27 ஷோபா குமரனின் உன் பாதியும் என் மரணத்தின் மீதியும்
Post Views:2,165
உன் பாதியும் என் மரணத்தின் மீதியும்
அத்தியாயம் 27
.
இரவின் நிசப்தத்தைக் கிழித்துக் கொண்டிருந்தது தண்டவாளத்தின் தடதடக்கும் சத்தம். தாலாட்டும் இரயிலால் கூட ரகுவை உறங்க வைக்க முடியவில்லை. இரவு நேரம் என்பதால் இரயில் வேகம் எடுத்திருந்தது. உலோகச் சத்தத்தோடு மென்மையான அவளின் ரகசிய ஒலி அவனை ஆக்கிரமித்திருக்க எப்படி நித்திராதேவியால் அவனை நெருங்க முடியும்?
Advertisement
கோடை மழை போல் எந்த முன்னறிவிப்பும் இன்றி தன் இதயக் கதவைத் தட்டியிருக்கும் இந்த உணர்வுக்குப் பெயர் என்ன? முட்டிக் கொண்டு பூமியைப் பிளக்கும் முளையைப் போல் இதயக் கூறையைக் கிழித்துக் கொண்டு எட்டிப்பார்க்கும் இந்த அன்பும் ஆசையும் காதலின் அறிகுறியோ? நினைக்க நினைக்க ரகுவின் அகத்தோடு முகமும் போட்டி போட்டுக் கொண்டு மலர்ந்தது.
Advertisement
காதல்! தனக்குள் காதல் மலர காத்திருக்கிறதா? இல்லை மலர்ந்தே விட்டதா? யாரிடம் கேட்பது? காதலின் அறிகுறிகள் தான் என்ன? சம்பந்தமே இல்லாது வெட்கம் பூத்தது. எதை எதையோ நினைத்து இதழ் விரிந்து புன்னகைத்தது. ஏன் என்றே தெரியாது உள்ளுக்குள் ஒரு படபடப்பு. மீண்டும் அவளைக் காண வருடம் காத்திருக்க வேண்டுமோ? காத்திருக்க முடியா தவிப்பு என அத்தனை அறிகுறிகளையும் சரியாகக் கொண்டிருந்தான் ரகு. ஆனாலும் ரகுவிற்குள் எழுந்த கேள்விக்குப் பதில் தெரியாது புரண்டு கொண்டே இருந்தான்.
Advertisement
‘பாலிருக்கும் பழமிருக்கும் பசியிருக்காது
பஞ்சணையில் காற்று வரும் தூக்கம் வராது’ கீழ் பர்த்தில் படுத்திருந்த தாத்தாவின் கைப்பேசியிலிருந்து ரகசியம் போல் கசிந்த பாடல் வரிகள் ரகுவின் செவிப்பறையை மென்மையாகத் தீண்டி, வன்மையாக இதயத்தைத் தாக்கி, அவன் எதிர்பார்த்த பதிலைக் கொடுத்தது. மனம் கேட்க நினைத்த பதிலைக் காது கேட்டதால் ரகுவின் முகம் சிதறவிட்ட வெட்கப் புன்னகையை இரவின் இருள் மறைத்துக் கொண்டது.
Advertisement
இவன் மட்டுமா தூக்கம் கெட்டுப் புரண்டு கொண்டிருக்கிறான்? தாத்தா, கோவை சென்றிருக்கப் பாட்டி வீட்டில் பாட்டிக்குத் துணையாக, அவன் மெத்தையில் படுத்திருந்தவளின் நினைவு முழுவதும் ரகு மட்டுமே. கல்லூரியின் முதலாம் ஆண்டு விடுமுறை முடிந்து கான்பூருக்குக் கிளம்பியவனை வழி அனுப்பியவளுக்கும் அப்படி ஒன்றும் அது எளிதாக இருக்கவில்லை. காதலா? நட்பா? அன்பா? எதுவாக இருந்தால் என்ன? ரகு செல்கிறான். அதுமட்டுமே அவள் கண்கள் கலங்கப் போதுமானதாக இருந்தது. ஒரு வருடத்தில் வருவேன் எனக் கூறிச் சென்றவன் ஐந்து வருடங்கள் கழித்தே வந்தான். வந்த வேகத்தில் செல்கிறான். மீண்டும் எப்பொழுது வருவான்? வருவானா? மனம் அரற்றியது.
