில உங்களோட இருப்பேன்னு சொன்னதுனால தான நீங்க தைரியமா ஆப்ரேஷன் தியேட்டர் போனீங்க? இந்த மாதிரி சொன்னா உங்களுக்கு தைரியமா இருக்கும்னு ராஜவேல் சார் கிட்ட உங்க பையன் சொன்னதா எங்க டாக்டர் சார் என் கிட்ட சொன்னாங்க…. ஆப்ரேஷன் தியேட்டர் போறதுக்கு முன்னாடி என்னை கேட்டிங்களாமே? ராஜவேல் சார் சொன்னாரு….” என்று ஆழினி கூறியதை கேட்டு அவளை பொய்யாக முறைத்தவர்

“அப்போ, என்னைய வச்சி நீ உண்மையாவே காமெடி பண்ணிட்ட? இருக்கட்டும் இருக்கட்டும்…. நான் கவனிச்சிக்குறேன்….”

“கவனிச்சிக்கோங்க கவனிச்சிக்கோங்க…. நாளையிலிருந்து ரெண்டு மாசம் வரைக்கும் உங்க வீட்டுல தான நான் இருக்கப்போறேன் நல்லா கவனிச்சிக்கோங்க….”

“வீட்டுக்கா? அப்போ நீதான் எனக்கு ஹோம் நர்ஸா வரப்போறியா? ராஜவேல் என்னவோ ‘ஆழினி ஓகே சொல்லுவாளான்னு தெரியல கஷ்ட்டம் நஷ்ட்டம்னு’ உலரிட்டு இருந்தான்….”

“என்னமோ தெரியலம்மா, உங்களுக்கு ‘நோ’ சொல்லவே எனக்கு வரமாட்டுது….” என்று கூறிய ஆழினியின் கூற்றில் உள்ளம் கரைந்தவர்

“என் பையன்….” என்று பருவதம் ஏதோ கூற வருவதற்குள்

“அவர் இவ்வளவு நேரம் வெளிய தான் இருந்தாரும்மா…. திடீர்னு ஏதோ இம்பார்டென்ட் மீட்டிங் வந்துடுச்சுன்னு சொல்லி இப்போத்தான் கிளம்புனாரு…. அவர் சீக்கிரமே வந்துடுவாரு, நீங்க ரெஸ்ட் எடுங்கம்மா…. நைட் உங்களை ரூம் மாத்திடுவாங்க, பயப்படாதீங்க….” என்று ஆழினி கூறியதை கேட்டு சரியென்பதை போல் தலையசைத்தவர் வேறெதுவும் பேசாது உறங்க ஆரம்பித்திருந்தார்.

தன் இருச்சக்கர வாகனத்தை ஓர் காஃபி ஷாப்பின் முன் நிறுத்திவிட்டு உள்ளே சென்றவன் இருவர் மட்டுமே அமர்வதற்கு ஏற்ப எதிரெதிர் போடப்பட்டிருந்த நாற்காலிகளிருக்கும் மேசையில் அமர்ந்து சிறிது நேரம் காத்திருந்த இன்பனின் எதிரில் தோன்றியிருந்தான் அவன்.

“ஹாய் இன்பன்…. நான் விஜய்…. விஜய் குமார்….” என்று விஜய் கூறி அவனிடம் தன்‌ வலது கரத்தினை நீட்ட, அவனுடன் இன்பனும் கைக்குளுக்கி கொண்டான்.

இன்பனுக்கு எதிரிலிருந்த நாற்காலியில் அமர்ந்தவன்

“காஃபி?” என்று கேட்டுவிட்டு இன்பனிடமிருந்து பதில் வரும் முன்பே

“எக்ஸ்கியூஸ் மீ…. டு காஃபி….” என்று விஜய் கூற, அவனை கண்டு மெலிதாக புன்னகை சிந்தினான் இன்பன்.

சற்று நேரத்தில் அவர்கள் ஆடர் செய்த காஃபி வர, அதை எடுத்து ஒரு மிடறு அருந்தியவன்

“சொல்லுங்க இன்பன், வர்க் எப்படி போயிட்டு இருக்கு?” என்று விஜய் குமார் இன்பனிடம் வினவ

“பரவாயில்ல, நாட் பேட்…. அப்புறம்…. வீட்ல அக்கா பத்தி உங்க கிட்ட சொன்னாங்களா?”

“ம்ம் சொன்னாங்க இன்பன்…. எனக்கு ஆழினியை ரொம்ப பிடிச்சிருக்கு…. எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் கல்யாணத்தை வச்சிக்கலாம்…. ஆனா….”

“ஆனா?”

“ஐ வான்ட் சம் ப்ரைவசி வித் ஆழினி…. அதுல மூணாவதா ஒரு ஆள் வர எனக்கு பிடிக்கல….”

“புரியல சார்….”

“லுக் மிஸ்டர் இன்பன், நானும் ஒரு டிவோர்சி தான்…. எனக்கும் ஒரு குழந்தை இருக்கு ஆனா அதொன்னும் என்னோட இல்லையே…. எனக்கு ஆழினியை பிடிச்சிருக்கு ஆனா அவளோட பையனுக்கு அப்பாவா என்னால இருக்க முடியாது…. கல்யாணத்துக்கு அப்புறம் ஆழினி மட்டும் என் வீட்டுக்கு வந்தா போதும்….” என்று விஜய் குமார் முடிவாக கூற, அவன் கூறியதை கேட்ட இன்பன் அதிர்ச்சியடைந்திருந்தான்.

