Skip to content
Post Views: 6,718
“கருப்பட்டி பணியாரமும் காரப்பணியாரமும் செய்யலாமா மாப்பிளைங்களுக்கு பிடிக்குமா” என்று கேட்டுக்கொண்டே உழுந்து வடைக்கு உழுந்தை கழுகி ஊறப்போட்டார் செல்லியம்மா.
Advertisement
அவரிடம் ஒருவிதமான பரபரப்பு பொருட்களை எடுப்பதும் வைப்பதுமாக அவர் நடந்துகொண்டே இருக்க “அம்மா சித்த நேரம் உக்காருங்க ஏன் இப்படி” என்றாள் கனகம் அவரைப் பிடித்து அமர்த்திக்கொண்டே.
Advertisement
Advertisement
“நேரம் போவுதுடி சாயந்திரம் காப்பித்தண்ணிகூட சாப்பிட குடுக்க வேண்டாமா, ராத்திரிக்கு இடியாப்பமும் பாயாவும் வெச்சுக்கலாம்” என்றார்.
Advertisement
“சரி சரி வெச்சுக்கலாம் இருங்க நாங்கதான் இருக்கோமே பாத்துக்குறோம்” என்றாள் அவள்.
மகள்களின் அருகில் அமர்ந்தவர் ஒருமுறை வெளியில் எட்டி பார்த்துவிட்டு “சந்தோஷமா இருக்கீங்களா மக்கா” என்றார் மகள்களின் முகத்தைக் கண்கலங்க பார்த்துக்கொண்டே.
கணவனுடன் ஒன்றி வாழ ஆரம்பித்துவிட்டார்களா என்று வெளிப்படையாகக் கேட்க முடியவில்லை அவரால், அவரின் எண்ணத்தைப் புரிந்துகொண்ட மகள்கள் “சந்தோஷமாத்தான் இருக்கோம்” என்றார்கள் புன்னகைமுகமாகவே.
அங்கு நடந்த எதையுமே இந்த வாசலைக் கடந்து உள்ளே கொண்டுவரவில்லை சகோதரிகள் இருவரும், செய்தியாகவும் இல்லை குற்றமாகவும் இல்லை புகுந்த வீட்டின் எந்தக் குறையையும் பிறந்த வீட்டில் காட்டிக்கொள்ளவில்லை.
“அங்க ஒன்னும் பிரச்னையில்லயே எல்லாரும் நல்லவிதமா நடக்குறாங்களா” என்றார் மீண்டும்.
“ஹ்ம்ம் ஒன்னும் பிரச்சனையில்லம்மா” என்ற கனகம் “அத்தைதான் கொஞ்சம் கண்டிப்பு இப்படி இருக்கணும் அப்படி இருக்கணும்னு சொல்லுவாங்க மத்தபடி ஒண்ணுமில்ல” என்க.
“இருக்கணுமே ரெண்டு மருமவளை ஒரே நேரத்துல கொண்டு போயிருக்காங்க இழுத்து புடிக்கத்தான் செய்வாங்க எதுவும் சொன்னாலும் சரின்னு கேட்டுக்கோங்க” என்றார்.
மிக மிகச் சாதாரண கிராமத்து மனுஷி, மாமியார் மிகப் பாசமாக இருக்கிறார் என்று கூறியிருந்தால் அவருக்கு யோசனைகள் வேறு விதமாகப் போயிருக்கும், ராக்காயி சராசரி மாமியார் என்றதும் மாமியார்கள் அப்படித்தானே இருப்பார்கள் என்று சமாதானமாகிவிட்டார்.
கனகம் சிரித்துக்கொண்டாள் நாளை ஒருவேளை தாங்களும் பெண் பிள்ளைகளைக் கட்டிக்கொடுக்கும்போது இந்த மனநிலைக்கு வந்துவிடுவோமோ என்று சிந்தனை வேறு அவளுக்கு.
“ம்ஹும் இன்னும் புருஷன் கூட ஒண்ணா ஒரே அறைக்குள்ள இருக்கவே வழிய காணும் அதுக்குள்ள பொட்டப்பிள்ளையை பெத்து கட்டிக்குடுக்குற வரைக்கும் யோசிச்சாச்சு” என்று தன் தலையில் தானே கொட்டிக்கொண்டாள்.
