28 ஷோபா குமரனின் உன் பாதியும் என் மரணத்தின் மீதியும்
Post Views:2,121
உன் பாதியும் என் மரணத்தின் மீதியும்
அத்தியாயம் 28
.
“யசோ மா, ஹோட்டல் வந்துடுச்சு பாரு. எழுந்திரு” அரவிந்தன் மகளை எழுப்ப, கரிக்கும் கண்களைக் கசக்கிக் கொண்டே வெளியே பார்த்தாள் யசோதரா. ஒருவழியாக மகாபலிபுரத்தை அடைந்திருந்தனர். நேரத்தைப் பார்த்தாள். கட்டை வண்டியில் வந்திருந்தால் கூட முன்னமே வந்திருக்கலாம் எனத் தோன்றியது.
Advertisement
அரவிந்தனை பின் தொடர்ந்து யசோதராவும் ஹோட்டல் வளாகத்தினுள் நுழைந்தாள். எக்குத்தப்பாகக் கழுத்தைச் சாய்த்திருந்ததில் கழுத்தில் வலி ஏற்பட்டிருக்க, அதை இப்படியும் அப்படியுமாக அசைத்துக் கொண்டே சுற்றும் முற்றும் பார்த்தாள். வெள்ளிக் கிழமை மாலை என்பதால் அங்கும் இங்குமாக கூட்டம் தென்பட்டது. முன் இரவு கச்சேரி ஒன்றிற்கு வாசிக்கச் சென்றிருக்க, இரவு வெகு நேரம் பிடித்தது வீட்டிற்கு வந்து சேர. காலையில் விசாகன் வீட்டில் விசேஷம் என விடியும் முன்பே அப்பா இழுத்துச் சென்றார். மதிய உணவு முடித்து, அங்கிருந்து காரில் ஏறியதுமே விட ஆரம்பித்த குறட்டை இப்பொழுது தான் நின்றது.
Advertisement
வேடிக்கை பார்த்து நின்ற மகளிடம் வந்த அரவிந்தன், “செக் இன் பண்ணியாச்சு, ரூம் போலாமா?” என மகளை அழைத்தார்.
Advertisement
ஒற்றை அறையில் இரண்டு படுக்கைகள் இருந்தன. சென்றதும் ஒன்றில் விழுந்தவளின் மூளை விழித்துவிட்டிருக்க, விட்ட தூக்கத்தைத் தொடர முடியவில்லை. கற்சிலைகளும் கோபுரங்களும் சிந்தனையை நிறைத்தன. 7-ஆம் நூற்றாண்டில் பல்லவ நாட்டின் முக்கியத் துறைமுகமாக விளங்கிய மாமல்லபுரத்தைப் பார்க்க ஆசைப்பட்ட நாள்கள் பல. அப்பொழுது அம்மா இருந்தார். “லீவுக்கு போகலாம். அப்படியே அம்சாவ பார்த்துட்டு வரலாம்” என அம்மா கூறியிருந்தார். ஆனால் அது நடக்கவே இல்லை. அம்மாவின் இழப்பிற்குப் பின் சொந்தங்களோடு இருந்த பந்தம் எல்லாம் எங்கோ சென்றிருக்க, சித்தியும் நினைவில் இல்லை… பல்லவனின் மகாபலிபுரமும் நினைவில் இல்லை.
Advertisement
மூன்றரை வருடங்களுக்குப் பின் சொந்தங்களைச் சென்ற மாதம் அப்பா வழி ஒன்றுவிட்ட பெரியப்பா மகளின் திருமணத்தன்று பார்த்தாள். ‘ஏன் அந்தக் கச்சேரிக்கு வாசிக்கச் சென்றோம்?’ என எண்ணாத நாளில்லை. அதன் தாக்கம் குறையும் முன்பே மீண்டும் ஒரு குடும்ப விழா!
“ஏன் மா தூக்கம் வரலியா? காபி சொல்லவா?” அப்பாவின் கேள்விக்குக் கண் திறந்தவள், ‘முகம் கழுவிட்டு வரேன். நாம வெளியில போய் குடிக்கலாம் பா’ எனக் கையசைத்தாள்.
கையசைத்துச் சென்ற மகளின் முதுகைப் பார்த்தவருக்குப் பெருமூச்சு வந்து போனது. காது கிழியப் பேசிய மகளால் எப்படிப் பேசாமல் இருக்க முடிகிறது? குரலை மீட்டெடுக்கும் எண்ணம் ஏன் இல்லாது போனது? மருத்துவரைக் காணச் செல்ல எப்படி எல்லாமோ கேட்டுவிட்டார் அரவிந்தன். மகள் அசைவதாக இல்லை. குழந்தை என்றால் தூக்கிச் சென்றுவிடலாம். வளர்ந்து நிற்கும் மகளை என்ன கூறி அழைத்துச் செல்வது?
