பூவிடைப் பனித்துளிகள் 1 By அருணா கதிர்
பூவிடைப் பனித்துளிகள் – 1
2019 – மே மாதம் – பெங்களூர்
“Like a flower bending in the breeze
Advertisement
Bend with me, sway with ease”
என்று மைக்கில் பாபிலினின், ‘ஸ்வே’ பாடல் வரிகள் குளிரூட்டப்பட்டிருந்த அந்த உணவகத்தை தன் இசையால் நிறைத்திருந்தது. வெளியே அடர்ந்திருந்த இருளுக்குத் தோதாக, “தி பக்கெட் லிஸ்ட்” உணவகத்தில் கம்மிய ஒளியில் விளக்குகள் எரிந்து கொண்டிருந்தன.
சற்றே பரவலாக அமைக்கப்பட்டிருந்த மேஜையில் குழுமியிருந்த காதல் பறவைகள் சில கைகளை உரசிக் கொண்டும், கால்களால் மற்றவர் கால்களில் கோலமிட்டுக் கொண்டும், பொய் பூச்சு வெட்கத்தில் நாணிச் சிரித்த வண்ணம் இருக்க, தன் சுற்றுச் சூழலை உள்வாங்கிக் கொண்டு அமர்ந்திருந்தாள் திவ்யபாரதி.
Advertisement
அந்த நவீன காபி ஷாப்பில் தனியாக அமர்ந்திருந்த ஒருத்தி அவள் மட்டுமே. நொடிக்கொரு முறை மேஜை மேல் வைத்திருந்த கைப்பேசியைப் பார்த்தபடிக்கே அமர்ந்திருந்தாள். நீண்ட நேரம் காத்திப்பினால் உண்டான இயல்பான எரிச்சல், அவள் வலது கால் வழியாக வெளியேறி, தரையில் தாளம் தட்டத் துவங்கியது.
Advertisement
இறுக்க மூடியிருந்த விரல்களைப் பிரிப்பதும் கோர்ப்பதுமாக அமர்ந்திருந்தவளின் அருகே கடையின் சிப்பந்தி வந்து பவ்யமாக நின்றான். “கேன் ஐ கெட் யூ சம்திங் டு டிரிங் மேடம்?” என்று கேட்டவனிடம் அசட்டுச் சிரிப்பு சிரித்து வைத்தவள்,
“ஐம் வெயிட்டிங் ஃபார் சம்வென்” என்று அமர்த்தலாகக் கூறி அனுப்பி வைத்தாள். சிப்பந்தி நகர்ந்தவுடன் தன் கைப்பேசியை வேகமாக எடுத்தவள், மாலையில் இருந்து தான் பலமுறை அழைத்த, ‘தினேஷ்’ என்று பெயரிடப்பட்டிருந்த எண்ணிற்கு மீண்டும் முயற்சித்தாள்.
அழைப்பு இம்முறையும் எடுக்கப்படாமல் போக, எரிச்சல் கொண்ட திவ்யா, “டேம்! உன்னை நம்பி வந்தேன் பாரு! என்னைச் சொல்லணும்” என்றபடிக்கு, வலது காலை தரையில் ஆத்திரம் தீர அழுத்தமாக பதித்து, இருக்கையில் இருந்து எழுந்து கொள்ளும் சமயம், அந்த உணவகத்தின் உள்ளே அவசர அவசரமாக நுழைந்தான் தினேஷ்.
Advertisement
அவனை நேரில் கண்டதும் திவ்யாவின் கோபம் மேலும் அதிகமானதே அன்றி, இம்மியளவு குறையவில்லை. “ஏ, சாரி திவி, வெரி சாரி. பெல்லாந்தூர் சிக்னல்ல செம்ம ட்ராஃபிக் தெரியுமா. கொஞ்சம் கூட நகர முடியலை. சாரிடீ” என்று உரிமையாக பேசிக் கொண்டே திவ்யாவின் எதிர் இருக்கையில் அமர்ந்து, தன் ஹெல்மெட்டை பக்கவாட்டில் வைத்தான்.
“எவ்வளோ நேரமா தனியா உட்கார்ந்திருக்கேன் தெரியுமா? லேட் ஆகும்னு சொன்னா, அதுக்கு தகுந்த மாதிரி நான் கிளம்பியிருப்பேன்ல” என்று பற்களை கடித்துக் கொண்டே பதிலளித்த திவ்யா, தன் இருக்கையில் மீண்டும் அமர்ந்து கொண்டாள்.
