Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

மூங்கிலுக்குள் வார்த்தை இல்லை

மூங்கிலுக்குள் வார்த்தை இல்லை – 4

“ஏண்டி உச்சிவெயில்ல ஒக்காந்து யோசிக்க உனக்கு வேற எடமே கிடைக்கலையா எங்கேயெல்லாம் தேடிட்டுவரேன், என்னாச்சு புள்ள உனக்கு இந்தக் கல்யாணம் பிடிக்கலையா” என்று அவள் அருகில் வந்து அமர்ந்தாள் செவ்வந்தி.

 

 



Advertisement

“இந்தக் கல்யாணம்னு இல்ல இப்போ கல்யாணம் வேண்டாம் அவ்ளோதான், நீயும் நானும் ஒரே நேரத்துல கட்டிட்டு போய்ட்டா வீட்ல அம்மாவும் கடைல அப்பாவும் எவ்ளோ கஷ்டப்படுவாங்க, மகேசு சின்னப் புள்ள அவனுக்கு என்ன தெரியும்”.

 

 

Advertisement

Advertisement

“அப்பா தனியா கிடந்து ஓடணும் எல்லாத்துக்கும் உடம்பு முடியாத மனுஷன் யோசிச்சாலே பைத்தியம் பிடிக்குது” என்றாள் கனகாம்பரம்.

 

 

Advertisement

“நான் எவ்ளோ சுயநலவாதில என்னைய பத்தி மட்டும் யோசிச்சிருக்கேன் நீயும் என்கூடவே வந்தா எவ்ளோ நல்லா இருக்கும்னு யோசிச்சேனே தவிர இதெல்லாம் நினச்சு பாக்கலையே, என்ன பொண்ணு நான்” என்று செவ்வந்தி கண்ணைக் கசக்க.

 

 

“எக்கா ஐயோ உன்கிட்ட போய்ச் சொன்னேன் பாரு இப்போ என்ன ஆயிடுச்சு, இப்படி ஒன்னு நடக்கலானாலும் எப்படியும் ரெண்டு வருஷத்துல என்னைய பொட்டிய கட்ட வெச்சிருப்பாங்க இப்போ ஒன்னாவே அனுப்ப போறாங்க அவ்ளோதான்”.

 

 

“நான் என் கல்யாணத்தை பத்தி யோசிச்சதேயில்லை, உனக்குக் கல்யாணம் நடக்கும் எல்லா வேலையும் இழுத்து போட்டுச் செய்யணும் நீ மாசமா இருக்கேன்னு சொல்லுவ உனக்குப் பிடிச்சதெல்லாம் சமைச்சுக்குடுத்து நல்லா பாத்துக்கணும்”.

 

 

“வளைகாப்பு பிரசவம் எல்லாம் சிறப்பா செஞ்சு உன்னைப் புகுந்த வீட்டுக்கு அனுப்பனும்  உன் பிள்ளையை ஆசை தீரக் கொஞ்சிட்டே இருக்கணும் இப்படிலாம் கனவு கண்டுட்டு  இருந்தேன் இப்போ எல்லாமே மாறிடுச்சு”.

 

 

“நாம மனசுல ஒன்னு நினைச்சிருப்போம் ஆனா அதுக்கு எதிரா எல்லாம் நடந்தா சட்டுன்னு ஏத்துக்க முடியாது பாரு அப்படிதான் இருக்கு எனக்கு இப்போ வேறஒண்ணுமில்ல” என்றாள் கனகம்.

 

 

அமைதியாகக் கேட்டுக்கொண்டாள் செவ்வந்தி, கனகம் மட்டுமில்லை அந்த  வீட்டில் யாருமே இப்படி ஒன்றை எதிர்பார்க்கவில்லை கனகத்தின் திருமணத்தைப் பற்றிப் பழனிச்சாமியும் செல்லியம்மாவும் கொஞ்சம் கூட யோசித்திருக்கவில்லை.

 

 

‘செய்யலாமா சரியாகவருமா’ என்ற குழப்பமே பழனிச்சாமிக்கு ராக்காயி பெண் கேட்டபோதும் மாப்பிள்ளையின் போட்டோவைக் கொடுத்தனுப்பியபோதும், மனைவியை அழைத்துக்கொண்டு கோவிலுக்குச் சென்றவர் அமைதியாகவே அமர்ந்திருந்தார் வெகுநேரம்.