“பேச்சு போயிடுச்சா?” என்பதையே திருமண வீட்டில் பல விதமாகக் கேட்டு அரவிந்தனை படுத்தி எடுத்தனர் சொந்த பந்தங்கள். “டாக்டர பாக்கலியா?” என்ற கேள்விக்கு அரவிந்தன் தவித்துப் போனார். முன்பு, புத்தி சுவாதீனம் இல்லை… கருவுற்றிருந்தாள் எனக் காரணங்கள் இருந்தன. இன்று, மகள் நன்றாக இருக்கிறாள். ஆனால் மருத்துவரைக் காண வரமாட்டேன் எனப் பிடிவாதமாக நிற்கிறாள். அவரும் என்ன செய்வார்?
“ஒழுங்கான ஒரு டாக்டர பாருங்க மச்சான். காலக் காலத்துல கல்யாணம் பண்ண வேண்டாமா? வயசாகிட்டே போகுதில்ல?” எனச் சொந்தம் ஒன்று ஆரம்பித்து வைக்க, “நம்ம பரமேஸ்வரன் மகனுக்கு பொண்ணு பாக்கிறாங்க” என ஒருத்தர் தலையில் இடியை இறக்கினார். பரமேஸ்வரனின் மகனுக்குத் திருமணம் முடிந்து ஆறு வருடங்கள் கழித்துப் பிறந்த பிள்ளைக்கு இன்று பத்து வயதாவது இருக்கும்.
“அபிஷேக் வயசென்ன என் பொண்ணு வயசென்ன?” எனக் கேட்டவருக்கு, ‘இது தான் நிதர்சனம். ஏற்றுக் கொள்ளத் தயாராகு’ எனப் பல அறிவுரைகளோடு மனிதனின் இரத்த அழுத்தத்தை ஆளாளுக்கு ஏற்றிவிட்டனர். அதன் நிமித்தமே இன்று மகளோடு மகாபலிபுரத்திற்கு வந்திருக்கிறார் அரவிந்தன்.
அரவிந்தனின் ஒன்று விட்ட தம்பி, வினித்தின் வீட்டு விசேஷத்திற்கு வந்திருப்பதாக யசோ எண்ணி இருக்க, அப்படியே அவளின் சித்தி, அதாவது வினித்தின் மனைவி, அம்சா கூறியிருந்த சம்பந்தத்தை நேரில் பார்த்து விசாரித்து விடலாமே என்பதே அரவிந்தன் வந்ததின் பிரதானக் காரணம்.
உறவு என்ற ரீதியில் பழக்கம் இருந்தாலும், அவர்கள் வீட்டில் தங்கிச் செல்லும் அளவிற்கு நெருக்கமும் இல்லை, நெருங்க விரும்பவும் இல்லை என்பதாலேயே ஹோட்டல் அறையில் வாசம்.
ஹோட்டல் வளாகத்தில் இருந்த திறந்தவெளி உணவகத்தில் அப்பாவும் மகளுமாக அமர்ந்தனர். மேசையில் இரண்டு காலி கோப்பைகளும் ஒரு கொதிகெண்டியும் அவர்கள் முன் வைக்கப்பட்டன. அருகே வெள்ளை கட்டிகளாகச் சர்க்கரை இருந்தன. சூடான தேநீர் இதமாகத் தொண்டையில் இறங்கியது. சில நேரங்களில் யார் வீட்டிலோ மணக்கும் குழம்பு, யாரையோ நினைவு படுத்தும். மறந்து போன சில விஷயங்கள் பல நினைவலைகளில் இருந்து வெளிவரும்.
சூடான தேநீர் அரவிந்தன் நினைவலைகளைத் தீண்டி இருக்க வேண்டும். மனிதன் ரசனையோடே பேசினார். “எங்க அம்மா போடற டீ மாதிரியே இருக்கு. வீட்டுல கறந்த நல்ல பசும் பால்ல போட்டு தருவாங்க. காலேஜ்… வேலை… திருச்சின்னு வந்த பிறகு அந்த டேஸ்டே மறந்து போயிடுச்சு” என அப்பா ரசித்து அருந்துவதை வாஞ்சையோடு பார்த்து அமர்ந்திருந்தாள் பெண்.
