Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

மூங்கிலுக்குள் வார்த்தை இல்லை

மூங்கிலுக்குள் வார்த்தை இல்லை – 3

சிலுசிலுவென்று காற்றை அள்ளி வீசிய வேப்பமரத்தின் நிழலில் அமர்ந்து பொரிஉருண்டையை மென்றுகொண்டே புலம்பிக்கொண்டிருந்தாள்  கனகாம்பரம்.

 

 



Advertisement

“உனக்கு அப்படி என் மேல என்ன கோவம் உனக்கு என்ன குறை வெச்சேன், என்னைய எங்க கொண்டு போய் எப்படி கோத்து விட்டிருக்க பாரு”.

 

 

Advertisement

Advertisement

“திருடனுக்கு தேள் கொட்டின மாதிரின்னு கேட்டிருக்கேன் ஆனா அந்த நெலமல நானே நிப்பேன்னு கனவுலகூட நினச்சு பாக்கல, இந்த உண்மையெல்லாம் நான் வெளில சொல்ல முடியுதா சொன்னா என்னைய யாரவது நம்புவாங்களா களவாணிய வீட்டிலே வெச்சுகிட்டு ஊரெல்லாம் தேடுதே அந்த அம்மா இந்தக் கூத்த நான் எங்க போய்ச் சொல்ல”.

 

Advertisement

 

“அதோட உட்டியா நகையைப் பறிகொடுத்தவளயும் அதைக் கண்ணால பாத்தவளயும் களவாடிட்டு போனவனையும் ஒரே கூரைக்குள்ள ஒக்கார  வைக்கப் பாக்குறியே உன்னைய என்ன சொல்ல”.

 

 

 

“சும்மாவா சொன்னாங்க  நாக்கிலே இருக்கிறது நன்மையும் தீமையும்னு” என்று அவள் பாட்டிற்கு பாடிக்கொண்டிருக்க யாருக்கு வந்த விருந்தோ என்று உச்சி வெயிலில் உக்கிரமாக நின்றிருந்தார் கருப்பசாமி.

 

 

விஷயம் வேறொன்றுமில்லை அக்காளை பார்க்க வந்த ராக்காயி இவள்  தலையில் அல்லவா இடியை இறக்கிவைத்து விட்டுச் சென்றார், வாயிலில் வந்து இறங்கியவர்களில் ராக்காயியை தவிர வேறு ஒருவரையும் கவனித்திருக்கவில்லை சகோதரிகள்.

 

 

அவரைக் கண்டதுமே பாதி மயக்கம் வந்துவிட்டது காரணம் அன்று பேருந்தில்  நடந்த எதையுமே வீட்டில் சொல்லியிருக்கவில்லையே இபோழுது விஷயம் வீட்டில் தெரிந்துவிடுமே.

 

 

“என்ன புள்ள இந்த அம்மா வந்திருக்காங்க! இவங்க புள்ளைக்கா என்னைய பாக்க வந்திருக்காங்க, அன்னைக்கு ஏதோ பொண்ண பாத்துட்டு வந்த ராசிதான் நகை திருடு போச்சுன்னு அவ்ளோ பேசினாங்க இவங்க எப்படிடி என்னை அவங்க பிள்ளைக்குக் கட்டி வைக்கச் சம்மதிப்பாங்க அவங்கள பாத்தாலே அடிவயிறு கலக்குது கனகம்” என்றாள் செவ்வந்தி.

 

 

அதற்குள் “செவ்வந்தி… வாத்தா எல்லாரும் வந்திட்டாங்க கூப்பிடுறாங்க பாரு” என்று அறைக்குள் வந்துவிட்டார் செல்லியம்மா.

 

 

இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துத் தயங்கி நிற்க  “என்னடி ரெண்டு பேரும் திருட்டு முழி முழிக்கிறீங்க என்ன பிரச்சன” என்றார் அவர் மெலிதான குரலில்.

