Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

மூங்கிலுக்குள் வார்த்தை இல்லை

மூங்கிலுக்குள் வார்த்தை இல்லை -16

கையை ஓங்கிக்கொண்டு தன்னை நோக்கி வந்த கணவனைக் கண்டு பயந்து சுவரோடு ஒன்றிக்கொண்டு விழிகளை இறுக மூடிய செவ்வந்தி “கோவிலுக்குத்தாங்க போனேன் மயக்கம் வந்திடுச்சு அதான் ஹாஸ்பிடல் போனேன் மாசமா இருக்கேன் சொன்னாங்க” என்று படபடவென்று கொட்டினாள்.

 

 



Advertisement

உயர்ந்த கைகள் அபப்டியே அந்தரத்தில் நின்றுவிட்டது யோககுமாரனுக்கு மெலிதாக நடுக்கம் கூட அவன் கைகளில், தன்னை இன்னும் அவன் அடிக்கவில்லை என்ற உணர்வே சில நொடிகளுக்குப் பிறகே வந்தது அவளுக்கு.

 

Advertisement

 

Advertisement

மெல்ல விழிகளை அவள் திறந்து பார்க்க “என்ன சொன்ன” என்றான் குரலே எழும்பாமல், அந்தக் குரலே புதிது அவளுக்கு.

 

Advertisement

 

“மாசமா இருக்கேன்னு சொன்னாங்க” என்றாள் இன்னும் கொஞ்சம் சுவரோடு ஒட்டிக்கொண்டு, திரும்பித் தாயை முறைத்து பார்த்தான்.

 

 

“அவ தங்கச்சி கூட ஊர் சுத்திட்டு ஆடி அசஞ்சு மதியத்துக்கு மேல தான் வந்தானு சொன்னீங்க எங்க போனா என்ன விஷயம்னு கேட்டீங்களா, இவ்ளோ நேரம் ஆச்சே ஏதாவது சாப்பிட்டாளா” என்றான் அதே கோபத்தோடு.

 

 

“என்னடா என்கிட்டே அதிகாரம் பண்ற உன் பொண்டாட்டிக்கு சேவகம் செய்யத்தான் நான் இருக்கேனா,  வந்து இவ்ளோ நேரம் ஆச்சே கொழுப்பெடுத்தவ என்கிட்டே சொன்னாளா இந்த விஷயத்தை அவ்ளோ திமிர் ஆகிப்போச்சு” என்றார் ராக்காயி.

 

 

அவரைச் சட்டை செய்யாதவன் “சாப்பிட்டியா” என்றான் அவளிடம்.

 

 

“இல்லை” என்றவள் தலை அசைக்க.

 

 

“சாப்பிட்டு வா” என்று அறைக்குள் சென்றான், அவளால் நம்பவே முடியவில்லை தன் கணவனா இது தன்னிடமா இப்படி பேசினான்.

 

 

கையைக் கிள்ளி பார்த்துக்கொண்டாள் வலித்தது உண்மைதான் என்று சொல்லிக்கொண்டவள் கொஞ்சமாகச் சாதம் போட்டு மோர் ஊற்றி உண்டுவிட்டு கணவனுக்குத் தேநீர் போட்டு எடுத்துக்கொண்டு அறைக்குள் சென்றாள்.

 

 

கறிவிருந்துக்கு மறுநாளே அக்காவிற்கும் அம்மாவிற்கும் தன்னுடைய புது எண்ணிலிருந்து அழைத்துப் பேசிவிட்டாள் கனகம்.

 

 

“நான் வந்து பாக்கவா மாப்பிளைக்கு ஒன்னும் கோவமில்லையே” என்றார் செல்லியம்மா.

 

 

“என்னம்மா நீங்க நேத்து உங்ககிட்ட கோவமாவா பேசினாரு அதெல்லாம் ஒண்ணுமில்ல பொண்ணு வீட்டுக்கு வரதுக்கு கேட்டுட்டு இருப்பியா வாம்மா” என்றவள் “அம்மா வரும்போது மீன் கொழம்பு வெச்சு கொண்டுவரியா” என்க மனம் உருகிவிட்டது செல்லியம்மாவுக்கு.

