ஆறுமுகத்தின் பேச்சில் இத்தனை நேரம் அமைதியாக அமர்ந்திருந்த பெண் சிலைக்கு உயிர் வந்தது போல “இல்லை ப்பா எனக்கு இஷ்டம் இல்லை…” என்றாள். அதே நேரம் வாசுவும் “இது சரி வாரது பாட்டி…” என்றான்.
வாசுவின் மறுப்பை நவி எதிர்ப் பார்த்ததாலோ என்னவோ அவனை நிமிர்ந்தும் பார்க்கவில்லை.
ஆனால் நவியின் மறுப்பை வாசு எதிர்பார்க்கவில்லை போல சட்டென நிமிர்ந்து பாவையைப் பார்த்தான்.
Advertisement
மங்கிய மஞ்சள் நிற வெளிச்சத்தில் அமர்ந்திருந்தவளின் வதனம் மறவோனின் கண்களை நிறைத்தது. மங்கையின் நுனி மூக்கு சிவந்து பலமாக துடித்து கொண்டிருந்தது. கீழ் இதழ்களை பற்களால் அழுத்திக் கடித்து கொண்டிருந்தாள். தொண்டைக் குழி ஏறியிறங்கி கொண்டிருக்க, அதனை ஒற்றைக் கையால் அழுத்தி பிடித்து கொண்டிருந்தாள். பொங்கி வரும் பெரும் கேவலை அடக்க முயன்று கொண்டிருக்கிறாள் என்பது தெளிவாக புரிந்தது வாசுவிற்கு.
Advertisement
பாவையின் தவிப்பையும், துடிப்பையும் கண் கொண்டு பார்க்க முடியவில்லை ஆடவனால். எங்கே அவனையும் மீறி அவளிடம் சென்று விடுவோமோ என்று பயந்தான். அந்த பயமே அவ்விடத்தில் அவனை அமர விடவில்லை. பட்டென எழுந்தவன் மற்றவர்களின் பார்வைக்கு பதில் சொல்லாமல் எழுந்து நடக்க ஆரம்பித்தான்.
Advertisement
அந்த திண்ணையைத் தாண்டி செல்லும் போது மனதில் ஏதோ ஓர் வெறுமையை உணர்ந்தான் வாசுதேவன். இதயத்தில் இனம் புரியா பெரும் வலி…
Advertisement
இதுநாள் வரையிலும் அவனது எந்தவொரு முடிவும் இந்தளவிற்கு வேதனையை கொடுத்ததில்லை… ஆனால் இன்றைய அவனது முடிவில் மனம் முழுக்க ரணமாய் வலித்தது. முதல்முறையாக கடிவாளமிட்ட குதிரையை போல் தடுமாறி நின்றான்…
‘தேவ்…நான் உனக்கு வேண்டாமா?…’ தலை சரித்து மெல்லிய புன்னகையுடன் கேட்கும் பெண்ணின் முகம் மன கண்ணில் விழுந்தன.
‘நான், உனக்கு வேண்டாம் நவினா…’ மனதில் இருப்பவளிடம் கூறியபடி நடந்தவன் விழிகளில் கண்ணீர் துளிர் விட்டது.
ஓவ்வொரு முறையும் அவள் வேண்டாமென்று முடிவெடுக்கும் நேரமெல்லாம் அவனையும் அறியாமல் கண்களில் நீர் கோர்த்து கொள்கிறது. தவிக்கிறான், தடுமாறுகிறான். அவனது காதல் மனம் கனத்து போகிறது. பேச்சு வர மறுக்கிறது. தொண்டைக் குழியில் ஏதோ சிக்கிக் கொண்டு அழுத்துகிறது. இதயத்தை யாரோ காலால் மிதிப்பது போன்ற வலியை உணர்கிறான். இதோ இப்பொழுதும் அதே உணர்வுகள் தான் அவனை மொத்தமாக தாக்கிக் கொண்டிருக்கிறது.. நெஞ்சை தடவிக் கொண்டே முன்னே நடந்து சென்றவன் காதில்
“ஆனா அவரைத் தவிர வேற யாரையும் கல்யாணம் பண்ணிக்க மாட்டேன் ப்பா…” என்ற திடமான குரல் கேட்டது.
பாவையின் பேச்சில் ஆணி அடித்தது போல் நின்று விட்டான். இத்தனை மணி நேரமிருந்த பரிதவிப்பும், துடிப்பும் மாயமாய் மறைந்தது போலொரு பிரம்மை. அவனையும் மீறி பின்னால் திரும்பி பெண்ணைப் பார்த்தான்.
