Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

மூங்கில் புன்னகையே

மூங்கில் புன்னகையே..! – 1

மூங்கில் 1:

 

சத்திய மங்கலத்தில் இருந்து மைசூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்திருந்தது அந்த அடர்ந்த காடு….பசுமையையும், அமைதியையும் தன்னுள் அடக்கி,புதிதாய் வருவோரை கொஞ்சம் பயத்தில் ஆழ்த்தும் வண்ணம் ஓங்கி உயர்ந்த மரங்களையும், உள்ளே சின்ன சின்ன நீர் வீழ்ச்சிகளையும் கொண்டிருந்தது. இயற்கையின் எழில்மிகு அழகு அங்கே கொட்டிக் கிடந்தது. ரசிப்போர்க்கு எல்லாமே ரசனை தான். அதையும் தாண்டி கொஞ்சம் யோசித்தால், அந்த காட்டின் அழகு கூட ஒரு வித பயத்தை தான் ஏற்படுத்தும்.

காட்டின் நடுவில் அமைத்திருந்த அந்த அழகான நீர்வீழ்ச்சியில், தண்ணீர் பால் போல், வெண்ணிற அழகுடன் பாறையில் இருந்து தவழ்ந்து, பள்ளத்தை நோக்கி பேரிரைச்சலுடன் ஆர்பரித்துக் கொட்டிக் கொண்டிருந்தது.



Advertisement

இது எதுவுமே அங்கிருந்தவனின் கண்களுக்கும் புலப்படவில்லை. அவன் மனமும் அதை உணரவில்லை. நெறித்த புருவங்கள், அவன் யோசனையில் இருப்பதை சொல்ல, முகத்தில் இருந்த இறுக்கம், அவனின் மனதின் எண்ணங்களை பிரதிபலித்துக் கொண்டிருந்தது.

அவன் அப்படி அமர்ந்திருப்பது ஒன்றும் புதிதில்லை என்றாலும், இன்றைக்கு ஏனோ அவன் கோபத்தில் இருப்பதைப் போன்று இருந்தது.

“என்னாச்சு வெற்றி சார்..?” ஏதோ ஒரு ஆழ்ந்த யோசனையில் இருக்கிங்கன்னு தெரியுது. ஆனா, என்னன்னு தான் தெரியலை..?” என்றான் அருகில் இருந்த பிகாரி.

Advertisement

ஆம்..கதையின் நாயகன் தான் இந்த வெற்றி வேல். வனத்துறை அதிகாரியாக, அந்த காட்டிற்கே ராஜாவாக வலம் வந்து கொண்டிருந்தவனின் சமீபத்திய நாட்கள் சொல்லும் படியாக இல்லை. எதற்கெடுத்தாலும் கோபப்பட்டுக் கொண்டிருந்தான். முகத்தில் பெயருக்கு கூட சிரிப்பில்லை. இப்போது பிகாரியின் கேள்விக்கும் அதே பாவனை தான் அவன் முகத்தில்.

Advertisement

“என்ன இவரு..? நான் ஒருத்தன் பக்கத்துல இருக்கேன்றதே தெரியாத மாதிரி இருக்காரு..? ஒருவேளை காட்டுக்குள்ள இருக்குற பேய் ஏதாவது இவரை பயமுறுத்தியிருக்குமா..?” என்று பிகாரி தனக்குத் தானே பேசிக் கொண்டிருந்தான்.

வெற்றி வேல் – வனத்துறை அதிகாரியாக பதவிக்கு வந்து நான்கு ஆண்டுகள் ஆகிறது. பயம் என்பது துளியும் கிடையாது. அவன் விரும்பி வந்த வேலை. தனிமை அவனுக்கு மிகவும் பிடித்த ஒன்று. அதற்கு ஏற்றார் போல், அவனுக்குப் பிடித்த இந்த வேலையும் அமைந்து விட, ‘வேறென்ன வேணும் எனக்கு?’ என்றவன், உடனடியாக வேலையில் சேர்ந்து விட்டிருந்தான்.

