Skip to content
Post Views: 6,372
“வந்து உங்க பொண்ணை அழைச்சிட்டு போங்க” என்ற மருமகனின் அழைப்பில் அலறியடித்துதான் வந்தனர் பழனிசாமி செல்லியம்மா தம்பதியர்.
Advertisement
“என்னாச்சு மாப்ள” என்று பதறிக் கேட்டவரை பார்த்தவனுக்கு ஐயோ என்றிருந்தது.
Advertisement
Advertisement
“நீங்கப் பயப்பட ஒண்ணுமில்ல செவ்வந்திக்கு முடியமாட்டது நல்லா ஓய்வு கொடுக்கணும்னு டாக்டர் சொல்றாரு இங்கயும் அவளால பாத்துக்க முடியல சரியாகுறவரைக்கும் உங்க வீட்டில இருக்கட்டும்” என்றான் விறைப்பாகவே, போன உயிர் திரும்பி வந்தது பெற்றவர்களுக்கு.
Advertisement
“என்னடா நினைச்சுட்டு இருக்க இவளை அங்க அனுப்பிட்டா இங்க யார் பாத்துகிறது, ஒரு புள்ளய பெத்தெடுக்க இம்புட்டு அழிச்சாட்டியமா” என்றார் ராக்காயி
“அம்மா அதுதான் டாக்டர் சொல்றாங்கள்ல எல்லார்க்கும் ஒரே மாதிரியே இருக்காதுன்னு இவளுக்கு முடியல அதுக்கு என்ன செய்ய? உங்களால பாத்துக்க முடியாது சொல்லிட்டீங்கல்ல அவங்க அம்மாவே பாத்துக்கட்டும்” என்றான்.
“அவளை அவங்க அம்மா பாத்துக்கிட்டா இங்க யாருடா பாக்குறது, ஒருத்தி எனக்கென்னன்னு தனியா போய்ட்டா இவளும் அவ பாட்டுக்குப் போய்ட்டா வீட்ல எல்லாத்தயும் யார் பாக்க” என்றார் ராக்காயி.
செல்லியம்மாவின் விழிகள் மகளை ஆராய்ந்தது பத்து நாட்களுக்கு முன்பு கூட நன்றாகவே இருந்தாள் இப்பொழுது ஆளே பாதியாக இளைத்திருந்தாள், காலைப் பேசும்போதும் சொல்லியிருந்தாள் முடியவில்லை மிகவும் சோர்வாக இருக்கிறது என்று.
‘மசக்கை அப்படித்தானே இருக்கும்’ என்று எண்ணி “சரியாகிவிடும்” என்று சொல்லியிருந்தார் அதோடு ஏற்கனவே கனகத்தின் மீது கோபமாக இருக்கிறார் சம்மந்தி இந்த நேரம் செவ்வந்தியை கொஞ்சம் நாட்கள் அழைத்துச்செல்லவா என்று கேட்டால் அதற்கும் ஏதுனும் சொல்லுவாரோ என்று பயந்தே வாய் திறக்கவில்லை.
இப்பொழுது மாப்பிள்ளையாகக் கூப்பிட்டு உங்கள் மகளை அழைத்துச்செல்லுங்கள் என்று கூறியும் இவர் இப்படி பேசுகிறாரே என்றிருந்ததது.
பழனிசாமிதான் பேசினார் “கொஞ்சம் உடம்பு தேறுர வரைக்கும் எங்க கூட இருக்கட்டுமே சம்மந்தி, வாந்தி மயக்கம் நின்னதும் கொண்டு வந்து விடுறோம்” என்றார்.
“நல்லா விவரமாத்தான் வளத்திருக்கீங்க பிள்ளைங்களை ஒருத்தி வந்த வேகத்துல புருஷனை சுருட்டிக்கிட்டு போய்ட்டா தோ இவ ஊரே கேளு நாடே கேளு நானு மாசமா இருக்கேன்னு நாடகம் போடுறா அருமை பெருமையா ரெண்டு ஆம்பள பிள்ளைங்களை பெத்து கல்யாணம் கட்டிவெச்சு அக்காடான்னு ஒக்கார முடியுதா நீட்டிப் படுக்க வேண்டிய காலத்துல இன்னும் நானே எல்லாருக்கும் ஊழியம் பாக்க முடியுமா” என்றார்.