 

 

“இது சரியாவருமா செல்லி அவ சின்னப் புள்ளதான என்ன தெரியும் அவளுக்கு” என்ற கணவனைப் பார்த்துச் சிரித்தார் செல்லியம்மா.

 

 

“என்ன? எதுக்கு சிரிக்குறவ” என்க.

 

 

“பின்னக் கனகத்துக்கு கல்யாணம்னு சொன்னதும் அவ சின்னப் பொண்ணா தெரியுறாளா, இதே வயசுலதான் செவ்வந்திக்கும் மாப்ள தேட ஆரம்பிச்சோம்” என்றார் அவர்.

 

 

“அதுசரிதான் அவ கொஞ்சம் பக்குவப்பட்ட புள்ள சின்னவ இன்னும்… எப்படி சொல்ல” என்றவரின் கையைப் பிடித்த செல்லியம்மா “புரியுதுங்க… பெண்டு வாய்க்கும் புண்ணியவானுக்கு பண்டம் வாய்க்கும் பாக்கியவானுக்கு, சாமி புண்ணியத்துல நமக்கு ரெண்டும் வாச்சிருக்கு”.

 

 

“உங்களுக்கு உடம்பு சரியில்லாம போனதிலிருந்து பொழுதனைக்கும் உங்ககூடவே சுத்திட்டு இருக்கா அவ இல்லாம உங்களுக்குப் பொழுது விடிஞ்சு அடையாது”.

 

 

“எப்படியும் ரெண்டு வருஷத்துல அவளையும் கட்டிக்கொடுக்கணும் இப்போ கொஞ்சம் முன்னாடியே சம்மந்தம் தேடி வந்திருக்கு அவ்ளோதான்,  கடைல எல்லாத்தயும் பொறுப்பா பாத்துக்குறா சரிதான், ஆனா ஒரு குடும்பத்துக்குள்ள இருக்குற நேக்கு போக்கு தெரியாது குட்டி கழுத வெடுக்கு வெடுக்குனு பேசிட்டு திரியும்”.

 

 

“நம்ம வீட்ல நாம பொறுத்துப்போம் போற வீட்டில அதெல்லாம் முடியுமா அத கொஞ்சம் புரியவெச்சு அனுப்பனும், பொம்பள பிள்ளைகளைப் பெத்துட்டா நம்மோடேயே வெச்சுக்க முடியாதே ஒரு நாள் அதுங்கள வேற வீட்டுக்கு அனுப்பிதானே ஆகணும்”.

 

 

“மனசை தேத்திக்கோங்க அதோட இந்தச் சம்மந்தம் நல்லபடியாதான் தோணுது எனக்கு,  ரெண்டு பேரும் ஒரே வீட்டுக்குப் போறதும் நல்லதுதான் செவ்வந்திக்கு கல்யாணம் ஆகணும்னு ஒரு பக்கம் கவலை இருந்தாலும் இந்தப் புள்ள புகுந்த வீட்டில எப்படி பொழச்சுபோகும்னு ஒரு பயமும் இருக்கு”.

 

 

“பெரியவ என்ன நடந்தாலும் நம்ம கிட்ட கூடச் சொல்லாம சகிச்சிட்டு போய்டுவா, சின்னது எங்க எதைப் பேசணும்னு தெரியாம எதையாவது பேசிப் பிரச்னையைக் கூட்டிரும்,  இப்போனா ஒண்ணுக்கு ஒன்னு ஆதரவா இருந்து பொழச்சு போய்டுவாளுங்க”.

 

 

“ஒருவேளை அவங்க கனகத்தை கேக்காம இருந்திருந்தா அவங்க ரெண்டாவது மகனுக்கு நல்ல அழகான பொண்ணா பாத்து தான் கட்டிவைப்பாங்க, ரெண்டாவதா வரப் பொண்ணு  செவ்வந்தியை  நம்மள மாதிரியே பாக்கணும்னு இல்லையே அவளை மட்டம்தட்டி ஒதுக்கிவெச்சா புள்ள தாங்குவாளா”.