“உனக்கென்னப்பா, வேலையா வெட்டியா? எப்போ சொன்னாலும் உடனே வந்துருவ? எனக்கென்ன அப்படியா? வீக்டே வேற. கிளம்பறப்போ தான் ஏதாவது வேலை சொல்லறானுக” என்று பேச்சு வாக்கில் திவ்யாவைக் கலாய்த்த தினேஷை, கண்களாலேயே எரித்து விடுபவள் போல பார்த்தாள் திவ்யா.
என்ன தான் அவன் சிரிக்க வைக்கவும், வம்பிழுக்கவும் சொல்கிறான் என்று புரிந்தாலும், தினேஷின் வார்த்தையில் இருந்த நிஜம் திவ்யாவைச் சுட்டுவிட, அவள் உதட்டில் கொஞ்சமே கொஞ்சம் ஒட்டியிருந்த சிரிப்பு மறைந்து, முகத்தில் கருமை பூத்தது.
அவள் முக மாற்றத்தைக் கவனித்த தினேஷும், தன் பகடியை நிறுத்திக் கொண்டான். “ஏ, எதுக்கு இப்படி ஃபீல் பண்ணற? சும்மா விளையாட்டுக்கு உன்னை கலாய்க்க தானே சொன்னேன். உடனே சீரியஸ் ஆகணுமா?” என்று கேட்டபடிக்கே அருகே வந்து நின்ற சிப்பந்தியை கவனித்து,
“சரி, என்ன சாப்பிடற சொல்லு?” என்று திவ்யாவிடம் வினவிக் கொண்டே மெனு கார்டில் கண்களை ஓட்டினான்.
“எனக்கு எதுவும் வேணாம்.” என்று உம்மென முகத்தை வைத்துக் கொண்டு பதிலளித்த திவ்யாவை முறைத்துவிட்டு, “ரெண்டு டச் ட்ரஃபுல் கேக், ஒரு சிக்கன் நக்கெட்ஸ்” என்று அவளுக்கும் சேர்த்து ஆடர் கொடுத்துவிட்டு இருக்கையில் வசதியாக அமர்ந்து கொண்டான். திவ்யா, அவளாக எதுவும் பேசப்போவதில்லை என்று தெரிந்து, “சே, ஹவ் வாஸ் யுவர் டே? “என்று பொதுவில் வினவ,
அவன் முயற்சியைப் புரிந்து கொண்ட திவ்யா, “ம்ம்ம், டிஸ்னில கேம் ஆஃப் த்ரோன்ஸ் மூணு எபிசோட், மோஆனா அனிமேஷன் படம் ஒண்ணுன்னு, பி.ஜில போட்ட எலும்பிச்சை பழம் சாப்பாடுன்னு ரொம்ப சந்தோஷமா கழிஞ்சது என் நாள்” என்றாள் திவியா எரிச்சல் மாறாமல்.
“சே, செம லக்கி டீ நீ! வீக்டேல ஹாஸ்டல் ரூம்ல மல்லாக்க படுத்துட்டு படம் பார்க்கற சுகம் இருகே… அதுலையும் கேம் ஆஃப் த்ரோன்ஸ்ல ஃபிகர் எல்லாம், சும்மா…” என்று தினேஷ் சொல்லும்போதே சிரிப்பு எட்டிப் பார்த்துவிட்டது திவ்யாவிற்கு.
“எருமை! நான் எவ்வளோ ஃபீலிங்கா சொல்லிட்டு இருக்கேன். நீ எதைப் பத்தி பேசிட்டு இருக்க?” என்று செல்லமாக அவன் கையில் கிள்ளி வைத்தாள்.
“நானும் ஒரு ஃபீலிங்ல தான்டீ சொல்லிட்டு இருக்கேன்.” என்று தினேஷ் சிரிக்காமல் கூற, அவன் கையைக் கிள்ள திரும்ப திவ்யா எத்தனிக்கும் முன்னர், அவர்களது ஆடர்களுடன் சிப்பந்தி வந்து விட்டிருந்தான்.
டச் ட்ரிரஃபில் கேக்கை அழகாக ஸ்பூனால் வெட்டி, வாயினுள் திணித்துக் கொண்ட தினேஷ், சற்றே ஆழ்ந்த குரலில், “சரி சொல்லு, என்ன முடிவெடுத்த? என்னைக் கேட்டா, இதுல நீ இவ்வளோ யோசிக்க ஒண்ணுமே இல்லை திவி. நீயா காம்ப்ளிகேட் பண்ணிக்கறன்னு தான் சொல்ற?”