 

 

“ஒண்ணுமில்லமா… அக்கா கொஞ்சம் பயப்படுது அவ்ளோதான் நீங்கப் போங்க நான் அனுப்புறேன்” என்றாள் கனகம்.

 

 

அவர் காபி எடுக்க அடுப்படி சென்றதும்  “அக்கா இங்கப்பாரு அன்னைக்கு அவங்க உன்னைப் பாக்கல அவங்களுக்கு என்னைத்தான் தெரியும் அதனாலதான் அன்னைக்கு கோவில்ல பாத்தப்பவும் அவங்க எதுவும் சொல்லல”.

 

 

“இப்போ வேற வழியில்லை நீ போப்பாத்துக்கலாம்” என்று தைரியம் சொல்லிச் செவ்வந்தியை அனுப்பிவைத்தாள் கனகம்.

 

 

உண்மைதான் அன்று தன்னுடைய நகை பறிபோன அதிர்ச்சியில் இருந்த ராக்காயிக்கு கனகத்தை தவிர வேறு யாரின் மீதும் கவனம் செல்லவில்லை.

 

 

 

அவள் ஒருத்திதானே சம்பவத்தை நேரில் பார்த்தது தன்னுடைய மூத்த மகனுக்குப் பார்க்க வந்த பெண்ணின் தங்கைதான் கனகம் என்பது அவருக்கும் தெரியவில்லை.

 

 

 

“இதுதான் எங்க மூத்த பையன் யோககுமாரன் இவருக்குத்தான் உங்க பொண்ணை பேசுறோம்” என்றார் ராக்காயி,  மாப்பிள்ளையும் வந்திருந்தான் முக அமைப்பில் கொஞ்சம் குறை இருந்தது யோககுமாரனுக்கு.

 

 

வாய் வலது பக்கமாகக் கோணி இருக்கும் வலது காலின் வளர்ச்சியும் குறைவு, பழனிச்சாமி செல்லியம்மா தம்பதிக்கு உள்ளுக்குள் கொஞ்சம் வருத்தம் தான் என்றாலும் இந்தச் சம்மந்தம் மட்டுமே செவ்வந்தியை மணக்கச் சம்மதம் சொல்லியிருந்தனர்.

 

 

மாப்பிளைக்கு வயது முப்பதை கடந்திருந்தது  அரசாங்க உத்தியோகம் நல்ல சம்பளம்  சொந்தத்தில் பெண்கள் இருந்தும் ஒருவரும் யோககுமாரனுக்கு பெண்கொடுக்க முன்வரவில்லை குறை என்பதை கடந்து ராக்காயின் வாய்க்குப் பயந்தே அனைவரும் ஒதுங்கி நின்றனர்.

 

 

“பொண்ணும் மாப்பிள்ளையும் நேர்ல ஒருதரம் பாத்துக்கிட்டா மேற்கொண்டு பேசலாம்” என்றார் தரகர், அதற்குள் செவந்தியின் கையில் காபி தட்டைக் கொடுத்து அனுப்பிவிட்டாள் கனகம்.

 

 

உள்ளே நின்று மாப்பிளையை எட்டி பார்த்தனர் சகோதரிகள், கனகம் திரும்பித் தமக்கையின் முகத்தைப் பாக்க  செவ்வந்தியின் முகம் நிர்மலமாகவே இருந்தது அவள் முகத்திலிருந்து ஒன்றையும் கண்டுபிடிக்க முடியவில்லை.

 

 

“போக்கா போய்க் குடு” என்றவள் தன்னை மறைத்துக்கொண்டு நின்றாள், மாப்பிள்ளையின் முகத்திலும் ஒன்றையும் கண்டுபிடிக்க முடியவில்லை ஒருமுறை பெண்ணைநிமிர்ந்து பார்த்தவன் மீண்டும் தலையைக் குனிந்துகொண்டு அமர்ந்துவிட்டான்.

 

 

தரகர் ராக்காயியையும் அவர் கணவர் கனகசபையையும் பார்த்துக் கண்காணிப்பித்தார் ‘பையனிடம் கேளுங்கள்’ என்று.

