உறவாடும் கனவே தொடருதே – அத்தியாயம் -3
அத்தியாயம்..3
நாச்சியாரின் குற்றச்சாட்டில் நிலைகுலைந்து போனார் கனகவல்லி. வெண்பா எப்பொழுது வீட்டிற்கு வந்தாள் என்பதே அவருக்கு தெரியாதே!! இதில் அவள் யாருடன் வந்தாள் என்பது அவருக்கு எப்படி தெரியும்?!
Advertisement
அப்படியே அவள் வெற்றியுடன் வந்திருந்தாலும், அவர் நினைப்பது போலெல்லாம் அவளின் எண்ணம் இருக்காது என்பது அவருக்கு உறுதியாக தெரியும்.
Advertisement
Advertisement
அவர் மகளை பற்றி அவருக்கு தெரியாதா என்ன? ஆனாலும் இந்த குற்றச்சாட்டு அவரை வேரோடு தின்றது. தன்னை பெற்ற தாயே தன்னை இவ்வளவு கேவலமாக நினைத்திருப்பதை எண்ணி அவருக்கு நெஞ்சமெல்லாம் வலித்தது. காசு பணம் இல்லை தான், அதற்காக மானம் மரியாதை இல்லாதவர்கள் இல்லையே!
Advertisement
“ம்மா, வார்த்தையை பார்த்து பேசுங்க. அவ நேத்து வெற்றி கூட வந்திருக்கலாம், ஆனால் நீ நினைக்கிற மாதிரி தப்பான எண்ணமெல்லாம் இருந்திருக்காது. என் பொண்ணை பத்தி எனக்கு தெரியும்.
உங்களுக்கு தப்பா தெரிஞ்சா அது உங்க பிரச்சனை. அதுக்காக எல்லாமே தப்புனு ஆகிடாது. உங்களுக்கு அவ அங்க வரது பிடிகலைன்னா சொல்லிடுங்க. நான் அவளை உங்க வீட்டுக்கு அனுப்ப மாட்டேன்”
என அந்த உங்க என்ற சொல்லில் மட்டும் அழுத்தத்தை கூட்டி சொல்ல, நாச்சியாருக்கு இன்னும் கோபம் மூண்டது.
“என்ன டி உள்ளது சொன்னதும் உனக்கு கோபம் பொத்துக்கிட்டு வருதோ? எல்லாம் எனக்கு தெரிஞ்சு போச்சுன்னு நாடகம் ஆடுறீயா?” என அப்பொழுதும் நம்பாமல் பேச, கனகவல்லிக்கு பொறுமை பறந்தது.
“நிறுத்துங்க ம்மா. என்ன? விட்டா நீங்க பாட்டுக்கு பேசிட்டே போறீங்க! உங்களுக்கே இது தப்பா தெரியல. உங்க கற்பனைகெல்லாம் நான் பதில் சொல்லிட்டு இருக்க முடியாது. இப்போ என்ன? வெண்பா ஏன் வெற்றி கூட வந்தானு உங்களுக்கு தெரியனும், அவ்வளவு தானே! கொஞ்ச நேரம் இருங்க”
என அவரை அடக்கியவர், அலைபேசியை எடுத்து வெண்பாவிற்கு அழைத்தார்.
அந்தப்பக்கம் அழைப்பு எடுத்ததும்,
“வெண்பா உடனே வீட்டுக்கு வா”
என கனகவல்லி அழுத்தமாக கூற, இந்தப்பக்கம் வெண்பாவோ,
“என்ன ம்மா, இந்த நேரத்தில் கூப்பிட்டு இருக்கீங்க? உடம்புக்கு ஏதாவது முடியலையா?” என பதறினாள்.
“அதெல்லாம் இல்ல. இப்போ உடனே நீ வீட்டுக்கு வா”
என்றார் கோபமாக. அவர் குரலின் பேதத்தை உணர்ந்தவள்,
“என்ன ம்மா? ஏதாச்சும் பிரச்சனையா? ஏன் ஒருமாதிரி பேசுறீங்க?”