“தினு, நீ என்கிட்ட அடிவாங்காம போக மாட்டன்னு நினைக்கறேன். இது காம்ப்ளிகேட் இல்லை. என்னை இப்படி ஒரு இக்கட்டான இடத்துல நிக்க வச்சிருக்கறது நீ தான் தெரியுமா?”
“ஏ, சும்மா என் மேல பழி போடற வேலையெல்லாம் வச்சுக்காத. என் அம்மா அன்னைக்கே சொன்னாங்க. நான் தான் கேட்கலை.” என்று சீரியஸாக பதிலளித்தான் தினேஷ்.
“அம்மா சொன்னாங்களா? என்னடா சொன்னாங்க?” என்று விடாமல் திவ்யா வினவ,
“அதான் நான் கேட்கலைன்னு சொல்லறேனே!” என்று கண்களில் குறும்பு மின்ன தினேஷ் பதிலளிக்க, அதன் பின்னரே அவன் இன்னமும் தன்னை கலாய்த்துக் கொண்டிருக்கிறான் என்பது திவ்யாவிற்குப் புரிந்தது. அவளும் தினேஷின் பேச்சைக் கேட்டு புன்னகைத்தாள்.
“திவி, உனக்கு இது நல்ல சான்ஸ். கிடைக்கற வேலைல மொத ஜாயின் பண்ணு. அப்பறமா வேற தேடிக்கலாம். வேலையில்லாம சும்மா உட்காந்து எவ்வளோ நாள் என் காசில தண்டமா டச் டிரஃபில் கேக் சாப்பிடுவ சொல்லு?” என்று சரியாக தன் கேக்கை வாயினுள் திவ்யா கொண்டு போகும் சமயம் தினேஷ் கேட்க, அவள் கேக் ஸ்பூனை அந்தரத்தில் நிறுத்திவிட்டு தினேஷை முறைத்தாள்.
“ஏ, என்ன நான் என்ன சொன்னாலும் முறைச்சுட்டே இருக்க? உண்மையைத் தவிர எனக்கு வேற எதுமே பேசத் தெரியாது கேர்ள்? பிலீவ் மீ” என்று வடிவேல் பாணியில் பாவமாக தினேஷ் பேச, திவ்யா தன்னை மறந்து கலகலவென நகைத்தாள்.
“தினு, எனக்கு ரொம்ப கன்ஃபியூஷனா இருக்கு. உனக்கே தெரியும் என் பழைய கம்பெனில எவ்வளோ பாலிடிக்ஸ்ன்னு, அந்த பிராஜெக்ட் மேனேஜர் டார்ச்சர் வேற. அதனால தான வேலைய விட்டேன். எல்லாமே தெரிஞ்சுகிட்டும் ஏன்டா ஓட்டற?”
“அதெல்லாம் சரிதான் திவி. ஆனா, ஒரு வேலை கிடைக்காம இன்னொரு வேலைய எந்த மடையனாவது விடுவானா சொல்லு? பெங்களூர்ல வதவதன்னு ஐடி ஜாப்ஸ் இருக்கும் தான். அதுக்காக ஒரு வேலை கிடைக்காம எந்த லூசும் இருக்கற வேலையை விடாது. என் கம்பெனில ஜாயின் பண்ணறீயா? நான் ரெஃபர் பண்ணறேன்” என்று ஆர்வமாக அவள் முகம் பார்த்து வினவினான் தினேஷ்.
தினேஷ் அந்த பிரபல சாஃப்ட்வேர் கம்பெனியில் பணியாற்றுகிறான். திவ்யாவின் முக பாவனையில் இருந்தே அவள் பதில் என்னவாக இருக்கும் என்று அவனால் யூகிக்க முடிந்தது. திவ்யா பதில் சொல்ல வாய் திறக்கும் முன்னர், “நானே என் முயற்சில வேலை தேடிக்குவேன். எனக்கு யார் ஹெல்பும் வேண்டாம். அந்த டையலாக் தானே சொல்லப் போற? ஞாபகம் இருக்கு, ஞாபகம் இருக்கு. எனர்ஜி வேஸ்ட் பண்ணாத” என்று கையமர்த்தினான்.
“தெரிஞ்சுட்டே ஏன் கேட்கற அப்போ?” என்று சிடுசிடுத்தாள் திவ்யா.