கனக்கும் நெஞ்சமும், ஈர விழிகளும் ‘போகாதே’ என்று கெஞ்சின. ‘அடுத்த லீவுக்கு வந்துடுவேன்’ என கூறியவனுக்கும் திருச்சியை விட்டுச் செல்ல மனமே இல்லை. ஆனால் ஆசை கொண்டதெல்லாம் செய்திட முடியாதே.
வயதான தாத்தாவின் பொறுப்பைத் தட்டிக் கழித்திருந்தால்… இருந்திருக்கலாம். ஆனால் ரகுவால் அது முடியவில்லை. அம்மா வழி தாத்தா பாட்டியைப் போல் அவர்கள் அவனை அரவணைக்கவில்லை என்றாலும், தில்லிக்கு வந்த புதிதில், தனித்து நின்ற நேரங்களில் அவன் தனிமையை விரட்ட வெகுவாக முயன்றனர். இன்று பாட்டி இல்லை. திடகாத்திரமாக இருந்த தாத்தா நலிந்து… தனித்து நிற்கிறார். முதுமையில் இருக்கும் அவரை எப்படியோ போ என விட மனம் வரவில்லை. பாசமோ… நன்றிக்கடனோ ஏதோ ஒன்று அவனை திருச்சியில் இருந்து கிளம்பச் செய்தது.
கான்பூரில் இருக்கும் தாத்தாவின் வீட்டிற்கு அடிக்கடி வந்து போயிருந்தாலும் நட்பு எனும் வட்டம் ரகுவிற்கு அங்கு இருக்கவில்லை. அந்த நான்கு படுக்கையறை வீட்டில் தாத்தாவும் பேரனுமாக இருந்தனர். தாத்தாவிற்குத் தூக்கம் பிடிப்பதில்லை அதனால் காலமே எழுந்து பேரனுக்குக் காபி வைத்து விடுவார். பேரனும் தாத்தாவுமாகக் காலை காபியை அருந்தி, நடக்கச் செல்வர். இவர்கள் நடக்கக் கிளம்பிய சிறிது நேரத்தில் வேலைக்கு ஆள் வந்து சமைத்து வீட்டு வேலைகளைப் பார்க்க ஆரம்பித்து விடுவார். இவர்கள் வீட்டிற்கு வந்து உணவு மேசையில் அமரும் நேரம் உணவு தயாராக இருக்கும்.
இருவரும் அதிகம் பேசிக் கொள்வதில்லை என்றாலும் தாத்தாவோடு நடப்பான். அடுத்த தெருவில் அவரின் பாலிய நண்பன் அவர்களோடு சேர்ந்து கொள்ளும் வரை சேர்ந்து நடப்பவன் அதன் பின் ஒரு சுற்று ஓடி வருவான். மீண்டுமாக இருவரும் வீட்டை நோக்கி நடப்பர். இது அவர்களது வழமை. கல்லூரியில் சேர்ந்த பின்னும் வழமை நீடித்தது.
கல்லூரியில் சேர்ந்த சில தினங்களில் பலர் பழக்கப்பட்டாலும் நட்பு எனும் அளவிற்கு ஒருவரும் இல்லை, ‘ஹாய்’ ‘ஹலோ’ போன்ற நட்புகள் மட்டுமே. நட்பு அவனுக்கு நிலைத்தது இல்லையே. அதனால், அவன் ஒருவரிடமும் அதிக நட்பு பாராட்ட விரும்புவதில்லை.
“ஆங் கா… அந்தப் பரதேசி வரவே இல்ல கா. அங்க போய் எங்க தங்கறதுன்னு பாக்கணும். அம்மாவும் இப்போ தான் பேசினாங்க. சாப்பிட்டு படுத்துட்டேன். நீ தூங்கு. நாளைக்கு கூப்பிடுறேன்.” கிசுகிசுப்பாகப் பேசினாலும், ரகுவை போலவே மேல் பர்த்தில் படுத்திருந்தவன் சத்தம் இவன் காதில் விழுந்தது.
முதல் முறையாக, தன்னையும் விசாரிக்க ஒரு ஜீவன் இருந்தால் நன்றாக இருக்கும் என்ற எண்ணம் ரகுவை சீண்டவில்லை. அன்னை இருந்து இருக்கலாம் என்ற எண்ணம் ரகுவை இன்று வரை துரத்தியது நிஜம். பாட்டி, சந்திரிகா, அக்ஷரா என அன்னை ஸ்தானத்தில் எத்தனை பேர் இருந்தாலும் அவர்கள் அவன் அன்னை இல்லையே. பல பகல் பொழுதுகள்… பல இரவுகள் அன்னையின் மடி தேடி அழுதிருக்கிறான் குட்டி ரகு.