தன்னுடைய மொட்டைமாடி தனிக்குடித்தனத்தில் அண்ணனையும் கூட்டு சேர்த்து கூட்டு குடும்பமாக இரண்டு இரவுகளைக் கழித்து திங்கள் கிழமை காலை உணவை முடித்துக்கொண்டு அமர்ந்திருக்க மறுவீட்டு விருந்துக்கு அழைக்க வந்துவிட்டனர் செல்லியம்மாவின் அக்காவின் மகனும் அவனின் மனைவியும்.
அன்று காலைதான் ராஜியின் கணவன் மாணிக்கமும் ஊரிலிருந்து திரும்பி வந்திருந்தான் வந்தவன் நேரே ராஜகுமாரனிடம் சென்று “மன்னிச்சுடு மாப்ள வேற வழியில்லாம்மாதான் போனேன் இல்லனா மாமியாரையும் மருமகளையும் ஊருக்குக் கடத்தியிருப்பேன்”.
“கடன் வாங்கியும் பட்டினி, கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரின்னு உன் நிலைமை ஆயிடுச்சு” என்றான் உண்மையான வருத்தத்தோடு,
“அட விடுங்க மாமா இது ஒரு விஷயம்னு அதெல்லாம் ஒண்ணுமில்ல” என்றான் ராஜாகுமாரன்.
யோககுமாரனின் முகம் கொஞ்சமும் தெளியவில்லை “ச்ச… கேள்வி கேக்க நாதி இல்லாத வீட்டில பொண்ணை கட்டியிருக்கணும் நம்ம இஷ்டத்துக்கு இருந்திருக்கலாம் இப்போ அங்க போய் எப்படி இருக்க ஏதாவது பேசிட்டு வரட்டும் திரும்பப் பேசவராத மாதிரி முகத்தைக் காமிச்சுடனும்” என்று எண்ணிக்கொண்டே அமர்ந்திருந்தான்.
“போயிட்டு வரோம் அத்த” என்று செவ்வந்தியும் கனகமும் வந்துநிற்க.
“ஹ்ம்ம் பெரியவனுக்கு இதெல்லாம் பிடிக்காது அவங்க அப்பா வார்த்தைக்கு மதிப்பு கொடுத்துதான் வாரான், அவனுக்குக் கோவம்வரமாதிரி யாரும் நடந்துக்காதீங்க உங்க வீட்டில மரியாதை கொறவா எதுவும் நடக்கக் கூடாது சொல்லிப்புட்டேன்” என்றார் மிரட்டலாக.
‘இதற்க்கு அந்த மகாபிரபு வராமலே இருக்கலாம்’ என்றுதான் தோன்றியது கனகத்திற்கு.
“சரிங்கத்த” என்றாள் செவ்வந்தி, அவளுக்கு இப்பொழுதே உள்ளுக்குள் உதற துடங்கியது அங்குச் சென்று என்ன கூத்து கட்டப்போகிறானோ என்று ஒரு வழியாகப் பிறந்த வீட்டிற்கு புறப்பட்டுச் சென்றனர்.
“அதான் எல்லாம் முடிஞ்சுதே வீட்டைப் பாத்து போறதுதானே” என்றான் மாணிக்கம் மனைவியிடம்.
“ரெண்டு நாள் கழிச்சு வரேனே” என்றாள் அவள்.
“ஏண்டி கல்யாணம் முடிஞ்சவங்க மறுவீட்டு விருந்துக்கே போய்ட்டாங்க உனக்கு இங்க என்ன வேல வா, ஏன் ரெண்டு நாள் இங்க என்னத்த அடிச்சு நிமித்த போற” என்றான் மனைவியை முறைத்துக்கொண்டு.
“அதில்லைங்க மருமவனே பிள்ளைகளும் கிளம்பிட்டாங்க வீடே வெறிச்சுன்னு கிடக்கு ரெண்டு நாள் இங்க இருக்கட்டுமே, பிள்ளைங்க வந்ததுமே அவங்க அப்பாரா கொண்டுவந்து விடச் சொல்லுறேன்” என்றார் ராக்காயி நயமாக.