 

 

“கொண்டு வரேன் வேற என்ன வேணும்” என்று ஆசையாகப் பேசினார், மறுநாளே செவ்வந்தியை போய்ப் பார்த்து அவளுக்கும் மீன் குழம்பு கொடுத்துவிட்டு மளிகை பொருட்களும் கொடுத்துவிட்டு மதியம் போலச் சின்ன மகளின் வீட்டிற்கு வந்துவிட்டார்.

 

 

சுட சுட சாதம் வைத்து மீன் குழம்பை ஊற்றி உஸ் உஸ் என்று ஊதி ஊதி சாப்பிடும் மகளைப் பார்க்கச் சிரிப்பு வந்தது.

 

 

“நீயும் சாப்பிடுமா” என்றாள்.

 

 

“வேண்டாம் அப்பாவுக்குக் குடுத்துட்டு சாப்பிட்டுப்பேன்” என்றவர் இவளுக்கும் பொருட்களைக் கொடுத்துவிட்டு சென்றார்.

 

 

இரவு கணவனுக்குக் கொடுக்கக் குழம்பை சூடு செய்து எடுத்துவைத்துக்கொண்டாள்,  தினமும் காலை அம்மாவிற்கு அழைத்துவிடுவாள் மதியம் போலத் தந்தைக்கும், செவ்வந்தி அவளாகவே அழைப்பாள்.

 

 

வியாழன் அன்று செவ்வந்தி கேட்டிருந்தாள் “கனகம் நாளைக்கு வெள்ளிக்கிழமை கோவிலுக்குப் போகலாமா” என்று.

 

 

“போலாம்க்கா அங்க விடுவாங்களா” என்றாள் கனகம் சந்தேகமாக.

 

 

“தெரில… கேக்குறேன்” என்றாள் செவ்வந்தி.

 

 

சந்தேகம்தான் என்றாலும் காலை உணவருத வந்த கணவனிடம் “அங்க வீட்டில இருக்கும்போது செவ்வாய் வெள்ளி கோவிலுக்குப் போவேன் இங்கயும் போகட்டுமா” என்றாள் எதிர்பார்ப்போடு மனம் அடித்துக்கொண்டது அவன் சம்மதம் கொடுத்துவிட வேண்டுமென்று.

 

 

நான் வெளியில் செல்ல இவன் என்ன அனுமதி தருவது என்றெல்லாம் யோசிக்க முடியவில்லை, அப்படிப்பட்ட சூழலில் அவள் வளர்க்கப்படவுமில்லை கணவனின் அனுமதியின்றி இந்தப் படியை அவள் தாண்டிவிட முடியாது.

 

 

அப்படி சென்றால் மீண்டும் இதற்குள் அனுமதிக்க படுவாளா? அவள் பெற்றோர் தான் விட்டுவிடுவார்களா புருஷனுக்கு தெரியாம எதுக்கு வெளில போன என்று தாளித்து கொட்டிவிட மாட்டார்களா.

 

 

அவளை யோசனையாக அவன் பார்க்க “கோவிலுக்குப் போறியா இல்ல உன் தங்கச்சிய பாக்க போறியா” என்றார் ராக்காயி.

 

 

பதறியவள் “இல்லத்தைக் கோவிலுக்குத்தான் போறேன் கனகம் வீடு கூட எனக்குத் தெரியாதே அத்த” என்றாள் உடனே, அலைபேசி அழைப்புகூட இங்கு வீட்டில் யாருக்கும் தெரியாமலே.

 

 

“போனோமா வந்தோமான்னு இருக்கணும் எங்கயாவது போனேன்னு தெரிஞ்சுது அப்புறம் நடக்கிறதே வேற” என்றான் அவன்.

 

 

“சரிங்க” என்றாள் சந்தோஷத்தை மறைத்து, வேலையெல்லாம் காலைலே முடிந்துவிட்டதே மாமியாரிடம் சொல்லிக்கொண்டு புறப்பட்டுவிட்டாள்.