தற்பொழுது அவளும், அவனைத் தான் பார்த்துக் கொண்டிருந்தாள். அவன் எழுந்து நடக்க தொடங்கியதுமே இவளது ஆழ் மனம் துடியாய் துடித்து போனது. அதில் அவளுமே எதிர்பாரத விதமாக தனது உள்ளத்தை கூறிவிட்டாள்.
நாயை விரட்டுவது போல் விரட்டி விட்டாலும் அவனிடமே செல்கிறோமே என்று எண்ணியவளுக்கு தன்னை நினைத்தே கோபமாக வந்தது. இன்றோடு அவனது அத்தியாயம் முடிந்தது என்று முற்று புள்ளி வைக்கும் நேரம் இந்த மானங்கெட்ட மனம் அவளது பேச்சையும் மீறி சொதப்பி வைக்கிறது.
மனதின் போக்கை நினைத்து அழுகை வந்தது இளையாளுக்கு . இதழ்களை அழுத்தி கடித்து கொண்டாள். கண்களில் நீர் சுழன்றது. அதனுடனே ஆடவனை பார்த்தாள். அவனது கண்களிலும் நீர் தேங்கி நின்றது. ஈரம் சுமந்திருந்த விழிகள் நான்கும் ஒன்றையொன்று தழுவிக் கொண்டன.
அவனது அணைப்பால், வார்த்தைகளால் உணரக் கூடிய ஆறுதலை வெறும் விழிகளின் தழுவலில் உணர்ந்தாள் பாவை. அப்பொழுது வரை கனத்துக் கொண்டிருந்த இதயம் லேசானது போலொரு மாயை. அதையும் மீறி அவனது வார்த்தைகளும், செயல்களும் முன்னால் வந்து நின்றன. கண்களை சூழ்ந்திருந்த விழிநீர் மங்கையின் கன்னத்தை தொட்டது.
காரிகையின் கண்ணீரைக் கண்டதும் ஓடி சென்று அதனை துடைக்க கைகள் பரபரத்தது வாசுவிற்கு. அதையும் மீறி ஏதோ ஓர் சக்தி அவனைத் தடுத்தது. ‘நீ, அவளுக்கு தகுதியானவன் இல்லையென்று கூறிக்கொண்டே இருந்தது…’ அந்த சக்தியை கெட்டியாக பிடித்துக் கொண்டவன் பாவையின் விடாத பார்வையை பொருட்படுத்தாமல் வீட்டினுள் நுழைந்து கொண்டான்.
“நேரங்கெட்ட நேரத்துல நல்ல விஷயத்தை பேசனுமா? கொஞ்ச நாள் போகட்டும். அப்பறம் இதை பத்தி பேசுவோம்…” என்ற மணியனின் பேச்சிற்கு கட்டுப்பட்டு மற்றவர்கள் அங்கிருந்து நகர்ந்தனர்.
இத்தனை நிமிடங்கள் வெறும் பார்வையாளர்களாக மட்டுமே நின்றிருந்தனர் சுதனும், இதயாவும்… அவர்கள் மட்டுமல்ல ஜானகியும் வெறும் பார்வையாளராக மட்டுமே அமர்ந்திருந்தார். ஆனால் அனைத்தும் கவனித்து கொண்டு தான் இருந்தார். மகனின் காதலும் புரிந்தது.அவன் மறுப்பிற்கான காரணமும் புரிந்தது. எத்தனை முயன்றும் கண்கள் கலங்குவதை தடுக்க முடியவில்லை அவரால்.
நீர் கோர்த்த விழிகளை உருட்டி விழித்தவரின் பார்வை வட்டத்தில் விழுந்தது மாடியில் நின்றிருந்த வாசுவின் நிழல். அந்த நிழலை விழிகள் அகலாமல் பார்த்தவரின் உள்ளமோ ‘ நீ ஏன் என்கிட்ட சொல்லல தம்பி…’ என்ற கேள்வியை எழுப்பியது.
அக்கணம் ‘எனக்கு அப்யூஸ் நடந்ததுமே நான் வெளியில சொல்லி இருக்கணும். அப்படி சொல்லாம விட்டு தான் என் தப்பு தான்…’ அன்றைய கொடூர நாளின் இரவில் வாசு பேசிய அனைத்தையும் நினைவுகளாக நினைவுக் கூர்ந்தது அவரது மூளை..
