Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

மூங்கிலுக்குள் வார்த்தை இல்லை

மூங்கிலுக்குள் வார்த்தை இல்லை – 18

“அவரைப்பத்திதான் பேசணும்” என்ற அக்காவை யோசனையாகப் பார்த்தவள் “மாமாவைப் பாத்தியா” என்றாள்.

 

 



Advertisement

“ஹ்ம்ம் ஆமா” என்ற செவ்வந்திக்கு ஏனோ மிகுந்த தயக்கம்.

 

Advertisement

 

Advertisement

“சொல்லுக்கா என்ன விஷயம்” என்றவள் அவள் தடுமாற்றத்தை பார்த்து “உங்க அந்தரங்கம் ஏதாவதா,  சொல்லக் கஷ்டமா இருந்தா விட்டுரு” என்க.

 

Advertisement

 

 

“அதில்லைடி…” என்ற செவ்வந்தி “இப்போல்லாம் என்கிட்டே நல்லாத்தான் நடத்துகிறார் ரொம்ப பேசறதில்ல ஆனா முன்ன மாதிரி சுள்ளுனு கத்தறதில்லை” என்றாள்.

 

 

“அதுதான் தெரியுதே எல்லாம் இந்தப் பிள்ளைக்காகத் தான என்ன மனுஷனோ, அந்தப் பிள்ளையைக் குடுக்குற பொண்டாட்டிக்கு கொஞ்சம் மரியாதை குடுக்கணும் அனுசரணையா பேசணும்னு இல்ல” என்று மனதில் நினைத்தவள் செவ்வந்தியையே பார்த்திருக்க.

 

 

“ஆனா அதில்லை… ரெண்டு நாள் முன்னாடி பேசினார்”.

 

 

“யார்கிட்ட? உன்கிட்டயா?”

 

 

“இல்லடி பிள்ளைக்கிட்ட”.

 

 

“எந்தப் பிள்ளைக்கிட்ட!” என்றாள் கனகம் புரியாமல்.

 

 

“என் வயித்துல இருக்குற பிள்ளைக்கிட்ட”.

 

“ஓஹ்… சூப்பர் கட்டினவக்கிட்ட பேச நேரமும் இல்ல மனசும் இல்ல ஆனா பொறக்காத பிள்ளைக்கிட்ட பேச முடியுது ரொம்ப நல்லா இருக்கு” என்றாள் கோபத்தை அடக்கி.

 

 

செவ்வந்திக்கு அவள் கோபம் புரிந்தது “நான் தூங்கிட்டேன் நினச்சு நடுராத்திரி பிள்ளைக்கிட்ட பேசினார்” என்றவள் சிந்தனை அன்றைய இரவுக்குச் சென்றது.

 

இருவருமே உறங்கிவிட்டனர்,  நடுஇரவில் ஏதோ சத்தம் கேட்டுக் கண் திறந்தாள் செவந்த்தி கணவன் தான் உள்ளே வந்து கதவை அடைத்துக்கொண்டிருந்தான் பாத்ரூம் சென்றிருப்பான் என்று நினைத்தவள் அமைதியாகப் படுத்துக்கொண்டாள்.

 

 

வெகுநேரம் சென்றும் அவன் படுக்காமல் இருக்க மெல்ல விழிகளைத் திறந்து பார்த்தாள் செவ்வந்தி,  என்னமோ யோசனையோடு நடந்துகொண்டே இருந்தான் அவளுக்குப் பயம் வந்தது குழந்தை உண்டானது தெரிந்த பின்தான் தள்ளி இருக்கிறான்.

 

 

அதற்க்கு முன்தினம் வரையிலுமே அவளை விடவில்லை மீண்டும் தன்னை நெருங்கப் போகிறாரோ என்று பயந்தாள், மருத்துவர் கவனம் தேவை என்று சொல்லியிருக்க ஏதேனும் செய்துவிடுவானோ என்று பதட்டமானது.