“இந்த வினித்துக்கு எங்க வீட்டுல இருந்து ரெண்டு தெரு தள்ளித் தான் வீடு. காலையில காபிக்கு பால் எங்க வீட்டுல இருந்து தான் வாங்குவாங்க. பால் வாங்கற சாக்குல தினமும் ஒரு லோட்டா டீய குடிச்சுட்டு போவான். அண்ணா அண்ணான்னு என் பின்னாடியே சுத்தின காலம் அது. ஒரு கட்டத்துல வாழ்க்கை ஓட்டத்துல நெருங்கிய உறவுங்க கூட தள்ளி போயிடுறாங்க.” எனப் பெருமூச்சு விட்டவர், “கேட்டியே எதுக்கு பா நிச்சயத்துக்கு எல்லாம் போகணும்ன்னு… சொந்தம்ன்னு நாலு பேரு விசேஷத்துக்குப் போய் வந்தா தானே நாளைக்கு உனக்குன்னு வந்து நிக்க ஆளு இருப்பாங்க” என்றார்.
‘எனக்கு நீங்கப் போதும் பா’ எனக் கையசைத்தாள் மகள்.
“எனக்கு போதலையே மா. நான் போன பின்ன நீ தனியாகிடுவியே மா. உனக்குன்னு ஒரு துணை…”
அரவிந்தன் ‘வாழ்க்கை துணை’ என ஆரம்பித்த மாத்திரத்திலேயே யசோ கண்களை இறுக மூடிக்கொள்ள, மனிதன் அதன் பின் ஒன்றும் கூறவில்லை. விசேஷம் அன்று அம்சா காட்டிய புகைப்படம் கண்முன் வந்தது.
“நம்ம யசோக்கு ஏத்த பையன்.“ என்றபோதே மகளின் மனம் அறிந்தவராய், “யசோக்கு இப்போ பாக்கல மா. ஒரு வருஷம் போகட்டும்” என்றார்.
“நல்ல பையன் மாமா. சொந்தமா தொழில் பண்றான். அண்ணா அண்ணி ரொம்ப தன்மையானவங்க. வசதியான வீடு மாமா. இவனுக்கு அப்பறம் சின்னவன் ஒருத்தன் இருக்கான். வீட்ட எதிர்த்து காதலிச்ச பொண்ண கல்யாணம் பண்ணிட்டு போயிட்டான். பிரச்சனையே இல்லாத சம்பந்தம். யசோதராவோட குறைய பெருசு படுத்த மாட்டாங்க. நீங்க, நம்ம நளினி நிச்சயத்துக்கு வாங்க. நேர்ல விசாரிச்சு பாருங்க. அண்ணன் வீட்டுல இருந்தும் வருவாங்க. சும்மா பாத்து பேசுங்க. உங்களுக்கு பிடிச்சிருந்தா யசோதராட்ட பேசுங்க… எல்லாம் சரி வந்தா, அண்ணன் வீட்டுல பேசுவோம். இல்லியா… நிச்சயம் முடியவும் ஊரச் சுத்தி பார்த்துட்டு கிளம்பிடுங்க. யாருக்கும் தெரிய வராது…” என ஏதேதோ கூறியிருக்க, அரவிந்தனும் கிளம்பி வந்துவிட்டார். ஆனால் மகளின் வேதனை படிந்த முகம் பார்த்தவருக்கு இது தேவையற்ற வேலையோ எனத் தோன்ற ஆரம்பித்தது. மகளின் எதிர்காலத்தை எண்ணி, தோன்றிய எண்ணத்தை முளையிலேயே கிள்ளி போட்டார்.
“பீச்சுக்கு போகணும்ன்னு சொன்னியே… போறியா மா?” எனப் பேச்சின் திசையை மாற்றினார் தகப்பன்.
‘ஆம்’ என்பதாகத் தலையசைத்தவள் இருக்கையிலிருந்து எழுந்தாள். கடல் அலையில் கால் நனைக்கக் கிளம்பிய மகளிடம், “சுத்தி பாத்துட்டு நீ நேரா ஹோட்டல் வந்துடு மா. அப்பா, காலாற ஒரு அரமணி நேரம் நடந்துட்டு வரேன். கார்ல மணிக் கணக்கா உக்காந்தது முட்டி வலிக்குது. ஆறு மணிக்கு நிச்சயதார்த்தம், மறந்திடாத” என்ற அரவிந்தன் நிலப் பரப்பை நோக்கி நடந்தார்.
அரை மணி நேரத்தில் வருவதாகக் கூறிய அரவிந்தன், பார்க்க வேண்டியவரை பார்த்துவிட்டு அறைக்குள் வந்த வேளை யசோதரா நிச்சயதார்த்த விழாவிற்குக் கிளம்பி இருந்தாள். தகப்பன் கண்களுக்கு அவரின் செல்ல மகள் இளவரசியாகவே தெரிந்தாள். எப்படி வாழ்ந்திருக்க வேண்டிய மகள்? எப்படியான வரன்கள் மகளுக்கு வருகிறது? மனம் பிசைந்தது. மகளுக்கு எப்படியேனும் நல்ல வாழ்வை ஏற்படுத்திக் கொடுத்திட வேண்டும் என மனதில் கூறிக் கொண்டவருக்கு நிச்சய விழாவிற்குச் செல்ல மனமே இல்லை. ஆனால் மகளிடம் என்ன கூறி அதை தவிர்ப்பது? காரணம் இல்லாததால், அமைதியாக மகளோடு கிளம்பினார்.
