Skip to content
Post Views: 1,500
சத்யாவிற்கு ஒன்று தெளிவாகப் புரிந்தது. காமாட்சியின் எதிர்பார்ப்பு தன் சொல்லுக்குக் கட்டுப்படும் தன்னுடைய குடும்பம் போன்று சத்யாவும் இருக்க வேண்டும் என்பது தான் அவரின் பிரதான எண்ணம். ஆனால் சத்யாவின் குணாதிசயம் அப்படிப்பட்டது கிடையாது. தன் செயல்கள் மீது தவறு இல்லாத பட்சத்தில் தன் எண்ணத்தில் நிலையாய் நிற்பாள்.
அதே சமயம் சத்யாவைப் பற்றி அந்த வீட்டினரின் மற்ற உறுப்பினர்களை விட காமாட்சியும் நன்றாகவேத் தெரிந்து வைத்திருந்தார். அதனால் தான் மற்றவர்கள் முன்னால் அவளைக் கட்டுப்படுத்தி வைத்தால் மட்டுமே பிற்காலத்தில் சத்யாவால் தன்னை மீறி ஒன்றும் செய்ய முடியாது என்று நினைத்தார்.
காமாட்சி போன்றவர்களுக்கு ஒரு அபிப்ராயம் ஒருவர் மீது தோன்றினால் அதை மாற்றிக் கொள்வது என்பது எல்லாம் காலத்திற்கும் நடவாத காரியம். காமாட்சியின் இந்த குணத்தை இதுவரை புரிந்துக் கொண்டது இரண்டே பேர் தான். ஒன்று சந்திரனின் தந்தை. மற்றொன்று சத்யா.
ஒருவேளை சந்திரனின் இருப்பிடம் இங்கேயே இருந்திருந்தால் அவனால் கண்டுகொண்டிருக்க முடியும். ஆனால் மனிதர்களைப் புரிந்து கொள்ளும் வயது வரும்போது இராணுவத்தில் சேர்ந்திருக்க, அத்தனை தூரம் அம்மாவைப் பற்றி அறியவில்லை.
Advertisement
மற்ற பிள்ளைகளுக்கு பெரிதாக எதிர்பார்ப்புகள் இல்லாத காரணத்தால் தங்கள் அன்னையின் குணம் பற்றிப் பெரிதாகக் கண்டு கொள்ளவில்லை.
எல்லோரும் என்ன சொல்வது என்று யோசிக்க சத்யா நேரடியாக பெரியப்பாவிடம் “மாமா, நான் அப்பா வீட்டுக்குக் கிளம்பறேன். சந்துரு வரும்போது நேரில் பேசிக்கலாம். அவர் கிட்டே இப்போ யாரும் எதுவும் பேச வேண்டாம்.” என்றாள்.
எல்லோரும் “அவசரப்படாதீங்க. அவங்க சொல்றதை பெரிசா எடுக்க வேண்டாம். சந்திரன் இருந்தாலும் அதைத்தான் சொல்லியிருப்பார்.” என்று சத்யாவைச் சமாதானப் படுத்த முயற்சித்தனர்.
Advertisement
சத்யா பதிலுக்கு “இல்லை வேண்டாம். இவங்க சொல்றதுக்கு எல்லாம் தலையாட்டற அளவு எனக்கு பொறுமை கிடையாது. நான் பதில் பேசிட்டு தான் இருப்பேன். ஆனா உங்க அம்மாக்கு எதைச் சொன்னாலும் தப்பா தான் தோணும். இந்த நிலைமையில் நான் இங்கேயிருந்தா பாதிக்கப்படப்போறது என்னோட சேர்த்து என் வயித்தில் வளரும் குழந்தையும் தான். குழந்தைப் பிறக்கிற சமயம், அவருக்கும் லீவு கிடைச்சு வர வாய்ப்பு இருக்கு. அப்போ பேசிக்கலாம். அதுவரை நான் அம்மா வீட்டில் இருக்கேன். ” என்றாள்.
Advertisement
இப்போதும் காமாட்சி “நான் நினைச்சேன். இதுதான் நடக்கும்னு. இப்போ இவ இங்கேருந்து கிளம்புவா. பின்னாடி என் மவன அங்கே கூட்டிக்குவா. என் கண்ணு மறைவாப் போனதும், அவ இஷ்டத்துக்கு நாடகத்திலே நடிக்கறேன். டிவிலே பாடறேன்னு போவா. அந்த வம்சமே அப்படித்தான் போலிருக்கு. பெரியவங்க நீங்களே என்னனு பேசுங்க” என்றார்.