வெற்றி வேலுக்கு ராணுவத்திற்கு செல்ல வேண்டும் என்பது தான் ஆசை. ஆனால் ஏனோ அவனின் தந்தைக்கு அதில் விருப்பமில்லை. வேறு வழியில்லாமல், ராணுவத்திற்கு அடுத்து அவன் நேசித்த வேலையே அவனுக்குக் கிடைத்திருந்தது.

Advertisement

மாநிறத்திற்கும் கொஞ்சம் கூடுதல் நிறத்தில் இருந்தவனின் கண்கள் மட்டும் இப்போது மிளகாய் பழச் சிவப்பில் இருந்தது.

“என்னாச்சு வெற்றி சார்..?” என்றான் பிகாரி மீண்டும்.

அவனை வெறித்துப் பார்த்தவன்,

“அவசியம் சொல்லனுமா..?” என்றான் யோசனையுடன்.

“நீங்க சொல்லலைன்னா கூட பரவாயில்லை சார். ஆனா, முகத்தை கொஞ்சமாவது நார்மலா வைங்க சார். ஏற்கனவே எனக்கு காடுன்னா பயம். இதுல நீங்களும் இப்படி அமைதியா இருந்தா இன்னும் பயம் கூடத்தான் செய்து..” என்றான் பிகாரி.

“இந்த போஸ்ட்டிங் வாங்கிட்டு வர்றதுக்கு முன்னாடி உனக்குத் தெரியாதா..? காட்டுக்குள்ள தான் இருந்தாகனும்ன்னு..” என்றான் வெற்றி. அவன் பேச்சில் தேவையில்லாத வார்த்தைகள் இல்லை. நறுக்குத் தெரித்தார் போல் வந்து விழுந்தன வார்த்தைகள்.

“தெரியும் சார்.. நல்லாத் தெரியுமே..? கழுதைக்கு வாக்கப்பட்டா கத்தித்தான் ஆகணும்ன்னு நல்லாத் தெரியுமே சார்..” என்று புலம்பினான் பிகாரி.

“சரி… நீ கிளம்பு..” என்றான் வெற்றி.

“சார், உங்களைத் தனியா விட்டுட்டு நான் எப்படி சார் போவேன்..?” என்றான் பிகாரி, வராத கண்ணீருடன்.

“உன்னால தனியா போக முடியாதுன்னு சொல்லு..” என்றவன், அமர்ந்திருந்த பாறையில் இருந்து குதித்து இறங்கினான். அதுவரை வெற்றியின் முகத்தில் இருந்த  அந்த யோசனைகளும், கோபங்களும் கொஞ்சம் மறைந்திருந்து. அவன் மறைத்தான் என்று தான் சொல்ல வேண்டும்.

அவன் அணிந்திருந்த காக்கிப் பேண்ட்டில், வாக்கி டாக்கியின் சத்தம் கேட்டுக் கொண்டேயிருந்தது. அந்த சத்தத்திற்கு அவன் பழகியிருந்தான். புதிதாய் கேட்பவர்களுக்கு தான் அந்த சத்தம் தலைவலியை வர வைக்கும்.

“ஜீப் எங்க..?” என்றான் வெற்றி.

“நாம எங்க சார் ஜீப் எடுத்துட்டு வந்தோம்..? நீங்க நடந்தே தான கூட்டிட்டு வந்திங்க..?” என்றான் பிகாரி.

தன் யோசனையில் அதை மறந்திருந்தான் வெற்றி வேல்.

“சார் எனக்கு ரெண்டு நாள் லீவ் வேணும்..” என்றான் பிகாரி, நடந்து கொண்டே.

“என்ன திடீர்ன்னு லீவ்..? அதெல்லாம் தர முடியாது..” என்றான் வெற்றிவேல்.

“சார், இருந்திருந்து இப்போதான் எனக்கு ஒரு பொண்ணு அமைஞ்சிருக்கு. பொண்ணுப் பார்க்க போகணும். இந்த வாய்ப்பை விட்டா, எங்க வீட்ல அடுத்து கல்யாணப் பேச்சையே மறந்துடுவாங்க சார்..” என்றான் பிகாரி, பாவமாய்.