 

 

“இதே நம்ம கனகம்னா அக்காவை முன்னாடி நிறுத்துவா ஆறுதலா இருப்பா குடும்பத்துல சண்டை சச்சரவு இல்ல, கட்டக் கயிறு இல்லாம போனாலும் பேர் பொன்னம்மான்ற மாதிரி மாமியார் கொஞ்சம் அப்படி இப்படித்தான் இருப்பாங்க இவங்க ரெண்டுபேரும்னா விட்டுகுடுத்து  நேக்குபோக்கா கொண்டு போய்டுவாளுங்க” என்க.

 

 

அவரும் சாதக பாதகமான விஷயங்களை அலசி ஆராய்ந்தார் நடத்தலாம் என்ற முடிவுக்கு வந்தபிறகு செலவுகளை ஆற்றிய சிந்தனை வந்தது செவ்வந்தியின் திருமணத்தைப் பற்றி மட்டுமே யோசித்து வைத்தருந்ததால் பணத்தை பற்றிப் பெரிதாக யோசிக்கவில்லை.

 

 

இப்பொழுதும் பிரச்சனை ஒன்றுமில்லை நடத்திவிடலாம் அனைத்தையும் பேசி முடித்தபிறகு தெளிவான மனதோடு வீட்டிற்கு வந்து கனகத்தின் சம்மதத்தையும் பெற்றுக்கொண்டனர்.

 

 

 

“எம்மாவ் தண்ணியே இல்லாம பொறி உருண்டையை முழுங்கிப்புட்டு நெஞ்சை அடைக்குது கொஞ்சம் மோரு குடு” என்று சத்தமாகக் கேட்டுக்கொண்டே உள்ளே நுழைந்த கனகாம்பரம் அப்படியே உறைந்து நின்றாள்.

 

 

செல்லியம்மா கையைப் பிசைந்துகொண்டு மகளை முறைக்க பழனிச்சாமி சங்கடமாக நெளிந்தார், அவள் பின்னையே வந்த செவ்வந்தி சட்டென்று சுதாரித்து “வாங்க… வாங்க தம்பி” என்றாள் தங்கையின் அருகில் சென்று நின்றுகொண்டு.

 

 

“வரேன்… நல்லா இருக்கீங்களா அண்ணி” என்றான் ராஜகுமாரன்.

 

 

அவனுடைய உரிமையான அழைப்பில் தடுமாறியவளுக்கு வார்த்தை வரவில்லை,  இந்தத் திருமணம் நடந்துவிடுமா? உறுதியாக இன்னும் ஒன்றும் முடிவாகவில்லையே… என்றாலும் அந்த அழைப்பு ஏதோ செய்தது.

 

 

சந்தோஷமாகவே பதிலுரைத்தாள் “நல்லா இருக்கேன் நீங்க நல்லா இருக்கீங்களா” என்று.

 

 

“நல்லா இருக்கேன் அண்ணி”  என்றவன் பழனிச்சாமியின் புறம் திரும்பி “கல்யாணம் பத்தி என்ன முடிவெடுத்திருக்கீங்கன்னு தெரியல மாமா ஆனாலும் அண்ணனை நேர்ல எல்லாரும் பாத்துடீங்க மாப்பிளையை நேர்ல பாக்காமலே முடிவு எடுக்க முடியாதே அதான் நானே நேர்ல வந்திட்டேன்” என்க.

 

 

பழனிச்சாமி மனைவிக்குக் கண்காணிப்பித்தார் “தம்பி டி, காபி குடிக்கிறீங்களா இல்ல மோர் தரட்டுங்களா” என்றார் செல்லியம்மா.

 

 

“மோர் போதுங்க அத்த” என்றான்.

 

 

அதற்குள் கனகத்தை இழுத்துக்கொண்டு அறைக்குள் சென்றாள் செவ்வந்தி “போச்சு போச்சு இன்னைக்கு இதுக்கும் அம்மா என்னை மொத்த போவுது இந்த ஆளு இங்க வந்து ஒக்காந்திருப்பான்னு நான் என்ன கனவா கண்டேன்” என்றவள் முடிக்கும்போதும் வாசலில் நின்றிருந்தான் ராஜகுமாரன்.

 

 

“அண்ணி உங்க தங்கச்சிகிட்ட ரெண்டு வார்த்தை பேசிக்குறேன்” என்க அவள் அமைதியாக வெளியேறினாள்.