இதுவரை கூட திருப்பி நடிக்கும் எண்ணம் இல்லாத சத்யாவிற்கு தற்போது செய்தால் என்ன என்ற எண்ணம் தலை தூக்க ஆரம்பித்து இருந்தது. அப்போதும் அந்த எண்ணத்தைத் தொடர விடாமல், காமாட்சியைத் தவிர்த்து மற்றவர்களிடம் பேச ஆரம்பித்தாள்.
“நான் என்ன பண்ணப் போறேன்னு இதுவரை எதுவும் முடிவு செய்யலை. இப்போதைக்குக் குழந்தை பிறந்து, ஸ்கூல் போகும் அளவு வளர்ந்த பின்னாடிதான் எதுவும் முடிவு செய்வேன். அப்போதும் சந்துருகிட்டே கேட்டுத் தான் செய்வேன். ஆனால் இங்கேயிருந்தா இவங்க பேசற பேச்சுக்கு, நான் நாளைக்கேக் கூட நடிக்கப் போவேன்.” என்றாள்.
Advertisement
பெரியவர் “நீ சொல்றதும் சரிதான் மருமகளே. இனிமேல் உன் மாமியார் கிட்டே சந்திரன் பேசிக்கட்டும். நீ நல்லபடியா பிள்ளைப் பெத்து வா.” என்றார்.
காமாட்சி “அதெப்படி நீங்க அவ பக்கம் பேசலாம். நம்ம வீட்டுப் பக்கம் பேசத் தானே உங்களைக் வரச் சொல்லியிருக்கு” எனக் கேட்டார்.
“இங்கே பாரு காமாட்சி, நான் வந்தது மருமகப் பொண்ணு பக்கம் பேசத்தான். கல்யாணத்துக்கு மொத நாளு எல்லோரும் பேசினப்போவே இப்படி ஒரு நாள் நீ வந்து நிப்பன்னு தோனிச்சு. அப்போலர்ந்து சத்யாப் பொண்ணையும் கவனிச்சிட்டு தான் இருக்கேன். சத்யா சாதரணாமா தான் இருக்கு. உனக்குத் தான் பிடிவாதம். வாதத்துக்கு மருந்து கொடுக்கலாம். பிடிவாதத்துக்கு மருந்து இல்லை. உனக்கு மருந்து உன் பையன் வந்து கொடுக்கட்டும். இப்போ சத்யா அவ பெத்தவங்களோட் கிளம்பட்டும்” என்று முடித்தார்.
அதற்கு பதிலாக காமாட்சி “அப்படி எல்லாம் விட முடியாது. நாளைக்கு என் புள்ள வந்து கேட்டா நான் என்ன பதில் சொல்றது?” என்றார்.
“அப்போ இந்த பஞ்சாயத்தை இப்போ வச்சிருக்கக் கூடாது. உன் புள்ள வந்ததும் பேசியிருக்க வேண்டியது தானே?” என்றார் பெரியவர்.
இத்தனை நேரம் எதுவுமே பேசாமல், தலையிடாமல் இருந்த லோகநாதன் இப்போது “சம்பந்தி, உங்க பொண்ணை அழைச்சிக்கிட்டு நீங்க கிளம்புங்க. மாமியார், மருமக பிரச்சினைக்குள்ளே எந்நாளும் யாரும் பஞ்சயாத்து பண்ணிக்கிட்டு இருக்க முடியாது. ஒருவேளை ஏதோ ஒரு பக்கம் தாங்க முடியாமப்போய் தப்பான முடிவ எடுத்துட்டா, எதுவும் செய்ய முடியாம போயிடும். என் மகன் வந்தபிறகு தனிக்குடித்தனமோ, இல்லை அவன் கூட கூட்டிட்டுப் போறானோ அதை அவன் முடிவு செய்துக்கட்டும். சந்தோஷமா புள்ளையச் சுமக்க வேண்டிய இந்த நேரத்தில், வேதனையச் சுமக்கக் கூடாது. அது ரெண்டு பேருக்கும் நல்லது கிடையாது. அதனால் நான் சொல்றபடி கிளம்புங்க.” என்றார்.
இத்தனை நாள் எதற்குமே காமாட்சியை மீறிப் பேசியிராத தங்கள் தந்தையை அதிசயமாகப் பார்த்தனர் அமுதாவும், அகிலாவும்.
சத்யா ஆச்சரியமாகப் பார்த்தாலும், மாமனார் பிரச்சினைகளைத் தவிர்க்க விரும்புகிறார் எனப் புரிந்துக் கொண்டாள்.
“சரி மாமா, ஆனால் உங்க பையன் கிட்டே சொல்லிட்டுக் கிளம்பறேன். அதுக்கு ஏதாவது வழி இருக்கா?” என்று கேட்க, காமாட்சி முகம் பிரகாசமானது.