“ம்ம், எப்படியாவது உனக்கு ஒரு வேலை கிடைச்சுட்டா, நீ என்னை டார்ச்சர் பண்ணறதை விட்டுடுவ, உன் அடென்ஷன் அந்த புது ப்ராஜெக்ட் மேனேஜர் பக்கம் திரும்பிடும் இல்ல. அதனால ஒரு ட்ரை பண்ணி பார்த்தேன். வொர்க் அவுட் ஆகலை” என்றவனைத் திரும்ப முறைத்தாள் திவ்யா.
என்ன தான் தினேஷுடன் சகஜமாக சிரித்துப் பேசினாலும், அவள் மனதில் வேலை பற்றிய கவலை வெகுவாக வாட்டத் துவங்கியிருந்தது. ஒரு வேலை கிடைக்காமல், இருந்த பணியை சட்டெனத் துறந்தது தவறு என்று மனசாட்சி உறுத்தியது. அதிலும், வீட்டில் தன் வருமானத்தை நம்பி ஒரு குடும்பம் இருக்க, அவர்களைப் பற்றி கொஞ்சமும் யோசிக்காமல், தன் நலனை மட்டுமே பாவித்து உணர்ச்சிவசப்பட்டு முடிவெடுத்தது தவறு என்று நெஞ்சம் சுட்டது.
“அப்பா அம்மாவுக்கு, நான் வேலையை விட்ட விஷயமே தெரியாது, செளமி அக்கா வீட்ல வேற பிரச்சனை. ஏற்கனவே டெஸ்ட் டியூப் பேபிக்காக வாங்கின கடனே இன்னும் கட்டி முடிக்கலை. அதுக்குள்ள அக்காவும், அத்தானும் சென்னையில வீடு வாங்கறாங்களாம். அதுக்காக கொஞ்சம் ஹெல்ப பண்ணறதாம்.”
“யாரு ஹெல்ப் பண்ணனும்? நீயா உங்க அப்பாவா?”
“அப்பா தான். ஆனா அவளுக்கே அப்பா கிட்ட என்ன இருக்கு இல்லைன்னு நல்லா தெரியும். அவ இன்டைரக்டா, என்னைத் தான் சொல்லறா.”
“அதுசரி, அவங்க வீடு வாங்க நீ லோன் போடணுமாக்கும்? நல்லா இருக்கே கதை.”
“வீடு வாங்கறதுக்கு அவளுக்காக லோன் போட்டா டியூ கட்டணும். ரெண்டு மாசமா எப்படியோ சமாளிச்சுட்டேன். இனியும் முடியுமான்னு தெரியலை.” என்ற கவலை பிடித்துக் கொண்டது.
திவ்யபாரதியின் சிரிப்பிற்கு பின்னே இருக்கும் துயரம் பற்றி ஓரளவு தினேஷும் அறிவான் தான். அதனாலேயே தன் தோழியின் மனநிலையைப் புரிந்து கொண்டு, அவளுக்கு தன்னால் ஆன உதவிகள் செய்ய எண்ணினான்.
“திவி, இப்படி பிடிவாதம் பிடிச்சா எப்படிடீ? கொஞ்ச நாளைக்கு என் கம்பெனில ஜாயின் பண்ணு, அப்பறமா, இங்க இருந்துட்டே வேற தேடிக்கலாம். என்ன சொல்ற?” என்று அவன் வினவ, கொஞ்சம் போல யோசித்தாள் திவ்யா.
கையிருப்பும் கணிசமாக கரைந்திருந்தது. பெங்களூரில் பி.ஜி வாடகை, உணவு, போக்குவரத்து எனத் தன் செலவுகளும் போக, வீட்டிற்கும் படியளக்க வேண்டும். இதையெல்லாம் யோசிக்கையில் தினேஷ் சொல்வதில் உள்ள நியாயம் விளங்கியது.
ஒரு முடிவுக்கு வந்தவள், “சரி தினு. இந்த ஃப்ரைடே ஒரு இண்டர்வியூ இருக்கு. அது அடெண்ட் பண்ண போறேன். செலக்ட் ஆனா பார்க்கலாம். இல்லைன்னா உன் கம்பெனில ரெஃபர் பண்ணு.” என்று முழுமனதாக இல்லாவிட்டாலும், தனக்கும், தன் வருவாயை எதிர் நோக்கும் குடும்பத்திற்கும் இந்த முடிவு தான் ஏதுவானது என்று முடிவெடுத்துப் பேசலானாள்.
“ஏ, சூப்பர் டீ. ஃப்ரைடே நல்லபடியா அந்த இண்டர்வியூ அட்டெண்ட் பண்ணு. மத்ததெல்லாம் அப்பறம் பார்க்கலாம். சரி, கம்பெனி பேர் என்ன? எங்க இருக்கு?” என்று இயல்பாக அடுத்தடுத்த கேள்விகளை வினவினான் தினேஷ்.