என கேட்க,
“உன்னை வீட்டுக்கு வர சொன்னேன். வந்து சேரு” என்றவர் அழைப்பை துண்டித்திருந்தார்.
என்னவோ ஏதோவென்று யோசனையுடனே லட்சுமியிடமும், வள்ளியிடமும் சொல்லி கொண்டு வேக வேகமாக அவள் இல்லம் வர, அங்கு நாச்சியாரை பார்த்ததும்,
“அம்மாச்சி, நீங்களா? எப்போ வந்தீங்க? தனியாவா வந்தீங்க? சொல்லி இருந்தா நானே கூப்பிட்டுட்டு வந்துருப்பேன்ல” என அவள் அக்கறையாய் விசாரிக்க, நாச்சியார் எதுவும் பேசவில்லை.
அவளையும் நாச்சியாரையும் பார்த்த கனகவல்லி, வெண்பாவிடம்,
“நேத்து நீ எத்தனை மணிக்கு வீட்டுக்கு வந்த? என நேராக மகளிடம் கேட்டார்.
“ஏன் மா, கேடகிறீங்க?…நான் ஒரு பதினொன்னு, பதினொன்றை இருக்கும்னு நினைக்கிறேன்” என பதில் கூறியவளிடம்,
“அவ்வளவு நேரம் என்ன பண்ண? என அவர் அழுத்தமாக கேட்க, வெண்பாவோ, நாச்சியாரை பார்த்து விட்டு கனகவல்லியிடம்,
“அம்மாச்சி தான், அடுப்படியில் உள்ள பாத்திரம் எல்லாம் கறையா இருக்கு விளக்கி வச்சுட்டு போக சொன்னாங்க”
என்றதும் கனகவல்லியோ நாச்சியாரை பார்க்க, அவரோ, முகத்தை திருப்பி கொண்டார்.
“ஆமாம் சொன்னேன் தான், அதுக்குன்னு வேலையே நான் பார்த்துட்டு இருக்க சொல்லலையே” என் நியாயம் பேசினார் நாச்சியார்.
“நீ சீக்கிரம் வர வேண்டியது தானே!! எதுக்கு அவ்வளவு நேரம் வேலை பார்த்துட்டு இருக்க நீ?” என கனகவல்லி கண்டிக்க, வெண்பாவோ அமைதியாய் நின்றாள்.
“சரி நேரமாகிடுச்சு, நீ எப்படி வீட்டுக்கு வந்த?” என்றதும் வெண்பாவோ அவரை பார்த்து விழிக்க,
“சொல்லு.. யார் கூட வந்த,” என கனகவல்லி அழுந்த கேட்க, வெண்பாவோ,
“வெற்றி மாமா தான் கூட்டிட்டு…” என அவள் முடிக்கவில்லை, அவள் கன்னத்திலே ஓங்கி அறைந்திருந்தார் கனகவல்லி.
அவர் அறைந்த சத்தம் அந்த வீட்டின் மூலை முடுக்கெல்லாம் எதிரொலித்தத்தில், நாச்சியாரே சற்று பயந்து தான் போனார்.
அவர் அதிர்ந்து கனகவல்லியை பார்க்க, அவரோ, வெண்பாவிடம்
“உனக்கு எத்தனை தடவ சொல்லி இருக்கேன். அந்த வீட்டில் நீ ஒரு வேலைக்காரி மாதிரி தான். உரிமையோ, உறவையோ வச்சுக்க கூடாதுன்னு.
ஏன் னா, அங்க உறவுக்கு மதிப்பு கிடையாது. பணத்துக்கு தான் மதிப்பு. வாழ்ந்து கெட்ட குடும்பம் நம்மளோடத்து. செஞ்ச உதவிக்கு நன்றிகடனா தான், அங்க உன்னை அனுப்பி வச்சது. அதை விட்டுட்டு அங்கே போய் மாமா, அத்தே, மாமா பையனு உறவு கொண்டாடிட்டு இருக்க நீ.