சிறிய மண்டபம் ஒன்றில் நிச்சயம் நடந்தேறியது. ஆடம்பரமற்ற சிறிய விழாவில் கலந்து கொள்ள இரு வீட்டினரோடு, சில முக்கிய உறவினர்கள் மட்டுமே வந்திருந்தனர். கூட்டத்தைப் பார்த்தவளுக்கு இதற்கு எதற்காக சென்னையிலிருந்து அப்பா அழைத்து வந்தார் என்றே தோன்றியது.
அம்சா மிகவும் அன்பாகப் பழகினார். “சின்னதுல பார்த்தது. இப்போ நினைவு இருக்கா?” எனக் கையசைத்து சத்தமாகப் பேசினார். காதை அடைத்தது. இவளுக்கு அவரை தெரியவில்லை. புன்னகைத்து வைத்தாள்.
“உன் அம்மா எனக்கு அக்கா உறவு முறை. உன் சித்தப்பா உன் அப்பாக்கு உறவு. ஆக, உனக்கு நாங்க ரெண்டு பேருமே உறவு தான்” என எதை எதையோ பேசினார். வந்த நாற்பது பேரிடமும் அறிமுகம் செய்து வைத்தார்.
“இவங்க என் அண்ணி… உனக்கு அத்த முறை” என அவர்களிடம் வந்த பெண்மணியையும் அறிமுகப் படுத்தினார் அம்சா. ஏதோ இவளுக்குப் பிறவியில் இருந்தே காதும் வாயும் பேச முடியாதது போல் அடித்தொண்டையில் இருந்து அவர் சத்தமாகக் கையசைத்துப் பேசுவதும், இவள் போட்டிருக்கும் அணிகலங்களைப் பிடித்து பார்ப்பதும், இவளை ஆராய்ச்சி பார்வை பார்ப்பதும் என யசோவை நெளியச் செய்தார் அத்தை பெண்மணி.
“அப்போ நாங்க கிளம்பறோம் மா” என அரவிந்தன் வரவும், தப்பித்தோம் பிழைத்தோம் எனக் கிளம்பும் வகையில் வணக்கம் வைத்தாள் இருவருக்கும்.
“வீட்டுலயே தங்க சொன்னா கேக்கல. வராதவங்க வந்திருக்கீங்க, ரெண்டு நாள் எங்களோட இருந்துட்டு போயிருக்கலாம்” எனத் தம்பியும் தம்பி மனைவியும் வருந்தினர்.
“இருக்கட்டும் மா… உங்களுக்கு இருக்க வேலைக்கு நடுவுல நாங்க எதுக்கு தொந்தரவா? கிளம்பறோம் மா” என அரவிந்தன் பிடி கொடுக்காது கிளம்ப முற்பட, “காலையில டிஃபனுக்கு கண்டிப்பா வந்துடணும். டிஃபனும் லன்ச்சும் எங்க வீட்டுல தான். ரெண்டு வேளையாது சமைச்சு போடாட்டா எனக்கு மனசு சங்கடப்படும்” எனக் கோரிக்கை வைக்க, அரவிந்தனுக்கு அதில் விருப்பம் இல்லை.
“இருக்கட்டும் மா” என அவர் கூற, “யசோ மா… என் தங்கமில்ல… இந்தச் சித்தி கூட ஒரு அரை நாள் இருக்கக் கூடாதா?” என யசோவின் கரத்தை பற்றிக் கொண்டார்.
தகப்பன் மகளைப் பார்த்தார். ‘சரி எனச் சொல்’ என்பதாகக் கண்மூடி திறந்ததைப் பார்த்தவர், மனமே இல்லாது “சரி மா” எனக் காலை உணவுக்கு பார்ப்பதாகக் கூறிக் கிளம்பினர்.
“நீ போய் துணிய மாத்து” என அறைக்கு வெளியே இருந்த பூங்காவில் அமர்ந்து கொண்ட அரவிந்தனை பார்த்துக் கொண்டே அறைக்குள் நுழைந்தாள் யசோ. அப்பாவின் முகம் சரியே இல்லை. அம்மா இல்லாது இப்படியான இடங்களுக்கு வரவே பிடிக்கவில்லை யசோவிற்கு. அப்பாவிற்கும் இது இரண்டாவது முறை. சென்ற முறை வெளியே சென்று வந்தபோதும் இப்படித் தான் இடிந்து போய் அமர்ந்திருந்தார் தகப்பன்.