 

 

“என்னத்தம்பி உனக்குச் சம்மதமா” என்று சத்தமிட்டே கேட்டார் ராக்காயி, அவன் தலை மெலிதாக ஆடியதா என்ற சந்தேகம் பெண் வீட்டினருக்கு அதற்க்கு மேல் அவனிடம் எந்த அசைவுமில்லை.

 

 

“அவங்க பக்க முடிவைச் சொல்லிட்டாங்க நீங்க என்ன சொல்றீங்க” என்றார் தரகர், பழனிச்சாமி மனைவியைத் திரும்பிப் பார்க்க அவர் அடுப்படிக்குள் நுழைந்தார்.

 

 

“பெரியவளே நீ என்ன சொல்ற” என்றார் மகளைப் பார்த்து.

 

 

“நீங்களும் அப்பாவும் சொல்றதுதான்மா நான் என்ன சொல்லப் போறேன்” என்றாள் அவள்.

 

 

“எங்களுக்கும் சம்மதம்ங்க” என்றார் பழனிச்சாமி.

 

 

“அப்போ பொண்ணுக்கு என்ன செய்வீங்க எப்படி என்னனு சொல்லிடுங்க இப்போவே பேசிடுவோம்” என்றார் ராக்காயி.

 

 

“நீங்க எதிர்பார்க்குறதை சொல்லுங்கம்மா பேசலாம்” என்றார் பழனிச்சாமி, அதற்குள் ராக்காயின் காதைக் கடித்தாள் அவரின் மூத்த மகள் ராஜலட்சுமி, யோககுமாரனுக்கும் மூத்தவள் திருமணம் முடிந்து கணவனுடன் கங்கைகொண்ட சோழபுரத்தில் வசிக்கிறாள், ஒரு மகன் கார்த்தி ஆறாம் வகுப்பில் படிக்கிறான்.

 

 

“எம்மா அவரு சொல்றாருன்னு எல்லா வீட்டிலேயும் கேட்ட மாதிரி கேக்காத ஏற்கனவே வயசு முப்பது ஆயிடுச்சு பொண்ணும் கொஞ்சம் பரவாயில்லமாத்தான் இருக்கிறா போடுறத போடட்டும்”.

 

 

“வீடும் இவ்ளோ பெருசா இருக்கு கடையும் இருக்கு மெல்லமா பேசிக் கேட்டு வாங்கலாம் இப்போ கொஞ்சம் விட்டுபுடி” என்றாள்.

 

 

“அதுவும் சரிதான்” என்ற ராக்காயி “பொண்ண பெத்தவங்க உங்களுக்குத் தெரியாதா சொல்லுங்க” என்க.

 

 

“பொண்ணுக்கு இருபத்தஞ்சு சவரன் போடுறேன் மாப்பிளைக்கு அஞ்சு சவரன் கல்யாணம் நீங்கக் கேக்குற மாதிரி நடத்திடுறேன், சீர் எல்லாம் சபை நிறைச்சு பண்ணிடுறோம் எனக்கு ரெண்டு பொம்பள பிள்ளைங்க ரெண்டு பேருக்கும் ஒரேமாதிரி செய்யுனுங்களே” என்று முடிக்க ராக்காயி முகம் யோசனையயை தத்தெடுத்தது.

 

 

 

“அம்மா என்ன யோசிக்குற சரின்னு சொல்லு” என்றாள் ராஜலட்சுமி.

 

 

“உங்க ரெண்டாவது பொண்ணுக்கு வயசு என்ன” என்றார் அவர்.

 

 

“இருபத்தியொன்னு  முடியப்போவுதுங்க”  என்றார் செல்லியம்மா, கணவனும் மனைவியும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர்.

 

 

“அப்போ உங்க சின்ன மகளை என் மவனுக்கு பேசலாமா பொண்ணை கொஞ்சம் கூப்பிடுங்க” என்றார் ராக்காயி.