உன்னை யாரு வெற்றி கூட வண்டியில் வர சொல்லுச்சு. ஒன்னு நடந்து வந்திருக்கணும். இல்லையா?! உங்க அப்பாவை வர சொல்லி அவர் கூட வந்திருக்கணும். நீ ஏன் வெற்றி கூட வந்த?” என அவர் ஆக்ரோஷமாக கத்த, வெண்பாவோ பயந்து போனாள்.
“இல்ல.. ம்மா, நான்.. நானா.. அவர் கூட வரல. அவர் தான் கூட்டிட்டு வந்தார். நான் வேண்டாம் தான் சொன்னேன். கேட்கவே இல்ல. வந்து தான் ஆகணும்னு கட்டாயப்படுத்தி கூட்டிட்டு வந்துட்டார். நீங்க.. நீங்க வேணும்னா அவர் கிட்டயே கேட்டு பாருங்க. அப்போ தான் உங்களுக்கு உண்மை தெரியும்” என அழுதப்படியே வெண்பா பதில் கூற, கனகவல்லி தற்பொழுது நாச்சியாரை பார்த்தார்.
“கேட்டியா ம்மா, கேட்கலைன்னா, இன்னொரு தடவை சொல்ல சொல்றேன். நல்ல கேட்டுக்கோ! அவளா ஒன்னும் ஆசைப்பட்டு வெற்றி கூட வரல. அவன் தான் நல்ல எண்ணத்தோடு கூட்டிட்டு வந்து இருக்கான். அவங்க ரெண்டு பேர் மனசுலையும் எதுவும் இல்ல. நீங்க தான் அதை தப்பா எடுத்துட்டு எங்களை குற்றம் சொல்ல கிளம்பி வந்துருக்கீங்க.
உங்க பேரன் தானே கூட்டிட்டு வந்தான். அவனை போய் இந்த கேள்வியை கேட்க வேண்டியது தானே! அவன் ஒன்னும் சின்ன பிள்ளை இல்லைல. ஏமாத்தி இவ கூட்டிட்டு வர. எங்க அவனை போய் கேட்டா உங்க மேலே தப்பு வந்துருமோனு தானே கேட்கல.
எனக்கு தெரியும் ம்மா, நீங்க எப்படினு? ஏமாந்தவங்க நாங்க தானு எங்க மேலே பழி சொல்ல வந்து இருக்கீங்க. இதோ பாருங்க முடிவா ஒன்னு சொல்றேன்.
உங்களுக்கு நாங்க இங்க இருக்கிறது பிடிக்கலைன்னா சொல்லிடுங்க. இந்த ஊரை விட்டே போயிறோம். அதை விட்டுட்டு என் பொண்ணை ஏதாச்சும் சொன்னீங்க, அப்புறம் நான் மனுஷியாவே இருக்க மாட்டேன். உங்களுக்கு வேணும்னா உங்க பொண்ணு மேலே பாசம் இல்லாமல் இருக்கலாம். உங்கள மாதிரி என்னால் இருக்க முடியாது. என் பொண்ணு மேலே எனக்கு நிறைய பாசம் இருக்கு” என் நீளமாக பேசியவர் அவரை பார்த்து முறைத்து கொண்டிருந்தார்.
நாச்சியாருக்கு மிகுந்த அவமானமாக போய் விட்டது. மகள் இந்தளவிற்கு பேசுவாள் என்று அவர் நினைக்கவில்லை. இருந்தாலும் கனகவல்லியிடம் தழைந்து போக அவர் செருக்கு விடவில்லை.
“என்ன கனகா? பழச்செல்லாம் மறந்து போச்சா. வாய்க்கு வந்தபடி பேசுற. நான் பயந்ததுல என்ன தப்பு?..
என் ராசா தான் என் உலகம். அவன் பேரை கெடுக்கிற போல சேதி காதில் விழுந்தால் சும்மா இருக்க முடியுமா? அதான் கேட்டேன். எச்சரிக்கையாய் இருக்கிறதுல என்ன தப்பு கண்ட நீ?”
என அவரும் கோபப்பட கனகவல்லி கோபமாய் அவரை பார்த்தாரே தவிர வேறெதுவும் பேசவில்லை.
