21.2 ஷோபா குமரனின் உன் பாதியும் என் மரணத்தின் மீதியும்
Post Views:2,195
ஷோபா குமரனின் உன் பாதியும் என் மரணத்தின் மீதியும்
அத்தியாயம் 21-2
.
எப்படி அவள் தன்னை பார்த்துப் பயந்து போகலாம்? தன்னை மறந்தே போனாளோ? தாளமுடியாது, “பேபி” என்றான் கண்களில் வலியோடு. அவள் முகம் சட்டென்று மாறிப் போனது. ‘நீயா…? வந்து விட்டாயா? என்னை நினைவு வைத்திருக்கிறாயா?’ என்பது போல் முகம் ஆனந்தத்தையும் பிரகாசத்தையும் ஒன்று சேர வாரி இறைத்தது.
Advertisement
புன்னகை, முகம் முழுவதும் பரவ, கண்கள் மின்ன… அவனைப் பார்த்து, “ல்ல்லலகு” என்றாள் திக்கலும் திணறலுமாக. காற்றுதான் வந்தது.
கதவோடு அப்படியே சாய்ந்து நின்று கொண்டான் ரகு. அந்த நிமிடம் அவனுக்குள் என்னவெல்லாமோ செய்தது. முழுவதுமாக மாறியிருந்தவளை மெல்ல அவதானித்தான்.
Advertisement
Advertisement
அவன் கை பிடித்து ஊர் சுற்றிய பரதேவதை இல்லை இவள். அவனைக் கீழே தள்ளி முடியைப் பிய்த்து… அவனைக் கடித்து ரத்தத்தை ருசித்த காட்டேறி இல்லை இவள். அவன் விட்டுச் சென்ற குட்டி பேபி இல்லை இவள். வளர்ந்து, பெண்ணாக வடிவம் பெற்று நிற்கிறாள். ஒரு யட்சனியாய்… பதினாறு வயதிற்கே உரிய பொலிவும் ஏற்ற இறக்கங்களுமாக ஐந்தரையடி உயரத்தில் கண்களைக் கவர்ந்து நிற்கிறாள் அவனின் பேபி. இனி இவளை அப்படிக் கூப்பிட்டால் அபத்தமாக இருக்காதா என நினைத்தவன் முகம் புன்னகையைப் பூசிக்கொண்டது.
அவனைப் போல் தயக்கமெல்லாம் அவளிடம் இல்லை. அந்த ஒரு நிமிட திடுக்கிடல் மட்டுமே. ஓட்டமாக அவனருகில் வந்தவள் கீழ் உதடு கடித்துச் சிரித்தாள். அவனை மேலிருந்து கீழ் பார்த்தாள். அவளோடு அடித்துப் பிடித்து உருண்டு புரண்ட ரகுவா இது? இல்லவே இல்லை. ஆறடி உயரத்தில் நீள நீள கையும் காலுமாகச் சிரிக்கும் விழிகள் கொண்டு ஆளை வசீகரிப்பவன்.
Advertisement
அவள் ரகு, அழகு பொம்மை. ஆனாலும்… இது என்ன இவன் இப்படி வசீகரிக்கிறானே என மனம் நினைக்காது இல்லை. “ப்ப்பா… எஎஎப்படி மாறிட்ட நீ.” என்றாள் விழி விரித்து.
மெல்லச் சிரித்தான். சிறகில்லாது பறந்தான். தலை கோதி புன்னகை மாறாது, “எப்படியாம்?” என்றான்.
“ன்ன்நெடு நெடுன்னு… ஒட்டகச் சிவிங்கி மாதிரி உசரமா… சிங்கம் மாதிரி மண்டை நிறைய முடியோட… ஹ ஹ ஹா… அடையாளமே தெரியல… உன் குரல் கூட ஆம்பளது மாதிரி ஆழமாகிடுச்சு. போதாதுக்கு மீசை எல்லாம் முளைச்சிருக்கே…” என அவள் வாய் பொத்திச் சிரிக்க… “நீ இன்னும் என் பேபியே தான்” என்றான் கண்கள் கலங்க.
“ப்ப்பின்ன…. இஇ..இல்லியாக்கும்? எப்பவும் நான் உன் பேபி தானே… இதுல சந்தேகம் வேறயா? வா உள்ள போலாம்” என்றாள் புன்னகை மாறாது.