“இந்த காட்டுக்குள்ள இருக்குறதுக்கு உனக்கே பயமா இருக்கு. உன்னை நம்பி ஒரு பொண்ணு வந்தா, எப்படி மேனேஜ் பண்ணுவ பிகாரி.. அதனால் கல்யாணமெல்லாம் வேண்டாம்..” என்றான் வெற்றி சிரிக்காமல்.

“வேண்டாம் சார்..! உங்க வாயால அப்படி ஒரு வார்த்தையை சொல்லாதிங்க. பலவருஷமா தேடி இப்பத்தான் ஒரு பொண்ணு கிடைச்சிருக்கு. நானெல்லாம் வாழ்றதே கல்யாணம் பண்ணத்தான்..” என்றான் பிகாரி.

“இருந்தாலும் உனக்குத்தான் எதைப் பார்த்தாலும் பயம் ஆச்சே..” என்றான் வெற்றி.

“எனக்கு பயம்ன்னு யார் சார் சொன்னது..? ஆக்சுவலி வீரப்பன் இருந்தப்பவே அவர் டீம்க்கு நான் தான் ஹெட்டா இருந்திருக்க வேண்டியது. எங்க நான் அவருக்கு போட்டியா வந்திடுவேனோன்னு கடவுள் என்னைய கொஞ்சம் லேட்டா பிறக்க வச்சுட்டார். மத்தபடி நானெல்லாம் எதுக்கும் பயப்படுறவன் கிடையாது சார்..” என்றான் பிகாரி, சிரிக்காமல்.

“வீரப்பன் உயிரோட இல்லைன்றதுக்காக அள்ளி விடுற போல. வீரப்பன் செத்துட்டாலும், அவர் கூட்டாளிங்க எல்லாம் இன்னமும் இந்த காட்டுக்குள்ள சுத்திட்டு இருக்கிறதா தான் சொல்றாங்க. நமக்கு என்ன தெரியும்..? உண்மை என்னன்னு..?” என்றான் வெற்றி.

“நான் பொண்ணு பார்க்கவே போகலை சார். எனக்கு கல்யாணமே வேண்டாம் சார். கடைசி வரைக்கும் இந்த காட்டுக்குள்ளையே இருந்து கட்டையில போய்டுறேன் சார்..” என்றான் பிகாரி பாவமாய்.

“கமான் மேன்..! ரெண்டு நாள் என்ன..? மூணு நாள் கூட லீவ் எடுத்துக்கோ. பொண்ணு பார்த்தாலும் சரி, இல்லை கல்யாணத்தை முடிச்சுட்டே வந்தாலும் சரி..” என்றான் வெற்றி.

“நிஜமாவா சார் சொல்றிங்க..?” என்றான் பிகாரி நம்பாமல்.

“அட ஆமாம் பிகாரி..” என்றான் வெற்றி.

“தேங்க்ஸ் சார்..

அவர்கள் இருவரும் பேசிக் கொண்டே டிரக்கிங் செல்லும் பாதைக்கு அருகில் வந்து விட்டிருந்தனர்.

“என்ன பேச்சு சத்தம் கேட்குற மாதிரி இருக்கு..?” என்ற யோசனையுடன் திரும்பினான் வெற்றி. சில இளைஞர்களும், இளம் பெண்களும் வந்து கொண்டிருந்தனர்.

“பிகாரி..! இவங்கல்லாம் யாரு..? இப்போ ட்ரக்கிங்க்கு அனுமதி இல்லைன்னு தெரியாதா இவங்களுக்கு..?” என்றான் வெற்றி கோபமாக.

“சார்..! எனக்கும் இதைப் பத்தி எதுவும் தெரியலை சார்..!” என்ற பிகாரி, வேகமாக முன்னே சென்று அவர்களை மறித்தான்.

“என்ன சார்..? எதுக்காக எங்களை மறிக்கிறிங்க..?” என்றனர் அதில் இருந்த சில ஆண்கள்.

“ட்ரக்கிங்க்கு இப்போதைக்கு அனுமதி இல்லை. அதுலும் குறிப்பா இந்த பாதைக்கு அனுமதி சுத்தமா கிடையாது. நீங்க வந்த வழியே திரும்பிப் போங்க..” என்றான் பிகாரி.