 

 

விழிகளைத் திறக்காமலே படுத்திருந்தாள் அவன் அருகில் வருவது தெரிந்தது மெல்ல அவள் வயிற்றில் அவன் கைப்பதிந்தது செவ்வந்தி எழுந்துவிடலாம் என்று எண்ணும்போது மிக மெல்லிய குரலில் “பாப்பா” என்றான் யோகன்.

 

 

அந்தக் குரல் இதுவரை அவனிடம் கேட்க்காத குரல் அவள் அப்படியே படுத்திருக்க “நீங்கப் பொண்ணா பையனா தெரியல யாரா இருந்தாலும் நல்ல படியா பொறந்து வாங்க என்னை மாதிரியோ உங்க அம்மா மாதிரியோ வேண்டாம் அது ரொம்ப கஷ்டம்”.

 

 

“கிண்டல் கேலி அவமானம் தனிமைன்னு நிறைய கஷ்டம், உங்க அம்மாகூட பொண்ணா பொறந்துட்டதால பிள்ளைங்க  கிண்டல் பண்றாங்க படிக்க மாட்டேன்னு சொன்னதும் எல்லாரும் விட்டுட்டாங்க, ஆனா நான் படிச்சுதான் ஆகணும் வேலை செஞ்சுதான் ஆகணும், சின்ன வயசுல செத்துடலாம்னு தோணும் ஆனா எப்படின்னு தெரியாது”.

 

 

“ஸ்கூல்ல படிக்கும்போது எல்லா பிள்ளைகளும் கிண்டல் செய்வாங்க அழுகையா வரும், உன் சித்தப்பா இருக்கான்ல அவனுக்கு அப்போ என்ன ஒரு பத்து வயசு இருக்கும் எல்லார்கிட்டயும் சண்டைக்குப் போவான் என் அண்ணனை ஏண்டா கிண்டல் பண்றீங்கன்னு, அவனுங்க பெரிய பசங்களா ஒரு மூணு நாலு தடவ இவன் சண்டைக்குப் போய் இவனை அடிச்சிட்டாங்க”.

 

 

“கைல கால்லன்னு இவனுக்கு நிறைய காயம் உன் பாட்டி என்னய போட்டு ஒரே அடி சின்னப் பையன சண்டைக்கு அனுப்புனியா உன்னைமாதிரியே அவனும் கால் விளங்காம கிடக்கணுமான்னு ஒரே கஷ்டமா போய்டுச்சு” என்க, செவ்வந்திக்கு விழிகள் நிறைந்துவிட்டது வந்த கேவலை அடக்கிக்கொண்டாள்.

 

 

“அப்றமாதான் பக்கத்துக்கு ஊரு பள்ளிக்கூடத்துக்குப் படிக்கப் போய்ட்டேன் உங்களுக்கு அதெல்லாம் எதுவும் வேண்டாம் நீங்க எந்தக் குறையும் இல்லாம பிறந்து வரணும் உங்களை அப்பா நல்லா பாத்துப்பேன், என் காலேஜில ஆபிஸ்ல நிறைய பேர் கிண்டல் பண்ணாங்க”.

 

 

“இந்தக் கோணவாயனுக்கு எப்படி கல்யாணம் ஆகும் வாய் மட்டுமா கோனால் அப்படின்னு,  என்னால என் பொண்டாட்டியை சந்தோஷமா வெச்சுக்க முடியாதுன்னு சொன்னன்னுங்க எனக்குப் பாப்பாவே பொறக்காது  சொன்னாங்க அவங்க எல்லாருக்கும் உங்களைக் காட்டணும்” என்று அத்தனை தீவிரமாகப் பேசினான்.

 

 

அனைத்தையும் சொல்லியவள் “அது எல்லாம் சேர்ந்துதான் அவர் அப்படியெல்லாம் நடந்துக்கிட்டார் கனகம்” என்றவளை முறைத்து பார்த்தாள் தங்கை.