போகலாம் என்ற இருவருக்குமே நகர மனமில்லாது ஒருவரை ஒருவர் பார்த்து நின்றிருந்தனர். பேசிவிட்டாலும், அந்த நிமிடத்தை உள்வாங்கிக் கிரகிக்க வேண்டுமே… நொடிகள் சில தேவைப்பட்டன.
ஈர முகத்தில் ஒட்டியிருந்த மயிர் கற்றைகளின் ஒன்றை நீக்கி ஒதுக்கியவன், “முகத்த தொட” என்றான், அவன் ஆழமான குரலில்.
கன்னத்தில் விரல் பட்டும் படாமலும் வருடினான். உள்ளுக்குள் அன்பு கரைபுரண்டது. அவன் பேபியை அள்ளி அணைக்க மனம் ஆசை கொண்டது. கனத்தில் இதழ் புதைய முத்தம் வைக்க மனம் ஏக்கம் கொண்டது. இந்த ஐந்து வருட இடைவெளி இடையே வராது போயிருந்தால்… இந்தத் தயக்கமும் தடுமாற்றமும் இருந்திருக்காதோ? சகோதரியாய்… தோழியாய் அவளை எளிதில் நெருங்கி இருப்பான். ஆனால்… இப்பொழுது நெருங்க ஆசை தான்… ஆனால் ஏதோ… ஏதோ ஒன்று இடையில் நிற்கிறதே… சகோதரியாய் தோழியாய் நினைக்க முடியவில்லையே. இப்படி ஒரு தடுமாற்றத்தை ரகு உண்மையில் எதிர்பார்க்கவே இல்லை. கன்னம் தீண்டிய விரலில் ஆரம்பித்த சிலிர்ப்பு உடல் முழுவதையும் ஆக்கிரமித்தது.
சில்லென்ற காற்று ஈர முகத்தைத் தொட்டு வருடியதாலா? இல்லை, இவன் தொட்டதாலா? தெரியவில்லை. அடி வயிற்றில் ஏதோ குடைந்தது, அந்தப் பதின்ம வயது மடந்தையை. அண்ணாந்து பார்க்கும் படி வளர்ந்து நிற்கிறான். இதழ்களுக்குப் போட்டியாய் அவன் கண்கள் சிரிக்கின்றன. மீசையும் ஆழ் குரலுமாக மனதில் வளர்ந்த வாலிபனாக பசக் என ஒட்டிக்கொண்டான். இவனை எப்படி நெருங்குவது? இவள் கைபிடித்து ஊர் சுற்றிய ரகுவாகவா? இல்லை கைபிடிக்கும் ரகுவாகவா? மனம் ஏன் இப்படி எல்லாம் யோசிக்க வேண்டும்?
அந்த சிறு தொடுகையோ… இல்லை ரகுவின் மூச்சுக் காற்றோ… ஏதோ ஒன்று அவளுள் ஏதோ செய்தது உண்மை. உள்ளுக்குள் ஒரு மெலிதான நடுக்கம். அதைக் காட்டாது இருக்கப் புன்னகைத்தவள், மீண்டும் வெளியே இருந்த கொடிக்கு ஓடி அதில் தொங்க விட்டிருந்த துப்பட்டாவில் முகம் துடைத்துக்கொண்டே, “உஉஉள்ள ப்ப்போ ர்ர்ரகு” என்றாள்.
அவள் திணறல் அவளின் படபடப்பை அவனுக்குக் காட்டிக் கொடுத்தது.
“எப்போல இருந்து லகு ரகுவானேன்? ம்ம்ம்?” என அவன் அவள் முகம் பார்க்க, அவஸ்தையாகச் சிரித்து வைத்தாள்.
அவளை இலகுவாக்கும் பொருட்டு, “சொல்லு சேட்ட… படிப்பு எப்படி போகுது? எத்தன பாடத்த கோட்ட விட்ட? இந்த வருஷம் பாஸ் ஆனியா இல்லியா?” எனப் பேச்சைத் திசை திருப்பினான்.
“ம்ம்முன்ன மாதிரி எல்லாம் இஇஇல்ல. நல்லா தான் படிப்பேன்” என்றாள் சலுகையாக.