ரகுவின் சிறு வயதில் பெற்றவளை பற்றி அவனோடு ஒருவரும் பேசவில்லை. ‘சந்தியா… பெத்திருந்தாலும், இனி அக்ஷரா தான் அவனுக்கு அம்மா. தேவ இல்லாம குழந்தைய குழப்ப வேண்டாம். சந்தியா போட்டோவ காட்டவோ… அவள பத்தி சின்னவன்ட்ட பேசவோ வேண்டாமே’ என நகுலன் வருந்திக் கேட்டுக் கொள்ள, சந்தியாவின் பெற்றோரும் ரகுவின் பார்வைக்கு சந்தியாவை கொண்டுவரவே இல்லை.
அன்னையை நினைத்தவன் கைப்பேசியை எடுத்தான். கை நிறைய வளையல்களையும், முகம் கொள்ளா புன்னகையையும் கொடுத்த ஏழு மாதக் குட்டி மகனை வயிற்றிற்குள் பத்திரப்படுத்தி வைத்திருந்தார் சந்தியா. “அம்மா” என்றான் மென்மையாக. இன்று காலையில் பாட்டியின் அறையில் இருந்த டிரங்கு பெட்டியில் எதையோ தேட, கண்டெடுத்தான் பதுக்கி வைத்திருந்த அவன் அன்னையின் படங்கள் சிலவற்றை. பார்த்த நிமிடம் எப்படி உணரவேண்டும் என புலப்படவில்லை ரகுவிற்கு. பார்த்தே அமர்ந்திருந்தான்.
“என்ன டா உக்காந்துட்ட?” என அறைக்குள் நுழைந்த பாட்டி, பேரனின் தோற்றம் பார்த்து ஒரு மூச்சு அழுது தீர்த்தார். இருபது வருடங்கள் கடந்து போனாலும் தாயால் மட்டும் தானே இப்படி மகளுக்காகக் கண்ணீர் விடமுடியும்?
“யார வேணா அம்மான்னு கூப்பிடலாம். ஆனா அம்மாவல மட்டும் தான் அம்மாவா இருக்க முடியும் இல்லப் பாட்டி?” என்றவன் கண்களும் கலங்கிக் கசிந்தன. அன்னை எனும் ஒற்றை உறவு இல்லாது போனால், வாழ்வில் எந்த உறவும் நிலைப்பதில்லை என்பதைத் திகட்டத் திகட்ட ருசித்தவனுக்கு அந்த நிமிடத்தைக் கடக்க அத்தனை எளிதாக இருக்கவில்லை.
ஐந்து வயதுவரை அப்பா இருந்தார். அதன்பின் அனைத்தும் மாறிப் போனது ரகுவின் வாழ்வில். தாத்தாவின் வீட்டில்… தனி அறையில்… ஜன்னல் வழியே நிலவில் அன்னையைத் தேடியது இன்றும் நினைவில் உள்ளது. அன்னையின் தவிப்பை ‘ல்லகு’ என்ற அழைப்போடு குட்டி தேவதை துடைத்து போடாது போயிருந்தால்? அன்று மட்டுமா? இன்றும் “ல்லகு…” என அறைக்குள் நுழைந்தவள் இரண்டு வயதில் என்ன செய்தாளோ அதையே செய்தாள்.
அது என்னவோ… ரகுவால் எதையுமே மறக்க முடிவதில்லை. பழைய நினைவுகளோடு மீண்டுமாக இதயக் கதவைத் தட்டாதே நுழைந்தவள், மனதினுள் சம்மணமிட்டு அமர்ந்து கொண்டாள்.
அதற்கு மேல் படுத்திருக்க முடியாதவனாக இரயில் பெட்டியின் கதவை நோக்கி சென்றான். இரயில் ஒரு குலுங்கு குலுங்கவும் இவன் பின்னால் வந்துக் கொண்டிருந்தவனுக்கு தடுமாறியது. இவன் மீது மோதிவிட, ரகுவின் கைப்பேசி கீழே விழுந்தது.
“சாரி…” எனக் கீழே கிடந்த கைப்பேசியை எடுத்தவன் பார்வையில் வயிற்றுப் பிள்ளையோடு இருந்த இளம் பெண் விழுந்தாள்.
அவன் பார்வை கைப்பேசியில் இருக்கும் படத்தில் விழவும், அபத்தமாக ஏதேனும் கேட்கும் முன், “அம்மா” என்றான் ரகு.