“அது என்னால் மட்டும் தான் முடியும். வீட்டில் இருந்து அவசரமா எதுவும் சொல்லணும்னா, என் பேரைத் தான் கொடுத்து வச்சிருக்கான் என் மகன். அப்படி அவன் கிட்டே பேசணும்னா நான் மனசு வச்சா தான் நடக்கும்.” என்று கொக்கரித்தார் காமாட்சி.
அப்போது வீட்டில் டெலிஃபோன் மணி அடித்தது. வெளியூர் கால் என்பது. எல்லோரிடமும் ஒரு பரபரப்பு தொற்றிக்கொள்ள, சட்டென்று காமாட்சி சென்று ஃபோன் எடுத்தார்.
“ஹலோ யாரு?” எனக் கேட்க, “நான் சந்திரன் பேசறேன்” என்றான்.
“இந்நேரத்துக்கு பேசற. வேலையெல்லாம் முடிஞ்சுதா?” என்றார்.
“இல்லை. வேலைக்கு நடுவில் தான் பேசறேன். அங்கே சத்யா வந்தாச்சா?” எனக் கேட்டான்.
முகத்தைச் சிணுக்கியபடி “ஆ ஆ. “ என்றார் காமாட்சி.
“அவக் கிட்டே ஃபோனைக் கொடுங்க” என்றான்.
காமாட்சி லேசில் தருவதாக இல்லை. இன்றைக்கு சத்யா இங்கே வரும்போது பெரியவரைக் கூப்பிட்டதுக் கூட கொஞ்சம் பயம் ஏற்படுத்த மட்டும்தான். அதற்காக அவளைப் பெத்தவங்க வீட்டிற்கு அனுப்புகிற எண்ணம் எல்லாம் இல்லை. ஆனால் பெரியவர் சத்யாவிற்கு ஏதுவாகப் பேசவும், காமாட்சியின் பிடிவாதம் அதிகமாகியது.
இப்போது தன் கணவர் வேறு மருமகளுக்கு ஆதரவாகப் பேசவும், இந்தக் குடும்பத்தைப் பொறுத்தவரை தன் பேச்சு தான் எடுபட வேண்டும் என்ற எண்ணம் வலுவாகியது. அதைத் தன் மகன் மூலம் தான் சாதிக்க வேண்டும் என்பதால் சந்திரனிடம் பேச்சை வளர்த்தார்.
“கொடுக்கறேன். நீ அவ கிட்டே நான் சொல்றபடி நடந்துக்கணும்னு கண்டிஷனா சொல்லு”
“ஏன்? என்ன விஷயம்?”
“அதான் அன்னைக்கேப் பேசினேனே. அவ நடவடிக்கை எதுவும் சரியா இல்லை. பழையப் பழக்கத்தை எல்லாம் இன்னமும் தொடர்ந்துட்டு இருக்கா. அது நம்ம குடும்பத்துக்குச் சரிப்படாது. அதனால் நான் என்ன சொல்றேனோ அதைக் கேட்டுக்கச் சொல்லு. ” என்று காமாட்சி கூறவும், அத்தனை பேரும் அதிர்ந்து பார்த்தனர்.
இதற்கு முன் நடந்த விவாதங்களைக் நேரில் கேட்டிருந்தால் கூட, காமாட்சியின் இந்த வார்த்தைகள் கேட்பவர்களை சத்யா மீது தவறு இருக்குமோ என யோசிக்க வைக்கும். எங்கேயோ முகம் பார்த்துக் கூட உணர்வுகளை அறிய முடியாத நிலையில் இருக்கும் சந்திரனுக்கு எப்படி இருக்கும்? முதலில் தன் மனைவியைப் பற்றியப் பேச்சு என்ற வருத்தம். அடுத்து தான் இல்லாத நேரத்தில் என்ன நடக்கிறதோ என்ற பதட்டம் என எத்தனை உணர்வுகளைக் கையாள வேண்டியிருக்கும். இதைப் பற்றிய எந்தச் சிந்தனையும் இல்லாமல் காமாட்சிப் பேசவும், மற்றவர்கள் உண்மையில் பயந்துதான் போயினர்.
அந்த நிமிடம் நிலைமையைக் கையில் எடுத்த சத்யா சட்டென்று போனைப் பிடுங்கி “சந்துரு, நீங்க எதுவும் வொர்ரி பண்ணாதீங்க. அத்தைக்கும், எனக்கும் எப்போதும் நடக்கும் பிரச்சினை தான். நான் பார்த்துக்கறேன். நீங்க கவலைப்படாதீங்க. ” என்றாள்.