 

 

“என்னடி” என்றாள் செவ்வந்தி.

 

 

“அவர் கஷ்டப்பட்டார் ரொம்ப கஷ்டப்பட்டிருக்கார் இல்லனு சொல்லல அதுக்காக அவர் உன்கிட்ட நடந்துக்கிட்டது சரியா, உன்னையும்தானே கிண்டல் பண்ணியிருக்காங்க நீ வீட்டை விட்டே வெளில போகப் பயந்துட்டு தானே இருந்த”.

 

 

“இந்த உலகத்துல எத்தனையோ பேர் இப்படி இருக்காங்க எல்லா வலிகளையும் தாங்கித்தான் வாழறாங்க அவங்க எல்லாம் தன் கோபத்தையும் ஆத்திரத்தையும் அடுத்த மனுஷங்க மேலயா காட்டாறாங்க”.

 

 

“மாமாவே இவ்ளோ கஷ்டப்பட்டிருக்கறே அப்போ உன்னை அவர் எப்படி பாத்துக்கணும் நம்ம மாதிரியே ஒருத்தி அவளை நாம நல்லா வெச்சுக்கணும்னு தானே நினைக்கணும் ஆனா அவருமே அவரோட இயலாமையை உன்மேலதான் காமிச்சிருக்கார்”.

 

 

“மத்தவங்க அவருக்குப் பண்ணினதை அவர் உனக்குப் பண்ணினார் என்னனு கேக்குறியா மனசை புரிஞ்சுக்காம நடத்துகிறது உன்கிட்ட நல்லா பேசியிருக்கலாம் உனக்கு ஆறுதலா இருந்திருக்கலாம் உன்னையும்தான் நிறைய பேர் காயப்படுத்தியிருக்காங்க ஆனா நீ இன்னைக்கு வரைக்கும் யாரையுமே அவங்க மனசு நோகர மாதிரி பேசினது கூட இல்லயேக்கா” என்றாள் கனகம்.

 

 

“நீ சொல்றது சரிதான் சிலர் அப்படித்தான் கனகம் என்ன பண்ண சொல்ற இப்போ என்னை நல்லா தானே பாத்துக்குறாரு அது பிள்ளைக்காகவே  இருந்தாலும் எனக்கு இந்த அக்கறை போதும் உன் புருஷன் நூத்துல ஒருத்தர்,  என் புருஷனை மாதிரி ஆளுங்கதான் நம்ம நாட்டில அதிகம்”.

 

 

“எல்லா பொண்ணுங்களும் எனக்கு மதிப்பு இல்ல மரியாதை  இல்ல அக்கறையா பாக்கல ஆதரவா பேசலன்னு சண்டை போட்டா பெட்டியைக் கட்டிட்டு பொறந்த வீடு போகவேண்டியதுதான்,  அங்க போனா மட்டும் உன்னை அப்படியே ஆரத்தி எடுத்து வீட்ல வெச்சுப்பாங்களா இப்போ நம்ம வீட்டிலேயே பாரு குடும்பனா அப்படிதான் இருக்கும் அனுசரிச்சு போன்னு தானே சொல்வாங்க”.

 

 

“உன் வீட்டுக்காரர் உனக்கு ஆதரவா நின்னுமே அம்மாக்கு உன் மேல கோவம்தானே வாயை அடக்கணும்னு,  இதுதான் இங்க பொம்பளைங்க நிலைமை இங்க நினைச்சதெல்லாம் பேசுற உரிமை இருக்குற பொண்ணுங்களை விரல் விட்டு எண்ணிடலாம்”.