“எப்பிடி? தூக்கம்… சோறு… தண்ணி எதுவும் இல்லாமலா?” என்றவன், “பாஸ் பண்ணி லெவன்த்துக்கு அனுப்புவாங்களா?” எனச் சிரித்தான்.
“அஅது எஎல்லாம் அனுப்பியாச்சு. கிளாஸ் அடுத்த வாரம் ஆரம்பிக்கிறாங்க”
“அப்போ என் கூட இருக்க மாட்டியா?” என்றவன் முகம் விழுந்து போனது.
“ச்சும்மா… ஹாப் எ டே தான். லன்ச்சுக்கு வந்திடுவேன்” என ஆறுதல் வார்த்தைகளைக் கொட்டினாள் பெண்.
“அப்போ சரி… நானே ஸ்கூலுக்கு கூட்டிட்டு போய் விட்டுட்டு கூட்டிட்டு வரேன்”
“ந்நீ என்ன என் டிடிரைவரா?” என அவள் சிரிக்க,
“ஆமா… இருந்துட்டு போறேன். பார்த்து ஏதாது சம்பளம் போட்டு குடு.” எனச் சிரித்தவன், “டீ… காபி.. ஏதாவது போடத் தெரியுமா?” என்றான்.
“ஓ… ந்நநல்லாவே” என்றவளிடம், “ஒரு கப் டீ தாயேன்” என் கேட்டுக் கொண்டே அவளோடு அடுக்களைக்குள் சென்று மேடை மேல் அமர்ந்து கொண்டான்.
“இஇஇப்பவும் பால் இல்லாம தான் குடிக்கிறியா?”
“ம்ம்ம்… பிளாக் டீ. நோ சுகர்” என்றவன், “உன் முக வடிவம் ரொம்ப எல்லாம் மாறலனாலும், உன்ன இந்த வீட்டுல வச்சு பாக்காம வேற எங்கயாது பாத்திருந்தா சத்தியமா… உடனே எல்லாம் அடையாளம் கண்டிருக்க மாட்டேன் தெரியுமா? ஆளே மாறிட்ட பேபி.” என்றான்.
“ந்நீ ரொம்ப அழகா… பெரிய ஆம்பள மாதிரி ஆகிட்ட ல்லகு” என்றாள் அவன் முகத்தைத் தவிர்த்து.
“நீ மட்டும் என்னவாம்? புசு புசுன்னு வளரவே மாட்டேன்னு அடம் பிடிச்சுட்டு குட்டியா இருந்த. இப்போ என் காது அளவுக்கு வளந்து நிக்கிற. உன்ன பார்த்ததும் ‘ஒளியிலே தெரிவது தேவதையா?’ன்னு மண்டைக்குள்ள ஓடுது” என அவள் முகம் பார்த்துப் புன்னகைத்தான் ரகு.
முத்துகள் கோர்த்த வார் அறுந்து சிதறுவதை ரகு அன்று வரை பார்த்ததில்லை. இன்று, அவள் சிரிப்பில் அவனுள் முத்துகள் சிதறியது. வளவளத்துக் கொண்டே டீ போட்டுக் கொண்டிருந்தவளை வாஞ்சையாகப் பார்த்தான். பார்வை வாஞ்சையோடு மட்டும் அவளைத் தழுவவில்லை என்பது அவனுக்குத் திண்ணம். உள்ளுக்குள் ஏதேதோ அலைகள் எழுந்து அமர்ந்தன. ‘எப்பொழுதிலிருந்து இப்படி? ஏன் இப்படி?’ என்ற கேள்விகள் எல்லாம் எழவும் இல்லை. அப்படியே எழுந்தாலும், ஐந்து வருடங்களாக அவளை ‘எப்போதடா பார்ப்போம்’ என நினைத்திருந்தவனுக்கு அதை ஆராயும் எண்ணமும் வரப்போவது இல்லை.
அவளுக்கு இந்தத் தாக்கம் உள்ளதா என்பதை அறியும் ஆவல் எழுந்தாலும் தனியே இருப்பவளைப் பயமுறுத்தும் எண்ணமெல்லாம் அவனிடம் இல்லை.
“இடது கைய நீட்டு” என்றான்.