அவனுக்குப் புரிந்தது தாயும் மகளும் அனைவரையும் அனுப்பிவிட்டு ஆற அமரத் திருமணநாள் தொட்டு இன்றுவரை என்ன என்ன குற்றம் குறை இருந்ததது என்பதை அலசி ஆராயப்போகிறார்கள் என்று.
‘என்னமோ பண்ணி தொலைஞ்சு போங்க” என்று கருதியவன் தாயை மட்டும் அழைத்துக்கொண்டு சென்றுவிட்டான் அவன் எண்ணியதுதான் அங்கே நடந்ததும்.
“ஏன்மா அந்தப் பூவிழி போட்டுட்டு வந்த அட்டிகை தங்கம்தானா” என்று ராஜி வெங்காயத்தை உரித்துக்கொண்டே கேட்க.
“ம்ஹூம் இருந்துட்டாலும்… சோத்துக்கே வக்கில்லை அவளே கடைல கால்கடுக்க நின்னு வேலைசெஞ்சு சாவுறா இதுல தங்கத்துல அட்டிகை வேற அதெல்லாம் இருக்காது” என்றார் ராக்காயி.
இப்படியே ஒருவரைக்கூட விட்டுவிடாமல் கணக்கெடுத்து ஆராய்ச்சி செய்துகொண்டிருந்ததனர்.
விருந்துக்கு வந்தவர்களுக்குத் தலைவாழை இலைபோட்டு இலையே தெரியாமல் பதார்த்தங்களை நிரப்பி வயிறு வெடிக்க செய்துவிட்டார் செல்லியம்மா.
செல்லியம்மா பழனிசாமி சொந்தங்களும் சிலர் வந்திருந்தனர் அனைவரும் உண்டு முடித்து விடைபெற, கொஞ்சம் நேரம் கூட அமராமல் சிடுசிடுவென்று முகத்தை வைத்தான் யோககுமாரன் அவனைப் பார்த்த ராஜகுமாரனுக்கு ஐயோ என்றிருந்தது.
பழனிச்சாமி மருமகன்களிடம் பேசிக்கொண்டிருக்கலாம் என்று நினைத்து அமர்ந்திருக்க அவன் முகமே அவரைச் சண்டப்படுத்தியது முகம் வாடிவிட்டது அவருக்கு அப்படியொரு கடுப்பு அவன் முகத்தில் தான் ஏதேனும் பேசினால் மரியாதை குறைவாகப் பேசிவிடுவானோ என்று தயங்கியவர்.
“செவ்வந்தி மாப்பிளைக்கு ரூமை காமி தூங்குவாங்களா இருக்கும்” என்றவர் “ஆத்தா கனகம் சின்ன மாப்பிளைக்கு நீயும் ரூமை காட்டு” என்று எழுந்துகொள்ள.
“மாமா” என்றான் ராஜா.
“சொல்லுங்க மாப்பிளை” என்றார் அவர்.
“வெளில போறீங்களா” என்றான் அவன்.
“ஆமாங்க கடைல பசங்கள விட்டுட்டு வந்திருக்கேன் சித்த நேரம் போய்ப் பாத்துட்டு வரலாம்னு” என்றவர் கூற “ரெண்டுநிமிஷம் நில்லுங்க மாமா நானும் வரேன்” என்றான் அவன்.
“அச்சோ மாப்ள நீங்க இந்த வேகாத வெயில்ல எதுக்கு அலைஞ்சுக்கிட்டு படுத்துக் கொஞ்சம் கண்ணசருங்க நான் போயிட்டு வந்திர்றேன்” என்றார் அவர் உடனே.
“பகல்ல தூங்குற பழக்கம் இல்ல மாமா நானும் வரேன்” என்றவன் திரும்பிப் பார்க்கச் செவ்வந்தி அறையிலிருந்து வெளியில் வந்தாள்.
“அண்ணா தூங்கிட்டானா அண்ணி” என்க.
“ஹ்ம்ம் தூங்கிட்டார் தம்பி” என்றாள் அவள்.
“சரி” என்றவன் “போய்ட்டுவாரேன் அத்த விருந்த தொண்ட வரைக்கும் போட்டு நெறச்சுட்டீங்க கொஞ்சம் செரிமானம் ஆகட்டும்” என்க.
