Skip to content
Post Views: 6,414
வீட்டிற்கு வந்தவுடன் நேரே அடுப்படிக்கு சென்றாள் கனகம் வேலை முடிந்து வந்தவனுக்கு ஒரு வாய் தண்ணீர் கூடக் கொடுக்கவில்லையே அவசரமாகத் தேநீர் தயாரித்து கொடுக்க வெளியிலே அமர்ந்திருந்தவன் அதைக் குடித்து முடித்தான்.
Advertisement
“குளிச்சுட்டு வரேன் சாப்பாடு வாங்கிக்கலாம் எதுவும் சமைச்சிருக்க மாட்ட” என்றான்.
Advertisement
Advertisement
அவள் தயங்கி நிற்க “பரவாயில்லை விடு, குளிச்சுட்டு போய் வாங்கிட்டுவரேன்” என்றான்.
Advertisement
“கேழ்வரகு நாட்டுச்சக்கரை போட்டு அடை சுட்டு தரவா” என்றாள் வேகமாக.
“இப்போ செய்யணும்ல வேண்டாம் நானே போறேன்” என்க.
“அதெல்லாம் ஒண்ணுமில்ல ரெண்டு நிமிஷ வேலை நீங்கக் குளிங்க” என்றவள் உள்ளே சென்றுவிட்டாள், இருவரும் உண்டுமுடிக்க அனைத்தையும் ஒழுங்குபடுத்தியவள் வெளியில் வந்தாள்.
வீட்டிற்கு வெளியே அப்படியே நடந்துகொண்டிருந்தான் ராஜகுமாரன் அவளும் வந்து நின்றுகொண்டாள் கால் மணி நேரம் சென்று “தூங்கலாமா” என்றான் அவளிடம்.
“ஹ்ம்ம்” என்றவள் உள்ளே சென்று பாயை விரித்தாள், அவன் கதவுகளை அடைத்துவிட்டு உள்ளே வந்தான், அவளானால் அங்கே இங்கே நடந்துகொண்டிருந்தாள் துணியை மடித்தாள் மீண்டும் அறைக்குள் சென்றாள் சில நொடிகள் பார்த்தவன் அவளைப் பிடித்து இழுத்து தன் கைவளைவில் நிறுத்தினான்.
“என்ன பண்ற” என்றான் குறுஞ்சிரிப்போடு.
“இல்ல… வேலை இருக்கு” என்றாள் அவனை நிமிர்ந்து பார்க்காமல்.
“ஆமா ஆமா இப்போ செய்யலைன்னா ஆகாசம் இடிச்சு விழுந்திடும்” என்றவன் “ஒய் என்னைப்பாரு” என்க.
அவள் மெல்ல விழிகள் உயர்த்தி அவனைப் பார்த்தாள் “இப்போ சொல்லு என்ன கேக்கணும் என்கிட்டே” என்றான்.
“இல்லை” என்பதாக அவள் சிரம் ஆட “சரி நீ சொல்ற வரைக்கும் ரெண்டுபேரும் இப்படியே நிக்கலாம்” என்றான்.
சில நொடிகள் நின்றவள் அதற்குமேல் முடியாமல் “அத்த கிட்ட சபதம் போட்டீங்க அண்ணனுக்கு முன்னாடியே புள்ள பெத்து அவங்க மடில…” என்றவள் சட்டென்று உதடு கடித்து பேச்சை நிறுத்த.
சத்தமாகச் சிரித்தவன் “அடியே கள்ளி புள்ள ஆசை வந்துருச்சா என் சண்டைகோழிக்கு” என்க.
“போங்க” என்று திரும்பி நின்றாள் வெட்கம் சுமந்து அவளைத் தன் பக்கம் திரும்பியவன் “அது நான் சும்மா சொன்னேன் கனகம் ஒரே நேரத்துல கல்யாணம் நடந்திருந்தாலும் எனக்கு மூத்தவன் அவன்”.
“அவன் மனசுல ஏற்கனவே நிறைய காயங்கள், தாழ்வு மனப்பான்மை இருக்கு… ஒரு நாள் ஏதோ ஒரு வேகத்துல ஒளறினான் அவனுக்குக் கல்யாணம் ஆகாது குழந்தை பிறக்காதுன்னு யாரோ கிண்டல் செஞ்சிருக்காங்க அப்படி இருக்கும்போது நமக்கு முதல்ல குழந்தை பிறந்தா இன்னும் இன்னும் ஒடஞ்சு போயிடுவான்”.