 

 

 

செவ்வந்தியை பார்த்த கனகம் ஓடி வந்து கட்டிக்கொண்டாள் “அடேயப்பா தனியா வந்துட்ட பெரிய சாதனைதான் போ” என்றாள் அக்காவின் கன்னம் கிள்ளி.

 

 

“போடி கிண்டல் பண்ணாத படபடன்னு வந்துச்சு இங்க வரதுக்குள்ள” என்றாள் அவள்.

 

 

“கிண்டல் பன்னலக்கா நிஜமாவே… நீ தைரியமா வீட்டில கேட்டுத் தனியா வந்திருக்க எனக்கு அவ்ளோ சந்தோஷமா இருக்கு” என்றாள் உளமார, அப்படியே சாமி தொழுது பிரகாரம் சுற்றி அரட்டை அடித்து எழுந்துகொண்டனர்.

 

 

 

“லேட் ஆச்சுன்னா அவ்ளோதான் அப்புறம் அடுத்த வாரம் அனுப்ப மாட்டாங்க” என்றவள் தன் கையில் இருந்த வயர்கூடையிலிருந்து கத்திரிக்காய் தொக்கு எடுத்துத் தங்கையிடம் கொடுத்தாள்.

 

 

“இன்னைக்கு தொக்கு செஞ்சேன் உனக்குப் பிடிக்குமே, தம்பிக்கும் குடு செவ்வாக்கிழமை பாக்கலாம்” என்றுவிட்டு வேக வேகமாக நடந்தாள், இத்தனை தூரம் அவள் வந்ததே பெரிது என்று சிரிப்போடு கனகமும் வீட்டிற்கு சென்றாள்.

 

 

அதன் பிறகு வந்த செவ்வாய் வெள்ளி இரண்டு நாளும் அக்காளும் தங்கையும் கோவிலில் சந்தித்துக்கொண்டிருந்தனர், திங்கள் மாலை செவ்வந்தியை அழைத்தாள் கனகம், அப்படியெல்லாம் அழைக்கமாட்டாள் செவ்வந்தியாகத்தான் அவளை அழைப்பது.

 

 

 

கனகத்தின் பக்கம் பிரச்னையில்லை உடன் இருப்பவன் ராஜாவாயிற்றே, ஆனால் அந்தப் பக்கம் கனகம் அழைக்குமோது வேறு யாரேனும் பார்த்துவிட்டால் கூடப் பிரச்சனை தானே, இன்று தங்கையே அழைத்திருக்க அவசரமாக அலைபேசியை எடுத்தவள் சுற்றிலும் பார்வையை ஓட்டினாள்.

 

 

ஒருவரும் இல்லை “என்ன புள்ள” என்றாள் மெதுவாக.

 

 

“அக்கா நாளைக்கு கோவில் வர முடியாது வீட்டுக்குத் தூரம் அதைச் சொல்லத்தான் கூப்பிட்டேன் நீ அப்பறம் கூப்பிடு” என்று உடனே வைத்துவிட்டாள் கனகம் அதை இவளும் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.

 

 

மறுநாள்  செவ்வந்தி மட்டும் கோவிலுக்குச் சென்றாள் சாமி கும்பிட்டு ஒரு ஓரமாக அமர்ந்திருந்தவள் தங்கைக்கு அழைத்தாள், அந்தப்பக்கம் எடுத்த கனகம் “அக்கா எனக்கு முன்னாடியே உனக்கு நாள் வந்துருமே உனக்கு முடிஞ்சிருச்சா” என்க.

 

 

 

அப்பொழுதுதான் செவ்வந்திக்கு அந்த நினைவே வந்தது “இல்லையே கனகம்” என்றாள் அவள் மெல்ல.

 

 

“ஏன்க்கா ஒருவேளை அதுவா இருக்குமா” என்றாள் கனகம், சட்டென்று ஒரு பதட்டம் செவ்வந்தியிடம்.