ரகுவை நிமிர்ந்து பார்த்தவன் பார்வை மீண்டும் கைப்பேசியில் விழுந்தது. “பார்த்தாலே தெரியுது” எனப் புன்னகைத்தவன், “அம்மா ரொம்ப அழகா இருக்காங்க.” எனக் கைப்பேசியை நீட்டினான், கூடவே நட்புக் கரத்தையும்.
ஊர் இது, பேர் இது, செல்லும் இடம் இது, படிப்பு இது… என்பதான பேச்சு சில மணி நேரத்தோடு பன்மை அழைப்பையும் விழுங்கியது. பேசிக் கொண்டிருந்தவனை ரகுவிற்கு மிகவும் பிடித்துப் போனதால், “எங்க வீட்டுல நானும் தாத்தாவும் மட்டும் தான். பேயிங் கெஸ்ட்டா இருந்த பையனும் கிளம்பிட்டான். ரெண்டு பெட் ரூம் சும்மா இருக்கு. வாயேன்” என அழைப்பு விடுக்க, “உன் கைய கொடு… காலா நினைச்சு ஒத்திக்கிறேன்” எனக் கிடைத்த நட்புக் கரத்தை இறுகப் பிடித்த வேளை இருவருமே நினைக்கவில்லை, இரயில் சினேகம் உயிர் தோழர்களாய் உருமாறும் என.
“என் ஃப்ரெண்டு ஒருத்தன் கூட தங்க ரெடி பண்ணி கொடுத்திருக்கான். கடைசி நேரம் முடியாதுன்னு சொன்னா நல்லா இருக்காது. அங்க நிலைமை என்னன்னு பார்த்துட்டு சொல்லவா?” என்றவனோடு அந்த இரயில் பயணம் நெருங்க வைத்தது.
இரண்டாம் கல்வியாண்டு ஆரம்பமானது. கல்லூரி, இணையத்தள வகுப்பு, தாத்தா… என ரகுவின் நேரம் பயனுள்ளதாகவே சென்றது. இரயில் சினேகிதன் முதல் செமஸ்டர் முடியவும் வருவதாகக் கூறினான். வார இறுதிகளில் பார்த்துக் கொண்டனர். புது நட்பு மெல்ல வேர் விட ஆரம்பித்தது. இந்த வருடம் ரகுவின் காட்டில் மழை போல… ஆரோகி அறிமுகமானாள்.
“நீங்க மேக்ஸ்ல ரொம்ப ஸ்டாங்ன்னு என் ஃப்ரெண்டு சொன்னான். அவனுக்கு நீங்க ஆன்லைன்ல கிளாஸ் எடுக்கிறதா சொல்லவும் நான் என்ரோல் பண்ணினேன். ஆனா நீங்க ஸ்லாட் இல்லன்னு சொல்லிட்டீங்க. எனக்கு இத மட்டும் சொல்லித் தர முடியுமா?” என முதலாம் ஆண்டு ஆரோகி, கல்லூரி நூலகத்தில் வந்து நின்றபோது அவள் கேட்டதை கற்றுக் கொடுத்துச் சென்றான் ரகு.
அதன்பின் ஒரு முறை கல்லூரி வளாகத்தில் இருக்கும் ‘காபி டே’யில் பார்த்தான். “ஹலோ சீனியர்” என இவன் இருந்த மேசையில் வந்து அமர்ந்தாள். காட்டாற்று வெள்ளம் போல் சலசலக்கும் அவள் பேச்சு ரகுவிற்கு சலிக்கவே இல்லை.
ஒரு முறை வீட்டிற்குச் செல்லும் வழியில் ஆரோகியைப் பார்த்தவன் புன்னகைத்தான். “சீனியர்” எனப் பற்கள் அத்தனையும் காட்டிக் கொண்டு ஓடி வந்தவள், “இந்த வழியா தான் போவீங்களா? நானும் பக்கத்து ஸ்டாப்ல தான் பஸ் ஏறுவேன்” பேசிக்கொண்டே அவனோடே இணைந்து சாலையைக் கடந்தாள். அதிரடி சூறாவளியாக அவன் வாழ்வில் நுழைபவள் ஏற்படுத்தப் போகும் சேதாரம் அதிகம் என உணர்ந்திருந்தால் அன்றோடு அவளுக்கு ஒரு முழுக்குப் போட்டிருப்பான் ரகு.
நண்பர்களே வேண்டாம் என ஒதுங்கிச் சென்ற ரகுவின் விருப்பு வெறுப்பை ஒரு பொருட்டாக மதிக்காது அவனோடு தோழமை பாராட்டினாள் ஆரோகி. ஒதுங்க நினைத்தாலும், அவளின் சிரிப்பும், காந்தமாய் இழுக்கும் பேச்சும் ரகுவை ஒதுங்கிப் போக விடவில்லை. தன்னையே சுற்றி வந்த பெண்ணிடம் பேசி பழக ஆரம்பித்தான்.