ஈர விழிகள் தன்னிட்சையாக விரிந்தது. உண்மையாகவே அன்று வாசு பேசிய அனைத்தும் கருத்தில் பதிந்தாலும் கவனத்தில் பதியவில்லை. மனம் முழுக்க இதயா நல்லபடியாக வீடு திரும்பி விட வேண்டுமமென்ற வேண்டுதல் மட்டுமே இருந்தது.
அதற்கு பிறகும் கூட வாசுவின் வார்த்தைகள் நினைவிற்கு வரவில்லை. நினைவிற்கு வரவில்லை என்பதை விட அதனைப் பற்றி யோசிக்க நேரமில்லை என்பது தான் உண்மை.
ஆம் வாசுவின் விபத்து, இதயாவின் அறுவை சிகிச்சை, வாசுவும் ஜானகியும் சேலத்திலிருந்து பெங்களூருக்கு குடிப் பெயர்ந்தது. என்று அவரது நாட்கள் நில்லாமல் ஓடியது. அந்த ஓட்டத்தில் இளையவன் பேசிய பேச்சுகளை மறந்திருந்தார். இதோ இன்று அழையா விருந்தாளியாக வாசு பேசிய அனைத்தும் நினைவு வந்தது ஜானகிக்கு…
அதனுடனே இதயா பெங்களூரு வந்தது. கோமாவிலிருந்த வாசுவிடம் பேசியதென்று அனைத்தும் மனக் கண்ணில் மின்னி மறைந்தன ‘வாசு நம்ம எத்தனை நாள் அம்மா பாசத்துக்காக ஏங்கி இருப்போம். இப்ப அது நமக்கே நமக்குன்னு கிடைக்கும் போது நீ இப்படி இருந்தா எப்படி டா? கண்ணை முழிச்சு பாரு வாசு…’அழுது கொண்டே பேசிய இதயாவின் முகம் கண்களுக்குள் விழுந்தது. கண்களை இறுக மூடி கொண்டார்.
உண்மையை சொல்லப்போனால் அன்று இதயா பேசிய பிறகே தனது மகன் தாயின் பாசத்திற்கும், அருகாமையிற்கும் ஏங்கி கொண்டிருந்தது புரிந்தது ஜானகிக்கு.
அன்றிலிருந்து இன்றுவரை மகனுடன் மட்டுமே அவரது நேரம் செல்கிறது. இருபத்தி ஐந்து வருடங்களாக அவன் எதிர்பார்த்த அன்பையும், அரவணைப்பையும் கடந்த மூன்று வருடங்களாக அவனுக்கு கொடுத்து கொண்டிருக்கிறார்.
பாவம் அவருக்கு தெரியவில்லை இப்போது அவனுக்கு கிடைக்கும் இந்த அன்பும், அரவணைப்பும் விழலுக்கு இறைத்த நீர் போன்றதென்று.
“அத்தை…” இதயாவின் அழைப்பில் தன்னிலைக்கு வந்தவர் திரும்பி அவளைப் பார்த்தார்.
பெரியவளின் கண்ணீரை கண்டதும் அவசரமாக அவரை நெருங்கியவள் ஜானகியின் கண்களை துடைத்துக் கொண்டே “அத்தை, என்னாச்சு?…” எனக் கேட்டாள்.
அதற்கு பதில் சொல்லாமல் இதயாவை இமைக்காது பார்த்தார் ஜானகி… அவளது முகத்தில் சொல்ல முடியாத வேதனை தாண்டவமாடியது. அது வாசுவை நினைத்து தான் என்பது புரியாமல் இல்லை அவருக்கு. அதே நேரம் மகனின் கடந்த காலத்தை பற்றி இவளுக்கு தெரியுமா? என்ற கேள்வி எழுந்தது. மனதில் தோன்றிய கேள்வியை இதயாவிடம் கேட்டு விட்டார்.
“உனக்கு முன்னாடியே தெரியுமா இதயா?…” எனக் கேட்டார்.
நவியின் காதலை பற்றி கேட்கிறார் போல என நினைத்தவள் “இல்லை அத்தை எனக்குமே தெரியாது.இப்ப தான் சுதன் சொன்னாரு, ரொம்ப நாளா நவி…” அடுத்து அவள் பேசும் முன்பே மறுப்பாய் தலையசைத்து
“நான் என்ன கேட்கிறேன்னு உனக்கு புரியலையா இதயா?…” அழுத்தமாக வெளிவந்தது அவரது வார்த்தைகள்.
அவரது அழுத்தமான குரலில் இமைகள் இரண்டும் விரிய, ஜானகியை அதிர்ச்சி மாறாமல் பார்த்தாள் பெண். பெரியவள் எதை கேட்கிறார் என்பது தெளிவாக புரிந்தது இதயாவிற்கு.