ஏன் என்றெல்லாம் கேட்காது கரத்தை நீட்டினாள். “ஆன்லைன்ல, காலேஜ் ஸ்டுடென்சுக்கு டியூஷன் எடுத்து, கிடைச்ச என் முதல் சம்பளத்துல உனக்காக வாங்கினது.” எனத் தன் பாக்கெட்டில் இருந்து எடுத்த கைக் கடிகாரத்தைக் கட்டிவிட்டான்.
ரோஸ் கோல்ட் டைட்டன் ராகா அவள் கரத்தில் அழகாகப் பொருந்தியதைத் திருப்தியோடே பார்த்தவன், “எப்படி இருக்கு? பிடிச்சிருக்கா?” ஆசையாக முகம் பார்த்தான்.
“அதுக்குள்ள சம்பாரிக்கிறியா? இது முதல் சம்பளத்துல வாங்கினதா? எனக்காகவா?” என்றவளின் பூரித்த கண்கள் அதன் பிடித்ததைக் கூறியது.
“உன் ஸ்வீட் சிக்ஸ்டீனுக்கு” எனப் புன்னகைத்தவனின் புன்னகை அவளையும் தொற்றிக் கொண்டது. “எஎஎன்ன நீ மறக்கவே இல்ல லகு” என்றவள் உள்ளம் நெகிழ்ந்து துவண்டது.
மறப்பதா? அவன் பேபியை அவன் எப்படி மறப்பான்? “இந்த இதயம் துடிப்ப நிறுத்திற வர… இங்கயே தான் நீ இருப்ப” என அவன் பிடித்திருந்த அவள் கரத்தை அவன் இதயத்தின் மீது வைத்தான்.
துடிக்கும் இதயத்தின் லப்-லப் உள்ளங்கை உணர்ந்தது. கண்கள் மோதி நின்றன.
பூமியின் மேற்பரப்பு அசையும் பாளங்களால் அமைந்துள்ளது. இந்த அசையும் புவித்தட்டுகள் அசைந்து உராய்ந்தால் என்ன ஆகும்? நிலநடுக்கம் ஏற்படும். நின்ற இடத்திலிருந்து அசையாது எதிரில் இருப்பவரை ஊடுருவும் நான்கு கருவிழிகளால் என்ன செய்திட முடியும்? இருவருக்குள்ளும் குட்டி குட்டி பூகம்பங்களை ஏற்படுத்த முடியும். ஏற்படுத்தியதா? பதினாறும் பத்தொன்பதும் மிகவும் ஆபத்தான வயதாம்!
பூகம்பத்தின் விளைவு என்னவாக இருக்கும்? மன அதிர்வின் வீரியத்திற்கும் ரிக்டர் அளவுகோல் இருந்தால்… சேதாரத்தின் அளவை கண்டு பிடித்துவிடலாம்.
கடலுக்குள் எழும் பூகம்பங்கள் சுனாமியை ஏற்படுத்தும்… பாசம் கொண்ட இதயத்தில் எழும் அதிர்வு எதை ஏற்படுத்தும்? வேறென்ன… பாசம், பெரும் நேசமாக உருவெடுக்கும்! இந்த பெரும் நேசத்தின் பெயர் தான் என்ன?
“தண்ணி கொதிச்சுடுச்சு பார். நீ, பிளாக் டீ போடு. நான் பாத்ரூம் யூஸ் பண்ணிட்டு வரேன்” என்றவன், அவள் அறைக்குள் சகஜமாக நுழைந்தான். அவளுக்குத் தான் படபடப்பாகிப் போனது. ‘ஐயோ…. எது எது எங்க எங்க கெடக்கோ… பகவானே’ என உள்ளுக்குள் நாணிப் போனவள், தேநீரை அவசர அவசரமாகக் காய்ச்சி, கோப்பையுள் ஊற்றி, சோஃபா முன்னிருந்த தேநீர் மேசையின் மீது வைத்துவிட்டு அறைக்குள் ஓடவும் அவன் வெளிவரவும் சரியாக இருந்தது.
அடுத்த என்ன? மோதலே தான். விழப் போனவளை அணைத்துப் பிடித்து, “பாத்து… என்ன அவசரம்?” என நிறுத்தியவனுக்கு உடல் முழுவதும் ஒரு மெல்லிய நடுக்கம். அவனுக்கே அப்படி என்றால் அவளின் நிலை?