கல்லூரி வாயிலிலிருந்து பத்து நிமிட நடையில் ரகுவின் வீட்டை அடைந்து விடலாம் என்பதால் பல நாள்கள் சைக்கிளில் சென்றாலும், ஒரு சில நாள்கள் ரகு நடந்தே சென்றிடுவான். இப்படியான தினங்களில் அவனோடு கை கோர்த்து இல்லை என்றாலும், பேசிய படியே உடன் நடப்பாள் ஆரோகி. நாள்கள் நகர, நடையின் வேகம் குறைவதும் அவர்கள் நடந்த பாதையின் நீளம் நீளுவதுமாக இருந்தது.
“உன் பஸ் ஸ்டாப் வந்துடுச்சு… பை” என ரகு தன் வீட்டை நோக்கி நடப்பான். அவளும் பேருந்துக்குக் காத்திருந்து தன் இருப்பிடம் செல்வாள். இப்படிதான் ஆரம்பித்தது அவர்களின் நடைப் பழக்கம். வாரங்களில், “உன் வீடு பக்கமா?” எனக் கேட்டவள், “சரி வா… நான் அடுத்த ஸ்டாப்ல ஏறிக்கிறேன். அங்க எனக்கு இன்னும் ஒரு எக்ஸ்ட்ரா பஸ் வரும்” என ரகுவோடு நடக்க ஆரம்பித்தாள். பத்து நிமிடப் பேச்சும் பயணமும் கொசுறு நிமிடங்களைச் சேர்த்துக் கொண்டன. வாரங்கள் ஆக, நடையின் வேகம் நத்தையோடு போட்டி போட்டுத் தோற்றது.
“இந்தா வறுத்த கடல” என அவள் நீட்டிய கடலையை அவன் மறுக்காது வாங்கி வாயில் போட்டுக்கொண்டான். வாயில் போட்ட கடலைக்குப் பதிலாக காப்பசீனோவும், லாட்டேவும் வாங்கிக் கொடுத்தான். அவசரம் இல்லாது காபியின் குளிர் நீங்கும் வரை அவர்களின் பேச்சும் சிரிப்பும் நீண்டன.
ஜென்மப் பந்தம் போல் ஆரோகி ரகுவோடு நன்கு ஒட்டிக் கொண்டாள். இருவருக்குள்ளும் நன்கு ஒத்துப் போனது. ‘உனக்கு எதுவுமே தெரியல லகு. நான் சொல்றது தான் சரி’ என்பது போல் எதற்கும் வாக்குவாதங்கள் வருவதில்லை. அப்படியே வந்தாலும் ஆரோக்கியமான வாக்குவாதமாகவே இருந்தது. ‘டேய் லகு இத எடுடா’ என்பது போன்ற அதிகாரங்கள் இல்லை ஆரோகியிடம். மென் தென்றலாய் வீசினாள்.
ரகுவும் அவள் வருகைக்காகக் காத்திருந்து நடக்க ஆரம்பித்திருந்தான். “இன்னைக்கு என்ன கொறிக்கக் கொண்டு வந்த?” என உரிமையோடு ரகு பெண்ணிடம் கேட்கும் அளவிற்கு ரகு மாறியிருந்தான். பேச்சும் மௌனமுமாக நடை நீடித்தது. இடை இடையே எழுந்த மௌனம் அவளுக்குப் பிடிக்கவில்லை என்றாலும் எதைக் கொண்டு அந்த மௌனத்தை அடைப்பது என அவளுக்குத் தெரியவில்லை.
ஆங்கிலத்தில் கதைப்பது அவளுக்குப் பிடிக்காது போக, “உன் தமிழ சொல்லிக் கொடேன். நான் உனக்கு மராட்டி சொல்லி தரேன்” என இருவருக்கும் இடையே இருந்த மௌனமான நேரமும் சீர் செய்யப்பட்டது.
“பார்த்துப் போ” எனக் கையசைத்து தன் வீட்டிற்குள் நுழைபவன், “உன் ஸ்டாப் பக்கம் தான மார்கெட், தாத்தாக்கு ஒரு ஸ்வெட்டர் வாங்கணும். உன் கூடவே வரேன்” எனப் பத்து நிமிட அவளோடான பயணத்தை அரை மணி நேரமாக மாற்றினான்.