 

 

“என்னம்மா  திடீர்ன்னு வந்திருக்காங்க” என்று செவ்வந்தி செல்லியம்மாவிடம் கேட்க “எங்களுக்கே ஒன்னும் புரியலடி நானும் அப்பாவும் பேசிட்டு இருக்கோம் உள்ள வரலாமா அப்படினு கேட்டுகிட்டு வாசல்ல நிக்குறாரு”.

 

 

“இந்தக் கோட்டி கழுத வேற எப்படி வந்து நிக்குறா பாரு பொம்பள பிள்ளை இப்படி சத்தம்போட்டு பேசாதன்னு சொன்னா கேக்குறாளா” என்று அவர் வசைபாடத் தொடங்கினார்.

 

 

“அம்மா அவளுக்கு எப்படி தெரியும், எப்போவும் வரமாதிரி வந்துட்டா” என்றாள் செவ்வந்தி.

 

 

“ஹ்ம்ம்… நல்ல மரியாதை” என்றான் அறைக்குள் நுழைந்து கொண்டே கொஞ்சம் பதட்டம் வந்தது பெண்ணிற்கு.

 

 

“என்னை ஞாபகம் இருக்கா உனக்கு” என்றான் அவள் விழிகளை ஆழ்ந்து பார்த்து, என்ன சொல்ல என்று தெரியாமல் விழித்து  நின்றாள் கனகம்.

 

 

‘அப்போ இவரேதான்… இவர் என்ன இவர் இவனேதான் களவாணி பய எவ்ளோ தைரியமா இங்க வந்து நின்னு பேசுறான்’ என்று மூக்கு விடைக்க நிமிர்ந்தவள்.

 

 

“எப்படி மறக்க முடியும்? யாரவது பெத்த அம்மாகிட்டயே திருடுவாங்களா செய்றதையும் செஞ்சிட்டு தைரியமா இங்கேவந்து நிக்குறீங்க” என்றாள் சண்டைக்கோழியாக.

 

 

வந்த சிரிப்பை  இதழ்களுக்குள் அடக்கியவன் “என்னது திருடனா!! யார் நானா… நான் திருடுனதை நீ பாத்தியா அப்போ அன்னைக்கு போட்டோ காமிச்சப்போவே சொல்லியிருக்கலாமே இன்னைக்கு சொல்ற”.

 

 

“வீடுதேடி வந்ததுக்கு அவமானப்படுத்துறியா கல்யாணாம் செஞ்சுக்க  இஷ்டமில்லன்னா அதைச் சொல்லவேண்டியதுதானே அதுக்காக என் மேல திருட்டு பட்டம் கட்டுவியா” என்க.

 

 

‘ஆத்தி இதெல்லாம் இவங்க அம்மா பேசுவாங்கன்னு நான் மனசுல நெனச்சது அதை அப்படியே பேசுறான், இல்ல… இல்ல… பேசுறாரு அப்போ இவர் இல்லையா அக்கா சொன்ன மாதிரி வேற யாரோவா ஐயோ இப்போ இவர் கோவத்துல எல்லார்கிட்டயும் சொல்லிட்டா இன்னையோட என் கதை முடிஞ்சிடுமே” என்று பயந்தவள்.

 

 

“இல்ல இதே கண்ணு முடிகூட இப்படித்தான் சுருட்டை முடி” என்றாள் குரலே எழும்பாமல்.

 

 

“இதே கண்ணுனா… அப்போ இந்தக் கண்ணு உன் மனசுல பதிஞ்சிடுச்சு அதனாலதான் ரெண்டுமாசமா எல்லா பஸ்லயும் இந்தக் கண்ணைத் தேடியிருக்க அப்படித்தான” என்றான் அவள் காதுகளுக்கு மிக அருகில்.

 

 

பதறி விலகியவள் “அப்படிலாம் இல்ல அந்தத் திருடனைத்தான் தேடினேன் மத்தபடி கண்ணும் பதியல ஒண்ணும் பதியல” என்றாள் நடுங்கும் விரல்களைக் கோர்த்துக்கொண்டு.

 

 

“ஓஹ் திருடனை தேடியிருக்க என்னைத் தேடல’ என்றவனை புரியாமல் பார்த்தவள் “உங்களை எதுக்கு தேடணும்” என்றாள்.