இப்படியொரு நிலையில் மகளை விட்டுச் செல்லவும் முடியாது, மாமியார் சொல்லாமல் அழைத்துசெல்லவும் முடியாது செல்லியம்மாவுக்கு மீண்டும் இளைய மகள் மீதே கோபம் பொங்கியது வாயைக் கட்டிக்கொண்டு இருந்திருந்தால் இன்று அக்காவிற்கு ஆதரவாக இங்கே அவள் நின்றிருக்கலாம்.
இல்லையா பெரிய மகளைச் சீராட்ட அழைத்துசென்றாலும் சின்ன மகள் இங்கே பார்த்துக்கொள்வாள் என்ற நிம்மதியாவது இருந்திருக்கும், ஒருவருக்கொருவர் அனுசரித்து ஒன்றாக இருங்கள் என்று கட்டிக்கொடுத்தால் இப்படி அனைத்தையும் குட்டிச்சுவராக்கி விட்டாள் என்று மகளை வசைபாடினார் மனதிற்குள்.
செவ்வந்தி சோர்வாக ஒரு மூலையில் அமர்ந்துவிட்டாள் “இங்க பாரும்மா எனக்கு என் புள்ள நல்ல படியா பொறக்கணும் எங்க ரெண்டுபேருக்குமே குறை இருக்கு அது என் பிள்ளைக்கும் வந்திடுமோன்னு நானே கவலைல இருக்கேன்”.
“இப்படியே இவ சரியா சாப்பிடாம முடியாம கிடந்து குழந்தைக்கு ஏதாவது ஆச்சு நான் மனுஷனா இருக்க மாட்டேன் நீ பாத்துக்குறியா சொல்லு வளைகாப்பு வரைக்கும் இங்கேயே இருக்கட்டும் முடியுமா” என்றான் சீற்றமாக.
ராக்காயி வாயடைத்துப்போனார் அப்படியும் ஆகுமோ செவ்வந்தியை திரும்பிப் பார்த்தார் அவருக்கு இப்பொழுது பயம் வந்தது பழி தன் மீது விழுந்துவிடுமே அவள் அவளுடைய பிறந்த வீட்டிற்க்கே போகட்டும் நான் எதற்க்காகத் தூக்கி சுமக்க வேண்டும் என்று எண்ணியவர்.
“என்னையவே யார் தூக்கி சுமாப்பாங்கன்னு நான் இருக்கேன் என்னால யாரையும் பாத்துக்க முடியாது நாளைக்கு என் தலைல விடியவா நீங்களே கூட்டிட்டு போங்க” என்றுவிட்டார்.
செவ்வந்தி கணவனைப் பார்க்க “உள்ளே வா” என்றவன் “நீங்க உக்காருங்க” என்றான் மாமியார் மாமனாரிடம், இவரா பேசினார் என்பதாக வாய் பிளந்து பார்த்தார் செல்லியம்மா.
வந்தவர்களுக்குக் குடிக்க கூட ஒன்றும் கொடுக்கவில்லை அதுவரை கனகசபை மனைவியைப் பார்த்து மெதுவான குரலில் “ராக்காயி வந்தவங்களுக்கு குடிக்க குடு” என்க அவரை முறைத்தவர் எழுந்து உள்ளே சென்று மோர் கொண்டு வந்து கொடுத்தார்.
உள்ளே வந்தவள் கணவனைப் பார்த்து நிற்க “துணியெல்லாம் எடுத்து வைச்சரியாகுவரைக்கும் அங்கேயே இரு நான் நேரம் இருக்கும்போது வந்து பாக்குறேன்” என்றான்.