 

 

அனைவருக்கும் அதிர்ச்சியே இது என்ன? இவர்கள் மூத்தவளுக்கு சரி என்று சொல்லிவிட்டு இப்பொழுது இளையவளை கேட்டுகிறார்களே என்று தம்பதியர் தவிப்பாக நிற்க.

 

 

“என்னங்க பெரியப்பொண்ணை பாத்து எல்லாம் முடிவு பண்ணிட்டு இப்போ இப்படி பேசுறீங்களே” என்றார் தரகர் கொஞ்சம் கடுப்போடு, இதே தொடர்கதையாக நடக்கிறதே வருகிற பாதிப்பேரும் கனகத்தை கட்டித்தர கேட்கின்றனர்.

 

 

“அடடா என்னய்யா நீயும் தப்பா புரிஞ்சுக்கிட்டியா நான் கேட்டது மூத்தவனுக்கு இல்ல என் ரெண்டாவது மவன் ராஜகுமாரனுக்கு” என்றார் ராக்காயி.

 

 

“ஏதே… ராஜகுமாரனா எந்த ஊருக்கு” என்று எட்டி பார்த்தாள் கனகம்.

 

 

‘இந்த அம்மாகிட்டயிருந்து எப்படி தப்பிச்சு போறதுன்னு நானே தவிச்சுக்கிட்டு இருக்கேன் இவங்க ராசாவுக்கு பொண்ணு வேணுமாம் பொண்ணு’ என்று மண்டையை ஆட்டி ஆட்டி வசைபாடிக்கொண்டிருக்க.

 

 

“ஏட்டி கூறுகெட்டவளே உன்னைய அப்பர் வரச் சொல்லுறாரு இங்க என்னத்த நாட்டியம் ஆடுற வா” என்று மகளை இழுத்து சென்றார் செல்லியம்மா.

 

 

“எம்மா நான் வரல” என்றவள் கூறிமுடிக்கவும் அனைவரின் முன்னும் சபையில் நிற்கவும் சரியாக இருந்ததது.

 

 

“இது உங்க பொண்ணா!” என்ற ராக்காயி “ஏம்மா என்னைய தெரியுதா” என்க.

 

 

“ஆம்… இல்லை” என்று அணைத்து பக்கமும் தலையை ஆட்டி வைத்தாள் கனகம்.

 

 

“எங்க பொண்ணை தெரியுமா உங்களுக்கு” என்றார் செல்லியம்மா.

 

 

“தெரியாம பின்ன அன்னைக்கு பஸ்ல என் சங்கிலிய எவனோ வெளங்காதவன் அறுத்திட்டு போய்ட்டான் அதை உங்க மகதான் பாத்தா,  ஆனா அதுக்குள்ள அவன் தப்பிச்சு போய்ட்டான் உங்க மக சொல்லலையா” என்றார்  ராக்காயி ஆராய்ச்சியான பார்வையோடு.

 

 

சட்டென்று சுதாரித்தார் செல்லியம்மா  “சொன்னாங்க சொன்னாங்க  அன்னைக்கு மூணு பேரும்தான் வெளில போயிருந்தாங்க வரதுக்கு வேற கொஞ்சம் நாழி ஆயிடுச்சு அப்பறம் வீட்டுக்கு வந்ததும் இந்த மாதிரின்னு சொன்னாங்க”.

 

 

“உள்ளுக்க கொஞ்சம் பயம்தான் பாத்துக்கிடுங்க, அறுத்துட்டு போனவனுக்கு இதுதான் தொழிலோ என்னமோ இவளுங்க பாட்டுக்கு அடையாளம் காட்டுறேன்னு சொல்லிட்டு போய் ஏதாவது பிரச்சனை வந்திடுமோன்னு பயந்து கிடந்தோம்” என்றார் மற்றவர்களின் கவனத்தை கவராமல்.