சத்யாவின் குரல் கேட்டதும், “சத்யா, எப்படி இருக்க? சாரிமா, இங்கே ஃபோன் பேசக்கூடிய சூழ்நிலை இல்லை. கிடைச்ச சந்தர்ப்பத்தில் எப்போதும் போல் நம்ம வீட்டிற்குப் பேசினேன். அப்போதான் விஷயம் சொன்னாங்க. டாக்டர் கிட்டேப் போனியா? குழந்தை வளர்ச்சி, உன்னோட உடம்பு எல்லாம் எப்படி இருக்குன்னு சொன்னாங்களா?” எனப் படபடத்தான்.
சந்திரனின் குரலில் தெரிந்த ஏக்கமும், ஆர்வமும், சத்யாவை வருத்தப்படுத்த, அவனின் கேள்விகளுக்குப் பதில் சொன்னாள். மேலும் சிறிது நேரம் இவர்கள் பேசிக் கொண்டிருக்க, இப்போது காமாட்சி சட்டென்று ஃபோனைப் பிடுங்கினார்.
“தம்பி, நான் சொன்னதை அவகிடடேப் பேசுன்னா, வேறே பேசிட்டு இருக்க. வர வர ரொம்பத்தான் திமிராப் போகுது உன் பொண்டாட்டிக்கு. ” என்றார்.
சந்திரன் இப்போது அமைதியாக அன்னைப் பேசியதை உள்வாங்கியவன் சத்யாவிடம் போனைக் கொடுக்கச் சொன்னான். காமாட்சி முகத்தை வெட்டியபடி அவளிடம் கொடுக்க, சத்யா “சொல்லுங்க சந்துரு” என்றாள்.
“என்ன பிரச்சினைன்னு கேட்டு ரெண்டு பக்கமும் பேசக்கூடிய நிலையில் நான் இல்லை சத்யா. அம்மா கிட்டே உன்னால் இருக்க முடியாதுன்னு தோணினா, குழந்தைப் பிறக்கிற வரைக்கும் உன் அம்மா வீட்டில் இரு. நான் லீவு கிடைச்சு வரும்போது என்ன பண்ணறதுன்னு யோசிக்கலாம்.” என்றான் சந்திரன்.
சத்யாவிற்கு வருத்தமாக இருந்தது. பெற்றோர் வீட்டைத் தன் வீடு என்று திருமணத்திற்குப் பிறகு உரிமை கொண்டாட முடியவில்லை. கணவன் அருகில் இல்லாதபோது அந்த வீட்டிலும் உரிமையாக இருக்க முடியவில்லை.
காமாட்சியை எளிதாக எடைப் போட்டுவிட்டோமோ என்று நினைத்தாள். சந்திரனிடம் பேசி, தான் இங்கேயே இருந்தாலும், காமாட்சியின் எண்ணம் எல்லாம் தன் கை ஓங்கி விட்டது என்பதாகத் தான் இருக்கும். அதைக் கொண்டு சத்யாவிடம் மேலும் வம்பு வளர்க்கவேச் செய்வார்.
இத்தனைப் பிரச்சினைகள் நடுவில், தன் குழந்தைப் பிறப்பை மகிழ்ச்சியாகக் கையாள முடியாது. அதைச் சந்திரனும் புரிந்துதான் சத்யாவைப் பிறந்த வீட்டில் இருக்கச் சொல்லும் அவனின் முடிவு உணர்த்தியது.
சத்யாவும் “சரி சந்துரு. எனக்கும் அதுதான் தோணியது. ஆனால் உங்கக் கிட்டே கலந்துக்காம முடிவு செய்யத் தான் யோசித்தேன்” என்றாள்.
“சரிம்மா, இனி என்னால் எப்போப் பேச முடியும்னு தெரியலை. நான் இப்போ ஃபுல்லா மூவிங் ட்ரூப்லே இருக்கேன். எல்லார் கிட்டேயும் அந்த விவரங்கள் கொடுக்க முடியாது. என்னால் முடியறப்போ லெட்டர் போடறேன். இப்போ இதுக்கு மேலே பேச இங்கே பர்மிஷன் கிடையாது. உடம்பப் பார்த்துக்கோ. குழந்தை நல்லபடியா பிறக்க என்னவோ அதைச் சரியாச் செய். பைமா“ என்று விட்டு போனை வைத்தான் சந்திரன்.
சத்யா எல்லோரையும் பார்த்து விட்டு “அவர் என்னை அப்பா வீட்டில் இருக்கச் சொல்லிட்டார்” எனவும், காமாட்சியின் முகம் சுருங்கிப் போனது. மற்றவர்களுக்கு சிறு வருத்தம் என்றாலும், ஒருவிதத்தில் நல்லது தான் என்றே எண்ணினார்கள்.
-தொடரும் –
error: Content is protected !!