செவ்வந்திக்கு கொஞ்சம் மனசுணக்கம்தான் குழந்தைக்காக என்றாலும் இப்பொழுதுதான் கணவன் கொஞ்சம் தன்மையாக நடந்துகொள்கிறான், ஆசையாக வயிற்றில் தடவுகிறான் என்ன வேண்டும் என்று கேட்டு வாங்கி தருகிறான் இரவில் அவன் அணைப்பில் வைத்துக்கொள்கிறான் சாப்பிடும்போது அவனோடு அமரவைத்துக்கொள்கிறான் இது எல்லாம் இல்லாமல் போய்விடுமே என்று கொஞ்சம் மனம் முரண்டியது.
“உங்களுக்குச் சாப்பாடு… அத்த மாமாவை யார்…” என்றவள் இழுக்க.
“எங்களை நாங்க பாத்துக்குறோம் நீ குழந்தையைப் பாரு” என்றான் கறாராக.
“ஹ்ம்ம்” என்றவள் மெல்ல தள்ளாடி துணிகளை எடுத்து வைக்கத் தொடங்கினாள், வெளியில் வந்தவன் “அத்த” என்றழைக்க பதறிப் போனார் செல்லியம்மா.
“என்னையாவா கூப்டீங்க மாப்பிளை” என்றவர் அன்டன்ஷனில் நின்றார் அவரைப் புரியாமல் பார்த்தவன் “அவளால முடியல நீங்கப் போய்க் கொஞ்சம் எடுத்து வைங்க” என்றான்.
“சரிங்க” என்றவர் வேகமாக மகளின் அறைக்குள் சென்றார், செவ்வந்தி கிளம்பிவிட்டாள் அவளின் பிறந்த வீட்டிற்கு.
“போயிட்டு வரேன் அத்த” என்றவளை அவர் முறைத்தே நிற்க வேறு என்ன சொல்ல என்று தெரியாமல் தடுமாறியவள் மாமனாரிடம் சென்று “போய்ட்டு வரேன் மாமா” என்க.
“இருத்தா” என்றவர் சாமி படம் முன்பு நின்று வேண்டிக்கொண்டு திருநீறு கொண்டுவந்து மருமகள் நெற்றியில் வைத்துவிட்டார் “நல்லபடியா போயிட்டு வா உடம்ப பாத்துக்க” என்க அவளுக்குக் கண்கள் கலங்கியது மெல்ல தலை அசைத்துக்கொண்டாள்.
அவர்கள் வெளியில் வந்த நேரம் மனைவியோடு வந்து சேர்ந்தான் ராஜகுமாரன் பின்னோடு ஒரு ஆட்டோவும் “இந்தா வந்துட்டான்ல இவன்தான் சொல்லிக் குடுத்திருப்பான் அவனுக்கு அவன் பொண்டாட்டி தலையணை மந்திரம் ஓதியிருப்பா” என்று சத்தமாகவே முணுமுணுத்தார் ராக்காயி.
“தலையணை மந்திரத்துல இதெல்லாம் நாங்க பேசுறத்தில்ல எங்களுக்குப் பேச வேற ஆயிரம் விஷயம் இருக்கு இல்ல சண்டைக்கோழி” என்றவனை முறைத்தாள் கனகம், உன் அம்மாவிற்குத்தான் விவஸ்தையில்லை உனக்குமா இல்லை என்பதாக.
அதையெல்லாம் தூசாகத் தட்டிவிட்டவன் “ஆமா நான் தான் சொன்னேன் உன் பெரிய மவனுக்கு இந்த அளவுக்கெல்லாம் அறிவு இன்னும் வளரல, போன வாரத்துல இருந்து என் பொண்டாட்டி தூங்காம கொள்ளாம ஒரே பொலம்பல்”.
“என் அக்கா எளச்சுப்போய்ட்டா சோர்ந்து போய்ட்டா சாப்பாடு இல்ல தூக்கம் இல்ல பாத்துக்க ஆள் இல்லன்னு நொச்சு நொச்சுன்னு அதான் நேத்து உன் மவனை வழிமடக்கி கொஞ்சம் நேரம் பாடம் எடுத்தேன்” என்றான் அண்ணனைப் பார்த்துக்கொண்டே.