எதையும் வெளிக்காட்டாது நடக்க ஆரம்பித்தவன், பெண்ணவளின் தோளில் தொங்கிக் கொண்டிருந்த பருத்தி துப்பட்டாவின் ஓரம் பிடித்துக் கழுவியிருந்த முகத்தை இயல்பாகத் துடைத்துச் சென்றான்.
“அங்க என்ன பண்ற? வா டீ ஆறிட போகுது” என சோஃபாவில் அமர்ந்தவன், மேசை மீதிருந்த தேநீரைப் பருக ஆரம்பித்தான்.
“நல்லா இருக்கு பேபி” என்றான்.
அந்த ‘பேபி’ என்ற அழைப்பு, அந்தச் சிலைக்கு உயிர் கொடுக்க, அவளும் அருகில் இருந்த இருக்கையில் அமர்ந்தாள். சூடான தேநீரை அருந்திக் கொண்டிருந்தவளுக்குள் ரகு என்பவன் குளிராக இறங்கினான். மனம் கத்தி கூச்சலிட ஆசை கொண்டது. ‘என்ன நடக்கிறது தனக்குள்?’ என ஆராய முற்பட்டாள். எதிரில் இருப்பவன் ஏன் தன்னை இப்படிப் புயலெனத் தாக்குகிறான்? என்ன மாயமோ புயல், தென்றலாய் உள்ளுக்குள் இறங்கி கிச்சுகிச்சு மூட்டுகிறது. ஒரே நேரம் சிரிக்கவும் அழவும் தோன்றுகிறது.
“மேக்ஸ் எப்படி போடற? ஐயா மாதிரி சி.ஏ. ஆகணும்ன்னு சொல்லிட்டு இருந்த… இப்போ எப்படி?” எனப் பேச்சு படிப்பின் பக்கம் சென்றது.
“எ..எனக்கு அத்த மாதிரி சிவில் சர்விஸ் பாஸ் ஆகி, நீ சொல்லுவியே அந்த மாதிரி கலெக்டர் ஆகணும் லகு” என்றாள் கண்களில் கனவோடு.
“அத்தையா? ஓஹ் சின்னமாவா?” என்றவன், “ஆகலாம்… அதுக்கு மன உறுதியும், விடாமுயற்சியும் வேணும். தினமும் நியூஸ் பேப்பர் படி. யூபிஎஸ்சி, சிவில் சர்வீசுக்கு மூணு ஸ்டேஜ் இருக்கு. ப்ரீலிம் எக்சாம், மெயின் எக்சாம் கடைசியா இன்டர்வியூ. டாப் மூணு ரேங்க்ல IAS, IPS, IFS வருது. இருபத்தி ஒரு வயசுல தான் எக்சாம் எடுக்க முடியும். சோ, நீ டிகிரி முடிச்சதும் எடுக்கிற மாதிரி பார்ப்போம். நீ நல்லா படிச்சா, ஐஏஎஸ் முடிச்சுடலாம். இப்பவே சைட் பை சைட் கோச்சிங் போய் படிக்க ஆரம்பி. காலேஜ் முடிச்ச கையோட சிவில் சர்வீஸ் எக்சாம் எழுதிடலாம்” என அவளின் ஆசையை அடையும் வழிகளைக் காட்டினான்.
பேசும் அவனையே கண்கொட்டாது பார்த்தவளுக்கு அவன் கூறிய ஏதாவது மண்டையில் ஏறியதா என்றால்… ஹ ஹ ஹா! மேடம் ஜில்லா கலெக்டர் ஆகிட்டு தான் மறுவேலை!
“கண்ணு…. இங்கயா இருக்க?” என்ற அழைத்த பாட்டியின் சத்தம் கேட்டு அவன் எழும் முன், “இங்கயே உக்காந்துட்டியா கண்ணு?” என்ற சத்தத்தைத் தொடர்ந்து பாட்டியும் வந்துவிட, அதன் பின் ஒவ்வொருவராய் வர, அந்த நாள் அனைவரோடும் பேச்சும் சிரிப்புமாக ராக்கெட் வேகத்தில் பயணித்தது.