அம்மா இருந்தவரை அம்மா இல்லாது அப்பா எந்த விசேஷங்களுக்கும் சென்றதில்லை. அம்மாவின் நினைப்பாக இருக்கும் என்ற தோன்றியது. தகப்பனின் வதங்கிய முகம் உள்ளுக்குள் ஏதோ செய்தது.
உடை மாற்றி வந்தவள் அமைதியாகத் தகப்பனின் அருகில் அமர்ந்து அவரின் கரத்தை பற்றிக் கொண்டாள். ஆறுதல் அளிக்க வேண்டிய விரல்கள் அவருள் கலவரத்தை உண்டு பண்ணியது. ‘மகளை இப்படியே விட்டு விடுவேனோ’ என உள்ளுக்குள் அழுத்தம் அதிகமானது. ஒருவரும் மகளுக்கு நிலைக்கவில்லையே… தானும் சென்றுவிட்டால்? அரவிந்தம் இதயம் உண்மையிலுமே பிசைந்து வலிக்க, நீள மூச்சுகளால் தன்னை சமன் செய்ய முயன்றார்.
‘என்ன ப்பா ஆச்சு?’ என்ற மகளின் கலவர முகம் பார்த்தவர், “ஒண்ணும் இல்லமா… சாப்பாடு நெஞ்சிலேயே நிக்குது. அசிடிட்டி” என நெஞ்சைப் பிடித்ததற்குக் காரணம் கூறினார். அடுத்த நாள் விடியல் அவருக்கு இன்னும் அதிகமான சோதனையை வைத்திருப்பது அறியாது அன்றைய இரவு தூக்கத்திற்காக மாத்திரை இரண்டை விழுங்கினார் அரவிந்தன்.
யாருக்காகவும் காத்திருக்காது சூரியன் தன் தங்க கரங்களால் பூமியை அணைக்க தயாராகிக் கொண்டிருந்தான். இருளை கிழித்துக் கொண்டு வரும் அந்தத் தங்கக் கதிர்களைக் காணும் ஆவலில் எழுந்து அமர்ந்தாள் யசோதரா. அரவிந்தன் உறங்கிக் கொண்டிருக்க, சத்தம் காட்டாது ஹோட்டலோடு ஒட்டியிருந்த உணவகம் சென்றாள் யசோதரா. ஒரு கப் காபியோடு அமர்ந்தவள் கண்களில் ஒருவரும் தென்படவில்லை. இடம் அமைதியைப் பூசியிருக்க அவளால் இடத்தையும் காபியையும் நன்கு ரசிக்க முடிந்தது.
கைப்பேசி சிணுங்க, அதில் கவனம் சென்றது. கல்லூரி குழுமத்திலிருந்து புகைப்படங்கள் வந்த வண்ணம் இருந்தன. ‘பிரெஸ்ட் கேன்சர் அவர்னஸ்’ என்ற ஆங்கில வாக்கியம் தாங்கிய சட்டையோடு மாணவர்கள் தங்களின் சைக்கிளோடு போஸ் கொடுத்துக் கொண்டிருந்தனர். சென்னையைச் சார்ந்த சில கல்லூரிகளில் இருந்து மாணவ மாணவிகள், மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வுக்காக, விடியற்காலை ஐந்து மணிக்கு புறப்பட்டு ஈசிஆர் வழியாக மகாபலிபுரம் வருவதாக ஏற்பாடு ஆகி இருந்ததை இவள் முன்பே அறிவாள். அதில் களஞ்சியம் கல்லூரியும் அடக்கம். ஆனால் இவ்வளவு பெரிய கூட்டத்தை எதிர்பார்க்கவில்லை பெண்.
முதல் வரிசையில் ஒருவன் நின்றிருந்தான். மெலிதான டையர்கள் கொண்ட சைக்கிள், கை கவசம், முட்டி கவசம், தலைக் கவசம் என அனைத்தும் அணிந்திருந்து, கால் ஊன்றி நின்றிருந்தவன் தோளில் குட்டி பொம்மை போல் எதுவோ இருந்தது. தூரத்திலிருந்து எடுத்த படம் என்பதால் புள்ளி போல் இருந்தனர் மக்கள். படத்தைப் பெரிது படுத்த அது பொம்மை இல்லை… பொம்மை போல் அழகாக அவன் தோளில் அமர்ந்திருக்கும் குட்டிக் குழந்தை. கௌதமனா அது? அப்படி தான் தோன்றியது. அது கௌதமனாக இருந்தால், குழந்தை ? குட்டி யாழி பேபியாக இருக்க வேண்டும்.