அவன் எங்கோ பார்த்து நின்றிருந்தான், பின்னே நேற்று அப்படிப்பட்ட பாடம் அல்லவா அவன் எடுத்தது அவனுடைய பலவீனத்தில் அடித்தான் அவனுக்கு வலிக்கும்படி அவன் பயம் கொள்ளுபடி பேசினான் அதன் விளைவுதான் இது.
“அத்த நீங்க அண்ணியோட ஆட்டோல ஏறுங்க” என்றவன் “கனகம் நீயும் போ அண்ணே பார்த்து மெதுவா போங்க” என்றான் ஆட்டோக்காரரிடம்.
“உனக்குத் தனியா வெத்தல வைக்கணுமா வா” என்றான் அண்ணனிடம்.
“எனக்கு ஆபிஸ் போகணும்” என்றான் யோகன்.
“ஆமா உனக்கு ஆபிஸ் இருக்கு நானும் அவரும் பத்து தெருவுல பிச்சை எடுக்கிறோம் வேலை இல்லாம, அந்த ஈர வெங்காயலாம் எங்களுக்கும் இருக்கு உன் சம்சாரம் உன் புள்ள உனக்கே அக்கறை இல்லனா எங்களுக்கு என்ன கேடு”.
“கனகம் வாப்போலாம் மாமா நீங்க அத்தையை கூட்டிட்டு போங்க அவன் பொண்டாட்டி புள்ள நல்லா இருக்கணும்னா அவனே உங்க வீடு தேடி வரட்டும், நானும் உங்க மாப்பிள தான் என் பேச்சுக்கு நீங்க மதிப்பு குடிப்பீங்களா இல்லையான்னு எனக்கும் தெரியனும்ல” என்று சட்டமாக நின்று கொண்டான்.
செவ்வந்தியின் விழிகளும் கணவனைத் திரும்பித் திரும்பிப் பார்த்தது “முன்னாடி போ வரேன்” என்று பல்லைக் கடித்தான் யோகன்.
“அப்போ வாங்க எல்லாரும் போலாம்” என்ற ராஜா இன்றும் மாமனாரை பார்த்துக் கண்சிமிட்ட, அவர் முகத்தில் புன்னகை அரும்பியது சேட்டைகார பிள்ளை என்று சொல்லிக்கொண்டார்.
ராக்காயிக்கு அவ்வளவு கோபம் தன்னிடம் அனுமதி கேட்கவில்லை அவனே முடிவு செய்துவிட்டு மாமனார் மாமியாரை வரச் சொல்லிவிட்டான் இபோழுது என்னவென்றால் அவர்கள் அனைவரும் ஒரே குடும்பம் போலவும் இவர் மட்டும் தனியாக நின்றது போலவும் அத்தனை ஆத்திரம், மகளிடம் கூடச் சொல்லிப் புலம்ப முடியவில்லை மருமகன் மகளுக்கு அலைபேசியை கொடுக்கப்பதில்லையே.
வீட்டில் கொண்டு வந்து விட்டுவிட்டு அப்படியே வேலைக்குக் கிளம்பிவிட்டனர் ஆண்கள் இருவரும் “நான் சாயந்திரம் வந்து கூப்பிட்டுகிறேன் இங்கேயே இரு” என்று சொல்லிச் சென்றான் ராஜா.
ஒரே கொண்டாட்டம்தான் அக்காள் தங்கைக்கு “என்ன சாப்பிடுற செவ்வந்தி” என்ற தாயிடம் “நல்ல சீரக ரசமும் உரப்பா கத்திரிக்காய் தொக்கும் இஞ்சி புளி தொவயலும் செய்மா” என்றபோது அவள் முகம் மின்னியது.
“அதுசரி” என்றவர் அடுப்படி செல்ல “அக்கா நீ போய்ப் படு நான் அம்மாகூட போறேன்” என்றாள் கனகம்.
“இருடி நானும் வரேன்” என்றாள் மூத்தவள்.