 

 

“இருக்குமாடி பத்துநாளுக்கு மேல ஆயிடுச்சு” என்றாள்.

 

 

“எங்கேயிருக்க” என்றாள் கனகம்.

 

 

“இங்கதான் கோவில்ல”.

 

 

“சரி அங்கேயே இரு பத்து நிமிஷத்துல நான் வரேன் வந்துட்டு போனை போடுறேன் நீ வெளில வா” என்றவள் அவசரமாகக் கிளம்பி ஓட்டமும் நடையுமாக அங்கு வந்து சேர்ந்தாள்.

 

 

தங்கையின் அழைப்பு வந்ததும் செவ்வந்தி கோவிலிலிருந்து வெளியில் வந்தாள் “டாக்டர் கிட்ட போலாமா” என்றாள் கனகம்.

 

 

“இப்போவா! இன்னைக்கு முடியாதே நேரமாச்சுன்னா அத்த என்னை ஒரு வழி பண்ணிடுவாங்க” என்றாள்.

 

 

 

“சரி ரெண்டுநாள் தானே வெள்ளிக்கிழமை ஏதாவது பூஜைன்னு சொல்லிட்டு வாப்போலாம்” என்றாள் கனகம்.

 

 

“பயமா இருக்கு கனகம்” என்றாள் மூத்தவள் இளையவள் கையைப் பிடித்துக்கொண்டு.

 

 

“நல்ல விஷயமாத்தான் இருக்கும் இல்லனாலும் பாத்துக்கலாம் ஒருமாசம் தானே ஆகுது” என்று நம்பிக்கை சொல்லி அனுப்பினாள், யாரிடமும் சொல்லிக்கொள்ளவில்லை,  என்ன என்று முதலில் தெரிந்துகொள்ளலாம் பிறகு சொல்லிக்கொள்ளலாம் என்று முடிவு செய்திருந்தனர்.

 

 

இப்படியொரு சந்தேகம் என்று சொல்லி அப்படி இல்லை என்று ஆகிவிட்டால் அது போதும் ராக்காயிக்கு அவரின் வாய்க்குப் பயந்தே அமைதியாக இருந்துவிட்டாள் செவ்வந்தியும்.

 

 

வெள்ளிக்கிழமை தந்திபோலச் சுருக்கமாகக் கடவுளுக்கு வணக்கம் வைத்துவிட்டு இருவரும் மருத்துவமனை சென்றனர் கொஞ்சம் கூட்டம் இருக்கவே செய்தது நேரம் ஆக ஆகச் செவ்வந்திக்கு பயம் கூடியது.

 

 

“கனகம் வீட்டுக்குப் போய்டலாம் அவர்கிட்டவே சொல்லி அப்புறமா வந்து பாத்துக்குறேன்” என்றாள்.

 

 

“யாரு? மாமாவா? அவர் நீ சொல்றதை காது குடுத்தாவது கேப்பாரா உன்கிட்ட ஒரு நேரமாவது அனுசரணையா பேசியிருக்காரா சாப்பிட்டியான்னு ஒரு வாட்டியாவது கேட்டிருக்காரா” என்றாள் அற்றமாட்டாமல்.

 

 

அவளுக்கு வேறொரு பயமும் இருந்தது மனைவியை வெறும் சதை பிண்டமாகத் தானே பார்க்கிறான் பிள்ளை வந்துவிட்டது என்று தெரிந்தால் தன்னுடைய சந்தோஷத்திற்கு அது தடை என்று எண்ணி அதை அழிக்கச் சொல்லிவிடுவானோ, அக்காவைக் கொடுமை படுத்துவானோ என்றெல்லாம் அவள் சிந்தனை தறி கெட்டு ஓடியது.

 

 

தாய்மை அடைந்திருக்கிறாள் செவ்வந்தி என்று மருத்துவர் உறுதி செய்துவிட்டார், சந்தோஷத்தைவிட ஒரு விதமான அலைப்புறுதல் பெண்கள் இருவரிடமும்.

