Skip to content
Post Views: 467
மெளனம் 02
முத்துமாணிக்கத்திற்கு பதினாறாம் நாள் காரியத்திற்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தது. காவேரியும் ஜமுனாவும் கைக்குழந்தைகளை வைத்திருந்ததால் எல்லா வேலைகளையும் சின்னபொண்ணு தான் பார்த்துக் கொண்டிருந்தாள்.
Advertisement
“சின்னபொண்ணே, அப்பாவோட காரியம் முடிஞ்ச பொறவு என்ன பண்ண போறே?” விசாரித்தாள் காவேரி
“தெரியலயேக்கா, நான் சென்னைல படிக்கணும்னு அப்பா ரொம்ப ஆசப்பட்டாரு” என்றவளின் கண்களில் கண்ணீர் கொப்பளித்தது.
Advertisement
Advertisement
“நீ படிச்சுட்டு கல்யாணம் பண்றவரைக்கும் யார் உனக்கு பாதுகாப்பு சொல்லு? என் புருஷனும் இவ புருஷனும் குடிகாரனுங்க, அவனுங்கள நம்பி உன்ன ரொம்ப நாளைக்கு வீட்ல வச்சிருக்க முடியாது. அப்பா காரியம் முடிஞ்சதும் எதாவது சம்மந்தம் பாத்து பேசி முடிச்சு விடறோம். கல்யாணம் பண்ணிக்கிட்டு போற வழியப்பாரு”
“ஆமா. காவேரி சொல்றது தான் கரெக்ட், உன் பேர்ல இருந்த சொத்து பத்திரம் எங்கே இருக்கு? எடுத்துட்டு வா. அதை வித்து தான் உனக்கு சீர் செஞ்சு கல்யாணம் பண்ணி வைக்கணும்” என்றாள் ஜமுனா
Advertisement
“அப்பா செத்து ஒரு மாசம்கூட ஆகல, அதுக்குள்ள எதுக்குக்கா கல்யாண பேச்சு? நான் இப்போ தான் ப்ளஸ் டூ முடிச்சிருக்கேன். இன்னும் படிக்கணும்”
“அதுசரி, படிக்கறதுக்கு கூட பணம் வேணுமில்ல? அதுக்கு என்ன பண்ண போறே? எங்களுக்கெல்லாம் அவங்கவங்க பங்கு சொத்தை வித்து தானே எல்லா கடமையும் செஞ்சாரு. உனக்கும் ஒரு நிலத்தை வச்சிருந்தாரே, அந்த பத்தரம் எங்கே? நானும் வீட்டுக்கு வெள்ளை அடிக்கறப்போ எல்லா இடத்துலயும் பாத்துட்டேன். எங்கேயும் காணோமே!”
“அது, அலமேலு அத்தை அவசரமா பணம் வேணும்னு கேட்டாங்க. அவங்களுக்கு நிலத்தை வித்து பணம் கொடுத்துட்டாரு”
“இது எப்போ நடந்துச்சு?” காவேரி அதிர்ச்சியுடன் கேட்க.
“எந்த அலமேலு அத்தை கிட்ட பணத்தை கொடுத்து தொலைச்சாரு?” என்றாள் ஜமுனா எரிச்சலுடன்
“அப்பாவோட சித்தப்பா பொண்ணு அலமேலு. அவங்களுக்கு கூட அப்பா தான் கல்யாணம் பண்ணி வச்சாராமே”
“அப்பாவோட சித்தப்பாவே சொந்த சித்தப்பா இல்ல. ஒன்னுவிட்ட சித்தப்பா. இதுல அவர் பொண்ணுக்கு வள்ளல் மாதிரி வாரி வழங்கிட்டாரா? உயிரோட இல்லாம போயிட்டாரு, இல்லனா என்ன பேசியிருப்பேனு எனக்கே தெரியாது. யாரக் கேட்டு நிலத்த வித்து பணத்த கொடுத்தாரு? இதுல ரெண்டு கறவ மாட்டையும் வித்துட்டு சுத்தமா வழிச்சு விட்டுட்டு போயிருக்காரு. இந்த ஓட்டை வீட்டை விக்கணும்னா கூட வெளிநாட்ல இருக்கறவளுங்க வந்து கையெழுத்து போடணும்.
நிலத்துல போட்டது விளையல, தொழில் தொடங்கறோம் பணம் வேணும்னு நாங்களும் நடையா நடந்தோம். ஒத்த பைசா இல்ல. இருக்கற சொத்தை சின்னபொண்ணு கல்யாணத்துக்கு வச்சிருக்கேன். அத யாரும் கேக்காதீங்கனு எங்க வாயை அடைச்சிட்டாரு. சரி போகட்டும் ரெண்டு மாடுங்க இருக்கே, ஆளுக்கு ஒன்னு கொடுங்கனு கேட்டா அதையும் கொடுக்க முடியாது. பால் வித்து தான் பிழைச்சுட்டு இருக்கோம். உங்க கிட்ட கொடுத்துட்டு நாங்க வயித்துல ஈரத்துணி போட்டுக்கறதானு வியாக்கானம் பேசனாரு.
இப்போ இருக்கற தர்மகத்தாவ பாரு, கோயில் பணத்தை கொல்லையடிச்சு சொத்து மேல சொத்து சேர்த்துட்டான். இவரும் தான் இருந்தாரே, இளிச்சவாயத்தனமா… யார் என்ன கேட்டாலும் கொடுத்துடறது.