அதன்பின் பேருந்து வரும் வரை காத்திருந்து, “போனதும் மெசேஜ் போடு” என வழியனுப்பி வைத்தான். முதல் மூன்று மாதங்கள் இப்படிச் சாலையில் மட்டுமே நீட்டித்த பயணமும் பழக்கமும் அதன் திசையை மாற்றிக் கொண்டது.
“பிஜில சாப்பாடே நல்லா இல்ல. யார் கூடவாது சேர்ந்து வீடு வாடகைக்கு பாக்கணும்” என்றாள். வீதியில் கிடந்த மண்ணை தன் தலையில் அள்ளி வாரிப் போட்டுக் கொண்டான் ரகு. “எங்க வீட்டுல ஒரு ரூம்ல என் ஃப்ரெண்ட் ரென்டுக்கு வரதா இருக்கான். நீ வேணும்ன்னா இன்னொரு ரூம்ல இரேன்” என்றான்.
பூரித்துப் போனாள் பெண். “நம்ம காலேஜ் ஃப்ரெண்டா?” எனச் சந்தேகத்தைத் தீர்த்துக் கொண்டாள்.
“இல்ல… ஆனா ஃப்ரெண்ட்ஷிப்ல உன்ன விட ரெண்டு வாரம் சீனியர்.” என்றான்.
“புது ஃபிரெண்டா? பார்த்ததே இல்ல? அப்போ ரொம்ப எல்லாம் கிளோஸ் இல்லன்னு எடுத்துக்கவா?”
“இனி மேல் ஆகலாம்” என்றான் உண்மை மறையாது.
“இது என்ன பதில்?” எனச் சிரித்தவள், சிரித்துக் கொண்டே, “நான் உன் ஃபிரெண்டா?” எனக் கேட்டாள்.
அவள் என்ன நினைத்து கேட்டாளோ, அவனுக்கு கேள்வி மட்டுமே கேட்டது.
“இது என்ன கேள்வி?” என அவனும் சிரித்துக் கொண்டே பதில் கேள்வியைப் பதிலாகக் கொடுத்தான்.
“அவனால பிரச்சன இருக்காதே” என அவள் பார்க்க, “நல்ல பையன். கெட்ட பழக்கம் எதுவும் இல்ல. துபாய்ல இருந்து படிக்க வந்திருக்கான். ஃபிரியா பழகினாலும் பொண்ணுங்க கிட்ட கொஞ்ச அதிகமாவே டிஸ்டன்ஸ் மெயின்டெயின் பண்ணுவான். உன்னையும் டிஸ்டர்ப் எல்லாம் பண்ண மாட்டான்” என்றவன் அறியவில்லை இவள் தான் அவனுக்குப் பிரச்சனையாக அமைவாள் என. தெரிந்திருந்தால் ஓணானை அப்படியே வேலியில் விட்டிருப்பான்.
“உன் ஃப்ரெண்டு வேற எப்படி இருப்பான்? உன்ன மாதிரி தானே” என வாய்விட்டுச் சிரித்தாள். இவள் எவ்வளவு நெருக்கமாகப் பழகிய போதும், ரகு நட்பில் நெருக்கம் காட்டினானே ஒழிய, இருவருக்கும் இடையே இருக்கும் இடைவெளியை மட்டும் குறைத்துக் கொள்ளவே இல்லை.
அடுத்த மாதம் தொடங்கியதும் முதல் வேலையாக ஆரோகி அவளின் இருப்பிடத்தை மாற்றினாள். அருங்காட்சியகம் போல் தாத்தாவும் பேரனுமாக இருந்த வீடு, ஆரோகியால் உயிரியல் பூங்காவாக மாறியது. பூங்கா என்றால், பூவை வண்டு தேடிச் செல்வது இயல்பு தானே. இதில் யார் வண்டு… யார் பூ என்பது நம் கற்பனைக்கு.
நல்ல கலகலப்பாகவும் தன்னை சுற்றி இருப்பவர்களையும் உற்சாக மனநிலையில் வைத்திருக்கும் பெண்ணை யாருக்குப் பிடிக்காது? தாத்தாவோடு சிரித்துப் பேசும் ஆரோகியை அதிகம் கவனித்தான் ரகு. எதிரில் இருப்பவர் மனம் அறிந்து பழகும் ஆரோகியை ரகுவிற்கு மிகவும் பிடித்தது.
“வாசல்ல நிக்கிற எஸ் கிளாஸ் பென்ஸ், லக்ஷுரி மாடல் தான?”
“கலர் யார் சாய்ஸ்?”
“நீ ஓட்டுவியா?”