 

 

தாமதமாகிவிட்டதே என்ற பயம் ஒருபுறம், தன் கணவனுக்குக் குழந்தை என்றால் பிடித்தமா இல்லையா என்ற பயம் ஒருபுறம் என்று தடுமாறினாள் செவ்வந்தி.

 

 

அவளுக்குக் குடிக்க ஜூஸ் வாங்கிக்குடுத்த கனகம் “ஆட்டோலேயே போய்டலாம்க்கா” என்றாள் இவள் ஒன்றுமே சொல்லும் நிலையில் இல்லை.

 

 

“அம்மாகிட்ட சொல்லட்டுமா” என்றாள் கனகம், அவள் கைகளைப் பிடித்துக்கொண்ட செவ்வந்தி “பயமா இருக்கு புள்ள கூட வரியா” என்றாள் கனகத்திற்கு கண்கள் கலங்கிவிட்டது.

 

 

“எதுக்கு இப்படி கெஞ்சுற வாடின்னா வரப்போறேன்” என்றவள் “அண்ணே பாத்து மெல்லமா போங்க” என்றுவிட்டு அக்காவை அணைவாகப் பிடித்துக்கொண்டாள்.

 

 

வீட்டின் வாயிலில் ஆட்டோ வந்து நிற்கத் திண்ணையில் அமர்ந்திருந்த கனகசபை யார் என்று பார்த்தார், சத்தம் கேட்டு உள்ளிலிருந்த வந்த ராக்காயியும் பார்க்க முதலில் இறங்கினாள் கனகம் ராக்காயின் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தது.

 

 

அவள் பின்னையே இறங்கிய செவ்வந்தியை பார்த்தவர் “எங்கடி போயிருந்த அப்போவே நினச்சேன் கோவிலுக்குக் கோவிலுக்குனு சொல்லிட்டு உன் தொங்கச்சி கூட ஊர் மேயத்தான் போயிருப்பேன்னு, இன்னைக்கு உன் திமிரை அடக்குறேன் வரட்டும் என் புள்ள அவன் வரவரைக்கும் வீட்டுக்குள்ள போகக் கூடாது நீ வெளிலயே நில்லு” என்க.

 

 

சுறுசுறுவென்று வந்தது கனகத்திற்கு “என்ன விஷயமனே தெரியாம எதுக்கு இப்படி பேசுறீங்க, ஊர் மேயப் போனியான்னு கேக்குறீங்க என் அக்கா என் கூடத்தானே வந்துச்சு உங்க வீட்டுக்குக் கட்டிக்கிட்டு வாரத்துக்கு முன்னாடில இருந்தே நாங்க அக்கா தங்கச்சிதான் இங்க வந்துட்டா எங்க உறவும் மாறிடுமா வெளிலயே நிக்க வெப்பீங்களா”.

 

 

“அக்காவுக்கு உடம்பு  சரியில்ல, கோவில்ல முடியாம உக்காந்திருந்துச்சு… என் கூடப் பொறப்பு அப்படிலாம் பாத்துட்டு எனக்கென்னன்னு போக முடியாது அதான் டாக்டர்கிட்ட காட்டிட்டு வரேன், நீங்க இப்படி செஞ்சு அதுக்கு மறுபடியும் ஏதாவது ஆச்சு அப்புறம் நான் சும்மா இருக்கமாட்டேன்”.

 

 

“அதுக்கு என்னவானாலும் நீங்கதான் பொறுப்பு எங்களுக்கும் மனுஷங்க இருக்காங்க கேக்க,  எதுக்கு வெளில இருந்து ஆளு என் புருஷனையே கூட்டிட்டு வரேன் என் அம்மா அப்பாவையும் வரசொல்லுறேன் எங்களுக்காக அவங்க பேசலனா இனிமே அந்த உறவும் வேண்டாம்னு சொல்லிடுவேன்”.