“யார் சார் சொன்னது..? நாங்க பெர்மிஷன் வாங்கிட்டு தான் வந்திருக்கோம்…” என்றனர்.

“என்ன வாங்கியிருந்தாலும், இதுக்குமேல உங்களை போக அனுமதிக்க முடியாது..” என்றான்.

வெற்றி அமைதியாக அவர்களை நோட்டம் விட்டுக் கொண்டிருந்தான். அனைவரின் முகத்திலும் பணத்தின் செழுமை தெரிந்தது. சிலரின் முகத்தில் மட்டுமே உண்மையான ரசனை தெரிந்தது.

“அதை சொல்ல நீங்க யாரு சார்..?” என்ற குரலில் பிகாரி நிமிர்ந்து பார்க்க, எதிரே நின்றிருந்தாள் வர்ணிகா. அவளின் திமிரான கேள்வியில் அவளை எடை போட்டான் வெற்றி.

ட்ரெக்கிங் செல்வதற்கு தோதுவாக, இலகுவான பேண்ட் சட்டை அணிந்திருந்தாள். பால் நிற வெள்ளையில் இருந்த அவளின் முகம், நடந்து வந்த களைப்பினால் கொஞ்சம் சிவந்திருந்தது. அனைத்து அம்சங்களும் பொருந்திய அப்சரஸ் என்று தான் சொல்ல வேண்டும். அவளின் உருவத்திற்கு சற்றும் பொருத்தமில்லாத திமிர் அவள் முகத்தில் நன்றாகத் தெரிந்தது.

பிகாரி அவளுக்கு பதில் சொல்ல முடியாமல் திணறிக் கொண்டு, வெற்றியை பாவமாய் பார்த்தான். அவன் பார்வை வெற்றியை நோக்கி செல்லவும், வர்ணிகா வெற்றியையும் திமிராக பார்த்து வைத்தாள்.

அவளின் பார்வையும், நோக்கத்தையும் உள்வாங்கியவன்,

“ யு ஆர் நாட் அலவ்ட் டு கோ ஓவர் திஸ். யு கேன் கோ பேக்.. திஸ் இஸ் மை ஆர்டர்..” என்றான் ஆங்கிலத்தில்.

“ஹூ ஆர் யு..?” என்றாள் வர்ணிகா கோபமாக.

“ஐ ஆம் தி ஆபீசர் பார் திஸ் பாரஸ்ட்..” என்றவன், மீண்டும் அவளை நக்கல் பார்வை பார்த்தபடி,

“ஐ ஆம் தி கிங் ஆப் திஸ் பாரஸ்ட்..” என்றான் திமிராக.

அவனின் அந்த திமிர் பேச்சில் அங்கே இருந்த மற்றவர்கள் கொஞ்சம் தயங்கினாலும், வர்ணிகா கொஞ்சம் கூட தயங்கவில்லை.

“எங்ககிட்ட பெர்மிஷன் லெட்டர் இருக்கு. உங்களை விட ஹையர் ஆபீசர்ஸ் கிட்ட இருந்து தான் நாங்க அதை வாங்கியிருக்கோம். அதனால் எங்களைத் தடுக்குற உரிமை உங்களுக்குக் கிடையாது மிஸ்டர்..” என்றாள் கோபமாய்.

“ஹேய்..!” என்றான் வெற்றி கோபமாக.

“ இந்த பூச்சாண்டி காட்டுற வேலையெல்லாம் எங்ககிட்ட வேண்டாம். இதுக்கெல்லாம் பயப்படுற ஆள் நாங்க கிடையாது..” என்றாள்.

“அது தான் பார்த்தாலே தெரியுதே..!” என்றவன்,

“இதுக்கு மேல, அதுவும் இந்த  நேரத்துல போறது சேப் கிடையாது..” என்றான் உறுதியாக.

“அதைப்பத்தி நீங்க கவலைப் பட வேண்டாம் சார்..! எங்களைப் பார்த்துக்க எங்களுக்குத் தெரியும்..” என்றாள் வெடுக்கென்று.