 

 

 

“ஏன் இன்னைக்கும் சொல்றாங்களே பொம்பளை சிரிச்சா போச்சுன்னு அன்னைக்கு பாஞ்சாலி சிரிச்சதாலதான் மஹாபாரத யுத்தமே வந்துச்சாம், இதே ஒரு ஆம்பள துரியோதனனை பார்த்துச் சிரிச்சிருந்தா பிரச்சனை அவனோட முடிஞ்சிருக்குமாம் இங்க பொம்பளை சிரிக்க போய்தான் அவன் தன்மானம் அடிவாங்கி அவன் ரோஷப்பட்டு யுத்தமே வந்துச்சாம்”.

 

 

 

“அப்படிலாம் ஒண்ணுமில்ல புள்ள, இவங்களுக்கு எல்லாத்துக்கும் முன்னாடி பலிகொடுக்க நம்மள தூக்கி போட்டுரனும் அவ சிரிச்சுட்டா அவ பேசிட்டா அவ படியைத் தாண்டிட்டா அவ அடிச்சிட்டா இப்படி”.

 

 

“ஒரு பொம்பள பிள்ளை ஒரு பொறுக்கியைக் கைநீட்டி அடிச்சா அது பெரிய தப்பு, அந்தப் பொறுக்கி பல நாளா அவளைத் தொல்லை பண்ணி சகிக்க முடியாமத்தான் அடிச்சிருப்பா அதைப் பேசமாட்டாங்க அதுக்கு வஞ்சம் வெச்சு அவன் அந்தப் பிள்ளையை ஏதாவது பண்ணிட்டா பொட்ட பிள்ளை ஆம்பளைய கைநீட்டலாமா அந்த அவமானதுலதான் அப்படி பண்ணிட்டான்னு சொல்ற நாய்களும் இந்த நாட்ல இருக்கு” என்றாள் ஆத்திரமாக.

 

 

“அக்கா!!” என்று விழி விரித்தாள் கனகம், நீயா இப்படிலாம் பேசுற என்ற அதிர்ச்சி விலகாமல்.

 

 

“பேசறதுக்கு என்னடி யார் வேணா பேசலாம் பொட்ட கோழி கூவி பொழுதுவிடியாதுன்னு கோழிக்குக் கூட அடிமை வாழ்க்கைதான், எல்லாம் தெரியுது கனகம் ஆனா தெரிஞ்சு என்ன செய்யக் கொழுந்தனார் உன்னைப் புரிஞ்சுகிறார் மத்தவங்க மாதிரி இல்லாம யோசிக்கிறார் பொண்டாட்டிக்கு மரியாதை குடுக்குறார்”.

 

 

“இதுவே என் புருஷன்கிட்ட இந்த வீரமெல்லாம் எடுபடுமா என் விலா எலும்பை முறிச்சு போட்டுடுவார்,  அவர் என்னை அடிச்சாலும் மிதிச்சாலும் நீ என்ன செஞ்சன்னுதான் அம்மா கேப்பாங்க புருஷன்னா நாலு அடி அடிக்கத்தான் செய்வாங்க வெளில வேலைக்குப் போறாங்க அந்தக் கடுப்பை வீட்டில காட்டுவாங்க நாம பொறுத்துதான் போகணும் சொல்லுவாங்க”.

 

 

“இதெல்லாம் நமக்கே தெரியும் அப்புறம் எதுக்கு வீர வசனமெல்லாம் அதான் அமைதியா போய்டுறது” என்றவள்.

 

 

 

“அவ்ளோ ஏன் நம்ம மாமியாரை எடுத்துக்கோ அவங்க மக அங்க அடிவாங்கியிருக்காங்க விசேஷத்துக்கு நகை போடாம வந்து நின்னாங்க அவங்க மேல தப்பே இருந்தாலும் மகளுக்காகப் பேச முடிஞ்சுதா உங்க மகளை வீட்டோட வெச்சுக்கோங்கன்னு அண்ணா சொல்லிடுவாங்களோன்ற பயத்துலதானே பேசாம இருக்காங்க”.