 

 

“எங்களைவிட நீங்கதான் முக்கியம்னா உங்ககூட மட்டும் உறவை அவங்க வெச்சுக்கட்டும்  இன்னைக்கு ரெண்டுல ஒண்ணு தெரியணும்”  என்று படப் படப் பட்டாசாய் பொரிந்தாள் உள்ளுக்குள் கொஞ்சம் உதறல்தான் என்றாலும் ஏற்கனவே பயந்திருக்கும் அக்காவிற்கு இப்படித்தான் தைரியம் கொடுக்க முடியும் என்று பேசிவிட்டாள்.

 

 

“நீ உள்ள போக்கா மாமா வரட்டும், நீ சொல்லு அப்புறம் பேசிக்கலாம் நான் இருக்கேன்” என்றவள் ஆட்டோவுக்குப் பணத்தை கொடுத்துவிட்டு அவள் வீட்டிற்கு சென்றாள்.

 

 

அவள் வீட்டிற்கு சென்றதும் மருமகளை முறைத்து பார்த்தார் ராக்காயி, சின்ன மருமகள் பேசியதை பொறுத்துக்கொள்ளவே முடியவில்லை என்னவெல்லாம் பேசிவிட்டாள்.

 

 

“எல்லாம் இவன் குடுக்குற எடம் பொண்டாட்டிகிட்ட மயங்கிக் கிடக்கிறான் அறிவுகெட்டவன்,  பெரியவன் வரட்டும் இவ உடம்புக்கு என்ன கேடுன்னு இன்னைக்கு தெரிஞ்சுக்கிறேன் என்கிட்டே கூடச் சொல்லாம அவகூட கூட்டு சேந்துக்கிட்டு ஆட்டிகிட்டு போயிருக்கா” என்று வாய்விட்டே கரித்துக்கொட்டிக்கொண்டிருந்தார்.

 

 

அவள் பேசிச் சென்றதில் கொஞ்சம் பயமும் வந்தது, ஏதேனும் பெரிதாக இருக்குமோ உடல்நிலை மோசமானால் அனைவருக்கும் பதில் சொல்லவேண்டி வருமோ என்ற எண்ணமும் எழ எதுவானாலும் மகனை முன்னிருத்திவிடலாம் என்று யோககுமாரன் வரக் காத்திருந்தார்.

 

 

வீட்டிற்கு சென்ற கனகத்திற்கு மனமே சரியில்லை அங்கேயே இருந்திருக்க வேண்டுமோ தான் பேசியத்திற்கு அக்காவைத் திரட்டுவாரோ என்று கலங்கி நின்றாள்,  ராஜகுமாரன் வந்தபோது வீடே இருளில் மூழ்கிக் கிடந்தது.

 

 

“கனகம்” என்றான் பதட்டத்தோடு அவசரமாக லைட்டை போட்டுவிட்டவன் பார்க்கச் சுவரில் சாய்ந்து அமர்ந்திருந்தவள் கணவனைப் பார்த்து விழித்தாள்.

 

 

“என்னடி என்னாச்சு” என்றான் அவளை நெருங்கி, சட்டென்று அவனை அணைத்துக்கொண்டாள்.

 

 

“கனகம் என்ன” என்றான் கலக்கமாக, அவனை இன்னும் இறுக்கமாக அனைத்துக்கொண்டவள் “அக்கா மாசமா இருக்கு” என்க.

 

 

ஒருநொடி அவள் சொன்ன செய்தியை உள்வாங்கியவன் “ஏய் என்னடி அத ஏண்டி இப்படி சொல்ற” என்றான் அவள் முகம் நிமிர்த்தி, அவன் முகத்தில் அத்தனை சந்தோசம், மெதுவாக நடந்த அனைத்தையும் அவள் சொல்லி முடித்தாள்.

 

 

“வா” என்றவன் அவளை இழுத்துக்கொண்டு வெளியில் விட்டு வீட்டைப் பூட்டி விட்டு வந்து வண்டியை எடுத்தான், சரியாக அவனுக்கு அழைப்பு வரத் தள்ளி நின்று பேசினான் முகம் கடுமையானது.

 

 

“எங்கேங்க” என்றாள் அவள்.