அடுத்து வந்த காணொளியில் ஆர்ப்பாட்டத்தோடு சைக்கிளில் தங்களின் பயணத்தை ஆரம்பித்தனர் கல்லூரி மாணவர்கள்.
“என்ன மா சீக்கிரம் எழுந்துட்டியா?” சத்தம் கேட்டுத் திரும்பியவளின் கவனம் அப்பாவிடம் சென்றது. இருவருமாக ஹோட்டலுக்கு பின் இருந்த கடலோரம் கால் நனைய நடந்தனர்.
“காலை சாப்பாட வினித் வீட்டுல முடிச்சுட்டு அங்க இருந்து கிளம்பிடலாம் மா. இங்க சுத்தி பாக்க நிறைய இருக்கு. எல்லாத்தையும் பார்த்துட்டு வெளில சாப்பிடலாம். ஒரு ஆறு இல்ல ஏழு மணிக்கா கிளம்பினா நைட் தூங்கற நேரம் வீட்டுக்கு போயிடலாம். சரி தானே மா?” என அரவிந்தன் கேட்க, ‘சரி’ என்பதாகத் தலை அசைத்தாள்.
முன்பு யசோதரா இப்படி இருந்தது இல்லை. அதிகம் பேசுவாள். தோழிகளோடு நிறைய ஊர் சுற்றுவாள். எங்குச் சென்றாலும் அந்த இடத்தைச் சுற்றி பார்ப்பதில் அத்தனை ஆர்வம் காட்டுவாள். பார்ப்பதை எல்லாம் வாங்கிக் கொள்வாள். வயிற்றிற்கு வஞ்சம் வைக்காது அதை நிறைப்பாள். ‘வாய மூடேன் டி’ என அவளின் அன்னை கெஞ்சினாலும் வாயை மூட மாட்டாள். இன்று தன்னோடு எந்த உணர்ச்சியும் இல்லாது, என்ன கூறினாலும் தலையாட்டி பொம்மையாய் தலை அசைத்து வரும் மகளின் வாழ்வு இப்படியே இருந்துவிடுமா என யோசித்து யோசித்து அரவிந்தனுக்கு தலை வலித்தது.
அன்று காலை உணவிற்கு வினித்தின் வீட்டிற்குச் சென்றனர் அப்பாவும் மகளும். முன்தின விழாவுக்கு வந்த உறவினர்களில் சிலர் வீட்டில் இருந்தனர், அதில் அம்சாவின் அண்ணன் குடும்பமும் அடக்கம். ‘அய்யோ இவங்களா?’ என பார்த்தாள் யஷோதரா. வரவேற்புகள் எல்லாம் முடிய, “நேரமாச்சு சாப்பிடலாமா?” என கேட்டு நின்றார் அம்சா.
காலை உணவாக இட்டிலி, பொங்கல், பூரி என பலதும் மேசையை நிரப்பி இருந்தன. “பெரியவங்கல்லாம் உக்காரட்டும், வா மா யசோ எல்லோருக்கும் பரிமாறலாம்” எனத் தன் மகளோடு யசோவையும் பரிமாற இணைத்து விட்டார் அம்சா. நடப்பதை பார்த்துக்கொண்டிருந்த அரவிந்தனுக்கு எதுவும் சரியாகப் படவில்லை. சீக்கிரம் கிளம்பினால் போதும் என்று இருந்தது மனிதனுக்கு.
கூட்டம் அதிகமாக இருக்கவும் சித்தியின் பேச்சைத் தட்ட மனமில்லாமல் சித்தியோடும் சித்தி மகளோடும் உணவைப் பரிமாறும் வேலையில் தன்னை இணைத்துக் கொண்டாள் யசோ.
உணவு படலம் முடியவும், “எல்லாருக்கும் டீ குடுத்துட்டு வா டா யசோ” எனப் பேச்சோடு பேச்சாகச் சித்தி பணித்தார். இவளும் தேநீர் அடங்கியிருந்த தட்டோடு நடுக்கூடம் வர, அம்சாவின் அண்ணன் குடும்பத்து ஆட்கள் நீளவிருக்கையை முற்றுகை இட்டிருந்தனர்.
அனைவருக்கும் தேநீரைக் கொடுத்தவள் அப்பாவின் பக்கம் திரும்பினாள். வீடு முழுவதும் இருந்த இருபதுக்கும் மேற்பட்டவர்கள் நடுக் கூடத்தை நிறைத்திருக்கவும் அரவிந்தனுக்கு மனம் படபடவென அடித்துக் கொள்ள, “வேண்டாம் மா. லேட் ஆகுது. ரூம் செக் அவுட் செய்யணும். நாம கிளம்பலாம்” என எழுந்து கொண்டார். மகள் இன்னும் உணவருந்தாது தெரியும், ஆனாலும் அவரால் அங்கு அமர முடியவில்லை.