முந்தானையை தோள்வழியே இழுத்து மூடி நின்றவர் கதவின் பின்னே பாதி மறைந்துகொண்டு நெளிந்தார், கனகம் தாயை பார்த்துச் சிரிப்பை அடக்கிக்கொண்டு அவனைப் பார்க்க ‘சென்றுவருகிறேன்’ என்று அவளிடம் விழிகளாலே விடைபெற்றான்.
சற்று தளர்வாக அடுப்படி வாயிலில் அமர்ந்தார் செல்லியம்மா, ஒரே வயித்துல பொறந்து ரெண்டு பேரும் ரெண்டு குணம் என்று மனதில் எண்ணிக்கொண்டார் மறந்தும் மகள்களிடம் அப்படி எதுவும் பேசிவிடமாட்டார்.
ஒருமுறை இருமுறை பரவாயில்லை என்று கடந்துசென்றாலும் மூன்றாம் முறை மகள்களின் மனதில் ஒருவன் உயர்ந்தும் ஒருவன் தாழ்ந்தும் போய்விடக் கூடாது.
அதுவும் தாயே அப்படி நினைக்கிறார் என்ற எண்ணம் வந்துவிடக் கூடாது என்பதில் தெளிவாக இருந்தார் செல்லியம்மா.
“அங்க எப்படி மதியம் சாப்பாடு எப்போ, காப்பித்தண்ணி எப்போ” என்றார் மகள்களிடம், அவர்களும் தாயின் அருகில் அமர்ந்துகொண்டனர்.
“இப்போ ஒன்னும் சரியா தெரியலம்மா ஆளுங்க வந்து போயி இருக்கறதால எப்போவும் டி காபி இருக்கும், சாப்பாடும் அப்படித்தான் விருந்து முடிஞ்சு அங்க போனாதான் தெரியும்” என்றாள் கனகம் அப்படியே அவர்கள் பேச்சு நீண்டது.
இன்று திங்கள் கிழமையானதால் மகேசுக்கு பள்ளி இருந்தது பத்தாம் வகுப்பு வேறு விடுமுறை எடுக்க முடியவில்லை பள்ளியில் இருந்தாலும் மனமெல்லாம் இங்குதான் அவனுக்கு.
நேரம் மாலை நான்கை தாண்டவுமே செவ்வந்தி மற்றும் கனகத்தின் விழிகள் வாசலை வாசலைப் பார்த்தது, சைக்கிள் சத்தம் கேட்டதுமே இருவரும் எழுந்து வெளியில் வர அவசரமாகச் சைக்கிளை ஸ்டாண்ட் போட்டவன் அவர்கள் அருகில் ஓடி வந்தான்.
“அக்கா எப்படி இருக்கீங்க நீங்கக் காலைலே சாப்பிட வருவீங்க நினச்சேன்” என்றவனின் தலையை வருடினர் இருவரும்.
“மாமா எங்க” என்றான் அவன்.
“எந்த மாமா” என்றாள் செவ்வந்தி.
“ரெண்டுபேரும்தான்” என்றான் மெல்ல.
“பெரியமாமா தூங்குறாங்க சின்ன மாமா அப்பாகூட கடைக்குப் போயிருக்காங்க” என்றாள் கனகம்.
“ஹ்ம்ம்” என்றவன் “நாளைக்கே போய்டுவீங்களாக்கா” என்றான் இருவரையும் பார்த்து, என்ன பதில் சொல்ல என்று தெரியாமல் அவர்கள் தயங்கி நிற்க.
“அப்பறம் கட்டிக்குடுத்த பொம்பள பிள்ளைங்க புகுந்த வீட்டுக்குப் போகவேண்டாமா தம்பி, சரி நீ போயி குளிச்சுட்டு வந்து டீக்குடி டியூஷன் போகவேண்டாமா” என்றார் செல்லியம்மா.
“அக்கா இன்னைக்கு ஒருநாள்…” என்றான் தமக்கைகளை பார்த்து.
செவ்வந்தியும் “அம்மா நாங்களும் நாளைக்கு போயிடுவோம் இன்னைக்கு ஒருநாள் லீவ் எடுத்துகிட்டுமே” என்றாள் தாயிடம்.
மகனைத் திரும்பிப் பார்த்தவர் சிரித்துக்கொண்டே “இன்னைக்கு மட்டும்தான்” என்க.