 

 

“ஏறு” என்றான் அவளும் ஏறிக்கொள்ள நேரே தன் வீட்டிற்கு சென்றான் அங்குச் சென்று ஹாரனை ஒலிக்க விட்டான், இடைவிடாத சத்தம் கேட்டு அக்கம் அக்கம் கூட ஆட்கள் வந்துவிட்டனர் வீட்டினரும் அடித்துபிடித்து  வெளியில்  வரச் சாவதானமாக வீட்டின் திண்ணைவரை சென்றவன்.

 

 

“என் பொண்டாட்டிகூட அண்ணி வெளில போனதுக்கு என்னமோ சொன்னீங்களாமே” என்றான் தாயை பார்த்து அவர் அவனை முறைக்க.

 

 

பின்னில் நின்ற யோகனை பார்த்தவன் “எனக்கு அண்ணனாகப் பட்டவரே சண்டை போட்டுத் தனிக்குடித்தனம் தான் போயிருக்கேன் மொத்தமா போகல, உனக்கும் அப்படித்தானா என் உறவை மொத்தமா வேண்டாம்னு முடிவு பண்ணிட்டியா”.

 

 

“எல்லாத்தயும் முடிச்சிக்கலாமா, இனிமே நீங்க யாரோ நான் யாரோ அப்படிதானே… சரி அப்போ இன்னைக்கே பேசி ஒரு முடிவுக்கு வந்திடலாம்” என்க.

 

 

“ராஜா என்னையா” என்றார் கனகசபை.

 

 

“அப்புறம்… எங்களுக்குள்ள பிரிவு வரக் கூடாது ஒத்துமையா இருக்கணும்னுதான் அக்கா தங்கச்சிய கட்டினது,  இங்க எல்லாமே எதிரா இல்ல நடக்குது இங்க பிரச்சனை எனக்கும் அம்மாவுக்கும் என் பொண்டாட்டிக்கும் தான் வேற யாரும் இதுல மூக்கை நுழைக்க வேண்டாம்”  என்றவன்.

 

 

“உன்னைத்தான் கேக்குறேன் சொல்லு, என்ன? உறவை முறிச்சுக்கலாமா? என்றான் அண்ணனைக் கூர்மையாகப் பார்த்துக்கொண்டே.

 

 

“அப்படிலாம் இங்க யாரும் பேசல” என்றான் யோகன்.

 

 

“என் முகத்தைப் பாத்து சொல்லு கனகம் கூடப் போனதுக்கு நீ அண்ணிய திட்டல” என்க.

 

 

இவனுக்கு எப்படி தெரிந்தது என்று அவன் மனைவியைப் பார்க்க “நான் சொல்லல” என்றாள் அவள்.

 

 

“நான்தாண்டா சொன்னேன் இங்க நடக்குற எல்லாத்தயும் அவனுக்கு இனிமே நான் சொல்லுவேன்” என்றார் கனகசபை, ராக்காயி அவரைத் தீயாய் முறைக்க.

 

 

“நீ மொறச்சாலும் நான் இதைச் செய்வேன் ராக்காயி, பிள்ளைங்க ஒத்துமையா வாழ்ந்திட்டு போகட்டும் நாம தள்ளி நின்னுக்கலாம்” என்றார்.

 

 

ராஜா மீண்டும் அண்ணனைப் பார்க்க “அது… அது… அம்மா சொன்னதும் சட்டுனு…” என்று இழுத்து நிறுத்தினான்.

 

 

“நல்லா யோசிச்சுக்கோ கனகமும் அண்ணியும் பேசிப்பாங்க சந்திச்சுப்பாங்க வெளில போவாங்க, அவங்க வீட்டுக்குச் சேந்து போவாங்க வருவாங்க உனக்குப் பிடிக்கல உன் அம்மாவுக்குப் பிடிக்கலைன்னா கண்ணை மூடிக்கோங்க”.