“வாழ்க்கை மேல இன்னும் வெறுப்பு வந்திடும் அந்த வெறுப்பு அண்ணி மேல கோபமா மாற வாய்ப்பிருக்கு, இப்போ இருக்குற நிம்மதிகூட இல்லாம போய்டும், இது நான் முன்னாடியே முடிவு செஞ்சதுதான் மொதல்ல அவங்க அப்பா அம்மா ஆகணும் அப்படியே ஏதாவது பிரச்சனைன்னா கூட அதுக்கு வழி கண்டுபிடிச்சுட்டுதான் நமக்குன்னு”.
“என்ன வயசாயிடுச்சு நமக்கு இன்னைக்கு அண்ணியை பாத்தியா எப்போவும் இருக்குற மாதிரி இல்ல, நல்ல ஒரு தெளிச்சம் சந்தோசம் அவங்க முகத்துல யோகனுமே இன்னைக்கு தான் கடுகடுன்னு இல்லாம இருக்கிறான் நீ வேனா பாரு சீக்கிரம் சரி ஆயிடும் எல்லாம்” என்றவன்.
“இப்போவும் ஒன்னும் பிரச்னையில்லை நீ சொல்லு அடுத்த மாசமே உன்னை மாங்காய் சாப்பிட வெக்குறேன்” என்க.
“அச்சோ போங்க ஒன்னும் வேண்டாம்” என்றாள்.
“ஏன் டி நீதானே கேட்ட சொல்லு நாமளும் பெத்துக்கலாமா ராக்காயிக்கு ரெஸ்ட் இல்லாம செஞ்சிடலாம்” என்க.
“வேண்டாம்” என்றாள் அவனைப் பார்த்துக்கொண்டே.
“ஏனாம்” என்றான் மையலாக.
“எனக்கு இன்னும் கொஞ்சம் காலத்துக்கு இந்தக் களவானியை மட்டும் கொஞ்சனும்னு ஆசையா இருக்கு” என்றாள் அவன் மார்பில் முகம் முட்டி ராஜகுமாரனுக்கு புன்னகையோடு வெட்கமும் வந்து சேர்ந்தது.
“பார்றா… ஹ்ம்ம் எப்படி கொஞ்ச போறீங்க” என்றான் அவளை இன்னும் வாகாக அணைத்துக்கொண்டு, அவள் கெஞ்ச கொஞ்ச அவன் மிஞ்ச என்று அந்த இரவு இன்னும் இன்னும் என்று நீண்டது.
செவ்வாய் கிழமை காலை உணவைக் கணவனுக்கு எடுத்து வைத்துக்கொண்டே அவனைப் பார்ப்பதும் தயங்குவதுமாக நின்றாள் செவ்வந்தி.
“என்ன வேணும்” என்றான் யோகன் நிமிராமல்.
“இன்னைக்கு செவ்வாய்… கோவிலுக்கு…” என்றாள் திக்கி திக்கி.
“போகும்போது நான் விடுறேன் வரும்போது உன் தங்கச்சிகிட்ட வீட்ல கொண்டுவந்து விடச்சொல்லு, தனியா வரதாயிருந்தா போக வேண்டாம் எனக்கு நேரம் இருக்கும்போது நானே கூட்டிட்டுப்போறேன்” என்றவன் அவ்வளவுதான் என்பதாக எழுந்துசென்றான்.
‘கொண்டுவந்து விடுவதா அதெல்லாம் சொல்லாமலே அவள் செய்வாள் தான் ஆனால் பாவம் எவ்வளவு தூரம் நடப்பாள்’ என்று யோசனை ஓடியது அதற்குள் அவன் கைக்கழுகி வந்திருந்தான்.
“சீக்கிரம் சாப்பிட்டு மாத்திரை போடு எனக்கு நேரமாவது” என்க அவசரமாக உணவை விழுங்கி அவன் முன் நின்றாள்.
ராக்காயி பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார், தாய்மை அடைந்திருக்கிறாள் என்று தெரிந்தததிலிருந்து அவன் நடவடிக்கை ஒன்றும் சரியில்லை என்பது அவர் எண்ணம்.