நாங்க வந்துனு போயிட்டு தானே இருக்கோம்? எங்க கிட்ட ஒரு வார்த்தை கேக்காம அவரா முடிவெடுத்தா என்னா அர்த்தம்? அந்தம்மா பணத்தை கொடுக்காம ஏமாத்திட்டா என்ன பண்றது? உனக்கு அறிவில்ல? எங்களுக்கு போன் போட்டு விசயத்த சொல்றதுக்கென்ன? நீ எதுவுமில்லாம இருந்தா யார் உனக்கு சீர்செஞ்சு கல்யாணம் பண்ணி வைக்கறது?” என்று இருவரும் பேசிக் கொண்டே இருந்தனர்
சின்னபொண்ணுவினால் தந்தையின் இழப்பிலிருந்தே வெளிவரமுடியவில்லை. ஆதரவாக இருக்க வேண்டிய அக்காக்கள் இருவரும் சொத்தின் மீதே குறியாக இருப்பதும், தந்தையின் நல்ல குணத்தை அவதூறாக பேசுவதும் இதயத்தை வாள் கொண்டு அறுப்பது போல வலித்தது.
இனி இவர்களுடன் தான் என் வாழ்க்கை நகரப்போகிறதா? அவர்கள் பொறுமையாக கேட்டிருந்தால் முத்துமாணிக்கம் எந்த சூழ்நிலையில் எதற்காக பணத்தை அலமேலுவிடம் கொடுத்தார் என்று சொல்லியிருப்பாள். இப்போது அதை சொல்ல மனம் இடம் கொடுக்காமல் உள்ளே ஓடி சென்றவள் எப்போதும் அவர் படுத்துறங்கும் கயிற்றுக் கட்டிலில் தலையை வைத்து கதறி அழ தொடங்கினாள். கட்டிலில் தலைசாய்த்திருந்தவளின் தலையை தந்தை விரல்கள் வருடிவிடுவது போல தோன்ற அவளது அழுகை மட்டுபட்டிருந்தது.
இதே போல ஒரு நாள் முத்துமாணிக்கத்தின் மடியில் தலைசாய்த்து கதறி அழுது கொண்டிருந்தாள். பத்தாவது முடித்து மேல்நிலை பள்ளியில் புதிதாக பதினோறாம் வகுப்பு சேர்ந்த முதல் நாள் அன்று.
“அப்பா, எனக்கு ஏம்பா வேண்டாம்னு பேரு வச்சீங்க? எல்லாரும் என்னய கிண்டல் பண்றாங்க, நான் ஸ்கூலுக்கு போக மாட்டேன்”
“தப்பு தாம்மா, ஆரம்பத்துல பொண்ணு பொறந்ததும் மகாலஷ்மினு நினைச்சேன், அதுக்கடுத்து மூணும் பொண்ணாவே பொறந்து போச்சு. என் குடும்பத்துல நான் ஒருத்தன் தான் ஆண் வாரிசு. எனக்கு ஒரு ஆம்பளை புள்ளையாவது பொறக்கணும்னு உன் அப்பத்தா ஆசப்பட்டுச்சு. உன் ஆத்தாவும் ஆம்பளை புள்ள பொறக்கணும்னு விரதமிருந்தா. நீ கருவுல உண்டானதும் எல்லாருமே ஆம்பள புள்ள பொறக்கும்னு ஆசையா இருந்தோம். ஆனா நீயும் பொண்ணாவே பொறந்துட்டே.
வேண்டாம்பொண்ணு, போதும்பொண்ணு இப்படி குழந்தைக்கு பேர் வச்சா, அடுத்தது ஆம்பளை பிள்ளை பொறக்கும்னு யாரோ சொன்னாங்கனு உன் அப்பத்தா உனக்கு அந்த பேரு தான் வைக்கணும்னு சொல்லிடுச்சு. நானும் ஆத்தா பேச்சை மீற முடியாம அந்த பேரை உனக்கு வச்சுட்டேன். உன் ஆத்தா இன்னொரு முறை கர்பமானா. ஆனா அடுத்தடுத்து குழந்தை பெத்துக்கிட்டதால அவ உடம்பு மோசமாயிருந்திருக்கு, குழந்தையோட அவளும் போய் சேர்ந்துட்டா. அவ வயித்துல இருந்தது ஆம்பளை புள்ளனு சொன்னாங்க. ஆம்பளை புள்ளை பொறந்தா அவ செத்துடுவானு தெரிஞ்சிருந்தா நான் என் ஆத்தா பேச்சை கேக்காம ரெண்டு புள்ளைங்களோட நிறுத்தியிருப்பேன். என்ன பண்றது?
வாரிசு ஆசைக்காக பொண்டாட்டிய பலி கொடுத்துட்டோமே, இனி பொண்ணுங்களயாவது நல்லபடியா கரை சேர்ப்போம்னு இன்னொரு கல்யாணம் எதுவும் பண்ணிக்காம உங்கள வளர்த்து ஆளாக்கனேன். உன் அக்காங்களை எல்லாம் பேர் சொல்லி கூப்பிடறச்சே உன்னை வேண்டாம்னு சொல்லி கூப்பிடும்போது சங்கடமா தான் இருந்துச்சு.
