3..2..1 Episode 2. சத்தியம் சாத்தியமா?
”அப்பா! ப்ளீஸ்ப்பா… கொஞ்சம் புரிஞ்சுக்கோங்க!” அழுது அழுது மேலும் சிவந்த முகத்தோடு தந்தையிடம் கெஞ்சிக்கொண்டிருந்தாள் கார்த்திகேயினி.
பச்சைப் பசேலென பயிர்கள் செழிக்க, கம்பீர மரங்களில் பறவைகள் ரீங்காரமிட பட்டண வாசம் வீசாத, பட்டாம்பூச்சிகள் புடைசூழ்ந்த கிராமத்தின் நடுவே மாளிகைபோல நின்றிருந்தது அந்த வீடு. வீட்டுப் பின்புறத்தில் மாடுகளும், கன்றுகளும், கோழிகளும் வலம்வர, முன்புறத்தில் அடுக்கடுக்கான வண்ண மலர்கள் பசுமையை ஊட்டின. வீட்டின் உள்ளேயோ, கோபம் நிறைந்த மனங்களால் உஷ்ணம் நிறைந்திருந்தது.
“காலேஜ் முடிச்ச கையோட, கல்யாணம் செஞ்சுக் கொடுக்காம, அவ சொல்றான்னு கலெக்டருக்குப் படிக்கறதுக்குச் சென்னைக்கு அனுப்புவீங்களாப்பா..? ஊருசனம் நம்மளப் பாத்து சிரிக்காது!”, கார்த்திகேயினியின் அண்ணன் கபிலன் ஆக்ரோஷமாய்க் கூற கண்களில் வழிந்த நீரைத் துடைத்தபடியே, “இப்போ ஒருவிதமா சிரிக்குற ஊருசனம், நான் ஜெயிச்சதும் வேற விதமா சிரிக்கும்ணா. அந்த ஊருசனத்துக்காக என்னை இப்பவே கல்யாணம் செஞ்சுக் கொடுக்கணுமா? நான் கல்யாணம் வேணாம்னு சொல்லலியே, இப்போ வேணாம்னுதான சொல்றேன். புவி ஐ.ஏ.எஸ். அகாடெமி, எங்க காலேஜ்ல நடத்திய போட்டித் தேர்வுல, என்னை மட்டும்தான் தேர்வு செஞ்சு, அவங்க கல்விக்கட்டணத்துல 75% தள்ளுபடி செஞ்சு என்னைப் படிக்க வைக்குறேன்னு சொல்றாங்க. ரெண்டே ரெண்டு வருஷம்பா… படிப்பு முடிச்சதும் நீங்க சொன்னபடியே கல்யாணம் செஞ்சுக்கிறேன்!”, கார்த்திகேயினி திடமாய்க் கூற, அவளின் தாயான காமாட்சி குறுக்கிட்டாள்.
“இப்படித்தாங்க சென்னை கல்லூரியில படிக்கப்போறேன்னு போன, என் அக்கா எதிர்வீட்டுப் பொண்ணு ஆளே மாறிப்போயிட்டாளாங்க. யார் பேச்சையும் கேட்காத அடங்காப்பிடாரியாக இருக்கான்னு அக்கா சொன்னா. போன வாரம் கூட சென்னையிலிருந்து ஏதோ ஒரு பையனை ஃப்ரெண்டுனு வீட்டுக்கே கூட்டிட்டு வந்துட்டாளாம். பொண்ணு பார்க்க சுமாராத்தான் இருக்கும். அந்த பொண்ணு பின்னாடியே ஏராளமான பசங்க கூச்சமேயில்லாம சுத்துவாங்களாம். கிளி மாதிரி அழகான நம்ம கார்த்தியைச் சென்னைப் பசங்க சும்மா விடுவானுங்களா? இவதான் ஏதோ கூறுகெட்டு பேசுறா. நீங்களும் அதைக் கேட்டுட்டிருக்கீங்க. போயி அவளுக்கு மாப்பிள்ளையப் பார்க்குற வேலையைப் பாருங்க. நல்ல பையன்கிட்ட நம்ம பொண்ண புடிச்சுக்கொடுத்திட்டா, நம்ம பாரம் குறைஞ்சிடுங்க. வயசுப் பிள்ளைய வெளியே படிக்க அனுப்பிட்டு, தினமும் வயித்துல நெருப்பக் கட்டிட்டி இருக்கச் சொல்றீங்களா?”, காமாட்சி அங்கலாய்த்தபடி கூற, “ஆமாப்பா. அம்மா சொல்றதுதான் சரி. கார்த்திக்கு உடனடியா மாப்பிள்ளைப் பாத்துடலாம்”, என்று தாயின் ஸ்ருதிக்கு பலம் சேர்த்தான் கபிலன்.