இருவரின் பேச்சிலும், செயலிலும் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதை புரிந்து கொண்டாள் வெண்பா.
அழுது கொண்டே நாச்சியாரின் அருகில் சென்று அவர் காலடியில் அமர்ந்தவள்,
“அம்மாச்சி, நீங்க என்ன சொல்ல வரீங்கனு எனக்கு புரியுது. நீங்க பயப்படவே வேண்டாம். என் மனசில அப்படி எந்த எண்ணமும் இல்ல.
அந்த வீட்டில் உங்க கிட்ட மட்டும் தான் நான் அதிகமா பேசி இருக்கேன். வேற யார் கூடவாவது பேசி நீங்க பார்த்து இருக்கீங்களா? மீனாட்சி கிட்ட கூட நான் அவ்வளவா பேசினது இல்லை. ஏன்னா என்னோட தகுதி, தரம் என்னன்னு எனக்கு தெரியும்”
என்றவளது கண்ணில் இருந்து கண்ணீர் நிற்காமல் வழிந்தது.
“தெரிஞ்சா சரி.., என்றவர்,
“அடுத்த வாரம் உன் அக்கா குடும்பத்தோடு ஊருக்கு வரா. அவ பொண்ணு ராகினியை தான், வெற்றிக்கு முடிக்கலாம்னு பேசிட்டு இருக்கோம். இடையில் நீங்க வந்து எதுவும் குட்டையை குழப்பிட கூடாதுல அதனால் தான் நான் பேச வந்ததே!!” என விஷயத்தை கூறிவிட்டு விருட்டென்று அங்கிருந்து புறப்பட்டார்.
செல்லும் அவரையே வெண்பா பார்த்து கொண்டிருக்க, கனகவல்லியிடம் பெருங்கேவலுடன் அழுகை வெளிப்பட்டது. அவரின் அழுகை சத்தம் கேட்டதும் அவரருகில் ஓடி வந்த வெண்பாவோ,
“என்ன ம்மா? ஏன் ம்மா இப்படி அழுத்துட்டு இருக்கீங்க? ஒன்னுமில்ல விடுங்க” என அவரை சமாதானப்படுத்த, அவரின் அழுகையோ நின்றபாடில்லை.
“ம்மா,” என அழைத்தவளுக்கும் கண்ணீர் வர, அவளை பார்த்த கனகவல்லி, அவளை அறைந்த கன்னத்தை தடவி,
“வலிக்குதா டா..”
“அம்மாவுக்கு வேற வழி தெரியல, அதான் அடிச்சுட்டேன் மன்னிச்சுடு டா..” என அவர் மன்னிப்பு கேட்டதும் பதறி விட்டாள் வெண்பா.
“என்ன ம்மா நீங்க? என்னை அடிக்கிற உரிமை உங்களுக்கு இல்லையா என்ன? நான் பண்ணது தப்புனு தானே கண்டிச்சீங்க. இனி அந்த தப்பு பண்ண மாட்டேன்” என்றவள் அவரை அழைத்து அமர வைத்தாள்.
நாச்சியார் வந்ததிலிருந்து இவ்வளவு நேரம் நின்று கொண்டே இருந்ததால் அவரின் கால்கள் வலி எடுக்க ஆரம்பித்தன.
முகத்தை சுருக்கி, கால்களை அவர் பிடிப்பதிலே வெண்பாவிற்கு தெரிந்து விட்டது அவருக்கு கால் வலி தொடங்கி விட்டது என்பது.
“ம்மா, காலை காட்டுங்க,” என அவர் சேலையை விலக்கி பார்க்க, கொஞ்ச நேரம் நின்றதுக்கே வீங்கி போய் இருந்தது அவரின் கால்கள்.
“என்னம்மா இது? இவ்வளவு வீக்கமா இருக்கு. உங்களுக்கு தான் நின்னா ஆகாதுல அப்புறம் ஏன் இவ்வளவு நேரம் நின்னுட்டு இருந்தீங்க. இருங்க நான் மருந்து தேய்ச்சு விடுறேன்” என்றவள் மருந்தை கொண்டு வந்து அவருக்கு தேய்த்து விட்டாள்.