 

 

“என்னைத்தானே திருடனா நினச்ச அப்போ என்னைத்தானே தேடியிருக்க” என்க மொத்தமாகக் குழம்பி நின்றாள் கனகாம்பரம்.

 

 

“சரி பரவாயில்ல அத விடு எங்க அம்மாவுக்கு உன்னை ரொம்ப பிடிச்சிருச்சு அவங்க பேச்சை நான் மீறமாட்டேன் அதனால நேர்ல வந்து சம்மதம் சொல்லிட்டு போலாம்னு வந்தேன்”.

 

 

“அப்றோம் உங்க அப்பா சொன்ன மாதிரி நகையெல்லாம் போட்டுருவாருல்ல அது ரொம்ப முக்கியம் பாத்துக்கோ அப்போ வரட்டுமா கல்யாணத்துல பாக்கலாம்” என்றவன் வெளியில் செல்லச் செவ்வந்தி அறைக்குள் வந்தாள்.

 

 

 

“என்னாச்சுடி கானகம் ஏன் இப்படி பேய் அறஞ்ச மாதிரி நிக்குற” என்று உலுக்க “அக்கா இவர் தானா அது, இல்ல இவரைமாதிரியே வேற ஆளா  இவர் பேசினதை வெச்சு ஒண்ணுமே கண்டுபிடிக்க முடியலையே” என்றவளை அதிர்ச்சியாகப் பார்த்தாள் செவ்வந்தி.

 

 

“அடியே அவர்கிட்ட நேரடியா கேட்டுட்டியா, அய்யயோ என்ன சொன்னாரு” என்க.

 

 

“ரொம்ப கோபப்பட்டாருக்கா அடிச்சுருவாரோன்னு பயந்துட்டேன், என்னய பாத்தா திருடன் மாதிரி இருக்கா உன்மேல யாரவது இப்படி பழிபோட்டா சும்மா இருப்பியான்னு ஒரே திட்டு” என்றாள் கனகம்.

 

 

 

“என்ன புள்ள இப்படி பண்ணிட்ட இப்போ அவர் நம்ம வீட்டலயோ அவர் வீட்டலயோ சொல்லிட்டா? அவர்தான்னு உனக்கு நல்லா தெரியுமா கனகம்,  நாமாவேனா அப்பாகிட்ட சொல்லிப்பாக்கலாமா தப்பான ஆளா இருந்தா உன் வாழ்க்கை என்னாவரது” என்ற செவ்வந்தி.

 

 

“எனக்கு என்னமோ அவரைப்பார்த்தா அப்படி தெரில கனகம் நீ வேற யாரையோ பார்த்துட்டு இவருன்னு நினச்சுட்ட, கண்ணை மட்டும் வெச்சு ஒரு ஆளைக் கண்டுபிடிக்க முடியுமா” என்றாள்.

 

 

 

 

“எனக்கும் அப்படித்தான் தோணுதுக்கா அது இவர் இல்ல” என்றவள் ‘இல்லைதானே’ என்றாள் தனக்குள், சட்டென்று மூளைக்குள் மின்னல் வெட்டியது.

 

 

‘அது அவர் இல்லனா நான் ரெண்டு மாசமா அந்தத் திருடனை தேடினது இவருக்கு எப்படி தெரியும், அப்போ இவர்தானா… டேய் என்னடா நடக்குது யாரவது சொல்லுங்கடா” என்று தலையைப் பிடித்துக்கொண்டு அமர்ந்துவிட்டாள்.

 

 

அறைக்குள் நுழைந்த செல்லியம்மா “ஏண்டி மாப்ள என்ன சொன்னாரு” என்றார் கனகத்திடம், இவள் அக்காவைத் திரும்பிப் பார்க்க “இல்லமா அவங்க அம்மாவுக்கு ரொம்ப பிடிச்சிருக்காம் அவங்க வீட்ல எல்லார்க்கும் சம்மதமாம்” என்றாள் செவ்வந்தி.

 

 

 

செல்லியம்மா முகம் முழுதும் பூரிப்பு “ரொம்ப தங்கமான பிள்ளை என்ன மரியாதை, பணிவு இப்போ அப்பாகிட்ட பேசும்போதும் அப்படிதான் பேசினாரு எங்களுக்கு மனசுக்கு ரொம்ப நிறைவா இருக்கு” என்றவர் கணவரைத் தேடி சென்றார்.