 

 

கண்களாலே கனகத்தை எரிக்கவும் தவறவில்லை, பிள்ளைகளை அவர்களின் முன் வீட்டுக்குக்கொடுக்க முடியுமா  வெளியில் நடந்ததை பிள்ளைகள் வீட்டில் சொல்லுவதில்லைபோல என்ற தவறான பிம்பம் தங்கள் பிள்ளைகள்மீது விழுந்துவிடும் என்ற புரிதலோடு தானே முந்திக்கொண்டார் செல்லியம்மா.

 

 

“அதுவும் சரிதான் நாமளும் நம்ம வீட்டு பிள்ளைகளுக்குப் பிரச்சனை வரக்கூடாதுன்னு தானே யோசிக்கிறோம்” என்ற ராக்காயி “ஏம்மா அந்தப் பயலை அதுக்கப்புறம் எங்கயாவது பார்த்தியா” என்க.

 

 

திரு திரு என்று விழித்தாள் கனகம், எப்படி சொல்லுவாள் அவனைத்தான் தேடுகிறேன் என்று.

 

 

“என்னடி” என்று செல்லியம்மா அவள் கையைத் தட்ட “இல்லம்மா பாக்கல” என்றாள்.

 

 

“சரி அதுபோகட்டும் நீங்கச் சொல்லுங்க என் ரெண்டாவது மவன்… அது என்னடி ராஜி அவன் வேலையைப் பத்தி சொல்லு” என்றார் மகளிடம்.

 

 

“தம்பி டி.வி.எஸ் கம்பெனில சீப் மெக்கானிக்கா இருக்கான் நல்ல சம்பளம்தான் அவனுக்கும்” என்றாள் ராஜலட்சுமி.

 

 

“உங்க ரெண்டாவது பொண்ணு மாதிரிதான் என் மவனும்” என்றார் ராக்காயி, அதவாது எந்தக் குறையும் இல்லாதவன் என்ற மறைமுக பொருள்.

 

 

 

“என் சொல்லுக்கு எங்க வீட்ல மறுசொல்லு கிடையாது பையன் போட்டோ வேனா தரகர்கிட்ட குடுத்தனுப்புறேன் பாருங்க நல்ல பதிலா சொல்லுங்க அதுக்கப்பறம் பேசுவோம்” என்றவர் திரும்பி உடன் வந்தவர்களைப் பார்க்க முதல் ஆளாகக் கனகசபை எழுந்து வெளியில் சென்றார்.

 

 

“என்னமா இப்படி பொசுக்குன்னு பொண்ணு கேட்டுட்ட காரணமில்லாம எதுவும் செய்ய மாட்டியே” என்றாள் ராஜி.

 

 

“அடியே அது கொஞ்சம் காசு இருக்குற குடும்பம், மூத்தவ எப்படியோ சின்னவள பாத்தியா அம்சமா இருக்கா… ரெண்டு பொண்ணுக்கும் சேர்த்து அம்பது சவரன்  பசங்களுக்கு  பத்து சவரன்  மொத்தம் அறுபது, ரெண்டு பேருக்கும் சீருக்குப் பதிலா காசா வாங்கிக்கலாம்”.

 

 

“உன் சின்னத் தொம்பி வரதட்சன வாங்கக்கூடாதுன்னு பாடம் எடுப்பான் இப்போ ஒரே வீட்டில பொண்ணை எடுத்தா அவனுக்கும் சேத்துதானே குடுக்கணும், அதோட அக்காளும் தங்கச்சியும்னா ரெண்டு பேருக்கும் இடைல சண்டை வராது அனுசரிச்சு போய்டுவாளுங்க”.

 

 

“அதோட எது செஞ்சாலும் ரெண்டு பேத்துக்கும் ஒரே மாதிரியே அப்பன்காரன் செஞ்சிடுவான் ஒருத்திக்கு கூட ஒருத்திக்கு கொறச்சிலான்னு சொந்தத்துக்கு முன்னாடி அவமானப்பட வேண்டாம், இன்னும் நிறைய சாதகமான விஷயம் இருக்குடி” என்க.

 

 

“எம்மா நீ சரியான ஆளுதான் ஆனா அந்தப் பய ஒத்துக்கணுமே” என்றாள் ராஜி.