காலின் வலியை விட மனதின் வலி தான் அதிகமாக இருந்தது கனகவல்லிக்கு.
‘என் பிள்ளையை நானே அடிச்சுட்டேன். இதுவரை என் பிள்ளையை நான் அடிச்சதே இல்லை. தேவையில்லாததெல்லாம் பேசி என் பிள்ளை மேலே பழியை போட்டு அடிக்க வச்சுடாங்களே! வலிச்சு இருக்குமே!’ என அவர் பாட்டுக்கு புலம்பி கொண்டே இருந்தார்.
அவர் பேசுவதை கேட்க கேட்க, வெண்பாவாலும் கண்ணீரை அடக்க முடியவில்லை. வழியும் கண்ணீரை துடைத்தப்படியே அமைதியாக இருந்தாள்.
கால் வலிக்கென்று கொடுத்த மாத்திரையையும் போட்டு கொண்டதால் சிறிது நேரத்திற்கெல்லாம் கனகவல்லி உறங்கி விட, வெண்பா, அமைதியாக வந்து தன்னறைக்குள் நுழைந்து கொண்டாள். மனம் கனத்து போனது அவளுக்கு. அவள் மீது என்ன தவறு இருக்கிறது? இத்தனை வெறுப்பு எதற்கு தன்மீதும், தன் குடுமபத்தின் மீதும்? என நினைக்க நினைக்க மனம் வெதும்பி போனது அவளுக்கு.
அவளுக்கென்று இருக்கும் ஒரே ஆறுதல், மனதிற்குள்ளே புதைந்து வைத்திருக்கும் அந்த ஜீவனிடம் தன் குமுறல்களை சத்தமில்லாது ஒப்பிப்பது தானே! தற்பொழுதும் அதையே தான் செய்தாள்.
அழுதழுது சோர்ந்து போனவள், அப்படியே உறங்கியும் விட, கனகவல்லி விழித்து கொண்டார். இன்னமும் நாச்சியார் பேசியது அவர் காதுகளில் எதிரொலித்து கொண்டிருந்தது.
வலிக்கும் கால்களை மெல்ல மெல்ல ஊன்றி, அவர் பெட்டியில் வைக்கப்பட்ட, அவளின் குடும்ப புகைப்படத்தை எடுத்து பார்த்தார். அதில் அவர் தந்தை அம்பலவாணரும் இருக்க, அவரை காண காண கனகவல்லிக்கோ அழுகை பெருகியது.
“ஏன் ப்பா, என்னை விட்டுட்டு போனீங்க? நீங்க இருந்திருந்தா, என்னை இப்படி தவிக்க விட்டு இருப்பீங்களா?” என புகைப்படத்தை பார்த்து கேட்டவர், அதனை தன் நெஞ்சோடு கட்டி கொண்டார்.
பெரிய வீட்டிற்கு வந்த நாச்சியார் யோசனையுடனே அமர்ந்திருந்தார்.
நேற்றைய இரவு, வெண்பாவும் வெற்றியும் ஒன்றாக செல்வதை பார்த்த சிலர், அவரிடம் வந்து இருவருக்கும் திருமணம் செய்ய போகிறீர்களா? ஜோடி பொருத்தம் அருமையாக இருக்கிறது என்று கூறியதை அவரால் ஜீரணிக்க முடியவில்லை.
வெண்பாவை அவ்வளவெல்லாம் அவர் யோசித்ததே இல்லை. அவரை பொறுத்தவரை வெற்றிக்கு எந்த குறையும் இல்லாத பெண்ணை பார்த்து தான் திருமணம் செய்ய வேண்டும் என்ற எதிர்பார்ப்பு.
வெண்பாவிடம் வசதியும் இல்லை, அவனுக்கு நிகரான படிப்பும் இல்லை. அதனாலே அவளை ஒரு பொருட்டாக நினைக்கவில்லை.