“இதை சொல்றதுக்கு தான் என்னை தனியா பார்த்து பேசனும்னு சொன்னீங்களா?” என்று இன்பன் விஜய் குமாரிடம் வினவ

“ஆமா இன்பன், கல்யாணத்துக்கு முன்னாடியே இதை பேசறது நல்லதுன்னு தோனுச்சு அதான் உன்னை பார்த்து எல்லாத்தையும் பேசிடலாம்னு வந்தேன்….”

“சார், ஆழினிக்கு ஹஸ்பன்ட் மட்டும் நான் தேடல, என் ஆதவ்க்கு நல்ல அப்பாவையும் சேர்த்து தான் நான் தேடுறேன்…. ஐயம் சாரி சார், நீங்க அதுக்கு சரிப்பட்டுவரமாட்டிங்க….”

“புரியல….”

“உங்களை என் அக்காவுக்கு கல்யாணம் பண்ணி வைக்க சம்மதம் இல்லன்னு சொல்றேன்…. எப்போ நீங்க என் ஆதுவ வேண்டாம்னு சொன்னீங்களோ அப்போவே முடிவு பண்ணிட்டேன் நீங்க என் அக்காவுக்கு வேண்டாம்….”

“எதுக்கும் கொஞ்சம் யோசிச்சு முடிவு பண்ணுங்க இன்பன்…. என்னத்தான் ரெண்டு மூணு தடவை டிவோர்ஸானாலும் ஆம்பளைங்களுக்கு கல்யாணமாகிடும் ஆனா ஒரு பொண்ணுக்கு முப்பது வயசு தாண்டிடுச்சுன்னா ‌இங்க சிலர் அவளோட முதல் கல்யாணத்துக்கான வரனையே ரெண்டாந்தாரமாத்தான் கேப்பாங்க…. அதுவும் உங்க அக்கா வேற கையில ஒரு பையனோட இருக்கா…. என்னை மாதிரி ஒரு ஆளு உங்க அக்காவுக்கு எங்க தேடுனாலும் கிடைக்காது…. சின்ன விஷயம், அதை விட்டுக்கொடுத்துட்டா உங்க அக்கா வாழ்க்கை நல்லாயிருக்கும்…. என்ன சொல்றீங்க?” என்று விஜய் குமார் வினவ, அவன் கூறியதை கேட்டு கோபமுற்றவன்

“பச்சையா எதையாவது சொல்லி இடத்தை காலி பண்ணுடான்னு நான் கத்துறதுக்குள்ள நீங்களா இங்கிருந்து போயிடுங்க சார்….” என்று இன்பன் கூறியதை கேட்டவன் அவனை முறைத்துவிட்டு அவ்விடத்திலிருந்து சென்றுவிட்டான்.

விஜய் குமார் சென்ற பிறகு தன் தலையில் கைவைத்து சோர்வாக அமர்ந்தவனின் நாசியில் இஞ்சி மற்றும் ஏலக்காய் கலந்த தேநீரின் வாசனை மூக்கை துலைத்து அவனை சுண்டி இழுத்தது. தேநீரின் மணம் மூளையையும் இதயத்தையும் சுறுசுறுப்பாக்க, தன்முன் வைக்கப்பட்டிருந்த கோப்பையை புரியாமல் பார்த்தவனின் எதிரில் அமர்ந்தவனிடம்

“சார்…. நீங்க?” என்று இன்பன் வினவ

“உங்களுக்கு பிடிக்காத காஃபியை ஆடர் பண்ணிட்டாரு போல?”

“எனக்கு காஃபி பிடிக்காதுன்னு உங்களுக்கு எப்படி தெரியும்?”

“உங்க ஆஃபிஸ் பிரேக்கப்போ உங்க ஃபிரண்ட்ஸ் எல்லாரும் காஃபி குடிச்சாலும் எப்பயுமே தவறாம டீ மட்டும் ஆடர் பண்ணி நம்ம கடையில நீங்க குடிக்கிறதை நான் பார்த்திருக்கேன்….”

“கஸ்ட்டமர் பத்தி நல்லா தெரிஞ்சு வச்சிருக்கீங்க….”

“அதுனால தான பல வருஷமா இந்த கடை ஓடுது…. கேக்குறேன்னு தப்பா எடுத்துக்காதீங்க இப்போ ஒருத்தர் போனாரே, அவருக்கும் உங்களுக்கும் ஏதாவது பிராப்ளமா?”

“பிராப்ளமெல்லாம் ஒன்னுமில்ல சார்…. நான் ஒன்னு நினைச்சு வந்தேன் ஆனா வேற ஒன்னு நடந்துடுச்சு…. இது என் வாழ்க்கையில வழக்கமா நடக்குறது தான்….”

“அதுசரி, நாம நினைச்சதெல்லாமே நடந்துடுச்சுன்னா வாழ்க்கையில ஒரு பிணைப்பே இருக்காது சார்…. இப்போ நீங்க ஒரு பிளான் பண்ணலாம், அதேமாதிரி நான் ஒரு பிளான் பண்ணலாம் ஆனா காட்’ஸ் பிளான்னு ஒன்னு இருக்கு…. அந்த பிளான் தான் எப்பவும் வர்க்கவுட்டாகும், அதை நம்புங்க எல்லாம் நல்லதாவே நடக்கும்….” என்று கூறி சிரித்தவன் சிறு தலையசைப்புடன் அவ்விடத்தலிருந்து எழுந்து செல்ல

“சார்….” என்று கூறி அழைத்த இன்பனின் குரலை கேட்டு நின்றவன் அவனை என்ன என்பதை போல் பார்க்க

“உங்க நேம்?” என்று வினவிய இன்பனை கண்டு அழகாக புன்னகைத்தவன்

“விஜய சிவமாறன்….” என்று கூறிவிட்டு அவ்விடத்திலிருந்து சென்றிருந்தான் அவன்.

 

ஒளி வீசும்….

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!