“என்ன அண்ணா எழுந்துட்டீங்க? உக்காருங்க. இப்போவே பேசிடுவோம்” என அத்தை பெண்மணி அவரின் தொண்டையைச் செருமிக் கொண்டு உரைக்க, அப்பாவைக் கேள்வியாக முகம் சுருக்கி பார்த்தாள் யசோதரா.
“எங்களுக்கு பொண்ண ரொம்ப பிடிச்சிருக்கு. நீ சொல்லுமா யசோ… உனக்குச் சம்மதம் தானே?” என அவர் கேட்கவும் யசோவின் முகத்தில் அப்பட்டமான குழப்ப ரேகை.
“பையன பிடிச்சிருக்காமா?” அவர் மீண்டும் கேட்க, ‘இந்தம்மாக்கு என்ன பைத்தியமா?’ என அப்பாவைப் பார்த்தாள்.
யசோவின் கரத்தில் இருந்த தட்டை வாங்கிய அம்சா, “வா யசோ, அங்க உக்காருவியாம்” எனப் பெண்ணை சபையின் பக்கம் திருப்பினார்.
“நேத்தே பையன கடையில பார்த்துட்டு போனீங்கன்னு வசந்த் சொன்னான். நேத்து மண்டபத்துல வச்சு யசோதராவ பார்த்துட்டு, பொண்ண பிடிச்சிருக்குன்னு சொல்லிட்டான். நீங்க தான் சொல்லணும்” என அவர் அரவிந்தனை மகளிடம் மாட்டிவிட, அப்பாவை அதிர்ச்சியாகப் பார்த்தவள் கண்களை இறுக மூடிக் கொண்டாள். மனம் படபடவென அடித்துக் கொள்ள ஆரம்பித்தது. உடல் முழுவதும் உஷ்ணம் பரவ மயக்கம் வரும் போல் இருந்தது யசோவிற்கு.
அம்சா கூறியது என்ன? நடப்பது என்ன? ‘இது என்ன கூத்து?’ என உள்ளுக்குள் சலித்துக் கொண்ட அரவிந்தன், “தெரிஞ்ச பையன் ஒருத்தன் இருக்கதா சொன்னதால விசாரிச்சேன். அவ்வளவு தான். என் பெண்ணுக்குக் கூட இன்னும் நான் சொல்லல. அவளும் இன்னும் கல்யாணத்துக்கு ரெடி ஆகல. எங்கயோ புரிதல்ல தப்பு நடந்திருக்கு. நீங்க இப்படி பொண்ணு பாக்கிற மாதிரி வருவீங்கன்னு எங்களுக்குத் தெரியாது. தெரிஞ்சிருந்தா முன்னமே வேண்டாம்ன்னு சொல்லி இருப்பேன். மன்னிச்சுடுங்க” எனக் கூறவும், அத்தை பெண்மணிக்கும் அவர் கணவனுக்கு எங்கிருந்து தான் அவ்வளவு கோபம் வந்ததோ, “என்ன அம்சா இது?” என அம்சாவிடம் பாய்ந்தனர்.
“அது அண்ணி…” என அவர் சமாதானம் பேச வர, “உங்கிட்ட இத எதிர்பாக்கல. ஒழுங்கா விபரம் சொல்லி இருந்தா இந்த சங்கடத்த தவிர்த்திருக்கலாம். இப்போ காத்துட்டு இருக்க எம்புள்ளைக்கு என்னன்னு சொல்ல?” என்றவர், யசோவிடம் வந்து, “இவன் என் மகன்” எனக் கைப்பேசியில் இருந்த புகைப்படத்தைக் காட்டினார். என்ன நடக்கிறது இங்கே என அரவிந்தனுக்கு தலை சுற்றியது.
தன் மகளுக்குச் சற்றும் பொருத்தமே இல்லாதவனைப் பற்றிப் பேசி, ஏன் பேச்சை வளர்க்க வேண்டும்? “வேண்டாம்ன்னு சொன்னா புரிஞ்சுக்கோங்க…” என அரவிந்தன் மகளின் அருகில் வந்தார்.
“இவ்வளவு தூரம் வந்த பிறகு, உடைச்சு பேசிடுவோமே” என்றவர், “என் மகனுக்கு பொண்ண பிடிச்சிருக்கு. ஊமையா இருந்தாலும் பரவாலன்னு சொல்லிட்டான். அப்பறம் என்ன? இவன வேண்டாம்ன்னு சொல்லிட்டு, ஊம பொண்ண கடைசி வரைக்கும் கூடவே வச்சிருக்க போறீங்களா? இல்ல மைசூர் மகாராஜாவோட பேரன பாக்க போறீங்களா?” என அவர் பேசிக் கொண்டே போக, “போதும் நிறுத்துங்க மா. என் பொண்ணுக்கு எப்போ யார கல்யாணம் பண்றதுன்னு நான் பார்த்துக்கிறேன்” என்ற அரவிந்தன், “கிளம்பு யசோமா” என்றார்.