நேற்றைய சம்பவம் கேள்வி பட்டதில் இருந்து, அவருக்கோ ஒரு வித பயம். எங்கே வெற்றியை அவர்கள் பக்கம் இழுத்து திருமணம் செய்ய சொல்லி கேட்பார்களோ என்று.
அதனாலே மகளிடம் சென்று கோபப்பட்டார். அமைதியாக அமர்ந்திருந்த நாச்சியாரின் அருகில் வந்த விசாலாட்சி,
“அத்தே, எங்கிட்டு போனீங்க? உங்களை தேடிட்டு கிடந்தேன் நான். சரி, காபிதண்ணி குடிக்கிறீங்களா?” என அக்கறையாய் கேட்க,
“ஒன்னும் வேண்டா, போடி இங்கிருந்து” என நாச்சியார் அதட்ட, ஒன்றும் புரியாது விசாலாட்சியோ,
‘இப்போ என்ன நான் தப்பா கேட்டுட்டேன், எதுக்கு இப்படி மூஞ்சிய காட்டுறாக தெரியலையே’ எனபுலம்பியபடியே உள்ளே சென்று விட்டார்.
நாச்சியாருக்கு தான் மனம் ஆறவில்லை. எதுவும் தவறாக நடந்து விடுமோ என அவர் மனம் எதை எதையோ யோசித்து கொண்டிருக்க, வெற்றித்திருக்குமரன் வெளியே கிளம்ப படிக்களில் இறங்கி வந்து கொண்டிருந்தான்.
‘அப்பத்தா” என மலர்ந்த முகத்துடன் நாச்சியாரின் அருகில் அமர, அவரோ தன கலக்கத்தை ஒதுக்கி வைத்து விட்டு அவனை பார்த்து புன்னகைத்தார்.
“வெளியே கிளம்பிட்டியா ராசா” என அவர் கேட்க,
“ஆமாம் அப்பத்தா, பக்கத்து ஊர் வரைக்கும் போக வேண்டிய வேலை இருக்கு” என அவருக்கு பதில் கூறியவன்,
“தமிழ், ஒரு காபி எடுத்துட்டு வா” என சமையலறை பார்த்து குரல் கொடுக்க, திடுக்கிட்டு போனார் நாச்சியார்.
சமையலறையில் இருந்து காபியை வள்ளி கொண்டு வந்து கொடுத்ததும்,
“தமிழ் எங்கே?” என்று வேறு கேட்க, நாச்சியாருக்கு இருப்பு கொள்ளவில்லை
“அவ அம்மா போன் பண்ணி இருந்தாங்க ஐயா, அதான் வீடு வரைக்கும் போய்ட்டு வரேன் சொல்லிட்டு போனா, இன்னும் வரல” என அவர் கூறிவிட்டு சென்றதும்,
“ஏதாச்சும் பிரச்சனையோ?” என்றவன்,
“சரி அப்பத்தா, அப்போ நான் போகும் போது தமிழ் வீட்டுக்கு போய் என்னன்னு பார்த்துட்டு அப்படியே கிளம்புறேன்” என சாதரணமாக கூறிவிட்டு கிளம்ப, நாச்சியாருக்கோ பகீர் என்றானது
அவளை அவனிடமிருந்து விலகி வைக்க பார்த்தால், அவனோ அவளை தேடி சென்று பார்க்கிறேன் என்கிறானே! என அதிர்ந்து அவனை பார்த்தார் நாச்சியார்.
செல்லும் அவனை செல்லாதே என்றும் சொல்லவும் முடியாது, மனதார அனுப்பி வைக்கவும் முடியாது இருத்தலை கொல்லி எறும்பாய் தவித்து போனார்.
பேச நினைத்த வார்த்தைகளெல்லாம்
என்னுள் அழகாய்
உறங்கி கொண்டிருக்கின்றன
நின் விழி பார்த்தால் மட்டுமே
விழிப்பேனென்று!!
note: font size பெரிசா வச்சு இருக்கேன்.
படிக்க comfortable இருக்கா பார்த்துட்டு சொல்லுங்க