மறுநாளே வேறொரு மருத்துவரிடம் அவளை அழைத்துச் சென்று காண்பித்தான் திரும்பி வருகையில் பெரிய பை நிறைய பழங்கள் பாதாம் முந்திரி டேட்ஸ் என்று அள்ளி வந்திருந்தான்.
தினமும் அலுவலகம் செல்லும் முன் அன்று சாப்பிட வேண்டிய பழம் நாலு முந்திரி நாலு டேட்ஸ் பாதாம் அனைத்தயும் எடுத்து அவள் கையில் கொடுத்துவிடுவான் அதை அவன் வருவதற்குள் அவள் சாப்பிட்டிருக்க வேண்டும்.
காபி டீ ஒன்றும் கிடையாது பால் மட்டுமே, உணவையும் சரியாக எடுத்துக்கொள்ள வேண்டும் என்பது கட்டளை, விஷயம் அறிந்து மறுநாள் காலையே பழனிச்சாமியும் செல்லியம்மாவும் வந்துவிட்டனர் அத்தனை சந்தோசம் அவர்களுக்கு.
அவர்கள் வேறு பூப்பழம் இனிப்பு என்று நிறைத்துவிட்டனர், மகளிடம் என்ன வேண்டும் என்று கேட்டுக்கொண்டார் செல்லியம்மா சமைத்து எடுத்துவருவதற்காக.
“தனிகுடித்தனத்துக்கு என் புள்ளய இழுத்துட்டு போனாளே மவராசி என்ன சொல்ற அந்த வீட்டுக்கும் போறீங்கதானே” என்றார் ராக்காயி செல்லியம்மாவிடம்.
“நேரம் கிடைச்சா போறதுதான் சம்மந்தி” என்றார் அவர்.
“என்ன வளர்ப்போ… பெரியவ ஒரு வார்த்தை சொன்னா சரின்னு கேட்டுக்காம வந்தவுடனே பிள்ளையைப் பிரிச்சு கூட்டிட்டு போய்ட்டா, ஏன் அவன் தனியா போலாம்னு சொன்னாலும் பொட்டச்சி இவ சொல்லணும்ல அது தப்பு செய்யவேண்டாம்னு”.
“உங்க மவ காரியமாத்தான் எல்லாம் செஞ்சிருக்கா அடங்காபிடாரி, எவ்ளோ கஷ்டத்திலயும் என் பிள்ளைங்களை பிரிஞ்சு இருந்ததில்லை தோ இப்போ பிரிச்சிட்டாள்ள” என்று கனகத்தை கொத்தி தின்றார்.
கேட்டுக்கொண்டு அமைதியாக நின்றனர் கனகத்தின் பெற்றோர் பேசிவிடுவார்களா… மகள்மேல் தானே தவறு பொறுத்து போயிருக்க வேண்டாமா பிள்ளையைப் பிரிந்தவர் அப்படித்தானே பேசுவார் என்று தவறு செய்தவர்களாகத் தலையைத் தொங்க போட்டு நின்றனர்.
“வீட்டை விட்டு வெளியே போ” என்று தான் சொல்லியதை ராக்காயும் மறந்துவிட்டார் நீங்கள், அப்படி சொன்னதால் தானே மாப்பிளை தனியே போனார் என்று கேட்க இவர்களும் மறந்துவிட்டார்கள் இல்லை இல்லை மறந்ததாகக் காட்டிக்கொண்டார்கள்
“அம்மா அவளைக் கோவில்ல விட்டுட்டு நான் ஆஃபீஸ் போறேன்” என்றவன் வண்டியை எடுக்க “போய்ட்டுவாரேன் அத்த” என்றவள் அவனுடன் புறப்பட்டுவிட்டாள்.
புடவை மாற்றச் சென்றபோதே தங்கைக்கு அழைத்துச் சுருக்கமாகச் சொல்லிவிட்டாள் “உடனே கோவிலுக்கு வா” என்று.
“என்னைக் கோவில்ல விட்டுறீங்களா, மாமா அக்காவை வண்டில கொண்டு வந்து விடுறாராம்” என்றாள் கனகம்.
“அடிதூள் அந்தக் கண்கொள்ளா காட்சியைப் பாக்கணுமே சீக்கிரம் வா” என்றவன் அவனும் வேகமாகக் கிளம்பினான், இவர்கள் அங்குச் சென்று சேர யோகன் செவந்தியிடம் அறிவுரை வழங்கிக்கொண்டிருந்தான்.