“கடவுளுக்கு கண் இருந்தா, என் மகன் மனசுல ஆசைய வளத்துட்டு, இப்படி ஏமாத்திட்டு போற உனக்கு நல்லது நடக்கவிடுவாரா…” அத்தை பெண்மணி ஒரு பக்கம் சபிக்கும் வார்த்தைகளைக் கொட்ட… “இவன விட நல்ல பையன் உனக்குக் கிடைக்க மாட்டான் யசோமா… யோசிடா” அம்சா ஒரு பக்கம் பேச, கோபம் முட்டிக் கொண்டு வர, அங்கு நிற்கப் பிடிக்காது, யசோ கிளம்பிவிட்டாள்.
“யசோ மா” எனப் பின்னோடே ஓடி வந்த அப்பா அவளுக்குத் தெரியவே இல்லை. ‘ஏன் டா என்னைத் தனியா விட்டுவிட்டுப் போன?’ என விட்டுப் போனவனோடு சண்டை இட்டுக் கொண்டிருந்தாள். ‘யாருனே தெரியாதவங்க எல்லாம் எனக்குச் சாபம் விடுறாங்க. எல்லாம் உன்னால தான்’ என உள்ளுக்குள் குமுறியவளால் ஒரு கட்டத்திற்கு மேல் அடக்க முடியாதவளாக நெஞ்சைப் பிடித்துக் கொண்டாள். அழுகை என்ற ஒன்று வந்தாலாவது நன்றாக இருக்கும் எனத் தோன்றியது. ஆனால் கண்ணீரும் அவனோடு சென்றுவிட்டதே. கண்ணீர் விட்டுக் கதறுவதற்கும் கொடுத்து வைத்திருக்க வேண்டும் போலும்.
அடுத்த மூன்று மணி நேரமும் யசோ தலையணையைத் துணைக்கு அழைத்துக் கொண்டாள். அதன் பின் எழுந்தவள், மனதையும் துயரத்தையும் துடைத்துப் போட்டாள்.
கைப்பேசியில் இசையை ஒலிக்க விட்டாள். புல்லாங்குழல் எடுத்து அமர்ந்தாள். ஜன்னலுக்கு வெளியே குழந்தைகள் விளையாடிக் கொண்டிருந்தனர். ஒன்றரை வயது மதிக்கத்தக்கக் குழந்தை ஒன்று அப்பாவிடம் தத்தி தத்தி ஓடினாள். மகளைத் தூக்கிப் போட்டுப் பிடித்தான் தந்தை. பட்டென அவன் தோளில் தட்டினாள் ஒருத்தி. இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துச் சிரிக்க, குழந்தையும் சிரித்தது. இனிமையான ஓவியத்தைப் பார்த்தால் மனம் கதறுமா? அந்த இடத்தில் தன்னையும் தன்னவனையும் தன் மகளையும் நிறுத்திப் பார்த்தாள். அவன் முகம் மங்கலாகத் தெரிய… குழந்தையின் முகம் தெரியவே இல்லை. நிறைவு பெறாத ஓவியத்தால் யசோதாவின் மனம் கதறியது. வலியில் துடித்தது.
‘ஆசை முகம் மறந்து போச்சே -இதை
ஆரிடம் சொல்வேனடி தோழி
நேசம் மறக்கவில்லை நெஞ்சம் – எனில்
நினைவு முகம் மறக்கலாமோ’ எனக் கண்கள் மூடி வாசிக்க ஆரம்பித்தாள்.
புல்லாங்குழல் அதன் இனிமையான நாதத்தால் அந்த அறையை நிறைக்க, மெத்தையில் அமர்ந்த அரவிந்தன், விழி மூடி படுத்துக் கொண்டார். கண் மூடி மன்னவனை நினைத்து வாசித்துக் கொண்டிருந்த மகளின் இதயம் கதறியது. கேட்டுக் கொண்டிருந்த தகப்பனின் விழி ஓரம் வழிந்த நீரைத் துடைக்க ஆளில்லாது, அது காதுமடலை நனைத்தது.
வாசிப்பை யசோ நிறுத்தவே இல்லை. கண்ணீரைக் கொடுத்த அதே இசை, இருவரின் மனதையும் ஈரத் தென்றலாய்… சாரலாய்… இதமாய் வருடிக் கொண்டிருந்தது.