“ஆனா, இங்க என்ன அசம்பாவிதம் நடந்தாலும் அதுக்கு நான் தான் பதில் சொல்லியாகனும். அதனால இந்த நேரத்துல இதுக்கு மேல போக அனுமதிக்க முடியாது, யாரோட சிபாரிசுல பெர்மிஷன் வாங்கியிருந்தாலும்..” என்றான் உறுதியாக.

“ஏன் சார்..!  இதுக்கு மேல போனா, உங்க வண்டவாளம் வெளிய தெரிஞ்சுடும்ன்னு பயப்படுறிங்களா..?” என்றாள் வர்ணிகா.

“வாட் நான்சென்ஸ்..” என்றான் வெற்றி கோபமாக.

அவனின் கோபத்தைப் பார்த்து மிரண்ட மற்றவர்கள்,

“நிகா..நீ கொஞ்சம் அமைதியா இரு..” என்று அவளிடம் சொல்லிவிட்டு வெற்றியிடம் திரும்பினர்.

“சார், நாங்க நைட் டென்ட் போட்டு தங்கிட்டு, காலையில நடக்க ஆரம்பிக்கிறோம். ரொம்ப ஆசையோட வந்திருக்கோம் சார். பிளீஸ்..” என்றனர் தன்மையாய்.

கொஞ்சம் யோசனையுடன் “ஓகே..!” என்றவன்,

“ஏதாவது உதவி தேவைப்பட்டா இந்த நம்பருக்கு கூப்பிடுங்க..” என்று தன்னுடைய நம்பரையும் கொடுத்து விட்டு கிளம்பினான். அவர்கள் அந்த இடத்திலேயே டென்ட் போட ஆரம்பித்தார்கள்.

“சார் நீங்க எங்க தங்குவிங்க..?” என்று கேட்டான் ஒருவன்.

“பக்கத்துல எங்களுக்கு குவார்ட்ரஸ் இருக்கு..” என்றான். அவர்கள் இருக்குமிடத்தில் இருந்து கொஞ்சம் தள்ளி இருந்தது.

“தனியா தான் இருக்கிங்களா சார்..?” என்றாள் ஒருத்தி.

“அதையேன் நீங்க கேட்குறிங்க..?” என்றான் முறைத்தபடி.

“தெரிஞ்சுக்கலாமேன்னு..” என்றாள் இழுத்தபடி.

“தனியாதான் இருக்கேன். கூட இதோ இவன் இருக்கான்..” என்றான் பிகாரியை காட்டி.

“ஓகே சார்..! தேங்க்யு சார்..” என்று அவள் சிரிக்க, திரும்பி நடக்க ஆரம்பித்தான் வெற்றி. அவன் பின்னாடியே செல்ல முற்பட்ட பிகாரியின் கையைப் பிடித்து இழுத்தாள் ஒருத்தி.

“என்னம்மா..? நீ பேசாம கையைப் பிடிச்சு இழுக்குற..?” என்றான் பிகாரி.

“ஆள் செம்ம ஹேண்ட்சம்மா இருக்காரே..கல்யாணம் ஆகிடுச்சா..?” என்றாள்.

“அதையேன் நீ கேட்குற..?” என்றாள் வர்ணிகா.

“சும்மா தெரிஞ்சிக்கத்தான்..” என்றவள், பிகாரியிடம் திரும்பி,

“நீங்க சொல்லுங்க சார்..” என்றாள்.

“இல்லை. இன்னும் கல்யாணம் ஆகலை. அதுக்கான அறிகுறியும் தெரியற மாதிரி தெரியலை..” என்றவன்,

“பிகாரி…” என்ற வெற்றியின் அழைப்பில்,

“இதோ வந்துட்டேன் சார்..!” என்று சொன்னபடி பின்னால் சென்றான்.

“பார்த்துடி..! நீ விடுற ஜொள்ளுல இந்த காடு மூழ்கிடப் போகுது..” என்றாள் வர்ணிகா.