Advertisement
”நீங்கல்லாம் கொஞ்சம் வாய மூடுங்க. கார்த்தி! நீ சொல்லும்மா. ரெண்டு வருஷம்னு சொல்ற. அப்படி என்னதான் படிக்கப் போற? எனக்குப் புரியுறபடி கொஞ்சம் சொல்லு!”, கார்த்தியின் தந்தை கணேசன் குழப்பத்தோடு கேட்க, புத்துணர்ச்சியுடன் கூறத் தொடங்கினாள் கார்த்தி.
“அப்பா யூ.பி.எஸ்.சி. அப்படிங்கிற அமைப்பு, குடிமைப் பணிகளுக்கான தேர்வுகளை நடத்துறாங்க. இந்த போட்டித்தேர்வுகள்ல ஜெயிக்குறவங்க ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்.ன்னு பட்டம் வாங்கி, கலெக்டர், போலீஸ்னு அரசோட ஆளுமைமிக்க பதவிகள்ல பொறுப்பேத்துக்கிறாங்க. யூ.பி.எஸ்.சி.யின் இந்தத் தேர்வுகள் மூன்று கட்டங்கள்ல நடக்கும். இப்போ செப்டம்பர் மாசம் நடக்குது. இன்னும் ஒன்பது மாசங்கள்ல முதல் கட்டத் தேர்வான ப்ரிலிமினரி எக்ஸாம் நடக்கும். முதல் கட்டத் தேர்வுல தேர்ச்சிப் பெற்றவங்க, அடுத்த நாலு அஞ்சு மாசத்துல நடக்குற இரண்டாம் கட்டத் தேர்வான மெயின்ஸ் எழுதணும். இரண்டாம் கட்டத் தேர்வுல ஜெயிச்சா, அடுத்த ஆறு மாசத்துல இண்டெர்வியூன்னு சொல்ற நேர்காணல் நடக்கும். இந்த நேர்காணல்தான் கடைசிப்படி. அதுல ஜெயிச்சா, உங்களோட பொண்ணு கலெக்டர் ஆகிடுவா! ரெண்டு வருஷம் கண்ணிமைக்கிற நேரத்துல ஓடிடும். உங்களோட பொண்ணு கலெக்டர் ஆகிட்டால், உங்களுக்குத் தானே பெருமை!”, பூரிப்புடன் கார்த்தி கூறி முடிக்க, யோசனையில் ஆழ்ந்தார் கணேசன்.
“ரெண்டு வருஷம் முடிஞ்சதும் நிச்சயம் நீ எதிர்பேச்சு பேசாமக் கல்யாணம் செஞ்சுக்கனும். அதுமட்டுமில்ல, முதல் கட்டத்திலயோ, இரண்டாம் கட்டத் தேர்வுலயோ தோத்திட்டா, நாங்க சொல்ற பையன உடனே கல்யாணம் செஞ்சுக்கனும். சம்மதமா?”, கணேசன் கேட்க, சந்தோஷத்தில் துள்ளிக் குதித்தாள் கார்த்தி.
Advertisement
“முழு சம்மதம்பா. இப்போ என்னைப் படிக்க அனுப்புங்க. படிச்சு முடிச்சதும், நீங்க எந்த பையனைக் கைகாட்டுறீங்களோ, அந்த பையனையே கட்டிக்கிறேன். இது என்னோட சத்தியம். போதுமா?”, ஆனந்தமாய்க் கார்த்தி கூற பெருமூச்சுவிட்டபடி சம்மதித்தார் கணேசன்.
Advertisement
சத்திய சோதனைகள் நித்தியமாக இருக்க, சத்தியம் காப்பது அனைவருக்கும் சாத்தியமா?
***