ஆசையா பேரு வச்ச பொண்ணுங்க எல்லாம் இந்த அப்பன் கிட்ட என்ன சொத்து கிடைக்கும்னு தான் பாத்தாங்களே தவிர, பொறந்த வீட்ட பத்தி கொஞ்சம் கூட நினைக்கவே இல்ல. வேண்டாம்னு நினைச்ச பொண்ணு நீ தான் அஞ்சாவது படிக்க ஆரம்பிச்சதுல இருந்தே அப்பனுக்கு சமைச்சு போட ஆரம்பிச்சுட்டே. உன் அம்மாவுக்கு பொறவு எனக்கு என்ன வேணும்னு பாத்து பாத்து செஞ்சு கொடுத்தே. அஞ்சு பொண்ணை பெத்திருந்தாலும் இந்த சின்னபொண்ணு தான் என்னை தாயா இருந்து பாத்துக்கறா. உனக்கு இருக்கற பக்குவமும் நிதானமும் ஏன் மத்த பொண்ணுங்க கிட்ட இல்லனு தெரியல. அதுக்கு தான் அப்பா உன்னைய சின்னபொண்ணுனு செல்லமா கூப்பிடறேனே” என்றபடி அவளின் தலையை ஆதூரமாக கோதிவிட்டார்.
“நீ சின்னபொண்ணுனு கூப்பிடறே. ஆனா ஸ்கூல்ல ஆம்பள பசங்க எல்லாரும் எதுக்கெடுத்தாலும் வேண்டாம் எனக்கு நீ வேண்டாம்னு கேலி பண்றாங்க” என்று சிணுங்கினாள்
“அவங்களுக்கு வேண்டாம்னா போகட்டும், நீ வேணும்னு கண்டிப்பா உன்னை தேடி ஒருத்தன் வருவான்”
“போங்கப்பா” என்று முறுக்கி கொண்டாள். அப்போது வாசலில் யாரோ “அண்ணா” என்று அழைக்கவும் இருவரும் எழுந்து வாசலுக்கு சென்றார்கள்.
“அலமேலு வாம்மா. வாங்க மாப்பிள்ள, என்ன இம்புட்டு தூரம் வந்திருக்கீங்க?” என்று வரவேற்றார்.
அவர்களை சின்னபொண்ணுவிற்கு பெரிதாக அடையாளம் தெரியவில்லை.
“சின்னபொண்ணு, இவ உனக்கு அத்தைமுறை, பேரு அலமேலு. சென்னையில இருக்காங்க. என் ஒன்னு விட்ட சித்தப்பா பொண்ணு. கல்யாணத்துக்கு பொறவு சென்னைக்கு போய் செட்டில் ஆயிட்டாங்க” என்று பெண்ணுக்கு அறிமுகம் செய்து வைத்தார்.
அவள் உள்ளே சென்று வந்திருந்தவர்களுக்கு தேநீர் தயாரிக்க சென்றாள்.
“என் மூத்தமகன் சரவணன் புரபசரா இருக்கான், அவனுக்கு கல்யாணம் வச்சிருக்கோம். பத்திரிக்கை கொடுத்துட்டு போகலாம்னு வந்தோம்” என்றார் அலமேலு
“ரொம்ப சந்தோசம்மா, கண்டிப்பா கல்யாணத்துக்கு வந்துடறேன். உன் கல்யாணத்தையே நான் தானே நடத்தி வச்சேன். உன் மகன் கல்யாணத்துக்கு வராம போயிருவேனா?”
“எனக்கு உங்ககிட்ட இன்னொரு உதவியும் வேணும்னே”
“சொல்லுமா? என்னால முடிஞ்சா கண்டிப்பா செய்யறேன்”
“மூத்த மகன் சரவணன் காலேஜ்ல படிக்கறப்பவே லவ் பண்ணிட்டு இருந்திருக்கான். அந்த பொண்ணு பெரிய இடம், அவங்க வீட்ல இப்போ தான் கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்டாங்க. கட்டிக்க போறது பெரிய இடத்து பொண்ணு. அவங்களுக்கு நாம கீழேனு தெரியாம கல்யாணத்த ஆடம்பரமா செய்யணும்னு பையன் எதிர்பாக்கறான்.
சின்னவன் வசீகரன் மேல்படிப்பு படிக்க வெளிநாட்டுக்கு போயிருக்கான், அவனுக்கு நிறைய செலவாயிடுச்சு. கடைசி பொண்ணு ரஞ்சனிய மெடிக்கல் காலேஜ்ல சேர்க்கணும். எல்லாம் ஒரே நேரத்துல கைய கடிக்குது. இவருக்கு தொழில்ல பணமுடக்கம். பணத்துக்கு என்ன பண்றதுனு தெரியாம முழிச்சிட்டு இருக்கோம். தெரிஞ்சவங்ககிட்டலாம் கேட்டு பாத்துட்டோம், யாருமே இப்போதைக்கு கைல இல்லங்கறாங்க.
எங்க முத்துமாணிக்கம் அண்ணன்கிட்ட ஒரு வார்த்தை சொன்னா போதும், வட்டியில்லாம பணத்தை ஏற்பாடு பண்ணி கொடுத்துடுவாருனு நான் இவர்கிட்ட சொல்லி கூட்டியாந்தேன். கைமாத்தா பணம் ஏற்பாடு பண்ணி தரமுடியாண்ணே?”
“எம்புட்டு?” முத்துமாணிக்கம் தாடையை தடவியபடி யோசனையுடன் கேட்க, அலமேலு சொன்ன தொகையை கேட்டு அதிர்ந்து விட்டார்.
“கடனா யார்கிட்டயும் நான் இதுவரைக்கும் கைநீட்டி பணம் வாங்கினதில்ல. இம்புட்டு பணம் வேணும்னா பத்திரம் எதாச்சும் கொடுத்தா தான் கொடுப்பாங்க. சென்னைல சொத்துபத்திரம் இருக்கா?”