 

 

“ஒத்துக்கவைக்க கைல துருப்புசீட்டு இருக்குடி” என்றார் ராக்காயி.

 

 

“அது என்னம்மா?”.

 

 

“உன் பெரியதம்பிதான், இவ்ளோ நாள் எதுவுமே ஒத்துவராம இருந்துச்சு இப்போ அண்ணனுக்குக் கல்யாணம் நடக்கபோகுது ஆனா நீயும் சம்மதிச்சாதான் நடக்கும்,  உன் பிடிவாதமா உன் அண்ணன் வாழ்கையான்னு நீயே முடிவு பண்ணுனு  சொன்னா பய பொட்டி பாம்பா அடங்கிடுவாண்டி”.

 

 

 

“ஆளுதான் சண்டியர் மாதிரி ஆனா பாசக்காரண்டி குடும்பம்னா எல்லாத்தயும் விட்டுகுடுப்பான்”  என்று இளைய மகனின் பெருமையைப் பேசிக்கொண்டு சென்றார்.

 

 

அங்குக் கனகத்தை முறத்தால் மொத்திக்கொண்டிருந்தார் செல்லியம்மா “எடுபட்ட கழுதை எம்புட்டு ஏத்தமிருந்தா எங்ககிட்ட ஒத்த வார்த்தைகூட சொல்லாம இருந்திருப்ப, அவங்க கேட்டப்போ நானும் உங்க அப்பாரும் முழிச்சிகிட்டு நின்னுருந்தா எங்க மானம் அப்போவே கப்பல் ஏறியிருக்கும்”.

 

 

“பொம்பள பிள்ளைங்க வெளில நடக்குற எதையும் வீட்டில சொல்றதில்ல போல அப்போ பிள்ளைகள எப்படி வளத்திருக்காங்கன்னு கண்ணு காது மூக்கு வெச்சு பேசியிருக்க மாட்டாங்களா,  நீ என்ன போலீசா திருடன புடிக்க”.

 

 

“அவனைக் காட்டிக்கொடுக்குறேன்னு கலவரம் பண்ணிட்டு வந்திருக்கியே அந்தப் பய வஞ்சம் வெச்சு ஏதாவது செஞ்சிட்டா என்ன பண்ண? பொட்டப்பிள்ளைக்கு ஒரு கூறு வேணாமா… எல்லாம் தெரிஞ்சவ சூதனமா நடந்துப்பன்னுதானே உன்கிட்ட பொறுப்பைக் கொடுக்குறோம் கூறு கெட்டவளே” என்று மீண்டும் அடிக்க.

 

 

“செல்லி உடு… ஏதோ யோசிக்காம செஞ்சிருக்கும் அதுக்கு பிள்ளையைப் போட்டு இப்படி அடிச்சா ஆச்சா, சாமி கனகம் இங்க வாத்தா” என்ற பழனிச்சாமி மகளை அருகில் அமர்த்திக்கொண்டார்.

 

 

“அம்மா எதுக்கு சொல்றான்னு உனக்குப் புரியுதா, ஏணி கழிக்கு கோணல் கொம்பு வெட்டலாமாத்தா…ஒரு விஷயம் செய்யமுன்ன யோசிக்க வேண்டாமா, ஏதோ சின்ன விஷயம்னா பரவாயில்ல இவ்ளோ நடந்திருக்கு அப்பாகிட்டயாவது சொல்லியிருக்க வேண்டாமா சாமி”.

 

 

“இந்தக் காலத்துல யாரு எப்படின்னு தெரியல நீ தான் அந்தப் பயல பாத்திருக்க, அத மனசுல வெச்சுகிட்டு உனக்கு ஏதாவது பிரச்னையை அந்தப் பய குடுத்தா என்ன செய்யத் தனியா சரக்கெடுக்க போயிட்டு வர நாலையும் நாம பாக்கணுமா இல்லையா” என்க.

 

 

“மன்னிச்சுருங்கப்பா அவ்ளோ யோசிக்கல” என்றாள் அவள்.