“சரிம்மா சரிம்மா” என்று துள்ளிக்கொண்டு ஓடினான், அவன் குளித்துவர பழனிச்சாமியும் ராஜகுமாரனும் திரும்பி வந்திருந்தனர்.
“அடடா என்ன மச்சான் மாமன்கள வீட்டில இருந்து வரவேற்காம ஸ்கூலுக்கு போய்ட்டிங்க” என்றான் மகேசின் தோளில் கையிட்டு அணைத்துக்கொண்டு.
“பத்தாவது லீவ் தரமாட்டாங்க மாமா” என்றான்.
“அதுசரி அப்போ பரிட்சை முடிஞ்சதும் சொல்லுங்க இன்னொருவாட்டி விருந்துக்கு வரோம்” என்றான் அவன் அனைவரும் அதைக் கேட்டுச் சிரித்துக்கொண்டிருக்க வெளியில் வந்தான் யோககுமாரன்.
செவ்வந்தி அவசரமாக அவன் அருகில் சென்றவள் “முகம் கழுவிக்கோங்க காப்பி குடிக்கலாம்” என்றாள் அதன்பிறகு பணியாரம், வடை, டீ என்று அமர்க்களப்பட்டது.
அனைவரையும் பிடித்து அமர்த்திப் பாட்டுக்குப் பாட்டு, சீட்டு என்று விளையாடினான் ராஜகுமாரன்.
“நான் வெளில போய்ட்டுவாரேன்” என்று யாரின் பதிலையும் எதிர்பார்க்காமல் வெளியேறிவிட்டான் யோகன்.
“மாப்ள” என்று பழனிச்சாமி பின்னோடு போகப்பார்க்க “மாமா அவனுக்கு இருட்டினத்துக்கு அப்பறம் இப்படி நடக்க போறது பிடிக்கும் வந்துடுவான் நீங்க வாங்க” என்றுவிட்டான் ராஜா.
இரவுணவு மிக எளிமையாகப் போதும் என்றுவிட்டார்கள், இட்லியும் கறிக்குழம்பும் வைத்துச் சாப்பிட்டுவிட்டனர், இங்கேயும் இரண்டு அறைகள் மட்டுமே கனத்தின் திருமணத்தைப் பற்றி யோசித்திருக்கவில்லையே ஆகையால் புதிதாக அறை எடுக்க நேரமும் இல்லை.
இல்லையென்றாலும் செல்லியம்மாவும் பழனிச்சாமியும் ரூமில் தூங்குவதில்லை, செவ்வந்தி வயதுக்கு வந்ததுமே இருவரும் தங்கள் இடத்தை உள் வாயிலுக்கு வலப்பக்கம் இருக்கும் விஸ்தாரமான இடத்திற்கு மாற்றிக்கொண்டனர்.
ஒரு அறைக்குள் செவ்வந்தியும் கனகமும் படுக்க மற்றதில் மகேசு படுத்துக்கொள்வான் இன்று அவனும் தந்தையுடன் அவரின் கட்டிலில் படுத்துக்கொள்ள செல்லியம்மா எப்பொழுதும் போலக் கீழே பாயில் படுத்துக்கொண்டார்.
மூன்று நாட்களுக்குப் பிறகு இன்று மீண்டும் யோகனுடன் ஒரே அறையில் செவ்வந்தி, அவளுக்கு உடல் நடுங்கியது முதல் நாள் மாமியாருக்கு புரிந்தாலும் கண்டுகொள்ளவில்லை அப்படி இங்கு முடியாதே அன்னை கண்டுகொள்வார் பொய் சொல்ல முடியாது.
என்னவோ ஒரு பயம் தயக்கம் அவள் அறைக்குள் நுழைந்து கதைவடைத்தாள், அவனோ கட்டிலில் படுத்து விழிமூடியிருந்தான் உறங்கிவிட்டானோ என்ற ஒரு நிம்மதியும் பிறந்தது.
அவள் அருகில் வந்ததும் அவன் விழி திறக்க அவளுக்குத் திடுக்கென்றது “நாளைக்கு காலைல சாப்பிட்டதும் கிளம்பனும் இல்ல இருந்துட்டு வருவன்னா இங்கேயே இருந்துக்கோ இதுக்குமேலலாம் என்னால இருக்க முடியாது” என்றவனை பார்த்தவள்.