“குடியிருக்கற வீடு தான்னே இருக்கு. அதுவும் லோன்ல கட்டினது”
“இப்போ என்னம்மா பண்ண போறே?”
“ஏண்ணே, உன்கிட்ட நிறைய நிலமிருக்கே, அதுல ஒரு பத்திரத்தை தரக்கூடாதா? நான் மூணே வருஷத்துல திருப்பி கொடுத்துடுவேன்”
“என்கிட்ட ஏதுமா நிலம்? எல்லாத்தையும் அப்பப்போ வித்து நாலு பொண்ணுங்களுக்கும் கல்யாணத்தை முடிச்சிட்டேன். பக்கத்து ஊர்ல கொடுத்த பொண்ணுங்க அப்பப்போ இதுவேணும் அதுவேணும்னு எனக்குனு வச்சிருந்த விவசாயநிலத்தையும் வித்து எடுத்துணு போயிட்டாளுங்க. கடைசியா இருக்கறது ஒரு ஏக்கரா விவசாய நிலம். அதை சின்னபொண்ணு கல்யாணத்துக்காக வச்சிருக்கேன். நாளைக்கே நல்ல வரனா வந்தா அதவித்து தான் கல்யாணம் பண்ணனும்”
“என்ன படிக்கறா?”
“ப்ளஸ் ஒன்”
“அவ படிச்சு முடிக்கறதுக்குள்ள நான் பணத்தை கொடுத்து பத்திரத்தை மீட்டுருவேண்ணா”
“இல்லம்மா, அது விவசாய நிலம், மதிப்பு குறைச்சலா இருக்கும், அத அடமானம் வச்சா முப்பது லட்சம் தரமாட்டாங்க. லோன் கிடைக்க லோலோனு அலையணும். நாளைக்கே எனக்கு எதாச்சும் நடந்தாலும், அந்த சொத்து தான் அவளுக்கு வாழ்க்கைய அமைச்சு கொடுக்கும். அத விக்கறதுக்கும் மனசுக்கு ஒப்பல” முத்துமாணிக்கம் தீவிரமாக யோசிக்கவும்,
“அதுக்காண்ணா யோசிக்கறே? என் சின்ன மகன் வசீகரன் வெளிநாட்டுல படிச்சு முடிச்சிட்டு வந்துடட்டும், உன் மகளை என் மருமகளாக்கிக்கிறேன்” என்றார் அலமேலு பட்டென்று
முத்துமாணிக்கம் மட்டுமல்ல அலமேலுவின் அருகிலிருந்த நடராஜன் கூட அதிர்ச்சியுடன் மனைவியை பார்த்தார்.
“உன் மகளை என் பையனுக்கு கட்டித்தர மாட்டியாண்ணே?”
“இது நாம ரெண்டு பேரும் முடிவெடுக்கற விஷயமில்லயேமா” என்றார் முத்து மாணிக்கம்
“பெரியவன் தான் என்பேச்சை கேக்காம லவ் பண்ணிட்டான். சின்னவன் நீயும் வெளிநாட்டுல யாரையாச்சும் லவ் பண்ணா என்ன பண்றதுனு கேட்டேன். நான் வெளிநாட்டுக்கு போறது அறிவை வளர்த்துக்கறதுக்கு மட்டும் தான். திரும்பி வந்ததும் இங்கே தான் வேலை செய்வேன். வாழ்க்கையில முன்னேறணும்னு லட்சியத்துல இருக்கேன், அதனால யாரையும் லவ் பண்ண மாட்டேன், நீ சொல்ற பொண்ணை தாம்மா கட்டிக்குவேன்னு வாக்கு கொடுத்திருக்கான்.
அவனும் உன்னை மாதிரி தான். சொன்ன சொல்லையும் கொடுத்த வாக்கையும் மாறமாட்டான். என் மகன்னு பெருமை பேசறேன்னு நினைக்காதண்ணே, வசீ ரொம்ப நல்லவன், நியாயமா நடந்துக்குவான். இரு அவன் போட்டோவ காட்றேன்” என்று அலமேலு தன் அலைபேசியை எடுத்து தன் குடும்ப புகைப்படங்களை காட்ட, வசீகரனின் வசீகரத்தில் முத்துமாணிக்கம் கவரப்பட்டிருந்தார்.
அழகான மாப்பிள்ளை, நல்ல குடும்பம், சொந்தம் வேறு. இந்த சம்பந்தம் நடந்தால் சின்னபொண்ணு சென்னையில் சொகுசாக வாழலாம். பெரிய பெண்கள் இருவரையும் வெளிநாட்டு மாப்பிள்ளைக்கு கட்டிக் கொடுத்துவிட்டு அவர்கள் இந்தியா வருவதே அபூர்வமாகி விட்டது. அதனால் மற்ற இரு பெண்களை பக்கத்து கிராமத்தில் கட்டி கொடுத்தால் எப்போதும் கணவனுடன் சண்டையிட்டுக் கொண்டு பிறந்த வீட்டிற்கு வந்துவிடுகிறார்கள். அவர்களும் வாழ்க்கையில் முன்னேறுவதற்கு முயற்சி செய்வதாக தெரியவில்லை.
இந்த இரண்டுமே இல்லாமல் சின்னபொண்ணை சென்னை மாப்பிள்ளைக்கு கட்டிக் கொடுக்கலாம். அலமேலுவும் தன் மேல் இருக்கும் மரியாதையால் மகளை நன்றாக பார்த்துக் கொள்வார் என்று மனகணக்கு போட்டார்.