“இங்கபாருடா அங்க இருந்த வரைக்கும் அசைய முடியாம கிடந்த இப்போ என்னமோ துள்ளிக்கிட்டு வர அப்போ அத்தனையும் நடிப்பா கோபால்” என்ற தங்கையின் தலையில் கொட்டியவள்.
“போடி அங்க பேச்சு துணைக்கு கூட யாருமில்ல உன் மாமா வாயே தொறக்க மாட்டார் இப்போதான் மனுஷங்களையே பாக்குற மாதிரி இருக்கு” என்றவள் அப்படியே அடுக்களை சுவற்றில் சாய்ந்து கால் நீட்டி அமர்ந்தாள்.
“ஒருத்தருக்கு ஒருத்தர் பேசிட்டு ஆறுதலா இருக்கத்தானே ஒண்ணா கட்டிக்கொடுத்தது அந்த நெனப்பு எல்லாருக்கும் இருந்திருக்கணும், அக்கா நம்மள நம்பித்தானே வந்தான்னு கொஞ்சமாச்சும் புத்தில ஓரச்சிருந்தா இப்படி போகச் சொல்லுமா” என்றார் கனகத்தை பார்த்துச் செல்லியம்மா.
“அம்மா சும்மா அவளைப் பேசாதீங்க அது முடிஞ்சு போய்டுச்சு, அவ எதுக்கு பேசினான்னு உங்களுக்கும் தெரியும் கொஞ்ச நாள்தான் எல்லாம் சரியாயிடும் அதெல்லாம் என் மச்சினர் பாத்துப்பார் நீங்கச் சும்மா இருங்க” என்றவள் தங்கையைப் பார்த்துக் கண் காண்பித்தாள்.
கனகம் மெல்ல சிரித்துக்கொண்டாள் பழத்தை எடுத்து ஜூஸ் போட்டவள் அக்காவிடம் கொடுத்தாள் “குடி வெளில வந்தாலும் பரவாயில்ல” என்று, மெல்ல மெல்ல அதைக் குடித்து முடித்தவள் அப்படியே பேசிக்கொண்டே இருக்க கண் சொக்கியது அவளை அழைத்துச்சென்று படுக்கவைத்த கனகம் தாயுடன் சேர்ந்து வேலையை முடித்தாள்.
செவ்வந்தி கொஞ்சமாக உண்டுகொண்டாள் பிறகு சிறிது நேரம் சென்று கொஞ்சம் உண்டாள், என்னவோ ஒரே நாளில் அவளுக்குப் பெரிய பாரமே குறைந்த போல இருந்தது.
மாலை மகேஷ் வந்தவன் அக்காள்கள் இருவரையும் பார்த்து ஒரே ஆட்டம், வேலைமுடிந்து ராஜகுமாரன் வர மருமகனுக்கு சிறப்பான கவனிப்பு மாமியாரிடமிருந்து.
இட்லி இடியாப்பம் கறிக்குழம்பு இறால் தொக்கு என்று நிரப்பிவிட்டார் மகளுக்கும் தூக்கு வாளியில் குழம்பும் தொக்கும் இடியாப்பம் கட்டிவிட்டார் மறுநாள் காலைக்கு.
“காலைல அவளோ பேசின இப்போ மட்டும் என்ன பாசம் பொங்குது” என்ற சின்ன மகளின் கன்னத்தில் இடித்தவர் “பெத்தவடி கட்டிக்கொடுத்த வீட்டில சண்டை போட்டுப் போய்ட்டா உன் பொண்ணுன்னு நாலு பேரு பேசும்போது சங்கடமா இருக்கும்”.
“உன் அக்காவும் இபப்டி இருக்க நீ அங்கேயே இருந்திருந்தா இப்போ அவ இங்க வந்திருக்க வேண்டாம், உங்க மாமியாரும் பேசியிருக்க மாட்டாங்க அந்த ஆதங்கத்துல நாலு வார்த்தை சொல்லுவேன் கேட்டுக்க மாட்டியா உன் மாமியார் மாதிரி இல்ல கெண்டைக்கால உடைச்சு அடுப்பெரிச்சுடுவேன் பாத்துக்க” என்று நொடிக்க.