“நாளைக்கு மதியம் சாப்பிட்டு கிளம்பிடலாங்க” என்றாள் எப்படியோ தைரியத்தை வரவழைத்து, அவளைத் திரும்பி அவன் பார்த்த பார்வையில் அவளுக்கு உடல் சில்லிட்டது.
“நான் ஒரு விஷயம் சொன்னா சரின்னு கேட்டுக்கணும் இன்னொரு தடவை எதிர்த்துப் பேசின அப்புறம் பேச வாய் இருக்காது” என்றவன் அவள் கையைப் பிடித்து இழுத்து தன்னருகில் போட்டுக்கொண்டான்.
அவன் பேசியதும் வலித்தது செய்கையும் வலித்தது இன்றும் கண்ணீர்தான் செவ்வந்திக்கு.
“கனகம்” என்றார் செல்லியம்மா மெல்லிய அதட்டலாக, பதறி எழுந்தாள் பின்னால் துணி துவைக்கும் கல்லில் அமர்ந்திருந்தவள்.
“என்னடி இந்த நேரத்துல இங்க ஒக்காந்திருக்க, மாப்ள ரூம்க்கு போய் ரொம்ப நேரமாச்சே என்னடி ஏதாவது பிரச்சனையா வாய் துடுக்கா எதுவும் பேசிட்டியா” என்றார் பதட்டமாக.
“ம்மா… அதெல்லாம் ஒண்ணுமில்ல” என்றாள் அவள், பின்னே சொல்லவா முடியும் இன்று கணவனின் பார்வை சரியில்லை அதற்க்கு பயந்தே இங்கு ஒளிந்திருக்கிறேன் என்று.
அவள் முழியே சரி இல்லாமல் இருக்க “என்னடி என்ன செஞ்ச” என்றார் அவர்.
“ஐயோ அம்மா ஒண்ணுமில்ல அவர் ஏதோ சிநேகிதர்க்கிட்ட ஆபிஸ் விஷயமா பேசிட்டு இருக்கார் அதான் இங்கேவந்து இருந்தேன் தோப்போறேன்” என்றவள் வேகநடையில் வீட்டிற்குள் நுழைந்து அறை வாயிலை அடைந்துவிட்டாள் அதற்குமேல் முடியவில்லை.
‘ஆண்டவா ஒளியக்கூட இடமில்லையே இங்க’ என்று புலம்பிக்கொண்டிருக்க செல்லியம்மா கதைவடைக்கும் சத்தம் கேட்டது இதற்குமேல் இங்கே நிற்க முடியாது என்று அறைக்குள் நுழைந்தாள்.
கட்டிலில் அமர்ந்து அலைபேசியை பார்த்துக்கொண்டிருந்தவன் விழிகள் உயர்த்தி அவளைப் பார்த்தான் இதழ்களில் கள்ளப்புன்னகை, அவன் தானே மாமியாரிடம் சென்று கேட்டிருந்தான் “என் பொண்டாட்டியை காணவில்லையென்று”.
அவள் கையைப் பிசைந்துகொண்டே நிற்க “எவ்ளோ நேரம் முறுக்கு புழியப்போற” என்றான் தீவிரமாக.
“நல்லா மசாஜ் பண்ணுவ போலயே இங்கவா கொஞ்சம் முதுகு அமுக்கி விடு” என்றவன் சட்டையைக் கழட்டிவிட்டு குப்புற படுத்துக்கொண்டான்.
“ஏதே மசாஜா!” என்று விழித்தவள் அசையாமல் நிற்க.
“என்ன?” என்றான் அவளைத் திரும்பிப் பார்த்து.
“எனக்கு மசாஜ் எல்லாம் தெரியாது” என்றாள்.
“சரி ஏறி மிதி” என்றான்.
“ஐயோ படுத்துறானே” என்று நினைத்தவள் “இல்ல… அது…” என்று தயங்க.
“என்ன!! புருஷனை மிதிக்கத் தெரியாத ஒரு பொண்டாட்டியா உலகதிசயமால்ல இருக்கு” என்றான் நக்கலாக, அவள் முறைத்து பார்க்க.