“ஒரு லாங்க டிரைவ் போலாமா?”
ஆரோகி பேசினாள்… ரகு கேட்டுக் கொண்டான். ஆரோகி கேட்டாள்… ரகு இசைந்தான். இருவருக்குமான நட்பு ரகுவின் நேரத்தை விழுங்கியது. காலை ‘குட் மார்னிங்’ காபியின் ஆரம்பிக்கும் சம்பாஷனை இரவு ‘குட் நைட்’டோடு முடிவது வழமை ஆனது. ரகுவிற்கு அதில் வருத்தம் எதுவும் இருக்கவில்லை.
“பழைய வீடுனாலும் எவ்வளவு வசதியா இருக்கு இல்ல?”
“இந்த வீடு உன் தாத்தாது தான?”
“உனக்கு பரவால, உன் தாத்தா வீடு இருக்கு”
“இன்னும் வேற என்ன எல்லாம் தாத்தா சேத்து வச்சிருக்கார்?”
“வெளிநாட்டு பசங்களுக்கு ஒரு மணி நேரத்துக்கு நூறு டாலர் சார்ஜ் பண்றியாமே… அப்படியா?” ஆரோகி சிரித்துக் கொண்டே கேட்டாள்… தோழி கேட்க ரகுவும் பதில் அளித்தான்.
“சொல்லு… ஏன் நீ உங்க அம்மா அப்பாவோட போகல?” என குடும்பத்தை பற்றிக் கேட்கும் அளவிற்கு ரகுவோடு நெருங்கி இருந்தாள் ஆரோகி. சில மாத நட்பின் விளைவாக ரகுவின் ஜாதகம் வரை ஆரோகியை அடைந்திருந்தாலும் ஏனோ அக்ஷராவை சிற்றன்னை என இவளிடம் கூற தோன்றாததால், அக்ஷரா அன்னையாகிப் போனாள்.
“டிரைவ் போலாமா?” என ஆரோகி கேட்டால், “எங்க?” எனக் கேட்கும் நிலையில் ரகுவின் நட்பு இருந்த போதும், ஆரோகியின் மனம் வேறு எதையோ தேடியது. பிக்கல் பிடுங்கல் இல்லாத ராஜா வீட்டுக் கன்றுக் குட்டி, கல்லூரியில் பல பெண்களின் கனவு கண்ணன், படிப்பாளி, படிக்கும் பொழுதே கல்லூரி மாணவர்களுக்கு வகுப்பெடுத்து நன்றாகவே சம்பாதிக்கிறான், ஒழுக்கத்தின் மறுபிறப்பு இப்படியான ஒருவனிடம் ஆரோகியின் மனம் வேறு எதையோ எதிர்பார்பதில் அதிசயம் ஒன்றும் இல்லையே.
மாதங்கள் சில கடந்திருந்தன. சில தினங்களே விடுப்பு என்றாலும் செமஸ்டர் விடுப்பிற்கு ஆரோகி நாக்பூர் கிளம்புவதாக இருந்தது. தானும் திருச்சிக்குச் சென்றால் தாத்தாவை யார் கவனித்துக் கொள்வது? யோசித்தவன், தாத்தாவின் உதவிக்கு வீட்டோடு தங்கிக் கொள்ளுபடி ஒரு ஆளை ஏற்பாடு செய்தான். ஊருக்கு வரப்போவதாக ஒருவரிடம் கூறவில்லை என்றாலும் ரகுவின் மனம் முழுவதும் திருச்சியைச் சுற்றி வந்தது.
அன்று, “ஒரு முக்கியமான விஷயம் பேசணும். காத்திரு” என்ற ஆரோகி வருவதற்காகக் கல்லூரி மைதானத்தில் காத்திருந்தவன் பார்வை எதிரில் இருந்த கட்டடித்தின் பக்கம் சுற்றிக் கொண்டிருந்த மயிலின் மேல் இருந்தாலும் அவன் சிந்தனை அங்கில்லை. அவன் சிந்தனை, இருபக்கப் பின்னலில் ஒன்று அவிழ்ந்து தொங்கிக் கொண்டிருக்க, ‘இஇஇனி ம்ம்மேல் இங்க வரவே மாட்டியா?’ என் மூக்கை உறிந்துகொண்டே கண்முன் வந்தவள் மேல் இருந்தது.