ஆனால் சம்மந்தம் பேசிய உடனே நடக்கும் திருமணமே சமயத்தில் நின்றுவிடுகிறது. இருவரும் படித்துமுடித்து எப்போது திருமணம் நடக்கும்? இதெல்லாம் சரியா வருமா? மழிக்காத தாடியை தடவியவாறு ஆழ்ந்த யோசனையில் இருந்தார்.
“எதுக்குண்ணா இம்புட்டு யோசிட்டு இருக்கே, உன் மகள கூப்பிடு” என்றார் அலமேலு
“சின்ன பொண்ணு” முத்துமாணிக்கம் அழைக்க, தயக்கத்துடன் வெளியே வந்தாள்.
அன்றுதான் பதினொன்றாம் வகுப்பு சேர்ந்திருந்ததால் நீல நிற புது யுனிபார்ம் பாவாடையும் வெள்ளை நிற தாவணியும் அணிந்து இருந்தவள் இரட்டை ஜடை போட்டு அதை மடித்து நீல நிற ரிப்பன் கட்டியிருந்தாள். பத்திரிக்கை வைப்பதற்காக வாங்கி வந்திருந்த வெத்தலை பாக்கு, பழம் பூவை எடுத்து தட்டில் வைத்து முத்துமாணிக்கத்திடம் நீட்டினார்.
“என் பையனுக்கு உன் பொண்ணை கொடுப்பியாண்ணே? பசங்க படிப்பு முடிஞ்சதும் கல்யாணத்தை வச்சுக்கலாம்” என்று தாம்பூலத்தட்டை நீட்ட அதிர்ச்சியுடன் பார்த்தார்.
“வாய்ல சொன்னா நீதான் நம்ப மாட்டேங்கிறீயேண்ணே. அதான் தாம்பூலத்தோட தர்றேன். இது ஒப்புதாம்புலமா இருக்கட்டும். வாங்கிக்கண்ணே”
முத்துமாணிக்கம் அலமேலுவின் அருகில் நின்றிருந்த நடராஜனை பார்க்க, அவர் தொண்டையை செருமி, “வாங்கிக்கோங்க” என்றார். அவர் குழப்பத்துடன் மறைந்து போன மனைவி மரகதத்தின் போட்டோவை பார்த்தார். அந்த சமயம் போட்டோவுக்கு வைத்திருந்த பூ விழவும் மனைவிக்கு இதில் விருப்பம் என்று நினைத்து அலமேலு நீட்டிய தாம்பூல தட்டை வாங்கி கொண்டார்.
சின்னபொண்ணுவின் கண்களில் அதிர்ச்சி, அதே சமயம் வந்திருந்தவர்கள் முன்னிலையில் தந்தையை எதிர்த்து பேச மனமில்லாது மெளனமாக தலைகுனிந்து நின்றாள்.
அலமேலு தட்டிலிருந்த பூவை எடுத்து சின்ன பொண்ணுவின் தலையில் வைத்து விட்டார். “என் மருமகள மட்டும் நல்லா படிக்க வச்சிடுண்ணே. நான் வேற எதுவும் கேக்க மாட்டேன்” என்றார்.
“அதுக்கென்ன? ஏற்கனவே நல்லா படிப்பா. ப்ளஸ்டூ முடிஞ்சதும் கூட்டியாரேன். நீயே நல்ல காலேஜா பாத்து சேர்த்துடு”
“சரிண்ணே, வசீகரன் வெளிநாட்டுல இருந்து வர்றதுக்கும் மூணு நாலு வருஷமாகும், படிச்சிட்டு இருக்கற பசங்க மனசுல நாம கல்லெறிய வேணாம். படிச்சு முடிக்கட்டும் அப்புறம் நல்ல நாளா பாத்து பொண்ணு பாக்க வர்றோம். அப்போ ரெண்டு பேரும் ஒருத்தரை ஒருத்தர் பாத்துக்கட்டும். அதுக்குள்ளாற வசி வந்துட்டான்னா கல்யாணத்தை முடிச்சிடலாம். நம்ம வீட்ல இருந்தே காலேஜுக்கு போய் வரட்டும்” என்று அலமேலு சொல்ல முத்துமாணிக்கத்திற்கு குழப்பம் தீர்ந்து புன்னகை மலர்ந்திருந்தது.
அதற்குபின் அவர் சொத்துபத்திரத்தை எடுத்து கொண்டு தெரிந்தவரிடம் விற்று பணம் கிடைத்ததும் அலமேலுவின் வீட்டிற்கே சென்று பணத்தை கொடுத்துவிட்டு வந்தார்.
“சின்னபொண்ணே, அப்பா உன்னை கேக்காம முடிவெடுத்துட்டேனு கோவிச்சுக்காதடா. உன் அம்மா போட்டுவுல இருந்து பூ விழுந்தது நல்ல சகுனமா நினைச்சு தான் இந்த சம்மந்தம் கைவிட்டு போயிடக்கூடாதுனு தட்டை வாங்கிட்டேன். நீ இத பத்தி பெரிசா யோசிக்காதே, அப்பா உனக்கு நல்லது தான் செய்வேன்னு மட்டும் நம்புடா.