“ஹ்ம்ம் இப்போ சரியா இருக்கு, இப்போ வந்து பிடிச்சு விடுறியா இல்ல அத்தையை கூப்பிட்டு உங்க பொண்ணு நான் சொன்னா எதுவுமே கேக்க மாட்டறா எனக்கு வேற பொண்ணு பாருங்க சொல்றேன்” என்று எழ.
“ஐயோ வேண்டாம்” என்று ஓடி அவன் அருகில் வந்தவள் அப்பொழுதும் அவனை முறைத்தே இருக்க.
“என்னடி” என்றான்.
“கல்யாணம் முடிஞ்சு நாளேநாள்ல உங்களுக்கு வேற பொண்ணு வேணுமோ? அதுவும் என் அம்மாவே பாக்கணுமா” என்றாள் உர்ரென்று.
“ஆமா ராக்காயிக்கு சரியா பொண்ணு பாக்க தெரியல அவங்க பாத்துத்தானே உன்னைக் கட்டிவெச்சாங்க நீதான் என்னைப் புருஷனா ஏத்துக்க மாட்டறியே, திருடன்னு சொல்லி ஒதுக்கி வைக்குற தேவையே இல்லாம என்னை ஏதோ வில்லன் மாதிரி பாக்குற”.
“அதனாலதான அங்க போய் ஒளிஞ்சிட்டு இருந்த அதான் அத்தையாவது எனக்கு நல்லது பண்றாங்களான்னு பாக்கலாம்னு” என்றான் சிரிப்பை அடக்கிக்கொண்டு.
அவன் பேசப் பேச வந்த கோபத்தையெல்லாம் அவன் மேலே காண்பித்தாள் அவனுக்கு வலிக்க முதுகை அழுத்தி “ஸ்ஸ் வலிக்குதுடி” என்றான் மெல்ல.
அவள் விழிகள் ஏன் என்றே தெரியாமல் கலங்கியது ஒருக்களித்து திரும்பியவன் அவளை இழுத்து தன் அருகில் கிடத்தினான், கண்ணீரை துடைத்துவிட்டு “ஒய் சண்டக்கோழி” என்றான் மெல்லிய புன்னகையோடு.
அவள் விழிகள் உயர்த்தி அவனைப் பார்க்க “ரொம்ப ஆசைப்பட்டு கட்டிக்கிட்டேண்டி உன்னை” என்றான் அவள் புருவங்களை வருடிக்கொண்டே.
அவள் ஆச்சர்யமாக விழிவிரிக்க “ஹ்ம்ம் அன்னைக்கு பஸ்ல பாத்தியே ஒரு பார்வ அதுல விழுந்தவன்தான், அண்ணா அண்ணி கல்யாணம் முடிஞ்சு நம்ம கல்யாணத்தை எப்படியாவது நடத்திக்கணும்னு நினச்சேன் ஆனா அம்மாவே இப்படி முடிச்சு போடுவாங்கன்னு நினைக்கல”.
“உன்னைப் பிடிச்சுதான் கல்யாணம் செஞ்சிகிட்டேன் சண்டைக்கோழி” என்றான் அவள் நெற்றிமுட்டி, கன்னங்கள் துடுக்க வெட்கம் பூத்தது பெண்ணிற்கு.
“அன்னைக்கு பஸ்ல நடந்ததுக்கு சரியான காரணம் இருக்கு நேரம் வரும்போது சொல்றேன், கெட்டவன் இல்லடி நான்” என்றான்.
“தெரியும்” என்றாள் காற்றாகிவிட்ட குரலில்.
“வேற என்ன தெரியுமாம்” என்றான் அவன்.
“வேற ஒன்னும் தெரியாது” என்றாள் அவள்.
“எப்போ தெரிஞ்சிப்ப” என்றான் அவள் முகம் நிமிர்த்தி.
அவள் விழிகளை மூடிக்கொள்ள மெல்ல சிரித்தவன் “இன்னைக்கு ஒன்னும் பண்ண மாட்டேன் இப்படியே என்கூட இரு அதுபோதும்” என்றவன் அவளை அணைத்துக்கொண்டு படுத்துவிட அவன் மார்பில் முகம் புதைத்து அவளும் விழிமூடினாள்.
ஏனோ மனதிற்கு இதமாக இருந்ததது விரைவாகவே அவர்களை உறக்கம் தழுகிக்கொண்டது.