“நிஜமா சொல்லு… ஆள் செம்மையாதான இருக்காரு..” என்றாள் அவள். அவள் பெயர் ஜெர்சி.

“ம்ம்.. ஏதோ கொஞ்சம்..” என்றாள் வர்ணிகா போனால் போகுதென்று.

சிறிது தூரம் சென்ற வெற்றியும் திரும்பி வர்ணிகாவை பார்த்து விட்டுத் தான் சென்றான். எதற்காக பார்த்தான் என்று அவனுக்கேத் தெரியவில்லை.

அவர்கள் தங்குவதற்கான டெண்ட்டை தயார் செய்து கொண்டிருந்தனர் ஆண்கள் அனைவரும்.

ஜெர்சி வாய் ஓயாமல் வெற்றி புராணம் படித்துக் கொண்டிருக்க, மற்றவர்கள் ஒரு சிரிப்புடன் அதை பார்த்திருந்தனர். வர்ணிகா கொஞ்சம் தனியாய் சென்று அமர்ந்திருந்தாள்.

“நிகாக்கு என்ன ஆச்சு..?” என்றான் ஒருவன்.

“அவ எப்பவுமே அப்படித்தான். நல்லா பேசிட்டு இருப்பா. பார்த்தா சட்டுன்னு அமைதியாகிடுவா…” என்றாள் ஜெர்சி.

“சார், அந்த பொண்ணு உங்களுக்கு கல்யாணம் ஆகிடுச்சான்னு கேட்டுச்சு சார்..” என்றான் பிகாரி, வெற்றியிடம்.

“அதுக்கு நீ என்ன சொன்ன..?” என்றான் வெற்றி.

“எங்க சாருக்கு கல்யாணம் ஆகலை.. அதுக்கான வாய்ப்பும் இல்லைன்னு சொல்லிட்டு வந்தேன் சார்..” என்றான் பிகாரி பெருமையாக.

அவனைத் திரும்பி முறைத்தான் வெற்றி வேல்.

“என்ன சார் முறைக்கிறிங்க..?” என்றான் பிகாரி.

“நீ கல்யாணம் பண்ணுவ..நான் பண்ண மாட்டேனா..?” என்றான்.

“நீங்கதான சார் சாமியார் மாதிரி இருக்கீங்க..? அதான் அப்படி சொன்னேன்..” என்றான் பிகாரி.

வெற்றி எதுவும் பேசாமல் நடக்க,

“உங்களுக்கு கல்யாணம் எல்லாம் செட்டாகாது சார்..” என்றான்.

“எதை வச்சு அப்படி சொல்ற..?” என்றான் வெற்றி.

“உங்களுக்கு வர்ற கோபத்தை வச்சு தான் சார் சொல்றேன்.. இப்ப இருக்குற பொண்ணுங்க எல்லாம் பொசுக்குன்னா டிவேர்ஸ் கேட்க ஆரம்பிச்சுடுறாங்க சார். அதனால பொறுமையான ஆம்பிள்ளைக்கு தான் கல்யாணம் செட்டாகும்..” என்றான் சிரிக்காமல்.

“ஒன்னு பண்ணு பிகாரி..! ஒரு போஸ்டர் அடிச்சு போய் ஓட்டிட்டு வந்துடு..” என்றான் வெற்றி.

“என்னன்னு சார்..!” என்றான் புரியாமல்.

“ம்ம் மண்ணாங்கட்டின்னு..” என்றவன் அதற்கு மேல் நிற்காமல் சென்று விட்டான்.

“என்ன வெற்றி சார் இப்படி சொல்லிட்டு போறாரு..? இவரைப் புரிஞ்சுக்கவே முடியலையே..?” என்று மூளை குழம்பிப் போய் நின்றிருந்தான் பிகாரி.

கிட்டத் தட்ட ஒரு வருடத்திற்கும் மேலாக வெற்றிவேலுடன் இருக்கிறான் பிகாரி. அவனுக்கே பல சமயங்களில் வெற்றி புதிரானவன் தான்.

அவனை வரையறைக்குள்ளும், வார்த்தைகளுக்குள்ளும் அடக்குவது மிகவும் கடினம்.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!