உங்கக்காளுங்க அவங்களோட சொந்தகார பயலுக்கு உன்னைய கட்டி வைச்சுடணும்னு நினைச்சிட்டு இருக்காளுங்க. விஷயம் தெரிஞ்சா தையதக்கானு குதிப்பாளுங்க. உன் படிப்பு முடிஞ்சதும் இந்த விஷயத்த பத்தி நானே அவங்ககிட்ட பேசிக்கறேன்.
நீ வாழப்போற வீட்டை பாத்துட்டு தான் வந்தேன், பங்களா மாதிரி இருக்கு. நம்மகிட்ட பணம் கேட்டாங்களேனு குறைவா நினைச்சிடாத. அலமேலு புருஷன் நல்லா தொழில் பண்றாரு. பணம் அங்கங்கே முடங்கி கிடக்கு அம்புட்டுதேன். மத்தபடி ஓரளவுக்கு வசதியா தான் இருக்காங்க. எல்லாத்துக்கும் மிஷின் தான். துணிதுவைக்க வேணாம், அம்மில அரைக்க வேணாம், கார்லயே போகலாம். சமைக்கறதுக்கு கூட ஆள் வச்சிருக்காங்க தெரியுமா?
இங்க நீ சமைச்சிட்டு பள்ளிகூடம் போகணும், மாட்டை பாத்துக்கணும், இதுல படிக்கணும். கல்யாணத்துக்கு பொறவு நீ ஜம்முனு வாழப்போற பாரு. உன் அத்தை ஒருவேலையும் வைக்க மாட்டா. ராணி மாதிரி பாத்துப்பா. நல்லா மட்டும் படிச்சுடு கண்ணு. உன் மாமனுக்கு சமமா படிக்கலனாலும் கொஞ்சமாச்சும் படிக்கணுமில்ல”
‘நல்ல வேலைக்கு போகணும், சொந்த கால்ல நிக்கணும்னு சொல்லி படிக்க சொல்லாம கல்யாணம் பண்ணிக்கறதுக்காக படிக்க சொல்றாரே’ என்று சின்னபொண்ணுக்கு கடுப்பாக இருந்தாலும், அவள் அக்காக்களுக்கு கிடைக்காத வாய்ப்பு அவளுக்கு கிடைத்திருக்கிறதே! என்று மெளனமாக தந்தை சொல்வதை கேட்டுக் கொண்டாள்.
சென்னைக்கு சென்று மேல்படிப்பு படிப்பதற்கு வாய்ப்பை ஏற்படுத்தி தந்த இந்த சம்மந்தத்திற்கு எதிராக அவள் எதுவும் பேசவில்லை. சொல்லப்போனால் இந்த வாய்ப்பு கிடைக்க காரணகர்த்தாவான அந்த வசீகரன் யார்? அவனை பார்க்க வேண்டும் என்ற ஆவல் மட்டும் எழாமலில்லை.
அவள் தந்தை இறப்பதற்கு முன் அவள் பெட்டியில் வசீகரனின் புகைப்படம் வைத்திருப்பதாக சொன்ன போது கூட, அதை பார்க்கும் ஆவல் இருந்தாலும், அப்பா லஷ்மியை விற்றுவிட்டாரே என்ற ஆதங்கம் அதை பின்னுக்கு தள்ளியிருந்தது.
உடன்படித்த தோழி செல்வி வந்து சின்னபொண்ணுவின் தோளை தொட்டதும் சிந்தை கலைந்து உயிர்ப்பே இல்லாமல் தோழியை திரும்பி பார்த்தாள். “சின்ன பொண்ணு நீ பாசாயிட்டே, ரிசல்ட் பாத்திருக்க மாட்டேனு நானே பார்த்துட்டேன், ஆறுநூறுக்கு ஐநூத்து நாப்பது, இதுல பாத்துக்கோ” என்று பேப்பரை நீட்டினாள். அதை வாங்கி தந்தையின் போட்டோவின் எதிரே வைத்து விட்டு அங்கேயே முடங்கி படுத்து கொண்டாள். கண்களில் வழியும் கண்ணீர் தரையை நனைத்துக் கொண்டிருந்தது.
மறுநாளே கறவை மாடுகளுக்கு பணம் கொடுத்த நபர் வந்து மாட்டையும் கேட்க, மனமே இல்லாமல் மாடுகளை அனுப்பி விட்டு தன் அறையில் கதறி அழுதாள். ஒரே சமயத்தில் தந்தையையும், உயிராய் வளர்த்த மாடுகளையும் பறிகொடுத்துவிட்டு அநாதையாகி போன உணர்வு.
நான்கு அக்காக்கள் உடன் பிறந்திருந்தாலும் கடைசி அக்கா காவேரிக்கும் சின்ன பொண்ணுவிற்குமே வயது வித்தியாசம் ஐந்துக்கும் மேல் இருந்தது. அவர்களுடன் எப்போதுமே ஒட்டமுடியவில்லை. அதுவும் அவர்களுக்கு திருமணமான பின்பும் கூட, “சின்ன பொண்ணுக்கு மட்டும் நல்ல துணியா எடுத்திருக்கே, இதை நான் எடுத்துக்கறேன்.