 

 

 

தம்பதியர் பேசி முடிவு செய்து அப்பொழுதே தரகரை அழைத்துத் தங்களுக்கு சம்மதம் என்று கூறிவிட்டார், சின்ன மாப்பிள்ளையின் பெருமையைப் பேசிப் பேசிச் செல்லியம்மாவுக்கு நாக்கே சுளுக்கிக்கொண்டது.

 

 

“என்ன மாப்ள தங்கச்சி என்ன சொல்லுது” என்றான் வண்டியை ஒட்டிக்கொண்டிருந்த செல்வம்.

 

 

“இப்போ குழப்பி விட்டுட்டு வந்திருக்கேன் சண்டக்கோழி மாதிரி சிலிர்த்துக்கிட்டு நிக்குறாடா,  இதுகூட நல்லாத்தான் இருக்கு” என்றான் ராஜகுமாரன் அடங்காமல் அலைபாயும் தலைமுடியை கோதிக்கொண்டே இதழ்களில் அழகான புன்னகை விரிந்தது.

 

 

“அதுசரி நல்லா இல்லாம எப்படி இருக்கும் ரெண்டு மாசமா அந்தப் புள்ள பின்னாடிதான சுத்துற, ஆனாலும் உனக்குத் தைரியம்தாண்டி மாப்ள என்னைக்கு மாட்டப் போறியா தெரியல” என்றான் செல்வம்.

 

 

“போடாப் போடாப் பாத்துக்கலாம் என்னவானாலும் சரி கனகாம்பரம் இந்த ராஜகுமாரனுக்குத்தான்” என்றான் திடமாக.

 

 

தரகர்மூலம் செய்தி கிட்டியதும் காலம் கடத்தாமல் வேலையைத் தொடங்கிவிட்டார் ராக்காயி “தனி தனியா என்னத்துக்கு விஷேஷம் வெச்சுகிட்டு கல்யாணத்துக்கு மொத நாள் நிச்சயம் வெச்சுக்கலாம், ஒரே நாள்ல கொஞ்சம் முன்ன பின்ன வர மூகூர்த்தத்துல ரெண்டு கல்யாணத்தயும் வெச்சுக்கலாம்”.

 

 

“சொந்த பந்தமெல்லாம் வந்துபோக வேண்டாமா உடனே உடனே வெச்சா எல்லாருக்கும் கஷ்டம், அப்பறோம் கட்டிலு பீரோ மட்டும் ரெண்டா குடுத்துடுங்க மத்த பொருளெல்லாம் ஒண்ணு போதும் ஒரே வீட்டில தான இருக்க போறாங்க, அதோட அக்கா தங்கச்சி தனி தனியா வேணும்னு கேக்கவா போறாங்க அதனால ரெண்டு சீருக்கு உண்டான பணத்தை குடுத்துடுங்க”.

 

 

“ஒரே நாள்ல ரெண்டு கல்யாணம் முடிக்கப் போறோம் செலவு மிச்சம் பாருங்க அந்தக் காசுக்கு ரெண்டு பசு மாடு வாங்கி குடுத்துடுங்க, உங்க பொண்ணுங்க தான வந்து வாழப் போறாங்க” என்றார் ராக்காயி.

 

 

கணவன் மனைவி இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர், திருமணம் என்றால் இது அனைத்தும் உள்ளதுதானே இரண்டு திருமணம் தனித்தனியாக நடத்தினால் இந்தச் செலவுகள் எல்லாம் செய்ய வேண்டும் அதை அப்படியே மகள்களுக்குக் கொடுக்கிறோம் என்று மனதை சமாதானப்படுத்திக்கொண்டனர்.

 

 

 

“எதுக்குமா இதெல்லாம் கேட்டு வாங்குறீங்க நம்ம வீட்லயே எல்லாம் இருக்கே” என்றான் யோககுமாரன்.

 

 

“என்னய்யா இப்படி கேக்குற நம்ம ராஜிக்கு ஒன்னும் குடுக்காமலா கட்டிக்கொடுத்தோம், பொண்ணை பெத்தவங்க இதெல்லாம் செய்றதுதான் நாம ஒண்ணுமே வாங்காம கட்டிட்டு வந்தா உன்னைய தான் எல்லாரும் பேசுவாங்க”.