 

 

“உன் புருஷனை தூக்கி போட்டுட்டு வான்னு சொல்லுவாங்களா மாட்டாங்க அடியோ மிதியோ வாங்கிகிட்டு அங்கேயே இரு அவ்ளோதான்” என்றாள்.

 

 

கனகத்தால் நம்பவே முடியவில்லை செவ்வந்தியின் பேச்சை “அடிதூள் போ” என்றாள் ஆசையாக அக்காவின் கன்னம் கிள்ளி.

 

 

 

“சரி சரி வா நேரம் ஆச்சுன்னா அத்த கத்துவங்க” என்றாள் சராசரி மருமகளாக,  கனகமும் சிரிப்போடு எழுந்துகொண்டாள் செவ்வந்தியை வீட்டில் விட்டுவிட்டு அவள் வீட்டிற்கு சென்றாள், அன்று முழுதும் அக்காவின் நினைவே எப்படி பேசுகிறாள் இவளுக்கா ஒன்றும் தெரியாது  என்று கணவனிடமும் சொல்லிச் சொல்லி மாய்ந்து போனாள்.

 

 

அண்ணனைப் பற்றிப் பேசுகையில் ராஜகுமாரன் “சில பேருக்கு  அவங்க கோபத்தை எப்படி வெளிப்படுத்தன்னு  தெரியாம தனக்கு உரிமை பட்டவங்கள காயப்படுத்துவங்க வார்த்தையாலோ செயலாலோ அதைத்தான் யோகமும் செஞ்சிருக்கான்”.

 

 

“அவன் நடந்துக்கிட்டது சரின்னு நான் சொல்லல எல்லாரும் ஒரே மாதிரி குணத்தோட இருக்க மாட்டாங்க கனகம் அவன் அப்படி, ஆனா இனிமே மாறுவான் பாரு நிச்சயமா மாற்றம் இருக்கும்” என்றான் நம்பிக்கையாக.

 

 

அடுத்தநாள் சனிக்கிழமை விடுமுறை மனைவியை அழைத்துசென்றவன் செகண்ட் ஹாண்ட் டி.வி. எஸ் ஒன்றை வாங்கி கொடுத்தான் “எதுக்குங்க” என்றாள் கனகம்.

 

 

“அண்ணியும் நீயும் எதுக்கு வெயில்ல அலையிறீங்க உனக்கும் கஷ்டம் இனிமே அண்ணியை இதுல கொண்டுபோய் விட்டுடு, உனக்கும் வெளில எங்கயாவது போகணும்னா வேணும்ல இங்கேயிருந்து மிஞ்சிப் போனா பதினஞ்சு நிமிஷம் உன் வீட்டுக்கு எப்போ தோணுதோ போய் அத்த மாமாவைப் பாத்துட்டுவரலாம் இருக்கட்டும்”  என்றான்.

 

 

அத்தனை ஆசையாகப் பார்த்துவைத்தாள் கணவனை “இன்னைக்கு மல்லிப்பூக்கு வேலை இருக்கா” என்றான் பூவை வாங்கிக்கொண்டே.

 

 

“ஆமா ஆமா மல்லிப்பூ இல்லனா மட்டும் நீங்க வேலை செய்யாமதான் இருக்கீங்க” என்றாள் சிவந்த கன்னத்தைச் சேலைத்தலைப்பால் மறைத்துக்கொண்டு.

 

 

“ஏய் சண்டைக்கோழி வீட்டுக்குப் போகலாமா” என்றவனை முறைக்க முயன்று தோற்றவள் “சும்மா வாங்க கடைக்குப் போகணும்” என்று அந்தப் பக்கம் இழுக்க.

 

 

“நாளைக்கு சந்தை போடுவாங்க அப்போ வாங்கிக்கலாம் இன்னைக்கு கடைக்கு லீவ்” என்றவன் அவளை இந்தப் பக்கம் இழுத்துக்கொண்டு சென்றான்.