உனக்கு சமார்த்தியம் பத்தலப்பா, எல்லா சொத்தையும் உன் காலத்துலயே அழிச்சிட்டே. உன் அப்பா உனக்கு சொத்த சேர்த்து வச்சுட்டு செத்தாரு, நீ அத வித்து எங்களுக்கு கல்யாணம் பண்ணிட்டே. நீயா உருப்படியா எதாச்சும் சேர்த்து வச்சியா? வெளிய வேலைக்கு போய் சம்பாரிச்சா கவுரவ குறைச்சல்னு பால் வியாபாரத்த நம்பி உட்கார்ந்துட்டு கிடக்கற” என்று அவர்கள் வரும்போதெல்லாம் தந்தையை எடுத்தெறிந்து பேசுவதோடு வீட்டில் இருக்கும் பொருட்களையும் வாரிசுருட்டி கொண்டு செல்வதால் அவளுக்கு அவர்களிடம் ஒட்டுதல் வரவேயில்லை. அதே சமயம் ஏன் இப்படி பண்றீங்கனு அவள் கேள்வி கேட்பதுவும் இல்லை.
மெளனமாக கடந்து விடுவாள், அவளின் மெளனம் அவர்களுக்கு வசதியாக போய்விடும், ஆனால் குற்றஉணர்ச்சியும் இலவச இணைப்பாக தோன்றும். இருந்தாலும் அவர்கள் தங்கள் குணத்தை மாற்றி கொள்ளவே இல்லை
ஒரு வாரமாக யார் யாரோ வந்தார்கள், அவளை கட்டிக் கொண்டு அழுதார்கள், அழுதழுது கண்ணீர் கூட வற்றி போயிருந்ததால் எப்போதும் மூலையிலேயே முடங்கி கொண்டிருந்தாள்
“சின்ன பொண்ணு” என்று அவளை உலுக்கினாள் காவேரி
பதறியடித்த எழுந்தவள் தமக்கையை பார்த்து மலங்க விழிக்க, “அப்பா போன்ல அந்த அலமேலு அத்தை நம்பர் இருக்கும் இல்ல? அதை எடுத்து பேசு. போன் போட்டு காரியத்துக்கு வரச்சொல்லு. பணத்த பத்தி நாங்க பேசிக்கறோம்”
பெருமூச்சுடன் போனை வாங்கி அலமேலுவின் எண்ணை தேடி, போன் செய்தாள்.
அழைப்பு ஏற்கப்பட்டதும், “அத்தே, நான், அப்பா” என்று அதற்கு மேல் பேச முடியாமல் குரல் கமறியது
“சாரிம்மா, விஷயம் லேட்டா தான் தெரிஞ்சது. மருமகளுக்கு குழந்தை பொறந்திருக்கு, அதுல வரமுடியாம போயிடுச்சு”
ஆக விஷயம் தெரிந்தும் வராமல் இருந்திருக்கிறார் என்பதை புரிந்து கொண்டாள். அவளிடம் போனை பிடுங்கிய காவேரி, “அத்தை நான் காவேரி பேசறேன், வர்ற ஞாயித்து கிழமை அப்பாவுக்கு காரியம் வச்சிருக்கோம். நீங்க கண்டிப்பா வரணும். உங்க கிட்ட பேசவேண்டியிருக்கு” என்றாள்
“சரிம்மா வரேன், நானும் உன் அப்பாவுக்கு திருப்பி கொடுக்க வேண்டிய பணம் பாக்கியிருக்கு, வந்து பேசறேன்” என்று போனை வைத்திருந்தார்.
சின்னபொண்ணுவுக்கு அலமேலு பட்டும்படாமல் பணத்தை பற்றி மட்டும் பேசியது ஏனோ நெருடலாக இருந்தது.
அன்று இரவு காவேரி, ஜமுனா இருவரும் தங்களுக்குள் பேசிக் கொண்டிருந்தனர். “என் மச்சினன் ரமேஷ்க்கு சின்ன பொண்ணுக்கு கட்டிவச்சிடலாம்னு இருக்கேன்க்கா, ரெண்டு பேரும் ஒரே வீட்ல வாக்கப்பட்டா ஒருத்தருக்கொருத்தரு ஒத்தாசையா இருக்கலாமில்ல” என்று காவேரி சொல்ல
“நீ எதுக்கு அடிபோடறனு நல்லவாவே தெரியுதுடி. அவ சொத்தையும் சேர்த்து ஆட்டைய போடலாம்னு பாக்கறீயா. உன் மச்சினன் ரமேஷ் வேலைக்கு போகாம உன் புருஷன நம்பி இருக்கறவன், அவனுக்கு சின்ன பொண்ணை கட்டி வச்சிட்டு மொத்தமா ராஜாங்கம் பண்ணலாம்னு நினைக்கறீயா?
“என்புருஷன் வீட்டு சொந்தத்துலயும் ஒரு வரன் இருக்கு, அப்பாவுக்கு மூணாமாசம் கும்பிட்டதும் வரச்சொல்றேன் பேசி முடிச்சுட்டு கல்யாணத்த வச்சுக்கலாம். நீ என்ன சொல்றே?” என்றாள் ஜமுனா
“நீ என் சொந்த மச்சானுக்கு கொடுக்க வேணாங்கிற, நான் மட்டும் உன் சொந்தத்துல பொண்ணு கொடுக்க ஒத்துக்கணுமாக்கும்?” என்று நாடியை இடித்தாள் காவேரி
இருவரும் எதிர்த்து பேசிக் கொண்டே போக அங்கே வாக்கு வாதம் வலுத்திருந்தது. அவர்கள் பேச்சை காதில் கேட்ட சின்ன பொண்ணு மெளனமாக தந்தையின் புகைப்படத்தை பார்த்து கண்ணீர் விட்டாள்
சின்னதுரையும் வடிவேலுவும் அப்போது தான் உள்ளே வந்தனர். இருவரின் பேச்சும் காதில் விழுந்ததால், “அக்கா தங்கச்சிக்குள்ள என்ன சண்டை? சாவு வூட்ல கல்யாணத்தை பத்தி பேசிட்டு கிடக்கறீங்களே வெளியே யாராச்சும் கேட்டா என்ன நினைப்பாங்கனு கொஞ்சமாச்சும் அறிவிருக்கா?” என்று வடிவேல் அதட்டினான்.