 

 

“பொண்ணு கிடைக்காம இருந்துச்சுல அதான் கெடச்சா போதும்னு ஏதோ பரதேசியை கட்டிட்டு வந்துட்டாங்கன்னு,  நீ இப்படி கொறையோட பொறந்திட்ட… எவ்ளோ பேச்சு, கிண்டல் கேலி எல்லாத்தயும் தங்கிகிட்டு உன்னைக் கஷ்டப்பட்டு வளத்து படிக்க வெச்சு அரசாங்க வேலையும் வாங்கியாச்சு”.

 

 

“மத்தவளுங்க மாதிரி தூக்கி குப்பைலயா போட்டேன் அப்படியிருக்க எனக்குக் கேட்டு வாங்க உரிமை இல்லையா” என்று கண்ணைக் கசக்க எப்பொழுதும் போல அந்தப் பேச்சு அவனைக் காயப்படுத்தியது இந்த முறையும் அமைதியாகவே உள்ளே சென்றுவிட்டான் யோககுமாரன்.

 

 

“பிச்சையை கூடக் கவுரவமா கேட்டுட்டு வந்திருக்கீங்க போல” என்றான் இரவு வேலை முடிந்து வீட்டிற்கு வந்த ராஜகுமாரன்.

 

 

“அம்மாங்குற மரியாதை கொஞ்சமாவது இருக்கா உனக்கு என்ன பேச்சு பேசுற, யாருடா பிச்சை எடுக்குறது இந்தக் கையாள ஊருக்கே காசை அள்ளிக்கொடுக்குறவடா நானு” என்றார் ராக்காயி ஆக்ரோஷமாக.

 

 

நக்கலாகச் சிரித்தவன் “யாரு? நீங்கக் காசை அள்ளிக்கொடுக்குறீங்க ஊர்ல எல்லாரோட வயித்தெரிச்சலையும் கொட்டிக்கிறீங்கன்னு சொல்லுங்க, இங்க என்ன இல்லனு அவங்ககிட்ட கணக்கா பேசிட்டு வந்திருக்கீங்க, எனக்கு எந்த வரதச்சனையும் வேண்டாம்” என்றான்.

 

 

“நாம கேக்காம விட்டாலும் அவங்க செய்வாங்க பொம்பள பிள்ளைகளை அப்படியே ஒண்ணுமில்லாமலா அனுப்ப முடியும், உன் அக்காளுக்கு நீ ஒன்னும் செய்யாம விட்டுடுவியா” என்க.

 

 

“நாமளாவே செய்றது வேற உங்கள மாதிரி இப்படியா கணக்கு சொல்லிக் கேட்டு வாங்குறது, அவங்க பொண்ணுங்களுக்கு என்ன செய்யணும்னு ஆசை படுறாங்களோ அதை நல்ல மனசோட செய்யட்டும் நடுவுல உங்களுக்கு என்ன வேலை” என்று சத்தமிட்டான்.

 

 

“டேய் விடுடா ரெண்டு பொண்ணுங்களும் ஒரே வீட்டுக்கு வாழ வரப்போறாங்க சீரு குடுக்கணுமேன்னு உன் மாமனார் எல்லா பொருளையும் ரெண்டா வாங்கிட்டா வீனா காசு வேஸ்ட்டு பாரு அதுக்குதான் அம்மா அப்படி சொன்னாங்க”.

 

 

“நீ எப்போப்பாத்தாலும் அம்மாகிட்ட கத்திகிட்டே இருக்காத காசு வேண்டாம்னு அவங்ககிட்ட சொல்லிடுறோம்” என்றாள் ராஜி.

 

 

“நீங்கதான நல்லா சொல்லுவீங்க, என்கிட்டே சொல்லக்கூடாதுன்னு அவங்க வீட்டில கண்டிஷன் போட்டு எனக்குத் தெரியாம காசு வாங்குவீங்க என்னமோ பண்ணுங்க என்னால என்ன முடியுமோ நான் பாத்துக்குறேன்” என்றுவிட்டான், கல்யாண நாள் நெருங்கி வந்தது.

 

 

அவளின் களவாணி அவனின் சண்டைக்கோழியின் வரவுக்காகக் காத்திருந்தான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!