 

 

“சரி விடு” என்ற பழனிச்சாமி “செல்லி சும்மா பிள்ளையைப் போட்டு அடிக்காத சொன்னா கேட்டுக்கும் நான் கடைக்குப் போய் ஒரு எட்டு பாத்துட்டு வந்துறேன்” என்றவர் கிளம்பி கடைக்குச் சென்றார்.

 

 

செல்லியம்மா செவ்வந்தியை முறைத்து நின்றார் “ஆளு வளந்திருக்கியே தவிர அறிவு வளரல, அவ பெரிய சீம ராணி வீட்ல சொல்ல வேண்டாம்னு சொன்னதும் அக்காளும் தம்பியும் கேட்டுகிட்டீங்க எல்லாத்தையும் அடி வெளுத்தா சரியாப்போவும்” என்று வசைபாடிக்கொண்டே அடுத்த வேலை பார்க்கச் சென்றுவிட்டார்.

 

 

“வலிக்குதா புள்ள” என்று அருகில் வந்த செவ்வந்தியிடம் “அம்மாவே வலிக்கக்கூடாதுன்னுதான் மொறத்தால அடிச்சிருக்கு இல்லைனா இன்னைக்கு எனக்குப் பட்ட பட்டயா வீங்கியிருக்கும், எங்கேயோ போற மாரியாத்தா என் மேல வந்து ஏறாத்தான்னு நானே வம்படியா வாங்கி கட்டிகிட்டேன்”.

 

 

“இப்போ எங்க யார் கழுத்துல கத்திய வெச்சிருக்கனோ பாவிப்பய” என்று புலம்பலைத் தொடங்கியிருந்தாள் கனகம், மறுநாள்  காலையே ராஜகுமாரனின் புகைப்படம் பழனிச்சாமியின் வீடு வந்து சேர்ந்துவிட்டது.

 

 

 

“நம்ம கனகாம்பரம் போட்டோவைப் பார்த்ததுமே தம்பி சம்மதம் சொல்லிட்டாரு, அவங்களுக்கு ரெண்டு பொண்ணையும் அவங்க வீட்டுக்கு எடுத்துக்க பூர்ண சம்மதம் இனிமே நீங்கதான் சொல்லணும்” என்று முடிவை அவர்களிடம் விட்டுச் சென்றார் தரகர்.

 

 

“பையன் நல்ல அம்சமா இருக்காரு இல்லங்க” என்ற மனைவியைப் பார்த்த பழனிச்சாமி “நீ போட்டோவைச் செவந்திகிட்ட குடுத்துட்டு வாக்கொஞ்சம் பேசணும்” என்றார்.

 

 

கணவனை யோசனையாகப் பார்த்துக்கொண்டே மூத்தமகளை அழைத்த செல்லியம்மா “அப்பாவும் நானும் கோவிலுக்குப் போறோம் இந்தா மாப்ள போட்டோ சின்னவகிட்ட காமிச்சு என்னனு கேளு” என்று கணவனைப் பின்தொடர்ந்தார்.

 

 

நல்ல ஆஜானுபாகுவாக இருந்தான் மாப்பிள்ளை சுருட்டை முடி பெரிய கண்கள் “ஏய் புள்ள கனகம் இங்க பாரேன் சூப்பரா இருக்காருடி” என்று தங்கையின் அருகில் சென்று அமர.

 

 

“எக்கா நீ வேற ஏன்க்கா… எனக்கு இப்போ கல்யாணம் வேண்டாம் அந்த அம்மா பாட்டுக்குத் தேரை இழுத்து தெருவுல விட்டுட்டு போய்ட்டாங்க, அம்மாவும் அப்பாவும் என்ன முடிவு எடுக்கப் போறாங்கன்னு வேற தெரில” என்றவள் முன்னே கையிலிருந்த புகைப்படத்தை வைத்தாள் செவ்வந்தி.