திருமணத்திற்கு வாசு மறுக்கும் வரையிலும் அவளுக்கும், அவனது கடந்த கால நிகழ்வுகள் நினைவில் இல்லை. தற்பொழுது வாசு திருமணத்திற்கு மறுக்கவும் தான் பழைய நினைவுகள் நினைவிற்கு வந்தது.
அந்த நினைவுகள் அவளை நீர் சுழல் போல் உள்ளிழுக்க, அதிலிருந்து மீண்டு வரவே ஜானகியிடம் வந்தாள்.
இங்கு அவரோ, அவளே எதிர்பாராத விதமாக கேள்வியை தொடுக்க தடுமாறி விட்டாள் பேதை. இதுவே சாதாரண நாட்களாக இருந்திருந்தால் பெரியவளின் கேள்வியை சுதாரித்து பதில் கூறியிருப்பாளோ என்னவோ ஆனால் இன்று அத்தனை தடுமாறினாள்.
இதயாவின் தடுமாற்றத்தை பார்த்தவருக்கு புரிந்து போனது அவளுக்கும் வாசுவைப் பற்றி தெரிந்து இருக்கிறதென்று. கண்களை இறுக மூடி திறந்தவர் இதயாவின் பதிலை கூட கேட்காமல் அங்கிருந்து நகர்ந்தார்.
*******
அதே நேரம் இங்கு மாடியில், நின்றிருந்தான் வாசுதேவன்…
சிலுசிலுவென வீசிக் கொண்டிருந்த குளிர்காற்று ஆடவனின் கேசத்தை கலைத்து விளையாடியது. அதனை துளியும் பொருட்படுத்தாமல்
வானில் தனித்து சுற்றி திரிந்த நிலவினை பார்த்துக் கொண்டிருந்தான்.
அந்த கடுமையான இருட்டில்,
நிலவொளியின் வெளிச்சத்தில் அவனது உருவமும் சரி, அவனது நிழலும் சரி அடர்ந்த கருமை நிறத்தை பூசிக் கொண்டிருந்தது…
உடலை ஊடுருவி செல்லும் கடும் குளிரைப் போல் ஆடவனது உள்ளத்தை ஊடுருவி கொண்டிருந்தாள் அவனது ராட்சசி. இதயத்தை வருடிக் கொண்டே “என்னை அந்தளவுக்கு பிடிக்குமா நவினா…” எனக் கேட்டான். அதற்கு லப் டப் என்ற ஒலியை மட்டுமே பதிலாக கொடுத்தது அவனது இதயம்.
“எனக்கும்,உன்னை பைத்தியம் பிடிக்கிறளவுக்கு பிடிக்கும் டி. ஆனால் அதை உன்கிட்ட சொல்லவும் முடியல, உன்னை யாருக்கும் விட்டு தரவும் முடியல…” என்றவனுக்கு துக்கம் சுழல் காற்றைப் போல் மேலெழும்பியது. அழுகை அவனை வலைப் போல் பின்னிக் கொண்டது. இனி அதனை கட்டுப்படுத்த முடியாது என்ற நிலையில் நின்றான்.
அக்கணம் “வாசு…” என்று அவனது தோள் தொட்டான் சுதன்.
முகத்தை அழுத்தி துடைத்து கொண்டவன் திரும்பி சுதனை பார்த்தான். “சொல்லுங்க அண்ணா…” வரவழைக்கப்பட்ட சாதாரண குரலில் கேட்டான்.
இங்கு, சுதனின் பார்வை முழுக்க வாசுவின் மீது தான் நிலைத்திருந்தது. அவனது முகம் எவ்வித உணர்வுகளையும் வெளிகாட்டாவில்லை என்றாலும் அவனது கண்கள் மொத்த வேதனையும் வெளிக்காட்டிக் கொண்டிருந்தது…
அடிவயிற்றிலிருந்து கிளம்பிய பெருமூச்சுடன் “எப்பிருந்து நவியை லவ் பண்ணிட்டு இருக்க வாசு?…” எனக் கேட்டான். சுதனின் கேள்வியில் ஒரு நொடி அதிர்ச்சியை தாங்கி நின்றது வாசுவின் கண்கள். அதை மறைக்கும் பொருட்டு சட்டென திரும்பி நின்று கொண்டான்.