 

 

“அவங்கள பேசக் கூடாது பாக்கக்கூடாதுன்னு சொல்ல நமக்கு யாருக்குமே உரிமை இல்லை,  இனிமே இன்னொருதடவ இப்படி நடந்துச்சு மொத்தமா வெட்டிக்க வேண்டியதுதான் சொத்தைப் பிரிச்சு குடுங்கன்னு வாங்கிப்பேன், என் காசு பைசா மிச்சம் இல்லாம கணக்கு பண்ணி வாங்கிப்பேன் அப்பறம் எல்லாத்தயும் நீங்களேதான் பாத்துக்கணும் எதுக்கும் நான் வரமாட்டேன்”.

 

 

“இங்கேயிருந்து ஒரு பொண்ணு வாழப் போயிருக்கு அதையும் மனசுல வெச்சுக்கோங்க” என்றான் ராக்காயிக்கு கண்ணைக் கட்டியது.

 

 

பின்னே சும்மாவா யோகனுக்கு அரசாங்க வேலை என்றாலும் யாரிடமும் பணிந்து போகமாட்டான் ஆகையால் சம்பளம் மட்டுமே கிம்பளம் ஒன்றுமில்லை, அவன் சேமிப்பு போக ஒரு சிறு தொகை வீட்டிற்கு.

 

 

ராஜா கம்பெனி வேலையோடு வண்டி வாங்கி விற்கும் வேலையும் செய்கிறான் வெளியில், நல்ல வருமானம் வீட்டிற்கு தாராளமாகச் செலவு செய்வான் சேமிப்பும் உண்டு, இடம் வாங்கி போட்டிருக்கிறான் தாயின் பெயரில்.

 

 

ராஜலட்சுமிக்கு போட்ட பாதி நகை அவன் காசு, திருமணத்தின் பெரும் பங்குத் தொகை அவனுடையது இதுவரை கணக்கு கேட்டதில்லை எதற்கும், அதுமட்டுமா மருமகனை  மலையிருக்க புதிய நகைகள் வாங்கவேண்டுமென்றால் யோகனால் மட்டும் முடியாதே சின்னமகனை நம்பித்தானே இருக்கிறார்.

 

 

நாளைத் தங்களுக்கு ஒன்றென்றால் மூத்த மகனைவிட இளயமகன்தான் முன் நிற்பான் என்பதும் தெரியும் என்றாலும் வீம்பு, இப்பொழுது அவன் பேச்சில் அரண்டவர் அமைதியாகச் சென்று அமர்ந்துவிட்டார்.

 

 

“வாழ்த்துக்கள் அண்ணி, இவனை மாதிரி இல்லாம சிரிச்சுகிட்டே இருக்குற மாதிரி ஒரு புள்ளய பெத்துக்குடுங்க” என்க அவள் சிறு புன்னகையோடு தலை குனிந்தாள்.

 

 

யோகன் தம்பியை முறைக்க “இப்போவாது சிரி” என்றவன் அவன் கையைப் பிடித்துக் குலுக்கி “வாழ்த்துக்கள்” என்றான்.

 

 

“தேங்க்ஸ்” என்றான் அவன்.

 

 

“இத நீ சொல்லாமலே இருந்திருக்கலாம்” என்றவன் “என்னப்பா சம்மந்திக்கு நீங்கதானே சொல்லணும் போனை போட்டுச் சொல்லுங்க எல்லாத்துக்கும் வாயிதான் செயல் ஒண்ணுமில்ல” என்றவன்.

 

 

“இவங்களுக்கு பஞ்சாயத்து பண்ணியே என் ஆயுசு முடிஞ்சிடும் போல” என்று புலம்பிக்கொண்டே “சொல்லிட்டு வா” என்றான் மனைவியிடம்.

 

 

அக்காவின் கையைக் கனகம் பிடித்துக்கொள்ள சந்தோஷத்தில் செவ்வந்தியின் விழிகள் நிறைந்தது, அவள் பிடியின் அழுத்தமே இப்பொழுது அவள் தெம்பாக இருப்பதை கூறியது.

 

 

“சந்தோஷமா இரு அப்பறம் வரேன்” என்றவள் கணவனுடன் வீட்டிற்கு சென்றாள் நிறைந்த மனதோடு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!