 

 

“உன்ன நான் கட்டாயப்படுத்த மாட்டேன் புள்ள ஒரு தடவ போட்டோ பாரு ஒருவேளை உனக்கு மாப்பிளையை பிடிக்கலாம்ல,  நீயும் நானும் ஒரே வீட்டுக்கு வாக்கப்பட்டு போனா எவ்ளோ நல்லா இருக்கும் இது என்னோட ஆசை மட்டும்தான் உனக்கு வேண்டாம்னா நானும் பேசுறேன் அப்பா அம்மாகிட்ட” என்றாள் செவ்வந்தி.

 

 

மெல்ல அந்தப் புகைப்படத்தைக் கையிலெடுத்தாள் கனகம் பார்த்ததுமே விழிகள் விரிந்துகொண்டது “பிடிச்சிருக்கா” என்றாள் செவ்வந்தி சந்தோஷமாக.

 

 

“அக்கா இவன்தான் அந்தக் களவாணி அதே கண்ணு” என்க.

 

 

சட்டென்று அவள் வாயைப் பொத்திய செவ்வந்தி “ஏய் மெதுவா… யார் காதிலயாவது விழுந்திட போவுது, நீ அன்னைக்கு அவர்  முகத்தை முழுசா பாக்கல தான? இவரா இருக்காது போட்டோவை நல்லா பாரு”.

 

 

“அந்தத் திருடன பத்தியே ரெண்டுநாளா பேசுறோம்ல அதான் உனக்கு அப்படி தெரியுது, சொந்த அம்மா நகையவே யாரவது திருடுவாங்களா அதுவும் அவர் நல்ல வேலைல இருக்காருன்னுதானே சொன்னாங்க, ஒருவேளை இவரை மாதிரியே இருப்பவனா இருக்கும்” என்றாள் செவ்வந்தி.

 

 

“ஒருவேளை இருக்குமோ” என்று யோசிக்க தொடங்கியவள்  “இல்ல இல்ல அவனேதான்… இல்ல வேறு யாராவதா? ஆண்டவா நான் என்ன பண்ணுவேன்” என்று தலையைப் பிடித்துக்கொண்டு அமர்ந்தவளுக்கு அப்பொழுதுதான் வேறொரு விஷயம் நினைவு வந்தது.

 

 

இதை எப்படி வீட்டில் சொல்ல முடியும்… பொண்ணை கட்டிக்குடுக்க இஷ்டமில்லன்னா அதைச் சொல்லணும் அதை விட்டுட்டு என் புள்ள மேல திருட்டு பட்டம் கட்டுவாளா உங்க மவ என்று ராக்காயி அனைவரையும் பிரித்து மேய்ந்துவிடுவார்.

 

 

ஒருவேளை அவன் நல்லவனாக இருந்தால், அவன்மீது தவறு இல்லாதுபோனால், இப்படியொரு குற்றம் சுமத்தியத்திற்கு சும்மா விடுவார்களா  தமக்கையின் திருமணமும்  நின்றுவிடுமே.

 

 

இவள் இங்கே குழப்பிக்கொண்டிருக்க அங்கே பழனிச்சாமியும் செல்லியம்மாவும் ஒருமனதாகப் பேசி முடிவெடுத்து ராக்காயின் குடும்பத்திற்கு மகள்களை மருமகள்களாக அனுப்பிவைக்க முடிவு செய்துவிட்டனர்.

 

 

“கனகம் அப்பா சம்மதம் சொல்லிடட்டுமா” என்று தன்னிடம் கேட்டுநிற்கும் தந்தையை நிமிர்ந்து பார்த்தாள் கனகாம்பரம்,  அவர் முகத்தில் மகள் தன் பேச்சுக்கு மறுப்பு சொல்லமாட்டாள் என்ற அசைக்க முடியாத நம்பிக்கையைக் கண்டாள்.

 

 

“உங்க இஷ்டம்பா நீங்கச் சொல்றதுதான்”  என்றதும் பழனிச்சாமியின்  முகத்தில் சந்தோஷத்தோடு கர்வமும் சேர்ந்துகொண்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!