“இரு என் புருஷன் கிட்ட சொல்றேன்” என்ற மகளைப் பார்த்துப் பத்திரகாளியாய் அவர் சிலுப்ப “சும்மா உல்லுலாயிக்கு சொன்னேன்” என்றவள் துள்ளிக்கொண்டு ஓடினாள் கணவனிடம்.
“கிறுக்கு சிறுக்கி” என்றவர் திரும்பிப் பார்க்க மூத்தவள் இருவரையும் பார்த்துச் சிரித்து நின்றாள்.
“உனகென்னடி சிரிப்பு” என்றவர் “கொஞ்சம் நேரம் வீட்டுக்குள்ளேயே நட படுக்கமுன்ன பால் குடிக்கலாம் ஆளே ஓய்ஞ்சு போயிட்ட” என்றார்.
“சரிம்மா” என்றவள் மெல்ல நடந்தாள் நினைவெல்லாம் கணவனிடமே, எப்பொழுதுமே ராஜகுமாரனுக்கு முன்பே வந்துவிடுவான் யோகன் வேலை முடித்து இன்று தங்கையின் கணவனே வந்துவிட்டான் அப்படியென்றால் கணவன் நேரே வீட்டுக்குச் சென்றுவிட்டான் என்று புரிந்தது.
‘உனக்கு ரொம்ப தான் பேராசை உன் புருஷன் அப்படிலாம் வரமாட்டார் அம்மாவீட்டுக்கு அனுப்புனதே ஏதோ பூர்வ ஜென்ம புண்ணியம்னு நினைச்சுக்கோ’ என்று தனக்கு தானே சொல்லிக்கொண்டாள்.
மறுநாள் காலைச் செல்லியம்மா கொடுத்துவிட்ட இடியாப்பம் கறிக்குழம்பை சூடு செய்துகொண்டு, மதியத்துக்கு காரக்குழம்பு முட்டை வைத்துக் கணவனுக்கும் அதேயே ஒரு பாத்திரத்தல் தனக்கும் எடுத்துக்கொண்டாள்.
கணவனை வேலைக்கு அனுப்பிவிட்டு தன்னுடைய வண்டியிலே அக்காவைப் பார்க்க வந்துவிட்டாள் கனகம் மதியம் அம்மா வீட்டில் சமையல் முடிந்ததும் தானே தந்தைக்கு கொண்டு கொடுத்துவிட்டு மாலைவரை கடையில் வேலையும் பார்த்தாள்.
அதன் பிறகே வீட்டிற்கு வந்துவிட்டு விளக்கு வைக்கும் நேரம் அவள் வீடு சென்றுவிட்டாள், ஒரு வாரம் சென்றிருக்கும் கனகசபை சின்ன மருமகளை அழைத்தார்.
“மறுமவளே புள்ளைங்க போன் எடுக்கல நீ கொஞ்சம் வரியாம்மா நம்ம கவர்ட்மெண்ட் ஆஸ்பத்திரிக்கு” என்றார் கலக்கமாக.
“என்னாச்சு மாமா” என்றாள் அவளும் பதட்டமாக.
“உன் மாமியாரை சேர்த்திருக்கு வரமுடியுமா” என்க.
“தோ கிளம்பிட்டேன்” என்றவள் கடையிலிருந்து அப்பாவிடம் சொல்லிவிட்டு கொஞ்சம் பணமும் அவரிடம் வாங்கிக்கொண்டு தன்னுடைய வண்டியை எடுத்தாள்.
பையன்களிடம் கடையைப் பார்த்துக்கொள்ளச் சொன்ன பழனிசாமி “நில்லு கனகம் நானும் வரேன்” என்று மகளின் பின்னில் அமர்ந்துகொண்டார், அங்குச் சென்று பார்த்தவள் தலையில் கை வைத்துக்கொண்டாள்.
error: Content is protected !!