“கம்பெனி பேர், யுனைடட் எம்பிரைட், எலெக்டாரிக் சிட்டில இருக்கு. மைக்ரோ எலக்ட்ரானிக்ஸ் தயாரிக்கற கோர் கம்பெனி தினு. அதுமட்டுமில்லாம, ஆன்சைட் ஆப்பர்டியூனிட்டீஸ் அதிகம்.”
“ஏ, சூப்பர் திவி. யு.எஸ், யு.கேன்னு ரெண்டு வருஷம் ஆன்சைட் கிடைச்சுட்டாலே உன் அக்காவுக்காக வாங்கின பர்சனல் லோன், வீட்டு பிரச்சனைகன்னு எல்லாமே தீர்ந்துரும். இல்ல திவி?”
“ம்ம்ம், ஆமா தினு. ஒரு வருஷ ஆன்சைட் கிடைச்சா கூட போதும். எல்லா பிரச்சனையை பெருமளவு தீர்த்திருவேன். ஆனா கிடைக்கணுமே” என்றாள் திவ்யா சற்றே கம்மிய குரலில்.
“ஏ, திவி. என்ன பேசற? க்ளாஸ் டாப்பர் நீங்க. டிசைன் டிசைனா கோடிங் எழுதுவீங்க அப்போவே! உங்களுக்கு வேலை குடுக்காம யாருக்கு குடுப்பான்? அதெல்லாம் கண்டிப்பா கிடைக்கும்” என்று பாசிடிவ்வாக தினேஷ் பேசியது கேட்டு திவ்யாவின் முகத்தில் ஒரு மெல்லிய புன்னகை அரும்பியது.
தினேஷ் எப்போதுமே அப்படித்தான். ஏதாவது பேசி, சிரிக்க வைத்து, மலையளவு துன்பத்தையும் கடுகு அளவிற்கு மாற்றியிருப்பான். இன்று நேற்று என்று இல்லை. கல்லூரி காலத்தில் இருந்தே தினேஷ் அப்படித்தான்.
தினேஷும், திவ்யபாரதியும் வகுப்பில் அடுத்தடுத்த ரோல் நம்பர் என்பதால், பரிட்சை, லேப் என இருவருமே ஒன்றாகப் பேசிப் பழக நிறைய நேரம் வாய்க்கும். அப்போது உண்டான இந்த அழகிய நட்பு, வருடங்கள் பல உருண்டோடிய பின்னரும் அதே போல கண்ணியமாகத் தொடர்வது அபூர்வம் தான்.
தினேஷ் படித்து முடிக்கவும் பெங்களூரில் வேலைக்குச் சேர்ந்தான். திவ்யாவின் திறமைக்கு கல்லூரி காலத்திலேயே அவளுக்கு கேம்பஸில் நல்ல வேலை கிடைத்தது. முதலில் சில வருடம் சென்னையில் வேலை பார்த்தவள், போன வருடம் தான் பெங்களூருக்கு மாற்றலாகி வந்திருந்தாள்.
தினேஷும் திவ்யாவும் மாதம் ஒரு முறையேனும் சந்தித்துக் கொள்வது வழக்கமாகிப் போனது. காபி ஷாப், ஹோட்டல், ஏதேனும் மால், சினிமா, ஷாப்பிங் என்று தினேஷுடன் சேர்ந்து பெங்களூரைச் சுற்றி வந்த திவ்யா, சில மாதத்திற்கு முன்னர் திடீரெனத் தன் வேலையை ராஜினாமா செய்திருந்தாள்.
“வேற ஆஃபர் இல்லாம எந்த லூசாவது வேலையை விடுமா? யோசிக்கவே மாட்டியா நீ? படபடன்னு முடிவெடுத்துட்டு அப்பறமா வருத்தப்படறதே உனக்கு வேலையா போச்சு திவி?” என்று கடிந்து கொண்ட போதும் தினேஷ் தவறாமல் தோழிக்கு உதவியாக இருந்தான்.
இருவரும் இன்னும் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்துவிட்டு, திவ்யாவை பத்திரமாக அவள் பி.ஜியில் இறக்கி விட்ட பின்னரே தினேஷ் தன் மேன்ஷன் சென்றான்.
திவ்யா, இன்னும் இரு தினங்களில் தான் செல்லவிருந்த நேர்காணலுக்குத் தயார் செய்து கொண்டாள்.
***