 

 

வரும்போதே பஸ்சில் வந்திருந்தனர் கேட்டதற்கு “ரொம்ப வெயில் பஸ்லயே போகலாம்” என்றான்,  இங்கு வந்துதானே தெரிகிறது வண்டி எடுக்கத்தான் என்று.

 

 

“நீ ஒட்டு நான் பின்னாடி ஒக்காருறேன்” என்றவன் அமர்ந்தவுடன் அவள் வெற்றிடையை அழுத்தமாகப் பிடித்துக்கொள்ள.

 

 

“அச்சோ என்ன செய்றீங்க” என்று நெளிந்தாள் அவள்.

 

 

“ரோட்டை பாத்து ஒட்டுடி எனக்கு உரிமை பட்டது நீகூட கேள்வி கேட்க முடியாது” என்று அவளோடு ஒட்டிக்கொண்டான் வீடு சென்று சேர்வதற்குள் அவளுக்கு மூச்சு முட்டிவிட்டது.

 

 

வண்டியில் வந்ததே பரவாயில்லை என்று தோன்றி விட்டது அவளுக்கு வீட்டில் அவன் படுத்திய பாட்டில், வண்டி வந்தபின்னே அக்காவுடன் சுற்றுவது நினைத்தால் தாய் தந்தையை காண செல்வது அங்குச் சமைப்பதை தமக்கைக்கும் கொடுத்து வருவது என்று சுற்றிக்கொண்டிருந்தாள் கனகம்.

 

 

மசக்கை படுத்தி எடுத்தது செவ்வந்தியை அவளால் முடியவேயில்லை உள்ளே செல்லும் அனைத்தும் உடனே வெளியில் வந்துவிடும் எடை குறைந்து விட்டதாக மருத்துவர் கூறினார் மிகவும் சோர்ந்துவிட்டிருந்தாள்.

 

 

ராக்காயி முன்பே அடுப்படி வேலை எதுவும் பெரிதாகச் செய்யமாட்டார் மருமகள் வந்தபிறகு அந்தப் பக்கமே போவதில்லை இப்பொழுது மனைவிக்காகத் தாயிடம் பேசினான் யோகன்.

 

 

“அம்மா அவளால முடியல நீயும் கொஞ்சம் பாரேன்” என்க ஆடித் தீர்த்துவிட்டார்.

 

 

“நான் என்ன அவளுக்கு வேலைக்காரியா இவ மட்டும்தான் புள்ள பெக்குறாளா நான் மூணு புள்ள பெத்தவடா அதும் உன் அப்பா படுக்கைல  கிடந்தார் அவரையும் பாத்துக்கிட்டேன், இப்போ இருக்கவளுங்களுக்கு உடம்பு வளயுதா”.

 

 

“மொதல்ல அப்படிதான் இருக்கும் போகப் போகச் சரியாயிடும், அவ அவ கள புடுங்கற வேலைக்குப் போறாளுங்க பிரசவத்துக்கு முன்னாடி நாளு வரைக்கும்,  வீட்ல தாளிச்சு கொட்டறதுக்கு இவ்ளோ வலிக்குதா என்று ஒரே ஆட்டம்.

 

 

யோகன் மருத்துவரிடம் கேக்க “இங்க பாருங்க சார் ஒவ்வொருத்தவங்க உடம்பும் ஒவ்வொரு மாதிரி எல்லாருக்கும் கர்ப்பகாலம் ஒரே மாதிரி இருக்காது, கைல அஞ்சு விரலே ஒரே மாதிரி இல்ல நீங்க என்னடான்னா உங்க பொண்டாட்டிகூட அடுத்தவங்களை கம்பேர் செய்றீங்க” என்றுவிட்டார்.

 

 

பொறுத்து பார்த்தவன் மாமனாருக்கு அழைத்துவிட்டான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!