செவ்வந்தியின் முகம் பார்த்துத் தயங்கி தயங்கி நின்றார் செல்லியம்மா, மகளிடம் கேட்கவும் சங்கடம் பிரச்சனையாக இருக்குமோ கல்யாணம் முடிந்த பெண்ணின் பூரிப்பு இல்லை மகளின் முகத்தில்.
“செவ்வந்தி… என்னாத்தா ஒன்னும் பிரச்னையில்லயே” என்றார் கலக்கமாக.
“என்ன பிரச்சனை அதெல்லாம் ஒண்ணுமில்லமா கொஞ்சம் சோர்வா இருக்கு” என்றவள் அடுப்பின் பக்கம் திரும்பிக்கொண்டாள் அதற்குள் மலர்ந்த முகத்தோடு கனகம் அங்கு வர அப்படியே பேச்சுத் திசை மாறிவிட்டது.
“என்னமா இப்படி கிளம்புறேன்னு சொல்றாரு மாப்ள இங்க பிடிக்கலையா” என்று தவிப்போடு கேட்டு நின்ற தாயையும் தந்தையையும் பார்க்க நெஞ்சடைத்தது பெண் பிள்ளைகளுக்கு.
கனகமாம்பரத்தின் விழிகள் மீண்டும் யோகனை முறைத்துப்பார்க்க இவ ஒருத்தி எல்லார்கிட்டயும் சிலிப்பிகிட்டே நிப்பா என்று எண்ணிய ராஜகுமாரன்.
“மாமா தப்பா எடுத்துக்காதீங்க அவன் சின்ன வயசுல இருந்து அப்படியே வளந்துட்டான் எங்கேயுமே தங்கினதில்ல இதுதான் முதல்முறை கொஞ்சம் கொஞ்சமா மாறிடுவான்” என்றான் அவர் கையைப் பிடித்துக்கொண்டு.
“சரிங்க சரிங்க மாப்ள, இல்ல நாங்க எதுவும் குறை வெச்சுட்டோமோன்னு மனசு பதறிடுச்சு” என்றார் அவர்.
“அப்படிலாம் ஒண்ணுமில்ல மாமா வீனா மனசை போட்டுக் குழப்பிக்காதீங்க இனிமே அடிக்கடி வருவோமே” என்று தன்மையாகப் பேசி அவர்களைச் சகஜமான மனநிலைக்கு மாற்றிவிட்டே புறப்பட்டான்.
அவர்கள் புறப்படப் பின்னேயே ஒரு ஆட்டோவில் மகள்களுக்குப் பலகாரங்கள் பெரிய பெரிய பித்தளை பாத்திரங்களில் சென்றது அதற்கெல்லாம் யோககுமாரன் காத்திருக்கவில்லை.
“கிளம்புறோம்” என்றவன் உடனேயே செவ்வந்தியை அழைத்துக்கொண்டு முன்னே சென்றுவிட ஆட்டோவில் பலகாரங்களை ஏற்ற உதவி செய்து மாமியார் மாமனாருக்கு ஆறுதல் கூறி புறப்பட்டான் ராஜகுமாரன்.
பாதி வழியில் ராஜகுமாரன் ஆட்டோக்காரரிடம் “அண்ணா நீங்க முன்னாடி போங்க நாங்க வந்துடுறோம்” என்றவன் அவளுடன் அப்படியே மீண்டுருட்டி சென்றான்.
“எங்கேங்க போறோம்” என்ற மனைவியிடம் சொல்றேன் என்றவன் வேகமாக வண்டியை ஓட்டினான்.
அவன் திரும்பி வந்தபோது முகத்தை உர்ரென்று வைத்துக்கொண்டு ராக்காயி ஒரு பக்கமும் ராஜலட்சுமி மறுபக்கமும் அமர்ந்திருக்க செவ்வந்தி விழிகள் சிவந்து கண்ணீர் தடத்தோடு அடுப்படி வாயிலில் நின்றிருந்தாள்.
அவன் எதிர்பார்த்த பஞ்சாயத்து அதற்குத்தானே அவன் சென்றதும் “உள்ள போ” என்றான் கனகத்திடம், ராக்காயின் விழிகள் மகனிலும் அவன் கையில் இருந்த பையிலும் அழுத்தமாகப் பதிந்தது.
error: Content is protected !!