அவன் எதிரில் நின்று கேட்பளுக்கு பதில் கூறுவது போல், “உங்கிட்ட வராம எங்க டி போயிட போறேன்” என வாய்க்குள் முணுமுணுத்தவன், “வந்தா என்ன தருவ?” எனச் சிரித்தான். என்ன தருவாள்? புத்தகத்தின் நடுப் பக்கத்தில் நடுநாயகமாக வீற்றிருக்கும் அவளின் ஒற்றை மயில் இறகையே அவனிடம் நீட்டுவாளே. இம்முறை, ‘இறகு வேண்டாம்… வேறு எதையாவது கொடு’ எனக் கேட்க வேண்டும் என நினைத்தான். எங்கோ ஆரம்பித்து எங்கெங்கோ பயணித்துக் கொண்டிருந்தான் ரகு.
“என்ன தனியா சிரிச்சுட்டு இருக்க?” என ரகுவின் அருகில் அமர்ந்தாள் காரிகை.
“இதுல சிரிக்க என்ன இருக்கு? எல்லா பொண்ணும் அப்படித் தானே நினைப்பா?” என்றாள் கேள்வியாக. ‘அப்படியா?’ எனப் பார்த்தான். “கல்யாணத்துக்கு அன்பு, நம்பிக்கை இதெல்லாம் தேவை இல்லையா?”
“அதமட்டும் வச்சுகிட்டு வாழ முடியுமா? வீடு, காரு, கைநிறைய சம்பாதியம்ன்னு இருந்தா, பணக் கஷ்டம் இருக்காது. ரொம்ப எல்லாம் சேத்து வைக்க வேண்டாம். ஹேப்பியா ஊர் சுத்தலாம், நிம்மதியா செலவு செய்யலாம்… கல்யாண மார்கெட்ல எதிர்பார்க்கிறத சொல்லி இருப்பாளாக்கும்” என ரகுவிடம் அந்த நினைப்பில் தவறில்லை எனத் தெளிவு படுத்தினாள்.
“மத்தவங்கள பத்தி எனக்குத் தெரியாது. ஆனா அவள தெரியும். ‘நல்லா சம்பாதிக்கிறவன்’ன்னு சொன்னவளுக்கு, அந்த ‘நல்லா’ங்கிறதோட அளவு கூட தெரியாது. தேவத அவ. சந்தோஷத்தையும் மன நிம்மதியையும் வாரிக் கொடுக்கிற தேவதை அவ. பணத்தைப் பார்த்துப் பழகத் தெரியாது அவளுக்கு.”
மலர்ந்து ரசனையாகப் பேசும் இந்த ரகு புதிது ஆரோகிக்கு. நெற்றி சுருங்க பார்த்தாள் ரகுவை.
“அவ ரொம்ப நேர்மையானவ. காரியத்துக்காகக் கால பிடிக்கிற ரகம் இல்ல. தேன் மிட்டாய்க்கும், மாவடுக்கும் பல்ல காட்ட மாட்டா… என்னை கடிச்சு புடுங்கிட்டு போவா.” என்றவன் சிரித்துக் கொண்டே வலது முழங்கையில் இருந்த தழும்பை வருடினான். நான்கு குட்டி குட்டி கோடுகள் மேலும், இரண்டு கோடுகள் கீழுமாக உருண்டை வடிவ தழும்பைத் தடவியவனுக்கு இப்பொழுதே அவளைப் பார்க்க வேண்டும் போல் ஆசை கிளர்ந்து எழுந்தது.
அமர்ந்திருந்தவனின் மலர்ந்த முகம் பார்த்த ஆரோகிக்கு தொண்டைக் குழி வறண்டது. “காதலிக்கிறியா?” என்றாள் மூச்சை இழுத்து பிடித்துக் கொண்டே.
“தெரியல” என்றவன், “விபரம் தெரிய ஆரம்பிக்கதுக்கு முன்ன இருந்தே என் வாழ்க்கையில இருக்கா. என் மனசுக்கு மிக மிக நெருக்கமானவ… என்னையும் விட எனக்கு அவள பிடிக்கும்.” என்றான் மனதை மறையாது.
“ஒரு ஃப்ரெண்டு மாதிரியா?”
சிரித்தவன் மிக மிக அழகாக இருந்தான். அவள் மீது வைத்திருப்பது வெறும் நட்பு என உணரவைத்தால், அவன் காதல் காற்று தன் பக்கமாக வீசுமே… “சைல்குட் ஃபிரெண்ட் மேல தோன்றது எல்லாம் காதல் ஆகாது.” என அவனுக்குத் தெளிவு படுத்த முயன்றாள் ஆரோகி.
“அவ மேல காதல் வராட்டா… எனக்கு யார் மேலையும் காதல் வராது” என ஆழமான குரலில் அழுத்தமாக முடித்தான் ரகு.