“அலமேலு அத்தை, காரியத்துக்கு வரும்போது பணத்தை கொடுக்கும், அத வச்சு கல்யாணத்தை செஞ்சுப்புடலாம்னு பேசிட்டு இருந்தோம்” என்றனர் இருவரும்
“கல்யாணத்துக்கு என்ன அவசரம்? இப்போ தானே பதினெட்டு தொடங்கியிருக்கு? அந்தம்மா கிட்ட பணத்தை வாங்கி நம்ம தொழில் தொடங்குவோம். ரெண்டு மூணு வருஷத்துல நல்லா லாபம் வந்ததும், நாமளே முன்னாடி நின்னு கல்யாணத்த பண்ணி வைப்போம். யாருக்கு கல்யாணம் பண்ணி கொடுக்கறதுனு பொறவு பாத்துக்கலாம், என்ன சொல்றீங்க?”
அக்கா தங்கை இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.
“உங்க அக்காளுங்க இந்தியாவுக்கு வர்ற மாதிரி தெரியல. முப்பது லட்சம் பணத்தை ஆளுக்கு பாதியா ரெண்டு பேரும் பிரிச்சு எடுத்துக்கலாம். அவங்கவங்க தொழிலை ஆரம்பிச்சு சம்பாதிக்கிற வழிய பாக்கலாம். உன் தங்கச்சிக்கு கல்யாணத்தை அப்புறம் பண்ணிக்கலாம். என்ன சொல்றீங்க?”
“நல்ல யோசனையா தான் இருக்கு, அதுவரைக்கும் சின்னபொண்ணை யார்வீட்ல வச்சிக்கறது?” என்றனர் பெண்கள் இருவரும்
“உன் வீட்ல கல்யாணமாகாத மச்சினன் வேற இருக்கான், நான் அவள என்வீட்டுக்கு கூட்டிட்டு போறேன். என் மூணு பசங்களையும் மாமியார் மாமனாரையும் கவனிச்சுக்க முடியாம அல்லாடறேன்” என்றாள் ஜமுனா.
“உன் ஊர்ல இருந்து பஸ் வர்றதே அபூர்வமாச்சே? அவ வேற படிக்கணும்னு சொல்லிட்டு இருந்தாளே” காவேரி கேட்க
“வீட்ல இருந்தே படிக்கற மாதிரி படிப்பெல்லாம் இருக்குதே, அதுக்கு செலவும் கம்மி தான் ஆகும். அதுல சேர்த்துடலாம்” என்றாள் ஜமுனா.
சின்னபொண்ணு மெளனமாக நடப்பதை கேட்டு கொண்டிருந்தாளே தவிர, யாரையும் எந்த கேள்வியும் கேட்கவில்லை.
பதினாறாம் நாள் காரியத்தன்று அலமேலுவும் அவர் கணவர் நடராஜனும் வந்திருந்தனர். அனைத்து சடங்குகளும் முடிந்து வந்திருந்தவர்கள் கிளம்புவரை காத்திருந்துவிட்டு, “உங்கப்பா கிட்ட வாங்கின பணம் முப்பது லட்சம் இதுல இருக்கு, சரியா இருக்கானு பாத்துக்கோங்க” என்று பெட்டியை நீட்டினார். ஜமுனாவும் காவேரியும் முன்னால் வந்து அதை வாங்கி கொண்டனர்.
அவர்கள் கணவர்களோடு சேர்ந்து பணத்தை எண்ணி பார்க்கும் வரை அமர்ந்திருந்த அலமேலுவும் நடராஜனும் மறந்தும் சின்னபொண்ணு இருந்த திசைப்பக்கம் திரும்பவேயில்லை!
அனைத்து சடங்குகளும் முடிந்து அனைவரும் சென்றபின் சின்ன பொண்ணு தன் பெட்டியை திறந்து ஓரளவுக்கு சுமாராக இருந்த துணிகளை தனியாக எடுத்து வைத்துக் கொண்டிருந்தாள். அடியில் முத்துமாணிக்கம் வைத்த போட்டோ கவர் இருந்தது, சிறிது நேரம் அதனை வெறித்து பார்த்தவள், இனி அதற்கும் தனக்கும் எந்த சம்மந்தமும் இல்லை என்பதால் அதை பிரிக்காமலே தலைக்கு மேலே இருந்த பரண் மீது வீசி விட்டு, ஒரு முடிவுடன் தோழி செல்வியை பார்க்க சென்றாள். அவள் வீசிய புகைப்பட கவர் மீண்டும் திறந்திருந்த பெட்டியிலேயே விழுந்திருந்தது.
அந்த பக்கமாக வந்த ஜமுனா, “ஊருக்கு போவலாம் கிளம்புடினு சொன்னா, மடிச்ச துணிய எடுத்து பொட்டியில வைக்காம எங்கே போயிட்டா?” என்றபடி சின்னபொண்ணு எடுத்து தனியாக வைத்திருந்த துணிகளை மீண்டும் பெட்டியில் விழுந்திருந்த கவரின் மீது வைத்து அதை அழுத்தி மூடினாள்.
(தொடரும்)
error: Content is protected !!