“அட அட அட இங்க என்னப்பா பண்ற நீ” என்று ஆச்சர்யமாகத் தாடையில் கை வைத்தான் ராஜகுமாரன் பெண்களைப் போல, வந்த சிரிப்பை இரு பெண்களும் அடக்கி நிற்கத் தம்பியை முறைத்தவன்.
“நீ எதுக்குடா வந்த” என்றான் யோகன்.
“நான் என் ஆசை பொண்டாட்டியை கோவில்ல விட வந்தேன்” என்க அவர்கள் மூவரையும் ஒருமுறை பார்த்தவன் “நானும் அதுக்குதான் வந்தேன்” என்று வேகமாக வண்டியைக் கிளப்பி செல்ல.
“டேய் அதுக்குனா எதுக்குன்னு சொல்லிட்டு போடா” என்று கத்தினான் தம்பி, பெண்கள் இருவரும் சிரிப்பை அடக்கிக்கொண்டனர்.
“என்ன அண்ணி நல்லா இருக்கீங்களா ஒழுங்கா சாப்பிடுறீங்களா” என்றான் ராஜா.
“ஹ்ம்ம்… நல்லா இருக்கேன் அவர் இப்போல்லாம் நல்லா பாத்துக்குறார் தம்பி” என்றாள் மெல்லிய சிரிப்போடு கணவனும் மனைவியும் அர்த்தமாகப் பார்த்துக்கொண்டனர்.
“சரி அண்ணி நான் கிளம்புறேன்” என்க.
செவ்வந்தி தயக்கமாக அவனைப் பார்த்தாள் “என்னண்ணி” என்றான் அவளிடம்.
“இல்ல… அவங்க என்னய தனியா வீட்டுக்குப் போகக் கூடாது கனகத்துக்கிட்ட கொண்டு விடச் சொல்லச் சொன்னாங்க இன்னைக்கு ஒரு நாள் மட்டும் கூட்டிட்டு போகட்டுமா இனிமே கோவிலுக்கு வரவேண்டாம்னு இருக்கேன்” என்றாள் தன்னால் அவர்களுக்கும் கஷ்டம் என்று வருந்தி.
“அக்கா என்ன பேசுற நீ, வாரத்துல ரெண்டு நாள் உன்னை வீட்ல விடுறது எனக்கு அப்படி என்ன கஷ்டம் சும்மா ஏதாவது உளறாத” என்றாள் கனகம் கண்டிப்பாக.
“அண்ணி கண்டதையும் யோசிக்காதீங்க அண்ணா சொல்லலானாலும் அப்படிலாம் உங்கள உங்க தங்கச்சி தனியா அனுப்ப மாட்டாப் பாத்துக்கலாம் நீங்க உள்ள போங்க” என்றவன் மனைவிடமும் சொல்லிக்கொண்டு கிளம்பினான்.
பிரசாதம் வாங்கிக்கொண்டு ஒரு ஓரமாக அமர்ந்து கொண்டனர் சகோதரிகள் வீட்டு நிலவரங்களைப் பேசிக்கொண்டனர் “நாளான்னைக்கு மகேசு வரேன் சொல்லியிருக்கான்க்கா, ஆனா அங்க வரத்தான் ரொம்ப யோசிக்கிறான் உன்னைய பாக்கணும்னு ஆசை இருக்கு ஆனா அங்க யாரும் சரியா பேசமாட்டாங்க தனியா போகக் கஷ்டமா இருக்குன்னு என்னய தொணைக்கு கூப்பிடுறான்” என்க.
செவ்வந்தி முகம் வாடியது “உண்மதான் இதுவே நீயும் தம்பியும் நம்ம வீட்டிலே இருந்தா அவனுக்கு இவ்ளோ தயக்கம் வந்திருக்காது என்ன செய்ய” என்று பெருமூச்சு விட்டாள்.
“ஹ்ம்ம்… அது சரி என்னமோ முக்கியமா என்கிட்டே செல்லணும்னு சொன்னியே என்னக்கா” என்றாள் தங்கை.
“அவரைப் பத்திதான் புள்ள” என்ற அக்காவை யோசனையாகப் பார்த்தாள் கனகம்.
error: Content is protected !!