நொடியே என்றாலும் வாசுவின் கண்களில் மின்னி மறைந்த அதிர்ச்சியை கவனித்து விட்டான் சுதன். தன் சந்தேகம் உறுதியானதில் மெல்லிய புன்னகை கூட வந்தது ஆடவனுக்கு…
என்ன சந்தேகமா? ஆம், சந்தேகம் தான்.
ஆதி அந்தமும் மறந்து
உன் அருகில் கரைந்து நான் போனேன்
ஆண்கள் வெட்கப்படும் தருணம்
உனை பார்த்த பின்பு நான் கண்டு கொண்டேன்…
என்ற பாடல் எப்பொழுது வாசுவின் ஃபோனில் ரிங்க் டோனாக மாறியதோ அப்பொழுது ஆரம்பித்த சந்தேகம் இது.
வேறு பாடலாக இருந்திருந்தால் அதனை பெரியதாக எடுத்திருக்க மாட்டானோ என்னவோ. ஆனால் இந்த பாடல் அவனது வாழ்க்கையில் மட்டுமல்ல நவி, வாசுவின் வாழ்க்கையிலும் மறக்க முடியாத ஒன்று…
ஆம், அன்று ஐஸ்கிரீம் பார்லரில் சுதன், இதயாவிடம், நவி, வாசுவிடமும் காதலைக் கூறும் போது தொலைகாட்சியில் இந்த பாடல் தான் ஒலித்து கொண்டிருந்தது. அந்த நாளின் நினைவாக இதயாவிற்கு மட்டுமே இந்த பாடலை ரிங்க் டோனாக வைத்திருந்தான் சுதன்…
அதே போல வாசுவும் இந்த பாடலை வைத்திருக்க மெல்லிய சந்தேகம் எழுந்தது. ஆனால் அது எழுந்த வேகத்தில் அமிழ்ந்தும் போனது.
ஆம் அதற்கு பிறகு வாசுவின் கவனம் முழுவதும் படிப்பிலும், இதர பயிற்சிகளிலும் மட்டுமே இருந்தது. தான் தான் அவனை தவறாக எண்ணி விட்டோமோ என்று நினைத்தவன் அன்றிலிருந்து இதனைப் பற்றி யோசிக்கவில்லை.
ஆனால் இன்று, நவி திருமணத்திற்கு மறுத்ததும் வாசுவின் முகத்தில் மின்னி மறைந்த அதிர்ச்சியை பார்த்தவனுக்கு அன்றைய சந்தேகம் துளிர் விட்டது. இதோ தற்பொழுது அது உறுதியுமாகி விட்டது.
கைப்பிடி சுவற்றின் மீது சாய்ந்து நின்றவன், நிதானமாக வாசுவின் பக்கம் திரும்பி “இன்னும் எத்தனை நாளைக்கு மறைக்க போற வாசு…” எனக் கேட்டான். அதற்குப் பதில் பேசாமல் கண்களை இறுக மூடிக் கொண்டான். அவனுள் அடங்கி போயிருந்த அழுகை சுழல் கற்றை போல் மெல்ல மேலேறியது.
ஆடவனின் இறுகிய முகத்தை பார்த்துக் கொண்டே
“அவளையும் வருத்திட்டு, உன்னையும் வருத்திட்டு எதுக்கு இந்த கண்ணாமூச்சி ஆட்டம். உன்னை பத்தி அவகிட்ட சொல்லிடு சொல்லு…” என்று சொன்னதும் மறுப்பாய் தலையாட்டினான்.
“ஏன் டா…” எனக் கேட்டவன் குரலில் அவனையும் மீறி மெல்லிய எரிச்சல் வெளிவந்தது. அவனது கேள்விக்கு பதில் சொல்லாமல் மெளனமாக நின்றான்…
“நான் ஏன்னு கேட்டேன்…பதில் சொல்லு வாசு…” என்று அவனை வேகமாக தன் பக்கம் திருப்பினான்.
“ஏன்னா அவ மேல நான் உசுரயே வைச்சு இருக்கேன் ண்ணா…” என்று கத்தியே விட்டான்.
பின் கலங்கிய குரலில் “அவளை என்னால கஷ்டப்படுத்த முடியாதுண்ணா. என்ன மாதிரி ஒருத்தன் அவளுக்கு வேண்டாம். என்னால பிஸிகள் லைஃப்க்குள்ள போக முடியும்னு துளியும்
நம்பிக்கை இல்லை… அவளுக்கு நான் வேண்டாம்….” என்றவன் கண்களில் இதுவரை அடக்கி வைத்திருந்த கண்ணீர் துளிகள் பட்டென வெளிவந்தது.